மாற்கு 2:1-12

ஆண்டின் பொதுக்காலம் முதல் வாரம் வெள்ளி
டிசம்பர் 31 புதன்

1 சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.

2 பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.

3 அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.

4 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.

5 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

6 அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், "இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?

7 இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.

8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?

9 முடக்குவாதமுற்ற இவனிடம் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்பதா? "எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?

10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,

11 "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ" என்றார்.

12 அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

 

-------------------------

அந்த நாலு பேருக்கு நன்றி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நற்செய்தியில் பெயர் குறிப்பிடப்படாத நான்கு மனிதர்கள் இன்று நம் கவனத்தை ஈர்க்கின்றனர். இவர்கள் முடக்குவாதமுற்ற ஒரு மனிதரை சுமந்து இயேசுவிடம் கொண்டுவந்தனர். இயேசு அவரைத் தொட்டு அவரைக் குணமாக்கவேண்டுமென்ற எண்ணத்தில்தான். ஆனால், மக்கள் கூட்டத்தின் காரணமாக வீட்டிற்குள்ளே போகமுடியாதபோது, அவர்கள் வித்தியாசமான ஒரு செயலைச் செய்தனர். இயேசு வீட்டிற்குள் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி முடக்குவாதமுற்றவரை படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட அம்மனிதரைக் குணப்படுத்தினார். அவர்களுடைய நம்பிக்கையை என்று நற்செய்தியாளர் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். அந்த நான்கு மனிதர்களும் அவரது நண்பர்களாக அல்லது உறவினர்களாக இருக்க வேண்டும்.

அவர்களிடம்
1. இந்த மனிதர்மீது பரிவும்,
2.
அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பும்,
3. இயேசுவிடம் கொண்டு சென்றால் குணமடைவார் என்ற நம்பி;க்கையும்,
4. எப்படி வீட்டிற்குள் கொண்டுசெல்லலாம் என்ற படைப்பாற்றலும் இருந்தன.

இவை அனைத்தையுமே நாமும் பின்பற்றி நாம் அன்பு செய்கிறவர்கள்மீது நமது பாசத்தை வெளிப்படுத்தலாம்.

மன்றாடுவோம்: பாசத்தின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கிற நல்ல நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக நன்றி செலுத்துகிறோம். அவர்கள்மீத நாங்கள் கொண்டிருக்கும் பாசத்தை இந்த விவிலிய மனிதர்கள் வெளிப்படுத்தியதுபோல நாங்களும் வெளிப்படுத்த அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

----------------------------

"இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே"

இயேசுவின் அன்புக்குரியவரே!

இதைப்போல நாம் ஒருபோதும் காண முடியாது. ஏனென்றால் அங்கு நடந்தது ஒரு நிகழ்ச்சி அல்ல, பல. அன்றாட நிகழ்ச்சி அல்ல, அபூர்வமானது. முடக்குவாதம் குணமாகியுள்ளது. பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன. நல்லவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர. மறை நூல் வல்லுநரின் வெளி வேடம் வெளிச்சமிடப்பட்டுள்ளது.

நல்லவர்கள் நான்குபேர் எடுத்த முயற்சி, ஒருபோதும் காணாத அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுத்துள்ளது. இந்த நான்குபேரிடமிருந்த பண்புகள் நாட்டில் பெருகும் போதெல்லாம் நம்மிடையே ஒருபோதும் காணாத அதிசயங்களைக் காண முடியும்.

இயேசுவின் குணப்படுத்தும் ஆற்றல் மீது ஆழ்ந்த நம்பிக்கை, நோயுற்ற மனிதன் குணம் பெற வேண்டும் என்ற ஆசை, தங்கள் நேரத்தையும் உழைப்பையும் அதற்காக ஒதுக்கும் தாராள மனது இவை எங்கெல்;லாம் வெளிப்படுகிறதோ அங்கெல்லாம் அற்புதங்களைக் காணமுடியும்.

நல்லவைகள் நடைபெறும்போது குறைகாண்பதற்கென்றே சில அறிவாளிகள் அங்கங்கே வருவார்கள். அவர்களை இயேசுவைப்போல அலட்சியம் செய்து, நற்செயல்கள் நடைபெற நல்லவர்கள் முன்வந்தால் நாள்தோறும் நம்மிடையே இதுபோன்றவைகளை கண்டு மகிழலாம். நல்லவர்களில் ஒருவராகுங்கள். இதைப்போல எப்போதும் காண்போம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

இயேசுவின் அன்புக்குரியவரே!''இயேசு இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத்
திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்'' (மாற்கு 2:4)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- கப்பர்நாகும் ஊரில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. இயேசுவைத் தேடி மக்கள் பெருங்கூட்டமாக வருகிறார்கள். அப்போது சிலர் முடக்குவாதத்தால் துன்புற்ற ஒருவரைப் படுக்கையோடு தூக்கிவருகிறார்கள். வீட்டு வாயில் வழியே உள்ளே நுழையமுடியாத அளவு மக்கள் கூட்டம். எனவே, கூரையைப் பிரித்து நோயாளியைப் படுக்கையோடு இயேசுவின் முன்னிலையில் இறக்குகிறார்கள். இவ்வாறு தம்மைத் தேடி வருகின்ற மக்களின் நம்பிக்கையை இயேசு பாராட்டுகின்றார். நோயுற்ற மனிதரைக் குணப்படுத்துகின்றார். இயேசுவிடம் கடவுளின் வல்லமை துலங்கியது என யார் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களது வாழ்வில் அதிசயங்கள் நிகழ்ந்தன; பிணிகள் அகன்றன; நலம் பிறந்தது. இயேசுவை நம்பியோர் கடவுளையே நம்பினர்; அவரிடத்தில் வெளிப்பட்ட கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டனர். முடக்குவாதமுற்ற மனிதருக்கு இயேசு உடல் நலம் மட்டும் நல்கவில்லை; அம்மனிதரின் வாழ்வில் முழுநலனைக் கொணர்ந்தார். உடலும் உள்ளமும் ஆன்மாவும் நலம் பெற்றதால் அம்மனிதர் நோயிலிருந்தும் நோயின் மூல காரணமாகக் கருதப்பட்ட பாவத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

-- கடவுள் மட்டும்தானே பாவத்தை மன்னிக்க முடியும் என மறைநூல் அறிஞர் கேட்ட கேள்வி சரியானது என இயேசு ஏற்கிறார். அதே சமயத்தில் பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் தமக்கு உண்டு எனவும் இயேசு அறிக்கையிடுகிறார். இதனால் இயேசு வழியாகக் கடவுள் செயலாற்றினார் என்னும் உண்மையை இயேசு நிலைநாட்டினார்.

மன்றாட்டு
இறைவா, உம் வல்லமையால் புத்துணர்வு பெற்ற மனிதராக நாங்கள் வாழ வரமருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம்,
'மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்றார்'' (மாற்கு 2:5)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு இருந்த இடத்தில் மக்கள் பெருந்திரளாகக் கூடியிருக்கின்றனர். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரைப் படுக்கையோடு கொண்டுவருகின்றனர். ஆனால் இயேசுவை அணுகிச் செல்ல இயலாத அளவு பெருங்கூட்டம். படுக்கையோடு நோயாளியைக் கொண்டுவந்த ஆட்கள் வீட்டின் கூரையை உடைக்கின்றர்; திறப்பு உண்டாக்கி அந்நோயாளியைப் படுக்கையோடு கீழே இறக்குகின்றனர். திடீரென்று தம் முன்னே வந்துசேர்ந்த மனிதரை இயேசு நோக்குகின்றார். அந்த மனிதர்கள் இயேசுவின் வல்லமையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இயேசு நினைத்தால் முடக்குவாதமுற்ற மனிதர் மீண்டும் எழுந்து நடக்க முடியும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. ஆனால் இயேசு அந்த மனிதருக்கு உடல் நலம் மட்டும் நல்கவில்லை; அந்த மனிதருக்கு ஆன்ம நலத்தையும் அளிக்கிறார். அதாவது, முடக்குவாதமுற்ற மனிதருடைய பாவங்களை மன்னிக்கிறார். பாவமே நோய்க்குக் காரணம் என மக்கள் நினைத்த காலம் அது. ஆனால் இயேசு முடக்குவாதமுற்ற மனிதரின் பாவம்தான் அவருக்கு அந்நோயைக் கொணர்ந்தது என்று கூறவில்லை. மாறாக, உடல் நலம் அளிப்பதற்கு முன்னர் இயேசு ஆன்ம நலம் அளிக்கிறார்.

-- முடக்குவாதத்தால் துன்புற்ற அந்நோயாளி எதைக் குறிக்கிறார்? மனித வாழ்க்கையில் எழுகின்ற சிக்கல்களின் காரணமாகக் கூனிக் குறுகிப் போகின்ற மனிதரை நாம் அந்த முடக்குவாதமுற்றவரில் காண்கிறோம். உள்ளத்தைக் கவலை கவ்விக்கொள்ளும்போது ஒருவித செயலறுநிலை நம்மில் தோன்றிவிடுகிறது. இத்தகைய நிலையிலிருந்து நம்மை இயேசு விடுவிக்கின்றார். பாவம் என்பது நம்மைக் கடவுளிடமிருந்தும் பிறரிடமிருந்தும் பிரித்துவிடுகிறது; நாம் நன்மை செய்வதிலிருந்து நம்மைத் தடுத்துவிடுகிறது. இத்தகைய செயலறு நிலையிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் நிலவுகின்ற அடிமைத் தளைகள் அறுந்து விழ வேண்டும். உள்ளத்திலும் ஆன்மாவிலும் விடுதலையை நாம் உணரும்போது நம் இதய ஆழத்தில் கடவுளையும் பிறரையும் நாம் அன்போடு ஏற்போம்; நலமடைவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்களைப் பிணைத்திருக்கின்ற சுயநலத் தளைகளை அறுத்தெறிந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-----------------------------

"இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே"

இயேசுவின் அன்புக்குரியவரே!

இதைப்போல நாம் ஒருபோதும் காண முடியாது. ஏனென்றால் அங்கு நடந்தது ஒரு நிகழ்ச்சி அல்ல, பல. அன்றாட நிகழ்ச்சி அல்ல, அபூர்வமானது. முடக்குவாதம் குணமாகியுள்ளது. பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன. நல்லவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர. மறை நூல் வல்லுநரின் வெளி வேடம் வெளிச்சமிடப்பட்டுள்ளது.

நல்லவர்கள் நான்குபேர் எடுத்த முயற்சி, ஒருபோதும் காணாத அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுத்துள்ளது. இந்த நான்குபேரிடமிருந்த பண்புகள் நாட்டில் பெருகும் போதெல்லாம் நம்மிடையே ஒருபோதும் காணாத அதிசயங்களைக் காண முடியும்.

இயேசுவின் குணப்படுத்தும் ஆற்றல் மீது ஆழ்ந்த நம்பிக்கை, நோயுற்ற மனிதன் குணம் பெற வேண்டும் என்ற ஆசை, தங்கள் நேரத்தையும் உழைப்பையும் அதற்காக ஒதுக்கும் தாராள மனது இவை எங்கெல்;லாம் வெளிப்படுகிறதோ அங்கெல்லாம் அற்புதங்களைக் காணமுடியும்.

நல்லவைகள் நடைபெறும்போது குறைகாண்பதற்கென்றே சில அறிவாளிகள் அங்கங்கே வருவார்கள். அவர்களை இயேசுவைப்போல அலட்சியம் செய்து, நற்செயல்கள் நடைபெற நல்லவர்கள் முன்வந்தால் நாள்தோறும் நம்மிடையே இதுபோன்றவைகளை கண்டு மகிழலாம். நல்லவர்களில் ஒருவராகுங்கள். இதைப்போல எப்போதும் காண்போம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

:- ஜோசப் லியோன்