முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 1: 1-4,11-12,19,23-27

அந்நாள்களில் சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள்கள் தங்கினார். மூன்றாம் நாள், சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடைகளோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான். "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று தாவீது அவனை வினவ, "நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன்" என்று அவன் பதில் கூறினான். ``என்ன நடந்தது? என்னிடம் சொல்" என்று தாவீது கேட்க, அவன், "வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்துவிட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்'' என்று கூறினான். தாவீது தம் ஆடைகளைப் பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர். சவுலுக்காகவும், அவருடைய மகன் யோனத் தானுக்காகவும், ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்ரயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலைவரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்கள். "இஸ்ரயேலே! உனது மாட்சி உன் மலைகளிலே மாண்டு கிடக்கின்றது! மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! சவுல்! யோனத்தான்! அன்புடையார், அருளுடையார்! வாழ்விலும் சாவிலும் இணைபிரியார்! கழுகினும் அவர்கள் விரைந்து செல்வர்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்! இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்! செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே! பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே! போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்ந்துபட்டனர்! உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்! சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என்மீது நீ பொழிந்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ! மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழிந்தன!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 80: 1-2. 4-6
பல்லவி: ஆண்டவரே, எம்மை மீட்குமாறு உம் முக ஒளியைக் காட்டியருளும்!

1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2 எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! -பல்லவி

4 படைகளின் கடவுளாம் ஆண்டவரே! உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?
5 கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்; கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர்;
6 எங்கள் அண்டை நாட்டாருக்கு எங்களைச் சர்ச்சைப் பொருள் ஆக்கினீர்; எங்கள் எதிரிகள் எம்மை ஏளனம் செய்தார்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

மாற்கு 3:20-21

ஆண்டின் பெதுக்காலம் வாரம் 2 சனி;

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 20-21

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

வேறுபாடு வேறுபடுத்திவிடுகிறது

கிரிக்கெட் போட்டியிலே ஒரு பந்து வீச்சாளர் சற்று வித்தியாசமாக, அனைத்து விதிகளுக்கும் கட்டுப்பட்டு வீசினாரென்றால், கிரிக்கெட் வாரியம் அவiரை வேறுபடுத்தி அவரின் வாழ்வை கேள்விக்குறியாக்கி விடுகிறது. சமுதாயத்தின் அவல நிலைகளை தனி ஒருவன் வித்தியாசமான முறையிலே (ஊடக உதவியினால்) எடுத்துரைத்தானென்றால், இந்த சமுதாயம் அவனை வேறுபடுத்திக் காட்டி இயற்கை எய்த வைக்கிறது. இந்த அவல நிலைகள் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

2000 ஆண்டுகளுக்கு முன்னும் இதே நிலை இருந்திருக்கிறதென்று இன்றைய நற்செய்தி வாசகத்திலே நாம் பார்க்கின்றோம். இயேசுவை அனைவருமே ளுpனைநசஅயn ஆக பார்த்தார்கள். ஏனென்றால் உரோமை பேரரசை எதிர்க்கின்றார், உணவின்றி வருபவர்களின் பசி தீர்க்கின்றார், நோயினால் வருபவர்களுக்கு சுகம் கொடுக்கின்றார், எளிய மக்களுக்கு எளிமையான முறையில் போதிக்கின்றார், இறுதியிலே ஒதுக்கப்பட்டவர்களின் இல்லத்தில் சென்று இன்புற உண்கின்றார். இத்தகைய செயல்பாடுகள் மற்றவர்களால் செய்ய முடியவில்லை. இயேசு இத்ததகைய செயல்பாடுகள் அனைத்தையுமே கடவுளின் வல்லமையினால் செய்து காட்டினார். அதனால்தான் மதிமயங்கியவர் என்ற முனைவர் பட்டத்தினை இந்த சமுதாயம் அவருக்கு அளித்திருக்கின்றது.

நம் மத்தியில் நல்ல காரியங்களை செய்பவர்களை வேறுபடுத்திப் பார்க்கின்றோமா? (அ) அவர்களோடு பணிதொடர தோள் கொடுக்கின்றோமா? சிந்திப்போம்.
- அருட்பணி. பிரதாப்

======================

21.01.2023 – மாற்கு 3: 20 – 21
மயக்கமா? தயக்கமா?

சமுதாயத்தில் பிரபலமாக வளர்ந்து கொண்டிருப்பவர்களுடைய வாழ்வில் எப்போதுமே சற்று தயக்கம் இருக்கும், எப்போது நமது சொகுசு வாழ்விற்கு ஆபத்து வரும் என்று. ஏனென்றால் தாங்கள் சோ்த்து வைத்துள்ள அபரீதமான சொத்தால் நிச்சயம் ஆபத்து வரும் என்பது உறுதி. அது போல ஒருவன் அரசியலில் ஒரு வாழ்வினைக் கொண்டு வர முயலுகிறபோதும், மக்கள் மீது இருந்து வருகின்ற ஏழ்மை என்ற நாற்றத்தினால் மயங்கி ஆக்கப்பூர்வமாக பேசுகின்ற போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் தயங்குகிறவன் எப்படியாவது பிழைத்துக் கொள்வான், மயங்குகிறவன் இந்த சமுதாயத்திலிருந்து புறந்தள்ளப்படுவான்.

இதனைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கிறோம். இயேசு தன் வாழ்வில் ஒருபோதும் தயக்கம் காட்டவில்லை. அவரைப் பலதரப்பட்ட மக்கள் பின்தொடர்ந்தார்கள். இவர் உணவு அளிப்பார் என்று ஒரு குழுவினர் பின்தொடர்ந்தனர். மற்றொரு குழுவினர் இவர் நம் வாழ்வில் ஏதாவது புதுமைகளைச் செய்வார் என்று பின்தொடர்ந்தனர். மற்றொரு வகையினர் இவர் நமக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தருவார் என்று பின்பற்றினர். இப்படிப்பட்ட மக்கள் மீது இருந்து வந்த அந்த ஏழ்மை, அடிமை, நோய், ஒடுக்கப்பட்டமை என்கிற நாற்றத்தினால் தான் அவர் மதிமயங்கி விடுகின்றார். இன்றைய சமுதாய பார்வையின்படி அவர் மதிமயங்கவில்லை. ஏனென்றால் அன்றைய சமுதாயத்தில் தச்சு வேலை என்பது அவ்வளவு மதிப்புமிக்கது, அந்த அளவிற்கு வருவாய் தரக்கூடியது. பிறகு எதற்காக அவர் மதிமயங்க வேண்டும்?

என்னோடு இருக்கின்ற நண்பர்கள் பசியினால் வாடும்போது நான் அவர்கள் மீது மயக்கம் கொண்டு, அவர்களுக்கு தெளிவு கொடுக்கிறேனா? அல்லது தயக்கத்தோடு ஒதுங்கிச் செல்கிறேனா? சிந்திப்போம். ஆண்டவரில் மயக்கம் கொள்வோம்.

அருட்பணி. பிரதாப்

==============================

சீடத்துவ வாழ்க்கை

இயேசுவைப்பின்பற்ற விரும்பும் சீடர்கள் அவர்களுடைய வாழ்வில் எதைப்பற்றிக்கொண்டு வாழக்கூடாது என்பதை, இன்றைய நற்செய்த மூலமாக நமக்கு அறிவிக்கிறார். 1. பாதுகாப்பு. இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்கள் அனைவருமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாதுகாப்பிற்கு ஒரு வீடு, ஒரு குடும்பம், ஒரு வேலை என்று, வாழ்வை பாதுகாப்போது எண்ண நினைக்கிறவர்கள், இந்த உலகத்தில் வாழ்கிற மக்கள். ஆனால் இயேசு இதனைக் கடந்து நிற்கிறார். தனக்கென்று, எந்த ஒரு பாதுகாப்பான வேலையும் தேவை இல்லை, என்று கடவுளின் பராமரிப்பில் முழுமையான நம்பிக்கை வைக்கிறார்.

2. எதிர்ப்பு. உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் விழுமியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. ஏனென்றால் எதிர்ப்பசை் சம்பாதிக்க பயப்படுகிறார்கள். தங்களுக்கு எந்த பிரச்சனையும் வராத இடத்தில், பாதுகாப்பாக இருப்பதற்கு ஆசைப்படுகிறார்கள். இதனைச் சொன்னால், எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும், எனவே, இதனை எதிர்க்க வேண்டியதில்லை. நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு? என்று, யாரையும் பகைத்துக்கொள்ள விரும்புவது கிடையாது. இயேசு அப்படி வாழவில்லை. உண்மையை உரக்கச் சொல்கிறார். துணிந்து சொல்கிறார். அதற்கு எத்தகைய எதிர்ப்பையும் ஏற்றுக்கொள்கிறார். 3. அடுத்தவரின் பார்வை. மற்றவர் என்ன நினைக்கிறார்கள்? என்னை எப்படிப்பார்க்கிறார்கள்? நான் செய்வதை, சரியென்று ஏற்றுக்கொள்கிறார்களா? என்று, அடுத்தவரை மையப்படுத்தியே நமது வாழ்க்கை அமைந்து இருக்கிறது. ஆனால், இயேசு அடுத்தவர்க்காக வாழவில்லை. தனக்காக, தனது மனச்சாட்சியின்படி வாழ்ந்தார்.

இயேசுவின் சீடர்களாக இருக்கிற நாம், அவரைப்பின்பற்ற வாழ விரும்புகிற நாம், இயேசுவின் இந்த பண்புகளை நமது வாழ்வின் விழுமியங்களாக உயர்த்திப்பிடிப்போம். அப்போது, நமது வாழ்வும், இயேசுவின் வாழ்வைப்போல, மக்களுக்கு பயன்தரும் வாழ்வாக அமையும் என்பதில், மாற்றுக்கருத்தில்லை.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் சவாலான வாழ்வு

இயேசுவின் உறவினர்கள் அவருக்கு மதிமயங்கி விட்டது என்று எண்ணி, அவரைப்பிடிக்கச் சென்றதாக இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். ஏன் இத்தகைய ஒரு முடிவுக்கு, இயேசுவின் உறவினர்கள் வந்திருக்க வேண்டும்? அதற்கு காரணம் இல்லாமலில்லை. 1. இயேசுவின் தந்தை தச்சுத்தொழில் செய்து வந்தார். தச்சுத்தொழில் என்பது நல்ல வருமானம் தரும் தொழிலாக இருந்தது. தச்சருக்கு ஏராளமான வேலையும் இருந்தது.  இவ்வளவு வருமானம் தொழில் கையில் இருந்தாலும், இயேசு அத்தகைய தொழிலை விட்டுவிட்டு, போதிப்பதற்காகச் சென்றது, அவருடைய உறவினர்களின் மத்தியில் பெருத்த வியப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

2. இயேசு அதிகாரம் நிறைந்த யூத மதத்தின் தலைவர்களிடம் பிரச்சனையை வளர்த்துக்கொண்டார். எப்போதுமே அதிகாரம் நிறைந்தவர்களிடம் தவறு இருந்தாலும், அதை கண்டுகொள்ளாத மனநிலையோடு தான் மக்கள் வாழ்வர். ஏனென்றால், அதிகாரத்தை எதிர்த்து வெற்றிபெறுவது இயலாத காரியம். அதேபோல, அதிகாரத்தை எதிர்த்தவர்கள் மகிழ்ச்சியோடு, நிம்மதியோடு வாழ முடியாது என்பதும் அனைவரும் அறிந்தது. எனவே, அதிகாரத்தோடு விளையாடுவது நமக்கு தீங்கினைத்தான் விளைவிக்கும் ஆனால், இயேசு துணிந்து அதிகாரவர்க்கத்தினர்க்கு எதிராக நிற்கிறார். 3. இயேசு புதிய ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த குழு ஒட்டுமொத்த சமுதாயத்தின் பார்வையில் வேறுபட்ட குழு. மீனவர்களும், வரிவசூலிப்பவரும், தீவிரவாதிகளும் என, ஒன்றுக்கு முரணானவர்கள் இருக்கும் குழு. மேற்கூறிய மூன்று காரணங்களால், இயேசுவின் உறவினர்கள், இயேசுவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்ற முடிவுக்கு வந்தனர்.

இந்த சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படாத அனைவரும், பைத்தியக்காரன் என்ற முத்திரை குத்தப்படுகிறார்கள். ஆனாலும், அதையெல்லாம் தாண்டி, வாழ்வது தான் சவாலானது. உண்மையானது. அப்படிப்பட்ட வாழ்வை நாம் அனைவரும் இணைந்து வாழ இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மதி மயங்கிவிட்டார் ?

இயேசுவைப் பற்றிய மக்களின் எதிர்மறையான பார்வை ஒன்றையும் மாற்கு நற்செய்தியாளர் தமது நற்செய்தி நூலில் துணிந்து பதிவு செய்துள்ளார்: "அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்" என்னும் செய்திதான் அது.

இயேசு தம் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பாராட்டும், புகழ்ச்சியும், வணக்கமும் பெற்றாரோ, அந்த அளவுக்கு இகழ்ச்சியும், புரிதலின்மையும், அவதூறும் பெற்றுக்கொண்டார் என்பது உண்மை. அந்த உண்மையை மாற்கு அச்சமின்றி எழுதிவைத்திருக்கிறார். என்ன காரணம்?

1. ஒரு நற்செய்தி அறிவிப்பாளரின், இறைவாக்கினரின், போராளியின் பணியில் எதிர்ப்புகளும், ஏளன விமர்சனங்களும் எழத்தான் செய்யும். அதையெல்லாம் தூசு எனப் புறந்தள்ளிவிட்டு, பணி தொடரவேண்டும். யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், "எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம்" (லூக் 10:11) என்று சொல்லித் தம் பணியைத் தொடரச் சீடரைப் பணித்தார் அல்லவா, அந்த மனநிலையை இயேசுவும் கொண்டிருந்தார் என்று காட்ட.

2. எந்தக் குற்றமும், குறையுமில்லாத இயேசுவுக்கே இத்தகைய அவதூறுகள் நிகழ்ந்தன என்றால் நாம் எம்மாத்திரம் என்று இயேசுவின் சீடர்கள் உணரவேண்டும். "பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால், பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்?" (லூக் 23: 31) என இயேசுவே உரைக்கவில்லையா? எனவே, நம் வாழ்வில் நாம் சந்திக்கின்ற அவதூறுகள் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று நமக்குச் சுட்டிக்காட்ட.

எனவே, யாராவது நம்மைப் பற்றி ஏளனமாகவோ, அவதூறாகவோ பேசினால், "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்" (பிலி 2: 5) என்னும் பவுலடியாரின் அறிவுரையை மனதில் கொள்வோம்.

மன்றாடுவோம்: பணிவாழ்வின் அனைத்து அறைகூவல்களையும் துணிவுடன் எதிர்கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போலவே நாங்களும் இழிவுரைகளைப் புறக்கணித்து, பணிதொடர ஆற்றல் தாரும், ஆமென்.
-- பணி. குமார்ராஜா

போற்றவும் தூற்றவும் கடந்து பணியில் நிலைப்போம்

இயேசு தம் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பாராட்டும் புகழ்ச்சியும் வணக்கமும் பெற்றாரோ, அந்த அளவுக்கு இகழ்ச்சியும், புரிந்துணர்வின்மையும், அவதூறும் பெற்றுக்கொண்டார் என்பது உண்மை. அந்த உண்மையெ மாற்கு அச்சமின்றி எழுதிவைத்திருக்கிறார். என்ன காரணம்?

1. நற்செய்தி அறிவிப்பாளரின், இறைவாக்கினரின், பேராளியின் பணியில் எதிர்ப்புகளும், ஏளன விமர்சனங்களும் எழத்தான் செய்யும். அதையெல்லாம் தூசு எனப் பறந்கள்ளிவிட்டு பணியைச் தொடரவேண்டும். யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுறோம் (லூக் 10:11) என்று சொல்லித் தம் பணியைச் தொடரச் சீடரைப் பணித்தார் அல்லவா! அந்த மனநிலையை இயேசுவும் கொண்டிருந்தார் என்று காட்ட.

2. பச்சை மரத்துக்கோ இவ்வாறு செய்கின்றார்கள் என்றால், பட்ட மரத்துக்கு என்னதால் செய்யமாட்டார்கள்? (லூக்கப 23:31) என இயேசுவே உரைக்கவில்லையா? எனவே நம் வாழ்வில் நாம் சந்திக்கின்ற அவதூறுகள் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று நமக்குச் சுட்டிக்காட்ட.

எனவே யாராவது நம்மைப் பற்றி ஏளனமாகவோ, அவதூறாகவோ பேசினால், கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் (பிலிப் 2:5) என்றும் பவுலடியாரின அறிவுரையை மனதில் கொள்வோம்.

இயேசுவே, உம்மைப் போலவே நாங்களும் இழிவுரைகளைப் புறக்கணித்து, பணியைத் தொடர ஆற்றல் தாரும் -ஆமென்.

----------------------------------------------------------------

இணையதள உறவுகளே

பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு திறைப்படம். அவன் சிறந்த ஒரு அறிவாளி. ஆனால் உலகமும் உறவும்; அவனுக்குச் சூட்டிய பட்டம், பைத்தியக்காரன். அந்த விபரீத சூழலிலிருந்து விடுபட, வேலை தேடி சென்னை செல்கிறான். அவனது அறிவுத் திறமையைப் பாராட்டிய நேர்முகத் தேர்வாளர், மும்பையில் உள்ள தலைமையிடத்துக்கு   பரிந்துரைக்கிறார். பெரிய எதிர்பார்ப்போடு,  மும்பை நேர்முகத் தேர்வாளரின் பாராட்டைப் பெற்ற அவன், உயர் நியமன ஆணையை எதிர்பார்த்தவனிடம், அன்றைய செய்தித்தாளில் இருந்த விளம்பரத்தை சுட்டிக்காட்டி, உடனே அலுவலகத்தைவிட்டு ஆணையிடுகிறான். படத்தில் காணும் என் மகன் புத்தி சுவாதீனம் இல்லாதவன். கண்டோர் முகவரிக்கு தகவல் தெறிவிக்கவும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

திறைப்படம் மட்டும்அல்ல. இயேசுவின் வாழ்வில் நடந்தது. உங்கள் வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கலாம். இனிமேலும் நடைபெறலாம். மனைவியும் மக்களும், பெற்றோரும் உறவும் உங்களை தவறாகக் கணிக்கலாம். சோர்ந்து போக வேண்டாம். இயேசு உங்களோடு உங்களில் ஒருவராக உள்ளார். அவர் உங்களை எப்போதும்  சரியாகக் கணிப்பார். உதவுவார். நம்புங்கள். 

-ஜோசப் லீயோன்

------------

 

பணிவாழ்வின் விலை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

அழைக்கப்பட்டவர்கள் தமது பணிக்காகக் கொடுக்க வேண்டிய விலையை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். இயேசுவின் நற்செய்தி அறிவிப்புப் பணியின் கசப்பான பக்கங்களில் ஒன்று அவரது உறவினர்களே அவரது பணிக்குத் தடையாக இருந்தது. இயேசு மதி மயங்கிவிட்டார் என்று மக்கள் பேசிக்கொண்டதாக அறியவந்தனர் அவர்கள். எனவே, குடும்ப நற்பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள் என்னும் செய்தி மாற்கு நற்செய்தியில் மட்டும்தான் காணக்கிடக்கிறது. பின்னாளைய நற்செய்தியாளர்கள் இச்செய்தியைப் பரப்ப விரும்பவில்லை. எனவே, அது நீக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், ஓர் இறைவாக்கினருக்கேயுரிய இலக்கணத்தின்படி, இறைவாக்கினருக்குத் தம் சொந்த ஊரிலும், சுற்றத்தினரிடையேயும் மதிப்பில்லை என்பதற்கேற்ப, இயேசுவும் தம் ஊரிலும், சுற்றத்திலும் அவநம்பிக்கையையும், அவமானத்தையும் சந்தித்தார். இருப்பினும், அவர் தன் பணியைக் கைவிட்டுவிடவில்லை. எதார்த்த மனநிலையுடன் போற்றுதலையும், தூற்றுதலையும் பற்றற்ற விதத்தில் சந்தித்தார். நமக்கு எடு;த்துக்காட்டாக இருக்கிறார்.

மன்றாடுவோம்: அன்பே உருவான இயேசுவே, இறைவாக்கினர்கள் சந்தித்த அனைத்துத் துன்பங்களையும் நீரும் ஏற்றுக்கொண்டீரெ. உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்விலும் நாங்கள் அவமானத்தை, அவதூறுகளைச் சந்திக்கும்போது, மனந்தளராமல், நம்பிக்கை இழக்காமல், கலங்கிவிடாமல் பணி தொடர அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்

--: அருள்தந்தை குமார்ராஜா

-----------------------------

 

''இயேசுவின் உறவினர்...அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள்.
ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்'' (மாற்கு 3:21)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- சில சமயங்களில் பிறர் பேசுவது நமக்கு அர்த்தமற்றதாகத் தோற்றமளித்தால் அவர்களைப் பார்த்து, ''உங்களுக்கு என்ன பைத்தியமா?'' என்று கேட்பதுண்டு. எடுத்துக் கூறப்பட்ட கருத்து முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலோ, குழப்பத்தை உருவாக்கினாலோ, முறையாக விளக்கப்படாமல் போனாலோ நாம் இவ்வாறு கேட்கத் துணிகிறோம். இயேசுவின் உறவினரும் அப்படியே நினைத்தார்கள். அவர்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்துவந்தனர். இயேசு அங்குமிங்கும் சென்று, ''கடவுளின் ஆட்சி'' பற்றிப் போதித்தார்; மக்கள் அவரைத் தேடிச் சென்று நலம் பெற்றார்கள். எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அவரைத் தொடர்ந்தது. தமக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டென்று இயேசு அறிவித்தார். ஓய்வுநாள் மனிதருக்கேயன்றி, மனிதர் ஓய்வு நாளுக்கல்ல என்று முழங்கினார். இயேசு புரிந்த இச்செயல்களும் உரைத்த சொற்களும் பலருக்குப் புரியாத புதிராக இருந்தன. எனவே அவர்கள் இயேசு ''மதிமயங்கி இருக்கிறார்'' (மாற் 3:21) என்று பேசிக் கொண்டார்கள்.

-- ஒருவிதத்தில் இயேசு மதிமயங்கித்தான் போனார் எனலாம். அவருடைய சிந்தனை முழுவதும் கடவுளைப் பற்றியும் மனிதரின் நலன் பற்றியும் இருந்ததால் தம்மைப் பற்றி எண்ணுவதற்கு அவருக்கு நேரம் இருக்கவில்லை. கடவுளிடமிருந்து தாம் பெற்றுக்கொண்ட பணியைப் பிரமாணிக்கமாக நிறைவேற்றுவதிலேயே இயேசு கருத்தாய் இருந்ததால் அவரைப் பற்றி மக்கள் பலவாறு பேசிக்கொண்டார்கள். இயேசு கடவுளின் சக்தியால் செயல்பட்டாரா அலகையின் வல்லமையால் அதிசயங்கள் புரிந்தாரா என்று கேட்கும் அளவுக்குச் சிலர் போய்விட்டிருந்தனர். கிறிஸ்துவை நம்புவோர் அவருடைய நற்செய்தியைத் தம் உயிர்மூச்சாக மாற்றும்போது கடவுளுக்காக ''மதிமயங்கி'' செயல்படத் தொடங்குவார்கள். அப்போது ''உங்களுக்கு என்ன பைத்தியமா?'' என்னும் கேள்வியை நம்மைப் பார்த்து யாராவது கேட்டால் நாம், ''கடவுளுக்காக நான் பைத்தியம்தான்'' எனப் பதில் கூறமுடியும்.

மன்றாட்டு
இறைவா, உம் சிந்தனையால் நாங்கள் ஆட்கொள்ளப்பட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

".. ..அவர் மதிமயங்கியிருக்கிறார்."

இயேசுவின் அன்புக்குரியவரே!

வாழ்க்கை வீணாகி விபரீதமாகிவிடும் உன் முதல் எதிரி உன் மனைவியும் மக்களுமாக இருந்தால். அடுத்து உன் எதிரி உன் உற்றாரும் உறவினரும். அடுத்தது உன் நண்பரும் நலன்கள் பெற்றோரும். வீடு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாகிவிடும். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவனும் கூட இருந்து குழி பறிப்பவனும் இருக்கும் வரையில் வாழ்க்கை தடுமாறிக்கொண்டுதான் இருக்கும்.

இயேசுவின் வாழ்க்கையும் இதற்கு விதி விலக்கல்ல. அவரது உறவிரே அவரை பிடித்துக்கொண்டு வரச் சென்றுள்ளனர். அவரை மதிமயங்கியவர் என்ற பட்டம் சூட்டியதும் அவரது உறவும் சுற்றமுமே. உறுதியாக இவர்களின் இவ்வார்த்தைகள் மிகப்பெரும் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் இழப்பையும் இயேசுவின்மீது ஏற்படுத்தியிருக்கும். ஆனால் உண்மைக்குச் சான்று பகர வேண்டும் என்ற தணியாத தாகம்(யோவா18:37), உம் விருப்பப்படியே நிகழட்டும் என்ற அர்ப்பணம்(லூக்22:42) எளியோர்க்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீவிரம்(லூக் 4:18) மேலோங்கியிருந்ததால் எந்த பாதிப்பையும் அவரில் எற்படுத்தவில்லை.

மாறாக இயேசுவே லூக்கா 12: 49-53 ல் குறிப்பிடுவதுபோல, இவை எல்லாம் இறையாட்சியின் தீவிர செயல்பாட்டின் அடையாளங்கள் அறிகுறிகள் என உயத்துணர முடியுமானால், வாழ்வு வெற்றியாக அமையும்.இந்த அனுபவத்தோடு வாழ வாழ்த்துக்கள். ஆசீர்;.

 

:- ஜோசப் லியோன்