முதல் வாசகம்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 9: 1-4.17-19; 10: 1

அந்நாள்களில் பென்யமின் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்யமினியன் அபியாவுக்குப் பிறந்த பெக்கோராத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குப் பிறந்தவர். அவருக்குச் சவுல் என்ற ஓர் இளமையும் அழகும் கொண்ட மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவர் எவரும் இலர். மற்ற அனைவரையும்விட அவர் உயரமானவர். மற்ற அனைவரும் அவர் தோள் உயரமே இருந்தனர். சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, �பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு, கழுதைகளைத் தேடிப் போ� என்றார். அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார்; அவற்றைக் காணவில்லை; சாலிம் நாட்டு வழியே சென்றார், அங்கும் அவை இல்லை; பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார், அங்கும் அவை தென்படவில்லை. சாமுவேல் சவுலைக் கண்டதும், ஆண்டவர் அவரிடம், இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன்! இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான்� என்றார். சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி, �திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும்� என்று கேட்டார். சாமுவேல் சவுலுக்குக் கூறியது: �நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று நீ என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன்.'' அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து, அவரை முத்தமிட்டுக் கூறியது: �ஆண்டவர் தம் உரிமைச் சொத்துக்குத் தலைவனாக இருக்கும்படி உன்னைத் திருப்பொழிவு செய்துள்ளார் அன்றோ?''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 21: 1-2. 3-4. 5-6

பல்லவி: உமது வல்லமையில் ஆண்டவரே, அரசர் பூரிப்படைகின்றார்.

1 ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்;
நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!
2 அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்;
அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. - பல்லவி

3 உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர்கொண்டீர்;
அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர்.
4 அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்;
நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர். - பல்லவி

5 நீர்அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று.
மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர்.
6 உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்;
உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

மாற்கு 2:13-17

பொதுக்காலம், வாரம் 1 சனி

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17

இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், ``இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?'' என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, ``நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

தடைகள் தகர்க்கப்பட ...

தாமஸ் ஆல்வா எடிசன் தன் வாழ்வில் பல்பை கண்டுபிடிக்கும் முன்பு இரண்டுமுறை தடைகள் ஏற்பட்டு, மூன்றாவது முறையில்தான் வெற்றி கண்டதாக கூறுவார். சச்சின் டென்டுல்கர் தான் ஆடிய முதல் மூன்று போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதாக வரலாறு கூறுகிறது. புனித ஆஸ்கர் ரொமேரோ முதல் திருப்பலி ஆற்றிய மறுநாளே துப்பாக்கி சூடுபட்டதாக அவர் வரலாறு கூறுகின்றது. வாழ்வில் உயர்ந்தவர்கள் அனைவருமே தடைகளை கடந்துதான் முன்னேறியிருக்கின்றார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் அதே நிலைத்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு நடக்கின்றது. இயேசு முதலிலே தொழுகைக்கூடங்களில் போதிக்க ஆரம்பித்தார். ஆனால் அங்கிருந்த யூதத்தலைவர்கள் அவருக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்திருக்கின்றனர். பின்னர் கடற்கரையோரங்களில் போதிக்க ஆரம்பித்தார். அங்கும் தடைகள். இறுதியில் வீதிகளிலே போதிக்க ஆரம்பித்தார். அங்கும் தடைகள் எழுந்தன. இருந்தாலும் அதனை தகர்க்க முயற்சி எடுத்ததனால், லேவி என்ற பெரிய போதகரை அவர் பெற்றுக்கொள்கின்றார். மக்களை கடுமையாக பாதித்த உரோமை அரசின் வரிதண்டும் பணியை ஆற்றியவர்களை யூத மக்கள் வெறுத்தனர். அவர்கள் யூதர்களாக இருந்தாலும் பாவிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இயேசு எதற்காக இவரை அழைத்தாரென்றால், தமது இறையாட்சிப் பணியிலும், தமக்குப்பிறகு தம் சீடர்கள் ஆற்ற வேண்டிய இறையாட்சிப் பணியிலும் ஒதுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற லேவியின் அழைப்பு துணைபுரியும் என்று எண்ணினார். இயேசுவின் தகர்ப்பு நங்கூரமில் முடிவு.

நாம் தடைகளை தகர்க்க முயற்சி எடுக்கிறோமா? சிந்திப்போம்.
- அருட்பணி. பிரதாப்

=======================

 

தொடர்ந்து வா...தொட்டு விடாதே!

படிக்கின்ற குழந்தையை பார்த்து “என்னைப் பின்பற்றி வா” என்று இயேசு கூறினால் குழந்தையின் பதில் “கொஞ்சம் பொறுங்க ஜீசஸ், Free Fire விளையாட்டில் வெற்றி பெற்று விட்டு பின்பற்றுகிறேன்” என்பது தான் பதிலாக இருக்கும். இளையோரைப் பார்த்து இதே வார்த்தையை கூறினார் என்றால் “கொஞ்சம் பொறுங்க, ஜீசஸ், தற்போது தான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், திருமணம் செய்து விட்டு பின்பற்றுகிறேன் என்பது பதிலாக இருக்கும். ஒருவேளை குடும்ப தாயை அழைத்தார் என்றால், ‘கொஞ்சம் பொறுங்க ஜீசஸ், இப்போது தான் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, முடிந்ததும் பின்பற்றுகிறேன்’ என்பது பதிலாக இருக்கும். ஒருவேளை தந்தையர்களை அழைத்தார் என்றால், ‘கொஞ்சம் பொறுங்க ஜீசஸ், என் குழந்தைகளுக்கு எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்து விட்டு வருகிறேன்’ என்பது பதிலாக இருக்கும். இது மனிதர்களின் சாதாரண மனநிலை.

இதே கேள்வியைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் லேவியைப் பார்த்து கூறுகின்றார். அவர் உடனே பின்பற்றுகிறார். சுங்கசாவடி என்பது வரிவசூலிக்கக் கூடிய இடம். லேவி அதிகம் படித்தவர், ஆனால் அவர் மக்களைப் பற்றி படிக்கவில்லை. அதனால் தான் அதிகமான வரி வசூலித்து மக்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருந்தார். இவரின் மனமாற்றம் அந்த சுங்க சாவடியினையே முற்றிலுமாக தடை செய்ய வாய்ப்பாக இயேசுவுக்கு அமைகிறது. இயேசு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பறிக்க முயலுகின்றார். ஒன்று தன் பணிக்கு ஒரு பணியாளர் மற்றொன்று மக்களின் வயிற்றை அடிக்கிற சுங்க சாவடியின் நிலையை முடிவுக்கு கொண்டு வருதல். மக்களின் பார்வையில் பாவியாக கருதப்பட்டவன், இயேசுவின் பார்வையில் விலை மதிப்புள்ளவனாக மாற்றப்படுகிறான். பாவிகளைத் தேடியே அவரது பயணம் அமைகிறது. அதனால் தான் லேவியை பார்த்து ‘என்னைத் தொடர்ந்து வா...இனி பாவ வாழ்வை தொட்டு விடாதே’ என்று கூறுகின்றார்.

நாமும் இதே அழைப்பைப் பெற்றிருக்கிறோம். நம்மிடம் இயேசுவைப் பின்பற்ற ஆர்வம் இருக்கிறதா? அத்தகைய ஆர்வம் இருந்தது என்றால் நாமும் இயேசுவை தொடர்ந்து செல்வோம், இனி பழைய வாழ்வை தொடாமல் பார்ப்போம்.

- அருட்பணி. பிரதாப்

================

 

இயேசுவின் பரிவு

மத்தேயுவின் அழைப்பு நிகழ்ச்சி இன்று நமக்கு தரப்பட்டுள்ளது. மத்தேயுவின் நெஞ்சிலே ஒரு ஆறாத ரணம் இருந்துகொண்டே இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளானவர் இந்த மத்தேயு. வரிவசூலிக்கிறவர் செய்கிற அடாவடித்தனத்தை, நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. மத்தேயுவும் அப்படிப்பட்டவராக மக்களால் பார்க்கப்பட்டார். மக்கள் சமுதாயத்திலிருந்து, விலக்கி வைக்கப்பட்டார். எவ்வளவுதான் பணம் இருந்தாலும், அதிகாரம் இருந்தாலும் உறவு இல்லையென்றால், அனைத்துமே வீண் என்பதை, நிச்சயம் அவர் அறிந்திருப்பார். ஆனால் என்ன செய்ய? உறவோடு வாழ, யாருமே முன்வரவில்லை. தன்னை மன்னித்து, தான் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க யார் வருவார்? இந்த கேள்விகள் இருக்கிறபோதுதான், மத்தேயுவிற்கு இயேசுவின் அழைப்பு வருகிறது.

இயேசு பாவிகளைத் தேடி வந்திருக்கிறார் என்கிற செய்தி, அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இயேசுவின் போதனை உண்மையில், அவருடைய செயல்பாடுகளில் எதிரொலிக்குமா? என்கிற சந்தேகமும் அவருடைய உள்ளத்தில் இருந்திருக்கும். எனவே தான், ஒருவிதமான படபடப்போடு, இயேசுவிடம் செல்வதா? வேண்டாமா? என்று நினைத்துக்கொண்டிருக்கிறபோது, இயேசுவிடமிருந்து வந்த அழைப்பு மிகப்பெரிய அதிர்ச்சியும், ஆச்சரியமும். இங்கே இயேசுவின் பணிவாழ்வின் ஆழத்தையும் நாம் பார்க்க முடிகிறது. இயேசு கடலோரம் சென்று கொண்டிருக்கிறார். அப்படிச் செல்கிறபோதும், அவர் யாருக்கு ஆறுதல் தேவையோ அவர்களைப்பற்றியே நினைத்துக்கொண்டும், யாராவது தென்படுகிறார்களா? எனப் பார்த்துக்கொண்டும் செல்கிறார். செல்கிற எல்லா இடங்களிலும், ஆறுதல் தேவைப்படுகிற அனைவருக்கும், அவர் தந்தையின் அன்பை எடுத்துச் செல்கிறார். அதுதான் இயேசு.

நாம் செய்கிற சிறிய செயலில் கூட கருத்தூன்றி இருக்க வேண்டும், என இயேசுவின் வாழ்வு நமக்கு அழைப்புவிடுக்கிறது. பார்க்கிற மனிதர்கள், நடக்கிற நிகழ்வுகள் அனைத்துமே நமக்கு ஆழமான செய்தியை, நமது வாழ்வையே மாற்றுவதற்கான தொடக்கமாக இருக்கலாம். செய்யக்கூடிய செயல் அனைத்தையும் முழுஈடுபாட்டோடு செய்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஆண்டவருடைய வார்த்தை அருமருந்து

தொழுகைக்கூடங்களில் இயேசு கற்பிப்பதற்கு உறுதியான எதிர்ப்பு கிளம்பிவிட்டது இன்றைய நற்செய்தியில் தெளிவாகிறது. எனவே, இயேசு தனது போதனையின் இடத்தை மாற்றுகிறார். இயேசுவின் போதனைக்கு இடையே வந்தவர்கள், யூதப்பாரம்பரியவாதிகள். ஏரிக்கரையில் நடந்துகொண்டு அவர் போதிக்கிறார். பாலஸ்தீனப்பகுதி போதகர்களின் போதனை இப்படித்தான் அமைந்திருக்கும்.

மத்தேயு மக்களால் வெறுக்கப்பட்ட மனிதர். ஏனெனில் அவர் ஒரு வரிதண்டுபவர். மத்தேயுவின் இதயத்தில் இது மிகப்பெரிய வலியாக இருந்திருக்கும். அவர் திருந்த வேண்டும் என்று நினைத்தாலும், இந்த சமுதாயம் அவர் பாவி என்று முத்திரை குத்தியிருக்கிறது. பாரம்பரிய யூதர்கள் நிச்சயம் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த நேரத்தில் இயேசுவின் போதனை, அவருக்கு பெரிய ஆறுதல். இயேசுவின் போதனை அவருடைய உள்ளத்தை துளைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. மனம் மாற வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு இயேசுவின் வார்த்தை என்றுமே ஆறுதல்தான்.

ஆண்டவருடைய வார்த்தை, துன்பப்படுகிறவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. அது சாதாரணமாக வாசிக்கிறவர்களுக்கு அல்ல. மாறாக, உள்ளத்தில் துயரத்தினால், கவலையினால் வாடுகிறவர்களுக்கு மிகப்பெரிய அருமருந்து. இறைவார்த்தையில் நமது முழுமையான நம்பிக்கை வைப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

வரிதண்டுபவர்களை மக்கள் இரண்டு காரணங்களுக்காக வெறுத்தனர்.

ஒன்று: அவர்கள் தங்களை அடிமைப்படுத்தியிருந்த உரோமையர்களுக்கு சேவை செய்து வந்தனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக மக்களை கொடுமைப்படுத்தி வரிவசூலித்தனர்.

இரண்டு: குறிப்பிட்ட அளவுக்கு மேல் வரிவசூலித்து ஏழை, எளியவர்களை சுரண்டி வாழ்ந்தனர்.

மேற்கூறிய இரண்டு காரணங்களுக்காக, வரிதண்டுபவர்கள் பொதுமக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் உள்ளாகியிருந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், இயேசு லேவியை அழைக்கிறார். அதற்கு இயேசு கூறுகிற காரணம்: பாவிகளையே அழைக்க வந்தேன் என்று சொல்வது. இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு மனிதனும் மீட்பு பெற வேண்டும், இறையரசுக்குள் நுழைய வேண்டும் என்பதுதான் தந்தையாகிய கடவுளின் விருப்பம். அதற்காகத்தான் தன் ஒரே மகன் இயேசுகிறிஸ்துவை இந்த உலகிற்கு அனுப்பினார். தவறான வழியில் செல்கிற மனிதர்களுக்கு திருந்தி வாழ கடவுள் பல வாய்ப்புகளைக் கொடுக்கிறார். லேவிக்கு அத்தகைய வாய்ப்பு கிடைத்தபோது அதை முழுமையாகப்பயன்படுத்திக்கொள்கிறார். தன்னுடைய பழைய வாழ்வு அனைத்தையும் விட்டுவிட்டு புதிய வாழ்வை மகிழ்ச்சியோடு, நிறைவோடு ஏற்றுக்கொள்கிறார்.

ஒவ்வொரு நிமிடமும் இறைவன் நமக்கு கொடுக்கிற வாய்ப்பு. அதை உணர்ந்து நம் வாழ்வை மாற்றிக்கொள்வோம். இறையரசை நமதாக்கிக்கொள்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர

 

சேர்ந்து உண்பதேன் ?

லேவியின் வீட்டில் இயேசு விருந்துண்டபோது, வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர் என்னும் செய்தியைப் பதிவு செய்திருக்கிறார் நற்செய்தியாளர் மாற்கு. காரணத்தோடுதான் அவ்வாறு செய்துள்ளார். தொடர்ந்து, மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் சீடரிடம் இவ்வாறு பாவிகளோடு சேர்ந்து விருந்துண்பதேன் என்னும் கேள்வியை எழுப்புவதையும் பதிவுசெய்துள்ளார். அதற்கான விடையை இயேசு அளிக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இயேசு உணவு உண்பதை, விருந்தில் பங்கேற்பதை வயிற்றை நிரப்பும் நிகழ்வாகவோ, உடல் தேவையை நிறைவுசெய்யும் உடலியல் செயல்பாடாகவோ கருதவில்லை. மாறாக, ஒவ்வொரு விருந்தும் சமூக, இறையியல் பொருளுள்ள நிகழ்வுகள் என்பதனை எடுத்துக்காட்டினார். விருந்தின் வேளைகளில்தான் இயேசு சமூக மாற்ற அருளுரைகளை, அறிவுரைகளை வழங்கினார். சக்கேயு போன்றோரின் மனமாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார். இறுதியாக, விருந்தின் வேளையில்தான் நற்கருணை, குருத்துவம் என்னும் அருள்சாதனங்களை நிறுவினார்.

நமது உணவு வேளைகள் எப்படி இருக்கின்றன? இயேசுவைப் போலவே நாமும் உணவின் வேளைகளை உறவின் நேரங்களாக, சமத்துவத்தின் நேரங்களாக, நலப்படுத்தும் வேளைகளாக மாற்றுவோம். குடும்பத்தில், பணியகத்தில் இணைந்து உண்போம், இறைநெறி காண்போம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாள்தோறும் நீர் வழங்கும் உணவுக்காக நன்றி கூறுகிறோம். எங்கள் உணவின் வேளைகள் உமது அருளை உணரும் நேரங்களாக அமைவதாக, ஆமென்.

- பணி குமார்ராஜா

------------------------------------------------------------------------

இணையதள உறவுகளே

இயேசு சுங்கச்சாவடியில் பணிசெய்த மத்தேயுவை தன்னைப் பின்தொடரவும் தன் பணியைச் செய்யவும் அழைத்தார். உடனே அவரும் எழுந்து இயேசுவைப் பின்தொடர்ந்தார். இயேசு தன் வீட்டில் அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். இந்த மத்தேயு நன்கு படித்தவர். உயர் பதவியில் இருந்தவர். கை நிறைய சம்பளம் வாங்கியவர். இயேசுவின் அழைப்பை ஏற்று அவர் பணியைத் தொடர்ந்தார்.

இதைப்பற்றிச் சிந்திக்கும்போது, இணையதளத்தின் இப் பகுதியை தினமும் வாசிக்கும் வாசகர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சலில் அந்த சகோதரர் எழுதிய செய்தி, மத்தேயுவின் அழைப்புக்கும் பணிக்கும் மிக நெருக்கமாக இருப்பதாகத் தோன்றியது. ‘இந்த பகுதியை நான் தினமும் வாசிக்கிறேன். இப்பகுதிபற்றி என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெறியப்படுத்துவேன்’ என்று அந்த சகோதரர் எழுதியிருந்தார்.

இதுபோன்ற எண்ணம் உங்களில் உதயமாகும்போது, நீங்கள் அழைக்கப்பட்ட மத்தேயு போன்றவர்கள். பிறருக்கு இந்த செய்தியை எடுத்துச் செல்லும்போது, நீங்கள் அப்போஸ்தலரின் பணியைச் செய்கிறீர்கள். உங்களோடு, உங்கள் வீட்டில் தங்கி விருந்துண்டு மகிழ்வதை இயேசு விரும்புகிறார். வாய்ப்பு வழங்குங்கள்.மகிழுங்கள்.

-ஜோசப் லீயோன்

 

நமக்காக வந்தவர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்ற இயேசுவின் அருள்மொழிகள் நமக்கு ஆறுதல் தருகின்றன. நமது பாவங்கள், குறைவாடுகள், வலுவின்மை இவற்றைக் குறித்து நாம் வெட்கப்படுகின்றோம். குற்ற உணர்வு கொள்கின்றோம். ஆனால், நமக்காகத்தான் தாம் இவ்வுலகிற்கு வந்ததாக இறைமகன்  இயேசு கூறுவது நம் இதயங்களை ஆட்கொள்கிறது. எனவே, நாம் கலங்க வேண்டாம், கவலை கொள்ளவேண்டாம். நம்மை அவரிடம் ஒப்படைத்து, அவருக்காக வாழ ஆயத்தாமானால் போதும். தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் புறக்கணிப்பதில்லை என்னும் திருப்பாடல் வரிகளுக்கேற்ப, இறைவன் நமது தாழ்வுற்ற நிலையைக் கண்ணோக்குவதற்காக அவருக்கு நாம் நன்றி சொல்வோமா!

மன்றாடுவோம்: தெய்வீக மருத்துவரான இயேசுவே, நலமோடு இருப்பவர்களுக்காக அல்ல, நோயுற்றோருக்காகவே மனுவுரு எடுத்த உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் பாவிகளாய் இருந்தபோதே, எங்களை அன்புசெய்து, எங்களுக்காக உம்முயிரை ஈந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் குறைகளை நீர் பொறுத்துக்கொண்டு, எங்களை அன்பு செய்வதுபோல, நாங்களும் பிறரின் குறைகளைப் பொறுத்துக்கொள்ள அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

''இயேசு லேவியிடம், 'என்னைப் பின்பற்றி வா' என்றார்.
அவரும் எழுந்து சென்று இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்'' (மாற்கு 2:14)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு தம் சீடரை அழைத்த வரலாறு பல விதங்களில் கூறப்பட்டுள்ளது. கலிலேயாக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சீமோன் போன்றோரை இயேசு அழைத்தார். அவர்கள் தம் வலைகளை அப்படியே விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். லேவி என்பவர் வரிதண்டும் தொழிலைச் செய்தவர். அவர் வழக்கம்போல சுங்கச் சாவடியில் அமர்ந்து தம் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்போது இயேசு அவரை அழைத்தார். லேவியும் ''எழுந்து சென்று இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்'' (மாற் 2:14). வரிதண்டும் தொழில் இழிவாகக் கருதப்பட்டது. மக்களிடமிருந்து உரோமைப் பேரரசு வரியாகப் பணம் பெற்றது; வேறு பல வரிகளும் மக்களுக்குச் சுமையாயின. வரிதண்டுவோர் தமக்கென்றும் ஒரு பகுதியை அநியாயமாகப் பிரித்தனர். எனவே பொது மக்கள் வரிதண்டுவோரை வெறுத்ததில் வியப்பில்லை. இத்தகைய ஒரு மனிதரையே இயேசு அழைத்தார்.

-- நம் வாழ்க்கையில் கடவுளின் அழைப்பு எப்போது எவ்வாறு வரும் என நாம் முன்கூட்டியே அறிய இயலாது. ஆனால் கடவுளின் குரல் நம் உள்ளத்தின் ஆழத்தில் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாம்தாம் சில வேளைகளில் அக்குரலைக் கேட்க மறக்கிறோம் அல்லது மறுக்கிறோம். நம் உள்ளத்தைத் திறந்து வைத்துக் கடவுளுக்கு அங்கே இல்லிடம் அமைத்துக் கொடுத்தால் அவருடைய குரலை நாம் எளிதில் கேட்கலாம். அக்குரல் நம்மிடம் கோருவதை நாம் மனமுவந்து செய்வோம். இயேசுவைப் பின்பற்றிச் செல்வதற்கு வருகின்ற அழைப்பு முதல் படி என்றால் அந்த அழைப்புக்கு நாம் தருகின்ற பதில் மொழி இரண்டாம் படி எனலாம். அவ்வாறு மனமுவந்து நாம் இயேசுவைப் பின்பற்றிச் செல்லும்போது நம் வாழ்க்கை கடவுளுக்கு உகந்ததாக அமையும். நம் உள்ளத்தில் கடவுள் தரும் மகிழ்ச்சி நிறைந்து வழியும்.

மன்றாட்டு
இறைவா, இயேசுவை மனமுவந்த பின்பற்றிச் செல்ல எங்களுக்கு அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------------

"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை."

இயேசுவின் அன்புக்குரியவரே!

இந்த ஒரு முத்தான வசனம் இயேசுவிடமிருந்து வருவது ஆச்சரியமில்லை. ஆனால் மத்தேயுவின் வீட்டிலிருந்தபோது வந்தது இன்னும் ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது. மத்தேயு படித்தவர். பெரிய பதவியில் சுங்க இலாக்காவில் இருந்தவர். கை நிறையவும் பை நிறையவும் பணம் படைத்தவர். அவரது வீட்டில் விருந்தில் இந்த முத்தான வார்த்தையை சொல்லும்போது, மத்தேயுவும் இதில் தொடர்புடையவர் என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

செல்வம், பதவி இருந்தும் மத்தேயு ஒரு நோயாளியாக இருந்தார் என்று உணர முடிகிறது. இயேசுவின் சந்திப்பின் மூலமும் விருந்தின் மூலமும் மத்தேயு ஒரு நோயாளி என்பதையும் இயேசுவே அவருக்கு சிறந்த மருத்துவர் என்றும் இயேசுவே சிறந்த மருந்து என்றும் உணர்த்துகிறார்.

பணம் பதவிகளோடு வாழும் நாம் பல நேரங்களில் நமக்கு இருக்கும் நோயை நாம் அறிவதில்லை. எத்தனையோ பணக்காரர்கள் பதவியில் இருப்பவர்கள் இயேசுவோடு தொடர்பு இல்லாததால் தானும் நோயுற்று தன் குடும்பத்தையும் அழிப்பதை காண்கிறோம். இயேசுவின் முன் நம்மை நிறுத்துவோம். அவருக்கு நம் வீட்டில் விருந்து கொடுப்போம். அப்போது நம் நோயை அறிவோம்.இயேசு நல் மருத்துவர் என்பதை உணர்வோம். நோயற் று குறையற ;ற செல்வத்தோடு வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

:- ஜோசப் லியோன்