முதல் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 32-40

சகோதரர் சகோதரிகளே, கிதியோன், பாராக்கு, சிம்சோன், இப்தாகு, தாவீது, சாமுவேல் ஆகியோர் பற்றியும், இறைவாக்கினர் பற்றியும் எடுத்துரைக்க எனக்கு நேரமில்லை. நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்; நேர்மையாகச் செயல்பட்டார்கள்; கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள்; சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்; தீயின் கொடுமையைத் தணித்தார்கள்; வாள்முனைக்குத் தப்பினார்கள்; வலுவற்றவராய் இருந்தும் வலிமை பெற்றார்கள்; போரில் வீரம் காட்டினார்கள்; மாற்றார் படைகளை முறியடித்தார்கள். பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள். உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து, வதையுண்டு மடிந்தனர். வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்; விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர். சிலர் கல்லெறிபட்டனர்; இரண்டாக அறுக்கப்பட்டனர்; வாளுக்கு இரையாகி மடிந்தனர்; செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்; வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்கு உள்ளாயினர். அவர்களை ஏற்க இவ்வுலகுக்குத் தகுதியில்லாமல் போயிற்று. மலைகளிலும் குகைகளிலும் நிலவெடிப்புகளிலும் பாலைவெளிகளிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள். இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை. ஏனெனில், நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவுபெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில் கொண்டு, நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 31: 19-20. 20b. 21. 22. 23

பல்லவி: ஆண்டவரை நம்புவோரே, உங்கள் உள்ளம் உறுதி கொள்வதாக.

19 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது!
உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி!
20 மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! -பல்லவி

20bஉ நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! -பல்லவி

21 ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில்,
அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில் எனக்கு விளங்கச் செய்தார். -பல்லவி

22 நானோ, கலக்கமுற்ற நிலையில் `உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன்' என்று சொல்லிக்கொண்டேன்;
ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது, நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தீர். -பல்லவி

23 ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்;
ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்;
ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

மாற்கு 5:1-20


பொதுக்காலம், வாரம் 4 திங்கள்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20

அக்காலத்தில் இயேசுவும் அவர் சீடரும் கடலுக்கு அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகை விட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால் கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார். அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு, ஓடிவந்து அவரைப் பணிந்து, ``இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்'' என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், ``தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ'' என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், ``உம் பெயர் என்ன?'' என்று கேட்க அவர், ``என் பெயர் `இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்'' என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாம் என்று அவரை வருந்தி வேண்டினார். அங்கே மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. ``நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்'' என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடுகூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, ``உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்'' என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

சந்திப்பு ...

இந்த சமுதாயத்திலே பலவிதமான சந்திப்புகள் நடக்கின்றன. ஒருசில சந்;திப்புகள் உறவை வளர்க்கின்றன, ஒருசில சந்திப்புகள் உறவை பிரிக்கின்றன, ஒருசில சந்திப்புகள் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன, ஒருசில சந்திப்புகள் மாற்றத்தைத் தடுக்கின்றன. எல்லா சந்திப்புகளுமே ஒரே மாதிரியாக இந்த சமுதாயத்தில் நடைபெறுவது கிடையாது.

அதுபோலதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் இயேசுவின் பலதரப்பட்ட சந்திப்புகளை பார்க்கின்றோம். ஒரு சந்திப்பு உள்ள மாற்றத்தினைக் கொடுக்கின்றது. இச்சந்திப்பு கலிலேயா கடலுக்கு மேற்பகுதியில் நடக்கிறது. இங்கு பாதிக்கப்பட்டவரின் சந்திப்பு மனம் சார்ந்த தளர்ச்சியாகவோ (அ) ஒழுங்கீனமாகவோ இருந்திருக்கலாம். எனவேதான் அவரின் இருப்பிடம் யாருமே விரும்பாத இடமாக இருக்கிறது. இயேசுவின் சந்திப்பால் அவரின் உள்ளம் மாற்றம்பெற்று குணமடைகின்றார். மற்றொரு சந்திப்பில் வாழ்க்கை மாற்றம் பெறுகிறது. சுகம் பெற்றவர் வீட்டுக்குச் செல்ல இயேசு கட்டளையிடுகின்றார். இவர் ஒரு பிற இனத்தைச் சார்ந்தவர். இயேசுவைப் பற்றி அறிந்தவர்கள் ஆனால் இயேசுவைப் பின்பற்ற தயங்குபவர்கள். எனவேதான் இயேசுவின் இந்த சந்திப்பின் வழியாக நடந்த சுகத்தினால் அவரின் குடும்பம் முழுவதுமே மாற்றம் பெற்று விடுகிறது. இந்த சந்திப்பின் விளைவில் வாழ்க்கை மாற்றம் பெறுவதை நாம் காண்கிறோம்.

நாம் திருப்பலியில் இயேசுவை ஒவ்வொரு நாளும் சந்திக்கின்றோம். ஏதாவது மாற்றத்தினைக் காண்கின்றோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

30.01.2023 – மாற்கு 5: 1 - 20
ஆவியின் ஆற்றலாய்

எழுப்புதல் சபைக் கூட்டங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன. காரணம், மக்களின் எண்ணம் அங்கு ஆவியில் அதிகமாக செயல்படுகிறது. அதனால் தான் கத்தோலிக்க ஆலய வழிபாடுகளில் பங்கெடுப்பவர்களின் கூட்டத்தை விட எழுப்புதல் சபைக் கூட்ட வழிபாடுகளில் அநேக நபர்கள் பங்கெடுக்கின்றனர். இந்த ஆவியின் ஆற்றல் ஒரு வகை. மற்றொருபுறம் பார்க்கின்ற போது தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்ட (தூக்கு, மருந்து குடித்தல்) ஆன்மாக்களின் ஆவிகளும் இந்த மண்ணில் தான் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆவியும் வல்லமை நிறைந்ததாக நாம் நம்முடைய சிந்தனையை எண்ணிக் கொண்டு இருக்கின்றோம். இந்த இரண்டுக்குமிடையே உள்ள வேறுபாட்டினைத் தான் இன்றைய வாசகம் விளக்குகிறது.

இறைமகன் இயேசுவின் இந்த சந்திப்பு கலிலேயா கடலுக்கு மேற்பகுதியில் அதாவது பிற இனத்தவர் வாழ்ந்த இடத்தில் நிகழ்ந்தது. இங்கு தான் மூன்று வகையான பேய்களை அவர் ஓட்டுகின்றார். முதலில் சிந்தனையில் உள்ள பேய். அதாவது யூத மக்கள் தங்களுக்குப் புரியாத நோய்களை எல்லாம் பேய் பிடித்தது என்று கூறி, பேய் மீது பழி போட்டு விட்டனர். அதே மக்கள் சிந்தனையுடன் இயேசு இங்கு செயல்படுகின்றார். இரண்டாவது வகை பேய், சொல் வழியாக உள்ள பேய். தன்னை பிடித்திருந்த பேய் ‘இலேகியான்’ என்று கூறினான். அதாவது இயேசு வாழ்ந்த கலிலேயா கடலின் மேற்குப் பகுதியில் ‘இலேகியோன்’ என அழைக்கப்பட்ட உரோமைச் சேனைகள் குவிக்கப்பட்டிருப்பதையும், அவற்றின் அநீதிக்குரிய பிரசன்னமே மனக்குழப்பதை ஏற்படுத்தி தீயசக்தியாக மாறுகிறது என்று கூறினர். இயேசு இது தவறு என்று எண்ணி அவர்களின் வார்த்தையில் உதித்த பேயை நீக்குகின்றார். மூன்றாவது வகை செயலினால் வந்த பேய். பன்றியினை அசுத்த பிராணிகள் என்று யூத மக்கள் கருதினர். எனவே, இவற்றை பிற இனத்தாரோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். எனவே அத்தகைய பன்றிகளை பேயாக எண்ணினர். எனவே அவற்றை ஊரை விட்டு வெளியே விரட்டுவதிலே குறிக்கோளாக செயல்பட்டார்கள். எனவே தான் இயேசு அவற்றினை கடலுக்குள் செல்ல கட்டளையிடுகின்றார்.

இயேசு பெற்றிருந்த அதே ஆவியை நாமும் பெற்றிருக்கிறோம். அது போல யூதர்கள் பெற்றிருந்த அதே பேய் குணங்களையும் நாம் பெற்றிருக்கிறோம். நமக்குள் எது செயல்பட முயற்சி எடுக்க போகிறோம். ஆவியா? பேயா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

 

திருப்பாடல் 31: 19 – 20a, 20bc, 21, 22, 23
”ஆண்டவரை நம்புவோரே! உங்கள் உள்ளம் உறுதிகொள்வதாக!”

தாவீது அரசர் அவருடைய வாழ்நாட்களில் சவுல் அரசரிடமிருந்து அதிகமான துன்பங்களை எதிர்கொண்டார். தாவீது, மக்களால் தன்னைவிட அதிகமாக நேசிக்கப்படுவதை அறிந்த சவுல் அரசர், தாவீதை ஒழித்துக்கட்ட விரும்பினார். அவருடைய கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, தாவீது ஓடிக்கொண்டே இருந்தார். பலமுறை மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். அந்த நேரங்களில் கடவுள் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை தான், தன்னை முழுமையாகக் காப்பாற்றியதாக அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில் நம்பிக்கை கொள்வது வெகு எளிதானது அல்ல. அதைத்தான் இந்த திருப்பாடலில் தாவீது அரசர் பாடுகிறார்.

கடவுளிடத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறபோது, நிச்சயமாக பலவிதமான சோதனைகள் நம்மை தாக்கிக்கொண்டே இருக்கும். அந்த சோதனைகள் தொடர்ச்சியாக வரும்போது, நமக்குள்ளாக எழக்கூடிய கேள்விகள், ஏன் எனக்கு தொடர்ச்சியாக துன்பங்கள் வந்து கொண்டிருக்கிறது? இந்த துன்பங்களில் கடவுள் எங்கே சென்றார்? என்னுடைய முழுமையான நம்பிக்கையை நான் ஆண்டவரில் தானே வைத்தேன் என்று, நமக்குள்ளாக நெருக்கடிகள் கிளம்பும். அந்த தருணத்தில் நாம் உறுதியோடு இருக்க வேண்டும். நமது விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

அன்றாட வாழ்வில் இந்த உறுதி நம்மில் பலருக்கு இல்லாமல் போவது வேதனையான ஒன்று. விசுவாசத்தில் உறுதியை நமக்கு வாழந்து காட்டியவர்கள் தான், நமது புனிதர்கள். நாமும் விசுவாசத்தில் உறுதியாக இருக்கிற மனநிலை வேண்டி, இந்த திருப்பாடலில் நாம் மன்றாடுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசு சந்தித்த சவால்கள்

”கடவுள் ஏன் இப்படி தொடர்ந்து எனக்கு சோதனைகளை தந்து கொண்டிருக்கிறார்?” என்று நம்மில் பலபேர் புலம்புவதைக் கேட்டிருப்போம். அடுக்கடுக்காக அவர்கள் வாழ்வில் சந்தித்த துன்பங்களின் பாரம் தாங்காமல், அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகள் தான் இவை. ஆனால், இயேசுவின் வாழ்வை நாம் சற்று சிந்தித்துப்பார்த்தால், அவரது மூன்றாண்டு பணிவாழ்வின் ஆழத்தை நாம் பார்த்தால், ஒரு மனிதன் இவ்வளவு துன்பங்கள், சவால்களுக்கும் மத்தியில் நேர்மையாக, உண்மையாக, கொண்ட கடமையில் கண்ணும் கருத்துமாக வாழ முடியுமா? என்று நாம் ஆச்சரியப்படுவோம். அந்த அளவுக்கு இயேசு ஒரு நிறைவாழ்வை வாழ்ந்திருக்கிறார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தீய ஆவி பிடித்திருந்த மனிதனை எதிர்கொள்கிறார். இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம் என்றால், கடலின் சீற்றத்திலிருந்து தனது சீடர்களை பாதுகாப்பாக கரைசேர்த்திருக்கிறார். அதிலிருந்து நிலத்திற்கு வந்தவுடன் தீய ஆவியை எதிர்கொள்கிறார். ஒரு பக்கத்தில் சதுசேயர், பரிசேயர், மறைநூல் அறிஞர் என, அதிகாரவர்க்கம் இயேசுவை பழிவாங்க காத்துக்கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கத்தில், பொதுமக்கள் இயேசுவை பைத்தியக்காரன், மதிமயங்கிப் பேசுகிறான் என்று பழிபேசுகிறது. இன்னொருபுறத்தில் இயற்கையின் சீற்றத்திற்கு எதிராகப் போராடுகிறார். இன்றைய நற்செய்தியில் தீய ஆவிக்கெதிராக இயேசு செயலாற்றுகிறார். இவ்வாறு அவர் சந்தித்த நிகழ்வுகள் ஒவ்வொன்றுமே துன்ப அனுபவத்தையும், சவாலையும் இயேசுவுக்குக் கொடுத்தது. ஆனால், இயேசு அதைரியப்படாமல், சோர்ந்து போகாமல், துவண்டுபோகாமல் கடமையை பொறுமையாக, நிதானத்தோடு செய்கிறார்.

நமது வாழ்வில் தொடர்ந்து துன்பங்களையும், சோகங்களையும் சந்திக்கிறபோது, நாம் துவண்டுபோகக்கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும். நிதானத்தோடு செயல்பட வேண்டும். சவால்களை துணிவோடு சந்திக்க வேண்டும். அப்போது நிச்சயம் நமக்கு வெற்றி உண்டு.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

வாழும் நற்செய்தியாய் மாறுவோம்

காடுகளும், திராட்சைத்தோட்டங்களும், பாழடைந்த இடங்களும், கல்லறைத்தோட்டங்களும் பேய்களின் வாழிடம் என்று யூத மக்கள் நம்பினர். இயேசுவும் அவருடைய சீடர்களும் வந்தநேரம் இருளடைந்திருந்த நேரமாக இருந்திருக்க வேண்டும். தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதனின் பெயர் இலேகியோன் என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை உரோமைப்படைப்பிரிவில் பயன்படுத்தப்படுகிற வார்த்தை. ‘இலேகியோன்’ என்பது உரோமைப்படையின் 6,000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு. பேய் பிடித்திருந்த அந்த மனிதனுக்கு இந்த வார்த்தை பழக்கப்பட்ட வார்த்தையாக இருந்திருக்க வேண்டும். தனக்குள்ளாக பெரிய தீய ஆவிகளின் படையே குடிகொண்டிருக்கிறது என்கிற அவனது எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தப்பதில். மேலும் பாலஸ்தீனம் உரோமையர்களுக்கு அடிமையாக இருந்த இந்த காலக்கட்டத்தில், வன்முறைகள், கலகங்கள் ஏற்பட்டால், அதனை அடக்க இந்த படைப்பிரிவு கொடுமையான முறையில் மக்களை அடக்கி ஒடுக்கியது. இதுவும் இந்தப்பெயரை தீய ஆவி பிடித்தருந்த மனிதன் பயன்படுத்தியதற்கு காரணமாக இருக்கலாம். தனக்குள்ளாக வன்முறையான தீய ஆவிகள் குடிகொண்டிருப்பதை இப்படி அவன் வெளிப்படுத்தியிருக்கலாம்.

தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதன் உறவுகளை இழந்த மனிதனாக இருந்தான். இயற்கையிடமிருந்து விலக்கிவைக்கப்பட்டிருந்தான்.(5:3 கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்). மனிதர்களிடமிருந்கு ஒதக்கி வைக்கபட்டிருந்தான் (5:4 விலங்குகளாலும், சங்கிலிகளாலும் கட்டியிருந்தார்கள்). கடவுளின் சாயலை இழந்திருந்தான். (5:5 தம்மையே கற்களாலும், காயப்படுத்தி வந்தார்). ஆக, அடிப்படை உறவுகள் அனைத்திலிருந்தும் ஒதுக்கப்பட்டிருந்தான். இயேசு, அந்த மனிதன் இழந்த மூன்று உறவுகளையும் புதுப்பித்துக்கொடுக்கிறார். அந்த மனிதன் இயேசுவுக்கு சாட்சியாக மாறி, இறைவன் தனக்கு செய்த நன்மைகளையெல்லாம், அந்தப்பகுதி முழுவதும் அறிவிக்கிற உண்மையுள்ள சீடராக மாறுகிறான்.

கடவுள் நமது வாழ்க்கையில் எவ்வளவோ நன்மைகளைச்செய்து வந்திருக்கிறார். அவரது அளவுகடந்த இரக்கத்தை நாம் உணர்ந்திருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சாட்சியாக மாற வேண்டும். இறைஇரக்கத்தை மற்றவர்கள் உணரும் வண்ணம் தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதனைப்போல, நம்முடைய வாழ்வே மற்றவர்களுக்கு ஒரு நற்செய்தியாக விளங்க வேண்டும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

 

முழு விடுதலை

இயேசு செய்த வியத்தகு அருங்குறிகளுள் இன்று நாம் வாசிக்கின்ற நிகழ்ச்சியும் ஒன்று. தீய ஆவி பிடித்த ஒரு மனிதரை இயேசு விடுவித்து, நலப்படுத்தி, வீட்டிற்கு அனுப்பி வைத்த இந்த நிகழ்வில் அடங்கியுள்ள ஒருங்கிணைப்புக் கூறுகளைக் கவனிப்போம்:

1. சமூகத்தோடு ஒன்றிப்பு: இந்த மனிதன் தங்கியிருந்து இடம் கல்லறை என்று மாற்கு குறிப்பிடுகின்றார். மனித நடமாட்டத்தைவிட்டு ஒதுங்கி, ஊருக்கு வெளியே கல்லறையிலே தங்கியிருந்த மனிதரை இயேசு குணப்படுத்தி, ஊருக்குள் அனுப்பி வைக்கிறார்.

2. தம்மோடு ஒன்றிப்பு: இந்த மனிதர் "தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்" என்னும் செய்தி, அவர் தன்னிலை மறந்து, தாம் யார் என்பதையே உணராது வாழ்ந்து வந்ததைக் குறிக்கிறது. அதுமட்டுமல்ல, குணம்பெற்ற அவர் "ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன்" இருந்ததை மக்கள் கண்டனர் என்றும் பார்க்கிறோம். எனவே, இயேசு அம்மனிதரைத் தம்மோடு ஒருங்கிணையச் செய்தார்.

3. உறவினரோடு ஒன்றிப்பு: நலம் பெற்ற மனிதர் இயேசுவோடு இருக்கவேண்டும் என்னும் விருப்பத்தைத் தெரிவித்தபோது, "உம் உறவினருக்கு அறிவியும்" என்று சொல்லி அவரை உறவினர்களிடம் ஒன்றுசேர்க்கிறார்.

இவ்வாறு, இயேசு இந்த மனிதரைத் தீய ஆவியிடமிருந்து மட்டும் விடுவிக்கவில்லை, மாறாக அவர் தம்மிடமிருந்தும், உறவினர், குடும்பத்தினரிடமிருந்தும், ஊர், சமூகத்தைவிட்டும் பிரிந்திருந்த நிலையை மாற்றி, மீண்டும் அவரை ஒரு முழு மனிதராக, சமூகத்தின் முழு உறுப்பினராக மாற்றி அனுப்புகிறார்.

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, முழு நலமும், ஒருங்கிணைப்பும் தருபவரே, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் எங்களோடும், எம் குடும்பத்தினர், அயலார்... என சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களோடும் நல்லுறவு கொள்ளும் அருளைத் தந்தருளும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-பணி. குமார்ராஜா

---------------------------------------

இணையதள உறவுகளே

இன்று நாம் தெக்கப்போலி நாட்டின் மறைப்பணியாளரைச் சந்திக்கிறோம். இவர் பல பேய் பிடித்தவர். இதைவிட, பல குறைகள், பலவீனங்கள், பாவங்கள், தவறுகள் செய்தவர் என்று வைத்துக்கொள்வோம். குடும்பத்திலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டவர். இதுபோன்ற விரக்தியிலும் வேதனையிலும் அந்த மனிதனின் செயல்பாடுகள் கொடூரமாக இருந்ததில் வியப்பில்லை.

அந்த மனிதனை, அவன் கேட்பதற்கு முன்னதாக, தூரத்தில் இருக்கும்போதே அவனை அடையாளம் கண்டு, அவனிடமிருந்த அத்தனை தீக்குணங்களையும் போக்கி, மனதை மாற்றி, மனிதனாக்கி, குடும்பத்தோடு வாழ வகை செய்து, உறவோடு ஒன்றித்து வாழச் செய்துள்ளார் நம் தெய்வம் இயேசு.

அனுபவித்ததை அண்டை அயலாருக்கெல்லாம் சொல்லி, தெக்கப்போலி நாடு முழுவதும் இயேசுவின் பெயரைப் பரப்பிவிட்டான். அருமையா மறைபரப்புப் பணியாளர். நமக்கு நடக்கவில்லையா? கொஞ்சம் உட்கார்ந்து சிந்தியுங்கள். நம் தெய்வம் உங்கள் குடும்பத்திற்கும் உங்களுக்கும் செய்துகொண்டு வருபவை நிறைய இருக்கும். உங்கள் பகுதியில் நீங்கள் ஒரு மறைப்பணியாளராவீர்கள். இயேசு உங்களை எல்லா செல்வங்களாலும் நிறைத்து ஆசீர்வதிப்பார்.

-ஜோசப் லீயோன்

 

உடல், உள்ள, சமூக நலம்!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் பரிவின் வெளிப்பாடு நமக்கு வியப்பைத் தருகிறது. அவர் நமக்கு ஒருங்கிணைந்த, முழுமையான நலம் தருபவராக இருக்கிறார் என்பதற்கு இன்றைய நற்செய்தி வாசக நிகழ்வு சான்றாகத் திகழ்கிறது. தீய ஆவி பிடித்த மனிதர்மீது பரிவு கொள்ளும் இயேசு அவருக்கு நான்கு விதமான நலன்களைப் பொழிகிறார். 1. அவருக்கு உடல் நலம் தந்து, அவரைக் குணமாக்குகிறார். 2. அவருக்கு உள்ள நலம் தந்து, அவரது மனநோயைக் குணமாக்குகிறார். 3. அவரது ஆன்மாவைத் தீய ஆவியின் பிடியிலிருந்து விடுவித்து, அன்பால், நற்செய்தி ஆர்வத்தால் நிரப்புகிறார். 4. அவரை மீண்டும் அவரை ஊருக்குள் அனுப்பி, தம் உறவினரோடு சேர்ந்து, சமூகத்தில் தன்னை இணைத்துக்கொள்ளப் பணிக்கிறார்.

எந்த ஓர் அருஞ்செயலும், குணமளித்தலும் இந்த நான்கு வகைப் பரிமாணங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே முழமையான, ஒருங்கிணைந்த நலவாழ்வு. இயேசு இத்தகைய முழமையான நலத்தை இன்றும் நமக்குத் தருகிறார். நாமும் அதற்காக அவரிடம் மன்றாடுவோம்.

மன்றாடுவோம்: தெய்வீக மருத்துவரான இயேசுவே, இறைவா, உம்மைப் போற்றுகிறோம். தீய ஆவியால் பாதிக்கப்பட்ட மனிதருக்கு நீர் நான்கு வகையான நலனைத் தந்ததற்காக உம்மைப் புகழ்கிறோம். எங்களுக்கும் இந்த ஒருங்கிணைந்த நலத்தைத் தருவீராக. எங்களையும் உம் அருள்கரத்தால் தொட்டு, முழமையான குணம் அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

 

----------------------------

''இயேசு அம்மனிதரிடம், 'உம் பெயர் என்ன?' என்று கேட்க
அவர், 'என் பெயர் 'இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்' என்று சொல்லி,
அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று
அவரை வருந்தி வேண்டினார்'' (மாற்கு 5:9-10)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு பிற இனத்தார் வாழ்ந்த பகுதியாகிய கெரசேன் என்னும் இடத்தில் பேய்பிடித்த ஒருவருக்கு நலமளிக்கிறார். அந்த வரலாற்றைப் பதிவு செய்த மாற்கு (மாற் 5:1-20) மிக விரிவான விளக்கம் தருகிறார்; வேடிக்கையான சில தகவல்களையும் வழங்குகிறார். அதாவது தீய ஆவி பிடித்த அந்தப் பிற இன மனிதரின் உறைவிடம் ''கல்லறைகள்'' (மாற் 5:2-3). அதாவது அவர் உயிர் வாழ்ந்தாலும் இறந்தவர் போலவே இருந்தார். அவரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு, அவரை ''உன்னத கடவுளின் மகன்'' என அழைக்கின்றன (மாற் 5:7). ஆனால் இயேசுவோடு கூட இருந்து, அவர் வழங்கிய போதனைகளைக் கேட்டு, அவர் புரிந்த அரும்செயல்களைக் கண்டு அனுபவித்த சீடர்களோ இயேசு யார் என்பதைக் கண்டுகொள்ளாமல் மந்த புத்தியுடையோராய் இருக்கின்றனர். பிற இனத்தாராகிய கெரசேனர் பகுதியில் பெரும் திரளான பன்றிக் கூட்டம் மேய்ந்துகொண்டிருக்கிறது. பன்றிகளின் எண்ணிக்கை இரண்டாயிரம் என மாற்கு மிகைப்படுத்திக் கூறுகிறார். பன்றி என்றாலே மிகவும் அசுத்தமான மிருகம் எனக் கருதினர் யூதர். அவர்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை. இயேசு தீய ஆவிகளை விரட்டியதும் அவை பன்றிக் கூட்டத்தில் நுழைந்துவிடுகின்றன. அவை ''இலேகியோன்'' எனத் தங்களை அழைக்கின்றன. இங்கேயும் மாற்கு நகைச் சுவையோடு பேசுவதைக் காண்கிறோம். அதாவது, பிற இனப்பகுதியாகிய கெரசேனில் உரோமைப் படை (''இலேகியோன்'') நிறுத்தப்பட்டிருந்தது. நாட்டை ஆக்கிரமித்த உரோமையர்களை மாற்கு ''பன்றிகளுக்கு'' ஒப்பிடுகிறாரா?

-- இயேசுவின் வல்லமையால் நலமடைந்த மனிதர் தம்மிடமிருந்து தீய ஆவிகள் நீங்கியதும் ''ஆடையணிந்து, அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருக்கிறார்'' (மாற் 5:15). உயிரற்ற மனிதரைப் போலக் கல்லறைகளில் வாழ்ந்த அந்த மனிதர் முற்றிலும் மாற்றமடைந்து விட்டார். அவருடைய வாழ்வில் புதுமை நிகழ்ந்ததால் அவர் புதிய மனிதராக மாறிவிட்டார். இயேசுவைப் பின்தொடர்ந்து செல்ல விரும்புகிறார் அந்தப் புதிய மனிதர். ஆனால் இயேசு அவரைப் பார்த்து, ''நீர் பெற்ற இறை அனுபவத்தை உம் வீட்டாரோடும் ஊராரோடும் பகிர்ந்துகொள்ளும்'' என்று கூறி அனுப்பிவிடுகிறார். நாம் மனமாற்றம் பெற்றுப் புதிய மனிதராக மாற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். சாவிலிருந்து விடுதலை பெற்றுப் புது வாழ்வு பெற்றிட வேண்டும் என்றால் நாமும் இயேசுவைக் ''கடவுளின் மகன்'' என அடையாளம் கண்டு, அவர் காட்டிய வழியில் நடந்து செல்ல வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தையும் வாழ்வையும் புதுப்பித்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

-------------------

".. ..உமது வீட்டிற்குப் போய்.. அறிவி"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இயேசு நமக்காக என்னவெல்லாமோ செய்கிறார். நமக்காக எதையும் தாங்கிக்கொள்கிறார். நமக்கு நல்வாழ்வு கொடுப்பதற்காக தான் காயப்படுவதற்கும், இரத்தம் சிந்துவதற்கும்,கொடிய பாடுகள்படவும், தன் உயிரை தியாகம் செய்யவும் முன்வந்தார். இன்றும் நம் வாழ்வு சிறக்க இவை அனைத்தையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்.

தீய ஆவியின் பிடியில் சிக்கித் தவித்த மனிதனை அதிலிருந்து விடுவிக்க அவர் எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது. தீய ஆவியும் கேள்வி கேட்கிறது, "உமக்கு இங்கு என்ன வேலை?" அதுவும் விண்ணப்பம் வைக்கிறது, "நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்".
தீய ஆவியை அந்த மனிதனிடமிருந்து விரட்டிய பின் அவருக்குக் கிடைத்த பரிசு, 'தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்' என்பதுதான்.

இயேசுவோ, அதற்காக மனம் வேதனைப்படவோ, தான் செய்து வந்த நற்பணியை நிறுத்திவிடவோ இல்லை. தன் பணி தொடர அம்மனிதனை நோக்கி,"உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார். என் பின்னால் வர வேண்டாம். உன் வீட்டில் நன்றாக வாழ்ந்து, உன் உற்றார் உறவினருக்கு இயேசுவை எடுத்துச் சொல்லி, சாட்சியம் பகர அனுப்பினார்.

நமக்கும் நாள்தோறும் பல நன்மைகளைச் செய்து, நம் வீடுகளுக்கு அனுப்பியிருக்கிறார். நாம் வாழும் சூழலில் நம் அருகில் வாழ்வோருக்கு இயேசுவை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற கட்டளையோடு நம்மை அனுப்பியுள்ளார். இதைச் செய்து இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:-- ஜோசப் லியோன்

வாழ்வில் வசந்தம் வீச வேதம் வீதிக்கு வர வேண்டும்.

"உன்னத கடவுளின் மகனே உமக்கு இங்கு என்ன வேலை?" நியாயமான கேள்வி. இன்று பரவலாக கேட்கப்படும் கேள்வி. ஆமாம். இறைமகனுக்கு பேய்களோடு என்ன வேலை? கடவுளுக்கு கல்லரையில் என்ன வேலை? பாவமும் பாவச் செயல்களும் நடைபெரும் இடத்தில் பக்தனுக்கு என்ன வேலை? அநீதியும் அவமானமும் மலிந்த இடத்தில் ஆண்டவனின்அடியானுக்கு என்ன வேலை? மனிதமும் மனிதாபிமானமும் சிதைக்கப்படும் இடத்தில் மதத்திற்கு என்ன வேலை? கொள்ளையும் கொலையும் குவியும் இடத்தில் கோயில் தெய்வத்திற்கு என்ன வேலை? ஏழ்மையும் வறுமையும் வளர்த்து உருவாக்கப்படும் இடத்தில் வானக இறைவனை வழிபடும் மக்களுக்கு என்ன வேலை? நியாயமான கேள்வி. இன்று பரவலாக கேட்கப்படும் கேள்வி.

இறைவன் விண்ணகத்தில் இருக்க வேண்டியதுதானே? ஆண்டவன் ஆலயத்தில் இருக்க வேண்டியதுதானே? ஆயர்கள் ஆட்டுப்பட்டியோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமல்லவா! நல்லவர்கள் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிட வேண்டியதுதானே? திருச்சபை, திருவருட்சாதனங்களோடு நின்று விடவேண்டும். வழிபாடு, தேர், திருவிழா, அர்ச்சனை, ஆராதனை இவற்றோடு முடித்துக்கொள்ள வேண்டும். இதுவும் நியாயமான கேள்விதானா?

இன்று எழும்பும் இத்தகைய கேள்விகளுக்கும் சருக்கல்களுக்கும் சவாலாக இயேசு செயல்பட்டதைப் பார்க்கிறோம். தெய்வம் பேயை சந்திக்கிறது. கடவுள் கல்லரையை நெருங்குகிறார். புனிதர்; பாவியை அரவணைக்கிறார்.

அநீதியை, அசிங்கத்தை அப்புறப்படுத்த காலம், நேரம், இடம் பார்க்க அவசியமில்லை. ஒதுங்கி, ஒடுங்கி, அடங்கிப்போக அவசியமில்லை. வேதம் வீதிக்கு வர வேண்டும். தெய்வம் தெருவுக்கு வர வேண்டும். எங்கெல்லாம் இருள் சூழ்ந்துள்ளதோ அங்கெல்லாம் பற்றிப் படர்ந்து சுடர்விட்டு எரியவேண்டும்.

எல்லோர் வாழ்விலும் வசந்தம் வீச நல்லவர்கள் நாம் ஒதுங்காமல் ஓரம்கட்டாமல் உட்புகுந்து செயல்பட வலுவேண்டுகிறேன்,தெய்வமே.

:-- ஜோசப் லியோன்