முதல் வாசகம்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 6-9;19: 1-7

அந்நாள்களில் தாவீது பெலிஸ்தியனைக் கொன்றபின், வீரர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலைச் சந்திக்க வந்தனர்; அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர். அப்பெண்கள் அப்படி ஆடிப்பாடுகையில், "சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்" என்று பாடினர். இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை; அவர் மிகவும் சினமுற்று, "அவர்கள் "தாவீதுக்குப் பதினாயிரம் பேர்" என்றனர். எனக்கோ "ஆயிரம் பேர் மட்டுமே" என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்றுதான்!" என்று கூறினார். அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கண்கொண்டு பார்க்கலானார். தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தம் மகன் யோனத்தானிடமும் தம் அலுவலர் எல்லாரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதின்மீது மிகுதியான அன்பு கொண்டிருந்தார். ஆதலால் தாவீதைப் பார்த்து யோனத்தான், "என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார்; ஆதலால் எச்சரிக்கையாய் இரு, காலையிலேயே புறப்பட்டு மறைவான ஓர் இடத்திற்குச் சென்று ஒளிந்து கொள். நீ வெளியில் இருக்கும் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்து கொண்டு, உன்னைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்; அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன்" என்றார். யோனாத்தான் தாவீதைப்பற்றித் தம் தந்தை சவுலிடம் நல்ல விதமாகப் பேசி, "அரசர் தம் அடியான் தாவீதின் பொருட்டுப் பாவம் செய்ய வேண்டாம்; ஏனெனில் அவன் உமக்குத் தீங்கு ஏதும் செய்ததில்லை; மேலும் அவனுடைய செயல்கள் உம் அரசில் மிகவும் பயனுடையனவாய் இருந்தன; அவன் தன் உயிரை ஒரு பொருட்டாய் எண்ணாது அப்பெலிஸ்தியனைக் கொன்றான்; அதனால் ஆண்டவர் இஸ்ரயேலர் எல்லாருக்கும் பெரும் வெற்றியை அளித்தார். நீர் அதைக் கண்டுமகிழ்ச்சியுற்றீர்;அப்படியிருக்க எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற இரத்தத்திற்கு எதிராக நீர் ஏன் பாவம் செய்ய வேண்டும்?" என்று கூறினார். சவுல் யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார்; அதனால் சவுல், "வாழும் ஆண்டவர்மேல் ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான்" என்றார். பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவருக்குக் கூறினார்; மேலும் யோனத்தான் தாவீதைச் சவுலிடம் அழைத்துச் செல்ல, முன்பு போலவே தாவீது அவரது பணியில் ஈடுபட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 56: 1-2. 8-9. 10. 11-12

பல்லவி: கடவுளையே நம்பியுள்ளேன்; எதற்கும் நான் அஞ்ச மாட்டேன்.

1 கடவுளே, எனக்கு இரங்கியருளும்;
ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்;
அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.
2 என் பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்துகின்றனர்;
மிகப் பலர் என்னை ஆணவத்துடன் எதிர்த்துப் போராடுகின்றனர். -பல்லவி

8 என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்;
உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்;
இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?
9 நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர். -பல்லவி

10 கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்;
ஆண்டவரின் வாக்கை நான் புகழ்கின்றேன். -பல்லவி

11 கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்;
மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்?
12 கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை;
உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

மாற்கு 3:7-12

பொதுக்காலம், வாரம் 2 வியாழன்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-12

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத்திலிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர். மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார். ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந் தனர். தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ``இறைமகன் நீரே'' என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

அலங்கோல ஆர்வமற்றவர்களாய்

சிறந்த நடிகர்கள், அரசியல் தலைவர்கள் மதத்தலைவர்கள் திடீரென்று தெருக்களில் சாதாரணமாக உலா வருகிறார்களென்றால், மக்கள் கூட்டம் அவர்களை வேடிக்கை பார்க்க முன்வருவார்கள். ஒருசிலர் ஆர்வத்தினால் பாதுகாப்புப் படையை மீறி தொட்டுப்பார்க்க முயற்சி செய்வார்கள். இத்தகைய நபர்கள் ஒருவேளை இந்த மண்ணை விட்டு செல்கிறார்களென்றால், அதிக எண்ணிக்கையில் மக்கள் இறுதி ஊர்வலத்திலே தங்கள் அன்றாடப் பிழைப்புகளை விட்டு பங்கெடுப்பார்கள். காரணம் அவனிடமிருக்கின்ற ஆர்வம். இத்தகைய உணர்ச்சி ரீதியாக எழும் ஆர்வம் எத்தகைய கட்டுப்பாட்டிற்கும் அடங்காது என்று உளவியர் சிந்தனையாளர் சிக்மண்ட் ப்ராய்டு கூறுகின்றார்.

அத்தகைய ஒரு ஆர்வமான கூட்டத்தினைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கின்றோம். இந்த கூட்டம் உணர்ச்சியினால் இயேசுவை தேடி வரவில்லை. மாறாக உள்ளார்ந்த வாழ்வினால் இயேசுவை தேடி வந்தவர்கள். ஏனென்றால் இயேசுவிடமிருந்து புதுவாழ்வு (சுகமளித்தல்) பெற்றவர்களின் அனுபவத்தைப் புரிந்துகொண்டு தாங்களும் அதே அனுபவத்தைப் பெற வந்தவர்கள். ஏனென்றால் புதுவாழ்வு பெற விரும்பியவர்கள் உள்ளார்ந்த வாழ்வு பெற்று சமுதாயத்திலே சுதந்திர வாழ்வு வாழ எண்ணியவர்கள். ஏனென்றால் நோய்வாய்பட்டவர்கள் சமுதாயத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பது யூதர்களின் சட்டம். ஆர்வம் அழிந்து விடும், உள்ளார்ந்த வாழ்வு புதுவாழ்வினைக் கொடுக்கும் என்ற கருத்தினை இயேசுவின் புதுமை பயணம் கற்றுக்கொடுக்கின்றது.

நான் எப்படிப்பட்ட ஆர்வத்தினை பெற்றிருக்கிறேன். உணர்ச்சி ரீதியிலா (அ) உள்ளார்ந்த அர்த்தத்திலா?
- அருட்பணி. பிரதாப்

======================

19.01.2023 – மாற்கு 3: 7 – 12
ரசிகர்களாக...

சினிமா நடிகரின் திரைப்படம் அதிக நாட்கள் அரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டதென்றால் அவருக்கென்று பல ரசிகர்கள் தோன்றுவர். இது உணர்ச்சியின் ரீதியில் வந்த ரசிகர்கள். ஒருவன் சமுதாயத்தில் நடக்கின்ற கொடுமைகள் பற்றி தெரிந்து, கொடுமைப்படுத்துபவர்களை எதிர்த்து செயல்பட்டான் என்றால், அவனுக்கும் குறுகிய காலத்தில் ரசிகர்கள் உருவாகுவார்கள். இது எழுச்சி ரீதியாக வந்த ரசிகர்கள். ஒருவன் பல ஆண்டுகளாக ஆட்சி நடத்தி மக்களின் அடிப்படை வசதிகளைக் கூட பூர்த்தி செய்யவில்லையென்றாலும் கூட ரசிகர்கள் தோன்றுவார்கள். இது ஆதிக்கத்தின் ரீதியாக எழுந்த ரசிகர்கள். இந்த ரசிகர்களெல்லாம் தன்னுடைய புறப் பார்வையினால் தோன்றுகிறார்கள். இது எளிதில் மறையக்கூடிய பார்வை. ஆனால் அகப்பார்வையினால் தோன்றக்கூடிய ரசிகர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள்? வாருங்கள் உள்ளே போகலாம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் ரசிகர்கள் இயேசுவின் வல்லமையை தங்கள் அகப்பார்வையால் உணர்ந்தவர்கள். ஏனென்றால் கலிலேயா என்பது இயேசுவின் பணிவாழ்வின் முக்கியமான பகுதி. பல குணமளிக்கும் அதிசயங்களை செய்திருக்கின்றனர். அனைத்துமே இயேசுவின் வல்லமையால் நடந்தேறின. இதனை அவர்கள் கண்களால் காணவில்லை, மாறாக குணமளிக்கப்பட்டதை தங்கள் உடலில் உணர்கின்றார்கள். அதனைக் கேள்விப்பட்டு இன்னும் அநேக ரசிகர்கள் வந்திருந்தார்கள். இயேசு நம்முடைய சமுதாய நபர்கள் தங்கள் ரசிகர்களை அடித்து ஒதுக்குவது போன்று ஒதுக்கவில்லை. மாறாக, படகில் ஏறி மொத்தமாக அவர்கள் மீது தன் ஆசி கூறி சுகம் கொடுக்கின்றார். அதனால் தான் அநேக ரசிகர்களை அவர் பெற்றிருந்தார்.

என்னுடைய ரசிகர் மன்றம் எதனைச் சார்ந்ததாக இருக்கிறது? அகப்பார்வையில் உருவான ரசிகனாக இருக்கின்றேனா? அல்லது புறப்பார்வையில் உருவான ரசிகனாக இருக்கிறேனா? அகப்பார்வையினால் நாம் ரசிகர்களாக மாறுவோம். அப்போது துன்பங்கள், துயரங்கள் வரும்போது நம்முடைய தலைவர் துணைநிற்பார்.

அருட்பணி. பிரதாப்

=======================

இயேசுவின் நற்செய்திப்பணி

இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு பணி உண்மையிலே நற்செய்தியை அறிவிக்கிற மக்களுக்கெல்லாம், சிறந்த உதாரணமாக திகழக்கூடிய பணி. இயேசு மக்கள் நடுவில் போதிக்கிறார். மக்கள் அவரது போதனையின் மகிமையில் கட்டுண்டு, உணவே வேண்டாம் என்ற அளவுக்குக்கூட அவர் பின்னால் செல்கிறார்கள். அவருக்கு அதிகாரவர்க்கத்தினரிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. இயேசு அவர்களை எதிர்க்கவில்லை. மாறாக, தனது பாணியை, இடத்தை மாற்றுகிறார். தேவைக்கு ஏற்றவாறு, நேரத்திற்கு ஏற்றவாறு தனது இலக்கை அடைவதில் புதிய, புதிய திட்டங்களை அவர் தீட்டுகிறார்.

இயேசுவின் பெயரைக் கேள்விப்பட்டு, ஏராளமான மக்கள் பிறநாடுகளிலிருந்து அவரைத்தேடி வருகிறார்கள். அவர்களுடைய முதன்மையான நோக்கம் தேவையை நிறைவேற்றிக்கொள்வதாக இருக்கிறது. அவர்கள் உடல் சுகவீனத்தோடு இருக்கிறார்கள். எப்படியாவது நல்ல உடல் சுகத்தைப் பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  இயேசுவைப் பார்த்தவுடன் அவர்கள் இயேசுவைத் தொட முண்டியடித்துச் செல்கிறார்கள். இயேசு அவர்களை சபிக்கவில்லை. அவர்களின் நிலையை உணர்கிறார். அவர்களைப் புரிந்து கொள்கிறார். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், உடல் சுகத்தோடு வாழ்வதிலும் அக்கறை கொள்கிறார்.

நற்செய்திப் பணி ஆற்றுகிறபோது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் நாம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். பல வேளைகளில் நாம் தியாக உள்ளத்தோடு பணியாற்றுகிறபோது, மக்களின் நடவடிக்கைகள், அவர்களின் சுயநலம் நமக்கு கோபத்தையும் அவர்கள் மீது வெறுப்பையும் கொண்டுவரலாம். ஆனால், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, தேவைக்கேற்ப, சரியான திட்டமிடலோடு நமது பணியைச் செய்ய வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளின் அருகாமையில் இருக்க….

தீய ஆவிகள் இயேசுவைக்கண்டதும், ”இறைமகன் நீரே” என்று கத்தியதாக நற்செய்தி கூறுகிறது. ”இறைமகன்” என்ற வார்த்தையின் பொருளை இங்கு நாம் பார்ப்போம். இறைமகன் என்கிற வார்த்தை, மத்திய கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த மக்களால், அடிக்கடி பயன்படுத்தப்பட்ட வார்த்தை. எகிப்து தேசத்தின் அரசர்கள் ”இறைமகன்” என்று அழைக்கப்பட்டனர். அகுஸ்துஸ் சீசர் முதல் ஒவ்வொரு உரோமை அரசர்களும் ”இறைமகன்” என்று அழைக்கப்பட்டனர்.

பழைய ஏற்பாட்டில் நான்கு வழிகளில் இந்த வார்த்தை பயன்படுகிறது. 1. வானதூதர்கள் கடவுளின் மகன்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். தொடக்க நூல் 6: 2 ல் ”மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப்புதல்வர் கண்டு…. ” என்று பார்க்கிறோம். 2. இஸ்ரயேல் நாடு கடவுளின் மகனாகக் கருதப்படுகிறது. ஓசேயா 11: 1 ”எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்”. இங்கே இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததும், அவர்களைக் கடவுள் அழைத்து வந்ததும் தெரியப்படுத்தப்படுகிறது. 3. ஒரு நாட்டின் அரசர், கடவுளின் மகனாக பார்க்கப்படுகிறார். 2சாமுவேல் 7: 14 ”நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான்”. 4. நல்ல மனிதர்கள் கடவுளின் பிள்ளையாக இருக்கிறார்கள். சீராக் 4: 10 ”கைவிடப்பட்டோருக்குத் தந்தையாய் இரு. அப்போது நீ உன்னத இறைவனின் பிள்ளைபோல் இருப்பாய்”. ஆக, யாரெல்லாம் கடவுளோடு நெருங்கிய தொடர்பில், கடவுளுக்கு அருகாமையில் இருக்கிறார்களோ, அவர்கள் கடவுளின் பிள்ளைகள்.

திருமுழுக்கு பெற்றுள்ள நாம் அனைவருமே கடவுளுக்குச் சொந்தமானவர்கள். நாம் அனைவரும் கடவுளுக்கு அருகாமையில் இருப்பதற்கு, நெருங்கிய உறவோடு வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம். நாம் கடவுளுக்கு அருகாமையில் இருக்கிறோமா? கடவுளோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறோமா? சிந்தித்து செயல்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவே மெசியா!

தீய ஆவிகள் இயேசு முன்னால் வந்து, ‘இறைமகன் நீரே’ என்று கத்தியபோது, இயேசு தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக்கண்டிப்பாய்ச்சொன்னதாக நற்செய்தி கூறுகிறது. எதற்காக இயேசு தன்னுடைய அடையாளத்தை மறைக்க வேண்டும்? அவர் கடவுளின் மகன் என்று தெரிவதால் இன்னும் அதிகம் பேர் அவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு ஏதுவாகத்தானே இருக்கும். பின் ஏன் இயேசு அதை விரும்பவில்லை? தான் மெசியா, கடவுளின் மகன் என்று மறைப்பதால் அவருக்கு என்ன இலாபம்?

இந்தக்கேள்விகள் இந்தப்பகுதியை வாசிக்கும்போது நமக்குள்ளாக எழுகின்ற கேள்விகள். இயேசுவின் காலத்திலே மக்கள் உரோமையர்களுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். தங்களை மீட்க கடவுள் மெசியாவை அனுப்புவார், அவர் வந்து நம்மை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகமாக இருந்தது. மெசியாவைப்பற்றிய அவர்களின் புரிதலும் ‘வலிமையுள்ள அரசர்’ என்ற பார்வையாக இருந்தது. இயேசுதான் மெசியா என்ற செய்தி பரவினால், அவர் பின்னால் அணிவகுத்து நிற்க, போரிட மக்கள் தயாராக இருந்திருப்பார்கள். இது தேவையில்லாத பிரச்சனைகளை, குழப்பங்களை நாட்டிலே உருவாக்கும். இயேசு மெசியா தான். ஆனால், மக்கள் எதிர்பார்ப்பது போன்ற மெசியா அல்ல: அவர் அன்பின் மெசியா, மன்னிப்பு வழங்கும் மெசியா, இரக்கத்தை வெளிப்படுத்தும் மெசியா. இப்படிப்பட்ட புரிதலை மக்களுக்குப் புரிய வைக்க இன்னும் காலம் தேவை என்பதை இயேசு உணாந்திருக்க வேண்டும். தன்னால் தேவையில்லாத குழப்பங்கள் உருவாவதை இயேசு விரும்பவில்லை. எனவேதான், மக்களுக்கு மெசியாவைப்பற்றிய சரியான பார்வையை கற்றுக்கொடுக்கும் வரை, தன்னை வெளிப்படுத்த வேண்டாமென இயேசு கட்டளையிடுகிறார்.

இயேசு புகழுக்காக வாழவில்லை, மக்கள் போற்ற வேண்டும் என விரும்பவில்லை. மாறாக, கடவுளின் அன்பு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என விரும்பினார். நாமும் நம் வாழ்வின் மூலம் கடவுளின் அன்பை மற்றவர்கள் உணரச்செய்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

 

கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு...

இயேசு வல்ல செயல்கள் பல ஆற்றியதால் மக்களிடையே பிரபலம் அடைந்தார். எனவே, "கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்" என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். "மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப் பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்" என்றும் சொல்கிறார் நற்செய்தியாளர் புனித மாற்கு. அடுத்த வரியில் அவர் சொல்லும் தகவலையே நமது இன்றைய சிந்தனைக்காக நாம் எடுத்துக்கொள்வோம்.

"மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார்". இங்கே இயேசு தமது உடல் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை, ஆனால், இதன்வழியாக ஒரு படிப்பினையை நமக்குத் தருகின்றார். மக்கள் பெருந்திரளாகக் கூடும்போது, உடல் நெருக்கத்தைவிட, மன நெருக்கம், மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக, அவர்கள் "தம்மைப் பிடித்துக்கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்" (யோவா 6:15) என்று யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். இத்தகைய ஒரு நெருக்குதலைத் தவிர்க்கவே இயேசு முன்னேற்பாடு செய்கின்றார்.

புகழும், பாராட்டும் நம்மை நெருக்கிவிடாதவாறு, நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என்று கற்றுத் தருகிறார் மாற்கு நற்செய்தியாளர்.

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, மக்கள் கூட்டம் உம்மை நெருக்கிவிடாதவாறு காத்துக்கொண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். புகழ்ச்சியும், பாராட்டும் எங்களை நெருக்கி, உம்மிடமிருந்து எங்களைப் பிரித்துவிடாதவாறு எங்களைக் காத்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

ணையதள உறவுகளே

இயேசுவுக்குப் பின்னால் ஒரு பெரிய கூட்டம். குணமானவர்கள் ஒரு கூட்டம். குணம் பெற வேண்டும் என்ற ஆசையில் ஒரு கூட்டம். வியப்பில் ஒரு கூட்டம். வில்லங்கத்திற்கென்றே ஒரு கூட்டம். அர்ப்பணிப்போடு ஒரு கூட்டம். விசித்திர ஆசையோடு ஒரு கூட்டம். இவ்வளவு ஒரு பெரிய கூட்டம் அவரை மணிக்கணக்காக, நாட்களாக, சோறு தண்ணி இல்லாமல் பின்தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் இந்த இயேசுவோ, யாரும் தன்னைப் பெரிய தலைவனாகவோ அரசனாகவோ கற்பனையில் கூட நினைத்து விடக் கூடாது என்பதற்காக, படகு ஒன்றை முன்னேற்பாடாக  வைத்திருக்கச் சொல்லி,பகட்டான பதவி வாழ்வுக்கான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கிறார்.
இன்றைக்கு,  சொந்தக்காரன் சொக்காரனசு;, ஊர்க்காரன் சாதிக்காரன் என்று பத்துபேரை வைத்துக்கொண்டு பதவிக்காக வருகிற வரத்து, சொல்லி மாளாது. காசு கொடுத்தாகிலும் கூட்டத்தைக் கூட்டி, அதைக் கும்பலாக்கி எப்படியாவது நாற்காலியில் உட்கார்ந்துவிட வேண்டும் என்று அரசியல்வாதியும் ஆன்மீகவாதிகளும் அலைகின்ற அலைச்சல், சொல்லவே வேண்டாம். இந்த மாதிரி தலைவர்கள் என்ன சாதிப்பார்கள்?

கூட்டத்தாலும் கும்பலாலும் உருவான தலைவர்கள் வேண்டாம். தெளிவான சிந்தனையும் தீர்க்கமான முடிவும் திடமான செயல்பாடும் உள்ள தலைவர்கள் ஆயர்கள் உருவாக வேண்டும்.

-ஜோசப் லீயோன்

-----------------------

 

கூட்டம் நெருக்கிவிடாதபடி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் மனநிலையைப் படம் பிடித்துக்காட்டும் ஒரு சிறிய வசனத்தை இன்று தியானிப்போம். பெருந்திரளான மக்கள் இயேசுவைத் தேடிவந்தபோது, மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு இயேசு தம் சீடருக்குச் சொன்னார் என்று வாசிக்கிறோம்.

இயேசு சென்ற இடமெல்லாம் நன்மைகள் செய்தார். நோயாளர்களைக் குணமாக்கினார். பிணிகளைப் போக்கினார். இந்தச் செய்தியெல்லாம் பரவியபோது, இயல்பாகவே ஏராளமான மக்கள் இயேசுவைத் தேடிவந்தனர். ஆனால், இயேசு இதையெல்லாம் அறிந்திருந்தார் எனவேதான், முன்னேற்பாடாக படகு ஒன்றை வைத்திருக்கச் சொன்னார். இயேசுவிடம் ஞானமும், இறைப் பற்றும் இருந்தன, எனவே, மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தடுத்துக்கொண்டார். மக்களின் புகழ்ச்சியும், வணக்கமும் தம்மைத் தாக்கிவிடாதவாறு தற்காத்துக்கொண்டார். அத்தகைய ஆன்மீக விழிப்புணர்வை நாமும் பெற மன்றாடுவோம்.

மன்றாடுவோம்: தாயும் தந்தையுமான இறைவா, எங்களுக்கு ஞானத்தைத் தந்தருளும். மக்களின் பாராட்டும், புகழ்ச்சியும் எங்களை ஏமாற்றிவிடாதவாறும், உம்மை விட்டு எங்களைப் பிரிக்கமுடியாதவாறும் எங்களைக் காத்துக்கொள்ளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்

--: அருள்தந்தை குமார்ராஜா

-----------------------------

 

''பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத்
தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்'' (மாற்கு 3:10)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- நோயுற்ற மக்களுக்கு இயேசு குணமளித்ததை மாற்கு நற்செய்தி விரிவாக எடுத்துரைக்கிறது. இயேசுவின் பணியில் மிக முக்கியமான கூறு அவர் மக்களுக்கு நலமளித்ததே என உறுதியாகக் கூறலாம். அவரைத் தேடி நலம் பெற வந்த மனிதர் தம்மில் குறையிருப்பதை உணர்ந்தனர். எனவே, தங்களுடைய குறையை நீக்கி நிறைவளிக்க வல்லவர் இயேசு என அவர்கள் நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. நம்மில் குறையிருப்பதை நாம் கண்டுகொள்ளத் தவறினால் அக்குறையிலிருந்து விடுபடுவதற்கான எண்ணமே நம்மில் எழாது. ஆனால் இயேசுவைத் தேடி வந்த மக்கள் இயேசுவின் வல்லமையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இயேசுவை அணுகிச் சென்று, அவரை நேரடியாகச் சந்தித்து அவரோடு உரையாட வேண்டும் என்னும் ஆவல் பலரிடம் இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், எப்படியாவது இயேசுவைத் தொட்டுவிட்டால் போதும் தங்களுக்கு நலம் கிடைக்கும் என மக்கள் நினைத்தனர்.

-- இவ்வாறு இயேசுவைத் தொட்டதும் தங்களுக்கு நலம் கிடைக்கும் என மக்கள் நம்பியது முழு நம்பிக்கையின் வெளிப்பாடு எனக் கூறுவதற்கில்லை. எனினும் நம்பிக்கையின் தொடக்கம் அங்கே உள்ளது எனலாம். நம்பிக்கை என்பது உள்ளத்தில் உறுதியான பிடிப்புக் கொண்டு, கடவுளைப் பற்றிக்கொள்வதில் அடங்கும். இத்தகைய பற்றுறுதி மக்களிடம் இருந்ததால் அவர்களுக்குக் கடவுள் இயேசு வழியாக நலம் அளித்தார். ஆனால் இயேசு வழங்கிய நலன் உடலைச் சார்ந்தது மட்டுமல்ல, உள நலமும் ஆன்ம நலமும் இயேசு நமக்குக் கொடையாக அளிப்பதே. இயேசுவைத் தொடவும் அவரால் தொடப்படவும் வேண்டும் என்றால் நாமும் அவரை அணுகிச் செல்ல வேண்டும். அப்போது நாம் கடவுளின் வல்லமையை நம் வாழ்வில் உணர்ந்தறிவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்களைத் தொட்டு நலமாக்கியருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

-------------------------

.. ..அவரைத் தொடவேண்டுமென்று .. .. ..

இயேசுவின் அன்புக்குரியவரே!

தாய் தன் குழந்தையைத் தொட்டு அணைக்கும்போது புனிதமான அன்பை பகிர்ந்தளிக்கிறாள். பாதுகாப்பைப் பரிமாறிக்கொள்கிறாள். அந்த அன்பு குழந்தைக்குத் தெம்பு கொடுக்கிறது.அது மருந்தாகிறது, உணவாகிறது. புனிதமான, கலப்படமற்ற தொடுஉணர்வு, குழந்தைக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இதேபோல உடலுக்கும் உள்ளத்துக்கும் உணவாகிறது, மருந்தாகிறது.

நோயுற்றோர் அனைவரும் இயேசுவைத் தொடவேண்டுமென்று இயேசுவின்மீது விழுந்துகொண்டிருந்த இந்த நற்செய்தி காட்சியிலும் இதே உணர்வு வெளிப்படுவதைக் காண்கிறோம்.பெருங்கூட்டம் இயேசுவின் மேல் விழுந்து அவரைத் தொட்டது. தொட்ட யாவரும் எல்லாவித நோயிலிருந்தும் குணமடைந்தனர். இயேசுவைத் தொட்ட யாவரும் குணமடைந்தனர். 'அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்" (லூக் 8 :44) இயேசு தொட்ட அனைவரும் குணமடைந்தனர். "இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று"(மத்8 :15) "அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" (மத் 8 :3)" கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்"(மத் 9 :29)அவர்களைத் தொட்டு," எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்"(மத் 17 :7, மத் 20 :34) நாம் அவரைத் தொட்டாலும் அவர்நம்மைத் தொட்டாலும் நாம் அதன் பலனைப் பெறுகிறோம்.

கைகளால் இயேசுவைத் தொடும்போதும், செபத்தில் இதயத்தில் இயேசுவைத் தொடும்போதும், நற்கருணை வாங்கும்போது இயேசுவைத் தொடும்போதும் இயேசுவின் தெய்வீக ஆற்றல் இங்கு பரிமாறப்படுகிறது. அது உணவாகிறது, மருந்தாகிறது. நாம் நலமடைகிறோம்,வலுவடைகிறோம்.

இயேசுவைத் தொடுவோம். இயேசு நம்மைத் தொடும் நிலையில் வைத்துக்கொள்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

:- ஜோசப் லியோன்