முதல் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-20

சகோதரர் சகோதரிகளே, கடவுள் நீதியற்றவர் அல்ல. இறைமக்களுக்கு நீங்கள் முன்பு தொண்டாற்றி வந்தீர்கள்; இப்போதும் தொண்டு செய்து வருகின்றீர்கள். எனவே கடவுள் பெயரால் நீங்கள் காட்டிய அன்பையும் உழைப்பையும் அவர் மறக்கமாட்டார். நீங்கள் எதிர்நோக்குவது முழு உறுதி பெறும் பொருட்டு, உங்களுள் ஒவ்வொருவரும் முன்பு காட்டிய அதே ஆர்வத்தையே இறுதிவரை காட்டவேண்டும் என மிகவும் விரும்புகிறோம். இவ்வாறு நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாமல், நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப் பேறாகப் பெற்றவர்களைப்போல் வாழுங்கள். ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளித்தபோது, தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக் கூற இயலாததால், தம்மீதே ஆணையிட்டு, ``நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்'' என்றார். இதன்படி அவரும் பொறுமையோடு காத்திருந்து, பின் கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார். தங்களைவிடப் பெரியவர் ஒருவர் பெயரால்தான் மக்கள் ஆணையிடுவர். எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர். அம்முடிவை ஆணை உறுதிப்படுத்தும். அவ்வாறே, கடவுளும் தம் வாக்குறுதியை உரிமைப்பேறாகப் பெற்றோருக்குத் தம் திட்டத்தின் மாறாத் தன்மையை மிகவும் தெளிவாகக் காட்ட விரும்பி, ஓர் ஆணையால் தம் வாக்கை உறுதிப்படுத்தினார். மாறாத் தன்மையுடைய இவை இரண்டையும் பொறுத்த வரையில் கடவுள் உரைத்தது பொய்யாயிருக்க முடியாது. அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும். இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான நங்கூரம் போன்றுள்ளது. இது கோவிலின் திரைச்சீலைக்கு அப்பால் சென்று சேர்ந்திருக்கிறது. நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச்சீலையைக் கடந்து இயேசு அங்குச் சென்று சேர்ந்திருக்கிறார். மெல்கிசதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக் குரு என்னும் நிலையில் நம் சார்பாக அவர் அங்குச் சென்றிருக்கிறார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்

திபா 111: 1-2. 4-5. 9,10

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.

1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்;
நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை;
அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். -பல்லவி

4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்;
அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்.
5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்;
தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார். -பல்லவி


9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்;
தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்;
அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது.
10 அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! அல்லேலூயா.

மாற்கு 2:23-28

பொதுக்காலம், வாரம் 2 செவ்வாய்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 23-28

ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், ``பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?'' என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், ``தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறை இல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?'' என்றார். மேலும் அவர் அவர்களை நோக்கி, ``ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

Best கண்ணா Best

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகளாவிய குத்துச்சண்டை போட்டிக்கு இந்தியாவிலிருந்து சிறந்த வீரராக கவுரவ் பிதூரி தேர்வு செய்து அனுப்பப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறந்த கிரிக்கெட் வீரராக முகமது ஹமி தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் அர்ஜுனா விருது வழங்கப்பட்ட செய்தியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். கடந்த வருடத்தில் இறக்குமதி (ம) ஏற்றுமதி செய்வதில் சிறந்த துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகமானது மாநில அளவில் தேர்வுசெய்யப்பட்டது. இவ்வாறு மனிதப் பார்வையாது சிறந்தவற்றை நோக்கியே பாய்ந்து செல்கிறது.

கடவுளின் பார்வை எவற்றை நோக்கி செயல்படுகிறது என்பதனைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. கடவுளின் பார்வையானது சமுதாயத்திலிருந்து பொருளாதார அடிப்படையில், அதிகார அடிப்படையில், சுகாதார அடிப்படையில் ஓரந்தள்ளப்பட்டவர்களை நோக்கிச் சென்றது. அதனால்தான் இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் சவுலை தேர்வுசெய்யாமல், ஈசாயின் 7 பிள்ளைகளையும் தேர்வு செய்யாமல், ஒதுங்கி வாழ்ந்த தாவீதை தேர்வு செய்கின்றார். கடவுளின் பார்வையும், மக்களின் பார்வையும் எந்த அளவிற்கு வேறுபட்டு காணப்படுகிறது என்பதனை சுட்டிக்காட்டுகிறது. இந்த தேர்வுதான் தாவீது பீடத்தில் சென்று அப்பங்களை எடுத்து, பசியால் இருந்தவர்களின் பசி தீர்க்க செய்கிறது. மனிதனின் டீநளவ கண் பார்வையிலே முடங்கி விடுகிறது. ஆனால் கடவுளின் டீநளவ கசிந்த இதயத்தை நோக்கியிருக்கிறது.

எனது டீநளவ எதை நோக்கி இருக்கிறது? சிந்திப்போம்.
- அருட்பணி. பிரதாப்

======================

 

17.01.2023 – மாற்கு 2: 23 – 28
(ஓ)ய்வு: (ஓ)ய்வெடுக்கவா? (ஓ)யாமலிருக்கவா?

இந்த மண்ணில் உருவான அனைத்து மதங்களுமே இந்த ஓய்வைப் பற்றி வலியுறுத்துகின்றன. இஸ்லாமிய மதத்தினர் இதனை அல்லாவுக்கு நன்றி செலுத்த அவர் கொடுத்த நாளாக கருதினர். இந்து மதத்தினர் பெருமாளை நினைத்து மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நாளாக கருதினர். கிறிஸ்தவ மதம் கடவுளுக்கென்று ஒப்புக் கொடுத்து அவரை வணங்க கொடுக்கப்பட்ட நாளாகக் கருதினர். எல்லா மதங்களின் கருத்தின்படி இறைவனைப் பற்றி சிந்தித்து ஒதுக்கிய நாள் தான் இந்த ஓய்வுநாள். கடவுளைப் பற்றி சிந்தனைகளை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கிய இந்த ஓய்வுநாள் காலப்போக்கில் சட்ட திட்டங்களுக்கு இரையாக மாறிவிட்டது.

அத்தகைய ஒரு பார்வையைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கின்றோம். யூத தலைவர்கள் ஓய்வுநாளை தங்கள் அதிகார வளையத்துக்குள் அடக்கிவிட நினைத்தார்கள். அதனால் தான் ஓய்வுநாளில் எந்தவொரு உடல் சார்ந்த பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்று கருதி மீறுபவர்களை தண்டிக்கும் அதிகாரத்தையும் பெற்றனர். இது சரியானது தான். ஏனென்றால் கடவுள் ஆறு நாட்கள் இந்த உலகைப் படைத்து ஏழாவது நாளில் அதனைப் புனிதப்படுத்திய நாளை ஓய்வாக கருதினர். இது உடல் சார்ந்த ஓய்வாகத்தான் அவர்கள் கருதினர். அதனைத் தான் நம் முன்னோர்களாகிய இஸ்ரயேல் மக்கள் ஓய்வு ஆண்டு, யூபிலி ஆண்டு என கருதினர் (லேவி 25). ஆனால் இயேசு உடலிலிருந்து மட்டும் ஓய்வெடுப்பது ஓய்வாகாது. மாறாக, அவன் இந்த மண்ணிலிருந்து ஓய்வெடுத்து விடக்கூடாது என எண்ணுகின்றார். அதனால் தான் இயேசு பசி போக்க சீடர்கள் கதிர்களை கொய்து தானியங்களை உண்டதை தவறாக எண்ணவில்லை. ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை புனிதம் என்பது சட்டத்தைப் பின்பற்றுவதில் அல்ல. மாறாக, ஒருவனை உணவோடு வாழ வைப்பது. அதனால் தான் பழைய ஏற்பாட்டு நிகழ்வினையும் சுட்டிக் காட்டுகின்றார்.

என்னுடைய வாழ்வில் ஓய்வு என்ற பெயரில் என் கண்முன் நடக்கும் அநியாயங்கள் அல்லது பசியினால் வாடுபவனைக் கண்டு கொள்ளாமலிருக்கிறேனா? அல்லது அவன் இந்த மண்ணை விட்டு முற்றிலும் ஓயாமலிருக்க நான் உதவி செய்கிறேனா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

தியானப்பாடல் சிந்தனை : திருப்பாடல் 111: 1 – 2, 4 – 5, 9, 10
”தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்”

”ஆண்டவரிடத்தில் கொள்ளக்கூடிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்”. ”ஆண்டவருக்கு அஞ்சி நடக்க வேண்டும்”. இது போன்ற வார்த்தைகள் விவிலியத்தில் ஆங்காங்கே காணக்கிடப்பதை நாம் பார்க்கலாம். இன்றைய திருப்பாடலின் வரிகளும் இதையே வலியுறுத்திக் கூறுகின்றன. ஆண்டவருக்கு அஞ்சி நடப்பது என்றால் என்ன? நாம் ஏன் ஆண்டவருக்கு அஞ்சி நடக்க வேண்டும்? கடவுள் நமக்கு தந்தையும், தாயும் என்று விவிலியம் சொல்கிறது. உரிமையோடு அவரிடத்தில் கேட்கலாம் என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அப்படியிருக்கிற சமயத்தில், எதற்காக, நாம் கடவுளுக்கு பயப்பட வேண்டும்.

அச்சம் என்கிற வார்த்தையை நாம் புரிந்து கொள்வதில் தான், சற்று தடுமாறுகிறோம். அதனுடைய உண்மையான விவிலிய அர்தத்தை நாம் உணர்ந்து கொண்டால், நிச்சயம் அதைப்பற்றிய தெளிவு நமக்குக் கிடைக்கும். இணைச்சட்டம் 8: 6  சொல்கிறது: ”உங்கள் கடவுளாகிற ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். அதுவே அவர் தம் வழிகளில் நடந்து, அவருக்கு அஞ்சி வாழ்வதாகும்”. இங்கே கொடுக்கப்பட்டிருக்கிற இறைவார்த்தையை நாம் பார்த்தோமென்றால், கடவுளுக்கு பயந்து வாழ்வது என்பது, இந்த உலகம் புரிந்து கொள்வது போன்ற பயம் கிடையாது. மாறாக, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதுதான், அவருக்கு அஞ்சி வாழக்கூடிய வாழ்வாகும். அவருடைய கட்டளை என்ன கட்டளை? அதுதான், மத்தேயு 7: 12 ல் பொன்விதியாகச் சொல்லப்படுகிறது. ”பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம், நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்”. மற்றவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை நாம் மற்றவர்களுக்குச் செய்வதுதான், கடவுள் கொடுத்த அன்புக்கட்டளை. இந்த கட்டளையைக் கடைப்பிடித்தால், ஆண்டவரின் ஆற்றலை, வல்லமையை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இங்கே உணவு என்று சொல்லப்படுவது, கடவுளின் வல்லமையைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது.

நமது வாழ்வில் நாம் மற்றவர்களை அன்பு காட்டுகிறவர்களாக, மற்றவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து நடக்கிறவர்களாக மாற வரம் வேண்டி, ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

இயேசுவின் பார்வையில் புனிதம்

புனிதம் என்ற பெயரில் மனிதத் தேவையை பொருட்படுத்தாது விடுவது, அந்த புனிதத்தை மாசுபடுத்துகின்ற செயல் என்பதை, இன்றைய நிகழ்ச்சி மிக அழகாக நமக்கு எடுத்துரைக்கிறது. புனித பொருட்களை மற்றவர்களின் தேவைக்கு பயன்படுத்துவது தான், அந்த புனிதப்பொருட்களுக்கான உண்மையான விலை. இன்றைய நாளில் ஓய்வுநாளில் பசியாயிருந்த சீடர்கள் கதிர்களைப் பறித்து உண்கிறார்கள். பரிசேயர்கள், ஓய்வுநாளை மீறிய செயலாகப் பார்க்கிறார்கள். அதனைக் கண்டிக்கிறார்கள். குற்றம் காண துடிக்கிறார்கள். ஆனால், இயேசு புனிதம் என்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை நமக்கு எடுத்துரைக்கிறார்.

பொதுவாக, குழந்தைகள் மத்திய கிழக்குப் பகுதிகளில் ஆலயத்திற்குள் நுழைவதற்கு தடைசெய்யப்பட்டனர். காரணம், ஆலயங்களும், அதனைச்சார்ந்த இடங்களும் பாரம்பரியத்தையும், புனிதத்தையும் பறைசாற்றுவதாக நினைத்தனர். அங்கே குழந்தைகள் அதன் புனிதத்தன்மையை கெடுத்துவிடுவார்கள் என்று மக்கள் நினைத்தனர். எனவே, அவர்கள் தடைசெய்யப்பட்டனர். ஆனால், புனித நாளோ, புனித பொருட்களோ மனிதத்தேவையை நிறைவு செய்கிறபோதுதான், புனிதத்தன்மையைப் பெறுகிறது. பலிக்கு வைக்கப்படுகிற அப்பம், பசியாயிருக்கிறவனுக்குக் கொடுக்கப்பட்டால், அதுதான் உண்மையான பலி. அதுதான் உண்மையான புனிதம். ஓய்வுநாள், தேவையில் இருக்கிறவனுக்கு உதவி செய்கிறநாளாக இருந்தால், அதைவிட, அந்த ஓய்வுநாளை புனிதமாக அனுசரித்துவிட முடியாது.

இன்றைக்கு புனிதம் என்ற பெயரில், நாம் மனிதத்தேவைகளை புறந்தள்ளி விடுகிறோம். புனிதம் நிச்சயமாக பேணிக்காக்கப்பட வேண்டும். ஆனால், அந்த புனிதத்தன்மை சரியான முறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும், என்பதுதான் இயேசுவின் ஆசை.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

சட்டத்தை அனைவருக்கும் சமமாக்குவோம்

ஓய்வுநாள் என்பது எபிரேய மொழியின் “ஷாவத்” என்கிற வார்த்தையின் பொருளை மையப்படுத்தியதாகும். அதன் பொருள் “இளைப்பாறுதல்”, ”தவிர்த்தல்”, ”ஓய்வெடுத்தல்” என்பதாகும். யூதர்களின் ஓய்வுநாள் என்பது வெள்ளிக்கிழமை மாலை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை மாலை சூரிய மறைவு வரை இருக்கும். கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள். ஏனென்றால், அன்றைய தினம் நம் ஆண்டவரின் உயிப்புநாள். இந்த ஓய்வுநாளில் செய்யக்கூடாதவை என்று, யூதர்களின் மறைநூல் அறிஞர்கள் பல ஒழுங்குமுறைகளை வகுத்திருந்தனர். இந்த ஒழுங்குகளில் ஒன்றுதான் இன்றைய நற்செய்தியில் வரும் ஓய்வுநாளில் கதிர்கொய்தல் பற்றியது ஆகும்.

அடுத்தவருக்கு சொந்தமான வயலில் கதிர்களைப்பறிப்பது தவறானது அல்ல. அது ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டது. அரிவாளால் பறிக்காதவரைக் குற்றமில்லை. எனவே, சீடர்களின் இந்த செயல் நியாயமானதாக, ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டதாக இருந்திருக்கும். ஆனால், அவர்கள் கதிர்களைப்பறித்தது ஓய்வுநாளில். அதுதான் ஒழுங்குமுறைகளுக்கு எதிரானது. இதைத்தான் பரிசேயர் குற்றப்படுத்துகின்றனர். சீடர்களுக்கும் இது நன்றாகத்தெரியும். இருந்தும் அவர்கள் அதைப்பறிக்கிறார்கள் என்றால், அதற்குக்காரணம், தாங்கமுடியாத பசி. பொறுத்து, பொறுத்துப் பார்த்துதான் சீடர்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள். நமது வழக்கிலே, ”ஆபத்திற்கு பாவமில்லை” என்ற ஒரு சொல்லாடல் பயன்படுத்தப்படும். இதைத்தான் சீடர்கள் செய்கிறார்கள்.

சட்டத்தை மீறுவது பாவம். ஆனால், ஒட்டுமொத்தமாக நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. இன்றைக்கு அதிகாரமிக்கவர்கள் பணத்தால், பதவியால், அதிகாரத்தால் சட்டத்தில் காணப்படும் ஓட்டைகளைப்பயன்படுத்தி குற்றத்திலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், சாதாரண ஏழைகளை சட்டத்திற்கு பலிகடாவாக மாற்றிவிடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். சட்டத்தை ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் நீதி கிடைப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மனிதத்தின் முழுமை இறைமை

இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல் வழியே செல்கின்றபோது அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து கொண்டே வழிநடக்கின்றனர். சாதாரண நாட்களில் செல்லும்போது கதிர்களைக் கையால் கொய்வது குற்றம் கிடையாது. “உனக்கு அடுத்திருப்பவனுடைய விளைநிலத்திற்குச்சென்றால் உன் கையால் கதிர்களைக் கொய்யலாம்: ஆனால் கதிர் அரிவாளை உனக்கு அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே” (இணைச்சட்டம் 24: 25).

இங்கே சீடர்கள் செய்த தவறு ஓய்வுநாளில் கதிர்களை பறித்தது. ஓய்வுநாளை முழுமையாகக் கடைப்பிடிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்கங்களை யூத மதத்தலைவர்கள் வகுத்திருந்தனர். அந்த ஒழுங்குமுறைகளுக்கு எதிராக அமைந்திருந்தது சீடர்களின் செயல்பாடு. சட்டம், மனிதம் இரண்டில் இயேசு மனிதத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார். அதற்கு அவர்களின் மொழியிலேயே விளக்கமும் தருகிறார். பழைய ஏற்பாட்டிலே 1 சாமுவேல் 21: 1 – 6 ல் பார்க்கிறோம்: குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய தூய அப்பத்தை (லேவியர் 24: 9 – அது ஆரோனுக்கும் அவன் மைந்தர்க்கும் உரியது. அதைத்தூயகத்திலே உண்ண வேண்டும்) தானும் உண்டு, தன்னோடு உடன்வந்தவர்களுக்கும் தாவீது உண்ணக்கொடுக்கிறார். எப்படி இங்கே மனிதத்திற்கு தாவீது முக்கியத்துவம் தந்தாரோ, அதேபோல் தான் இயேசுவின் போதனையும் மனிதத்தை ஒட்டி அமைந்திருந்தது. இயேசு சட்டத்திற்கு எதிரானவர் அல்ல:

ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்கக்கூடாது என்பது அவருடைய எண்ணம் அல்ல. ஆனால், மனிதம் எப்போதும் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். அதுதான் கடவுளின் விருப்பம். சடங்குகள், சம்பிரதாயங்கள் கற்றுத்தரும் பொருளை அறிந்து, அதனை முன்னிலைப்படுத்துவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

--------------------------------------------

தாவீது என்ன செய்தார் ?

பசியின் காரணமாகச் சீடர்கள் கதிர்களைக் கொய்தபோது, பரிசேயர் அதனை ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதாக இயேசுவிடம் குற்றம் சுமத்தினர். அதற்கு இயேசு பழைய ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். சட்டத்தைவிட மாந்தநேயமே மேலானது என்கிறார்.

1 சாமுவேல் 21ஆம் அதிகாரத்தில் இந்த நிகழ்வை வாசிக்கிறோம். தாவீது குரு அகிமெலக்கிடம் வந்து உண்பதற்கு ஏதாவது வேண்டும் என்று கேட்டபொழுது குரு அவரிடம் "தூய அப்பமே என்னிடம் உள்ளது. சாதாரண அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவுகொள்ளாமல் இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம்" என்றார். தாவீது குருவை நோக்கி, "சாதாரண பயணத்தின்போதே இவ்விளைஞர்கள் பெண்களுடன் உறவுகொள்வதில்லை. இன்றோ சிறப்புப் பணியை மேற்கொண்டுள்ளதால் நேற்றும் முந்தின நாளும் தூய்மை காத்துள்ளனர்" என்றார். ஆதலால் குரு தூய அப்பத்தை அவருக்கு அளித்தார் (1 சாமு 21: 1-6) என்று வாசிக்கிறோம்.

இயேசுவின் இந்த மேற்கோளிலிருந்து மூன்று சுவையான தகவல்களைப் பெறுகின்றோம்:

1. இயேசு மறைநூலை நன்றாக அறிந்திருந்தார். இப்பகுதி மட்டுமல்ல, புதிய ஏற்;பாட்டின் இதர பகுதிகளிலும் இயேசு பழைய ஏற்பாட்டைத் தெரிந்திருந்த செய்தியை அறிகிறோம். எனவேதான், தம்மிடம் வாதிட வந்தவர்களிடம் "உங்களுக்கு மறைநூலும் தெரியாது. கடவுளின் வல்லமையும் தெரியாது. எனவேதான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்" (மத் 22: 29) என்று துணிவுடன் சொல்ல முடிந்தது.

2. இயேசு மறைநூலைத் தெரிந்திருந்ததோடு, அந்த மறைநூலை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஞானத்தையும் பெற்றிருந்தார். எனவேதான், மறைநூல் நிகழ்வை மாந்தநேயப் பார்வையில் பார்க்க முடிந்தது, பரிசேயர் இறைவார்த்தையை சட்டநோக்கில் பார்த்தனர். இயேசு மாந்தநேயத்தோடு பார்த்தார்.

3. மறைநூலோடு, கடவுளின் வல்லமை, பேரன்பு, பேரிரக்கம் இவற்றையும் இணைத்தே நாம் பார்க்க வேண்டும். "இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், ... என்னிடம் அன்பு இல்லையேல், நான் ஒன்றுமில்லை" (1 கொரி 13: 2) என்னும் பவுலடியாரின் வாக்கையும் நினைவுகூர்வோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இறைவார்த்தையின்மீது ஆர்வம் கொண்டுள்ள நாங்கள், அந்த ஆர்வத்தோடு மாந்தநேயமும் கொள்ளும் அருளைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்..

- பணி. குமார்ராஜா

-------------------------------------------------------------------------------

இணையதள உறவுகளே

அப்பாடா. இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. ஓய்வு நாள். காலையில நல்லா தூங்கலாம். மதியம் நல்ல ஒரு விருந்து  சாப்பிடலாம். சாயுங்காலம் அப்படியே கடல்காற்று வாங்கப்போவோம். வந்து நல்ல ஒரு திறைப்படம் பார்ப்போம். ஞாயிற்றுக்கிழமை இப்படித்தான் விடிந்து முடிகிறது.

ஞாயிறு ஒரு ஓய்வுநாள். அது ஆண்டவரின் நாள் என்பதை மறந்து விடுகிறோம். இது ஆண்டவருக்காக செலவிடவேண்டிய நாள். நாள் முழுவதையும் ஆண்டவருக்காகவும் அவரது பணிக்காவும், ஆண்டவரின் பெயரால் அயலானுக்காகவும் அறச்செயல்கள் செய்ய வேண்டிய நாள். “ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் ஒரு வேலையும் செய்யவேண்டாம். நீங்கள் வாழும் இடமெங்கும் அது ஆண்டவருக்கான ஓய்வுநாள்’(லேவி 23 : 3)

எனவே ஆண்டவரின் நாளில் திருப்பலி, செபக்கூட்டங்கள், குழந்தைகளுக்கு மறைக்கல்வி, அன்புப்பணி இவற்றிற்கு முதலிடம் கொடுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.ஆண்டவர் உங்களை எக்குறையுமின்றி ஆசீர்வதிப்பார்.

-ஜோசப் லீயோன்

-----------------------------------------------

 

ஓய்வுநாளில் செய்யக்கூடாதது !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

பசியாய் இருந்த இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்துகொண்டே நடந்ததைக் குற்றப்படுத்துகின்றனர் பரிசேயர்கள். பாரும், ஓய்வுநாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்? என்று கேட்டனர். ஓய்வுநாளில் செய்யக்கூடாதது எது என்பதைப் பற்றிய அவர்களின் அறியாமையை ஆண்டவர் போக்குகிறார்.

ஓய்வுநாளில் செய்யக்கூடாதவை: தீமை, அநீதி, அன்புக்கெதிரான செயல்கள். செய்ய வேண்டிவை: இறைவழிபாடு, அன்புறவாடல் மற்றும் பிறரன்புப் பணிகள். இந்த ஞானத்தைப் பரிசேயர்கள் பெற்றிருக்கவில்லை. எனவேதான், பசியைப் போக்க கதிர்களைக் கொய்ததைக் குற்றப்படுத்தினர். நாம் பரிசேய மனநிலையைக் களைந்து, இயேசுவின் மனநிலையில் வளர்ந்து, நன்மையைச் செய்வதற்கு நாள், நேரம் பாராமல் இருப்போமாக. எந்நேரமும் தீமையைத் தவிர்ப்போமாக.

மன்றாடுவோம்: அன்பின் தெய்வமே இறைவா, நீர் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருப்பதற்காக உம்மைப் போற்றுகிறோம். ஓய்வுநாளில் நாங்கள் உம்மைத் தொழுது, உமக்காக வாழ்கின்ற அருளைத் தாரும். எதையும் சட்டத்தின் பார்வையில் நோக்காமல், அன்பின் பார்வையில் காணும் ஆற்றலைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

-----------------------------

''இயேசு 'ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது;
மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை' என்றார்'' (மாற்கு 2:27)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு ஓய்வு நாள் பற்றிக் கூறிய கருத்தின் அடிப்படையில் அவர் ஓய்வுநாளை எதிர்த்தார் என்று சிலர் முடிவுகட்டிவிடுகின்றனர். இது தவறு. இயேசு ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது தவறு என்று கூறவில்லை; மாறாக, ஓய்வு நாளின் உண்மையான பொருள் எதில் அடங்கியிருக்கிறது என்பதை அவர் வெளிப்படுத்தினார். யூத வழக்கப்படி ஓய்வு நாள் கடவுளை வழிபடுவதற்கும், வேலை செய்வதிலிருந்து ஓய்வு பெறுவதற்கும், குடும்பக் கடமைகளில் கவனம் செலுத்துவதற்கும் பயன்பட்டது. ஆனால் நாளடைவில் ஓய்வு நாள் பற்றிய சட்டதிட்டங்கள் பலுகிப் பெருகின. ஓய்வு நாளில் எந்த வேலை செய்யலாம், எந்த வேலை செய்யத் தகாதது என வரையறுப்பதில் சட்ட நுணுக்கங்கள் புகுந்தன; மக்கள்மீது பெரிய சுமை சுமத்தப்படலாயிற்று. இதையே இயேசு கண்டித்தார். ஓய்வுநாளின் உண்மைப் பொருளை மறந்தது தவறு என்று சுட்டிக்காட்டிய இயேசு, ஓய்வு நாள் மனிதரின் நன்மைக்காகவே உருவாக்கப்பட்டது என்னும் கருத்தை ஆழமாக எடுத்துரைத்தார். எனவே அவர் ஓய்வு நாள்களில் குணமளித்தார். இது ஓய்வுநாள் பற்றிய சட்டதிட்டங்களுக்கு எதிராக அமைந்தது என இயேசு அறிந்திருந்த பிறகும் மனிதரின் நலனை முன்னிட்டு சட்ட மீறலில் ஈடுபட்டார்.

-- கிறிஸ்தவர்களுக்கு ஓய்வுநாளாக இருப்பது ஞாயிற்றுக் கிழமை ஆகும். யூதர்களின் ஓய்வு நாளாகிய சனிக்கிழமை கிறிஸ்தவ வழக்கில் ஞாயிறாக மாறியதற்கு ஒரு வரலாறு உண்டு. இயேசு சாவிலிருந்து உயிர்பெற்று எழுந்தது ஞாயிற்றுக் கிழமை என்னும் அடிப்படையில் கிறிஸ்தவ வழக்கில் ஞாயிறு சிறப்புப் பொருள் பெறலாயிற்று. ஞாயிறு என்பது வாரத்தின் முதல் நாள். இயேசு உயிர் பெற்றெழுந்த அந்த நாளைச் சிறப்பித்து, வழிபாட்டு நாளாகக் கொண்டாடுவது பொருத்தம் எனத் தொடக்க காலத் திருச்சபை முடிவு செய்தது. எனவே, கடவுளை வழிபடுவதற்கும், அன்றாட வேலையிலிருந்து ஓய்வு பெற்று, சமூக மற்றும் குடும்ப உறவுகளைப் புதுப்பிப்பதற்கும் ஏற்ற நாளாக நாம் ஞாயிற்றுக் கிழமையைக் கருதலாம். கிறிஸ்தவ ஓய்வு நாளின் உட்பொருளை உணர்ந்து வாழ்ந்திட நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, உம்மை வழிபட்டு உம் வழியில் நடந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

----------------------------------

"ஓய்வுநாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அல்ல"

இயேசுவின் அன்புக்குரியவரே!

பயிர் முக்கிமா? வேலி முக்கியமா? மனிதனா? சட்டமா? பயிர்தான் முக்கியம். மனிதன்தான் முக்கியம். இவற்றில் வேறுபட்ட கருத்து இல்லை. ஒரே நிகழ்ச்சியைப் பார்க்கின்ற இருவரின் கண்ணேட்டத்திற்கு ஏற்ப, கருத்துக்கள் வெளிப்படுகின்றன. ஒருவன் வேலிதான் முக்கியம் என்று வாதிடுகின்றான். மற்றவன் பயிர்தான் முக்கியம் என்று சாதிக்கின்றான்.

எதிலும் நல்லதையும் சிறந்ததையும் முக்கியமானதையும் பார்க்கும் கண்ணேட்டம் இருந்தால் எதிலும் நல்லது மட்டுமே தெறிய வரும். சீடர்கள் கதிர்களைக் கொய்து தின்றது, இயேசுவைப் பொருத்தமட்டில் பெரிய பிரச்சனை அல்ல. ஏனென்றால், பசியிலும் வரப்பில் வழி நடந்தும் களைத்திருந்த சீடர்களின் நிலைமையை அவர் அறிவார். சட்டமும் சம்பிரதாயமும் அறிவார்.ஆகவே கேட்டார்: "தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார்" (வாசிக்க, 1சாமு 21:1-6) "அபியத்தார் தலைமைக் குரவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குரக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?"(வாசிக்க,லேவி 24:9).

இயேசுவின் பார்வையில் சீடர்களின் நீண்ட பயணம், கழைப்பு, பசி தெறிந்தது. இடமும் வயல்வெளி. செய்த செயலும் பசிக்கு சாப்பிட்டதுதான். அருவடைசெய்து உழைத்து சம்பாதிக்கவில்லை. இவற்றுள் புதைந்திருக்கும் மனிதனைப் பார்த்தார். பரிசேயர்கள் மனிதனையும் மனிதத்தையும் புதைக்கும் சட்டத்தைப் பார்த்தனர். வேலியைக் காக்கும் முயற்சியில் இறங்கினர். பயிரை விட வேலியைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இயேசுவின்; கண்ணேட்டம் நமக்கிருந்தால் பயிரை வளர்த்துப் பாதுகாப்போம். பலரை அது வாழ்விக்கும். வாழ்த்துக்கள். ஆசீர்;.

:- ஜோசப் லியோன்