முதல் வாசகம்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 15: 16-23

அந்நாள்களில் சாமுவேல் சவுலை நோக்கி, "நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்குக் கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன்" என, சவுல், "சொல்லுங்கள்" என்றார். சாமுவேல் கூறியது: "நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்த போதல்லவா இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர் ஆனீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்தார். ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, "நீ சென்று அந்தப் பாவிகளான அமலேக்கியரை அழித்துவிட்டு வா. இறுதிவரை போரிட்டு அவர்களை ஒழித்துவிடு" என்று சொன்னார். அப்படியிருக்க, நீர் ஏன் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை? கொள்ளைப்பொருள்மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ததேன்?" அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, "ஆண்டவரின் குரலுக்கு நான் செவிகொடுத்தேன், அவர் காட்டிய வழியிலும் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால் அமலேக்கியரை அழித்துவிட்டேன். ஆனால் வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர்" என்றார். அப்போது சாமுவேல் கூறியது: "ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரிபலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது, கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது! கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலைவழிபாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்தீர்! அவரும் உம்மை அரச பதவியினின்று நீக்கிவிட்டார்."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 50: 8-9. 16bஉ-17. 21,23
பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் எனது மீட்பைக் கண்டடைவர்.

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக் கிடாய்களையோ, நான் ஏற்றுக்கொள்வதில்லை. -பல்லவி

16bஉ என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். -பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால்,
இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்து உரைக்கின்றேன்.
23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

மாற்கு 2:18-22

பொதுக்காலம், வாரம் 2 திங்கள்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 18-22

யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்து வந்தனர். சிலர் இயேசுவிடம், ``யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?'' என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பு இருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற் பைகளுக்கே ஏற்றது'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

நோன்(பா)?

எதற்கு எடுத்தாலும் நோன்பு என்பதாக மாறி விட்டது இந்த சமுதாயம். பெற்றோர்கள் குழந்தையைத் திட்டினார்கள் என்றால் உணவு உண்ண மாட்டார்கள். வெளியில் நோன்பு என்று கூறுவார்கள். இது வீம்புக்கான நோன்பு. வயதான பிறகு மருத்துவர் அறிவுறுத்தலின்படி, ஒரு சில நேர உணவுகளை வயதானவர்கள் தவிர்ப்பர். ஆனால் வெளியில் நான் நோன்பிருக்கிறேன் என்பர். இது மருந்துக்கான நோன்பு. சிலர் ஏதாவது நல்ல நிகழ்வு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் தங்கள் உணவினை சுருக்கம் செய்வார்கள்.முக்கிய நிகழ்வுகளில் நன்றாக சாப்பிடலாம் என எண்ணுவர். இது விருந்துக்கான நோன்பு. ஆனால் சிலர் உண்மையிலே மனதினை வருத்தி, நல்ல செயல்களில் ஈடுபடுவர். இது தான் உண்மையான நோன்பு. இன்று எல்லா மதங்களிலும் இத்தகைய நோன்பினை பின்பற்றுகின்றனர்.

இயேசுவின் சீடர்கள் இந்த நோன்பினை எப்படி பார்த்தார்கள், பரிசேயர்கள் எப்படி பார்த்தனர் என்ற புரிதலை இன்றைய நற்செய்தி வாசகம் கற்றுத் தருகிறது. யூதர்கள் இரண்டு காரண்ஙகளுக்காக நோன்பு இருப்பர். ஒன்று யாராவது இறக்கும் தருவாயில் இருந்தால், அவர்களுக்காக நோன்பிருந்து மன்றாடுவர். மற்றொன்று ஏதாவது நிகழ்வு நடைபெறுவதாக இருந்தால் நோன்பிருந்து கொண்டாடுவர். அதனால் தான் இயேசு மணமகன் இருக்கும் வரை யாரும் நோன்பு இருக்க மாட்டார்கள் என்கிற புரிதலைக் கொடுக்கின்றார். இயேசுவைப் பொறுத்தமட்டில் நோன்பு என்பது சடங்கிற்காக அல்ல, மாறாக மனதிற்காக இருக்க வேண்டும். பரிசேயர்கள் இதனைச் சட்டமாகப் பார்த்தார்கள். எனவே கடிந்து கொள்கின்றார்.

நாம் எப்படிப்பட்ட நோன்பை பின்பற்றுகிறோம்? இயேசு கூறுகின்ற மனதிற்காகவா அல்லது சமுதாய பார்வைக்காகவா என்று சிந்திப்போம்.

  • அருட்பணி. பிரதாப்

======================

 

இயேசுவின் பார்வை

இயேசுவைப்போல எளிதான, மக்கள் பயன்பாட்டில் உள்ளவற்றை வைத்து, புரிய முடியாத விண்ணரசை புரிய வைக்கிறவர் யாரும் இருக்க முடியாது. அவருடைய போதனையை முழுவதுமாக நாம் ஒன்றுதிரட்டிப்பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புலப்படும். இன்றைய நற்செய்தியும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அறிய முடியாத, புரிய முடியாத வாழ்க்கை இரகசியங்களை இயேசு வெகுஎளிதாக நமக்குப் புரிய வைத்துவிடுகிறார். நமது வாழ்வின் வெற்றி பெற, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும். அதுவே நாம் அடைய வேண்டிய இலக்கை வெகு எளிதாகக் காட்டிவிடும். இயேசுவின் வாழ்க்கை ஒரு வெற்றி வீரரின் வாழ்க்கை. அவரது வெற்றிக்கு காரணம், அவர் இந்த உலகத்தையும், நடக்கும் நிகழ்ச்சிகளையும் பார்த்தவிதம் தான், என்பது அவரின் வாழ்வை சிந்தித்துப் பார்த்தால் நன்றாகத் தெரியும்.

கடற்கரையில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். போதிக்கிறபோது, அங்கே இருக்கிற மீனவர்களைப் பார்க்கிறார். மீன்களைப் பார்க்கிறார். வலைகளைப் பார்க்கிறார். அதிலிருந்து மக்களுக்கு இறையாட்சியின் தத்துவத்தை விளக்குகிறார். மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கிறார். பயிரிடுவதைப் பார்க்கிறார். களைகளைக் காண்கிறார். அருமையான செய்தியை மக்களுக்கு அறிவிக்கிறார். தொழுகைக்கூடத்தில் மக்கள் நடுவில் போதிக்கிறார். நோயாளிகள் வருகிறார்கள். அவர்களுக்கு சுகம் தருகிறார். அதில் பிரச்சனைகளைச் சந்திக்கிறார். ஆனால், அதன் வழியாக புதிய செய்தியை, யாரும் இதுவரை சிந்தித்திராத கோணத்தை அவர்களுக்குக் காட்டுகிறார். இவ்வாறு அவர் வாழ்வில் பேசிய அனைத்து வார்த்தைகளும், சந்தித்த நிகழ்வுகளும் மிகப்பெரிய வரலாறாக பதியப்படுகிறது. இவையனைத்திற்கும் அடிப்படை காரணம், இயேசுவின் பார்வை. ஒவ்வொன்றையும் பார்க்கிறார். கவனமாகப் பார்க்கிறார். அது கற்றுத்தரும் பாடத்தை உணர்ந்து கொள்கிறார்.

நமது வாழ்விலும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக பார்க்க வேண்டும். அது நமக்கு தரும் படிப்பினைகளை கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்று, பெரும்பான்மை மக்கள் வாழும் வாழ்வை வாழாமல், துடிப்போடு, வாழ்வின் அனுபவத்தோடு, அது தரும் படிப்பினைகளோடு நாம் வாழ பழகிக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்கட்டும்

யூதர்களின் நோன்பு என்பது ஒரு பெரிதான காரியம் அல்ல. காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை நோன்பு நேரம். அதற்கு பிறகு வழக்கமான உணவு உண்ணலாம். பாரம்பரிய யூதர்களுக்கு நோன்பு என்பது வழக்கமான கடைப்பிடிக்கக்கூடிய ஒரு பழக்கம். ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாள் அன்று, அனைத்து யூதர்களும் நோன்பிருப்பார்கள். இன்னும் சில பாரம்பரிய யூதர்கள் வாரத்தில் இருமுறை அதாவது திங்களும், வியாழனும் இருந்தார்கள். இதைத்தான் இந்த நற்செய்தியிலும் பார்க்கிறோம்.

இயேசு நோன்பிற்கு எதிரானவர் அல்ல. ஏனென்றால் நோன்பு என்பது ஒருவன் தன்னையே அடக்கி ஆள, உதவி செய்கின்ற ஒன்றாகும். வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உணர்வோடு, தன்னடக்கத்தோடு வாழத்தூண்டுகின்ற ஒன்றாகும். ஆனால், பரிசேயர்களை பொறுத்தவரையில், அவர்களின் நோன்பு சுய இலாபத்திற்கானதாக இருந்தது. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும் வாய்ப்பாக, அவர்கள் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தங்களை மற்றவர்களைவிட உயர்வாக எண்ணுவதற்கும் நோன்பு ஒரு காரணமாக அமைந்தது. இதை இயேசு கண்டிக்கிறார்.

எந்தவொரு செயல்பாடும், நல்ல நோக்கத்தோடு, எண்ணத்தோடு அமைய வேண்டும். அப்படி அமையவில்லையென்றால், அது கேள்விக்குள்ளாக்கப்படும். நமது செயல்பாடுகள் நல்ல எண்ணத்தோடு, செயல்பாட்டோடு அமைய வேண்டும். அதற்கான அருளை ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைவனின் பிரசன்னம், மகிழ்ச்சியின் தருணம்

யூதச்சட்டப்படி ஆண்டிற்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்படும் பாவக்கழுவாய் போக்கும் நாளன்று அனைவரும் கட்டாயம் நோன்பிருக்க வேண்டும். இது தவிர, சில பழமைவாத யூதர்கள் வாரத்திற்கு இருமுறை நோன்பிருந்தனர்(திங்கள் மற்றும் வியாழன், காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை). திருமணத்தைப்பொறுத்தவரையில் யூதர்களுக்கு திருமணம் முடிந்தாலும் ஒரு வாரமோ அல்லது இன்னும் அதிக நாட்களோ தொடர்ச்சியாக விருந்து நடைபெறும். விருந்தினர்களுக்காக திருமண வீடு எப்போதும் திறந்தே இருக்கும். திருமண விருந்து மகிழ்ச்சியான விருந்து. எனவே, திருமண விருந்தில் பங்குபெறும் விருந்தினர்களுக்கு, வாரம் இருமுறை நோன்பு இருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அவர்களின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படாதவாறு இந்த விலக்கு அவர்களுக்குத் தரப்பட்டிருந்தது.

இதைத்தான் இயேசு இங்கே சுட்டிக்காட்டுகிறார். “மணமகன் தங்களோடு இருக்கும் வரை நோன்பிருக்க முடியுமா?” மாற்கு 2: 19. இயேசு கிறிஸ்து நோன்பு இருப்பதை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஏனென்றால், இயேசுவே தன்னுடைய பணிவாழ்வின் தொடக்கத்தில் 40 நாட்கள் பாலைவனத்தில் நோன்பிருந்தார். மாறாக, இயேசு வழியாக கடவுள் அவர்கள் மத்தியில் இருக்கிறபோது, மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்ற செய்தியைத்தருகிறார். நம் ஒவ்வொருவருக்கும் இயேசுகிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்கிற எண்ணம் மகிழ்ச்சியைத்தர வேண்டும். ‘இதோ! உலகம் முடியும் மட்டும் நான் உங்களோடு இருக்கிறேன்’ என்று மொழிந்த நம் அன்பு ஆண்டவர், தன்னுடைய வாக்குறுதிக்கு ஏற்ப இன்றளவும் நம்மோடு இருக்கிறார்.

வாழ்வில் துன்பங்கள், துயரங்கள் நம்மை வாட்டும்போது, நம்பிக்கையிழந்து வாடும்போது இயேசுவின் இந்த மொழிகள் நமக்கு ஆறுதலைத்தர வேண்டும். இயேசுவின் இருப்பை நம்வாழ்வில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உணர்வோம். மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

--------------------------------------

நோன்பு இருப்பார்கள் !

தமது சீடர்கள் நோன்பிருக்க வேண்டிய தேவையில்லை என்று வாதம் செய்யும் இயேசு, "மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்" என்று சொல்லத் தவறவில்லை.

அவ்வாறே, இயேசுவின் விண்ணேற்புக்குப் பிறகு, திருத்தூதர்களும், தொடக்க காலக் கிறித்தவரும் நோன்பிருந்து இறைவேண்டல் செய்ததை திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம். இறைவாக்கினரும், போதகருமான பர்னபா, லூக்கியு, மனாயீன், சவுல் ஆகியோர் நோன்பிருந்து வழிபடும்போது தூயஆவியாரின் வழிநடத்துதலைப் பெற்றுக்கொண்டார்கள் (திப 13:3). அதுபோல, மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போதெல்லாம் நோன்பிருந்து செபிக்கும் பழக்கம் அவர்களிடம் இருந்தது என்பதையும் (திப 14: 23) அறிகிறோம்.

நோன்பிருந்து செபிப்பது வலிமையானது என்பதை ஆண்டவர் இயேசுவே "இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது" (மாற் 9:29) என்னும் சொற்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

இயேசுவின் சீடர்களான நாமும் நோன்பிருப்போமாக! நோன்புடன் கூடிய இறைவேண்டலினால் வலிய செயல்களை நிகழ்த்துவோமாக!

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். பல்வேறு சிக்கல்கள் நிறைந்த நாள்களில் வாழ்கின்ற நாங்கள் ஆன்ம வலிமைபெற நோன்பிருந்து மன்றாடும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும் அருள்தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி. குமார்ராஜா

 

-----------------------------------------------

இணையதள உறவுகளே

கலப்படம் என்றைக்குமே வகைக்கு உதவாது. அது மட்டுமல்ல பல சிக்கல்களுக்கும் காரணமாகிவிடும். கலப்படம் தன்நிலையை இழந்துவிடும். அடுத்தவன் நிலையையும் அழித்துவிடும். பொருளில் மட்டுமல்ல கலப்படம்.சிலருக்கு வாழ்வே கலப்படம்தான். உள்ளொன்று புறமொன்று. முன்னால் ஒன்று, முகத்திற்குப் பின்னால் இன்னொன்று. கல்யாண வீட்டிற்குச் சென்று, கருமாதி வீட்டில் இருப்பதுபோல இருந்தால் ஊர் உன்னைச் சிரிக்காதா?

இயேசு இதைத்தான் இங்கு குறிப்பிடுகிறார். பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்? கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும்.

கிறிஸ்தவம் ஒரு புதிய ஆடை. ஒரு புதிய திராட்சை மது.ஒவ்வாதவற்றையும் தரம் குறைந்தவைகளையும் கலக்க வேண்டாம்.தனித்தன்மையைப் பாதுகாப்போம். பலன்கொடுப்போம்.

-ஜோசப் லீயோன்

-----------------------------------------

இயேசு காட்டும் நோன்பு !

 இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

யோவானுடைய சீடர்களைப் போல, இயேசுவின் சீடர்களும் ஏன் நோன்பிருப்பதில்லை என்னும் கேள்விக்கு இயேசு தரும் பதில்: அவர்களும் நோன்பு இருப்பார்கள். மணமகன் அவர்களோடு இருக்கும்வரையில் அவர்கள் நோன்பிருக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.

கிறிஸ்தவ வாழ்வில் நோன்பு என்பது இன்றி அமையாத ஒன்று. இந்த நோன்பினை மூன்று வகைகளில் அமைக்கலாம்.
1. உணவை மறுக்கும் உண்ணா நோன்பு.
2. தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றின்மீது கட்டுப்பாடு கொள்ளும் ஊடக நோன்பு. 3. நமது சொற்களின்மீது தன்கட்டுப்பாடு கொள்ளும் சொல்நோன்பு.

இந்த மூன்று வகையான நோன்புகளும் நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். எனவே, மணமகனாம் இயேசுவைப் பிரிந்து, அவரது இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும், இக்காலத்தில் இந்த மூன்று நோன்புகளையும் வாரமொருமுறை கடைப்பிடிப்போமாக!

மன்றாடுவோம்: திருச்;சபையின் மணமகனாம இயேசுவே, உம்மைப் Nபுhற்றுகிறோம். காலம் வரும்போது அவர்களும் நோன்பிருப்பார்கள் என்று உம் சீடர்களைப் பற்றி மொழிந்தீரே. உமக்கு நன்றி. இதோ, இந்த நாள்களில் நோன்பிருப்பதன் அவசியத்தை உணர்ந்து, நாங்கள் இந்த மூன்று வகையான நோன்புகளையும் கடைப்பிடிக்க அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

 

---------------------------------------

''யோவானுடைய சீடரும் பரிசேயருடைய சீடரும் நோன்பு இருந்து வந்தனர்'' (மாற்கு 2:18)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- நோன்பு என்பது உடலை ஓறுத்தலைக் குறிக்கும். இது உலக சமயங்களில் காணப்படுகின்ற ஒரு நல்ல பழக்கம். நோன்பு இருப்பது பல காரணங்களுக்காக நிகழலாம். தம் உடலைத் துன்புறுத்தி, ஒறுப்பது கடவுளுக்கு விருப்பமான செயல் என சிலர் நினைக்கலாம். உடலை ஓறுப்பதால் உடல் சார்ந்த தீய சக்திகளை முறியடிக்கலாம் என சிலர் நினைக்கலாம். உண்டி துறந்து உடலை வாட்டும்போது உடல் நம் உள்ளத்தின் கட்டுப்பாட்டுக்கு அடங்கியிருக்கும் என சிலர் நினைக்கலாம். எக்காரணத்திற்காக நோன்பு செய்யப்பட்டாலும் சரி அது சமய நம்பிக்கையோடு பெரும்பாலும் இணைந்துள்ளதை நாம் காணலாம். யூத சமயத்தில் நோன்பிருக்கும் வழக்கம் இருந்தது (எடுத்துக்காட்டாக, காண்க: எசா 58:3-7; யோனா 3:7; மத் 6:16-18). சமய நம்பிக்கையைத் துல்லியமாகக் கடைப்பிடித்த பரிசேயர் நோன்பிருந்தனர். அதுபோலவே திருமுழுக்கு யோவானின் சீடரும் நோன்பிருந்தனர். இவர்கள் இயேசு உணவருந்துவதைப் பார்க்கிறார்கள்; இயேசு நோன்பிருக்கவில்லை எனக் கண்டுகொள்கிறார்கள். உடனேயே இயேசுவைப் பற்றியும் அவருடைய சீடர்களைப் பற்றியும் குறைகூறத் தொடங்குகிறார்கள்: ''உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?'' (மாற் 2:18) என இயேசுவிடம் நேரடியாகவே கேட்டுவிடுகின்றனர்.

-- இயேசு நோன்பு பற்றி என்ன கூறினார்? நோன்பின் உட்பொருளை இயேசு நமக்கு உணர்த்துகிறார். நோன்பிருத்தல் ஒரு வெளிச்சடங்காக மட்டும் அமைந்துவிடலாகாது. மாறாக, நோன்பிருப்போர் கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும். மனிதரிடமிருந்து புகழ்மொழி எதிர்பார்க்காமல் கடவுளுக்கு மட்டுமே தெரியும் விதத்தில் நோன்பிருத்தலே உண்மையான நோன்பு (மத் 6:16-18).

மன்றாட்டு
இறைவா, உடலை ஒறுக்கும் நாங்கள் உள்ளத்தைத் திறந்து உம்மை ஏற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-----------------------------

-பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை-

இயேசுவின் அன்புக்குரியவரே!

எப்பொழுது நாம் பழையதையும் புதியதையும் கலக்கிறோமோ அப்பொழுது அங்கெல்லாம் குழப்பமும் இழப்பும் எற்படுவதை அறிவோம். ஏனென்றால் இரண்டும் இணைந்து செல்வது கடினம்.கிறிஸ்தவர்கள் நாம் 'புது நெறி'யைச்(தி.தூ 9 :2) சார்ந்தவர்கள். புதிய படைப்பு (1 கொரி 11 :25). புதிய மனித இனம்( எபே 2 :15). புதிய மனிதன் (எபே 4 :24). புதிய மனித இயல்பு (கொலோ 3 :10). புதிய வழி(எபி 10 :20) புதிய கட்டளை (யோவா 13 :34). புதிய உடன்படிக்கை ( கொரி; 11 :25).

தூய ஆவி அருளும் புதிய நெறியில்"(உரோமை7'6) இத்தனை புதியவைகளை உள்ளடக்கிய நாம், சட்டங்களுக்குள்ளும் சம்பிரதாயங்களுக்குள்ளும் அடைக்க முற்பட்டால், சட்டங்களும் சம்பிரதாயங்களும் சிதைந்தழியும்.கிறிஸ்தவம் என்றும் புதியது. அதற்கு முதுமை பழமை என்பது இல்லை. காலத்தின் சுழற்சிக்கு எற்ப என்றும் தன்னை புதுப்பித்துக்கொண்டு மக்களை புதிய வானகம், புதிய வையகம், புதிய எருசலேம் நோக்கி அழைத்துச் செல்வது கிறிஸ்தவம்.

ஆகவே தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, அவரால் வழி நடத்தப்படுவதற்குப் பதிலாக, 'அவர் நோன்பிருந்தார், அந்த காலத்தில் அப்படி இருந்தோம்,அந்த வழிபாட்டு முறைதான் வேண்டும் என்பதெல்லாம் பழைய பாத்திரத்தில் புதிய இரசத்தை அடைக்கும் முயற்சி. அது பாத்திரத்தை உடைக்கும் முயற்சி. இரசத்தை வீணாக்கும் செயல். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது. இதைச் செய்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

:- ஜோசப் லியோன்