முதல் வாசகம்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 17: 22-24

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக் கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலைமேல் நான் நடுவேன். இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும். ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என்றும், பசுமையான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்; நான் செய்து காட்டுவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 92: 1-2. 12-13. 14-15
பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.

1 ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று;
உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.
2 காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. -பல்லவி

12 நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.
13 ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். -பல்லவி

14 அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;
15 `ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 6-10

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம். நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம். எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந் தாலும் அவருக்கு உகந்தவராய் இருப்பதே நம் நோக்கம். ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறு பெற்றுக்கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவாக்கு வித்தாகும்; கிறிஸ்துவே விதைப்பவர்; அவரைக் கண்டடைகிறவன் என்றென்றும் நிலைத்திருப்பான். அல்லேலூயா.

மாற்கு 4:26-34

பொதுக்காலம்,11 வாரம் ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34

அக்காலத்தில் இயேசு கூட்டத்தை நோக்கி, ``இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது'' என்று கூறினார். மேலும் அவர், ``இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்'' என்று கூறினார். அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

எசேக்கியேல் 17: 22 – 24
இறைவன் வழங்கும் அன்பு

உரிமை இழந்துபோயிருக்கிற மக்களுக்கு, அடிமைத்தனத்தின் ஆக்ரோஷத்தை அனுபவித்திருக்கிற மக்களுக்கு, வாழ்வே இவ்வளவு தானா? என்று வேதனைப்பட்டிருக்கிற மக்களுக்கு ஆறுதல் செய்தியாக வருவதுதான் இன்றைய வாசகம். தளர்ந்து போயிருக்கிற மக்களை நம்பிக்கை நிறைந்த சொற்களால், இறைவாக்கினர் வழியாக உறுதிப்படுத்துகிறார் இறைவாக்கினர். நடப்பது ஒவ்வொன்றும் இறைவனின் திட்டத்தின்படியே நடக்கிறது என்பது இங்கு நமக்குத் தரப்படுகிற செய்தியாக இருக்கிறது.

இஸ்ரயேல் மக்கள் இறைவனின் அன்பை உணராதவர்களாக வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றதற்கு, இறைவன் அவர்களை எதிரிகளிடம் கையளிக்கிறார். எதிரிகளிடம் கையளிப்பது, அவர்களைத் துன்பப்படுத்துவதற்காக அல்ல. மாறாக, தங்கள் தவறை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காக. மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது என்பதற்காக. மக்கள் எந்நாளும் உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதற்காக. ஒருவருக்கொருவர் சகோதர மனப்பான்மையோடு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக. எனவே தான், மக்கள் திருந்திய உடனே, இறைவன் அவர்களுக்குத் தேவையான காரியங்கள் அனைத்தையும் உடனிருந்து செய்கிறார். ஏற்கெனவே ஆசீர்வதித்ததை விட, பல மடங்கு அதிகம் ஆசீர்வதிக்கிறார்.

நம் இறைவன் நாம் தவறு செய்கிறபோது, அது தவறு என்று உணர வைக்கிறார். நாம் அதனை புரிந்து கொண்டு திருந்தாமல், தவறு செய்து விட்டோம் என்றாலும், கடவுள் நம்மை வெறுத்து ஒதுக்குவதில்லை. அவர் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கிறார். அந்த இறைவனிடத்தில் நம்மை முழுவதுமாக கையளிப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

இறையாட்சி மலர வேண்டும்

இயேசு இறையாட்சியின் இயல்புகளைப் பற்றி இன்றைய நற்செய்தியில் விளக்க முற்படுகிறார். இறையாட்சி என்பது, கடவுளின் அரசு விண்ணகத்தில் செயல்படுவது போல, இந்த மண்ணகத்திலும் செயல்படுவதாகும். படைப்பு அனைத்திற்குமான கடவுளின் இலக்கு இதுதான். இந்த இறையாட்சி தத்துவத்தை, விதை வளர்ந்து மரமாகக்கூடிய நிகழ்வோடு ஒப்பிடுகிறார்.

ஒரு விவசாயி நிலத்தில் விதைகளைத் தூவுகிறார். அதைப் பேணிப் பராமரிக்கிறார். அதாவது, அதற்கு தண்ணீர் பாய்க்கிறார். நேரத்திற்கு உரமிடுகிறார். பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கிறார். இவ்வளவு செய்தாலும், விதை எப்படி வளர்கிறது? எப்போது வளர்கிறது? என்பது அவருக்குத் தெரியாது. நேற்றைய நாளை விட, இன்றைக்கு வளர்ந்திருப்பதை பார்த்துதான், விவசாயி, அது சரியான வளர்ச்சியில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறார். ஏனென்றால், விதைத்தது விவசாயி என்றாலும், அதனைப் பேணிக்காக்கிறவர், அதற்கு வாழ்வு கொடுக்கிறவர் கடவுள் தான். அதுபோல, வாழ்வில் நடப்பதன் நிகழ்வு அனைத்திலும், கடவுளின் அருட்கரம் தங்கியிருக்கிறது என்பதை, நாம் உணர வேண்டும். கடவுளின் வல்ல செயல்களை நாம் உடனடியாக உணர முடியாது. ஆனால், நமது வாழ்வை திரும்பிப்பார்க்கிறபோது, வாழ்வின் நிகழ்வுகளை திரும்பிப்பார்க்கிறபோது, கடவுளின் அருட்கரம் நம்மை எப்படியெல்லாம் வழிநடத்தியிருக்கிறது என்பதை, நாம் புரிந்து கொள்ளலாம்.

இறையாட்சி எப்போது வரும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அது இந்த உலகத்தில் தனது வேர்களை ஊன்றிக்கொண்டு தான் இருக்கிறது. எவ்வாறு, செடியின் வளர்ச்சியை நமது ஊனக்கண்கள் பார்க்க முடியாதோ, அதேபோல, இறையாட்சியின் மலர்ச்சியை நாம் பார்க்க முடியாது. ஆனாலும், அது மலர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை நாம் உணர்வதற்கு அழைக்கப்படுகிறோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

இயேசு ஒரு சிறந்த போதகர்

இயேசு ஒரு சிறந்த போதகர். அதற்கு அவரது போதனையே சிறந்த சான்று. அவருடைய போதனையின் வெற்றி, தனது போதனையைக் கேட்பவர்களின் திறமைக்கேற்ப, உணர்வுகளுக்கேற்ப, புரிதலுக்கு ஏற்ப போதிப்பதில் அடங்கியிருக்கிறது. ஒரு சிறந்த போதகர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நாம், இயேசுவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளலாம். முதலில், சிறந்த போதகருக்குத்தேவை பொறுமை. எனவேதான், யூதப்போதகர் ஹில்லல் கூறுகிறார்: எரிச்சல்படுகிறவர் போதிக்க முடியாது என்று. தனது சீடர்களுக்கு, தான் கூறியது விளங்கவில்லை என்றாலோ, புரியவில்லையென்றாலோ, பொறுமையோடு, எவ்வளவுக்கு தனது போதனையை எளிமையாக்க முடியுமோ, அவ்வளவுக்கு எளிமையாக்கி, பொறுமையோடு கற்றுத்தருவது சிறந்த போதகருக்கான முதல் அடையாளம். அது இயேசுவிடத்தில் நாம் பார்க்கிறோம்.

சிறந்த போதகருக்கு இருக்க வேண்டிய இரண்டாவது பண்பு: புரிதல். தான் போதிப்பது, மற்றவர்களுக்குப் புரிகிறதா? என்கிற புரிதல் இருக்கிறபோதுதான், அவரால் சிறப்பாக தனது கருத்துக்களை தொடர்ந்து எடுத்துக்கூற முடியும். கேட்கிறவர்களின் உடல் மொழிகளைப்பார்த்தே, ஒரு நல்ல போதகர், தனது போதனையை அவர்கள் புரிந்துகொள்கிறார்களா? என்பதைப்புரிந்துகொள்வார். இயேசுவுக்கு அது கைவந்த கலை. அதனால்தான், சிறந்த போதகராக, மக்கள் நடுவில் அவரால் வரமுடிந்தது. தான் சொல்ல வந்த கருத்துக்களை கேட்கிறவர் புரிந்துகொள்ளாதபோது, அவர் புரிந்துகொள்ளாததற்கான காரணத்தை, நல்ல போதகர் அறிந்திருக்க வேண்டும். அதுதான் நல்ல போதகர்க்கான அடையாளம்.

நமது வாழ்வே மற்றவர்களுக்கு போதனையாக இருக்க வேண்டும். அதற்கு நம்மிடத்தில் மற்றவர்களைப்பற்றிய புரிதலும், பொறுமையும் நமக்குத்தேவை. எங்கே புரிதலும், பொறுமையும் இருக்கிறதோ, நிச்சயமாக, அவரது வாழ்க்கை சிறப்பான ஒரு வாழ்வாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைவனின் அரசு

இறையரசு என்பது கடவுளுடைய அரசைக்குறிக்கிறது. கடவுள் விண்ணகத்தை ஆண்டு வருகிறார் என்பது அனைவரின் நம்பிக்கை. விண்ணகம் என்றாலே, மகிழ்ச்சி, அன்பு, அமைதி போன்றவை தான் நமது நினைவுக்கு வருகிறது. ஏனென்றால், அங்கே கடவுள் ஆட்சி செய்கிறார். கடவுளின் ஆட்சியில் இருளுக்கு வேலையில்லை. துன்பங்கள், துயரங்கள் அங்கே இல்லை. அத்தகையதொரு நிலைதான் மண்ணகத்திலும் வர இருக்கிறது. மண்ணகமும் கடவுளால் ஆளப்பட இருக்கிறது என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு விதை மனித இயலாமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. விதையை மனிதன் வளர்க்க முடியும். ஆனால், அந்த விதையை உருவாக்க முடியாது. அதற்கு உரமிடலாம், அதை அழகுபடுத்தலாம். அதிலிருந்து பயனைப்பெறலாம். ஆனாலும், விதையை உருவாக்குவது மனிதனால் முடியாதது. கடவுளின் வல்லமை அங்கே வெளிப்படுகிறது. மனித இயலாமையை, மனித ஆளுமையின் எல்கையை அங்கு நாம் காண முடிகிறது. ஏனென்றால், படைப்பு கடவுளுக்குரியது. கடவுளுடைய படைப்பின் மேன்மையையும், கடவுளின் அதிகாரத்தையும், வல்லமையையும் இது பறைசாற்றுவதாக இருக்கிறது.

கடவுளின் அரசு இந்த உலகத்தில் வருவதற்கு நாம் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். நாம் நாமாக வாழ வேண்டும். நாம் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். நாம் அடுத்தவர்க்காக வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோது, கடவுளின் அரசு நம்மிலும் செயல்பட ஆரம்பிக்கிறது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறையாட்சி – நம்பிக்கையின் செயல்வடிவம்

இயேசுகிறிஸ்து இறையரசை ஒப்பீட்டுப்பேசுகிற நிகழ்ச்சி தரப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து தனது பணியைத் தொடங்கும்போது “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது”(மாற்கு 1: 15) என்று கூறுகிறார்.

இறையாட்சி என்றால் என்ன? யூதர்களைப்பொறுத்தவரை, இந்த உலகத்தைப்பற்றிய அவர்களுடைய பார்வை இதுதான்: இந்த உலகத்தில் தீய ஆவிகளுக்கும், கடவுளுக்கும் இடையே போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. மெசியா வந்து தீமைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்று, தன்னுடைய அரசை நிலைநாட்டுவார் என அவர்கள் நம்பினர். மெசியா வரக்கூடிய காலத்தில் ஒருசில அருங்குறிகள் தோன்றும் என்பதும் அவர்களின் நம்பிக்கையாய் இருந்தது. இத்தகைய நம்பிக்கையைத்தான் இயேசு அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறார். இறையரசு எப்படி இருக்கும் என்பதை உவமைகளால் அவர் எடுத்துரைக்கிறார். இறையரசு என்பது நம்பிக்கை செயல்வடிவம் பெறுகிற நிகழ்வு. இயேசுவின் வாழ்வு, துவண்டுபோயிருந்த மக்களுக்கு, காத்திருந்து காத்திருந்து அழுது வீங்கிய விழிகளோடு ‘தங்கள் பிரச்சனைகளுக்கு கடவுள் ஒரு முடிவு தரமாட்டாரா?’ என்ற நம்பிக்கையோடு காத்திருந்த ஏழை, எளியவர்களுக்கு கடவுளின் அன்பை உணரச்செய்வதாக இருந்தது.

நாம் ஒவ்வொருவரும் மற்றவர் வாழ்வில் இறையரசை மலரச்செய்ய முடியும். எப்போது? நம்முடைய வார்த்தைகளால், செயல்பாடுகளால் மற்றவர் வாழ்வில் ஒளி ஏற்றும்போது. அனைவரும் இறையரசை அனுபவிக்க நம்மால் இயன்றதை, கடவுள் காட்டும் வழியில் செய்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------------------

"தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது" !

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறையாட்சியின் இயல்பைப் பற்றி நமக்கு எடுததுரைக்கின்றார். இறையாட்சி எப்படி வளர்கின்றது? மனித முயற்சிக்கு அங்கு இடமுண்டா?

இயேசு கூறுகிறார்: "நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறையத் தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது".

ஆம், இறையாட்சி இத்தகைய விதைக்கு ஒப்பானது. இறைவனே விதைக்கிறார், இறையாட்சி தானாகவே வளர்கிறது, இறுதியில் இறைவனே இறையாட்சியை நிறைவுசெய்வார்.

அப்படியானால், நமது பங்கு என்ன? நமக்கு இறையாட்சிப் பணி என்று எதுவுமே இல்லையா? நமது பணிகளெல்லாம் வீணா? இல்லை, நமது பணிகள் அவசியம் தேவை. இருப்பினும், நமது சொந்த முயற்சியினால், உழைப்பினால் இறையாட்சி மலரப்போவதில்லை. இறைவனின் அருளே அதை நடைபெறச் செய்கிறது.

"ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்" (திபா 127:1) என்னும் திருப்பாடல் வரிகளை மனதில் கொண்டு, நமது கடமைகளை, பணிகளை நன்கு ஆற்றுவோம்.

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய உழைப்பினால் அல்ல, இறைத் தந்தையின் திருவுளத்தின்படியே நன்மைகள் நிகழ்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு, தாழ்மையான மனத்துடன் பணியாற்ற அருள்தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-பணி. குமார்ராஜா

 

இணையதள உறவுகளே

நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. அறிவியல் ஒரு எல்லைவரை எட்டிச்சென்று, பயிர் வளர்வதற்கும், வளர்ந்த பயிர் விளைச்சலுக்கான காரணத்தை விளக்கலாம். அந்த எல்லைக்குப் பின், அறிவியலும் மௌனம் சாதித்துவிடுகிறரது. மனிதனின் கையை மீறிய ஒரு சக்தி அந்த பயிறுக்குள் இருந்து, நிலம் தானாக விளைச்சல் கொடுக்கச் செய்கிறது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தன் கையை மீறிய ஒரு ஆற்றல் நம்மை அறியாமல் நமக்குள்ளும் புறமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுதான் இறை ஆட்சி. சில விசித்திரமான நிகழ்ச்சிகள் நம்மில் குருக்கிடும்போது, ஆச்சரியமாக அந்த தெய்வீக சக்தி நம்மை பத்திரமாக பாதுகாத்த சம்பவங்கள், நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் நண்பர்களுக்கும் நிகழ்ந்தது நாம் அறியாததல்ல.

வாசிக்கும் அனைவரும் உங்கள் வாழ்வில் உங்களை அறியாமல் இறையாட்சி செயல்பட்டு உங்களை பாதுகாத்த நிகழ்வுகளை மின் அஞ்சலில் எழுதுங்கள். இறை ஆட்சியின் செயல்பாட்டை அனைவரும் அறிய வாய்ப்பாகும். இறை ஆட்சி வெளிப்படையாக ஒருநாள் வெளிப்படும். அதுவரை காத்திருப்போம், விழிப்போடு செபிப்போம்.

-ஜோசப் லீயோன்

 

விதையுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சியைத் தானாகவே முளைத்து வளரும் விதைக்கு ஒப்பிடுகிறார். நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அத்துடன், அவரது பணி முடிந்துவிடுகிறது. பின்னர், அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. பின்னர், விளைச்சல் அளிக்கிறது.

இந்த உவமை நம் அனைவருக்கும் ஊக்கமூட்டுவதாக அமைந்திருக்கிறது. நமது பணிகளுக்கு நேரடியாக வெற்றியோ, பலனோ கிடைக்கவில்லை என்று நாம் வருந்தினால், இந்த உவமை நமக்கு உற்சாகம் தருவதாக அமைந்திருக்கிறது. நாம் விதை விதைப்பவர்கள். அதை வளரச் செய்து, பலன் தருபவர் இறைவனே. எந்த நேரத்தில், எத்தகைய பலன் தரவேண்டும் என்பது அவரது திருவுளமே என்பதை ஞானத்தோடு ஏற்றுக்கொள்வோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நல்ல எண்ணங்களை, நல்ல திட்டங்களை விதையாகத் தூவுவது மட்டுமே. மற்ற அனைத்தையும் இறைவன் பார்த்துக்கொள்வார். இந்த நம்பி;க்கையில் நம் பணிகளை ஆர்வமுடன் செய்வோம்.

மன்றாடுவோம்: விளைச்சலின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் பணிகளை எந்த எதிர்பார்ப்போ, ஏமாற்றமோ இன்றி ஆற்ற இன்றைய நற்செய்தி வாசகம் மூலமாக அழைப்பு விடுக்கிறீர். உமக்கு நன்றி. எங்கள் பணிகளை ஆசிர்வதித்து, உமது திருவுளப்படியே பலன் தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

--: அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

''நிலத்தில் ஒருவர் விதைக்கிறார்...
அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது'' மாற்கு (4:27)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- விவசாயப் பின்னணியிலிருந்து இன்னொரு உவமையை எடுத்துக் கூறுகிறார் இயேசு. வயலில் விதைக்கச் செல்லுமுன் மண் நன்றாகப் பண்பட்டிருக்க வேண்டும். ஆனால் விதைத்த பிறகு அவ்விதை நிலத்தில் வேரூயஅp;ன்றுகிறது; தளிர் தோன்றுகிறது; இலை வளர்கிறது; பூ மலர்கிறது; கதிர் வெளியாகித் தானியம் உருவாகிறது. இச்செயல்களில் எதையுமே விவசாயி செய்வதில்லை; மாறாக, இயற்கையே செய்கிறது. மனித கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்தில் இயற்கையின் செயல்கள் நிகழ்ந்து, மனிதருக்கு வளமான விளைச்சல் கிடைக்கிறது. இந்த இயற்கை நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டு இயேசு மக்களுக்கு ஓர் ஆழ்ந்த உண்மையை விளக்குகிறார். அதாவது, கடவுளாட்சியை இவ்வுலகுக்குக் கொணர்வதில் முக்கிய பங்காற்றுபவர் கடவுள்தாம். மனிதர் தம் சொந்த முயற்சியால், கடவுளின் துணையின்றி, கடவுளாட்சியை மலரச் செய்ய இயலாது.

-- இதனால், கடவுளாட்சியை மலரச் செய்வதில் மனிதருக்குப் பங்கே இல்லை என்று நாம் தவறாக முடிவுகட்டிவிடல் ஆகாது. கடவுளோடு இணைந்து மனிதர் உழைக்கும் போது கடவுள் ஆட்சி அங்கே மலர்கின்றது. அப்போது கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ற வாழ்க்கைமுறை மனிதருக்கு இயல்பான ஒன்றாக மாறும். அதுவே இறையாட்சியின் மலர்ச்சி. அத்தகைய ஆட்சியைக் கொணர்வதுதான் தம் பணி என்று இயேசு முழங்கினார். அவரோடு இணைந்து மனிதர் செயல்படும்போது அவருடைய இறையாட்சிப் பணி விரிவடையும்; மனித சமுதாயம் கடவுள் விரும்பும் சமுதாயமாக, கடவுளின் ஆட்சி நிலவும் குழுவாக மாறும். இத்தகைய புதிய சமுதாயம் இங்கே தொடங்கிவிட்டது என்றாலும் அதன் நிறைவு இறுதிக்காலத்தைச் சார்ந்தது என இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார்.

மன்றாட்டு
இறைவா, இறையாட்சி மலர நாங்கள் உம்மோடு ஒத்துழைக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''இறையாட்சி கடுகு விதைக்கு ஒப்பாகும்'' (மாற்கு 4:31)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- கடுகு விதை சிறிய வகையது; ஆனால் பாலஸ்தீனத்தில் கடுகுச் செடி நடுத்தர மரம்போலவே வளரும் தன்மையது. இதை இயேசு பின்னணியாகக் கொண்டு இறையாட்சி பற்றி விளக்குகிறார். இறையாட்சியின் தொடக்கம் சிறிதாக இருக்கலாம்; ஆனால் அதன் வளர்ச்சியோ மிகப் பெரிதாக இருக்கும். தமிழ் இலக்கியப் பாணியில் கூறுவதாக இருந்தால் கடுகைவிடச் சிறிய ஆல விதை நிலத்தில் விழுந்து வளர்ந்து ஓங்கும்போது வானளாவ எழுந்து, பரந்து விரிந்து எண்ணிறந்த படைவீரருக்கு நிழலளித்துக் காப்பதைக் காட்டலாம். சிறிய தொடக்கம் என்றாலும் எதிர்பார்ப்புகளை விஞ்சிய வளர்ச்சியைப் பெற்று உயர்வது கடவுளின் ஆட்சி. இதிலிருந்து இயேசு இரு பாடங்களைப் புகட்டுகின்றார். முதலில், கடவுளாட்சியின் தொடக்கம் சிறிதாக இருக்கிறதே என நாம் நம்பிக்கை இழத்தல் ஆகாது. ஏனென்றால் கடவுளின் திட்டத்தில் அவரது ஆட்சி ஒருநாள் மனிதர் அனைவரையும் உள்ளடக்குகின்ற பரந்த ஆட்சியாக மலர்ந்து விரியும். இரண்டாவது, கடவுளோடு மனிதர் ஒத்துழைப்பதால் கடவுளாட்சி வரும் என்பதால் சிறிய தொடக்கம் என்றாலும் தயக்கமின்றி நாம் செயல்பட வேண்டும் என இயேசு நமக்கு உணர்த்துகிறார்.

-- மரம்போல வளர்கின்ற கடுகுச் செடியில் பறவைகள் வந்து தங்கும் என இயேசு கூறுவது கடவுளாட்சியில் யாவருக்கும் இடம் உண்டு என்பதைக் காட்டுகிறது. பறவைகளுக்குப் பாதுகாப்பான இடம் ஒதுக்க இயற்கையன்னை மறப்பதில்லை. அதுபோல, கடவுளாட்சியில் எல்லா மக்களும் இடம் பெற வாய்ப்புண்டு என்னும் கருத்தை இயேசு நமக்கு வழங்குகிறார்.

மன்றாட்டு
இறைவா, சிறிய அளவு என்றாலும் உம்மோடு இணைந்து பெரிய மனதோடு செயல்பட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

---------------------------

"கடுகு விதை .. ..பெருங்கிளைகள் விடும்."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

கடுகு விதை முளைத்து வளர்ந்து பெருங்கிளைகள் விடுமாம். வானத்துப் பறவைகள்; அதன் கிளைகளில் தங்குமாம். அறிவியல் கடுமையாக உதைக்குதல்லவா! நண்பர்களே, இது அறிவியல் ஆராய்ச்சி புத்தகம் அல்ல. இறைவனைப்பற்றியும் மனித மீட்பும்பற்றிய வெளிப்படுத்துதல் அடங்கிய புத்தகம்.

கடுகு விதையிலிருந்து பெரிய மரம் தோன்றுகிறது, அதற்கு பெரிய பல கிளைகள் இருக்கிறது, இவை சொல்லும் செய்தி என்னவென்றால் - 'கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை' கடுகிலிருந்து மரமும் வளரும். கடவுளும் மனிதனாவார். கன்னியின் வயிற்றில் மனினாகவும் பிறப்பார். நாம் செயல்படுகிறோம். நாம் வல்லமையுள்ள இறைவன்.

இறையாட்சியை கடுகு விதையிலிருந்து கிளைகள் உள்ள மரத்தை உண்டாக்கும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடுகிறார். இறை அரசு அத்தனை வியப்புமிக்கது. இறை ஆற்றல் அதிர்ச்சிiயுயம் ஆச்சரியத்தையும் தரும் வல்லமைகொண்டது. எத்தனை கிளைகள், வேர்கள், விழுதுகள் வெட்டப்பட்டும், இறையரசின் செயல்பாடுகளில் தயக்கமோ தடுமாற்றமோ இருப்பதில்லை. ஏனென்றால் செயல்படுவது இறைவன். அவரது ஆற்றலின் வெளிப்பாடுகள் அதிசயமானவை.

இறையரசின் செயல்பாடு கடவுளின் வல்லமைக்குச் சான்று. இறைவன் ஆற்றலோடு திருச்சபையில் செயலாற்றுகிறார் என்பதற்குச் சொல்லப்பட்டதே இவ்வுவமை. உம் திருச்சபையை இறைவா நீர் வழிநடத்தும் விதம் ஆச்சரியமானதே. இதை ஏற்றுக்கொள்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:- ஜோசப் லியோன்

 

 

<