முதல் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5,11

சகோதரர் சகோதரிகளே, கடவுள் தரும் ஓய்வைப் பெறுவது பற்றி அவர் அளித்த வாக்குறுதி இன்னும் நிலைத்திருப்பதால், உங்களுள் எவரேனும் அதை அடையத் தவறிவிடக் கூடாது என எண்ணுகிறேன். இது குறித்து நாம் கவனமாய் இருப்போமாக. ஏனெனில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே, நமக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. ஆயினும் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன் அளிக்கவில்லை; ஏனெனில் கேட்டவர்கள் அச்செய்தியை நம்பிக்கையோடு கேட்கவில்லை. இந்த ஓய்வைப் பெறுகிறவர்கள் நம்பிக்கையுடன் இருக்கும் நாமே. இதைக் குறித்தே, ``நான் சினமுற்று, `நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன்'' என எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் உலகம் தோன்றிய காலத்திலேயே கடவுளுடைய வேலைகள் முடிந்துவிட்டன. ஏனெனில் மறைநூலில் ஓரிடத்தில் ஏழாம் நாள் பற்றி, ``கடவுள் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்'' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மேற்சொன்ன சொற்றொடரில், ``அவர்கள் நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்'' என்றிருக்கிறது. ஆதலால், கீழ்ப்படியாதவர்களின் மாதிரியைப் பின்பற்றி, எவரும் வீழ்ச்சியுறாதவாறு அந்த ஓய்வைப் பெற முழு முயற்சி செய்வோமாக.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 78: 3,4. 6,7. 8

பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதீர்கள்.

3 நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை - இவற்றை உரைப்போம்.
4 வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு,
வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். -பல்லவி

6உ இவர்கள் தம் புதல்வர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும்,
7 அதனால், அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும்,
இறைவனின் செயல்களை மறவாதிருக்கவும், அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவுமே. -பல்லவி

8 தங்கள் மூதாதையரைப் போல், எதிர்ப்பு மனமும்,
அடங்காக் குணமும் கொண்ட தலைமுறையாகவும், நேரிய உள்ளமற்றவர்களாகவும்,
இறைவன்மீது உண்மைப் பற்று அற்றவர்களாகவும் இராதபடி அவர் கட்டளையிட்டார். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

மாற்கு 2:1-12

ஆண்டின் பொதுக்காலம் முதல் வாரம் வெள்ளி


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12


இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ``மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' என்றார். அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ``இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?'' என உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர். உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ``உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் `உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா? `எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட' என்பதா? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்'' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ``நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ'' என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ``இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே'' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

----------------------------

அன்பார்ந்த அதிகாரம்

ஆசிரியர் தன்னிடம் கொடுக்கப்பட்ட மாணவர்கள் மீது கொண்டிருக்கும் அதிகாரம் அன்பை சார்ந்ததாக எண்ண வேண்டும். ஏனென்றால் அவன் வாழ்வில் அறிவு உலகை காண்பதற்கான ஏணிகள் அவர்கள். பெற்றோர் பிள்ளைகள் மீது கொண்டிருக்கும் அதிகாரம் அன்பை சார்ந்ததாக எண்ணுதல் வேண்டும். ஏனென்றால் இந்த உலகத்தை காணசெய்த மகான்கள். இவர்கள் பெற்றிருக்கக்கூடிய அதிகாரங்கள் அன்பை சார்ந்தது. இன்னொருபுறம் அடிமையாக்கக்கூடிய அதிகாரம். ஹிட்லர் ஆறு லட்சம் யூதர்களை கொன்று குவித்தது தன்னிடமிருந்த அதிகாரம்.

இத்தகைய சூழலில்தான் இயேசு தன்னிடமிருந்த அன்பின் அதிகாரத்தை பயன்படுத்தி முடக்குவாதமுற்றவனுக்கு புதுவாழ்வு கொடுக்கின்றார். பாவமே அனைத்து வியாதிகளுக்கும் காரணம் என்பதே யூத மரபு. ஆனால் இயேசு நோயாளிக்கு வெறும் உடல் நலத்தை மட்டுமல்ல, ஒரு வேரோட்ட நலத்தையே தரவிரும்பி அவருடைய பாவங்களை மன்னிக்கின்றார். குழுமியிருந்த மறைநூல் அறிஞர் இயேசுவின் செயலை எதிர்க்கின்றார். தாங்கள் சட்டத்தின் பாதுகாவலர்கள் என்பதை மக்கள்முன் எண்பித்து, தங்கள் அடிமை அதிகாரத்தை காட்டும் குறுமதிகொண்டவர்கள். இயேசுவின் வாதம் மக்களோடு இணைந்து செயல்படும் தன்மை, அவருடைய மனிதநேயத்திற்கும் அதிகாரத்தன்மைக்கும் பொருத்தமாக உள்ளதைத்தான் இயேசு இங்கே வெளிப்படுத்தி எதிரிகளை வாயடைத்தார்.

நாம் மற்றவர்மீது வைக்கின்ற அன்பு எதைச் சார்ந்ததாக இருக்கிறது? அன்பின் அடிப்படையிலா (அ) அதிகாரத்தின் அடிப்படையிலா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

========================

13.01.2023
ஆர்வம் ஆசீரைத் தரும்

ஒரு நோ்காணலில் கெவின் கோ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரங்கநாதன் இவ்வாறு கூறினார், “நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற வேலைகள் எதுவுமே உங்களின் முழு ஆர்வத்தோடு நடக்கவில்லையென்றால் நீங்கள் தேடிக் கொண்டிருப்பது இதுவல்ல. முதலில் உங்களுக்குத் தேவையானதை கண்டுபிடியுங்கள்”. அதுபோல மார்டின் லூதர் கிங் சொன்ன வார்த்தையையும் நாம் சற்று உள்ளுணர்ந்து பார்க்கலாம். “எதுவுமே செய்வதற்கு தகுதியான வேலை தான். அதை ஆர்வத்தோடு செய்யும்போது நீ தெருவைச் சுத்தம் செய்கிறவனாக இருந்தாலும், அதை ஆர்வத்தோடு செய். சுத்தமாக இருக்கும் தெரு உன்னைக் கவனிக்க வைக்கும். உன்னைப் பற்றி பேச வைக்கும்” என்பார். இன்றைய உலகில் சாதனையாளர்களாக அறியப்படக் கூடியவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒருமுறை வாசித்துப் பார்த்தோமென்றால், அவர்களிடம் தாங்கள் மேற்கொண்ட முயற்சியில் ஆர்வமில்லாமல் இருக்காது. ஆர்வம் தான் சாதாரண மனிதர்களை சாதனையாளர்களாக, சரித்திரத்தில் இடம் பிடிக்கின்ற மனிதர்களாக மாற்றியிருக்கிறது.

அத்தகைய ஒரு ஆர்வத்தைத் தான் இன்றையய நற்செய்தி வாசகத்தில் வரும் முடக்குவாதமுற்ற மனிதரிடமும் நாம் பார்க்கின்றோம். கப்பர்நாகும் என்பது ஒரு ஒதுக்கப்பட்ட கடற்கரை கிராமம். விவிலிய பேராசிரியர்கள் இயேசுவின் பணி வாழ்வுக்கு மையமாக கப்பர்நாகும் செயல்பட்டதாக கூறுவர். இயேசு இங்கு தான் பலருடைய நோய்களை குணமாக்கினார். இயேசு தன் பணிவாழ்வில் செய்த முதல் புதுமைக்கு (கானாவூர் திருமணம்) பிறகு கப்பர்நாகுமில் தான் தங்கியிருந்தார். அது மட்டுமில்லாமல் தன் பணி வாழ்வுக்கு முதல் சீடர்களை இங்கு தான் தோ்வு செய்கின்றார். இத்தகைய பண்புமிக்க ஊர் கப்பர்நாகும். அதனால் தான் எதிலும் ஆர்வம் கொண்டவர்களாக விளங்கினார்கள். அத்தகைய ஆர்வம் இந்த முடக்குவாதமுற்றவனிடம் காணப்படுகிறது. எல்லா தடைகளையும் தகர்த்து, ஆர்வத்தோடு இயேசு முன்பு செல்கின்றான். அவனின் ஆர்வம் முடங்கிப் போய் இருந்த எலும்புக்கு முந்தி செல்லக்கூடிய வலுவினை பரிசாக கொடுக்கப்பட்டது.

நமது வாழ்வில் இயேசுவைக் காண இத்தகைய ஆர்வம் இருக்கிறதா? நாம் கடமைக்காக இயேசுவை காண வருகிறோமா அல்லது ஆர்வத்தோடு வருகிறோமா? ஆர்வத்தோடு வரும்போது தள்ளாடிய கால்கள் நேராக்கப்படும். சிந்திப்போம்.
- அருட்பணி. பிரதாப்

=======================


தியானப் பாடல் சிந்தனை் : திருப்பாடல் 78: 3, 4, 6 – 7

“இறைவனின் செயல்களை மறவாதீர்”

இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் மையமாக இருந்தது யாவே இறைவான் மட்டும் தான். அவர் தான் அவர்களுக்கு எல்லாமுமாக இருக்கிறவர் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அந்த இறைவன் செய்த வல்லமையுள்ள செயல்களை அவர்கள் அடிக்கடி நினைவுகூர்ந்து, தங்களின் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தனர். அதனை ஒரு முக்கிய நிகழ்வாகவே, ஒவ்வொரு ஆண்டும் நினைத்துப்பார்த்தனர். அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இங்கே நினைவுகூர்கிறார்.

இறைவன் செய்த செயல்கள் என்ன? அவற்றில் நினைத்துப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? தொடக்கத்தில் இறைவன் இந்த உலகத்தைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதர்களைப் படைத்தார். மனிதன் கீழ்ப்படியாமையால் தவறு செய்தாலும், அவர்களை தொடர்ந்து பாதுகாப்பாக வழிநடத்தினார். தன்னுடைய விலைமதிப்பில்லா சொந்தமாக, இஸ்ரயேல் மக்களை தேர்ந்தெடுத்தார். உருத்தெரியாமல் இருந்த அவர்களுக்கு உருக்கொடுத்தார். எகிப்தில் அடிமைகளாக இருந்த அவர்களை, விடுதலை வாழ்வை நோக்கி அற்புதமாக வழிநடத்தினார். பாலைநிலத்தில் நாற்பது ஆண்டுகள், யாரும் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் உணவளித்தார். தண்ணீர் வழங்கி, மக்களின் தாகம் தணித்தார். இயற்கையின் சீற்றங்களிலிருந்து, மனிதர்களின் தாக்குதல்களிலிருந்து அவர்களை தப்புவித்தார். அவர்களை வழிநடத்த அரசர்களைக் கொடுத்தார். இறைவாக்கினர்கள் வாயிலா அவர்களோடு பேசினார். எவ்வளவுதான், இஸ்ரயேல் மக்கள் நன்றி மறந்தவா்களாக இருந்தாலும், எதிரிகளிடமிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தார். அவர்களுக்கு மெசியாவை வாக்களித்தார். இவ்வாறு, இஸ்ரயேல் மக்களுக்கு எல்லாமுமாக இறைவன் இருந்தார். அதனை நினைவுகூர்வதற்கு திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார்.

நமது வாழ்வில் இறைவன் செய்த எல்லா நன்மைகளையும் எண்ணிப்பார்ப்போம். நாம் ஆபத்தில் இருந்தபோது, தோல்வியில் துவண்டபோது, வாழ்க்கையை நினைத்து கவலை கொண்டபோது, இறைவன் நம்மோடு இருந்து, நம்மை வழிநடத்தியிருக்கிறார். அவர் நமது வாழ்வில் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் நாமும் எண்ணிப்பார்த்து, அவருக்குரியவர்களாக வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

பாவ மன்னிப்பு

இயேசு தனது போதனையாலும், வாழ்வாலும் அதிக எண்ணிக்கையிலான மக்களை எளிதாக கவர்ந்துவிட்டார். இயேசு சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது. இயேசுவை அவர்கள் கடவுளின் பிரதிநிதியாகவே பார்த்தார்கள். இயேசுவிடத்தில் ஏதோ அதிசயிக்கத்தக்க ஒன்றை மக்கள் உணர்ந்திருக்க வேண்டும். அதனால் தான் அவரை ஏராளமான மக்கள் பின்தொடர்ந்தார்கள். இயேசு மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டார் என்பதையே மறைநூல் அறிஞர்களின் வருகை எடுத்துக்காட்டுகிறது. ஏனென்றால், போதிப்பவர்களில் உண்மையானவர் அல்லது போலியானவர் என்பதை, தலைமைச்சங்கம் முடிவு செய்தது. மக்கள் மத்தியில் இயேசு புகழ்பெற்றதனால், அவரைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக, அறிஞர்கள் அங்கே வந்திருந்தனர்.

இயேசு எப்படி பாவங்களை மன்னிக்கலாம்? என்பது அவர்களின் கேள்வியாக இருந்தது. ஏனென்றால், கடவுள் ஒருவர் மட்டும் தான் பாவங்களை மன்னிக்க முடியும். அப்படியிருக்க இயேசு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, என்று எப்படிச் சொல்லலாம், என்று அவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இயேசு தனக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் இருக்கிறது என்பதை, அழகாக அவர்களுக்கு, எடுத்துக்காட்டு மூலமாக விவரிக்கிறார். அவர்களால் பதில் சொல்லவும் முடியாமல், என்ன சொல்வதென்றும் புரியாமல் விழிக்கிறார்கள். இங்கே இயேசு ஒரு ஆழமான செய்தியைத்தருகிறார். தான் பாவங்களை மன்னிக்கிறேன் என்று சொல்வதை விட, தான் பாவங்களை மன்னிப்பதற்கு கடவுளின் வாய்க்காலாக இருக்கிறேன் என்பதை அவர் வெளிப்படுத்துகிறார். தாவீது தவறு செய்தபோது, நாத்தான் இறைவாக்கினர் அவரிடம் அனுப்பப்படுகிறார். தாவீது தனது தவறுக்காக மனம் வருந்தியவுடன், நாத்தான் சொல்கிறார்: ”ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய்” (2சாமுவேல் 12: 13). இங்கே நாத்தான் தாவீதின் பாவங்களை மன்னிக்கவில்லை. மாறாக, கடவுளின் மன்னிப்பை எடுத்துரைக்கிறார். அதேபோலத்தான் இயேசுவும், கடவுளின் மன்னிப்பை அங்கே வெளிப்படுத்துகிறார்.

நமது வாழ்வில் நாம் கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்காகத்தான் திருச்சபை, பாவ மன்னிப்பு அரும்அடையாளத்தைத் தந்திருக்கிறது. அருட்பணியாளர் என்றுமே பாவத்தை மன்னிப்பது கிடையாது. அவருக்கு அந்த அதிகாரமும் கிடையாது. மாறாக, கடவுளின் மன்னிப்பை வழங்கும் வாய்க்காலாக அவர் இருக்கிறார். அவர் வழியாக நமக்கு கடவுளின் அருளும் கிடைக்கிறது. அந்த மன்னிப்பையும், அருளையும் நிரம்பப் பெற்றுக்கொள்வோம். 

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஒருவரின் நம்பிக்கை மற்றவருக்கு இறைஅருளை பெற்றுத்தர முடியும் என்பது இன்றைய நற்செய்தியின் மூலம் தெளிவாகிறது. யூதர்களைப்பொறுத்தவரையில் உடல் நலக்குறைவுக்கும், பாவத்திற்கு தொடர்பு உள்ளதாக நம்பினர். இன்றைய நற்செய்தியிலே வருகிற முடக்குவாதமுற்ற மனிதரின் நிலைமைக்குக் காரணம் அவன் செய்த பாவம் என்பதுதான் அவர்களின் நம்பிக்கை. எனவேதான், இயேசு ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்கிறார்.

இந்த வாசகத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று, முடக்குவாதமுற்றவர்களைத் தூக்கிக்கொண்டு வந்த அந்த நால்வரின் நம்பிக்கை. இயேசு அவர்களின் நம்பிக்கையைக்கண்டு அவரைக்குணப்படுத்துகிறார். வழக்கமாக இயேசு, குணம் பெற வந்தவரின் நம்பிக்கையைப்பார்த்து, அவரின் நம்பிக்கையின் பொருட்டு குணப்படுத்துவார். ஆனால், இந்தப்பகுதியில் மற்றவர்களின் நம்பிக்கையைக்கண்டு குணப்படுத்துகிறார். நம்முடைய நம்பிக்கையின் வழியாக மற்றவர்களின் வாழ்க்கையில் கடவுளின் அருளைப்பெற்றுத்தர முடியும். புனித அகுஸ்தினாரின் தாய் மோனிக்காவின் செபம், கடவுள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை, அகுஸ்தினாரின் வாழ்வையே புரட்டிப்போடுவதாக அமைந்திருந்தது. பழைய ஏற்பாட்டிலே சோதோம் நகரை அழிக்கக் கடவுள் திட்டமிட்டபொழுது, ஆபிரகாம் அந்த நகருக்காகப் பரிந்துப்பேசுகிறார். அப்போது பத்து நீதிமான்களின்பொருட்டு, அந்த நகரை அழிக்க மாட்டேன் என்கிறார். இதனுடைய பொருள் கடவுள் நம்பிக்கையோடு நேர்மையோடு வாழும் மனிதர்கள்பொருட்டு மற்றவர்களுக்கு வாழ்வு தருகிறார் என்பதே.

நாமும் நம்முடைய குடும்பத்திலே தீய வாழ்க்கை வாழுகின்றவர்களுக்காக, கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்காக மன்றாடும்போது, அவர்களின் வாழ்வும் நிச்சயம் மாறும். அவர்களும் இறையருளைப்பெற்றுக்கொள்வார்கள். அவர்களுக்காக நாம் தொடர்ந்து செபிப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

----------------------------------------

செயலில் வெளிப்படும் விசுவாசம்

பாலஸ்தீனத்தில் இருக்கக்கூடிய வீடுகள் எப்போதும் திறந்தவண்ணமாய் இருக்கும். அதற்கு காரணம், உபசரிப்பு. யாரும் எந்த வேளையிலும் வீட்டிற்குள் வரலாம் என்பதன் பொருள். பயணிகள், வழிதவறி வருகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை வரவேற்று உபசரிப்பது, யூதர்களின் வழக்கம். எளிமையான வீடுகளில் உபசரிப்பு அறை என்று தனியே எந்தவொரு அறையும் கிடையாது. கதவைத்திறந்தால் தெரு முழுவதும் தெரியும். அத்தகைய எளிமையான வீட்டில் இயேசு இருந்ததால், உள்ளே யாரும் செல்ல முடியாத அளவுக்கு, கூட்டம் அதிகமாக இருந்தது.

பாலஸ்தீன வீடுகளில் மேற்கூரை பொதுவானது. மேலே இருந்து இறங்குவதற்கு வசதியாக படிக்கட்டுக்களும் இருக்கும். இயேசு அவர்களைப்பார்த்த மட்டில் ஒன்றுமே கேட்கவில்லை. அவர்களின் விசுவாசத்தை உடனடியாகப் புரிந்து கொள்கிறார். அவர்களின் செயல் விசுவாசத்தைப்பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. உடனடியாக அவனுக்கு சுகம் கொடுக்கிறார். விசுவாசம் என்பது பலவிதங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அவற்றில் ஒன்று செயல் வழியாக வெளிப்படுத்துவது என்பதை இந்த நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

நமது வாழ்வில், நமது செயல்பாடுகள் விசுவாசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறதா? நமது எண்ணங்களும், சிந்தனைகளும் விசுவாசத்தை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருக்கிறதா? சிந்திப்போம், செயல்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நலம் பெற தேவை பாவமன்னிப்பு !

உடல் நலத்திற்கும், பாவ மன்னிப்புக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை எடுத்துக்காட்டுகிறது இன்றைய நற்செய்தி வாசகம். முடக்குவாதமுற்ற மனிதரைக் குணப்படுத்த விரும்பும் இயேசு "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்கிறார்.

உடல், உள்ள நலம் பெறுவதற்காக தியானங்கள் நடைபெறுகின்ற இடங்களில் பாவ மன்னிப்புப் பெற ஒப்புரவு அருள்சாதனப் பங்கேற்பு மிகவும் வலியுறுத்தப்படுகின்றது. நமது ஆன்மாவையும், உள்ளத்தையும் அழுத்தும் குற்ற உணர்வு, பாவக் கறைகள் நீக்கப்பட்டால்தான் நாம் உடல் நலம் பெறமுடியும், முழுமையான குணம் பெறமுடியும் என்பதை உளவியல் அறிஞர்கள் இன்று சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, முன் எப்போதையும்விட அதிகமாக நாம் வாழும் இந்நாள்களில் ஒப்புரவு அருள்சாதனத்தின் அருமை, அவசியம் எடுத்துரைக்கப்பட வேண்டும். இறைவனின் இரக்கத்தையும், மன்னிப்பையும் அனுபவிப்பவர்களால்தான் முழுமையான நலம் பெறமுடியும் என்பதைப் பிறருக்கு அறிவிப்போமாக!

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பாவிகளாகிய எம்மீது இரக்கம் கொண்டு, எங்களை மன்னிப்பீராக. இதனால், உமது நலமளிக்கும் ஆற்றலை நாங்கள் பெற்று, உடலிலும் உள்ளத்திலும் நலம் பெறுவோமாக. உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-பணி. குமார்ரஜா

---------------------------------------------------------

அவர்களால் இவர் குணமடைந்தார்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் முடக்குவாதமுற்ற மனிதர் ஒருவரை நால்வர் சுமந்து இயேசுவிடம் கொண்டுவந்ததையும், இயேசு அந்த மனிதரைக் குணமாக்கி அனைவர் முன்னும் அவர் படுக்கையை எடுத்துக்கொண்டு வெளியே போகச் செய்த நிகழ்வையும் பார்க்கிறோம்.

இதில் நம் கவனத்தை ஈர்க்கும் செய்தி இதுதான்: வீட்டின் முன் மக்கள் கூட்டம் திரண்டிருந்த காரணத்தால் அவர்களால் இம்மனிதரை வீட்டுக்குள் இயேசுவிடம் கொண்டுவர முடியவில்லை. எனவே, அவர்கள் வித்தியாசமான ஒரு செயலைச் செய்கிறார்கள். வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு, திறப்பு வழியாக அந்த மனிதரை படுக்கையோடு கீழே இறக்கினார்கள். இயேசு " அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு" முடக்குவாதமுற்ற மனிதரைக் குணமாக்கினார்.

அந்த நால்வரின் நம்பிக்கைதான் இந்த மனிதருக்கு நலம் தந்தது. அவர்கள் இயேசுவின் ஆற்றலில் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகத்தான் வித்தியாசமாகச் சிந்தித்து, அவரை கூரை வழியே உள்ளே கொண்டுவந்தனர். அவர்களது நம்பிக்கையைக் கண்டுதான் இயேசு அவரை நலப்படுத்தினார்.

சில நேரங்களில் குடும்பத்தினரின், நண்பர்களின் நம்பிக்கையும், வேண்டுதலும் ஒரு மனிதருக்கு நலம் தருவதை நமது அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். எனவேதான், நமக்கு வேண்டியவர்களிடம் நமக்காக இறைவனிடம் மன்றாடக் கேட்டுக்கொள்கிறோம்.

நமக்கு வேண்டியவர்கள், நண்பர்களை இன்று நினைவுகூர்ந்து, அவர்களுக்காக நம்பிக்கையுடன் இன்று மன்றாடுவோமா!

மன்றாடுவோம்: உலகின் ஒளியான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். அந்த நான்கு மனிதர்களின் நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்ற மனிதரைக் குணமாக்கினீரே. எங்களுடைய நம்பிக்கையை, வேண்டுதலை ஏற்றுக்கொண்டு, எங்கள் உறவினர், நண்பர்..... முழு நலமும், ஆசியும் வழங்குவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

---------------------------------------------------

இணையதள உறவுகளே

எதிலும் முதலிடம் எப்போதும் முன்வரிசை எதிலும் முன்னால் என்று எல்லோருக்கும் ஒரு ஆசை இருப்பது முறையானதே. அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவும் சிறப்பாக பெரிய மனிதர்களின் கவனத்தைக் கவரவும் முதலிடத்தைத் தேடுவர். இப்படித்தான் அந்த முடக்குவாதமுற்ற மனிதனை கூரையைப் பிரித்து இயேசுவின் முன் இறக்கினார்கள். என்ன முயற்சி! என்ன சிரமம். என்ன இழப்பு. எல்லாம் இயேசுவின் கவனத்தைப்பெரும் பொருட்டு.

இயேசு அவர்களின் முயற்சியையும் நம்பிக்கையையும் பாராட்டி, அவர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக அவனைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாது அவனது பாவங்களையும் மன்னிக்கிறார். எதிர்பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மேலாகத் தருபவர் அல்லவா. எனவே உடல் நோய், மனநோய், ஆன்ம நோய் என அனைத்தையும் நீக்கி முழு மனித சுகத்தையும் கொடுக்கிறார்.

இயேசுவின் முன்னால் அமருங்கள். அவரின் சிறப்பான கவனத்தைப் பெறுவீர்கள். ஆலயத்திலும் திருப்பலியிலும் முதலிடத்தில் அமர இன்று ஆட்கள் முன்வருவதில்லை. எங்கு இயேசுவின் கவனம் நம்மீது பட்டுவிடுமோ என்ற பயமா? முன்னால் அமர்ந்து இயேசுவின் கவனத்தைக் கவர்ந்து அவரது ஆசீர் பெறுவோம். உடலிலும் உள்ளத்திலும் ஆன்மாவிலும் சுகம் பெற்று இனிது வாழ்வோம்.

-ஜோசப் லீயோன்

 

அந்த நாலு பேருக்கு நன்றி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நற்செய்தியில் பெயர் குறிப்பிடப்படாத நான்கு மனிதர்கள் இன்று நம் கவனத்தை ஈர்க்கின்றனர். இவர்கள் முடக்குவாதமுற்ற ஒரு மனிதரை சுமந்து இயேசுவிடம் கொண்டுவந்தனர். இயேசு அவரைத் தொட்டு அவரைக் குணமாக்கவேண்டுமென்ற எண்ணத்தில்தான். ஆனால், மக்கள் கூட்டத்தின் காரணமாக வீட்டிற்குள்ளே போகமுடியாதபோது, அவர்கள் வித்தியாசமான ஒரு செயலைச் செய்தனர். இயேசு வீட்டிற்குள் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி முடக்குவாதமுற்றவரை படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட அம்மனிதரைக் குணப்படுத்தினார். அவர்களுடைய நம்பிக்கையை என்று நற்செய்தியாளர் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். அந்த நான்கு மனிதர்களும் அவரது நண்பர்களாக அல்லது உறவினர்களாக இருக்க வேண்டும்.

அவர்களிடம்
1. இந்த மனிதர்மீது பரிவும்,
2.
அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பும்,
3. இயேசுவிடம் கொண்டு சென்றால் குணமடைவார் என்ற நம்பி;க்கையும்,
4. எப்படி வீட்டிற்குள் கொண்டுசெல்லலாம் என்ற படைப்பாற்றலும் இருந்தன.

இவை அனைத்தையுமே நாமும் பின்பற்றி நாம் அன்பு செய்கிறவர்கள்மீது நமது பாசத்தை வெளிப்படுத்தலாம்.

மன்றாடுவோம்: பாசத்தின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கிற நல்ல நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக நன்றி செலுத்துகிறோம். அவர்கள்மீத நாங்கள் கொண்டிருக்கும் பாசத்தை இந்த விவிலிய மனிதர்கள் வெளிப்படுத்தியதுபோல நாங்களும் வெளிப்படுத்த அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

---------------------------

இயேசுவின் அன்புக்குரியவரே!''இயேசு இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத்
திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்'' (மாற்கு 2:4)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- கப்பர்நாகும் ஊரில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. இயேசுவைத் தேடி மக்கள் பெருங்கூட்டமாக வருகிறார்கள். அப்போது சிலர் முடக்குவாதத்தால் துன்புற்ற ஒருவரைப் படுக்கையோடு தூக்கிவருகிறார்கள். வீட்டு வாயில் வழியே உள்ளே நுழையமுடியாத அளவு மக்கள் கூட்டம். எனவே, கூரையைப் பிரித்து நோயாளியைப் படுக்கையோடு இயேசுவின் முன்னிலையில் இறக்குகிறார்கள். இவ்வாறு தம்மைத் தேடி வருகின்ற மக்களின் நம்பிக்கையை இயேசு பாராட்டுகின்றார். நோயுற்ற மனிதரைக் குணப்படுத்துகின்றார். இயேசுவிடம் கடவுளின் வல்லமை துலங்கியது என யார் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களது வாழ்வில் அதிசயங்கள் நிகழ்ந்தன; பிணிகள் அகன்றன; நலம் பிறந்தது. இயேசுவை நம்பியோர் கடவுளையே நம்பினர்; அவரிடத்தில் வெளிப்பட்ட கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டனர். முடக்குவாதமுற்ற மனிதருக்கு இயேசு உடல் நலம் மட்டும் நல்கவில்லை; அம்மனிதரின் வாழ்வில் முழுநலனைக் கொணர்ந்தார். உடலும் உள்ளமும் ஆன்மாவும் நலம் பெற்றதால் அம்மனிதர் நோயிலிருந்தும் நோயின் மூல காரணமாகக் கருதப்பட்ட பாவத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

-- கடவுள் மட்டும்தானே பாவத்தை மன்னிக்க முடியும் என மறைநூல் அறிஞர் கேட்ட கேள்வி சரியானது என இயேசு ஏற்கிறார். அதே சமயத்தில் பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் தமக்கு உண்டு எனவும் இயேசு அறிக்கையிடுகிறார். இதனால் இயேசு வழியாகக் கடவுள் செயலாற்றினார் என்னும் உண்மையை இயேசு நிலைநாட்டினார்.

மன்றாட்டு
இறைவா, உம் வல்லமையால் புத்துணர்வு பெற்ற மனிதராக நாங்கள் வாழ வரமருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம்,
'மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்றார்'' (மாற்கு 2:5)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு இருந்த இடத்தில் மக்கள் பெருந்திரளாகக் கூடியிருக்கின்றனர். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரைப் படுக்கையோடு கொண்டுவருகின்றனர். ஆனால் இயேசுவை அணுகிச் செல்ல இயலாத அளவு பெருங்கூட்டம். படுக்கையோடு நோயாளியைக் கொண்டுவந்த ஆட்கள் வீட்டின் கூரையை உடைக்கின்றர்; திறப்பு உண்டாக்கி அந்நோயாளியைப் படுக்கையோடு கீழே இறக்குகின்றனர். திடீரென்று தம் முன்னே வந்துசேர்ந்த மனிதரை இயேசு நோக்குகின்றார். அந்த மனிதர்கள் இயேசுவின் வல்லமையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இயேசு நினைத்தால் முடக்குவாதமுற்ற மனிதர் மீண்டும் எழுந்து நடக்க முடியும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. ஆனால் இயேசு அந்த மனிதருக்கு உடல் நலம் மட்டும் நல்கவில்லை; அந்த மனிதருக்கு ஆன்ம நலத்தையும் அளிக்கிறார். அதாவது, முடக்குவாதமுற்ற மனிதருடைய பாவங்களை மன்னிக்கிறார். பாவமே நோய்க்குக் காரணம் என மக்கள் நினைத்த காலம் அது. ஆனால் இயேசு முடக்குவாதமுற்ற மனிதரின் பாவம்தான் அவருக்கு அந்நோயைக் கொணர்ந்தது என்று கூறவில்லை. மாறாக, உடல் நலம் அளிப்பதற்கு முன்னர் இயேசு ஆன்ம நலம் அளிக்கிறார்.

-- முடக்குவாதத்தால் துன்புற்ற அந்நோயாளி எதைக் குறிக்கிறார்? மனித வாழ்க்கையில் எழுகின்ற சிக்கல்களின் காரணமாகக் கூனிக் குறுகிப் போகின்ற மனிதரை நாம் அந்த முடக்குவாதமுற்றவரில் காண்கிறோம். உள்ளத்தைக் கவலை கவ்விக்கொள்ளும்போது ஒருவித செயலறுநிலை நம்மில் தோன்றிவிடுகிறது. இத்தகைய நிலையிலிருந்து நம்மை இயேசு விடுவிக்கின்றார். பாவம் என்பது நம்மைக் கடவுளிடமிருந்தும் பிறரிடமிருந்தும் பிரித்துவிடுகிறது; நாம் நன்மை செய்வதிலிருந்து நம்மைத் தடுத்துவிடுகிறது. இத்தகைய செயலறு நிலையிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் நிலவுகின்ற அடிமைத் தளைகள் அறுந்து விழ வேண்டும். உள்ளத்திலும் ஆன்மாவிலும் விடுதலையை நாம் உணரும்போது நம் இதய ஆழத்தில் கடவுளையும் பிறரையும் நாம் அன்போடு ஏற்போம்; நலமடைவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்களைப் பிணைத்திருக்கின்ற சுயநலத் தளைகளை அறுத்தெறிந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-----------------------------

"இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே"

இயேசுவின் அன்புக்குரியவரே!

இதைப்போல நாம் ஒருபோதும் காண முடியாது. ஏனென்றால் அங்கு நடந்தது ஒரு நிகழ்ச்சி அல்ல, பல. அன்றாட நிகழ்ச்சி அல்ல, அபூர்வமானது. முடக்குவாதம் குணமாகியுள்ளது. பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன. நல்லவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர. மறை நூல் வல்லுநரின் வெளி வேடம் வெளிச்சமிடப்பட்டுள்ளது.

நல்லவர்கள் நான்குபேர் எடுத்த முயற்சி, ஒருபோதும் காணாத அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுத்துள்ளது. இந்த நான்குபேரிடமிருந்த பண்புகள் நாட்டில் பெருகும் போதெல்லாம் நம்மிடையே ஒருபோதும் காணாத அதிசயங்களைக் காண முடியும்.

இயேசுவின் குணப்படுத்தும் ஆற்றல் மீது ஆழ்ந்த நம்பிக்கை, நோயுற்ற மனிதன் குணம் பெற வேண்டும் என்ற ஆசை, தங்கள் நேரத்தையும் உழைப்பையும் அதற்காக ஒதுக்கும் தாராள மனது இவை எங்கெல்;லாம் வெளிப்படுகிறதோ அங்கெல்லாம் அற்புதங்களைக் காணமுடியும்.

நல்லவைகள் நடைபெறும்போது குறைகாண்பதற்கென்றே சில அறிவாளிகள் அங்கங்கே வருவார்கள். அவர்களை இயேசுவைப்போல அலட்சியம் செய்து, நற்செயல்கள் நடைபெற நல்லவர்கள் முன்வந்தால் நாள்தோறும் நம்மிடையே இதுபோன்றவைகளை கண்டு மகிழலாம். நல்லவர்களில் ஒருவராகுங்கள். இதைப்போல எப்போதும் காண்போம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

:- ஜோசப் லியோன்