முதல் வாசகம்
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18

ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப்போல் கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார். ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை. மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டிய தாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9

பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்!
அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!
அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி

3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்;
ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்!
அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே!
அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்!
அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;
ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும்
ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மாற்கு 1:29-39

பொதுக்காலம், வாரம் 1 புதன்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ``எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்கள். அதற்கு அவர், ``நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்'' என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

சிறந்த சீடர்களாவோமா

சீடத்துவம் என்பது ஒரு கற்றறியும் காலகட்டம் (அ) பயிற்சி மேற்கொள்ளும் நிலை. இந்தியப் பாரம்பரியத்தில் ஓர் இளைஞன் ஒரு குறிப்பிட்ட குருவை நாடி அவரிடம் பயிற்சி பெறுகிறான். பல வித்தைகளைக் கற்கிறான். இந்த குரு - சீடன் உறவானது வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சிகளை பெறும் நிலையாகக் கருதப்படுகின்றது. கிரேக்க மரபிலும் இதே முறை பின்னபற்றப்பட்டது. சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற சிறப்புமிக்க கிரேக்க அறிஞர்களை நாடி பல இளைஞர்கள் பயிற்சி பெற்றனர். ஒவ்வொரு அறிஞரும் பாடங்களைக் கற்பிக்கும் பயிற்சித் திடல்களை நடத்தியதாகவும் வரலாறு கூறுகின்றது.

ஆனால் விவிலியப் பாரம்பரியம் கூறும் சீடத்துவம் முற்றிலும் வேறுபட்டது. பழைய ஏற்பாட்டில் கடவுள் தாமே முன்வந்து ஒருசிலரை தேர்வு செய்கிறார். அதனைத்தான் இன்;றைய முதல் வாசகத்தில் நாம் பார்க்கின்றோம். சாமுவேலை கடவுள் தாமாக முன்வந்து அழைக்கின்றார். நற்செய்தி வாசகத்திலும் இயேசுவால் அழைக்கப்படவர்கள் அவரோடு பணிசெய்தார்கள் என்று இரண்டாம் பகுதியில் நாம் வாசிக்க கேட்டோம். ஆக சிறந்த சீடத்துவம் என்பது அவரோடு இருப்பதில்தான் விளங்குகின்றது என்று இன்றைய வாசகங்கள் முன்வைக்கின்றன. இயேசு தன் தந்தையாகிய கடவுளோடு இநருந்தார். இதனால்தான் அவரால் பேதுருவின் மாமியார் காய்ச்சலை குணமாக்க முடிந்தது. பல பிணிகளை தீர்த்தார். நாமும் சீடர்களாக வாழத்தான் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
நாம் யாரோடு இருக்கின்றோம்? அலைபேசி, தொலைக்காட்சி. இயேசுவோடு இருப்பதே உண்மையான சீடத்துவம்.
- அருட்பணி. பிரதாப்

=======================

11.01.2023
செபம் செயலாகட்டும்

JESUS TODAY என்ற நூலின் ஆசிரியர் இவ்வாறு கூறுவார். மனிதனுக்குள் மூன்று வகையான ஆற்றல் உள்ளது. உடல் ஆற்றல், உள்ள ஆற்றல் மற்றும் ஆன்ம ஆற்றல் எல்லாருமே முதல் இரண்டு வகை ஆற்றலில் மிகச் சிறந்தவர்களாக விளங்குகின்றார்கள். ஆனால் மூன்றாவது வகை ஆற்றலை பெற தடுமாறுகின்றார்கள். ஆனால் ஒரே ஒரு மனிதன் மட்டுந்தான் இந்த மூன்றாவது வகை ஆற்றலில் சிறந்தவராக விளங்குகின்றார். அவர் தாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அதனால் தான் அவரால் பல புதுமைகளும், வல்ல செயல்களும் செய்ய முடிந்தது. அவர் எப்படி இந்த ஆற்றலைப் பெற்றார் என்ற கேள்விக்கு விடையையும் ஆசிரியர் அந்த நூலின் இறுதி பக்கத்தில் தருகின்றார். அதாவது செபத்தின் வழியாக அவர் அந்த ஆற்றலை பெற்றதாக கூறுவார்.

அத்தகைய ஆற்றலின் விளைவைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கின்றோம், இயேசு நோயாளர்களைக் குணப்படுத்துவதை. விவிலிய அறிஞர்கள் இயேசுவின் புதுமைகளை நான்கு வகைகளாகப் பிரித்துக் காட்டுவர். அதாவது குணமளிக்கும் புதுமை, பேய்களை விரட்டக்கூடிய புதுமை, இயற்கை புதுமை மற்றும் புதுவாழ்வு கொடுக்கக்கூடிய புதுமை. இவற்றுள் குணமளிக்கும் புதுமைகளைத் தான் தன் பணிவாழ்வில் அதிகமாக செய்கின்றார். எதற்காக என்றால் அவனும் சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆவல். யாக்கோபு, யோவான், சீமோன் மற்றும் அந்திரேயா நான்கு நபர்களும் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள். இவர்கள் இயேசுவுக்கு மிகவும் பரீட்சமானவர்கள் என்பதற்காக இயேசு குணப்படுத்தவில்லை. மாறாக, இவர்களும் புதுவாழ்வு பெற வேண்டும் என்பதற்காகவே. இத்தகைய வாழ்வினை அவர் எப்படி கொடுத்தார் என்று இன்றைய நற்செய்தி வாசகத்தின் இரண்டாவது பகுதியில் மாற்கு குறிப்பிடுகின்றார். அதாவது செபத்தின் வழியாக.

நானும் இத்தகைய ஆற்றலைப் பெற விரும்புகிறேனா? திருமுழுக்குப் பெற்ற அனைவராலும் மற்றவர்களை குணப்படுத்த முடியும். ஆனால் நாம் அத்தகைய சக்தியை உணர்வதில்லை. காரணம் நம்மிடம் செபவாழ்வு இல்லை. செபிப்போமா செபம் செயலாக்கம் பெற.
- அருட்பணி. பிரதாப்

=======================

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7, 8 – 9
“ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவிற்கொள்கின்றார்”

ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். தொடக்கநூல் 17: 7 ல் பார்க்கிறோம். ” தலைமுறை, தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால், உனக்கும், உனக்குப்பின் வரும், உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன்”. கடவுள் இஸ்ரயேல் மக்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்கிறார். இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வர வேண்டும். கடவுள் அவர்களுக்கு துணையாக இருப்பார் என்பதுதான் இந்த உடன்படிக்கை.

இந்த உடன்படிக்கையை இஸ்ரயேல் மக்கள் மீறி பாவம் செய்தார்கள். அவர்கள் வேற்று தெய்வங்களை ஆராததித்தனர். எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து, பார்வோனின் அடக்குமுறையிலிருந்து விடுவித்த இறைவனை மறந்து, வேற்று தெய்வத்தை நாடினர். இதனால், அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். வேற்றுநாட்டினர் அவர்களை அடிமைப்படுத்தினர். யாவே இறைவன் அவர்களோடு இருந்தவரை, மற்றவர்களால் இஸ்ரயேல் மக்களை நெருங்க முடியவில்லை. ஆனால், அவர்கள் உண்மையான தெய்வமாகிய யாவே இறைவனைவிட்டு பிரிந்தபோது, அவர்கள் வேதனையை அனுபவித்தனர். இவ்வளவு நன்றி மறந்த நிலையிலும், யாவே இறைவன் அவர்களைக் கைவிட்டு விடவில்லை. அவர் தான் இஸ்ரயேல் மக்களோடு செய்த உடன்படிக்கைக்கு பிரமாணிக்கமாய் இருந்தார். அவர்கள் கடவுளை விட்டுச்சென்றாலும், இறைவன் அவர்களை கைவிடாத தெய்வமாக இருந்தார். அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இங்கே குறிப்பிடுகிறார்.

இறைவன் நம்மோடும் உடன்படிக்கை செய்துகொள்கிறார். ஒவ்வொரு அருட்சாதனத்தைப் பெறுகிறபோதும், நாமும் கடவுளோடு உடன்படிக்கை செய்துகொள்கிறோம். கடவுள் எந்நாளும் உண்மையாக இருக்கிறார். ஆனால், நாம் கடவுளுக்கு உண்மையாக இருப்பதில்லை. அந்த நிலை மாற, நாம் கடவுளின் அருள் வேண்டி, நாம் கொடுக்கும் வாக்குறுதியில் நிலைக்க வேண்டி, மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

இயேசுவுடனான நமது நெருக்கம்

தொழுகைக்கூடத்தில் சுற்றியிருந்த அனைத்து மக்களும் இயேசுவை ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். அவர்களின் ஆச்சரியத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. இவ்வளவு காலம், தீய ஆவிகள் என்றாலே, போதகர்களே பயந்து நடுங்கிய நாட்களில், இவ்வளவு துணிச்சலாக, போதனைப்பணிக்கு வந்து சிலநாட்கள் கூட ஆகாத, தச்சரின் மகன், நமக்கெல்லாம் அறிமுகமானவர், இவ்வளவு துணிவோடு போதித்து, தீய ஆவியை விரட்டக்கூடிய வல்லமை பெற்றிருக்கிறாரே? நிச்சயமாக இது பாராட்டப்பட வேண்டும். அவரிடத்தில் இருக்கிற சக்தி, அளப்பரியதுதான். இது போன்ற எண்ண ஓட்டங்கள் மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் தான், இயேசு தனது சீடரின் வீட்டிற்குச் செல்கிறார்.

இயேசு நிச்சயமாக, பேதுருவின் வீட்டிற்கு உரிமையோடு சென்றிருக்க வேண்டும். ஏனென்றால், அவர் தொழுகைக்கூடத்தில் போதித்திருக்கிறார். சற்று இளைப்பாற அவர் நினைத்திருக்கலாம். ஆனால், நிச்சயமாக, பேதுருவின் மாமியார் உடல்சுகவீனம் இல்லாமல் இருப்பது அவருக்குத் தெரிந்திருக்காது. ஏனென்றால், இயேசு வீட்டிற்குள் நுழைந்தபிறகுதான், அவருடைய சீடர்கள் பேதுருவின் மாமியார் உடல் சுகவீனம் இல்லாமல் இருப்பதை அறிவிக்கின்றனர். இயேசுவோடு சீடர்களும் பழக ஆரம்பித்து கொஞ்ச நாட்கள் தான் சென்றிருக்கிறது. ஆனால், அதற்குள்ளாக இயேசுவுடனான அவர்களது நட்புறவு ஆழப்பட்டிருந்தது. இயேசுவை வேறொரு மனிதனாக அவர் நினைக்கவில்லை. அதுதான் இயேசு. இயேசுவிடத்தில் வருகிற யாரும், தங்களை அந்நியர்களாக நினைக்க மாட்டார்கள். இயேசுவோடு நாம் பழகுகிறபோது, அவரில் ஒருவராக நாம் மாறிவிடுகிறோம். அவரை நம்மில் ஒருவராக ஏற்றுக்கொண்டுவிடுகிறோம்.

இயேசுவுடன் அவருடைய சீடர்கள் நட்புறவோடு பழகினார்கள். அவரை ஏற்றுக்கொண்டார்கள். இயேசுவின் அன்பையும், அருளையும், மன்னிப்பையும், இரக்கத்தையும் பெற்றுக்கொண்டார்கள். நாம் எப்போது இயேசுவோடு நெருங்கி வரப்போகிறோம்? எப்போது அவரை நம்மில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்போகிறோம்? எப்போது நமது கவலைகளை, கண்ணீரை, மகிழ்ச்சியான தருணங்களை அவரோடு பகிர்ந்து கொள்ளப்போகிறோம்? சிந்திப்போம். இயேசுவோடு நெருங்கிவருவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உதவி செய்வோம்

இயேசுவைப்பற்றிய செய்தி சுற்றுப்புறமெங்கும் பரவிக்கொண்டிருந்தது. அவருடைய வல்லமை, நோயாளர்களைக் குணமாக்கும் ஆற்றல், அதிகாரம் மக்கள் மத்தியில் பிரபலமாகிக்கொண்டிருந்தது. அதை நிச்சயமாக மறைத்து வைக்க முடியாது என்கிற அளவுக்கு, மக்கள் இயேசுவைத்தேடி வர ஆரம்பித்தனர். இயேசு பேதுருவின் இல்லத்தில் இருப்பதைக்கேள்விப்பட்டு, ஓய்வுநாள் முடிகின்ற நேரத்திற்காக காத்திருந்து, ஓய்வுநாள் முடிந்தவுடன், நோயாளர்களை இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள்.

மூன்று இடங்களில் இயேசு பொதுவாக நோயாளர்களைக் குணப்படுத்துகிறார். 1. தொழுகைக்கூடம் 2. நண்பர்களில் இல்லம் 3. தெரு வீதி. எங்கே இயேசுவின் உதவி தேவை என்றாலும், அங்கே உதவி செய்வதுதான் இயேசுவின் பணியாக இருந்தது. மனிதத்தேவையை நிறைவேற்றுவதற்கு, அவர் நாளோ, நேரமோ, இடமோ, ஆளோ பார்க்கவில்லை. தேவையைப்பூர்த்தி செய்வதில் கவனத்தோடு இருந்தார். தேவையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் தனது உதவி கிடைக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியா இருப்பதை இன்றைக்கு நற்செய்தி தெளிவாக்குகிறது.

உதவி என்பது நாளோ, இடமோ, ஆளோ பார்த்து செய்வதல்ல. தேவையை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். உதவி செய்வதற்கு நமக்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், எதையும் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால், அது உதவியாக இருக்க முடியாது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசு தொழுகைக்கூடத்தில் இப்போதுதான் தீய ஆவி பிடித்தவரைக்குணப்படுத்தி புதுமை செய்திருக்கிறார். போதனை முடிந்ததும் சீடர்கள் அவரை பேதுருவின் இல்லத்திற்கு அழைத்து வருகிறார்கள். அங்கும் பேதுருவின் மாமியாருக்கு சுகம் கொடுக்கிறார். கதிரவன் மறையும் நேரத்தில், அதாவது ஓய்வுநாள் முடிந்தவுடன் அவர் இருந்த வீட்டு வாயிலின் முன் மக்கள் கூட்டம் கூடிவருகிறது. அங்கும் அவர் நோயாளிகளைக்குணப்படுத்துகிறார். ஆக, ‘சென்ற இடங்களிளெல்லாம் இயேசு நன்மை செய்தார்’ என்ற நற்செய்தியாளர்களின் சிந்தனை இங்கே கண்கூடாக நாம் பார்க்க முடிகிறது. மக்களுக்காகவே இயேசு வாழ்கிறார். அவர்களுக்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுக்கிறார்.

வாழ்வு என்பது இறைவன் நமக்கு கொடுத்த மிகப்பெரிய கொடை. அந்த வாழ்வை நமக்காக வாழாமல் மற்றவர்களுக்கு நன்மை தரக்கூடிய, பயன்தரக்கூடிய வகையிலே வாழ்வதுதான் வாழ்வின் நோக்கம் என்பதை இயேசு வாழ்ந்து நம்மையும் வாழ அழைப்பு விடுக்கிறார். இயேசுவோடு இருந்த சீடர்கள் இந்தப்பாடத்தைக் கற்றுக்கொண்டபிறகுதான், துணிவோடு இந்த உலகமெங்கிலும் ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்க எதையும் இழக்கத்தயாரானார்கள்.

நாமும் இறைவன் கொடுத்த வாழ்வை மற்றவர்கள் வாழ வாழ்வோம். இறையருளை நிறைவாகப்பெற்றுக்கொள்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

பிறர்நலம் பேணுவோம்

தொழுகைக்கூடத்தில் இப்போதுதான் தனது முதல் போதனையை முடித்துவிட்டு இயேசு வருகிறார். நிச்சயம் அவர் களைப்பாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், இது அவருடைய முதல் போதனை. பயம், படபடப்பு, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளால் இயேசு நிச்சயம் ஆட்கொள்ளப்பட்டிருப்பார். ஓய்வுநாள் உணவு, தொழுகைக்கூட வழிபாடு முடிந்தவுடன் தொடங்கிவிடும். இயேசு பேதுருவின் வீட்டிற்கு சென்றது உணவிற்காகத்தான் இருக்கும்.

களைப்பு மற்றும் பசியோடு சென்ற இயேசுவுக்கு, அங்கே ஒரு பணி காத்திருக்கிறது. இயேசு எரிச்சலடையவில்லை. எப்போதுமே, எந்த நேரமும் தனது பணி மற்றவர்களுக்காக இருக்க வேண்டும் என்பதில், இயேசு கண்ணும் கருத்துமாக இருக்கிறார். தனது ஆற்றலை, வல்லமையை தேவையில் உள்ளவர்களுக்குக் கொடுப்பதில், அவர் எப்போதும் தயங்கியது இல்லை என்பது, இன்றைய நற்செய்தி நிகழ்விலிருந்து வெளிப்படுகிறது. இயேசு வாழ்ந்த காலத்தில், பேய்களை ஓட்டுகின்ற போதகர்கள் பல மணிநேரம் மந்திரம் சொல்வதிலும், செய்முறைகளிலும் செலவிட்டனர். ஆனால், இயேசு தனது ஒரு வார்த்தையின் மூலம் குணம் தருகிறார். தான் செய்வதைப்பார்த்து கைதட்ட, மக்கள் கூட்டம் இருக்க வேண்டும் என்ற மற்றப் போதகர்களைப்போல, இயேசு இருக்கவில்லை. மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால், அவர் நன்மை செய்கிறார்.

மற்றவர்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த இயேசு, தனது கடைசி மூச்சு வரை, மக்களுக்காகவே வாழ்ந்தார். தனது விருப்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு நன்மை தரும் என்றால், அதற்காக எதையும் செய்வதற்கு தயாராக இருந்தார். பிறர்நலம் என்னும் பண்பை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

"இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" !

இன்றைய நற்செய்தி வாசகம் சிந்திப்பதற்கான ஏராளமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. ஒரு மாற்றத்துக்காக இன்றைய வாசகத்தின் கடைசிப் பகுதியான "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம் வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும். ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" என்னும் இயேசுவின் அருள்மொழிகளைத் தியானிப்போம்.

இயேசு பேய்களை ஓட்டி, பிணியாளர்களைக் குணப்படுத்தினார். இதனால், அவரது புகழ் எங்கும் பரவியது. எனவே, மக்கள் கூட்டம் அவரைத் தேடிவந்தது. சீமோனும், இதர சீடர்களும் "எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்" என்றனர். அதற்கு இயேசு கொடுத்த பதில்மொழிதான் மேலே நாம் கண்ட சொற்கள்.

இயேசுவின் பணித் தெளிவு, இலக்குத் தெளிவு, மக்கள் புகழ்ச்சியில் ஆர்வமின்மை இவற்றை இயேசுவின் இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. இயேசுவின் பணி எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும். அதற்காகத்தான் அவர் வந்தார். எனவே, எங்கே வரவேற்பு கிடைக்கிறதோ, அங்கு மட்டும் தங்கிக் காலம் கழிக்கவிரும்பவில்லை இயேசு. எல்லா ஊர்களுக்கும் செல்லவேண்டும், நற்செய்தியை விரைந்து அறிவிக்க வேண்டும் என்னும் கத்தோலிக்கத் தன்மை மற்றும் வேகத்தை (ரniஎநசளயடவைல யனெ ரசபநnஉல) இயேசு கொண்டிருந்தார்.

நமது வாழ்விலும், பணியிலும் இந்த இலக்குத் தெளிவு இருக்கட்டும். எதற்காக நாம் இவ்வுலகில் வாழ்கிறோம், எதற்காக இந்தப் பணி நமக்குத் தரப்பட்டுள்ளது என்னும் தெளிவோடு நமது வாழ்வும், பணியும் அமையட்டும்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எதற்காக நாங்கள் படைக்கப்ட்டோமோ, அழைக்கப்ட்டோமோ, அந்த இலக்குத் தெளிவுடன் வாழ, பணியாற்ற அருள்தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி. குமார்ராஜா

இணையதள உறவுகளே

ஆலயம் சென்று ஆண்டவனை வழிபட்டு, உங்கள் வாழ்க்கையை அவரோடு பகிர்ந்துகொண்டு நீங்கள் வீடு திரும்பும்போது, இயேசுவும் உங்களோடு உங்கள் வீட்டுக்கு வருகிறார். அங்கு பலரோடு பேசி பழகியவர்களும் உங்களின் உறவாகி, உங்கள் இன்ப துன்பத்தில் பங்கெடுக்கிறார்கள்.

உங்களோடு உங்கள் வீட்டிற்கு வரும் இயேசு, நோயுற்றிருந்த பேதுருவின் மாமியாரை கையைப் பிடித்து தூக்கி குணமாக்கியதுபோல, உங்கள் வாழ்வில் நோயுற்ற பகுதிகளை எல்லாம் புத்தெழுச்சி பெறச் செய்வார். உன்னையும் உன் குடும்பத்தையும் உன் உழைப்பையும் தூக்கி உயர்த்துவார்.

இந்த இயேசு, தன்னைத்தேடி தன் ஆலயம் வந்தவர்களை தனியே தத்தளிக்க விடுவதில்லை. அவர்களோடு கூட வந்து அவர்கள் துன்பத்தில் பங்குகொண்டு, ஆதரவும் ஆறுதலும் ஆலோசனையும் வழங்கி வாழ்வில் எழுச்சிபெறச் செய்வார். இயேசு உங்களோடு உள்ளார்.கொண்டாடுங்கள்.

-ஜோசப் லீயோன்

 

விடியற்காலை தனி செபம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு எண்ணிலடங்கா மக்களைக் குணமாக்கி நலமளித்த தரவுகளை இன்றைய வாசகத்தில் பதிவு செய்திருக்கிறார் புனித மாற்கு. இயேசுவின் குணமளிக்கும் பணி எந்த அளவுக்குப் பிரபலமாக இருந்ததென்றால், “நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது” என்று வாசிக்கிறோம். அந்த அளவுக்கு இயேசு நலமளிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இச்செய்தியைத் தொடர்ந்து மாற்கு பதிவு செய்திருக்கும் தகவல்தான் நம் கவனத்தை இன்று ஈர்க்க வேண்டும். “இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்” என்னும் செய்தியே அது. ஆம், இயேசுவின் அத்தனை அரும்பணிகளுக்கும் ஊற்றாக இருந்தது இறைவனோடு அவர் கொண்டிருந்த சிறப்பான தனி உறவுதான். அந்த உறவை வளர்த்துக்கொள்வதற்காக, வலிமைப்படுத்துவதற்காக நாள்தோறும் நேரம் ஒதுக்கினார் இயேசு. அந்த நல்ல பழக்கத்தை நாமும் இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டு நாள்தோறும் அதிகாலை நேரத்தில் இறைவனைப் புகழ்கின்ற, இறைவனோடு உறவாடுகின்ற பழக்கத்தில் வளர்வோம்.

மன்றாடுவோம்: செப வீரரான இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் செபிக்க நீர் நேரம் ஒதுக்கினீர். செபிப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்கினீர். உம்மைப் போல நாங்களும் செப வீரர்களாக வாழ்கிற அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

 

------------------

''இயேசு, 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள்.
அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்' என்றார்'' (மாற்கு 1:38)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தார் இயேசு. அவ்வேளைகளில் இயேசு தம்மோடு தொடர்ந்து இருக்கவேண்டும் என்று மக்கள் விரும்பியதுண்டு. எனவேதான் சீடர்கள் இயேசுவிடம் சென்று, ''எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினார்கள் (மாற் 1:37). ஆனால் இயேசு ஒருசில மனிதரை மனமாற்றம் அடையச் செய்தால் போதும் என்றோ, அவர்களுக்கு மட்டும் நற்செய்தி அறிவித்தால் போதும் என்றோ நினைக்கவில்லை. அவர் மேலும் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டும்; மேலும் பல மக்களைச் சென்றடைய வேண்டும்; மேலும் பலரை இறையாட்சியின் அரவணைப்பில் கொண்டு வர வேண்டும் என்னும் ஆர்வத்தால் உந்தப்பட்டார். எனவே, ''நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்'' என்றார். இயேசு பல ஊர்களுக்குச் சென்று போதித்தாலும் அவருடைய நடமாட்டம் கலிலேயா பகுதியிலும் எருசலேம் பகுதியிலும் மட்டுமே நிகழ்ந்தது. இயேசுவின் பணியைத் தொடர்ந்து அனைத்துலக மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கின்ற பொறுப்பு அவருடைய சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

-- நாம் இயேசுவின் கால்களாக, கைகளாக, ஏன் இயேசுவின் உடலாக இருக்கின்றோம் என பவுல் அறிவுறுத்துகிறார் (காண்க: 1 கொரி 12:27; எபே 4:4-6). இத்தகைய உணர்வால் உந்தப்பட்டு, பவுல் போன்ற திருத்தூதர்கள் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். பிற்காலத்தில் தூய பிரான்சிஸ் சவேரியார் போன்றோர் இந்திய நாட்டிற்கு வந்து மறையறிவித்தார்கள். எனவே, இயேசு ஊர் ஊராகச் சென்று போதித்த பணி இன்றும் தொடர்கிறது. நற்செய்தியைப் பறைசாற்றுவோர் இயேசுவைப் பின்பற்றி ''அடுத்த ஊர்களுக்கும்'' போக அழைக்கப்படுகிறார்கள். ஒரே இடத்தில், ஒரே தளத்தில் வேரூயஅp;ன்றி விடாமல் வெவ்வேறு மக்களை அணுகிச் சென்று அவர்களையும் இறையாட்சியின் அரவணைப்பில் கொணர்ந்திட முயல வேண்டும் என்பதை இயேசுவின் பணி நமக்கு உணர்த்துகிறது. இதனால் நாம் பயணம் சென்று தொலைநாடுகள் செல்லவேண்டும் என்றில்லை; மாறாக, எங்கிருந்தாலும் அங்குள்ள அனைவருக்கும் வேறுபாடின்றி நற்செய்தியின் தூதுவர்களாக நாம் விளங்கிட வேண்டும் என்பதே பொருள்.

மன்றாட்டு
இறைவா, எங்களை நற்செய்தியின் தூதுவர்களாக மாற்றியருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இயேசு சீமோனுடைய மாமியார் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார்.
காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்'' (மாற்கு 1:31)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு இறையாட்சிப் பணி ஆற்றிய இடங்களில் முக்கியமான ஒன்று கப்பர்நாகும் ஊர் ஆகும். அங்கே சீமோன் பேதுருவின் வீடு இருந்தது. இயேசு அங்குச் செல்வது வழக்கம். சீமோனுடைய மாமியாருக்குக் காய்ச்சல். இயேசு நோயாளருக்கு நலமளிக்கிறார் என்னும் செய்தி ஏற்கெனவே பரவியிருந்தது (காண்க: மாற் 1:27-28). எனவே, சீமோனுடைய மாமியாருக்கு நலமளிக்க வேண்டும் என இயேசுவைக் கேட்கிறார்கள். இயேசு கையைப் பிடித்து அவரைத் தூக்கவே காய்ச்சல் நீங்குகிறது. நலம் பெற்ற அப்பெண்மணி இயேசுவுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் ''பணிவிடை செய்தார்'' (மாற் 1:31). இங்குப் பணிவிடை எனக் குறிக்கப்படுவது ஏதோ உணவு பரிமாறியது மட்டுமல்ல. திருச்சபைச் சமூகத்தில் ஒருவர் மற்றவர் மட்டில் அன்புகொண்டு அவர்களைத் தம் குடும்ப உறுப்பினர்போல ஏற்று மதித்து ஒழுகுவதே ''பணிவிடை''. இத்தகைய பணிவிடை (''தொண்டு'') செய்யவே இயேசு இவ்வுலகில் வந்தார் (மாற் 10:45).

-- இயேசுவின் மீட்புப் பணி நம்மைத் தீமையிலிருந்து விடுவிப்பதோடு நாம் பிறரை முழு மனத்தோடு அன்புசெய்ய நமக்கு சக்தியையும் வழங்குகிறது. சீமோனின் மாமியார் இதற்கு ஒரு முன்மாதிரி எனலாம். அவருக்கு ஏற்பட்ட ''தீமை'' காய்ச்சலாக வெளிப்பட்டது. அத்தீமையிலிருந்து அவர் விடுதலை பெற்றது இயேசுவை அவர் சந்தித்து, அவரால் தொடப்பட்ட நேரம் நிகழ்ந்தது. இவ்வாறு நலம் பெற்ற அவர் ஒரு புதிய மனிதராக மாறுகிறார். இயேசுவுக்கும் அவரில் நம்பிக்கைகொண்டோருக்கும் ''பணிவிடை'' செய்ய அவர் திறம் பெறுகிறார். நாமும் நலம் பெற்ற மனிதராக, பிறருக்கு நலம் கொணரும் மனிதராக மாறிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் இயேசுவைப் போல நாங்கள் பணிசெய்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

----------------------

"எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்"

இயேசுவின் அன்புக்குரியவரே!

என்ன, எல்லாரும் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்களா? எல்லாரும் உங்களைத் தேடுகிறார்கள் என்றால் உங்களுக்கும் உங்களைப் படைத்த இறைவனுக்கும் மகிழ்ச்சி அல்லவா. உங்களால் அவர்கள் எல்லோரும் பல நன்மைகளை அடைந்துள்ளதால், அடைய விரும்புவதால் உங்களைத் தேடுகிறார்கள்.

இயேசுவை எல்லோரும் தேடிட காரணம் அவரது போதனை புது வாழ்வுக்குப் புரட்சிப் பாதை அமைத்தது. அவர் தொட்டவர்களின் வாழ்க்கை துலங்கியது. பல்வேறு பிணிகளில் வருந்தியவர்கள் குணமடைந்தார்கள். பேய்களை விரட்டினார். மனம் நொந்தவர்கள் நொடிந்தவர்கள் அவரின் நற்செய்தியால் ஆறுதல் பெற்றனர். பல ஊர்கள் நகரங்கள் பலனடைந்தன. தேடமாட்டார்களா, என்ன?

எல்லோரும் தன்னைத்தேட தன் வாழ்வின் ஒரு நாளை இவ்வாறு செலவிட்டார். விடியற்காலை வேளைகளில் தனிமையான இடத்தில் இறைவனை வேண்டினார். (மாற்1'35) பகலில் தொழுகைக்கூடம், மக்கள் கூடுமிடங்களில் நற்செய்தி அறிவித்து, நோயைக் குணமாக்கி, பேயை விரட்டி வந்தார்.(மாற் 1'29) மாலை வேளைகளில் மக்கள் கூடுமிடங்கள், தங்கும் வீடுகளில் நற்செய்தி அறிவித்து நோயை குணமாக்கி வந்தார்.(மாற் 1'32) இவ்வாறு நாள் முழுவதும் மக்களுக்காக செலவிட்டதால், எல்N;லாரும் அவரைத் தேடினார்கள்.

ஏழை மக்களுக்காகச் செலவிட்டுப் பாருங்கள். எல்லோரும் உங்களைத் தேடுவார்கள். நீங்கள் மகிழ்வீர்கள். உங்களில் ஆண்டவனும் மகிழ்வார். வாழ்த்துக்கள். ஆசீர்;.

-: ஜோசப் லியோன்