முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 1-7.10-17

அந்நாள்களில் ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: "ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை. செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன. ஏழையிடம் ஓர் ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர் குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான். உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும், இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்" என்று நாத்தானிடம் கூறினார். அப்போது நாத்தான் தாவீதிடம், "நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வரவழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப்பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான். நீ மறைவில் செய்ததை, அனைத்து இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச்செய்வேன்" என்று கூறினார். அப்போது தாவீது நாத்தானிடம், "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்" என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், "ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய். ஆயினும், ஆண்டவரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்ததால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்" என்று சொன்னார். பின்பு நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது. தாவீது அக்குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக் கிடந்தார். அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பம் இல்லை. அவர்களோடு அவர் உண்ணவும் இல்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 51: 10-11. 12-13. 14-15
பல்லவி: தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே, கடவுளே! படைத்தருளும்.

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். -பல்லவி

14 கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.
15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.

மாற்கு 4:35-41

பொதுக்காலம், வாரம் 3 சனி

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ``அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்'' என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்கள், ``போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?'' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, ``இரையாதே, அமைதியாயிரு'' என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் அவர் அவர்களை நோக்கி, ``ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, ``காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?'' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

-------------------------

உம் நாமம் சொல்ல ... சொல்ல ...

இந்த சமுதாயத்திலே கடவுளுடைய வார்த்தையை ஏற்கின்ற போது பல உயிரினை விட்டிருக்கின்றார்கள். பல வருடங்களுக்கு முன்பு இலங்கையில் ஆலயத்தில் குழந்தைகளுக்கு மறைக்கல்வி நடந்துகொண்டிருக்கும்போது தீவிரவாதிகள் சிறுவர்களை முழுவதுமாக கொன்றுவிட்டார்கள். புனித ஆஸ்கர் ரொமேரோ திருப்பலியிலே கடவுளுடைய வார்த்தையை பறைசாற்றிக்கொண்டிருக்கும்போது தீவிரவாதிகளால் சுட்டுக் கொலைசெய்யப்படுகின்றார். இவ்வாறு கடவுளுடைய வார்த்தையை ஏற்கின்ற சூழலிலே பலர் உயிரை இழந்திருக்கின்றார்கள்.

அத்தகைய ஒரு சூழலில்தான் இயேசு 72 சீடர்களை அவரின் வார்த்தையை பறைசாற்ற அனுப்புகின்றார். அதில் வரக்கூடிய சவால்களையும், அதனால் வருகின்ற பலன்களையும் எடுத்துக்கூறுகின்றார். இயேசு தன் வார்த்தையை எடுத்துச்செல்ல 72 சீடர்களை அடங்கிய குழுமத்தினை உருவாக்குகின்றார். இவர்களின் முக்கியமான பணி பறைசாற்றக்கூடிய பணி. அதாவது பறைசாற்றுதல் என்ற சொல் கெருசாயின் என்ற கிரேக்க மொழியிலிருந்து உருவாகியது. இவர்களின் முக்கிய பணி பறைசாற்றுதல். தன்னோடு இருப்பதற்காக 12 சீடர்களை உருவாக்குகின்றார். அவர்கள் இயேசுவுக்கு பின் தன் பணியை செய்வதற்காக தேர்ந்தெடுக்கின்றார். இரண்டு குழுமங்களின் வாழ்க்கையும் சவால் நிறைந்ததே. இருந்தாலும் சவால் மத்தியிலும் சாதிக்க துடிக்கின்றார்கள்.

நாமும் அத்தகைய தாகத்தினை பெற இங்கே வந்திருக்கின்றோம். ஆர்வம் இருக்கிறதா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

மாற்கு 4: 35 - 41
எது எனது அலைகள்?

படிக்கின்ற குழந்தைகளுக்கு அரசு தோ்வுகள் கடலில் சீறி எழுந்து பயமுறுத்தும் அலையாக கருதப்படுகின்றன. இளையோருக்கு நீட் தோ்வு அலையாக தெரிகிறது. தாய்மார்களுக்கு EA திட்டம் அலையாக தோன்றுகிறது. தந்தையர்களுக்கு GST வரி அலை. இப்படி எல்லோருடைய வாழ்விலும் அலைகள் என்பது இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த அலைகள் தான் நம்மை அச்சத்த்திற்கு தள்ளுகின்றன. இப்படிப்பட்ட அலைகளில் சிக்கி பலர் தங்கள் உயிரை இழந்து விடுகின்றனர். அனிதா மற்றும் பல நபர்கள் இத்தகைய அலையில் சிக்கிக் கொண்டார்கள்.

ஆனால் நாம் எப்படி இந்த அலையிலிருந்து வெளிவர வேண்டும் என்று இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக பயிற்சியளிக்கின்றார். கெனசரேத் ஏரி என அழைக்கப்படும் கலிலேயக் கடல் உண்மையிலேயே ஓர் ஏரி. பெருங்காற்று வீசும் போது மட்டும் 20 அடிக்கு அலைகள் எழும் என்று விவிலிய பேராசிரியர்களின் கருத்து. அதில் தான் இயேசுவின் சீடர்கள் பயணிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் மீன்பிடி தொழில் செய்கின்றவர்கள். பிறகு எதற்காக அச்சம் கொள்கின்றார்கள் என்று பார்க்கின்றபோது அவர்கள் நம்பிக்கை எனும் கவசத்தை அறிய மறுத்து விட்டார்கள். அதிலும் யூதர்களை பொறுத்தவரையில் கடல் என்பது பேய்கள் வாழும் இடமாக கருதினார்கள். அதனால் தான் சீடர்கள் பயந்து போதகரை எழுப்புவதை நாம் பார்க்கின்றோம்.

நமது வாழ்விலும் கூட நாம் பல நேரங்களில் போதை மற்றும் நம்மால் கைவிட முடியாத பழக்கவழக்கம் மற்றும் தேவையில்லாத எண்ணம் போன்ற அலைகளால் ஆட்கொள்ளப்படுகின்றோம். இந்த அலையிலிருந்து நாம் வெளிவர வேண்டுமென்றால் நம்பிக்கை எனும் பாதுகாப்பு கவசத்தை அணிவோம். அப்போது நாம் இத்தகைய அலையிலிருந்து வெளிவருவோம்.

- அருட்பணி. பிரதாப்

==================

 

ஆறுதலின் இறைவன்

நமது வாழ்வில் துன்பங்கள் வருகிறபோது, நம்மோடு இருந்து, நமக்கு ஆறுதலைத் தரக்கூடியவராக நம் இறைவன் இருக்கிறார் என்பதை, இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத்தருகிறது. நமது இறைவன் ஆறுதலின் தேவனாக இருக்கிறார். ஆறுதல் என்றால் என்ன? ஆறுதல் யாருக்குத்தேவை? மத்தேயு 5: 4 சொல்கிறது: ”துயருறுவோர் பேறுபெற்றோர்: ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்”. யாரெல்லாம் துயரத்தில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இறைவன் ஆறுதலைத் தரக்கூடிய தேவனாக இருக்கிறார்.

இறைவன் மூன்று வழிகளில் தனது ஆறுதலை வெளிப்படுத்துகிறார். முதலாவது, தனது வார்த்தையின் வடிவத்தில் ஆறுதலை வெளிப்படுத்துகிறார். யோவான் நற்செய்தியில் இயேசு சிலுவையில் இருக்கிறபோது, மரியாவுக்கும், அவருடைய அன்புச்சீடருக்கும் மிகப்பெரிய துன்பம். மரியாவுக்கு மகனை இழக்கிற வேதனை. யோவானுக்கு தன்னுடைய குருவை, வழிகாட்டியை இழக்கிற கொடுமை. அந்த நேரத்தில், “இதோ உன் தாய், இதோ உன் மகன்” என்ற இயேசுவின் வார்த்தைகள் இரண்டுபேருக்குமே ஆறுதலைத் தருகின்றன. இரண்டாவது, தனது உடனிருப்பின் வழியாக இறைவன் மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறார். இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து பாலைவனத்தின் வழியாக, இறைவனால் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு வருகிறபோது, இறைவன் அவர்களோடு இருக்கிறார். அவர்களின் துன்பங்களில் ஆறுதல் தரக்கூடியவராக இருக்கிறார். மூன்றாவதாக, நற்செயல்கள் மூலமாக இறைவன் ஆறுதல் அளிக்கிறார். நயீன் நகர கைம்பெண்ணின் ஒரே மகன் இறந்து போய்விட்டான். துயர மிகுதியால் அவள் அழுதுகொண்டிருக்கிறாள். தனது ஒரே ஆதரவு, ஆறுதல் போய்விட்டதே என்று கவலை கொள்கிறாள். இறைவன் அவளுடைய மகனை மீட்டுத்தருகிறார்.

விவிலியம் முழுவதுமே இறைவன் ஆறுதலின் இறைவனாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை. தொடர்ந்து நம்மோடு இருக்கிறார். நம்மை வழிநடத்துகிறார். நம்மில் ஒருவராக இருந்து செயலாற்றுகிறார். நமக்கு ஆறுதலைத் தருகிறார்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

இறைவல்லமையும், இறைப்பராமரிப்பும்

இன்றைய நற்செய்தியில் இயேசு காற்றையும், கடலையும் அமைதிப்படுத்துகின்ற புதுமையை நாம் பார்த்தோம். கடலில் புயற்காற்று எழகிறது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. ஆனால், இயேசுவோ அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கிறார். புயற்காற்று அடித்து, படகில் தண்ணீர் இருக்கிறபோது, இயேசுவால் இவ்வளவு அமைதியாக தூங்க முடிகிறது? என்ற கேள்வி எழுவது இயல்பு. ஒருவேளை இயேசுவின் உடல் மிகவும் களைப்பாக இருந்திருக்கலாம். ஓய்வில்லாத நற்செய்திப்பணி அவருக்கு களைப்பைக்கொடுத்திருக்கலாம். எனவே, அடிக்கடி படகில் பயணம் செய்து, கடலின் இரைச்சலுக்கும், அலைகளுக்கும் பழகிவிட்ட இயேசுவுக்கு, வெளியில் நடப்பது ஒன்றும் பெரிதாகத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

சற்று ஆழமாக இந்த இறைவார்த்தையைச் சிந்திக்கிறபோது, அதிலே மறைந்து கிடக்கிற இறையியலை நாம் உணர முடிகிறது. இயேசு கடும்காற்றுக்கு மத்தியில் அமைதியாகத் தூங்குவது, சாதாரண நிகழ்வல்ல. அது இறைவன் மீது வைத்திருக்கக்கூடிய ஆழமான நம்பிக்கை. இறைப்பராமரிப்பில் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிற ஒரு மனிதனின் தன்னிகரற்ற விசுவாசம். கடவுள் மீது நம்பிக்கை இருந்தால், சீறி எழுகிற அலையும், பொங்கி எழும் கடலும் ஒரு பொருட்டல்ல என்பதுதான், அது நமக்கு உணர்த்துகிற உண்மை. அந்த நம்பிக்கை  விழித்திருக்கக்கூடிய சீடர்களுக்கு இல்லை. ஆனால், தூங்கிக்கொண்டிருக்கிற இயேசுவுக்கு இருக்கிறது. கடவுளின் வல்லமையைத்தாண்டி இந்த உலகத்தில் எதுவும் நடக்காது என்கிற, ஆழமான விசுவாசத்தை இங்கே நாம் பார்க்க முடிகிறது.

பிரச்சனைகளும், துன்பங்களும் நம் அன்றாட வாழ்வில் இருக்கக்கூடியவை. நம்மை பயமுறுத்தக்கூடியவை. வாழ்வு முடிந்து விட்டதோ என்று நம்மை நினைக்க வைப்பவை. ஆனாலும், கடவுளின் பராமரிப்பிலும், வல்லமையிலும் நாம் நம்பிக்கை வைத்தால், எதுவும் நம் கைமீறிப்போகாது. அத்தகைய ஒரு வரத்தை, ஆண்டவரிடத்தில் நாம் கேட்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------
ஆண்டவரே! எங்கள் விசுவாசத்தை அதிகப்படுத்தும்

துன்ப நேரத்தில் நமக்கு ஆறுதலாக இருக்கிறவரும், அமைதிமையத்தருகிறவரும் ஆண்டவர் என்கிற செய்தி, இன்றைய நற்செய்தி வாயிலாக நமக்கு வெளிப்படுகிறது. ஆண்டவர் நம்மோடு இருக்கிறவர். நம்மில் ஒருவராக இருந்து செயலாற்றுகிறவர். நமக்கு சோதனைகள், துன்பங்கள் வருகிறபோது, அவர் நம்மோடு இருந்து, அவற்றை எதிர்த்து நிற்பதற்கு, அவற்றை வெற்றிகொள்வதற்கு உறுதுணையாக இருக்கிறார் என்று நாம் பார்க்கிறோம்.

இயேசுவின் சீடர்களுக்கு கடலைப்பற்றி நன்றாகத் தெரிந்திருந்ததால், தாங்கள் சாகப்போகிறோம், என்பதும் தெரிந்திருந்தது. கடலில் வாழ்க்கை நடத்தும் அவர்களுக்கு, எப்போதும் சாவு வரலாம், என்பது தெரியும். அதிலும் குறிப்பாக, தாங்கள் தப்ப முடியாத நிலைவருகிறபோது, தங்கள் சாவு கண்ணுக்குத் தெரிகிறபோது, அதை அவர்கள் முன்கூட்டியே உணர முடியும். இங்கு அப்படிப்பட்ட நிலைதான் அவர்கள் உணர்கிறார்கள். அவ்வளவுதான். எல்லாமே கைமீறிப் போய்விட்டது. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. தங்களின் சாவு நெருங்கி வந்துவிட்டது என்கிற நிலை வருகிறபோதுதான், அவர்கள் இயேசுவையேப் பார்க்கிறார்கள். அதுவரை, தாங்களே அதனை எதிர்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். இயேசுவை மறந்து விடுகிறார்கள்.

நமது வாழ்விலும், நம்மால் முடியாமல் நிலைமை கைமீறுகிறபோதுதான், நாம் கடவுளைத்தேடுகிறோம். அது உண்மையான நம்பிக்கையாக இருக்க முடியாது. எப்போதும் கடவுள் என்னோடு இருக்கிறார் என்ற எண்ணம், நாம் நமது மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையைவிட மேலோங்க வேண்டும். அந்த நம்பிக்கையை ஆண்டவரிடம் கேட்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

உறுதியான விசுவாசம்

இன்றைய நற்செய்தியில் சிமியோன் மற்றும் அன்னாவைப்பற்றி வாசிக்கிறோம். அன்னா ஒரு விதவைப்பெண் என்று சொல்லப்பட்டிருககிறது. அதாவது அன்னாவின் வாழ்க்கை ஒரு துன்பமயமான வாழ்க்கை. கணவன் இல்லாத கைம்பெண்படும்பாடு, இந்த சமுதாயத்தில் சொல்லி மாளாது. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பம் இரண்டுவிதமான உணர்வுகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும். 1. கடவுள் மட்டில் வெறுப்பு 2. வாழ்க்கையைப்பற்றிய பக்குவம். அன்னா இதில் இரண்டாவது வகை. அவள் கடவுள் மட்டில் நம்பிக்கை நிறைந்தவராக இருக்கிறார். வாழ்வில் துன்பம் வந்தாலும், கடவுளின் அன்பு அவளுக்கு மிகப்பெரிய பலம்.

அன்னாவிற்கு 84 வயது ஆகிவிட்டது. அவள் வயதானாலும், அவளுடைய நம்பிக்கை குறையவில்லை. நாம் கடவுளிடத்தில் ஏதாவது கேட்டு அதற்காகக் காத்திருந்தால், நாளாக, நாளாக நமது நம்பிக்கை குறைய ஆரம்பித்துவிடும். ஆனால், அன்னாவின் விசுவாசம் எத்தனை ஆண்டுகளானாலும் காத்திருக்கும் உறுதியான விசுவாசம். நம்பிக்கை சிறிதும் இழக்காத விசுவாசம். அவளது நம்பிக்கை சிறிதும் தளர்ச்சி அடையவில்லை என்பதற்கு, அவள் ஆலயத்தில் இருப்பது சிறந்த உதாரணம். இத்தனை ஆண்டுகளானாலும், ஆலயத்திற்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறாள். நம்பிக்கையோடு காத்திருக்கிறாள்.

நமது விசுவாச வாழ்விற்கு அன்னாவின் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு. வாழ்வில் துன்பம் வருகிறபோதும், நினைத்தது, கேட்டது நடக்காதபோதும், சோர்ந்து போகத்தேவையில்லை. உறுதியாக, அன்னாவின் விசுவாசத்தோடு வாழ வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஆழமான விசுவாசம்

கலிலேயா கடல் ஒரு சில விசித்திரங்களுக்கு பெயர் பெற்றது. எப்போது புயல் அல்லது கடுமையான காற்று வீசும் என்று தெரியாத அளவுக்கு, தீடீர், திடீர் என்று புயலாலும், சூறைக்காற்றாலும் பயமுறுத்தக்கூடியது இந்தக்கடல். பொதுவாக புயல் சின்னம் உருவாவதை இயற்கையின் அறிகுறிகளை வைத்து நாம் கண்டுபிடித்து விடலாம். வானம் மேகமூட்டமாகத்தோன்றும். காற்று வழக்கத்திற்கு மாறாக பலமாக வீசும். ஆனால் கலிலேயக்கடல் இதிலிருந்து வேறுபட்டது. வானம் தெளிவாக இருந்தாலும், காற்றே இல்லாத சூழ்நிலை இருந்தாலும் அதனை நம்பி புயல் வருவதற்கில்லை என்று ஒருவராலும் அறுதியிட்டுச்சொல்ல முடியாது. கலிலேயா கடல் அமைந்திருக்கின்ற அந்த இட அமைப்புதான் இத்தகைய உடனடி பருவநிலை மாற்றத்திற்கு காரணம்.அதேபோல எப்போது புயலும், காற்றும் ஓயும் என்பதையும் பருவநிலை மாற்றத்தை வைத்து அறுதியிட்டுச்சொல்ல முடியாது.

சீடர்களுக்கு இதைப்பற்றி நன்றாகத்தெரியும். எனவே, சாதாணமானச்சூழ்நிலை என்றால் அவர்கள் இயேசுவின் உதவியை நாடியிருக்க மாட்டார்கள். அவர்களின் வாழ்வே கடல்தான். ஆனால், இயேசுவோடு பயணம் செய்த அன்றைக்கு கடலில் பார்த்த மாற்றம், அவர்கள் என்றைக்குமே சந்தித்திராதது. உயிர்ப்பயம் அவர்களை கலக்கமுறச்செய்துவிட்டது. சாவு பற்றிய பயம் அவர்களை வாட்டியெடுக்க ஆரம்பித்தது. கடைசியில் இயேசுவின் உதவியை நாடுகிறார்கள். இயேசு கடலை அமைதிப்படுத்தியபின் சீடர்களைப்பார்த்துக்கேட்கும் கேள்வி: உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? என்பது. காரணம்: கடலின் மாறுதலுக்கு தீய ஆவிகள்தான் காரணம் என்பது இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த நம்பிக்கை. மாற்கு 1: 21 – 28 ல் இயேசு தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துகிறார். மக்கள் அவரைப்பார்த்து “இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்: அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று வியந்து போற்றினார்கள். அப்போது சீடர்களும் உடனிருந்து இயேசுவின் ஆற்றலைப்பார்த்து வியந்துநின்றனர். அப்படிப்பட்டவர்கள் உயிர்ப்பயம் வந்தவுடன், கடவுளின் ஆற்றலை, வல்லமையை மறந்து, நம்பிக்கையிழந்து நிற்கின்றனர். இயேசு மீண்டும் அவர்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்.

வாழ்க்கைக்கவலைகளும், ஏமாற்றங்களும் கடவுள் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை அதிகப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, எந்தச்சூழ்நிலையிலும் நம் நம்பிக்கையை இழந்துவிடச்செய்வதாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், நாம் பெற்றிருப்பது உண்மையான, ஆழமான விசுவாசம் அல்ல. வெறும் மேலோட்டமான விசுவாசம் தான். ஆழமான விசுவாசத்தில் வளர முயற்சி எடுப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

"தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்"

மத்தேயு, மாற்கு, லூக்கா என மூன்று நற்செய்தி நூல்களிலும் இயேசு காற்றையும், கடலையும் அடக்கிய இந்த நிகழ்வு எழுதப்பட்டுள்ளது. மத்தேயு, லூக்கா இரு நூல்களிலும் புயல் அடித்தபோது, இயேசு படகில் தூங்கிக்கொண்டிருந்தார் என்று வாசிக்கின்ற நாம், மாற்கு நற்செய்தியில் மட்டுமே இயேசு "படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்" என்னும் மிகச் சிறிய, ஆனால் சுவையான தகவலைக் காண்கிறோம். நிச்சயமாக இயேசுவோடு படகில் இருந்த பேதுரு போன்ற ஒரு திருத்தூதர்தான் இத்தகவலை மாற்கு நற்செய்தியாளருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

இதில் நம் கவனத்தை ஈர்க்கவேண்டிய தரவு என்னவென்றால், புயல் அடித்து, அலைகள் படகின்மேல் தொடர்ந்து மோத, படகும் தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தவேளையிலும்கூட இயேசு எந்தக் கலக்கமும், கவலையும், பதட்டமும் இன்றி தலையணைமீது சாய்ந்து தூங்கமுடிந்தது என்பதுதான். நிச்சயமாக, இயேசு நன்கு களைப்புற்றிருக்க வேண்டும். அது மாலை நேரம் என்று நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். பகல் முழுதும் நற்செய்தி அறிவித்தும், பிணியாளரை நலப்படுத்தியும், பயணம் செய்தும் களைத்திருந்தபடியால்தான், "அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்" என்று சீடர்களை அழைத்துக்கொண்டு கடலில் பயணித்தார் இயேசு.

ஆனால், களைப்பினால் மட்டுமே இயேசு புயலையும் மீறித் தூங்கினார் என்று நாம் கொள்ளமுடியாது. இறைத் தந்தைமீது கொண்ட நம்பிக்கையினால்தான் அவர் எவ்விதக் கவலையுமின்றி உறங்கமுடிந்தது. "போதகரே. சாகப்போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?" என சீடர்கள் அலறினர். ஆனால், இயேசுவுக்கு சாவைப் பற்றியோ, படகு மூழ்கப்போவதைப் பற்றியோ உண்மையிலேயே கவலை இல்லைதான்.

"சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்" (திபா 23: 4) என்னும் நம்பிக்கை நிச்சயம் இயேசுவிடம் இருந்தது. நம்மிடமும் இருக்கட்டும்.

மன்றாடுவோம்: பணிவாழ்வின் அனைத்து அறைகூவல்களையும் துணிவுடன் எதிர்கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போலவே நாங்களும் எத்தீங்கிற்கும் அஞ்சாமல் பணிதொடர ஆற்றல் தாரும், ஆமென்.

-பணி. குமார்ராஜா

 

இணையதள உறவுகளே

சிலருக்கு இருந்த இடத்திலேயே இருந்து காலத்தை கடத்திவிடுத்திவிடுவர். இன்னும் சிலருக்கு இக்கரைக்கு அக்கரை எப்பொழுதும் பச்சையாவே தோணும்.ஆகவே எப்போதும் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். இயேசு தன்னோடு இருந்தவர்களை அக்கரைக்குச் செல்ல அழைக்கிறார். ‘அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள், என்று இயேசு அழைத்தபோது, இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு ஆர்வம் மேலோங்கி இருப்பதைக் காண்கிறோம். அக்கரையில் உள்ள மக்களும் தன் போதனையின் தாக்கத்தையும் அருஞ்செயல்களின் பலனையும் பெறவேண்டும் என்ற ஒரே ஆதங்கம் மட்டுமே காரணம்.

அடுத்தவன் மீது நியாயமான அக்கறை கொண்டு, அவன் வாழும் கரைக்குச் செல்ல நீங்கள் முயற்சி செய்தால், உங்கள் வாழ்க்கைப் பயணம் புயல் சூழ்ந்து, பேரலை மோதும் கடல் பயணமாகிவிடும்.ஆனாலும் பயந்து உங்கள் தொண்டுப் பயணத்தை நிறுத்திவிடாதீர்கள். கடுமையான இதுபோன்ற நேரங்களில், கடவுள் உங்களோடு இருக்கிறார்.குழந்தை தன் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று அருகில் காத்திருக்கும் தாய்போல உங்கள் அருகில், உங்களோடு இருக்கிறார்.

கரை தாண்டிச்சென்று பிறருக்கு உதவுங்கள். உங்கள் கஷ்டத்தில் கடவுள் உங்களுக்கு உதவுவார்.

-ஜோசப் லீயோன்

 

அக்கரைக்குச் செல்வோம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

”அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ” என்னும் அழைப்பு இன்று நம் காதுகளில் ஒலிக்கிறது. மாலை நேரத்தில் இயேசு தம் சீடர்களை அக்கரை செல்ல அழைக்கிறார். அவர்களும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, இயேசுவை படகில் வேறு இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு பாடம். நாள் முழுவதும் மக்களுடன் நற்செய்தி அறிவிப்புப் பணியையும், குணமாக்கும் பணியையும் இயேசு செய்தார். ஆனால், மாலையிலோ மக்களை அனுப்பிவிட்டு, தம் சீடருடன் தனியாக இருக்க, செபிக்க, உறவைப் பகிர விரும்பினார் இயேசு. எனவே, மக்களை அனுப்பிவிட்டு, தம் சீடரோடு தனித்திருக்க அழைக்கிறார். அவர்களும் உடன் செல்கிறார்கள்.

நீங்கள் உழைப்பையே வாழ்வுநிலையாக மாற்றிக்கொண்டவரா? ஓய்வின்றி வேலை செய்பவரா? உங்கள் குடும்பத்தினருடன், நெஞ்சுக்கு நெருக்கமானவர்களுடன் நேரம் செலவழிப்பதற்குக்கூட உங்களுக்கு நேரமில்லாதபடி பணியாற்றுகின்றீர்களா? அப்படியென்றால், அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் என்னும் அழைப்பு உங்களுக்குத்தான். உழைத்தது போதும். ஓடி, ஆடி வேலை செய்தது போதும். உங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. உங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்க, உறவாட, தனிமை தேவைப்படுகிறது. அக்கரைக்குச் செல்லுங்கள். உறவைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள். அதன்பின், இன்னும் அதிக ஆர்வத்துடன் உங்களால் பணியாற்ற முடியும்.

மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, அக்கரைக்குச் செல்ல நீர் தந்த அழைப்புக்காக நன்றி. எல்லாப் பணிகளுக்கு மத்தியிலும் உமக்கும், எனக்கு நெருக்கமானவர்களுக்கும் நேரம் ஒதுக்கி, தனித்திருக்க, உறவை மேம்படுத்த அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

''இயேசு விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, 'இரையாதே, அமைதியாயிரு'
என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று'' (மாற்கு 4:39)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு புரிந்த புதுமைகள் பல உண்டு. அவை பெரும்பாலும் மனிதருக்கு நலம் அளிக்கவே செய்யப்பட்டன. பசியால் வாடியவர்களுக்கு உணவளிக்கவும், தீய ஆவியால் பீடிக்கப்பட்டோருக்கு விடுதலை வழங்கவும், முடக்குவாதமுற்றவர்க்கு நலமளிக்கவும், பார்வையற்றோருக்கு மீண்டும் கண்பார்வை கொடுக்கவும், ஏன், இறந்தோருக்கு உயிரளிக்கவும் இயேசு புதுமைகள் செய்தார். ஓங்கி எழுந்த புயலை இயேசு அடக்கியதும் தம் சீடர்களை ஆபத்திலிருந்து காத்திடவே. சீடர்கள் பயந்து நடுங்கினார்கள். எங்கே படகு கவிழ்ந்து தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சினார்கள். ஆனால் இயேசு அவர்கள் நடுவே இருந்தததை அவர்கள் மறந்துவிட்டார்கள். இயேசு அவர்களது நம்பிக்கையின்மையைக் கடிந்துகொண்டார். ''ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டார் (மாற் 4:40).

-- கடவுள் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறார் என்னும் ஆழ்ந்த உறுதிப்பாடு நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். துன்பங்கள் புயல் போல எழலாம். கவலைகள் கடல் அலைபோல நம்மை மூழ்கடிக்க வரலாம். ஆனால் இயேசுவின் உடனிருப்பு அந்த ஆபத்துக்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ''இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்'' என மாற்கு குறிப்பிடுகிறார் (மாற் 4:38). ஆனால் இயேசுவுக்கு வல்லமையளித்த கடவுள் ஒருபோதும் தூங்குவதில்லை. அவருடைய கண்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. அவருடைய பார்வையிலிருந்து நாம் ஒருபோதுமே அகன்று போய்விடுவதில்லை. கடவுளின் அன்புக் கரங்களில் நாம் தவழ்வதால் நம்மை எவ்வித ஆபத்தும் அணுகாது. அவ்வாறு ஆபத்து எழுகின்ற வேளையில் அவர் நம்மைப் பாதுகாக்க விரைந்து வருவார். திருச்சபை என்னும் மக்கள் குழுவை ஒரு படகுக்கு ஒப்பிடுவது வழக்கம். படகு பயணம் போகின்ற வேளையில் புயற்காற்றும் அலையும் எழுந்து அதைப் பயமுறுத்தலாம். ஆனால் நம்மோடு என்றும் இருப்பதாக நமக்கு வாக்களித்த இயேசு நம்மைக் கைவிடமாட்டார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்ற மக்கள் குழுவாகிய தம் திருச்சபைக் குடும்பத்தை அவர் கைவிட மாட்டார் என்னும் உறுதி நமக்கு உண்டு. ''உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?'' என இயேசு இன்றும் நம்மை நோக்கிக் கேட்கின்றார்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தியருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------