மாற்கு 1:40-45

பொதுக்காலம், வாரம் 1 வியாழன்

40 ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.

41 இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்றார்.

42 உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

43 பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.

44 நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.

45 ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

-------------------------

பரிவின் தொடுதல் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தொடுதல் பல வகைப்படும். அணைப்பதற்காக, பாராட்டுவதற்காக, ஆசிர்வதிப்பதற்காக, நலப்படுத்துவதற்காகத் தொடுதல் என்பவை அனைத்தும் நேர்மறையான, நல்ல தொடுதல்கள். அடித்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், பாலியல் வன்முறை செய்தல் போன்றவை எதிர்மறையான, இழிவான தொடுதல்கள். தொடாமல் இருப்பதுவும் ஒரு வன்முறையே. அதைத் தீண்டாமை என்கிறோம்.

இயேசுவின் தொடுதல்கள் நேர்மறையானவையாக, நன்மை விளைவிப்பனவாக இருந்தன. தொழுநோயாளர் ஒருவர் இயேசுவின் முன் முழந்தாள்படியிட்டு மன்றாடியபோது, #8220;இயேசு அவர்மீது பரிவு கொண்டு, தமது கையை நீட்டி அவரைத் தொட்டு” அவரை நலப்படுத்திய நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். தொழுநோயாளர்களைத் தொடுவது தீட்டாகக் கருதப்பட்ட அக்காலத்தில் இயேசுவின் தொடுதல் நலப்படுத்தும் தொடுதலாக மட்டும் அமையாமல், சமூகத் தடைகளைத் தகர்த்தெறியும் புரட்சித் தொடுதலாகவும் இருந்ததைக் கவனிக்க வேண்டும். நாமும் பிறரை அன்போடு, பாசத்தோடு தொடுவோம். தீய, இழிவான தொடுதல்களைத் தவிர்ப்போம். தீண்டாமை போன்ற சமூகத் தடைகளை நமது தொடுதலால் உடைத்துப்போடுவோம்.

மன்றாடுவோம்: எங்கள் வாழ்வைத் தொட்டு நலம் தரும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது மாதிரியைப் பின்பற்றி நாங்களும் ஒருவர் ஒருவரை அன்புடன் தொட்டு நலப்படுத்தவும், தீமை தரும் தொடுதல்களைத் தவிர்க்கவும், தொடுவதன் மூலம் தடைகளை உடைக்கவும் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

 

''இயேசு தொழுநோயாளர் மீது பரிவுகொண்டு
தமது கையை நீட்டி அவரைத் தொட்டார்'' (மாற்கு 1:41)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- மக்களுக்கு நன்மை செய்துகொண்டே சென்ற இயேசு நோயுற்றோருக்கு குணம் நல்குவதைத் தம் சிறப்பான பணியாகக் கருதினார். மக்களுக்கு நலம் கொணர்வது அவர்கள் பெறுகின்ற மீட்புக்கு வெளி அடையாளம் ஆயிற்று. இவ்வாறு நலம் பெற்ற மனிதருள் பல தொழுநோயாளரும் இருந்தனர். தோல் சம்பந்தமான எந்நோயும் தொழுநோய் எனவே கருதப்பட்டு, அதனால் பீடிக்கப்பட்டோர் பல வகைகளில் துன்பப்பட்டனர். அவர்கள் சமுதாயத்திலிருந்தும் வழிபாட்டிலிருந்தும் விலக்கப்பட்டனர். இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட மக்களை இயேசு தேடிச்செல்கின்றார். அவர்களோடு கடவுளின் அன்பைப் பகிர்ந்துகொள்கின்றார். தொழுநோயாளரின் அருகில் சென்றாலே தீட்டுப்பட்டுவிடும் என்று கருதப்பட்ட அக்காலத்தில் இயேசு ''தொழுநோயாளர் மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டார்'' (மாற் 1:41). இது ஒரு துணிச்சலான செயல்தான். அக்கால சமுதாயத்தின் மதிப்பீடுகளை இயேசு இங்கே புரட்டிப்போடுகின்றார். நோயோ உடல் ஊனமோ மனிதரை இழிவுபடுத்த முடியாது என இயேசு உணர்த்துகின்றார்.

-- சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோரை நாடிச் சென்று அவர்களுக்கு நலமளித்து, அவர்களைச் சமுதாயத்தோடு இணைக்கும் பணியை இயேசு செய்கிறார்; வழிபாட்டில் பங்கேற்க வழிவகுக்கின்றார். இன்றைய உலகம் சிலரைத் தொழுநோயாளர்போலக் கருதி ஒதுக்கிவைக்கிறது; அவர்களுக்கு மனித மாண்பை மறுக்கிறது. இயேசு இப்பார்வையை எதிர்க்கிறார். கடவுளின்முன் அனைத்து மனிதரும் ஒரே மதிப்புடையவர்களே எனக் காட்டுகிறார். இப்பார்வையை நாமும் பெற வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம்மைத் தூய உள்ளத்தோடு நாடிவர எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''இயேசு தொழுநோயாளர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம்,
'நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!' என்றார்'' (மாற்கு 1:41)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- தொழுநோய் என்னும் பிணியால் பீடிக்கப்பட்ட மனிதர் பிற மனிதரிடமிருந்து பிரிந்து வாழ வேண்டியிருந்தது. அவர்கள் தீட்டுப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டதால் அவர்களை அண்டிச் செல்வோரும் தீட்டுக்கு உள்ளாவர் என்னும் எண்ணம் நிலவியது. சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்ட தொழுநோயாளருக்குச் சமய வழிபாடுகளிலும் பங்கேற்க வாய்ப்பில்லாதிருந்தது. இவ்வாறு சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்ட ஒரு தொழுநோயாளர் இயேசுவை அணுகித் தம்மைக் குணமாக்க வேண்டுகிறார். இயேசு அம்மனிதரிடமிருந்து அகன்று செல்லவில்லை. மாறாக, அவரைத் தொடுகிறார். தீட்டு என்பதைக் குறித்து இயேசு கவலைப்படவில்லை. தேவையில் உழல்கின்ற ஒரு மனிதருக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணமே இயேசுவின் உள்ளத்தில் எழுகின்றது. இயேசுவின் பரிவு அம்மனிதருக்குக் குணம் நல்குகின்றது.

-- இந்திய நாட்டில் தொழுநோயாளர் பலர் இன்றும் இருக்கின்றனர். சமுதாயம் அவர்களை முழுமையாக ஏற்க மறுக்கிறது. ஆனால் சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்படுகின்ற வேறு பலரும் தொழுநோயாளரைப் போல ஒதுங்கி வாழத் தள்ளப்படுகின்றனர். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஏற்றத்தாழ்வு கற்பிக்கின்ற நம் சமுதாயத்தில் தாழ்ந்த இனத்தவர் என ஒதுக்கிவைக்கப்படுகின்ற மக்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர். இயேசுவைப் போல நாமும் பரிவுள்ள மனிதராக மாறி, யாரையும் ஒதுக்கிவைக்காமல் அனைவரையும் கடவுளின் பிள்ளைகளாக ஏற்க அழைக்கப்படுகிறோம். இயேசுவின் சீடர் என்பதற்கு வெளியடையாளம் நாம் இயேசுவைப் பின்பற்றி அவரைப் போல வாழ்வதில்தான் அடங்கியிருக்கிறது.

மன்றாட்டு
இறைவா, பரிவுள்ள இதயத்தை எங்களுக்குத் தந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

------------------------------------

".. ..போய் உம்மைக் குருவிடம் காட்டி.. .."

இயேசுவின் அன்புக்குரியவரே!

அந்த மனிதனுக்குத் தொழுநோய். அவனை யாரும் தொடக்கூடாது. அவனோடு யாருக்கும் ஒட்டும் உறவும் கூடாது. அவன் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவன். கடவுளால் சபிக்கப்பட்டவன். அவனுக்கு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காதா? இயேசு அந்த வாழ்வை தனக்கு மீண்டும் தருவார் என நம்பி, அவர் பாதம் முழந்தாளிட்டு வேண்டுகிறான். இயேசு கையை நீட்டி அவனைத் தொடுகிறார். ஆமாம். அன்போடு, ஆசையோடு, ஆதங்கத்தோடு, விருப்பத்தோடு தொடுகிறார்.

அவன்; கேட்டதெல்லாம் தொழுநோயிலிருந்து சுகம் பெற வேண்டும் என்பது மட்டுமே. ஆனால் அந்த அன்பு தெய்வம் கொடுத்ததோ அவன் முற்றிலும் எதிர்பாராத கொடைகள். "போய் உம்மைக் குருவிடம் காட்டும் .. .." என்று சொல்லி அவனை ஆண்டவனோடும் சமுதாயத்தோடும் இணைத்தார். அவனைத் தொட்டு குணப்படுத்தி, எல்லோரும் அவனைத் தொட்டு உறவாடும் உயர்நிலைக்கு அவனைக் கொண்டு சென்றார்.

உன்னால் சமுதாயத்தோடு இணைந்து செல்ல முடியவில்லையா? நீ ஒதுங்கி வாழ்கிறாயா? சமுதாயம் உன்னை வெறுத்து ஒதுக்குகிறதா? உன் பொருளாதாரம், சமுக அந்தஸ்து, உன்னைத் தடுத்து நிறுத்துகிறதா? உன் பாவ வாழ்க்கை உன் நிம்மதியைக் குலைத்து, ஆண்டவன் முன்னிலையிலிருந்து உன்னை அப்புறப்படுத்துகிறதா? இயேசுவிடம் வா. அவர் உன் நோய் அனைத்தையும் குணப்படுத்துவார். வாழ்த்துக்கள். ஆசீர்;.

-: ஜோசப் லியோன்