முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-7,10

அந்நாள்களில் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: �நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். �நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்� என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.� இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர். முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல்-யூதாவை முப்பத்து மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார். அரசரும் அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்றபோது, அவர்கள் தாவீதை நோக்கி, �நீர் இங்கே வர முடியாது; பார்வையற்றவரும் முடவரும்கூட உம்மை அப்புறப்படுத்தி விடுவார்கள்� - அதாவது �இங்கே தாவீது வர முடியாது� என்றனர். இருப்பினும், தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீதின் நகர். தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 89: 19. 20-21. 24-25 (பல்லவி: 24ய)
பல்லவி: என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்.

19 முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்;
மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். -பல்லவி

20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்;
என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.
21 என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்;
என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். . -பல்லவி

24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்;
என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.
25 அவன் கையைக் கடல்வரைக்கும் அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும் எட்டச் செய்வேன். . -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

மாற்கு 3:22-30

பொதுக்காலம், வாரம் 3 திங்கள்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30

அக்காலத்தில் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், ``இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது'' என்றும் ``பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்'' என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆகவே இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: ``சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.'' `இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது' என்று தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

எதிர்நீச்சலையே உயிர் மூச்சாக்குவோமா

இந்த சமுதாயத்திலே சாதித்த பல நபர்களின் வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்கக்கூடிய பாடம் என்னவென்றால், வாழ்நாள் முழுவதுமே வாழ்க்கை எனும் கடலில் எதிர்நீச்சல் போட்டார்கள் என்பதே. அது மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களாக இருக்கட்டும், கருப்பு இன மக்களுக்கு ஆதரவாக எழுந்த நெல்சன் மண்டேலாவாக இருக்கட்டும். இவர்களுடைய வாழ்வு நமக்கு சொல்லும் பாடம் எதிர்நீச்சலையே வாழ்வாக கொண்டு செய்யப்பட்டவர்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன்னதாக இதனை துவங்கி வைத்த மாபெரும் தலைவரின் எதிர்நீச்சலைத்தான் இன்றைய வாசகம் சுட்டிக்காட்டுகிறது. மறைநூல் வல்லுநர்கள் அறிவியல் வல்லுநர்கள் யூதச் சட்டத்தைக் கரைத்துக்குடித்து, தங்களை போதகர்கள் என புகழ்பெற்ற சட்ட அறிஞர்களிடம் தாங்கள் பயிற்சி பெற்றதாகவும் இவர்கள் பெருமைகொண்டனர். பல பரிசேயர்கள் மறைநூல் வல்லுநராகவும் விளங்கினர். சட்டத்தை மக்களிடையே திணிப்பதிலும் அதைக் கடுமையாக வலியுறுத்துவதிலும் இவர்கள் பேர்போனவர்கள். அதனால்தான் இயேசுவின் இரக்கச் செயல்களையும் அவர் பாவங்களை மன்னித்த நிகழ்ச்சிகளையும் மறைநூல் அறிஞர் கடுமையாகக் கண்டித்து ‘இவன் பேய்களின் தலைவனைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்” என்ற வாதத்தை முன்வைக்கின்றார்கள். இயேசு இந்தக் கடலிலும் எதிர்நீச்சல் அடிக்கிறார். காரணம் அவர் கடவுளோடு இருந்தார்.

நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களைக்கண்டு எதிர்நீச்சல் போடுகிறோமா (அ) அதே நீச்சலில் மூழ்கி விடுகிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

23.01.2023 – மாற்கு 3: 22 - 30
விமர்சனங்களில் விழாமலிருப்போம்

காமராசர் முதலமைச்சராக பணி செய்து கொண்டிருந்த போது, தன்னுடைய வீட்டிற்கு எல்லா அடிப்படைகளையும் செய்து கொடுக்கின்றார் என்ற விமர்சனம் எழுந்தது. அதனால் தன் தாயை வாடகை வீட்டில் தங்க வைத்திருந்தார் என்று அவரின் வரலாறு கூறுகிறது. அருட்தந்தை. ஸ்டேன் (இயேசு சபை) துறவி பழங்குடி மக்களுக்காக போரட்டம் நடத்திய போது, அரசியலில் குதிக்க இத்தகைய மந்திர வேலைகளைச் செய்கின்றார் என்ற விமர்சனம் எழுந்தது. சிறையில் அடைப்பட்டு உயிர் நீத்தார். டிராபிக் ராமசாமி சமுதாய அவல நிலைகள் அகல பொது சேவை பல புரிந்தவர். அவரையும் அரசியல் கட்சியினருக்காக செய்கின்றார் என்ற விமர்சன போர்வையால் மூடினார்கள். இவர்கள் அனைவருமே அத்தகைய விமர்சனங்களுக்கு அடிமையாகி மாறினார்கள். அவர்களால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. எனவே தான் விமர்சனங்கள் எழும்போது மாற்றியமைத்தார்களே தவிர, நிலைப்பாடு எடுக்க முடியவில்லை.

அத்தகைய ஒரு நிலை தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவுக்கு ஏற்படுகின்றது. சென்ற இடமெல்லாம் அதிசயங்கள், புதுமைகள் செய்தவரை பல விமர்சனங்களுக்குத் தள்ளுகின்றார்கள். ஆனால் இயேசு எந்த வித விமர்சனங்களுக்கும் அடிமையாகவில்லை. புதுமைகள் செய்யும் போது யார் இந்த வல்லமையைக் கொடுத்தது என்றும், அதிகாரத்தோடு போதித்த போது இவன் பெற்றோார் நமக்குத் தெரியாதா? என்றும், நோய்களைக் குணமாக்கும் போது எந்த அதிகாரத்தால் இவ்வாறு செய்கின்றாய் என்றும், பேய்களை ஓட்டும் போது எப்படி இந்த வல்லமை? என்றும் விமர்சனங்கள் எழுப்புகின்றார்கள். இயேசு எல்லாவற்றிற்கும் என் தந்தை என்னோடு செயலாற்றுகிறார் என்று அவர்கள் போட்ட பாலுக்கு சிக்சர் அடிப்பது போன்று எளிமையாக பதிலைக் கொடுத்து விடுகின்றார். அத்தகைய நிலை தான் இன்றும். பேய்கள் அறிந்திருந்தன இயேசு இறைமகன் என்று. அதனால் தான் அவைகளால் செயலாற்ற முடியவில்லை. ஆனால் பரிசேயர்கள் இதனைத் தவறாக புரிந்து கொள்கின்றார்கள்.

கிறிஸ்தவர்களாக இருக்கின்ற நாம் விமர்சனங்களுக்குள் விழுவது எதார்த்தம். ஆனால் அதில் விழாமல் எழுந்து நிற்க வேண்டும். அன்றாட வாழ்வில் நோய், துன்பம், பட்டினி வழியாக விமர்சனங்கள் எழும். ஆனால் விழாமல் எழுந்து நிற்போம்.

===================

 

இயேசு ஒரு போராளி

பாரம்பரிய மதவாதிகள் இயேசுவின் அதிகாரத்தையும், ஆற்றலையும் எப்போதுமே கேள்விக்குள்ளாக்கியதில்லை. அவர்கள் இயேசுவிடமிருந்த வல்லமையை, ஆற்றலை முழுவதுமாக அறிந்திருந்தார்கள். அவர்கள் அந்த வல்லமையை தீய ஆவிகளின் வல்லமையாகப் பார்த்தனர். ஒட்டுமொத்தத்தில், இயேசு தீய ஆவிகளின் பிரதிநிதி என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருந்தனர்.

இயேசு அவர்களின் இந்த முடிவை வெகு எளிதாக முறியடிக்கிறார். பகைவர்கள் தங்களுக்குள்ளாக சண்டையிட்டுக்கொள்வதை நிச்சயம் விரும்ப மாட்டார்கள். குழப்பம் விளைவிப்பதும், மற்றவர்களுக்குள்ளாக சண்டையைத் தூண்டிவிட்டு குளிர்காய்வது தான் அவர்கள் வேலை. அனைவரும் கெட்டது செய்வார்களே ஒழிய, யாரும் நல்லது செய்ய முன்வர மாட்டார்கள். அப்படி செய்தால், அழியப்போவது தாங்கள் தான் என்பதை அவர்கள் அறியாதவர் அல்ல. பெயல்செபூல் பேய்களின் தலைவன். அவனுடைய வேலை கெடுதல் செய்வது. மற்றவர்கள் யாராவது கெடுதல் செய்தாலும், அதற்காக முதலில் மகிழ்ச்சி கொள்கிறவர் பெயல்செபூலாகத்தான் இருக்க வேண்டும். தனது வேலையை யார் செய்தாலும், அவனுக்கு மகிழ்ச்சிதான். அப்படியிருக்கிறபோது, கெடுதல் செய்கிறவர்களைத்தண்டித்து, அநீதி இழைக்கப்பட்டவனுக்கு ஒருநாளும், அவன் நல்லது செய்ய மாட்டான். இதைத்தான் இயேசு வெகு எளிதாக இங்கே விளக்குகிறார்.

வாழ்க்கை என்பது நன்மைக்கும், தீமைக்கும் எதிரான போராட்டம். இதை இயேசு முழுமையாக உணர்ந்து கொள்கிறார். போராட்டங்களைக் கண்டு இயேசு ஒருபோதும் சோர்ந்து போனதில்லை. போராட்டங்களையும், தடைகளையும் தாண்டிச்செல்வதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது என்பதை நமக்குக் கற்றுத்தருகிறார்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------


பொறுமை – வாழ்வின் வெற்றிக்கு அடித்தளம்

எப்படியாவது இயேசுவை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற வேட்கை, மறைநூல் அறிஞர்களின் அறிவுக்கண்களை மறைத்துவிடுகிறது. அடிப்படை இல்லாத ஒரு குற்றச்சாட்டை இயேசுவின் மேல் சுமத்துகிறார்கள். இயேசு இதை அறியாதவரல்ல. அதற்காக, நிதானம் இழந்து அவர்கள் மீது கோபப்படுகிறவரும் அல்ல. நிதானம் இழக்காமல் பொறுமையோடு, அதேநேரம் துணிவோடு அவர்களின் கூற்றைப்பொய்யாக்குகிறார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் பேய்களை ஓட்டக்கூடிய மந்திரவாதிகள் எத்தனையோ பேர் இருந்தனர். பேய் பிடித்திருந்தால் இவர்களை மக்கள் நாடிச்செல்வது சாதாரணமான செயல். இயேசுவிடமும் அந்த நம்பிக்கையோடு தான் மக்கள் பேய்பிடித்தவர்களை அழைத்து வந்திருந்தனர். ஆனால், அவர் மீது சமத்தப்பட்ட ‘பேய்களின் தலைவன் பெயல்செபுலைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்’ என்ற குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. இயேசுவின் பதில் மக்களுக்கு அவர்மீதுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஒரு அரசன் தன்னுடைய வீரர்களைப்பயன்படுத்தி தன்னுடைய அரசை விரிவுபடுத்தத்தான் முயற்சி எடுப்பான். தன்னுடைய வீரர்களைக்கொல்வது தன்னையே அழிப்பதற்கு சமம் என்பதைப்புரியாதவன் பைத்தியக்காரனாகத்தான் இருக்க முடியும். அப்படி இருக்கும்போது பேய்களின் அரசை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிற பெயல்செபூலைக்கொண்டு எப்படி அவனுக்கு உதவிசெய்கிற தீய ஆவிகளை அழிக்க முடியும்? என்பதுதான் இயேசுவின் கேள்வி.

வாழ்க்கையில் எவ்வளவோ வலிகள், வேதனைகள் நாம் தவறுசெய்யாமல் இருக்கிறபோதும் வருகின்றபோது, அவற்றைப்பார்த்து பொறுமை இழக்கக்கூடாது. நிதானம் இழக்கக்கூடாது. பொறுமையோடு, துணிவோடு அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அப்படி எதிர்கொள்கின்றபோது கடவுள் தன்னுடைய வல்லமையால், அவற்றை எதிர்கொள்ளத்துணிவைத்தருவார். வெற்றியை நாம் சுவைக்கச்செய்வார்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------------------------------------------------------

தனக்கு எதிராகத் தானே ... !

"தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது" என்னும் ஆண்டவர் இயேசுவின் அமுதமொழிகளை இன்று சிந்திப்போம்.

ஒன்றுபட்டால்தான் வாழ்வு, பிளவுபட்டால் தாழ்வு என்னும் உண்மையை ஆண்டவர் நன்கு எடுத்துரைக்கின்றார். ஆனால், இன்று எத்தனை குடும்பங்கள் தங்களுக்குத் தானே பிளவுபட்டு நிற்கின்றன? ஏன் திருச்சபையிலும் இந்த நிலையைப் பார்க்கின்றோம்.

திருச்சபைக்கெதிரான செயல்பாடுகளைத் திருச்சபைக்குள்ளேயே இருந்துகொண்டு பலரும் செய்வதில்லையா? இறைமக்களின் விசுவாசத்தை, நம்பிக்கைக் கூறுகளை அழித்துப் போட திருச்சபைக்குள்ளேயே சிலர் முயன்று வெற்றி பெறுகின்றனரே? திருச்சபைக்கு எதிராக வழக்கு மன்றம் சென்று, எதிர்ச் சான்றுபுரியும் பொதுநிலையினர், குருக்கள், கன்னியரை இன்று கண்டு நாம் திகைக்கவில்லையா? திருச்சபைக்கு எதிராகப் பேட்டியளிக்கும், நூல்கள் எழுதி விற்பனை செய்யும் குருக்கள், கன்னியரை இன்று ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கவில்லையா?

இவற்றையெல்லாம் முன் உணர்ந்துதான் ஆண்டவர் இயேசு தொலைநோக்குடன் சொன்னார்: "தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும், எந்த வீடும் நிலைத்து நிற்கமுடியாது".

இந்த நாளில் நமக்கு எதிராகப் பிளவுபட்டு நிற்கும் நம் வீட்டாருக்காக, திருச்சபை உறுப்பினர்களுக்காக மன்றாடுவோம். நமக்கெதிராக நாமே பிளவுபட்டுவிடாதபடி விழிப்பாயிருப்போம்.

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, திருச்;சபையின் உறுப்பினர்களாக இருந்துகொண்டே திருச்சபையைக் காயப்படுத்தும், பிளவுபடுத்தும் கத்தோலிக்கர்களுக்காக மன்றாடுகிறோம். மன்னிப்பு கோருகிறோம். உமது தூய ஆவியின் ஆற்றலால் திருச்சபையை வலிமைப்படுத்துவீராக. உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-பணி. குமார்ராஜா

 

இணையதள உறவுகளே

இன்னும் சில மாதத்தில் இதை நம் தமிழகம் பார்த்து ரசிக்கும். மனிதர்களைப் பிடிப்பதற்கு விதவிமான முயற்சிகளைக் காணலாம். தலைமைகள் கூட்டணிகாக ஆள் பிடிக்கத் தொடங்குவர். வேட்பாளர் ஓட்டுப்போடும் மக்களைப் பிடிக்க அலைவார். காரியம் ஒன்று நடக்க வேண்டும் என்றால் எந்தெந்த ஆளைப் பிடிக்கவேண்டுமோ அதற்காக என்ன அலைச்சல். மனிதர்களைப் பிடித்து, தங்களுக்கு வேண்டியதை கச்சிதமாக முடித்துவிட்டு, கந்தல் துணியாக கசக்கி காலடியில் போட்டுக்கொள்வார்கள்.மனிதர்களை வாங்கி விற்று, பிடித்து, தங்கள் வயிறுகளையும் வசதிகளையும் வளர்த்துக்கொள்வார்கள்.

"என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்று இயேசு அழைத்ததோ முற்றிலும் வித்தியாசமான ஒன்று. நோயால், பேயால், பாவத்தால், பலவீனத்தால், ஏழ்மையால், ஏற்றத்தாழ்வால் மனிதத்தை இழந்தவர்களைப் பிடித்து புதிய மனிதாக்குவதற்காக. இருந்த படகையும் வலையையும் சொத்தையும் உறவையும் உழைப்பையும் விட்டு விட்டு, இல்லாதவர்களை பிடித்து எல்லாம் உள்ளவராக மாற்றுவதற்காக.

‘எங்கே, உங்கள் சொத்துக்களை இங்கே கொண்டு வாருங்கள்’ என்று பரிமுதல் செய்ய ஆணையிட்ட அரசினிடம், ஏழைகள், முதியவர்கள், அநாதை குழந்தைகள், தொழுநோயாளிகள் இவர்களே என் சொத்துக்கள் என்று அழைத்துச்சென்ற புனித லாரன்ஸ், மனிதரைத்தான் பிடித்தார். என்ன புறப்பட்டு விட்டீர்களா!

-ஜோசப் லீயோன்

-----------------------------

 

''தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும்
எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்'' (மாற்கு 3:28-29)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- எவ்வளவு பெரிய குற்றங்களைச் செய்தாலும் மனிதர் உண்மையாகவே மனம் திரும்பி, பாவ வழியிலிருந்து விலகி நன்னெறியைக் கடைப்பிடிப்பதாக இருந்தால் கடவுள் அவர்களை மன்னிப்பார் என்பது கிறிஸ்தவக் கொள்கை. அப்படியானால் ''தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவருக்கு மன்னிப்பே கிடையாது'' என்று இயேசு ஏன் கூறினார் என்னும் கேள்வியை எழுப்புவது பொருத்தமானதே. இங்கே குறிப்பிடப்படுகின்ற பாவம் என்ன? இயேசு கடவுளின் வல்லமையால் அதிசய செயல்களைச் செய்வதை மக்கள் எல்லாரும் பார்க்கின்றனர். ஆனால் சிலர் இயேசுவை ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் இயேசுவின்மீது ஒரு பெரிய குற்றத்தையும் சுமத்துகின்றனர். அதாவது, இயேசு புரிகின்ற அதிசய செயல்கள் கடவுளின் வல்லமையால் அல்ல, சாத்தானின் வல்லமையால் நிகழ்கின்றன என்பது குற்றச்சாட்டு. இது கடவுளின் ஆவியை ஏற்க மறுப்பது; நேரடியாகக் கடவுளை எதிர்த்து நிற்பது. இவ்வாறு கடவுளின் ஆவியை எதிர்ப்போர் கடவுள் வழங்குகின்ற மன்னிப்பையும் வேண்டாம் என மறுத்துவிடுவார்கள்.

-- எனவே, உண்மையிலேயே மன மாற்றம் அடைந்து, கடவுளின் ஆவியின் செயலை ஏற்பவர்களுக்குத்தான் மன்னிப்பு உண்டு. ஆகவே, தூய ஆவியைப் பழித்துரைப்போர் தம் செயல் முரண்பட்டது என உணர வேண்டும்; தம் சிந்தனைப் பாணியை மாற்ற வேண்டும். அப்போது கடவுளின் மன்னிப்பு அவர்களுக்குக் கிடைக்கும். தூய ஆவியாரின் வல்லமையை எதிர்த்து நிற்கும்வரை அந்த ஆவியார் அருளுகின்ற கொடைகளைப் பெற்றிட மனிதர் தங்களையே தகுதியற்றவர்களாக மாற்றிக்கொண்டுவிட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். அந்நிலை மாறும்போது அவர்களுக்குக் கடவுளின் மன்னிப்பு உண்டு.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தில் செயல்படுகின்ற ஆவியாரின் வல்லமையை நாங்கள் உணரச் செய்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

------------------------------

"தூய ஆவியைப் பழித்து உரைப்பவர்; மன்னிப்புப்பெறார்"

இயேசுவின் அன்புக்குரியவரே!

தூய ஆவி, தந்தை இறைவன் மனிதனுக்குத் தந்த உன்னத கொடை. இந்த ஆவியின் வழியாக, தந்தை இறைவனை, 'அப்பா, தந்தாய்' என அழைக்கும் உறிமை பெற்றுள்ளோம். ஆகவே, எல்லா நற்கொடைகளையும் ஆண்டவனிடமிருந்து எளிதாகப் பெறமுடிகிறது. அளவுகடந்த இரக்கத்தை பெற்று அனுபவிக்கிறோம். கேட்கும் போதெல்லாம் பாவங்களுக்கு மன்னிப்பு பெறுகிறோம். ஆகவே, இத்தூய ஆவியே நம் இறை தந்தையோடு நமக்குள்ள உறவு வாழ்வை வளர்ப்பது, பலன்கொடுக்கச் செய்வது,வலுவூட்டுவது. நம் விசுவாசத்தின் தொடக்கமும், வளர்ச்சியும், பலனும், நிறைவும் தூய ஆவியே.

எனவே விசுவாசத்தை மறுதலிக்கும் போதும், தளர்ச்சியடையும் போதும்,தூய ஆவியை மறுதலிக்கிறோம். இறைவனின் வல்லமையையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தும்போது தூய ஆவிக்கு பழித்து உரைக்கிறோம். ஒரு சில அற்ப சலுகைகளுக்காக, வசதிகளுக்காக விசுவாசத்தை இழக்க முன்வரும்போது தூய ஆவியைப் பழிக்கிறோம்.

பேயோட்டும் இயேசுவின் வல்ல செயலைப் பார்த்தும் கூட, அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல், 'இது சாத்தானின் செயல், இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது' என்று தூய ஆவியைப் பழிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்கும். ஆகவே, நம் வாழ்வின் அடித்தளமான விசுவாசத்தையே அசைக்கும் ஐயம், சிந்தனை, சொல், செயல் எல்லாமே தூய ஆவியைப் பழிக்கும் மாபாவம். அதற்கு மன்னிப்பே இருக்க முடியாது. ஏனென்றால்,மன்னிப்பின் அடித்தளமே (கடவுள் நம்பிக்கையே) நொருங்கிவிட்டதல்லவா! எந்த சூழலிலும் விசுவாசத்தை, கடவுள் நம்பிக்கையை இழக்காமல் பார்த்துக்கொள்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

:- ஜோசப் லியோன்