முதல் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-14


சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியார் கூறுவது: ``இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால், பாலை நிலத்தில் சோதனை நாளன்று கிளர்ச்சியின் போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் நாற்பது ஆண்டுகள் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். எனவே, அத்தலைமுறையினர் மீது வெறுப்புக்கொண்டு, `எப்போதும் இவர்களது உள்ளம் தவறுகிறது; என் வழிகளை இவர்கள் அறியாதவர்கள்; எனவே நான் சினமுற்று, ``நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்'' என்று ஆணையிட்டுக் கூறினேன்' என்றார் கடவுள். '' அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் ``இன்றே'' என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள். தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



�பதிலுரைப் பாடல்

திபா 95: 6-7. 7-9. 10-11

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாயுங்கள்.

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்;
நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7ய அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;
நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். பல்லவி

7b இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
8 அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல்,
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்;
என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி

10 நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால்,
நான் உரைத்தது: `அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்;
என் வழிகளை அறியாதவர்கள்'.
11 எனவே, நான் சினமுற்று, `நான் அளிக்கும் இளைப்பாற்றியின்
நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

மாற்கு 1:40-45

பொதுக்காலம், வாரம் 1 வியாழன்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ``நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'' என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ``நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!'' என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், ``இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்'' என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பிவிட்டார். ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்துகொண்டிருந்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

08.02.2024
பிற இன மனப்பாங்கை உடைப்போம் ...

ஒருசில மாதங்களுக்கு முன்பு பிற இனத்தை சார்ந்தவர்கள் என்பதனால் குடிக்கின்ற தண்ணீர் தொட்டிக்குள் மனித கழிவுகளை போட்டு, அந்த இனத்தை அழிக்க முயன்ற செய்தியை வாசித்திருப்போம். கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பு நாங்குநேரியில் இரண்டு இன வாலிபர்களுக்கிடையே பிரச்சனையில் குறைந்த இனத்தினை சார்ந்தவனின் உயிர் பறிக்கப்பட்டதை நாம் அறிவோம். குறைந்த இனத்தை சார்ந்தவர்கள் என்பதால் ஒரு கிராமமே இந்த மாநிலத்திலிருந்து மறைக்கப்பட்ட நிகழ்வும் நாம் அறிந்தவையே.

இத்தகைய மனப்பாங்கை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே விடுதலை நாயகன் பெனிசிய இனப்பெண்ணை சந்திக்கின்றார். பொதுவாகவே யூதர்களும் பிற இனத்தவர்களும் வெயிலும் பனியாக வாழந்து வந்தவர்கள். இத்தகைய வெறுப்பின் விளைவாக அமைந்ததுதான் இந்த சந்திப்பு. பிள்ளை - நாய் என்கிற எதிர்மறைச் சொற்கள் அன்றைய யூத சமுதாயத்தையும் அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிற பிற இனத்தாரையும் வேறுபடுத்திச் சொல்லப்பட்டது. பிள்ளைகள் கடவுள் தேர்ந்து கொண்ட யூத மக்கள் (இச 14:1) நாய்கள் என்று அவர்கள் வெறுப்புடன் உருவகப்படுத்திக் குறிப்பிட்டது பிற இனத்து மக்களைத்தான். பன்றி என்கிற இன்னொரு தாழ்ந்த விலங்கும் பிற இன மக்களைக் குறித்தது (மத் 7 : 6). பல்லாண்டுகளாக எதிர்மறைப் பார்வையில் ஒரு சமுதாயத்தையே அழித்துக்கொண்டிருந்த வார்த்தையை இயேசு இங்கு பயன்படுத்துகிறார். இதை அறியாமல் அல்ல, மாறாக சீடர்கள் அறியவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தான். இத்தகைய வார்த்தைகள் வழியாக புரிதலை கொடுக்கின்றார். யூதர்களிடையே விளங்கிய பிற இன எதிர்ப்பு மனப்பான்மையை கானானியப் பெண் அறியாதவர் அல்ல, இருந்தாலும் பிற இனப்பாங்கை அழிக்க முயற்சி எடுக்கின்றார்.
நாம் பிற இன மனப்பாங்கை உடைக்கின்றோமா (அ) ஆதரிக்கின்றோமா? பிற இனத்தவர்களுக்கு கரம் கொடுப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

சட்டமா? சகோதரத்துவமா?

முதலில் நாம் மனிதர்களோடு இருக்க வேண்டும். பிறகுதான் குடிமக்களாய் இருக்க வேண்டும். சட்டத்தை மதிக்கக் கற்பதைவிட மனிதநேயத்தை மதிக்கக் கற்பது தலையானது என்று புகழ்பெற்ற எழுத்தாளர் பொருளாதாரத் தந்தை எச்.டி. தோரா கூறுவார். நாம் வாழும் இந்த சமுதாயத்தில் தலைகீழாக மாறி வருகிறது. பணம் மற்றும் பதவி முதலைகள் தாங்கள் உல்லாசமாக இருப்பதற்காக, காடுகளை பராமரிக்க வேண்டும் என்ற பெயரில் வாச்சாத்ரி என்ற கிராமத்தினையே அழித்த நிகழ்வு எல்லோரும் அறிந்தவையே. சாலை வசதி என்ற பெயரில் கிராமத்தினரின் முக்கிய தொழிலாகிய விவசாயத்தையே மக்கச்செய்த நிகழ்வு இந்த மண்ணில்தான் நடைபெற்றது. இவ்வாறு விரல்விட்டு எண்ண முடியாத அளவிற்கு சட்டம் என்ற பெயரில் சகோதரத்துவம் இந்த மண்ணில் புதைக்கப்பட்டு வருகிறது.


இதே கருத்து விலிலியத்திலும் நடைபெற்றிருக்கிறது. தொழுநோய் என்பது ஏறக்குறைய கொரோனா காய்ச்சல் போன்றதே. இந்த இரண்டு நோய்களுக்குமிடையே இருந்த விதிமுறைகள் சரிசமமாகவே காணப்பட்டது. ஏனென்றால் தொழுநோயாளர் ஊருக்கு வெளியில்தான் வாழவேண்டும். ஏனென்றால் இது பரவக்கூடிய தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல் நாற்றமடிக்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது. எனவே அவர்கள் ஊருக்குள் நுழையக்கூடாது என்ற சட்டம் இருந்தது. ஒருவேளை அவர்கள் குணமாகினார்கள் என்று கருதினார்களென்றால் லேவியர் நூலில் நாம் வாசிப்பதுபோல குருவிடம் சென்று ஒருசில சடங்குகளை செய்யவேண்டும் என்ற சட்டம் இருந்தது. இயேசு இந்த சட்டங்களை அறிந்திருந்தாலும்கூட, அவனை சகோதர கண்ணோடு, மனித மாண்போடு பார்க்கின்றார். அவனுக்கு சுகம் கொடுத்து, சாதாரண மனிதனுக்குரிய அடையாள அட்டையை கொடுத்து, குருவிடம் பெறக்கூடிய சடங்குகளை நிறைவேற்ற அனுப்பி வைக்கின்றனர்.

இயேசுவின் வழித்தோன்றலாகிய நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

============================

12.01.2023
பரிவுள்ளவர்களாய்!

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய பிரத்தெல்லி தூத்தி என்னும் சமூக சுற்றுமடலில் (அனைவரும் உடன்பிறந்தோர்) பரிவு பற்றி அதிகமாகப் பேசுகின்றார். ஏனென்றால் பரிவு இருக்கின்ற இடத்தில் தான் பாசம் இருக்கும். இது வெறும் உணர்வாக அல்லது உணர்ச்சியாக இருக்கக்கூடாது. மாறாக வாழ்வாக மாற வேண்டும். அதனால் தான் மாணிக்கவாசகர் ‘பரிவு கொள்ளும் இறைவனாக’ கடவுளை வர்ணிக்கின்றார். காரணம் என்னவென்றால் இயேசு செய்த புதுமைகள் ஐயாயிரம் பேருக்கு உணவு அளிக்கக்கூடியதாக இருக்கட்டும் அல்லது கானாவூர் திருமண புதுமையாக இருக்கட்டும், அது பரிவின் அடிப்படையில் தான் அரங்கேற்றப்படுகிறது.

அந்த அடிப்படையில் தான் இன்றைய நற்செய்தி வாசகமும் அமைந்துள்ளது. தொழுநோயாளி மீது இயேசு பரிவு கொள்கின்றார். காரணம் என்னவென்றால் மோசேயின் சட்டப்படி தொழுநோயாளி ஊருக்கு வெளியே தான் வாழ வேண்டும். மருத்துவர்கள் கூற்றுப்படி தொழுநோயாளியின் புண்கள் நாற்றமெடுக்கும், நிறம் மாறும். அதுமட்டுமில்லாமல் அது உணரக்கூடிய தன்மையை இழக்கும். இத்தகைய ஒரு காரணத்தினால் தான் ஒதுக்கி வைக்கக்கூடிய ஒரு சூழல். அது மட்டுமில்லாமல் இது எளிதில் பரவக்கூடியது. அன்றைய சூழலில் இதனை தடுப்பதற்கோ அல்லது குணப்படுத்தவோ மருந்து கண்டுபிடிக்கவில்லை. எனவே உறவினர்கள் தானாகவே இவர்களை ஒதுக்கி வைக்கக்கூடிய ஒரு நிலை. அதுமட்டுமில்லாமல் இவன் செய்த குற்றத்திற்கு தண்டனையாக கடவுள் கொடுத்த வரம் என்று புறந்தள்ளினர். இதனையெல்லாம் இயேசு உணர்ந்து தான் அவன் மீது பரிவு கொண்டு அவனுக்கு புதுவாழ்வு கொடுக்கின்றார். இயேசுவின் பரிவு பாசமாக வெளிப்படுகின்றது.

நம்மிடம் இத்தகைய பரிவு இருக்கிறதா? குணப்படுத்த முடியாத நோய், ஏழ்மை, ஒதுக்கப்பட்டவர்கள் மீது நாம் பரிவு கொள்கிறோமா? அல்லது கண்டும் காணாமல் இருக்கிறோமா? சிந்திப்போம், பரிவுள்ளவர்களாக மாறுவோம்.
- அருட்பணி. பிரதாப்

=====================

திருப்பாடல் 95: 6 – 7, 8 – 9, 10 – 11
”உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்”

ஒருவிதமான பிடிவாத நிலையில் இருப்பதுதான், இந்த திருப்பாடல் வரிகளின் பொருளாக இருக்கிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களை மீட்பின் வரலாற்றில் மிகச்சிறப்பாக வழிநடத்தி வந்திருக்கிறார். அடையாளமே இல்லாத மக்களுக்கு அடையாளத்தைக் கொடுத்து, நாடில்லாமல் நாடோடிகளாக வாழ்ந்தவர்களுக்கு நாட்டைக்கொடுத்து, முதுபெரும் தலைவர்கள் வழியாக, நீதித்தலைவர்கள் வழியாக, அரசர்கள் வழியாக, இறைவாக்கினர்கள் வழியாக, அவர்களை இறைவன் வழிநடத்த வந்திருக்கிறார். இந்தளவுக்கு மக்கள் மீது அன்பு வைத்திருக்கிற இறைவனை, இஸ்ரயேல் மக்கள் விட்டுவிட்டு, பாவ வாழ்க்கையில் வாழ ஆரம்பித்தனர்.

அநீதி செய்தனர். வேற்றுத் தெய்வங்களை ஆராதித்தனர். தவறான ஒழுக்கச் சீர்கேட்டில் வாழ்ந்து வந்தார்கள். தங்களை வழிநடத்திய கடவுளுக்கு எதிராக இவ்வளவு செய்தாலும், கடவுள் அவர்களை மன்னிப்பதற்காகவே காத்திருந்தார். தொடர்ந்து அவர்களுக்கு நன்மைகளைச் செய்தார். அவர்களை தன்னுடைய பிள்ளைகளாக, திரும்பிவர எதிர்பார்த்து நின்றார். ஆனால், இஸ்ரயேல் மக்களோ, பிடிவாதமாக, தங்களது தீய வாழ்க்கையைத் தொடர்ந்தனர். கடவுளைத் தொடர்ந்து புறக்கணித்தனர். அவரை விட்டு, வெகுதூரம் சென்றனர். நன்றியுணர்வு இல்லாதவர்களாக இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், திருப்பாடல் ஆசிரியர், தங்களை நல்வழிப்படுத்த காத்திருக்கும் ஆண்டவரிடம் திரும்பி வர அழைப்புவிடுக்கின்றார்.

நமது வாழ்விலும் கடவுள் பல நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றியிருக்கிறார். எந்நாளும் நமக்கு அரண் போல பாதுகாப்பு தருகிறார். ஆனாலும், நாம் அவரது குரலுக்கு செவிமடுக்க மறுக்கிறோம். அவரை புறக்கணித்து ஒதுக்குகிறோம். நமது தேவைக்கு மட்டும் அவரைப் பயன்படுத்துகிறோம். இந்த நிலையிலிருந்து நம்மில் மாற்றத்தை நாம் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

தொழுநோயாளியின் நம்பிக்கை

மத்தேயு 10: 8 ல் இயேசு பன்னிரு திருத்தூதர்களையும் பணிக்காக அனுப்பியபோது, தொழுநோயாளர்களைக் குணப்படுத்துங்கள், என்று பணிக்கிறார்.பொதுவாக, நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள் என்று சொன்ன இயேசு, தொழுநோயாளர்களைக் குறிப்பிட்டுச் சொல்வது இங்கே கவனிக்கத்தக்கது. இயேசுவின் இந்த குறிப்பிட்டு தொழுநோயாளிகளுக்குச் சொல்லும் வார்த்தைகள், யூத சமுதாயத்தில் நிலவிய, தொழுநோயாளிகளுக்கான கொடுமையை அறிவிப்பதாக அமைகிறது.

தொழுநோயாளர்கள் உயிரோடு இருந்தும் இறந்தவர்களே, என்று சொன்னால், அது சரியான பார்வையாக இருக்கும். அந்த அளவுக்கு, யூத சமூகம் தொழுநோயாளிகளை நடத்தியது. தொழுநோயாளிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தது. அவர்கள் தங்களின் நிலையை நினைத்து, நினைத்து வருந்தக்கூடிய மிகப்பெரிய துயரமாக அவர்களின் வாழ்வு இருந்தது. அப்படி உருக்குலைந்த நிலையில் இருக்கக்கூடிய ஒரு தொழுநோயாளி, இயேசுவிடத்தில் “என்னைக் குணமாக்குங்கள்” என்று சொல்லாமல், ”நீர் விரும்பினால் என்னைக் குணமாக்கும்” என்று சொல்வது உண்மையிலே, அவரின் நம்பிக்கையின் ஆழத்தைக் குறிப்பதாக இருக்கிறது. தனது நிலை அவ்வளவுக்கு துர்பாக்கியமாக இருந்தாலும், கடவுளின் திருவுளம் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், என்று அந்த மனிதன் சொல்வது, உண்மையிலே நமக்கெல்லாம் மிகப்பெரிய பாடம்.

கடவுளிடத்தில் நாம் செபிக்கிறபோது, நம்மிடம் இருக்க வேண்டிய தாழ்ச்சியான மனநிலையை தொழுநோயாளியின் வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அவரது நிலைமை மற்றவர்களால் பரிதாபப்படக்கூடிய வகையில் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், கடவுள் மட்டில் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நாம் உண்மையிலே பாராட்ட வேண்டும். அதை நமதாக்க வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் வல்லமை

தொழுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோயாக மத்திய கிழக்குப்பகுதியில் இருந்தது. ஆனால், தொழுநோய் என்பதை பொதுவான வார்த்தையாக நாம் புரிந்துகொண்டால், நம்மால் இந்தப்பகுதியை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தொழுநோயாகக் கருதப்பட்டது. ஒருவர் தொழுநோயிலிருந்து குணம் பெற்றுவிட்டால், லேவியர் புத்தகத்தில் பதினான்காம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற, சடங்குகளைச் செய்ய வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் வருகிற தொழுநோயாளி இயேசுவை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். அவர் செய்திருக்கக்கூடிய புதுமைகளை நிச்சயமாக பார்த்திருக்க வேண்டும். குருடர்களுக்கு பார்வை கொடுத்ததையும், முடவர்களை நடக்கச் செய்ததையும், நோயாளர்களைக் குணப்படுத்தியதையும், தீய ஆவிகளை இயேசு ஓட்டியதையும் அவர் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறார். நேரிலே பார்த்தும் இருக்கிறார். இயேசுவால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இயேசு நினைத்தால் எதையும் அவரால் செய்ய முடியும். அவரிடத்திலே வல்லமை இருக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக அந்த தொழுநோயாளி உணர்ந்திருக்கிறார். எனவே தான், இயேசுவிடத்திலே ”நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று அவர் சொல்கிறார்.

இயேசுவிடத்திலே நமக்கு முதலில் நம்பிக்கை வேண்டும். இந்த உலகத்திலே இயேசுவால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை என்ற ஆழமான நம்பிக்கை நமக்குள்ளாக இருக்கிறபோதுதான், நாம் இயேசுவின் அருளைப் பெற முடியும். இயேசுவின் வல்லமை மீது நம்பிக்கை வைப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

துணிவுள்ள இயேசு

புதிய ஏற்பாட்டில் மோசமான நோயாக சித்தரிக்கப்படுவது தொழுநோய். சமூகத்தின் இழிவாகக் கருதப்பட்டவர்கள் இந்த தொழுநோயாளிகள். சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒதுக்கிவைக்கப்பட்டார்கள். எனவே தான் மத்தேயு நற்செய்தி 10: 8 ல், இயேசு, ”தொழுநோயாளரை நலமாக்குங்கள்” என்ற குறிப்பிட்ட செய்தியையும் தருகிறார். இதிலிருந்தே, தொழுநோயாளரின் அவலநிலையை நாம் முழுவதும் உணர்ந்து கொள்ள முடியும்.

தொழுநோயாளர்கள் ஊருக்குள் வசிக்க அனுமதி கிடையாது. அவர்கள் ஊருக்கு வெளியே தான் வசிக்க வேண்டும். அப்படியிருக்கிற சமயத்தில், தொழுநோயாளர் இயேசுவைத்தேடி வருகிறார். இயேசுவும் அவனைக் கடிந்து கொள்ளவில்லை. இயேசு அவனை புறந்தள்ளிவிடவும் இல்லை. இயேசு அவனுடைய உணர்வுகளைப்புரிந்து கொள்கிறார். அவனுடைய தேவைதான் இயேசுவின் கண்முன்னால் நிற்கிறது. இந்த சமூகம் என்ன நினைக்கும்? என்று அவர் கவலைப்படவில்லை. அவனைத்தொடுகிறார். தொழுநோயாளியை ஏறெடுத்துக்கூட பார்க்கத்துணியாத சமூகத்தில், இயேசு அவனைத்தொடுவது மிகப்பெரிய தாக்கத்தை அவனுள் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். அந்த தாக்கம் நம்பிக்கையாக உருவெடுக்கிறது. இயேசு அவனுடைய நம்பிக்கையின்பொருட்டு, அவனுக்கு குணம் தருகிறார்.

சமூகத்திற்கு அஞ்சாதவர் இயேசு கிறிஸ்து. செய்வது சரியென்றால், எதற்கும் அஞ்சாமல், எவருக்கும் பயப்படாமல் துணிவோடு செயல்பட வேண்டும் என்பதுதான் இயேசு நமக்குத்தரும் செய்தி. அதனை நமது உள்ளத்தில் ஏற்று நடப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இயேசுவின் காலத்திலே அடைந்த துன்பங்களுக்கு அளவே இல்லை. உடல் வலியால் மட்டுமல்ல, சமூகத்தினுடைய கொடுமையாலும் வேதனையை அனுபவித்தனர். வெறுக்கப்பட்டதோடு இல்லாமல் ஒதுக்கப்பட்டு, சமூகத்திலிருந்தே ஓரந்தள்ளப்பட்டனர். இப்படிப்பட்டச்சூழ்நிலையில் இயேசு தொழுநோயாளர் ஒருவர் மீது பரிவு கொள்கிறார், அவரைத்தொடுகிறார், அவரைக்குணப்படுத்துகிறார். மனிதர்கள் மீது இறைவன் வைத்திருக்கிற இரக்கம் இங்கே வெளிப்படுகிறது.

எங்கே இரக்கம் இருக்கிறதோ, அங்கே கடவுளின் பிரசன்னம் இருக்கிறது. இயேசுவிடத்திலே இருந்த இரக்கம் அவரிடத்திலே இருந்த தெய்வீகப்பிரசன்னத்தை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. நாம் அனைவரும் கடவுளின் சாயலிலே, உருவத்திலே படைக்கப்பட்டிருக்கிறோம். கடவுளின் உயிர்மூச்சை ஆவியாகக்கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் நம்மிடத்திலே இருக்கக்கூடிய இறைப்பிரசன்னத்தை உணர வேண்டுமென்றால், நாம் இரக்கக்குணம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். அப்போது நாம் நிச்சயமாக இறைப்பிரசன்னத்தை உணரலாம். இரக்கம் நமக்குள்ளாக இருக்கக்கூடிய வெறுப்பை அகற்றும். இரக்கம் நமக்குள்ளாக இருக்கக்கூடிய அன்பை வெளிப்படுத்தும்.

இரக்கம் நம்மையே தெய்வீக நிலைக்கு உயர்த்தும். இரக்கமுள்ளவர்களாக வாழ முயற்சி எடுப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

இன்றைய தொழுநோய் !

இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் தொழுநோயைப் பற்றிப் பேசுகின்றன. இயேசுவின் காலத்தில் மக்களால் மிகவும் அருவருக்கப்பட்ட அந்தத் தொழுநோயினின்று ஒரு மனிதரை இயேசு எவ்வாறு மீட்டார் என்பதையே நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது.

இயேசுவின் காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னால் வரை தொழுநோயாளர்களின் நிலை ஒரே மாதிரிதான் இருந்தது. அவர்களது நோய்க்கு மருந்தில்லை. அவர்கள் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டனர். தம் குடும்பத்தினரிடமிருந்தும், ஊரிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்னும் பட்டியலிலே இருந்தனர்.

அப்படி இருந்த ஒரு மனிதரைத்தான், இயேசு துணிந்து தொட்டுக் குணப்படுத்தினார். இதிலே நமது கவனத்தைக் கவரும் ஒரு செய்தி என்னவென்றால், இயேசு அவரது உடலை நலப்படுத்தும் முன்னர், அவரது உள்ளத்தையும், ஆன்மாவையும் தொட்டார், நலமாக்கினார் என்பதுதான். இயேசு விரும்பியிருந்தால், அவரைத் தொடாமலே, ஒரு வார்த்தையினால் நலமாக்கியிருக்க முடியும். ஆனால், இயேசுவின் இந்த நலப்படுத்தும் செயல் ஓர் அன்பின், பரிவின் செயல் என்பதை நற்செய்தியாளரே பதிவு செய்திருக்கிறார். எனவே, இயேசு "அவர்மீது பரிவுகொண்டு, அவரைத் தொட்டு, அவரிடம் "நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக" என்று சொல்லி அவரைக் குணப்படுத்தினார். அவர்மீது பரிவுகொண்டதன் மூலம் அவரது ஆன்மாவையும், அவரைத் தொட்டதன் மூலம் அவரது உள்ளத்தையும் இயேசு குணப்படுத்தினார். அவருக்கு நம்பிக்கையைத், தன் மதிப்பையும், மாண்பையும் மீட்டுத் தந்தார்.

இன்று தொழுநோய் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், வேறு வடிவங்களில் அந்த நோய் இன்னும் நம்மிடையே இருக்கிறது. சாதியம், தீண்டாமை என்பது அருவருக்கத்தக்க ஒரு தொழுநோயாக இன்னும் விளங்குகிறது. சாதியின் பெயரால் இன்னும் மக்கள் ஒதுக்கப்பட்டுத், தீண்டத்தகாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். சாதியின் பெயரால் திருமணம், காதல், உயர் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக மதிப்பு போன்றவை மறுக்கப்படுகின்றன.

இன்று நமது கடமை என்ன? இயேசுவைப் போல நாமும் மனதளவிலும், உடல் அளவிலும் சாதி மறுப்பாளர்களாக, சாதியம் என்னும் தொழுநோயைத் துடைத்தெறிபவர்களாக எழவேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுடனும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுடன் உறவு கொண்டு, அவர்களின் விழாக்களில் கலந்துகொண்டு, அவர்களோடு உணவருந்தி, உறவாடி இயேசுவின் பணியைத் தொடர்வோம்.

மன்றாடுவோம்: தொழுநோயாளர்மீது பரிவுகொண்டு அவரைத் தொட்டுக் குணப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். சாதீய நோயால் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சமூக நீதியை வழங்கும் பணியைநாங்கள் செய்ய உமது தூய ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

யார் விரும்பவேண்டும் ?

தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று முழந்தாள்படியிட்டு வேண்டுவதையும், இயேசு "நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்கி நலம்பெறுக" என்று சொல்லி, அவரைத் தொட்டுக் குணப்படுத்திய நிகழ்வையும் இன்றைய நற்செற்தி வாசகத்தில்; காண்கிறோம். இந்த வாசகம் நம்மில் எழுப்பும் கேள்வி: ஒருவர் நலம் பெறவேண்டும் என்றால், யார் விரும்பவேண்டும். நோயாளர், இறைவன் இருவரும் விரும்பவேண்டும் என்பதே நற்செய்தி நூல் தரும் சரியான விடை.

நாம் அனைவரும் நலமோடு, வளமோடு வாழவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். ஆனால், இந்த விருப்பத்தைச் செயல்படுத்த, நோயாளரின் விருப்பம், நமது விருப்பம் முதலில் எழவேண்டும். தாம் எப்படியாவது நலம் பெற்றுவிடவேண்டும் என்ற தீவிர விருப்பத்தின் காரணமாகத்தான், இந்த தொழுநோயாளர் இயேசுவை அணுகி மன்றாடுகிறார். சில நேரங்களில் தாம் நலம் பெறவேண்டும் என்று விரும்பாத, அதற்கான எந்த முயற்சியும் எடுக்காத நோயாளர்கள் சிலரையும் நாம் சந்திக்கிறோம். ஒருவேளை நாம்கூட அப்படி இருக்கலாம். நாம் நோயாளர்கள், பாவிகள். எனவே, நமக்கு மன்னிப்பும், நலமும் தேவை என்பதை முதலில் உணர்ந்து, இறைவனை நாடுவோம். அப்போது, இறைவன் தாமே விரும்பி நம்மை நலப்படுத்துவார்.

மன்றாடுவோம்: நாங்கள் நலமோடு வாழவேண்டும் என்று விரும்பம் அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எமது ஏழ்மை நிலையை உணர்ந்து, உம்மை நாடிவரும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-பணி. குமார்ராஜா
----------------------------------------------------------------------------

இணையதள உறவுகளே

என்னதான் தகவல் அறியும் சட்டம் வைத்தாலும், பதிலே கிடைப்பதில்லை. யாரிடமாவது சில விவரங்கள் கேட்டால் மௌனம் மட்டுமே பதிலாகிவிடும். பிறருக்கு உதவுவதில், தெளிவுகள், விளக்கங்கள் விவரங்கள் கொடுத்து உதவவும் உறவை ஏற்படுத்தவும் நாம் தயங்குகிறோம், பயப்படுகிறோம்.

ஆனால் இயேசு ஒரு தயக்கம் நிறைந்த கேள்வி கேட்டவனுக்கு, கேக்காத கேள்விகளுக்கெல்லாம் விளக்கமாகவும் விரிவாகவும் பதில் கொடுக்கிறார்.அந்த தொழுநோயாளியைத் தொட்டு தூக்கி, குணமாக்கியதோடு நில்லாமல், அந்தச் சமுதாயத்தில் மீண்டும் அவன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என வழிகாட்டுகிறார். நோய் நீங்கினால் மட்டும் போதாது. அவன் சமுதாயத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகக் குருவிடம் காட்ட ஆலோசனை கொடுக்கிறார். இதுபோன்ற கூடுதல் கரிசனை உடையவர் நம் இயேசு.

நீங்கள் தயங்கலாம்.பின் வாங்கலாம். ஆனால் இயேசு தாராளமானவர். தாமாக முன்வந்து உதவுவார். ஆறுதலும் ஆலோசனையும் தருவார். ஆகவே எதையும் தயங்காமல் கேளுங்கள். கேட்பதற்கும் மேலாக தருபவர் நம் தெய்வம். அதுபோல உங்களிடம் கேட்கத் தயங்குவோருக்கு நீங்களாக முன்வந்து உதவுங்கள். நீங்கள் மகிழ்வீர்கள்.

-ஜோசப் லீயோன்

 

பரிவின் தொடுதல் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தொடுதல் பல வகைப்படும். அணைப்பதற்காக, பாராட்டுவதற்காக, ஆசிர்வதிப்பதற்காக, நலப்படுத்துவதற்காகத் தொடுதல் என்பவை அனைத்தும் நேர்மறையான, நல்ல தொடுதல்கள். அடித்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், பாலியல் வன்முறை செய்தல் போன்றவை எதிர்மறையான, இழிவான தொடுதல்கள். தொடாமல் இருப்பதுவும் ஒரு வன்முறையே. அதைத் தீண்டாமை என்கிறோம்.

இயேசுவின் தொடுதல்கள் நேர்மறையானவையாக, நன்மை விளைவிப்பனவாக இருந்தன. தொழுநோயாளர் ஒருவர் இயேசுவின் முன் முழந்தாள்படியிட்டு மன்றாடியபோது, “இயேசு அவர்மீது பரிவு கொண்டு, தமது கையை நீட்டி அவரைத் தொட்டு” அவரை நலப்படுத்திய நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். தொழுநோயாளர்களைத் தொடுவது தீட்டாகக் கருதப்பட்ட அக்காலத்தில் இயேசுவின் தொடுதல் நலப்படுத்தும் தொடுதலாக மட்டும் அமையாமல், சமூகத் தடைகளைத் தகர்த்தெறியும் புரட்சித் தொடுதலாகவும் இருந்ததைக் கவனிக்க வேண்டும். நாமும் பிறரை அன்போடு, பாசத்தோடு தொடுவோம். தீய, இழிவான தொடுதல்களைத் தவிர்ப்போம். தீண்டாமை போன்ற சமூகத் தடைகளை நமது தொடுதலால் உடைத்துப்போடுவோம்.

மன்றாடுவோம்: எங்கள் வாழ்வைத் தொட்டு நலம் தரும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது மாதிரியைப் பின்பற்றி நாங்களும் ஒருவர் ஒருவரை அன்புடன் தொட்டு நலப்படுத்தவும், தீமை தரும் தொடுதல்களைத் தவிர்க்கவும், தொடுவதன் மூலம் தடைகளை உடைக்கவும் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

 

''இயேசு தொழுநோயாளர் மீது பரிவுகொண்டு
தமது கையை நீட்டி அவரைத் தொட்டார்'' (மாற்கு 1:41)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- மக்களுக்கு நன்மை செய்துகொண்டே சென்ற இயேசு நோயுற்றோருக்கு குணம் நல்குவதைத் தம் சிறப்பான பணியாகக் கருதினார். மக்களுக்கு நலம் கொணர்வது அவர்கள் பெறுகின்ற மீட்புக்கு வெளி அடையாளம் ஆயிற்று. இவ்வாறு நலம் பெற்ற மனிதருள் பல தொழுநோயாளரும் இருந்தனர். தோல் சம்பந்தமான எந்நோயும் தொழுநோய் எனவே கருதப்பட்டு, அதனால் பீடிக்கப்பட்டோர் பல வகைகளில் துன்பப்பட்டனர். அவர்கள் சமுதாயத்திலிருந்தும் வழிபாட்டிலிருந்தும் விலக்கப்பட்டனர். இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட மக்களை இயேசு தேடிச்செல்கின்றார். அவர்களோடு கடவுளின் அன்பைப் பகிர்ந்துகொள்கின்றார். தொழுநோயாளரின் அருகில் சென்றாலே தீட்டுப்பட்டுவிடும் என்று கருதப்பட்ட அக்காலத்தில் இயேசு ''தொழுநோயாளர் மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டார்'' (மாற் 1:41). இது ஒரு துணிச்சலான செயல்தான். அக்கால சமுதாயத்தின் மதிப்பீடுகளை இயேசு இங்கே புரட்டிப்போடுகின்றார். நோயோ உடல் ஊனமோ மனிதரை இழிவுபடுத்த முடியாது என இயேசு உணர்த்துகின்றார்.

-- சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோரை நாடிச் சென்று அவர்களுக்கு நலமளித்து, அவர்களைச் சமுதாயத்தோடு இணைக்கும் பணியை இயேசு செய்கிறார்; வழிபாட்டில் பங்கேற்க வழிவகுக்கின்றார். இன்றைய உலகம் சிலரைத் தொழுநோயாளர்போலக் கருதி ஒதுக்கிவைக்கிறது; அவர்களுக்கு மனித மாண்பை மறுக்கிறது. இயேசு இப்பார்வையை எதிர்க்கிறார். கடவுளின்முன் அனைத்து மனிதரும் ஒரே மதிப்புடையவர்களே எனக் காட்டுகிறார். இப்பார்வையை நாமும் பெற வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம்மைத் தூய உள்ளத்தோடு நாடிவர எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''இயேசு தொழுநோயாளர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம்,
'நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!' என்றார்'' (மாற்கு 1:41)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- தொழுநோய் என்னும் பிணியால் பீடிக்கப்பட்ட மனிதர் பிற மனிதரிடமிருந்து பிரிந்து வாழ வேண்டியிருந்தது. அவர்கள் தீட்டுப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டதால் அவர்களை அண்டிச் செல்வோரும் தீட்டுக்கு உள்ளாவர் என்னும் எண்ணம் நிலவியது. சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்ட தொழுநோயாளருக்குச் சமய வழிபாடுகளிலும் பங்கேற்க வாய்ப்பில்லாதிருந்தது. இவ்வாறு சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்ட ஒரு தொழுநோயாளர் இயேசுவை அணுகித் தம்மைக் குணமாக்க வேண்டுகிறார். இயேசு அம்மனிதரிடமிருந்து அகன்று செல்லவில்லை. மாறாக, அவரைத் தொடுகிறார். தீட்டு என்பதைக் குறித்து இயேசு கவலைப்படவில்லை. தேவையில் உழல்கின்ற ஒரு மனிதருக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணமே இயேசுவின் உள்ளத்தில் எழுகின்றது. இயேசுவின் பரிவு அம்மனிதருக்குக் குணம் நல்குகின்றது.

-- இந்திய நாட்டில் தொழுநோயாளர் பலர் இன்றும் இருக்கின்றனர். சமுதாயம் அவர்களை முழுமையாக ஏற்க மறுக்கிறது. ஆனால் சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்படுகின்ற வேறு பலரும் தொழுநோயாளரைப் போல ஒதுங்கி வாழத் தள்ளப்படுகின்றனர். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஏற்றத்தாழ்வு கற்பிக்கின்ற நம் சமுதாயத்தில் தாழ்ந்த இனத்தவர் என ஒதுக்கிவைக்கப்படுகின்ற மக்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர். இயேசுவைப் போல நாமும் பரிவுள்ள மனிதராக மாறி, யாரையும் ஒதுக்கிவைக்காமல் அனைவரையும் கடவுளின் பிள்ளைகளாக ஏற்க அழைக்கப்படுகிறோம். இயேசுவின் சீடர் என்பதற்கு வெளியடையாளம் நாம் இயேசுவைப் பின்பற்றி அவரைப் போல வாழ்வதில்தான் அடங்கியிருக்கிறது.

மன்றாட்டு
இறைவா, பரிவுள்ள இதயத்தை எங்களுக்குத் தந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

------------------------------------

".. ..போய் உம்மைக் குருவிடம் காட்டி.. .."

இயேசுவின் அன்புக்குரியவரே!

அந்த மனிதனுக்குத் தொழுநோய். அவனை யாரும் தொடக்கூடாது. அவனோடு யாருக்கும் ஒட்டும் உறவும் கூடாது. அவன் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவன். கடவுளால் சபிக்கப்பட்டவன். அவனுக்கு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காதா? இயேசு அந்த வாழ்வை தனக்கு மீண்டும் தருவார் என நம்பி, அவர் பாதம் முழந்தாளிட்டு வேண்டுகிறான். இயேசு கையை நீட்டி அவனைத் தொடுகிறார். ஆமாம். அன்போடு, ஆசையோடு, ஆதங்கத்தோடு, விருப்பத்தோடு தொடுகிறார்.

அவன்; கேட்டதெல்லாம் தொழுநோயிலிருந்து சுகம் பெற வேண்டும் என்பது மட்டுமே. ஆனால் அந்த அன்பு தெய்வம் கொடுத்ததோ அவன் முற்றிலும் எதிர்பாராத கொடைகள். "போய் உம்மைக் குருவிடம் காட்டும் .. .." என்று சொல்லி அவனை ஆண்டவனோடும் சமுதாயத்தோடும் இணைத்தார். அவனைத் தொட்டு குணப்படுத்தி, எல்லோரும் அவனைத் தொட்டு உறவாடும் உயர்நிலைக்கு அவனைக் கொண்டு சென்றார்.

உன்னால் சமுதாயத்தோடு இணைந்து செல்ல முடியவில்லையா? நீ ஒதுங்கி வாழ்கிறாயா? சமுதாயம் உன்னை வெறுத்து ஒதுக்குகிறதா? உன் பொருளாதாரம், சமுக அந்தஸ்து, உன்னைத் தடுத்து நிறுத்துகிறதா? உன் பாவ வாழ்க்கை உன் நிம்மதியைக் குலைத்து, ஆண்டவன் முன்னிலையிலிருந்து உன்னை அப்புறப்படுத்துகிறதா? இயேசுவிடம் வா. அவர் உன் நோய் அனைத்தையும் குணப்படுத்துவார். வாழ்த்துக்கள். ஆசீர்;.

-: ஜோசப் லியோன்