முதல் வாசகம்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 32-33, 37, 40-50

அந்நாள்களில் தாவீது சவுலை நோக்கி, "இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வேண்டியதில்லை; உம் அடியானாகிய நானே சென்று அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன்" என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், "இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது; நீயோ இளைஞன், ஆனால் அவனோ தன் இள வயதுமுதல் போரில் பயிற்சியுள்ளவன்" என்றார். மேலும் தாவீது, "என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்" என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், "சென்றுவா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்" என்றார். தாவீது தம் கோலைக் கையில் எடுத்துக் கொண்டார்; நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார்; தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார். தன் கேடயம் ஏந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான். பெலிஸ்தியன் தாவீதைக் கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான்; ஏனெனில் அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றமும் உடைய இளைஞனாய் இருந்தான். அப்பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, "நீ கோலுடன் என்னிடம் வர, நான் என்ன நாயா?" என்று சொல்லித் தன் தெய்வங்களின் பெயரால் தாவீதைச் சபிக்கத் தொடங்கினான். மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி, "அருகே வா! வானத்துப் பறவைகளுக்கும் வனத்து விலங்குகளுக்கும் உன் உடலை இரையாக்குவேன்" என்றான். அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், "நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன். இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்; நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்; பெலிஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர். மேலும், ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள் கூட்டம் அறிந்து கொள்ளட்டும்; ஏனெனில் இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்" என்றார். பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கிப் புறப்படுகையில், தாவீதும் அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார்;அதைக் கவணில் வைத்துச் சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியைக் குறி பார்த்து எறிந்தார். அந்தக் கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே, அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். இவ்வாறு தாவீது, கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன்மீது வெற்றிகொண்டு, அவனை வீழ்த்திக் கொன்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 144: 1. 2. 9-10
பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

1 என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே!
போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே! -பல்லவி

2 என் கற்பாறையும் கோட்டையும் அவரே!
எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே!
என் கேடயமும் புகலிடமும் அவரே!
மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! -பல்லவி

9 இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்;
பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.
10 அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே!
உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

 

மாற்கு 3:1-6

பொதுக்காலம், வாரம் 2 புதன்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6

இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். இயேசு கை சூம்பியவரை நோக்கி, ``எழுந்து, நடுவே நில்லும்'' என்றார். பின்பு அவர்களிடம், ``ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?'' என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, ``கையை நீட்டும்'' என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

இரக்கத்தின் சட்டங்களை அமைப்போமே

பல ஆண்டுகளாகவே சிறையிலே வாழ்வை நடத்திக்கொண்டிருக்கும் பேரறிவாளன் பற்றி அறிந்திருப்போம். இரக்கத்தின் சட்டம் இவரின் கண்ணிலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. சாத்தான்குளம் சார்ந்த இரண்டு நபர்கள் அரசின் சட்ட விதிமீறலுக்கு உட்பட்டு கடை அமைத்த காரணத்திற்காக, குற்றம் சாட்டப்பட்டு சாவை வாங்கினார்கள். இரக்கத்தின் சட்டத்தினை இவர்களால் எட்டிப் பார்க்க இயலவில்லை. இவ்வாறு இந்த சமுதாயத்திலே இரக்கத்தின் சட்டமானது மலைமீது காணப்படும் நீராவி போல காணமுடியாத ஒன்றாகவே இருக்கிறது.

இத்தகைய இரக்கத்தின் சட்டத்தை அத்துமீறி இந்த மண்ணிலே விதைத்தவர் நம் ஆண்டவர் என்றால் அது மிகையாகாது. அப்படி விதைத்த ஒரு விதையின் விளைச்சல்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் கைசூம்பிய மனிதன். ஓய்வுநாள் தங்கள் சமயத்திற்கு உட்பட்ட ஒரு மாபெரும் சட்டம் என்பதில் பிடிவாதம் கொண்டிருந்தவர்கள் யூதர்கள். கைசூம்பி துன்புற்றுக்கொண்டிருந்தவர் குணம்பெற நாளும் நாழிகையும் ஒரு தடையாக இருக்கத் தேவையில்லை என்கிற வாதத்தை முன்வைக்கிறார் இயேசு. மரபுகளைக் காப்பதே தங்கள் கடமை எனக் கருதிய யூதர்களைவ hழ்வை வளப்படுத்தும் செயல்களை எச்சட்டமும் மரபும் தடுக்க இயலாது என்கிற புதிய மரபை அளித்து நாவடைக்கிறார் இயேசு. சமய அடிப்படை வாதத்தின் அன்றைய காவலர்களாகிய விளங்கிய பரிசேயர் இயேசுவுடன் ஈடுட்ட மோதலால் தோல்வியைக் கண்டார். காரணம் இயேசுவின் இரக்கத்தின் சட்டம் நிலைநிறுத்தப்பட்டது.

நாம் இரக்கத்தின் சட்டத்தை அனுமதிக்கின்றோமா? சிந்திப்போம்.
- அருட்பணி. பிரதாப்

======================

18.01.2023 – மாற்கு 3: 1 – 6
மரபா? மனிதனா?

மரபு மனிதனின் வாழ்வை நெறிப்படுத்த உதவுகின்றது. ஏனென்றால் அதன் வழியாகத் தான் நாம் நம்முடைய பண்பாட்டை அறிந்து கொள்ள முடியும். ஒரு வீடு என்றால் அதற்கு வாயில் என்பது மிகவும் இன்றியமையாதது. வீட்டிற்குள் செல்ல வேண்டுமென்றால் வாயிலின் வழியாகத் தான் செல்ல முடியும். மரபு என்பது மனிதன் இந்த மண்ணில் வாழ வாயிலாக இருக்கின்றது. ஆனால் மரபே வாழ்க்கையாக மாறும் போது அங்கு குழப்பம் ஏற்படுகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இத்தகைய ஒரு நிலையைத்தான் நாம் பார்க்கின்றோம். ஓய்வுநாள் என்பது மக்களின் வாழ்வை நெறிப்படுத்துதற்காகத் தான் என்று விவிலியம் கூறுகிறது. இது கடவுளின் படைப்பின் பிண்ணனியிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பரிசேயர்கள் மனிதன் ஓய்வு நாளுக்காகத்தான் என்ற எண்ணத்தில் வாழ துவங்குகினார்கள். ஆனால் இயேசு ஓய்வு நாளை விட ஒருவனின் வாழ்வு முக்கியம் என எண்ணுகின்றார். அதனால் தான் கை சூம்பிய மனிதனுக்கு புது வாழ்வு கொடுக்கின்றார். அவரைப் பொறுத்த மட்டில் மரபை விட மனிதன் முக்கியம் என்ற கண்ணோட்டத்தில் வாழ முயற்சி எடுக்கின்றார்.

நம்முடைய வாழ்வில் மரபிற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேனா? அல்லது மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேனா? இன்னும் நமது ஊர்களில் மரபினை மலை போலவும், மனிதனை பனித்துளி போலவும் தான் பார்க்கின்றோம். மாற்றிச் சிந்திப்போமா?

- அருட்பணி. பிரதாப்

==========================

மக்களுக்காக வாழ்ந்த இயேசு

கழுகுப்பார்வைகள், இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்க கூர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டன. எப்படியும் இயேசுவை தொலைத்துவிட வேண்டும் என்று, தலைமைச்சங்கத்தால் அனுப்பப்பட்ட குழு, இயேசுவை பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இயேசுவின் ஒவ்வொரு அசைவும் தீவிரமாகக் கவனிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இயேசுவின் முன்னால், ஓய்வுநாளில் கைசூம்பிப்போன மனிதன், குணம் பெறுவதற்காக காத்திருக்கிறான். அந்த மனிதனுக்கும் தெரியும், ஓய்வுநாளில் சுகம்பெறுவது, தனக்கு சுகம் கொடுக்கிறவருக்கு தேவையில்லாத பிரச்சனைகளைத் தரும் என்று. ஆனால், அந்த மனிதன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. குணம் பெறுவது ஒன்றையே இலக்காக வைத்திருக்கிறான்.

ஓய்வுநாளில் குணப்படுத்துவது வேலைசெய்வதாகும். உயிர்போகக்கூடிய சூழ்நிலையில் இருக்கிற ஒருவனுக்கு மட்டுமே, ஓய்வுநாளில் உதவி செய்ய வேண்டும். மற்றவர்களுக்குச் செய்தால், அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். ஏன் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் இந்த சட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்று நமக்கு கேட்கத்தோன்றும். நமது பார்வையில், இதனைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், யூதர்கள் எந்த அளவுக்கு, இதனை கடைப்பிடித்தார்கள் என்று பார்த்தோம் என்றால், நம்மால் அதனுடைய யதார்த்த நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஓய்வுநாளில், யூதர்கள் தங்கள் உயிரைக்கூட காத்துக்கொள்ள மாட்டார்கள். தன்னை ஒருவன் கொல்ல வருகிறான் என்றால், அதற்கு தங்களைக் கையளித்துவிடுவார்கள். அவ்வளவுக்கு கடினமாக கடைப்பிடிக்கப்பட்ட காலத்தில்தான், இயேசுவின் புதுமை நிகழ்ச்சி நடக்கிறது.

இயேசுவுக்கு சட்டங்களையும், சம்பிரதாயங்களையும் மீற வேண்டும் என்பது ஆசையல்ல. அவர் வேண்டுமென்றே மீறியதும் இல்லை. ஆனால், நன்மை செய்வதற்கு எதுவும் தடையாக இருக்க முடியாது என்பதுதான், அவருடைய வாதம். சட்டங்கள் மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே இருக்கிறது. அந்த சட்டங்களே நன்மை செய்வதற்கு தடையாக இருந்தால், அதனையும் தாண்டிச்செல்ல வேண்டும் என்பது இயேசுவின் வாதம். அதனை நமது வாழ்விலும் சரியான புரிதலோடு பயன்படுத்துவோம். செயல்படுத்துவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைப்பிரசன்னத்தின் இருப்பிடம் ஆலயம்

தொழுகைக்கூடத்தில் நடக்கும் இந்த நிகழ்வு ஒரு மிகமுக்கியமான நிகழ்வு. ஏனென்றால், யூத மதத்தின் பாரம்பரியவாதிகளுக்கும், இயேசுவுக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டது. தொழுகைக்கூடங்களில் போதிக்கும் இயேசுவின் போதனைக்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்து கிளம்ப ஆரம்பித்துவிட்டது. ஆனால், இயேசு தனது பாதுகாப்பைத்தேடி ஒளிந்துகொள்ளாமல், ஆபத்தான அந்த சூழ்நிலையை எதிர்கொள்கிறார்.

தொழுகைக்கூடங்களில் இயேசு போதிக்கிற இடங்களுக்கெல்லாம், தலைமைச்சங்கத்தினால் நியமிக்கப்பட்ட தூதுக்குழுவினர் சென்று, இயேசுவின் போதனையைக் கணக்கெடுக்க ஆரம்பித்தனர். தொழுகைக்கூடத்தின் முதல் இருக்கைகள் மதிப்பிற்குரியது. அந்த இருக்கைகள் தலைமைச்சங்க உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மக்களை தவறாக வழிநடத்துகிற போதனையாளர்களை எதிர்கொண்டு, அவர்களை விசாரிப்பது இவர்களுடைய முக்கியமான கடமைகளுள் ஒன்று. அந்த வகையில், தலைமைச்சங்க உறுப்பினர்கள் இயேசு போதிக்கும் இடங்களுக்குச் சென்று வருவது, அவர்கள் இயேசுவை எப்படிப்பார்த்தார்கள் என்பதற்கு சிறந்த சான்றாகும். அவர்களின் நோக்கம் இறைவார்த்தையைக் கேட்பது அல்ல, செபிப்பது அல்ல. மாறாக, குற்றம் கண்டுபிடிப்பது. குற்றம் கண்டுபிடிப்பதற்காக, ஆலயத்தின் முன்னால் அமர்ந்து, தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற முன்னுரிமையைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஆலயம் என்பது புனிதமான இடம். ஆண்டவரை நேர்மையான உள்ளத்தோடு, தூய்மையான எண்ணத்தோடு போற்றிப்புகழக்கூடிய இடம். அத்தகைய இடத்தில் இருந்து, வேடிக்கை பார்ப்பதும், அடுத்தவர்களை தவறான கண்ணோட்டத்தோடு நோக்குவதும், குற்றம் கண்டுபிடிப்பதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தவறான முன்னுதாரணங்கள். அவற்றைக்களைந்து, தூய்மையான எண்ணத்தோடு ஆலயத்தின் வழிபாட்டில் கலந்துகொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------


இயேசு சென்ற இடங்களிலெல்லாம் நன்மை செய்தார்

ஓய்வுநாளில் இயேசு கைசூம்பியவரைக் குணப்படுத்துகின்ற நிகழ்ச்சியை நாம் பார்க்கின்றோம்.

ஓய்வுநாளில் மருத்துவ உதவி என்பது உயிர் ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் செய்ய முடியும் என்பது ஓய்வுநாள் ஒழுங்குகளில் ஒன்று. பேறுகால வேதனையில் துடிக்கிற பெண்ணுக்கு ஓய்வுநாளில் மருத்துவ உதவி செய்யலாம். ஆனால் வெட்டுப்பட்ட ஒருவருக்கு வெட்டப்பட்ட இடத்தில் துணியால் சுற்றலாம். மருத்துவ உதவி செய்ய முடியாது. ஏனெனில் அங்கே உயிருக்கு ஆபத்து இல்லை. இன்றைய பகுதியிலே கைசூம்பிப்போன மனிதருக்கு உயிர் ஆபத்து ஒன்றுமில்லை. அவருக்கு இயேசு அடுத்தநாளில் கூட குணம் தந்திருக்கலாம். ஆனால், எப்படி அவரை ஒழிக்கலாம் என்று சூழ்ச்சி செய்கிற கூட்டம் குற்றம் காணுகிற நோக்கத்தில் அங்கிருக்க, எதற்காக இயேசு தானே அவர்களின் வலையில் விழ வேண்டும்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். நன்மை செய்வதற்கு நாளோ, இடமோ, மனிதர்களோ தடையாக இருக்கக்கூடாது என்பது தான் இயேசு அவர்களுக்கு உணர்த்துகின்ற பாடம். நன்மை செய்வதனால் சட்டத்தை மீறுவதானால், அதை இயேசு துணிவோடு மீண்டும் மீண்டும் செய்யத் தயாராக இருக்கிறார்.

நன்மை செய்வது தான் ஒருவரின் வாழ்வில் முழுமையான அர்ப்பணமாக இருக்க முடியும் என்று இயேசு கற்றுத்தருகிறார். நன்மை செய்ததற்காக இயேசு தன்னுடைய இன்னுயிரையே மகிழ்ச்சியோடு கொடுத்தார். நம்முடைய வாழ்வில் நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்வதை வாழ்வின் நோக்கமாகக்கொள்ள இறை வல்லமைக்காக மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

 

"ரௌத்திரம் பழகு" !

"ரௌத்திரம் பழகு" என்றார் பாரதி தமது புதிய ஆத்திச்சூடியில். கோபப்படப் பழகு என்பது அதன் பொருள். பொதுவாக, சினம் என்பது ஒரு தவறான உணர்வுநிலைதான். பெரும்பாலான வேளைகளில், சினமும், சீற்றமும் மானிடரைக் குற்றப் பழிக்கு இட்டுச்செல்கின்றன என்பதுவும் உண்மைதான். இருப்பினும், கோபம் கொள்ளவேண்டிய வேளைகள் இருக்கின்றன. அவ்வேளைகளில் கோபம் கொள்ளாமல் இருப்பதுவும் தவறே என்பது இந்தப் புதிய ஆத்திச்சூடியின் பாடம்

அது உண்மைதான். எப்போது நாம் கோபம் கொள்ளவேண்டும்? நமக்கு தீமையோ, அநீதியோ இழைக்கப்பட்டால், அதைப் பொறுத்துக்கொள்வதும், அமைதி காப்பதும் சிறந்த பண்புகள். ஆனால், பிறருக்குத் தீமை, அநீதி நிகழும்போது அதைப் பார்த்துக்கொண்டு அமைதி காப்பது என்பது தவறு. அந்த நேரத்தில்தான் நமக்குக் கோபம் பொங்கி எழவேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கொள்ளும் சினம் அத்தகையதே. தொழுகைக்கூடத்தில் கை சூம்பிய மனிதரைப் பார்த்தபோது, இயேசுவின் பரிவுள்ளம் அவரைக் குணமாக்கத் துடித்தது. ஆனால், அங்கிருந்தவர்களோ ஓய்வுநாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று "குற்றம் சுமத்தும் நோக்குடன்... அவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்". அதுமட்டுமல்ல, ஓய்வுநாளில் நன்மை செய்வது, குணப்படுத்துவது முறையா? என்று அவர்களிடம் இயேசு கேட்டபோது, அவர்கள் பிடிவாத உள்ளத்துடன் "பேசாதிருந்தார்கள்". எனவேதான், இயேசு சினம் கொண்டார். அது நியாயமான சினம். அத்துடன், அந்த சினத்தின் விளைவாக அந்த மனிதரை இயேசு குணப்படுத்தினார். நாமும் நியாயமான சினம் கொள்வோமாக!

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். பிறருக்கு தீமையும், அநீதியும் இழைக்கப்படும்போதெல்லாம், நாங்கள் சினம் கொள்ளும் அருளைத் தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்..

- பணி. குமார்ராஜா

------------------------------------------------------------------------

இணையதள உறவுகளே

இயேசு சினம்கொண்ட ஒருசில நேரங்களில் இன்றைய நிகழ்ச்சிப் பகுதியும் ஒன்று. கோபமூட்டுவதற்கென்றே சிலர் முன் வரிசையில் வந்து அமர்ந்திருப்பார்கள். ஒரு வார்த்தை பிடி கிடைக்காதா என்று கவனமாக காத்திருப்பார்கள். அவர்கள் வாயிலிருந்து மருந்துக்கும் ஒரு நல்ல வார்த்தை வராது.அடுத்தவர்களின் வாயைக் கிண்டி கிளரி, பிரச்சனையை உண்டாக்கி,அருகில் இருப்பவனுக்கு எரிச்லையும் கோபத்தையும் உண்டாக்கி, நல்லது நடக்கவிடாமல் சாதுர்யமாக காரியத்தை தடுத்துவிடுவர்.

இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தின் மத்தியில், இயேசு சூம்பிய கையுடைய மனிதனை குணமாக்கும் முயற்சியில், இதயம் சூம்பிப்போன கூட்டத்தைப் பார்த்து சினம் கொள்கிறார். ஆயினும் இயேசு, நிதானமாக, பொருமையாக அதே வேளையில் தன் செயல்பாட்டில் திடமாக இருக்கிறார். கையை நீட்டச் சொல்லி குணப்படுத்துகிறார். அதன் பின் விழைவும் அவர் எதிர்பார்த்ததுதான். ஆனாலும் நல்லது செய்வதில் உறுதியாக இருக்கிறார்

நம்ம ஊர்களில், பங்குகளில் பார்க்கலாம் அல்லவா. இயேசுவின் மனநிலை, செயல்பாட்டில் உறுதி நம்மிலும் இருக்கட்டும். நல்லவைகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

-ஜோசப் லீயோன்

 

இயேசுவின் சினம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு மனித உணர்வுகள் அனைத்தும் கொண்டிருந்தார். பாவம் தவிர மற்ற அனைத்திலும், நம்மைப் போல வாழ்ந்தார். அவரது இதயத்திலிருந்து கோபம் கொப்புளித்த ஒரு காட்சியைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம். மனித நேயத்துடன் பார்த்தால், கை சூம்பிய மனிதரை இயேசு குணப்படுத்த வேண்டும் என்று தொழுகைக்கூடத்தில் இருந்த மக்கள் இயேசுவிடம் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அவர் ஓய்வுநாளில் குணப்படுத்துவாரா என்று குற்றம் காணும் மனநிலையில் அவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர் அவர்கள். எனவேதான், அவர்களது கடின இதயத்தை, மனித நேயமற்ற அரக்க இதயத்தை, நன்மை செய்வதைக்கூட குறையாகப் பார்க்கும் நோய்த்தன்மை கொண்டவர்களைக் கண்டபொழுது, இயேசு சினம் கொண்டார். அவர்களது பிடிவாதக் குணத்தைக் கண்டு வருந்தினார். இயேசுவிடமிருந்து இந்த இரண்டு பண்புகளையும் கற்றுக்கொள்வோம்:

  1. தீமை செய்வோரை, நன்மைகளைத் தடுக்க நினைப்போரை, இதயத்தில் இரக்கமே இல்லாதவர்களைக் கண்டால், கோபம் கொண்டு பொங்கியெழ வேண்டும்.
  2. அவர்களின் பிடிவாதம், தன்னலம், குறை காணும் மனநிலை இவற்றைக் கண்டு வருந்தவேண்டும். இரக்கம் கொள்ளவேண்டும்.

மன்றாடுவோம்: நேர்மையின் நாயகனே ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் அநீதி கண்டு சினம் கொள்ளும் ஆர்வத்தைத் தாரும். பிறரின் பிடிவாத, தன்னல குணத்தைக் கண்டு வருந்தவும், அவர்கள்மீது இரக்கம் காட்டவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

-----------------------------

 

''அவர்களிடம், 'ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா?
உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை' என்று இயேசு கேட்டார்'' (மாற்கு 3:4)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- யூத மக்கள் ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள். யூத சமய வழக்கில் ஓய்வு நாள் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. எந்த வழக்கமாக இருந்தாலும் அது மக்களுக்கு நன்மை பயக்க வேண்டுமே ஒழிய தீமை பயத்தலாகாது. மனித உயிரை மேம்படுத்துவதற்கு ஓய்வு நாள் துணைசெய்ய வேண்டும்; மனித உயிருக்கு எதிராக அது அமைந்துவிடலாகாது. இந்த உண்மையை இயேசு எடுத்துரைக்கிறார். நோயுற்ற மக்களுக்கு நலம் கொணர்வது ஓய்வு நாளை மீறியதாகக் கருதப்பட்டால் இயேசு ஓய்வு நாளை மீறத் தயங்கமாட்டார். நன்மை செய்வதற்குக் குறிப்பிட்ட நேரம் காலம் வேண்டும் என்ற தேவை இல்லை. எந்த நாளும் நேரமும் நன்மை செய்வதற்கு உகந்ததே.

-- சிலர் நல்ல நேரம் பார்த்து, எதை எப்போது செய்யலாம் என்று கணிப்பதில் குறியாயிருப்பார்கள். இயேசுவின் பார்வையில் நல்ல நேரம் கெட்ட நேரம் என்றெல்லாம் கிடையாது. எந்த நேரமும் நன்மை செய்வதற்கென்றே உள்ளது. ஆக, கோள்களையும் கிரகங்களையும் பார்த்து நல்ல நேரம் குறித்துச் செயல்படுகின்ற போக்கு சரியல்ல என நாம் அறிவுறுத்தப்பெறுகிறோம். காலம் என்பது கடவுளின் கைகளில் உள்ளது. நமக்குக் கடவுள் தருகின்ற காலம் அவருடைய கொடை. எனவே, நாம் கடவுள் தருகின்ற கொடைகளை நன்றியோடு ஏற்பதாக இருந்தால், எப்போதும் நன்மை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருப்போம். நேரம் காலம் பாராமல் எந்த வேளையிலும் நன்மை செய்ய முன்வருவோம். கடவுளின் காலம் மனிதரின் காலக் கணிப்பிலிருந்து வேறுபட்டது. மனிதப் பார்வையில் மதிப்பிடாமல் கடவுளின் பார்வையில் மதிப்பிட நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, காலங்களைக் கடந்த உம்மை எக்காலமும் போற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-----------------------

"நன்மை செய்வதா, தீமை செய்வதா?"

இயேசுவின் அன்புக்குரியவரே!

இதற்கு ஒரு பட்டிமன்றம் தேவையா? உறுதியாக நன்மை செய்வதுதான் என்று ஒருவாய்ப்பட எல்லோரும் சொல்வோம். ஆனால் இங்கு இவர்களுக்கு ஒரு பெரிய பட்டிமன்றம், கருத்தரங்கு, விழிப்புணர்வு முகாம் தேவைப்படுகிறதே. வாயைத் திறந்து "நன்மை செய்வதே" என்று சொல்ல வாய் வரவில்லையே. பேசாமல் மௌனம் அல்லவா சாதிக்கின்றனர். இயேசுவி;ன் கேள்விக்குப் பதில் வரவில்லையே. "ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்." (மாற் 3:4)

இயேசு இவர்களிடமிருந்து பதிலையோ சம்மதத்தையோ பாராட்டையோ எதிர்பார்க்கவில்லை. நன்மை செய்வதில் பின்வாங்கவும் இல்லை. கை சூம்பியவரை நோக்கி, கையை நீட்டும் என்றுச் சொல்லி நலமளிக்கிறார்.நல்லதைச் செய்ய யாருடைய சம்மதத்தையும் பாராட்டுதலையும் பெற வேண்டிய அவசயம் இல்லை என்பதையும், யாருடைய நிர்பந்தத்திற்கும் பணிய வேண்டியதில்லை என்பதையும் நமக்கு உணர்த்துகிறார்.

அந்த பரிசேயர்களைப்போல நாம் மௌனம் சாதிக்கும் நேரங்கள் எவை? அதற்கு காரணம் என்ன? நாம் விரும்பாத ஒருவருக்கு அந்த நல்லது நடப்பதாலா!. அந்த பணக்காரனுக்கு எதிராக, ஆளும் வர்க்கத்திற்கு எதிராக என்னால் குரல் கொடுத்தால் எனக்கு இழப்பு என்பதாலா? நமக்கு ஏன் வம்பு என்ற பயமா?! நல்லவை எங்கு,யாருக்கு, எப்போது நடந்தாலும் குரல் கொடுப்போம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

:- ஜோசப் லியோன்