:

திருக்காட்சி விழாவுக்குப்பின் புதன்

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18

அன்பார்ந்தவர்களே, கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்துகொள்கிறோம். தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம். எனவே தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போம். இவ்வாறு நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது. அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்�

திபா 72: 1-2. 10-11. 12-13

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!
உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. -பல்லவி

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்;
சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.
11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்;
எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். -பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.
13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்;
ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். -பல்லவி

திருப்பாடல் 72: 1-2, 10, 12-13

"ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்"

அரசத் திருப்பாடலான திபா 72 ஐயே தொடர்ந்து இன்றும் நாளையும் நாம் பதிலுரைப் பாடலாகப் பாடுகிறோம். "சாலமோனுக்கு உரியது" என்னும் விளக்கத்துடன் தரப்பட்டுள்ள இத்திருப்பாடல் அரசருக்காக மன்றாடப்பட்ட ஒரு வேண்டுதல்.

"தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்" என்று 10ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். ஒருவேளை சாலமோன் அரசரைப் பற்றியே இவ்வரிகள் பாடப்பட்டிருக்கலாம், காரணம் சாலமோனின் காலத்தில்தான் யூதர்களின் அரசு மிகவும் விரிவடைந்திருந்தது. சாலமோனின் புகழையும், ஞானத்தையும், வெற்றிகளையும் கேள்விப்பட்டு, பன்னாட்டு அரசர்களும் (சேபா நாட்டு அரசி உள்பட) அவரைத் தேடிவந்தார்கள். பரிசுப்பொருள்கள் கொண்டுவந்தனர் (காண்க: லூக் 11: 31).

ஆனாலும், திருப்பாடல் 2ஐப் போலவே, இந்தத் திருப்பாடலும் மெசியா இயேசுவைப் புதிய அரசராகக் காண்கிறது, அவரைப் போற்றுகிறது. "தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்" (திபா 72: 12-13) என்னும் வரிகள் சாலமோனைவிட, இயேசுவுக்கே அதிகம் பொருந்துகின்றன. எனவே, கிறிஸ்து பிறப்புக் காலத்தில், இயேசுவின் திருக்காட்சி விழாவைத் தொடர்ந்து வரும் இந்நாள்களில் திருப்பாடல் 72ஐப் பாடி இயேசுவைப் போற்றுவது சாலச் சிறந்ததே.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகன் இயேசுவின் பரிவுள்ளத்துக்காக உம்மைப் போற்றுகிறோம், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பிற இனத்தாருக்குப் பறை சாற்றப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை; விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை. அல்லேலூயா.


மாற்கு 6:45-52

புதன்

நற்செய்தி வாசகம்�

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 45-52

ஐயாயிரம் பேர் உணவு உண்ட பின் இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, `அது பேய்' என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். �துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள். ஏனெனில் அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

செபத்தின் வல்லமை

இயேசுவின் வாழ்க்கையில் செபம் மையமாக இருப்பதை நாம் ஆங்காங்கே நற்செய்தி நூல்களில் காணலாம். இந்த செபம் இயேசுவின் வாழ்க்கையில் கொடுத்த ஆன்மீக பலம் என்ன? செபம் எவ்வாறு இயேசுவின் வாழ்வை வழிநடத்தியது? செபத்தினால் அவர் பெற்ற நன்மைகள் என்ன? என்று நாம் பார்க்கலாம். இயேசுவின் வாழ்க்கையில் செபம் மூன்று ஆசீர்வாதங்களை அவருக்குக் கொடுத்தது. 1. இறைவனின் திருவுளத்தை அறிய உதவியது. இயேசு தான் சென்று கொண்டிருக்கிற வழி சரிதானா? தான் கடவுளின் திட்டப்படி நடந்து கொண்டிருக்கிறேனா? என்பதை அறிவதற்கான ஆயுதமாக செபத்தைப் பயன்படுத்தினார். எனவே தான், ஒவ்வொருநாளும் பகல் முழுவதும் பணியில் மூழ்கியிருந்தாலும், இரவிலே தந்தையோடு செபத்தின் வழியாகப் பேச, அவர் மறந்ததே இல்லை.

 2. துன்ப, துயரங்களை, சவால்களை சந்திப்பதற்கு ஆன்ம பலத்தைக் கொடுத்தது. இயேசுவின் வாழ்வில் எவ்வளவோ சவால்களைச் சந்தித்தார். அதிகாரவர்க்கத்தினரை எதிர்த்து, சாதாரண தச்சரின் மகன் வாழ்ந்தார் என்றால், அது மிகப்பெரிய சாதனை. அந்தச் சாதனையை இயேசுவால் அசாத்தியமாக செய்ய முடிந்தது என்றால், அதற்கு காரணம் அவருடைய செபம். எத்தகைய இடர்பாடுகளையும், இன்னல்களையும் எதிர்த்து நிற்பதற்கு அவருக்கு துணையாக இருந்தது செபம். 3. இறைவனின் அருளைப் பெற உதவும் வாய்க்காலாக இருந்தது. எப்போதெல்லாம் இயேசு நோயாளர்களுக்கு சுகம் தந்தாரோ, அப்போதெல்லாம், அவர் தந்தையிடம் செபித்தார். அவரின் அருளைப் பெற்றுக்கொள்ள செபத்தை வல்லமைமிகுந்த ஆயுதமாகப் பயன்படுத்தினார். இறை அருளைப் பெற்றுக்கொண்டார்.

நமது கிறிஸ்தவ வாழ்வில் செபம் முக்கியத்துவம் மிகுந்தததாக இருக்க வேண்டும். கடவுளோடு நாம் நெருங்கியிருப்பதற்கும், வாழ்வை வெற்றிகரமாக வாழ்வதற்கும், இறைவனின் சிறப்பான அருளை நிறைவாகப் பெற்றுக்கொள்வதற்கு ஆயுதமாக இருக்கக்கூடிய செபத்தின் மீது நாம் பற்றுள்ளவர்களாக இருப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இணையதள உறவுகளே

துணிவோடிருங்கள், அஞ்சாதீர்கள். எத்தனை முறை ஆண்டவனே சொன்னாலும், யார் காதில் ஏறப்போகிறது. ஏறாது. காரணம், எங்கு பயம் மிகுந்துள்ளதோ அங்கு எதுவும் காதில் ஏறாது. யாரிடம் சந்தேகம் தலைக்கேறி இருக்கிதோ, அதன்பின் எந்த அன்பு வார்த்தையும் எடுபடாது.மாறாக இருக்கின்ற வாழ்க்கையையும் கெடுத்துவிடுவர்.அந்த சீடர்கள்போல, பயந்து, பலமிழந்து, அலரும் நிலைக்கு ஆளாகிவிடுவர்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் வார்த்தைகள் வகைக்கு உதவாது என்பதை இயேசு இங்கு உணர்த்துகிறார். வார்த்தைகளோடு செயலிலும் இறங்க வேணடும்.எட்டி நின்று, “ துணிவோடிருங்கள், நான்தான், அஞ்சாதீர்கள்�? (மாற் 6:50) என்ற இயேசு, அதோடு நின்றுவிடவில்லை. ‘பிறகு அவர்களோடு படகில் ஏறினார்’அவர்களோடு தண்டுவலித்திருப்பார். தோளில் தட்டி, திடமூட்டி, இனிய பயணமாக்கியிருப்பார்.

உங்கள் வாழ்க்கைப் பயணத்தை பயம், சந்தேகம், கோபம் உருக்குலைக்கும் வேளையில், வார்த்தை மட்டும் போதாது. இயேசுவைப்போல செயலிலும் காட்டுங்கள். பயணம் இனிமையாகும்.

-ஜோசப் லீயோன்

 

அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகத்தின் கடைசி வாக்கியத்தை நம் சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். இயேசு கடல்மீது நடந்து வந்ததையும், காற்றை அடக்கியதையும் கண்ட சீடர்கள் மிக மிக மலைத்துப் போனார்கள். ஏனெனில், அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று கூறும் நற்செய்தியாளர் அதற்குத் தருகின்ற விளக்கம்தான் “அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது” என்பது.

அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியைப் புரிந்துகொள்ளாததனால்தான், இயேசு கடல்மீது நடந்த நிகழ்ச்சியை சீடர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்பங்களைப் பெருக்கியதன் மூலம் இயேசு தாமே மெசியா என்றும், விண்ணரசின் புதிய விருந்தளிப்பவர் என்றும், நிறைவான உணவை வழங்குபவர் என்றும் எண்பித்தார். ஆனால், அந்த நிகழ்ச்சியினால் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே, அவருக்கு இயற்கையின்மீது ஆற்றலும், அதிகாரமும் உண்டு என்பதை உணர முடியும். அப்படி உணராததால்தான் அவர்கள் மலைத்துப்போனார்கள் என்று சொல்லும் நற்செய்தியாளர் அதற்கான காரணமாக உள்ளம் மழுங்கியதைக் குறிப்பிடுகிறார். யாருக்கெல்லாம் இறைவன் ஞ்hனம் என்னும் கொடையை, நம்பிக்கை என்னும் வரத்தைத் தருகிறாரோ, அவர்களெல்லாம் இயேசுவை அருளடையாளங்களில் மெசியாவாக ஏற்றுக்கொள்வர். இறையருள் இல்லாதவர்களின் உள்ளம் மழுங்கித்தான் போகும். அந்தக் கொடைக்காக மன்றாடுவோம்.

மன்றாடுவோம்: ஞானத்தின் ஊற்றே ஆண்டவரே, எங்கள் வாழ்வில் நீர் செய்யும் அரும்பெரும் செயல்களைக் கண்டும் உம்மை எம் ஆண்டவராக, மெசியாவாக ஏற்றுக்கொள்ளாத தன்மைக்காக மன்னிப்புக் கோருகிறோம். எங்கள் உள்ளங்களைத் தூய ஆவி என்னும் கொடையால் நிரப்பி, மழுங்கிய உள்ளங்களைத் திறக்கச் செங்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்

 

--: அருள்தந்தை குமார்ராஜா

-----------------

''உடனே இயேசு சீடர்களிடம் பேசினார். 'துணிவோடிருங்கள்;
நான்தான், அஞ்சாதீர்கள்' என்றார்'' (மாற்கு 6:51)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- மனிதரின் வாழ்க்கையில் பல விதமான அச்சங்கள் எழுவதுண்டு. அச்சம் என்பது நம் உள்ளத்தில் உறுதியான பிடிப்பு இல்லாத வேளையில் எழுகின்ற கையறு நிலை. இதை அனுபவிக்கும் வேளையில் நாம் துணிந்து செயல்படுகின்ற தன்மையை இழக்கிறோம். தயக்கம் நம்மை மேற்கொள்கிறது. இயேசுவின் சீடர்களுக்கு இந்த அனுபவம்தான் ஏற்பட்டது. ''இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டு சீடர்கள் அஞ்சிக் கலங்கினார்கள்'' (காண்க: மாற் 6:49-50). சீடர்களுக்கு ஏற்பட்ட அச்சம் அவர்களுக்கு ஏதோ தீங்கு நிகழக் கூடுமோ என்பது பற்றியல்ல. அவர்கள் இயேசுவின் செயலைக் கண்டு அச்சம் கொண்டார்கள். கடல்மீது நடக்கும் செயல் சாதாரண மனிதருக்குச் சாத்தியமல்ல என்பதால் ''அது பேய்'' என்றெண்ணி அவர்கள் அச்சம் கொண்டார்கள். இயேசுவைப் பற்றிய உண்மை சீடர்களுக்குத் தெரியாதிருந்தது.

-- அச்சத்தைப் போக்கும் வழி உண்மையைக் கண்டுகொள்வதே. மாயையை உண்மையென்றும் உண்மையை மாயை என்றும் நினைக்கும்போது தவறு ஏற்படுவதோடு அத்தவற்றின் காரணமாக நம் உறுதியான மனநிலை குலையப்போகும் ஆபத்து ஏற்படுமோ என்னும் உணர்வு நம்மை மேற்கொண்டுவிடும்போதும் நாம் அச்சத்தால் பீடிக்கப்படுகிறோம். எனவே உண்மையைக் கண்டுகொள்ள நாம் எப்போதும் முயல வேண்டும். இயேசு பற்றிய உண்மையை நாம் எவ்வளவு ஆழமாக அறிகிறோமோ அவ்வளவு ஆழமாக நம் உள்ளத்தில் நம்பிக்கையும் வளரும். அப்போது அச்சத்திற்கு இடமிராது. நமக்கு வாழ்வளிக்கும் கடவுள் தம் அருள்கொடைகளால் நம்மை நிரப்பி நம்மை உறுதிப்படுத்துவார்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் இதயத்தில் அச்ச உணர்வு எழும்போது உம் வல்லமையால் எங்களுக்கு உறுதி அளித்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-----------------------------

-'வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் செல்வோம்'-

இயேசுவின் அன்புக்குரியவரே!

இயேசு தந்தை இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றுள்ளார். நம் இயேசு பொழுது சாயும் நேரங்களில் மலைக்குச் சென்று தந்தை இறைவனிடம் செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்றும் அவர் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு வழக்கம்போல செபிக்கச் சென்றார். இறைமகன் செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாரென்றால் எனக்கும் உங்களுக்கும் செபம் எவ்வளவு அவசியம ;!

அந்த அவசியத்தை சீடர்கள் அடுத்த நிமிடமே உணர்ந்தனர். பெத்சாயிதா கடல் பயணம் அன்று கடும் பயணமாகி மாறிவிட்டது. பொழுது சாய்வதற்குள் வீடு போய் சேர வேண்டிய சீடர்கள் இன்னும் நடுக்கடலில் இருந்தனர். நான்காம் காவல்வேளை. ;எதிர்காற் று வேறு. உடலிலும் வலிமை இல்லை. அதைவிட ஆன்மீக வலிமை இல்லாததால் உடலிலும் உள்ளத்திலும் வலுவிழந்துவிட்டனர். படகிலும் பணம்செய்ய பயப்படுகின்றனர்.

ஆனால் இயேசுவோ செபித்து இறை வல்லமையால் தன்னை நிறைத்துக் கொண்டதால் கொந்தளிக்கும் கடல் நடுவே, எதிர் காற்றிலும் நான்காம் காவல் வேளையிலும் கடலில் நடந்துவர முடிந்தது. இறை உறவில் நிறைந்திருந்தால் வாழ்வின் எச்சூழ்நிலையிலும் வாழமுடியும். செபிப்போம். வாழ்வோம்.வாழ்த்துக்கள். ஆசீர்.

-: ஜோசப் லியோன்