முதல் வாசகம்

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 7: 12-15

அந்நாள்களில் பெத்தேலின் குருவாகிய அமட்சியா ஆமோசைப் பார்த்து, ``காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்'' என்று சொன்னான். ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: ``நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, `என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு' என்று அனுப்பினார்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 85: 8யb-9. 10-11. 12-13

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.

8யb ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி



இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-14

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக்கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந் தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்துபாட வேண்டுமென அவர் விரும்பினார். நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள். அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.

மாற்கு 6:07-13

பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13

அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித்தார். மேலும், ``பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். மேலும் அவர், ``நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்று அவர்களுக்குக் கூறினார். அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

01.02.2024 வியாழன்
எழுமையில் செழுமை பெற

சேலம் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் சிங்கராயர் அவர்கள் மிகவும் எளிமையான ஆயர். தன் பணிவாழ்வில் தன் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஊர்களையும் சந்தித்து பணியில் செழுமை பெறுகின்றார். இங்கிலாந்து ழுஒகழசன பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜேம்ஸ்பாண்டு, இறுதிவரை தான் வாங்கிய சம்பளத்திலிருந்து 7 பவுன்ட் மட்டுமே எடுத்து எளிமையான வாழ்வு வழியாக செழுமை கண்டதாக கூறுவார்கள். இவ்வாறு சமுதாயத்தை புரட்டி பார்த்தோமென்றால் பல மனிதர்கள் எளிமை வழியால்தான் செழுமை அடைந்திருக்கின்றார்கள்.

இன்றைய வாசகத்திலும் இயேசு அதே கருத்தினைத்தான் முன்வைக்கின்றார். எளிமைதான் செழுமைக்கு வழி என்ற உன்னதமான கருத்தினை பதிக்கின்றார். ஏனென்றால் இயேசு கொடுக்கும் அந்த அதிகாரத்தை எளிமை வடிவில்தான் வழங்க வேண்டும். நற்செய்திப் பணியில் வேறு தனிப்பட்ட தேவைகளோ, வசதிகளோ தடையாக இருக்கக்கூடாது. அதனால்தான் இயேசு எளிமையாகவே அவர்களை அனுப்புகின்றார். எதற்காக இருவர் இருவராக அனுப்பினாரென்றால், ஒரு செய்தி ஏற்றுக்கொள்ளப்பட யூதச் சட்டத்தின்படி இருவரின் சாட்சியம் தேவை. ஆகவே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை மக்கள் ஏற்க சீடர்கள் இருவர் இருவராகச் செயல்படுவது சிறந்தது என இயேசு நினைக்கின்றார் (இச. 19 : 15). இந்தப் பயிற்சியில் இயேசு சீடர்களுக்கு தீய ஆவிகள் மீது அதிகாரம் தருகிறார். ஏனெனில் கடவுளின் ஆட்சி மக்களிடம் வர, அதற்கு எதிராக விளங்கிய தீமையின் ஆட்சி அகல வேண்டும். எனவேதான் இயேசு தன் தந்தையிடமிருந்து பெற்ற எளிமையை சீடர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றார்.

நம்முடைய வாழ்வு எளிமை வழியில் செழுமையா? செழுமை வழியில் எளிமையா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

ஆமோஸ் 7: 12 – 15
இறைவனின் அழைப்பு

"என் மக்களாகிய இறைவனிடம் சென்று இறைவாக்கு உரைத்திடு" என்று ஆமோஸ் இறைவாக்கினர் சொல்கிறார். "என்" என்கிற வார்த்தை இங்கு நம்முடைய கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. கடவுள் அனைவருக்குமான கடவுள். இந்த உலகத்தைப் படைத்தவர் கடவுள். பராமரிக்கிறவர் கடவுள். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்துமே கடவுளுக்கு சொந்தம் .அப்படியிருக்க, கடவுள் ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் "என்" என்கிற உரிமையில் அழைத்தால், அது மற்றவர்களை ஒதுக்குவதாக அர்த்தமாகாதா? என்று நாம் கேள்வி எழுப்பலாம். இது கடவுளையும், அவருடைய திட்டத்தையும் எதிர்மறையாகப் பார்க்கிற பார்வை.

இறைவனையும், அவருடைய செயல்பாடுகளையும் முழுமையாக அறிந்தவர்கள் மட்டும் தான், இறைவனை நேர்மறையாகப் பார்க்க முடியும். இறைவன் இஸ்ரயேல் மக்களை தன் மக்களாக தேர்ந்தெடுத்தார். எதற்காக? அவர்கள் மட்டும் பல சலுகைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவா? இல்லை. அவர்கள் வழியாக அனைத்து மக்களும் மீட்பு பெற வேண்டும் என்பதற்காக. இஸ்ரயேல் மக்களை தன் மக்களாக அழைத்தாலும், அவர்கள் தவறு செய்தபோது, இறைவன் பொறுத்துக் கொண்டிருக்கவில்லை. கடுமையாக தண்டனை வருவிக்கச் செய்கிறார். அவர்கள் தவறு செய்கிறபோது, அவர்களுடைய பலிகளை வெறுத்து ஒதுக்குகிறார். அவர்களுக்கு எதிராக தன்னுடைய வார்த்தைகளை, இறைவாக்கினர்களை அனுப்பி, சொல்ல சொல்கிறார்.

நம்மையும் இறைவன் அன்பு செய்கிறார் என்றால், நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதல்ல. நாம் அவருடைய அன்பிற்கு பாத்திரமானவர்களாக வாழ வேண்டும் என்பதே, அவருடைய ஆசையாக இருக்கிறது. அந்த ஆசையை நிறைவேற்றுகிற நல்ல மக்களாக வாழ, இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

வாழ்வைக் கொடுக்கக்கூடியவர்களாக….

இயேசு தனது சீடர்களை பணிக்கு அனுப்புகிறபோது, பயணத்திற்கு எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார். பொதுவாக, பயணம் செய்கிறவர்கள் பொதுவாக, உணவு, பை, இடைக்கச்சையில் பணம் எடுத்துச் செல்வார்கள். பயணிகளுக்கான பை, விலங்கின் தோலிலிருந்து செய்யப்பட்டது. அது விலங்கின் வடிவத்திலே செய்யப்பட்டிருக்கும். அந்தப் பையில், பயணத்திற்கு தேவையான அப்பமோ, உலர்ந்த திராட்சையோ வைத்திருப்பார்கள். ஆனால், இயேசு அவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார்.

மத்திய கிழக்குப் பகுதியில் போதிக்கின்றவர்கள், திருப்பயணிகளாகச் செல்கிறவர்களும் இதுபோன்ற பைகளை வைத்திருப்பார்கள். இந்த பைகளை வைத்திருக்கும் குருக்களும், பக்தர்களும் அவர்களின் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை வசூலிப்பதற்கும், அதில் கிடைப்பதை தங்களது தெய்வத்திற்கான காணிக்கை என்றும், மக்களிடம் சொல்லி, காணிக்கைப் பிரிப்பர். இப்படிப்பட்ட பக்தர்களுக்கு மக்கள் தாராளமாக கொடுத்தனர். ஆனால், இயேசு தன்னுடைய சீடர்களை இந்த பைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கிறார். அதாவது, கடவுளின் பராமரிப்பில் சீடர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதேபோல, சீடர்கள் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். பெற்றுக்கொள்கிறவர்களாக இருக்கக்கூடாது என்கிற செய்தியையும் இது நமக்குக் கற்றுத்தருகிறது.

இயேசுவின் சீடர்களாக இருக்கக்கூடிய நாம் ஆலயத்திற்குச் செல்வதே, இயேசுவிடமிருந்து பெறுவதற்காகத்தான் இருக்கிறது. இன்றைக்கு பிறசபையினர் இயேசுவை கூவி, கூவி விற்றுக்கொண்டிருக்கினர். அவர்களின் இலக்கு பணமாகத்தான் இருக்கிறது. ஆனால், சாமான்ய மக்கள் அவர்களின் வலையில் வீழ்ந்துவிடுகிறார்கள். உண்மையான பணியாளர்களை ஏற்றுக்கொள்வோம். அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். நமது வாழ்வில் எப்போதும் நற்செய்தியை, வாழ்வைக் கொடுக்கக்கூடியவர்களாக மாறுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஆண்டவரின் அழைப்பு

மத்திய கிழக்குப்பகுதிகளில் விருந்தோம்பல் இறைப்பணியாகக் கருதப்பட்டது. புதியவர் ஒருவர் ஊருக்குள் நுழைகிறபோது, தனது தேவைக்காக மற்றவர் உதவியை அவர் எதிர்பார்க்கத் தேவையில்லை. மாறாக, அந்த ஊரில் உள்ளவர்களே அவரை வரவேற்று, உபசரித்து அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பார்கள். இந்த பிண்ணனியில்தான், இயேசுவின் இன்றைய போதனை அமைத்திருக்கிறது.

இயேசுவின் சீடர்கள் ஊருக்குள் நுழைகிறபோது, அவர்களுக்கு மக்களின் உபசரிப்பு கிடைக்கவில்லையென்றால், அங்கிருந்து வெளியேற அறிவுரை கூறுகிறார். அப்படி வெளியேறும்போது கால்களில் படிந்துள்ள தூசியை உதறித்தள்ளிவிட அறிவுறுத்துகிறார். இதனுடைய பொருள், அந்த ஊர் புற இனத்துப்பகுதியாக கருதப்படுகிறது என்பதாகும். ஏனெனில், யூதர்களுக்கு மற்ற நாடுகள் தூய்மையற்ற நாடுகள். பாலஸ்தீனத்திற்கு வெளியே பயணம் செய்துவிட்டு, யூதர் ஒருவர் நாடு திரும்புகிறபோது, தங்களின் கால்களில் படிந்துள்ள தூசியை உதறித்தள்ளிவிட்டு தான், நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்பது யூத ராபிக்களின் அறிவுரையாகும்

கடவுளின் செய்தி நமக்கு கொடுக்கப்படுகிறபோது, அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் மனம்மாறுவதற்கு, நமது வாழ்வு மாற்றம் பெறுவதற்கு கடவுள் பல மனிதர்கள் வாயிலாக நம்மைத் தொடுகிறார். அவர் நம்மை அழைக்கிறபோது, அந்த அழைத்தலுக்கு நாம் செவிசாய்ப்போம். அழைத்தல் வாழ்வில் நம்மையே இணைத்துக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

சீடர்களின் துணிவு

மக்களுக்கு சீடர்கள் இயேசுவின் செய்தியைக் கொண்டு வந்தனர். அது அவர்களுடையது அல்ல. தாங்கள் நினைத்ததையோ, தாங்கள் நம்பலாம் என்று எண்ணுகிறதையோ அல்ல, மாறாக இயேசு சொல்லச் சொன்னதைப் போதித்தார்கள். அது அவர்கள் நம்பியது அல்ல. மாறாக, கடவுள் சொன்ன உண்மை. எனவே தான் பழைய ஏற்பாட்டில், ”ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்” என்கிற வாக்கியங்கள் மேலோங்கியிருப்பதை நாம் பார்க்கலாம்.

சொல்ல வந்தது கடவுளின் செய்தி என்றாலும், அதைச்சொல்வதற்கும் துணிவு வேண்டும். ஏனென்றால், ”மனம் மாறுங்கள்” என்கிற சீடர்களின் போதனையின் சாராம்சம் சாதாரண செய்தி அல்ல. அதனுடைய பொருள், இப்போது மக்கள் வாழ்கிற வாழ்க்கை சரியான வாழ்க்கையல்ல. இப்போது வாழக்கூடிய வாழ்வை மக்கள் மாற்றுவதற்கான அழைப்பு தான் மனமாற்றம். இது சீடர்களுக்கு தெரியாததும் அல்ல. தெரிந்தும், அந்த நற்செய்தியைப்போதிக்கிறார்கள் என்றால், அதுதான் இயேசுவின் பயிற்சியின் வெற்றி. பிற்காலத்தில் தனது சீடர்கள் கடவுளின் நற்செய்தியை துணிவோடு அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான், சீடர்களின் துணிவு.

நமது விசுவாச வாழ்வும் துணிவுள்ளதாக இருக்க வேண்டும். யாருக்கும் அஞ்சாததாக, உண்மையை உண்மையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலை வேண்டும். துணிவுள்ள விசுவாசம் தான் செயல்பாட்டிற்கு அழைத்துச்செல்லும் விசுவாசமாக நம்மை மாற்றும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நற்செய்தி அறிவிப்பு – ஓர் அர்ப்பணம்

யூத ஒழுங்குப்படி புனிதமான ஆலய வளாகத்திற்குள் செல்கின்றபோது, வளாகத்திற்கு வெளியே கைத்தடி, உணவு, பணப்பை, மிதியடி போன்றவற்றை வைத்துவிட்டுச்செல்ல வேண்டும். புனிதமான இடத்திற்கு கொடுக்கின்ற மரியாதை இது. (இன்றும் கூட இந்துக்களின் ஆலயத்தினுள்ளே செல்கின்றபோது இந்த முறை பின்பற்றப்படுவதை நாம் பார்;த்திருக்கலாம்). அதேபோல், யூதர் ஒருவர் அந்நிய நாடு சென்று விட்டு மீண்டும் பாலஸ்தீனத்திற்குள் நுழைகின்றபோது தனது கால்தூசியை தட்டிவிட்டுத்தான் நாட்டிற்குள் நுழைய வேண்டும். அந்நிய நாட்டின் தூசு கூட புனிதமான தங்கள் நாட்டில் பட்டு தீட்டாகி விடக்கூடாது என்கிற எண்ணம் தான் இந்த ஒழுங்குகளை யூதர்களுக்குத்தந்திருந்தது. இயேசு இந்த ஒழுங்குகளை தன் மனதில் வைத்துதான் தன் சீடர்களுக்கு கட்டளை கொடுத்திருக்க வேண்டும்.

இயேசு எதற்காக இப்படிப்பட்ட ஒழுங்குகளை தன் சீடர்களுக்கு வற்புறுத்திச்சொல்ல வேண்டும்? ஏனென்றால், இயேசு கிறிஸ்து இரக்கமே உருவானவர். பகைவரையும் அன்பு செய்ய வலியுறுத்தியவர். மன்னிப்பைக்கொடுப்பதற்கு அழைப்பு விடுக்கிறவர். அப்படிப்பட்டவர் ஏன் இவ்வளவு கடுமையான செயல்பாடுகளைத் தன் சீடர்கள் செய்வதற்கு கட்டளை தர வேண்டும்? இதற்கான பதில்: நற்செய்தி அறிவிப்பு என்பது சாதாரண காரியம் அல்ல: அது ஒரு அர்ப்பணம். அது ஒரு புனிதமான செயல்பாடு. அது ஒரு வாழ்க்கை முறை. அந்த நற்செய்தி நமக்குக்கொடுக்கப்படும்போது ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது கடவுளையே ஏற்றுக்கொள்ளாத செயலுக்கு சமம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் நற்செய்தி நமக்குத்தரப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். நம்மைப்பற்றி பெருமைப்பட வேண்டும். அதனை சாதாரணமானதாக எடுத்துக்கொள்ளாது, அதனை வாழ்வோடு இணைத்து வாழ வேண்டும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

-------------------------------

திருத்தூதுப் பணி அனுப்பப்படும் பணி!

ஆடு மாடு மேய்ப்பவனும், காட்டு அத்திமரத் தோட்டக்காரனுமாகிய ஆமோசை ஆண்டவர் அழைத்து "என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று இறைவாக்கு உரைத்திடு" என்று அனுப்பினார் என்று வாக்குமூலம் தருகிறார் இறைவாக்கினர் ஆமோஸ். ஆம், இறைவாக்குப் பணி என்பது விரும்பித் தேர்ந்தெடுத்த ஒரு பணியல்ல, மாறாக இறைவனால் திணிக்கப்பட்ட பணி. இறைவாக்கினர்களாக அழைப்புப் பெற்ற அனைவருமே முதலில் மறுத்தனர், பின்னர் இறைவனால் உறுதிப்படுத்தப்பட்டனர்.

அவ்வாறே, இயேசுவும் பன்னிருவரையும் இருவர் இருவராக திருத்தூதுப் பணிக்கு அனுப்புவதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். அனுப்பும்போது "அவர்களுக்குத் தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித்தார்" என்னும் வரிகள் கவனத்தை ஈர்க்கின்றன. வெறும் கையினராய் அவர்களை இயேசு அனுப்பவில்லை. ஆற்றலோடு, அதிகாரத்தோடு அனுப்பினார். திருத்தூதுப் பணிக்குத் தேவையான திறன்களும், மனநிலையும், அனுபவமும் அவர்கள் பெற்றிருந்தனர். எனவேதான், அவர்கள் துணிந்து சென்றார்கள். வென்றார்கள், திரும்பி வந்தார்கள்.

இயேசுவால் நற்செய்தியின் சாட்சிகளாக வாழ அழைக்கப்படும் நாமும் அது நம்மேல் "சுமத்தப்பட்ட பணி" என்பதை உணர்வோம். அந்தப் பணியை ஆற்றத் தேவையான ஆற்றல், திறன்கள், வலிமை அனைத்தையும் இயேசு நமக்குத் தருகிறார் என்பதையும் உணர்வோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, நீர் எங்கள்மேல் சுமத்தியுள்ள நற்செய்திப் பணியை நன்கு ஆற்ற, உமது தூய ஆவியின் ஆற்றலால் எங்களை நிரப்பும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

---------------

இணையதள உறவுகளே

இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார் (மாற்3:14) அழைத்த இயேசு, அவர்ளுக்கு ஒரு பணியிடை பயிற்சியும் கொடுக்கிறார். சில முக்கிய அறிவுரைகொண்ட போதனை வகுப்புக்கள் நடத்திய பின் பணியிடைப் பயிற்சிக்காக களத்திற்கு அனுப்புகிறார்.

இயேசுவின் இந்த செயல்முறை எல்லோருடைய வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் மிக அவசியமானது. இயேசுவின் இந்த வழிமுறையை வளர்ச்சி பெற விரும்பும் அத்தனைபேரும் அத்தனை நிறுவனங்களும் கடைபிடிக்கின்றன. குருமாணவர்களாக இருந்த அந்த காலத்தில், கோடை விடுமுறையில் ஒரு மாதமும் மெய்யியல் முடித்த பின் ஒரு வருடமும் இதுபோன்ற பணியிடை பயிற்சிக்கு அனுப்பப்பட்டோம். (இன்று இல்லை).

அண்ணாச்சி கடைகள் எல்லாம் இன்று அள்ளிக் கொளிக்கிறதென்றால், அந்த வயதில் அங்காடித் தெருவில் அவர்கள் பெற்ற அனுபவம் அளவிட முடியுமா? எதற்கெல்லாமோ பணியிடைப் பயிற்சி நடைபெறும் இக் காலத்தில், உலகை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் குடும்ப வரழ்வுக்கு என்ன தயாரிப்பு கொடுக்கப்படுகிறது. என்ன பணியிடைப் பயிற்சி வழங்கப்படுகிறது? குடும்பத்தில் இருக்கும் நீங்களே உங்களுக்கென சில பணியிடை பயிற்சியை வகுத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பலன் கொடுக்கும்.

-ஜோசப் லீயோன்
-------------------------

இருவர் இருவராக !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு பன்னிருவரையும் தம்மிடம் அழைத்து, அவர்களை இருவர் இருவராக நற்செய்திப் பணியாற்ற அனுப்பினார் என்னும் செய்தியை இன்றைய சிந்தனைக்குக் கருவாக எடுத்துக்கொள்வோம். ஏன் இயேசு தம் சீடரை இருவர் இருவராக அனுப்பினார்?

இணைந்து பணியாற்றும் பண்பைக் கற்றுக்கொள்வதற்காகத்தான் என்று தோன்றுகிறது:. இறையாட்சிப் பணி என்பது தனி நபரி;ன் பணி அல்ல. அது ஒரு கூட்டுப் பணி. தனி நபர்கள் ஏற்படுத்தும் மாற்றங்களைவிட, குழுக்கள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் என்பது நாம் அறிந்ததே. எனவே, தனி நபரின் திறன்களிலும், ஆற்றலிலும் மட்டும் நம்பிக்கை வைக்காமல், அடுத்தவரது திறன்களையும் பயன்படுத்துகின்ற பொதுமைப் பண்பை இணைந்து பணியாற்றுதல் கற்றுத் தருகிறது. மேலும், இருவர் இருவராகச் சென்று பணியாற்றும்போது, தனிமை, மன உளைச்சல், பாதுகாப்பின்மை, வழிகாட்டுதல் இன்மை போன்ற சிக்கல்களிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். இருவராகப் பணியாற்றுவது உளவியல் பாதுகாப்பு தருகிறது. எனவேதான், இயேசு தம் சீடர்களை இருவர் இருவராக அனுப்பினார் என்று எடுத்துக்கொள்ளலாம். நாமும் இணைந்து பணியாற்றும் கலையில் வளர்வோம்.

மன்றாடுவோம்: ஒருமைப்பாட்டின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் எங்கள் வாழ்விலும், பணியிலும் தனியே செயல்படாமல், இணைந்து பணியாற்றும் பண்பில் வளர உமது துhய ஆவியைத் தந்தருளும்.   உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

இறைவாக்கினரின் அழைப்பு

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இறைவாக்கினரின் அழைப்பு என்பது விவிலியத்தில் நாம் காண்கிற விசித்திரமான பகுதிகளில் ஒன்று. இறைவாக்கினர்கள் அனைவருமே - எரேமியா, எசாயா, எசேக்கியேல் ஆகியோர் சிறந்த எடுத்துக்காட்டுகள் - எதிர்பாராத விதமாக, சில சமயங்களில் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இறைவனால் அழைக்கப்பட்டவர்கள். இறைவாக்குப் பணி ஒரு சுமையாகவே இருந்திருக்கிறது. இருப்பினும், இறைவனின் அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டர். கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் சீடர்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பணியை, இறைவாக்குப் பணியை வழங்கி கொடுத்த அறிவுரைகளை வாசிக்கிறோம். இறைவாக்குப் பணி செய்பவர்களின் எளிமையைப் பற்றி நற்செய்தி பேசுகிறது. அவர்கள் பணத்துக்கோ, பொருளுக்கோ, உலக இன்பங்களுக்கோ அடிமையாகாதபடி, இறைவன்மீது மட்டுமே தம் நம்பிக்கையை வைக்க அறைகூவல் விடுக்கிறது.

நாமும் இறைவாக்கினர்களே என்று ஏற்றுக்கொள்வோம். நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் தந்த அழைப்பை மறுக்காமல் கடமையாற்றுவோம். இந்த இறைவாக்குப் பணி சொல்லில், வாய் ஜாலத்தில் அமையாமல் நமது வாழ்வில், சான்று பகர்தலில், உலகப் பொருள்களின்மீது அதிக பற்று கொள்ளாமையில், நம் வாழ்வின் எளிமையில் வெளிப்பட வேண்டும்.

இன்றைய நாளை இந்த எண்ணத்தோடு செலவழிப்போம்.

மன்றாடுவோம்; அன்பின்; இயேசுவே, என்னையும் ஓர் இறைவாக்கினராக நீர் அழைத்திருக்கின்றீர் என்பதே எனக்கு வியப்பாகவும், மலைப்பாகவும் இருக்கிறது. ஆயினும், உம் அழைப்பை ஏற்கிறேன். நன்றி கூறுகிறேன். என் வாழ்வும், பணிகளும் என் இறைவாக்காக அமையட்டும். உலகைப் பற்றிக்கொள்ளாமல், உம்மையே பற்றி வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

''அப்பொழுது இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து,
அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார்'' (மாற்கு 6:7)

சிந்தனை
-- இயேசுவின் பணியைத் தொடர்வது அவருடைய சீடர்களின் கடமை. இயேசு எந்த உண்மையைப் பறைசாற்றினாரோ அதே உண்மையை வருங்காலத் தலைமுறையினரும் அறிந்து, கடவுளிடமும் அவர் அனுப்பிய திருமகனிடமும் நம்பிக்கை கொள்ளும் விதத்தில் நற்செய்திப் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். இயேசு பன்னிரு திருத்தூதரையும் தம்மிடம் அழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பினார் என மாற்கு விவரிப்பது தொடக்க காலத் திருச்சபையில் நிலவிய வழக்கத்தை நம் கண்முன் கொணர்கிறது. யூத வழக்கப்படி, ஒரு நிகழ்ச்சி குறித்து சாட்சி பகர இருவர் தேவை. எனவே, இருவர் இருவராகச் சென்று கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் தாங்கள் அறிவித்த செய்தி உண்மையே எனச் சான்று பகர்ந்தார்கள். மேலும், நற்செய்தி அறிவிக்கச் செல்வோர் எளிய வாழ்க்கைமுறையைத் தழுவ வேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது. பன்னிரு திருத்தூதரும் இயேசுவின் பணியைத் தொடர்ந்தார்கள். எனவேதான் அவர்கள் ''மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்'' (மாற் 6:12).

-- இயேசு அறிவித்த நற்செய்தியை ஏற்போர் வாழ்க்கையில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். மன மாற்றம் என்பது மனிதரின் உள்ளத்தின் ஆழத்தில் வேரோட்டமான விதத்தில் நிகழ்கின்ற ஒன்று. உள்ளார்ந்த விதத்தில் நிகழ்கின்ற மாற்றம் கண்ணோட்டங்களையும் பாhர்வைகளையும் மாற்றியமைக்கும். அப்போது நம் வாழ்க்கை முறையும் மாற்றம் பெறும். இவ்வுலகும் ஆங்கே செயலாற்றும் கடவுளின் உடனிருப்பும் நம் உள்ளத்தில் புதிய முறையில் தோன்றும். கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கின்ற அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு, அவரை நம்பிக்கையோடு அணுகிட நாம் முன்வருவோம். நம் உள்ளத்திலும் வாழ்விலும் மாற்றம் ஏற்படும்போது நாம் பிறருடைய வாழ்விலும் மாற்றம் நிகழ வேண்டும் என்னும் குறிக்கோளைச் செயல்படுத்த ஊக்கத்தோடு ஈடுபடுவோம்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் வழியாக எங்களுக்கு நீர் வழங்கிய உண்மைக்கு நாங்கள் உறுதியான உள்ளத்தோடு சான்று பகர அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல

 

''பன்னிரு திருத்தூதரும் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;
பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்'' (மாற்கு 6:12-13)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மனிதரை அன்போடு பராமரித்துவருகின்ற கடவுள் அவர்களோடு தம் வாழ்வைப் பகிர்ந்துகொள்ள விழைந்தார். எனவே அவர் தம் திருமகன் இயேசுவை நம் மீட்பராக அனுப்பி, கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை நமக்கு அளித்தார். மனிதரை அன்புசெய்து அவர்களுக்குப் புதுவாழ்வு வழங்கி, அவர்களைத் தம் ஆட்சியில் இணைப்பதே கடவுளின் விருப்பம். இயேசு கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தார். அதில் புகவேண்டும் என்றால் நாம் தாழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் கடவுளை அணுகிச் செல்ல வேண்டும். இதையே திருமுழுக்கு யோவானும் எடுத்துக் கூறி மக்கள் ''மனம் மாற வேண்டும்'' என்று அறைகூவல் விடுத்தார். இயேசு தம் சீடரை அனுப்பியபோது அவர்களுக்கும் இதே பணிப்பொறுப்பை அளிக்கிறார். அவர்கள் மக்களிடம் சென்று, மனம் மாறும்படி அவர்களை அழைக்க வேண்டும். கடவுள் மனிதரைக் கட்டாயப்படுத்துவதில்லை. மாறாக, மனிதர் சுதந்திரமாகச் செயல்பட்டுக் கடவுளின் அழைப்பை ஏற்று அதற்குப் பதில்மொழி அளிக்க வேண்டும்.

-- கடவுளாட்சி நம்மிடையே வந்துவிட்டது என்பதை அறிவித்த இயேசு அதைச் செயலிலும் காட்டினார். அதாவது, கடவுளின் வல்லமையால் மனித உலகில் ஒரு பெரிய மாற்றமே நிகழ்கிறது என இயேசு காட்டினார். இயேசு பேய்களை ஓட்டினார்; நோயுற்றோருக்குக் குணம் நல்கினார். இயேசுவைப் பின்பற்றி அவருடைய சீடர்களும் இப்பணியை ஆற்றுவர். அவர்களும் இறையாட்சிக்கு எதிரான தீய சக்திகளை முறியடிக்க வேண்டும். கடவுள் கொணர்கின்ற நலனை இவ்வுலக மக்களுக்கு அளிக்க வேண்டும். தீய ஆவிகளே மனிதருக்கு நோய்களைக் கொணர்கின்றன என்னும் கருத்து அக்காலத்தில் நிலவியது. எனவே, இயேசு தீய ஆவிகளை முறியடித்தபோது மனிதரின் நலனுக்கு எதிரான அனைத்துச் சக்திகளும் கடவுளின் வல்லமைக்கு அடிபணிந்தாக வேண்டும் என்பதைக் காட்டினார். சீடர்களும் மனிதரைக் கடவுளோடு இணைத்து அவர்களுக்கு நலம் கொணர அனுப்பப்பட்டார்கள். இன்றைய திருச்சபைக்கும் இப்பொறுப்பு உண்டு. நம் சமுதாயத்தில் நிலவுகின்ற ''நோய்களை'' ஒழிப்பதற்கு நாம் கிறிஸ்துவோடு இணைந்து உழைக்க வேண்டும். மக்களுக்கு நலம் கொணர்ந்து, அவர்கள் நிலை வாழ்வில் பங்கேற்றிட இயலுமாறு நாம் கடவுளின் கைகளில் கருவிகளாகச் செயல்பட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் உம்மை அன்புசெய்கின்ற புதிய இதயமும் புதிய சிந்தனையும் கொண்ட மனிதராக மாறிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''பன்னிருவரும் புறப்பட்டுச் சென்று மக்கள்
மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்'' (மாற்கு 6:12)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு ஆற்றிய பணியைத் தொடர்வதற்கு மனிதர் தேவைப்பட்டார்கள். எனவே, இயேசு பன்னிருவரைத் தேர்ந்துகொண்டு அவர்களுக்குச் சிறப்புப் பணி கொடுக்கிறார். அவர்கள் ஆற்றவேண்டிய பணி இயேசுவின் பணிதான். அவர்கள் எடுத்துரைக்க வேண்டிய செய்தி இயேசு அறிவித்த செய்திதான். பன்னிருவரை இயேசு தேர்ந்துகொண்டது இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தைக் குறிப்பதற்காக. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கடவுள் தமக்கென்று ஒரு மக்கள் இனத்தைத் தேர்ந்துகொண்டது போல இப்போது புதியதொரு மக்களினத்தைத் தேர்ந்துகொள்கிறார் என்பதற்குப் பன்னிருவர் அடையாளமாயினர். இப்புதிய மக்கள் குலம் இயேசுவின் பெயரால் கூடுகின்ற மக்கள் குழு. இதையே ''திருச்சபை'' என அழைக்கிறோம். இக்குழுவைச் சேர்ந்தவர்கள் இயேசுவின் சீடர்கள். இவர்கள் நடுவே இயேசுவின் போதனை செயலாக்கம் பெற வேண்டும்.

-- இயேசுவின் குழுவில் நாம் பங்கேற்க வேண்டும் என்றால் நாம் மனம் மாற வேண்டும். மனம் மாறுதல் என்பது வாழ்க்கையை மாற்றியமைத்தலைக் குறிக்கும். நம் உள்ளத்தின் ஆழத்தில் கடவுளை முழுமையாக ஏற்று, நம் சிந்தனைப் பாணியை வேரோட்டமான முறையில் மாற்றியமைப்பதே உண்மையான மன மாற்றம். இந்த மாற்றத்தை அனுபவிப்பவர்கள் கடவுளோடு நெருங்கிய உறவு கொள்ள முன்வருவார்கள். அவர்களுடைய வாழ்க்கை ஒரு புதிய முறையில் துலங்கும். அதில் ஏற்படுகின்ற புதுமை கடவுளின் அருளால் நிகழ்கின்ற புதிய நிலையை வெளிக்காட்டும். இவ்வாறு புதிய மன நிலை பெறுவோர் கடவுளின் மன நிலையோடு செயல்படுவர். அப்போது கடவுளின் ஆட்சி நிறைவாக அவர்கள் நடுவே மலரும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தில் ஆழ்ந்த மாற்றத்தைக் கொணர்ந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்