முதல் வாசகம்:

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-6

1 பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள்,
2 இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.
3 கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
4 இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார்.
5 ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது "நீ என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" என்றும், "நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்" என்றும் எப்போதாவது கூறியதுண்டா?
6 மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, "கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக" என்றார்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு

 

பதிலுரைப் பாடல் திருப்பாடல் 97:1-2, 6 மற்றும் 7, 9

பல்லவி: அனைத்துச் செல்வங்களே! ஆண்டவரைத் தாழ்ந்து பணியுங்கள்

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவுநாடுகள் களிகூர்வனவாக!
2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்.-பல்லவி

6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன.
7 அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.-பல்லவி

9 ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! -பல்லவி

 

நற்செய்திக்குமுன் வாழ்த்தொலி :
அல்லேலுயா அல்லேலுயா "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" அல்லேலுயா

மாற்கு 1:14-20

பொதுக்காலம், வாரம் 1 திங்கள்

14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.

15 காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார்.

16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.

17 இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார்.

18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

19 பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

 

-------------------------

இணையதள உறவுகளே

சீடர்கள் என்பவர்கள் அழைக்கப்பட்டவர்கள். அழைப்பவர் ஆழுமை நிறைந்தவர். அழைப்பு மறுக்கமுடியாதது. அழைக்கப்படுபவர் அந்தஸ்து அவசியமில்லை. அழைக்கப்படுபவர் முற்றிலும் புதிய, உயரிய ஒரு பணிக்காக அழைக்கப்படுகிறார்.

அழைப்பின் இலக்கு அழைக்கப்படுவோர் அனைவருக்கும் பொதுவானது. மனிதர்களைப் பிடிப்பது. மனிதனை முழு மனிதவாழ்வுக்கு அழைத்துச் செல்வது. அழைக்கப்படுவோர் யாராகவும் இருக்கலாம், என் நிலையிலும் இருக்கலாம். முதியவராக இருக்கலாம் இளைஞனாக இருக்கலாம். ஏழையாக இருக்கலாம். யோவான்போல கூலியாட்கள்வைத்து வேலை செய்யும் உயர்நிலையிலும் இருக்கலாம்.ஆயராக இருக்கலாம். அடித்தள விசுவாசியாகவும் இருக்கலாம். அனைவருக்கும் பணியின் இலக்கு ஒன்றே.

எனவே, நீங்களும் இயேசுவின் உன்னத மனிதர்களைப் பிடித்து முழு மனிதனாக்கும் உயர் பணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் நிலையும் இயேசுவின் தனிப்பட்ட அழைப்பு. இந்த அழைப்பை நீங்கள் தவிர்க்க முடியாது. அதற்கு ஏற்ப பணியாற்ற வேண்டியது உங்கள் கடமை. அதை சிறப்புடன் செய்யும்போது இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்.

-ஜோசப் லீயோன்

மனிதரைப் பிடிப்பவர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு தன் முதல் சீடர்களை அழைத்தபோது, அவர்களுக்கு அளித்த வாக்குறுதி: “என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ”. இந்த அழைப்பை ஏற்ற அவர்கள் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றினார்கள் என்று இன்றைய வாசகத்தில் வாசிக்கிறோம். அதே அழைப்பை இயேசு நமக்கும் தருகிறார். நம்மை மனிதரைப் பிடிப்பவராக மாற அழைக்கிறார். மீன்களைப் பிடிப்பதையே தங்கள் தொழிலாகவும், வாழ்வின் இலக்காகவும் கொண்டிருந்த மீனவர்களை இயேசு தம் சீடராக மாற்றினார். பணம், புகழ், பதவி, உலக இன்பங்கள் இவற்றையே குறிக்கோளாகவும், இலக்காகவும் கொண்டிருக்கும் நாமும், அவற்றை விட்டுவிட்டு, மனிதர்களை இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்பற்றும் மனிதர்களாக மாற்றும் பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள இயேசு அழைக்கிறார். நம்மோடு வாழும், பணி செய்யும் மனிதர்களை இயேசுவுக்காகப் பிடிப்போராக மாறுவோம்.

மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்களையும் உமது சீடராக வாழ அழைப்பதற்காக நன்றி கூறுகிறோம். நாங்கள் உலக இன்பங்களை நாடாமல், பிற மனிதர்கனை உம் பாதம் கொண்டு சேர்க்கும் சீடர்களாக வாழ எங்களுக்கு அருள்; தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

 

---------------------------

''காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது;
மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்று இயேசு கூறினார்'' (மாற்கு 1:15)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு வழங்கிய போதனையின் மையக் கருத்தைச் சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால் அது ''இறையாட்சி'' என்னும் ஒரு சொல்லில் அடங்கும் எனலாம். கடவுளின் ஆட்சி பற்றியே இயேசு பேசினார். என்றாலும் இதுதான் கடவுளின் ஆட்சி என்று ஓரிரு சொற்களில் விளக்கிட இயலாது. இயேசு கடவுளாட்சி பற்றி வெவ்வேறு கோணங்களிலிருந்து போதித்தார். கடவுளாட்சி எதில் அடங்கியிருக்கிறது? அந்த ஆட்சியில் பங்கேற்க நாம் என்ன செய்ய வேண்டும்? கடவுள் நம்மைத் தம் ஆட்சியில் எவ்வாறு ஏற்கின்றார்? கடவுளாட்சியை நாம் எங்கே கண்டுகொள்வது? அதற்கான விவிலிய அடிப்படைகள் என்ன? - இத்தகைய பல கேள்விகளுக்கும் நாம் பதில் காண முனைந்தால் விவிலியம் நமக்குத் துணையாக அமையும். இயேசு கடவுளின் ஆட்சியை மன மாற்றத்தோடு இணைத்துப் பேசுவது கருதத் தக்கது. மக்கள் தம் வாழ்வை மாற்றியமைக்க வேண்டும் என்பது இறையாட்சியில் பங்கேற்க முதல் நிபந்தனை ஆகும். மன மாற்றம் என்பது நம் உள்ளத்தில் ஓர் ஆழ்ந்த புரட்சியை ஏற்படுத்துவதாக அமையும். இதுவரை நாம் எந்த சிந்தனைப் பாணியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தோமோ அதை அடியோடு மாற்றியமைத்து ஒரு புதிய சிந்தனைப் பாணியை, கடவுளின் சிந்தனைப் பாணியை, நமதாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது இறையாட்சியில் நாம் பங்கேற்போம்.

-- கடவுளின் சிந்தனை எதில் அடங்கும்? இக்கேள்விக்கான பதில் இயேசுவின் வாழ்க்கை முழுவதிலும் துலங்குகிறது. இயேசு கூறிய சொற்கள், அவர் புரிந்த செயல்கள், அவர் ஆற்றிய புதுமைகள், அவரது வாழ்க்கை நிகழ்வுகள் போன்ற அனைத்தும் கடவுளின் ஆட்சி யாது என்பதை நமக்கு உணர்த்துகின்றன. எனவே, கடவுளின் ஆட்சி மனித வாழ்க்கையைக் கடவுளுக்கு உகந்த விதத்தில் வாழ்வதைக் குறிக்கிறது. இத்தகைய வாழ்க்கை இவ்வுலகில் தொடங்கி மறுமையில்தான் நிறைவுறும். அப்போது இறையாட்சியின் முழுமையும் வெளிப்படும். இயேசு நம்மிடம் கோருகின்ற மன மாற்றம் இன்றே இப்போதே நிகழ வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் ஆட்சி வருக!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு
இயேசுவைப் பின்பற்றினார்கள்'' (மாற்கு 1:18)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு தம்மோடு இருப்பதற்கும், தாம் ஆற்றவந்த நற்செய்திப் பணியைத் தொடர்வதற்கும் சீடர்களை அழைத்தார். வழக்கமாக சீடர்கள் குருவை நாடிச் செல்வார்கள். இங்கே சீடர்களைத் தேடிச்செல்கிறார் குரு. இயேசு யாரைத் தம் சீடர்களாகத் தேர்ந்துகொண்டார் என்பதை நாம் அலசிப் பார்க்கும்போது ஓர் உண்மை தெளிவாகிறது. அன்றைய பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்த சாதாரண மனிதரையே இயேசு தேர்ந்துகொண்டார். அவர்களில் பலர் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். தம் தொழிலைச் செய்வதில் கவனமாக இருந்தவர்கள் தங்கள் வலைகளையும் பிற கருவிகளையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் (மாற் 1:18). இது ஒரு பெரிய அதிசயம்தான். ஆனால் அவர்களை அழைத்தவர் ஓர் அதிசய மனிதர்தானே!

-- இயேசுவின் அழைப்பைப் பெற்ற மீனவர்களான சீமோனும் அந்திரேயாவும் தயக்கமின்றி இயேசுவைப் பின்தொடர்ந்தனர். மீன்பிடிப்பதற்கு மாறாக ''மனிதரைப் பிடிக்கும்'' திறமையை அவர்களுக்குக் கொடுத்தார் இயேசு. அதாவது, கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அந்த அறிவிப்பின் வழியாக வேறு பல மனிதர்களை இயேசுவின் அணைப்பில் கொணர்கின்ற பணியைச் சீடர்கள் பெற்றார்கள். இதுவே இன்றைய கிறிஸ்தவ சமூகம் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணி. இயேசுவைப் பின்பற்ற விரும்புவோர் தம்மை முழுவதும் அவரிடம் கையளித்திட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, இயேசுவை மனமுவந்து பின்பற்றிட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-----------------------------

"என் பி;ன்னே வாருங்கள்"

இயேசுவின் அன்புக்குரியவரே!

நல்லவைகள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது. நல்லவைகள் தொடர்வதை நிறுத்த முடியாது. நல்லவர்கள் தொடர்ந்து வருவர். நல்லவைகள் தொடர்ந்து நடக்கும். அதைத் தடுத்து நிறுத்த முடியாது.

திருமுழுக்கு யோவானைக் கொன்றதால் மனமாற்றப் பணிகள் முடங்கிப் போய்விடுவதில்லை."காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற்1'15) என்ற முழக்கம் இயேசுவால் தொடர்ந்து முழக்கப்பட்டது. இயேசுவைச் சிலுவையில்; அறைந்து கொன்றதால் அந்த புது வாழ்வின் முழக்கம் முடமாகிவிடவில்லை. உயிர்த்த இயேசுவின் சீடர்கள் ஓங்கி ஒலித்தனர். ஒன்று பன்னிரெண்டாகி பல மடங்காகியது.

இன்றும் நல்லவைகள் தொடரந்த வண்ணம் உள்ளன. நல்லவர்கள் இன்றும் ஆங்காங்கே உதயமாகிக்கொண்டு இருக்கிறார்கள். நற்செயலாற்ற அழைப்புக்கு அர்ப்பணிப்போர் இன்றும் ஏராளம் ஏராளம். இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. பணியையும் பணியாளர்களையும் தடுக்க முடியாது. இந்த எண்ணிக்கை பெருகிக்கொண்N;ட இருக்கும்.

அருட்பணியும் அருட்பணியாளர்களும் புரட்சியாளர்கள். ஆன்மீகத்தை ஆழப்படுத்தி மனித வாழ்வை புதுப்பிக்கும் புரட்சிப் பணியாளர்கள். இவர்கள் அழிக்கப்படுவதில்லை, புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள். பெரும் விழைச்சலைத்தான் தருவார்கள். வாழ்த்துக்கள். ஆசீர்;.

-: ஜோசப் லியோன்