முதல் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 13: 1-8

சகோதரர் சகோதரிகளே, சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு. சிறைப் பட்டவர்களோடு நீங்களும் சிறைப்பட்டிருப்பதாக எண்ணி அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள். துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள். திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும். காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் கடவுளின் தீர்ப்புக்கு ஆளாவர். பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்று இருங்கள். ஏனெனில், ``நான் ஒருபோதும் உன்னைக் கைவிட மாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்'' என்று கடவுளே கூறியிருக்கிறார். இதனால், நாம் துணி வோடு, ``ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்ச மாட்டேன்; மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?'' என்று கூறலாம். உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 3. 5. 8-9

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவி

3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது;
எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடு இருப்பேன். -பல்லவி

5 ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்;
தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்;
குன்றின்மேல் என்னைப் பாதுகாப்பாய் வைப்பார். -பல்லவி


8b ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.
9 உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்;
நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்;
நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறு பெற்றோர். அல்லேலூயா.

மாற்கு 6:14-29

பொதுக்காலம், வாரம் 4 வெள்ளி


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 14-29


அக்காலத்தில் இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், ``இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்; இதனால்தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன'' என்றனர். வேறு சிலர், ``இவர் எலியா'' என்றனர். மற்றும் சிலர், ``ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே'' என்றனர். இதைக் கேட்ட ஏரோது, ``இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்'' என்று கூறினான். இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் ஏரோதிடம், ``உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டுமிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், ``உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்'' என்றான். ``நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்'' என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, ``நான் என்ன கேட்கலாம்?'' என்று தன் தாயை வினவினாள். அவள், ``திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்'' என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, ``திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்'' என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

03.02.2023 – மாற்கு 6: 14 - 29
வாக்கு: வாழ்வா? வாழ்வு இழப்பா?

தோல்வி என்பது முடிவல்ல, வெற்றியின் படிக்கட்டுகள் என்ற சச்சின் டெண்டுல்கரின் தோழியின் வார்த்தை அவர் வாழ்வில் கிரிக்கெட் ஜாம்பவனாக மாற்றியது. முடியாது என்பவன் முட்டாள் முடியும் என்ற எண்ணத்தோடு செயல்படுபவன் ஞானி என்ற தன் ஆசிரியரின் வார்த்தை தான் கலாமை அறிவியல் விஞ்ஞானியாக மாற்றுகிறது. பெண் என்பவள் பயப்படக் கூடியவள் அல்ல. மாறாக பாடம் ஊட்டக்கூட்டியவள் என்ற தன் தாயின் வார்த்தை கிரண் பேடியை சிறந்த பெண் காவலராக மாற்றியிருக்கிறது. இவர்கள் அனைவருமே ஒரு வார்த்தையினால் எட்ட முடியாது என்று நினைத்த கனியை பறித்து வாழ்வு பெற்றிருக்கின்றார்கள்.

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஏரோது என்ற அரசனின் வார்த்தையினால் திருமுழுக்கு யோவானின் வாழ்வு அழிக்கப்படுவதை நாம் பார்க்கின்றோம். இயேசுவின் சவால் மிக்க போதனைகள் அவருடைய பாடுகளுக்கும், மரணத்திற்கும் காரணமாக இருந்தன. அதே பாணியில் திருமுழுக்கு யோவானின் சவால்மிக்க போதனையும் குறிப்பாக ஒழுக்கமின்றி வாழ்ந்து கொண்டிருந்த ஏரோது ஏரோதியாள் பற்றி அவர் எடுத்துரைத்த கண்டிப்பும் அவருடைய சிறைவாழ்வுக்கும் அகால மரணத்திற்கும் காரணமாக விளங்கின. ஏரோதின் அரசவையில் நிகழ்ந்த ஒரு சதித்திட்டம் யோவானின் மரணத்தை உறுதிப்படுத்தியது. இங்கு வார்த்தை ஒரு மனிதனின் வாழ்வை அழிக்கக்கூடியதாக அமைகிறது.

நாம் பல வேளைகளில் மற்றவர்களுக்கு வார்த்தை கொடுக்கின்றோம். அது அவர்களுக்கு வாழ்வு கொடுக்கின்றதா அல்லது அவர்களுடைய வாழ்வை அழிக்கின்றதா? வார்த்தையின் வலிமை பற்றி புனித பிலவேந்திரர் கூறுவார் “வாழ்க்கை வாளாக பாயும்”. நமது வார்த்தையின் மகத்துவத்தை அறிந்து செயல்படுவோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

==================

4ம் வாரம் வெள்ளி
அரசனானலும் ஆண்டியானலும்

நம் கிறித்தவத்துக்கும் திருஅவைக்கும் அனைவரும் ஒன்றே. இப்படி இருந்தததனாலே நம் திரு அவை பலவற்றை இழந்திருக்கின்றது. எ.கா எட்டாம் ஹென்றி என்ற மன்னன் ஆங்கிலக்கன் சபையை நம் கத்தோலிக்க திருஅவையிலிருந்து பிரித்ததன் காரணம், 1532ல் இவன் தன் ஆண் வாரிசுக்காக இன்னொரு பெண்னை மணக்க வேண்டி அன்றைய திருத்தந்தை ஏழாம் கிளமென்ட்டிடம் அனுமதி கேட்டு கிடைக்காததால்தான்.

இப்படி நம் ஆண்டவர் இயேசுவின் மதிப்பீடுகளான நீதி, நேர்மை என்பது எந்தவித அதிகார வர்க்கத்தினர்க்கும் ஒரு நாளும் அடிப்பணிந்து கிடையாதது. நாமும் திருமுழுக்கு யோவானைப் போல இயேசுவின் விழுமியங்களை நமதாக்கி நாம் வாழும் இடத்திலுள்ள அதிகார வர்க்கத்திற்கு அஞ்சாமலும் அடிப்பணியாமலும் வாழ்வோம்.

திருத்தொண்டர். வளன்அரசு

திருப்பாடல் 27: 1, 3, 5, 8 – 9
”ஆண்டவரே என் ஒளி”

”இருளைப் பழிப்பதை விட ஒளியேற்றுவதே மேல்“ என்று பொதுவாகச் சொல்வார்கள். நாம் அனைவருமே இந்த உலகத்தில் நடக்கிற அநீதிகளைக் கண்டு பொங்கி எழுகிறோம். நமக்குள்ளாகப் பொருமிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நிலையை மாற்றுவதற்கு நாம் ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்துவது கிடையாது. காரணம், நாமே அநீதி செய்யக்கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். நமக்கொரு நீதி, அடுத்தவர்க்கொரு நீதி என்று பேசக்கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் “ஆண்டவரே என் ஒளி“ என்கிற திருப்பாடலின் வரிகள், நமது வாழ்விற்கு ஒளி தருவதாக அமைந்திருக்கிறது.

ஆண்டவரை எதற்காக திருப்பாடல் ஆசிரியர் ஒளிக்கு ஒப்பிட வேண்டும்? இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் ஒளி என்பது, கடவுளின் வல்ல செயல்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களை வனாந்திரத்தில் பகலில் மேகத்தூணைக்கொண்டு அவர்களுக்கு நிழல் கொடுத்தார். இரவில் அவர்களுக்கு ஒளியாக இருந்து இருளிலிருந்து பாதுகாத்தார். கடவுளின் ஒளியை நாம் பெற்று, நாம் மற்றவர்களுக்கு ஒளி தருவதற்கு, இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. இந்த உலகத்தில் அநீதியை எதிர்க்க வேண்டுமென்றால், நாம் கடவுளின் ஒளியில் இளைப்பாற வேண்டும். கடவுளின் ஒளியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த ஒளியினைப் பெற்று, இந்த உலகத்திற்கு ஒளி தரக்கூடியவர்களாக நாம் மாற வேண்டும்.

இந்த உலகத்தில் நடந்துகொண்டிருக்கிற இருளின் ஆட்சியை நாம் பழித்துக்கொண்டிருந்தால், எந்த மாற்றமும் நடக்காது. மாறாக, நாம் அனைவருமே ஒளியாக மாற வேண்டும். அப்படி மாறுகிறபோது, இந்த உலகத்தில் இருள் தானாக மாறிவிடும். இந்த உலகத்தை இருளாக வைத்திருப்பதும், ஒளியாக மாற்றுவதும் நமது கையில் தான் இருக்கிறது.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

நமது கடமையைச் செய்வோம்

இயேசுவைப்பற்றி ஏரோது அரசன் கேட்பது சற்று அதிசயமாக இருக்கிறது. ஏரோது ஓர் அரசன். இயேசுவோ சாதாரண தச்சரின் மகன். ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த இயேசுவைப்பற்றி, ஏரோதுக்கு எப்படி தெரிய வருகிறது? இயேசுவின் சீடர்கள் இப்போதுதான், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, இயேசுவின் நற்செய்தியை அறிவித்திருக்கிறார்கள். அந்த நற்செய்தி மக்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத்தான், இந்த நற்செய்தி நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இயேசுவின் பணிவாழ்வு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிற அழுத்தமான செய்தியை, நற்செய்தி நமக்கு வலியுறுத்திக்கூறுகிறது. ஏரோது அதை எதிர்மறையாகத்தான் பார்க்கிறான். காரணம், அவனுக்கு திருமுழுக்கு யோவானை கொலை செய்துவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சியும், தனது பதவி போய்விடுமோ? என்கிற பய உணர்வும் அதிகமாக அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. நாம் நியாயமாக, நேர்மையாக இருக்கிறபோது, யாருக்கும் பயப்படத் தேவையில்லை. இன்றைக்கு ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம்? என்ன செய்ய வேண்டும்? என்பதில் அவர்களுக்கு அக்கறையில்லை.

நமது வாழ்விலும் பெரும்பாலும், பெயருக்காக, புகழுக்காகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது கடமையை சிறப்பாகச் செய்கிறபோது, வரவேண்டியவை தானாக வரும் என்று நினைப்பதில்லை. இயேசு எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் செய்ய வேண்டியதைச் செய்கிறார். அவருக்குத் தேவையான எல்லாமே கிடைத்தது. பலனை எதிர்பாராது, நமது கடமையைச் செய்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைவார்த்தைக்கு முக்கியத்துவம்

இயேசுவைப்பற்றி ஏரோது மன்னன் அறிய வருகிற செய்தி இன்றைய நற்செய்தியில் சொல்லப்படுகிறது. இதுவரை நிச்சயமாக ஏரோது மன்னன் இயேசுவைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், ஏரோது மன்னனின் அலுவலக இல்லம் திபேரியாவில் இருந்தது. திபேரியா புறவினத்தார் அதிகம் வாழக்கூடிய இடம். புறவினத்துப் பகுதியில் இயேசு அவ்வளவாக போதித்திருக்கவில்லை. ஆனால், திருத்தூதர்களின் பயணம் இயேசுவை அனைத்து இடங்களிலும் அறியச்செய்திருந்தது. இதனால், இயேசுவின் பெயர் ஏரோது மன்னனுக்கும் எட்டியிருந்தது.

இயேசுவைப்பற்றி ஏரோதுவின் எண்ணம் மூன்று வகைகளாக வெளிப்படுகிறது. முதலில் அவர் திருமுழுக்கு யோவான் எனவும், அடுத்து எலியா எனவும், இறுதியாக இறைவாக்கினர்களுள் ஒருவர் எனவும் ஏரோது மன்னன் நினைக்கிறான். ஏன் இயேசுவை இறைவாக்கினருள் ஒருவராக மக்கள் பார்த்தனர். பொதுவாக, இஸ்ரயேல் மக்களுக்கு கடவுளுடைய வார்த்தை இறைவாக்கினர்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், ஏறக்குறைய 300 ஆண்டுகளாக எந்தவொரு இறைவார்த்தையும், இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப்பிறகு, இயேசுவில் அத்தகைய இறைவார்த்தையை மக்கள் கேட்க ஆரம்பித்தனர். அவருடையப் போதனையின் அதிகாரம், தெளிவு, துணிவு முதலான பண்புகள், இறைவாக்கினராக இயேசுவை அடையாளம் காட்டியது.

ஆண்டவருடைய வார்த்தைக்காக மக்கள் பல ஆண்டுகள் காத்திருந்தனர். இன்றைக்கோ நமக்கு, இறைவார்த்தையைக் கேட்பதற்கும், அவற்றை விளக்கத்தோடு அறிந்து கொள்வதற்கும் பல வகையான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்தி இறைவனின் சங்கமமாவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

வாழ்வின் போராட்டம்

”மனிதன் என்பவன் முரண்பாடுகளின் மூட்டை“ – என்று தத்துவ இயலில் சொல்வார்கள். ஒவ்வொரு மனிதரிடத்திலும் நல்ல குணங்களும் உண்டு. கெட்ட குணங்களும் உண்டு. ஏரோது அரசன் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. யோவான் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தான் ஏரோது. அதே வேளையில் அவரை சிறையில் அடைத்ததும் ஏரோது தான். திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளைக் கேட்டு குழப்பமுற்றிருந்தான். அதே வேளையில் அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். யோவானின் தலையை சிறுமி கேட்டபோது வருத்தமுற்றான், ஆனாலும் அவரைக்கொல்ல பணித்தான்.

மனித வாழ்வு உடல்சார்ந்த வாழ்வுக்கும், ஆவிக்குரிய வாழ்வுக்கும் இடையேயான மிகப்பெரிய போராட்ட வாழ்வு. இதைத்தான் பவுலடியார் தான் எதைச்செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ, அதை செய்ய முடியாமல் தவிப்பதாக கூறுகிறார். இந்தப்போராட்டம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும். ஒவ்வொரு நிமிடமும் இருக்கும். நாம் அனைவரும் ஆவிக்குரிய வாழ்வு வாழ போராட வேண்டும். அதற்கு இறைவனுடைய துணையை நாட வேண்டும். அப்படிப்பட்ட இறைத்துணையோடு கூடிய ஆவிக்குரிய வாழ்வை வாழ, நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

நமது வாழ்வை எண்ணிப்பார்ப்போம். ஆவிக்குரிய வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறதா? அந்த எண்ணத்தை செயல்படுத்த நான் எடுக்கக்கூடிய முயற்சிகள் என்ன? அந்த வாழ்வு எனக்கு பிடித்தமான வாழ்வாக இருக்கிறதா? இந்த கேள்விகள் நமது உள்ளத்தில் எழும்போது, நிச்சயம் நமக்குள் தெளிவு பிறக்கும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

மனச்சான்றின் குரலுக்கு செவிமடுப்போம்

பெரிய ஏரோதுக்கு பல பிள்ளைகள் இருந்தார்கள். தான் இறக்கும்போது உரோமையர்களின் ஒப்புதலுடன், தன்னுடைய நாட்டை தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கு பிரித்துக்கொடுத்தார். அவர்கள் ஆர்க்கெலாஸ், பிலிப் மற்றும் இன்றைய நற்செய்தியில் வருகின்ற அந்திபாஸ் ஏரோது. ஏரோது அந்திபாஸ் தன் சகோதரன் பிலிப்பு பொறுப்பாளராக இருந்த உரோமை நகருக்குச் சென்றபோது, அவனுடைய மனைவியை தன்னோடு அழைத்துக்கொண்டு வந்து தனது மனைவியாக்கிக்கொள்கிறான். இதன்மூலம் ஏரோது இரண்டு தவறுகளைச்செய்கிறான். ஒன்று, தன்னுடைய சகோதரன் மனைவியை தன்னுடைய மனைவியாக்கியது. இரண்டாவது, இப்படித் தவறான வாழ்வு வாழ, தன்னுடைய மனைவியை எந்தக்காரணமுமில்லாமல் விவாகரத்து செய்தது. திருமுழுக்கு யோவான் இதைத்தான் கண்டிக்கிறார்.

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதைப்போல, தான் யோவானைக்கொன்றது தவறு என்கிற குற்ற உணர்ச்சி, ஏரோதுவைப்புலம்ப வைக்கிறது. “இவர் யோவானே! அவர் தலையை நான் வெட்டச்செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்” என்ற ஏரோதுவின் வார்த்தைகள் குற்ற உணர்ச்சியால் அலைக்கழிக்கப்பட்டு, தன்னுடைய மனச்சாட்சியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் புலம்புகிற வார்த்தைகளாக இருப்பதை பார்க்க முடிகிறது. யோவானின் வார்த்தைகள் மனச்சாட்சியின் குரலாக அவனுக்குள்ளாக எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. தான் செய்தது மிகப்பெரிய தவறு என்பதை வெளிக்காட்டுவதாக இந்த வார்த்தைகள் அமைந்திருக்கிறது.

தவறு என்று தெரிந்தும், தவறைச்செய்தால் நிம்மதியற்ற வாழ்வுதான் நமக்கு மிஞ்சும் என்பதற்கு ஏரோதுவின் வாழ்வு நமக்கு எச்சரிக்கையாக இருக்கிறது. இன்றைக்கும் நம்மிடையே நடமாடும் பிணங்களாக மனிதர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்கள் செய்த தவறுதான் அதற்கு காரணம். மனச்சான்றின் குரலுக்கு செவிமடுத்து வாழ்கின்றபோது, நிறைவான வாழ்வு வாழலாம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

உண்மைக்காகத் தலை கொடுத்தவர்!

"தலையே போனாலும் கொண்ட கொள்கை போகாது" என்று சொல்வார்கள். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுதான் புனித திருமுழுக்கு யோவான். ஏரோது தம் சகோதரன் மனைவி ஏரோதியாவைத் தன் மனைவியாக்கிக்கொண்டதை யோவான் கண்டித்திருந்தார். அவ்வாறே, அரசனும், மக்களும் செய்த தவறுகளையெல்லாம் கண்டித்தார் திருமுழுக்கு யோவான். போலி ஆன்மீகத்தில் வாழ்ந்த பரிசேயர், சதுசேயர்களை "விரியன் பாம்புக் குட்டிகளே" (மத் 3:7) எனத் துணிவுடன் கண்டித்தவர். இறைவாக்கினர்கள் அனைவரும் உண்மைக்காக உயிர் இழக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தும் துணிந்து செயல்பட்டார்.

இன்று அவரோடு நம் வாழ்வையும், பணியையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். நமக்கு சிறிய துன்பம்கூட வந்துவிடக்கூடாது என்னும் தெளிவோடு எத்தனை அநீதிகளை, தீமைகளைக் கண்டும் காணாதவர்போல வாழ்கின்றோம் நாம். உண்மையைத் துணிந்து உரைப்போம், அதனால் ஏற்படும் சிறிய, பெரிய இழப்புகளைத் துணிவுடன் சந்திப்போம். இதுவே திருமுழுக்கு யோவான் நமக்கு விடுக்கும் அறைகூவல்.

மன்றாடுவோம்: இறைவாக்கினருக்கு வலிமையூட்டும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். திருமுழுக்கு யோவானைப் போல எங்கள் தலையைக் கொடுக்காவிட்டாலும், அச்சமின்றி, உண்மைக்கும், நேர்மைக்கும் சான்று பகர உமது தூய ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--பணி. குமார்ராஜா

-----------------------------------

இணையதள உறவுகளே

அடடா, இப்படி ஒரு பெண்ணா? இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு மனிதனின் தலையா? தன் குழந்தை அதை தட்டில் ஏந்தி வர வேண்டுமா? எப்படி இந்த கடின மனது? இது என்ன புதிது? நம்ம ஊர்களில் இன்று பெண்கள் இதுபோன்ற வன்செயல்களில் ஈடுபடவில்லையா என்று கேட்பது தெறிகிறது. தினசரிகள் தினமும் ஏதாவது ஒரு செய்தி தாங்கி வருகிறதல்லவா!

இதுபோன்ற பழிச் செயல்களைச் செய்ய ஆண் என்றும் பெண் என்றும் பேதம் அவசியமில்லை. எல்லோருக்கும் அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. அதுதான் குற்றம் அல்லது பாவத்தின் உணர்வு அற்ற நிலை. மனமும் உடலும் உணர்வும் ஆன்மாவும் பாவத்திற்கு உணர்வுகள் மறத்துப்போன ஒரு நிலை. திரும்பத் திரும்ப தவறுகள் பாவங்கள் செய்து மனச்சாட்சி மழுங்கிப்போன நிலை. அப்படிப்பட்ட நிலையில் அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய வன்கொடுமையாகத் தெறியாது.

ஏரோதியாள் ஏற்கெனவே பாவத்தில் வாழ்ந்து வந்தாள். ஒரு பாவம் செய்து மனம் இறுகிப்போனவளுக்கு இன்னொன்று ஒன்று பெரிதாகத் தோன்றாது. தொடர்ந்து பாவத்திலேயே வாழ்வாள். அதிலே அழிவாள். தொடக்க நிலையியே கிள்ளி எறியவில்லை என்றால் பெரிய தவறுகளைச் செய்து நாம் நம்மை அழிப்பது உறுதி. கற்றுக் கொள்வோம். கவனமாய் இருப்போம்.

-ஜோசப் லீயோன்

-------------------------

நேர்மையும், தூய்மையும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

திருமுழுக்கு யோவானின் மறைசாட்சியப் பணியைப் பற்றி இன்று நற்செய்தி எடுத்துரைக்கிறது. அவரது இறைவாக்குப் பணி ஏரோது அரசனையே கேள்விக்குள்ளாக்கியதால், யோவான் தன் உயிரையும் இழக்க வேண்டியதிருந்தது. திருமுழுக்கு யோவானைப் பற்றி “அவர் நேர்மையும், தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான் ” என்னும் வரிகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. திருமுழுக்கு யோவானைப் பற்றிய முன்னறிவிப்பிலேயே இக்குறிப்பு இருப்பதை நாம் அறிவோம். அவரது தந்தை செக்கரியா தூய ஆவியால் ஏவப்பட்டு பாடிய பாடலில் “நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும்; வாழ்நாளெல்லாம் அச்சமின்றp அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்” (லூக் 1:74-75) என்று முன்னறிவித்தார். அந்த இறைவாக்கின்படியே, திருமுழுக்கு யோவான் தூய்மையோடும், நேர்மையோடும், அச்சமின்றியும் பணியாற்றினார். இறைவாக்குரைத்தார். அதன் விளைவாகத் தன் உயிரையும் இழக்க முன்வந்தார். இறைவனுக்கு சான்று பகர்ந்தார். இன்று இறைவன் நமக்குத் தரும் அழைப்பு இதுவே: நாமும் திருமுழுக்கு யோவானைப் போல, ஆண்டவர் இயேசுவைப் போல, தூய்மையோடும், நேர்மையோடும் விளங்கினால் அச்சமின்றிப் பணியாற்றலாம். அதற்காக மன்றாடுவோம்.

மன்றாடுவோம்: நிறைவின் நாயகனே இறைவா, உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தூய்மையோடும், நேர்மையோடும், அச்சமின்றியும் பணியாற்ற வேண்டும் என்று அழைத்தீரே, உமக்கு நன்றி. எங்களை உமது தூய ஆவியால் நிரப்பியருளும். எங்கள் அச்சத்தைப் போக்கி, நாங்கள் தூய்மையோடும், நேர்மையோடும் பணி செய்ய ஆற்றல் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

தலையே போனாலும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று புனித திருமுழுக்கு யோவான் தலைவெட்டப்பட்ட திருநாள். தலையே போனாலும் தாழ்வில்லை, என் நேர்மையும், துணிவும் போகாது என்று சொல்லாமல் சொன்ன இறைவாக்கினரின் மறைசாட்சிய நாள். இன்று புனித திருமுழுக்கு யோவானுக்காக இறைவனைப் போற்றுவோம். பெண்களில் பிறந்தவர்களில் யோவானைவிடப் பெரியவர் எவருமில்லை என்று ஆண்டவர் இயேசுவால் பாராட்டப்பட்டவர் திருமுழுக்கு யோவான். அந்தப் பாராட்டிற்கேற்ப தன் வாழ்விலும், இறப்பிலும் அஞ்சா நெஞ்சராய் வாழ்ந்து இறைவனுக்கு சான்று பகர்ந்தார்.

இந்த நாளில் நாம் அவரது துணிவையும், உண்மைக்காக உயிரையும் இழக்கத் தயாரான அவரது பற்றுறுதியையும் எண்ணி வியக்கிறோம். அவரைப் போல நாமும் வாழ முடியுமா?

அநீதிகளை, சமூகத்திற்கு தீமை விளைவிக்கும் தீய சக்திகளைத் தட்டிக் கேட்க முடியுமா? ஆம், என்றால் பிழைக்கத் தெரியாதவன் என்று உலகம் பழித்தாலும், துணிவுடன் பணி செய்வோம். அதுதான் இறைவனுக்கு நாம் பகரும் சான்று. தலையே போனாலும் தாழ்வில்லை என்று வாழ்ந்த யோவானின் பரிந்துரையால், சிறு துன்பங்கள் வந்தாலும், தாழ்வில்லை. நேர்மையுடன் வாழ்வேன் என்று இன்று உறுதி ஏற்போம்.

மன்றாடுவோம்; நீதியின் கதிரவனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். துணிவுடன் உமக்குச் சான்று பகர்ந்த திருமுழுக்கு யோவானுக்காக உம்மைப் போற்றுகிறேன். அவரைப் போல நானும் உண்மைக்கு சான்று பகரவும், துணிவுடன் வாழவும் எனக்கு அருளும்.. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான்.
சிலர், 'திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்;
இதனால்தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன' என்றனர்'' (மாற்கு 6:14-15)

சிந்தனை
-- அதிகாரத்தில் இருப்போர் சிலவேளைகளில் தங்களுக்கு ஏன் அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டது என்பதை மறந்துவிடுகிறார்கள். தாங்கள் விரும்பியதைச் செய்யலாம் என்றும், சட்டம் ஒழுங்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் இறுமாப்புக் கொண்டுவிடுகிறார்கள். இதுவே ஏரோது அந்திப்பா என்னும் அரசனின் வாழ்விலும் நிகழ்ந்தது. திருமுழுக்கு யோவான் அரசனின் போக்குக்குச் சவால் விடுத்தார்; அரசனின் முறைகேடான வாழ்க்கையைக் கண்டித்தார். ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டது தவறு எனச் சுட்டிக்காட்டினார் திருமுழுக்கு யோவான். உண்மை பேசிய யோவானுக்குக் கிடைத்த பரிசு கொலைத் தண்டனை.

-- யோவானின் வரலாற்றுக்கும் இயேசுவின் வரலாற்றுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. மாற்கு இதைத் தெளிவாகக் காட்டுகிறார். கடவுளாட்சி வந்துகொண்டிருக்கிறது எனவும் அந்த ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் யோவான் முழங்கினார். இயேசுவும் இறையாட்சி பற்றிய செய்தியை மக்களுக்குச் சொல்லாலும் செயலாலும் அறிவித்தார். யோவான் இருப்பதை விட இறப்பதே மேல் என முடிவுகட்டினாள் ஏரோதியா (மாற் 6:24). பிலாத்து என்னும் ஆட்சியாளனும் அதே முடிவெடுத்து இயேசுவைக் கொலைத் தண்டனைக்கு ஆளாக்குவான். யோவான் இறந்ததும் அவருடைய சீடர்கள் அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள் (மாற் 6:29). இயேசு சிலுவையில் இறந்ததும் அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு என்பவர் அவருடைய உடலைக் கல்லறையில் கொண்டுவைத்தார் (மாற் 15:46). துன்பங்கள் வந்தாலும் சரி, ஏன் சாக வேண்டிய கட்டாயம் எழுந்தாலும் சரி, உண்மைக்குச் சான்று பகர்கின்ற பணியை ஊக்கத்தோடு செய்ய வேண்டும் என்று யோவான் முடிவுசெய்தார்; உயிர்துறந்தார். அதுபோலவே, இயேசுவும் இறுதிவரை உண்மைக்குச் சான்று பகர்ந்தார்; சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். இயேசுவைப் பின்செல்கின்ற மக்களும் அதே வழியில் நடந்து சென்றிட அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு
இறைவா, நற்செய்தியை அறிவிப்பதில் நாங்கள் ஒருநாளும் தளர்ச்சியடையாதிருக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல

 

''ஏரோது யோவானின் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும்,
அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்'' (மாற்கு 6:20)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ஏரோது அந்திப்பா என்னும் அரசன் திருமுழுக்கு யோவானைச் சந்திக்கிறான். யோவான் உண்மை பேச ஒருபோதுமே தயங்கியதில்லை. ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டது முறையல்லவென்று அவனைக் கடிந்துகொண்டார் யோவான். இந்நிலையில் யோவானைக் கொலைசெய்ய சதி நடக்கிறது. இதில் ஏரோதுக்குப் பங்கு உண்டு என மத்தேயு நற்செய்தி கூறுகிறது (காண்க: மத் 14:5). ஆனால் மாற்கு நற்செய்தியிலோ ''ஏரோது யோவானுக்கு மனமுவந்து செவிசாய்த்தான்'' (காண்க: மாற் 6:20) என்றுள்ளது. இந்த வேறுபாடு இருந்தபோதிலும் உண்மை என்பது நம் உள்ளத்தில் ''குழப்பத்தை ஏற்படுத்தும்'' என்பதில் ஐயமில்லை. உண்மையை அறிய விரும்பாதவர்கள் உண்டு; உண்மையை மறைப்பவர்கள் உண்டு; உண்மையை ஏற்றால் நம் வாழ்க்கையை மாற்றவேண்டிய சூழ்நிலை எழுமே என்றஞ்சி உண்மையை அறிவதையே தள்ளிப்போடுவோரும் உண்டு. ஏரோதுக்குக் குழப்பம் ஏற்படக் காரணம் அவன் யோவான் அறிவித்த உண்மையை ஏற்கத் தயங்கியதுதான்.

-- உண்மை என்பது இருளில் வீசுகின்ன ஒளி போன்றது. ஒளியின் முன் இருளுக்கு இடமில்லை. அதுபோல, உண்மையின் முன் பொய்ம்மைக்கு இடமில்லை. இரண்டும் இணைந்திருப்பது இயலாது. எனவேதான் உண்மையைக் கண்டுகொள்ள நம் உள்ளம் தயங்குகிறது. உண்மை ஏற்றுக்கொண்டால் அதன் கோரிக்கைகளை மறுக்க முடியாது என்பதால் உண்மையைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் சோதனை நமக்கு எழக்கூடும். உண்மையை மறுக்கும்போது தீமையையும் நாம் மறுக்கத் துணிந்துவிடுவோம். இதுவே ஏரோதின் வாழ்வில் நிகழ்ந்தது. யோவான் கூறிய உண்மையை ஏற்காத ஏரோது உண்மை பேசிய யோவானைக் கொன்றுபோட்டான். உண்மை பேசுவோரின் உயிர் மாய்ந்துவிடலாம், ஆனால் அவர்கள் உண்மைக்குச் சாட்சிகளாக என்றுமே உயிர்வாழ்வர்.

மன்றாட்டு
இறைவா, உண்மையின் ஒளியில் நாங்கள் நடக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்