முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-18

அன்பிற்குரியவர்களே, சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள். சோதனை வரும்போது, `இச்சோதனை கடவுளிடமிருந்தே வருகிறது' என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப் படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது. பின்னர் தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது. என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, ஏமாந்துபோக வேண்டாம். நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரம் எல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 94: 12-13ய. 14-15. 18-19
பல்லவி: ஆண்டவரே! நீர் கண்டித்து பயிற்றுவிப்போர் பேறுபெற்றோர்.

12 ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர்;
13ய அவர்களின் துன்ப நாள்களில் அவர்களுக்கு அமைதி அளிப்பீர். -பல்லவி

14 ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார்.
15 தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன் வழி நடப்பர். -பல்லவி

18 `என் அடி சறுக்குகின்றது' என்று நான் சொன்னபோது, ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று.
19 என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். அல்லேலூயா.

மாற்கு 8:14-21

ஆண்டின் பெதுக்காலம் வாரம் 6 செவ்வாய்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 14-21

அக்காலத்தில் சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அப்பொழுது இயேசு, ``பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, ``நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?'' என்று அவர் கேட்க, அவர்கள், ``பன்னிரண்டு'' என்றார்கள். ``ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?'' என்று கேட்க, அவர்கள், ``ஏழு'' என்றார்கள். மேலும் அவர் அவர்களை நோக்கி, ``இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?'' என்று கேட்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

13.02.2024 செவ்வாய்
புரியாத புதிராகல்லாமல் ...

திடீரென்று இளையோர் மத்தியில் பிரபலமான நடிகர் அரசியலில் குதிப்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. கச்சா எண்ணெயும், தங்கமும் போட்டியிட்டு முன்னேறிக்கொண்டிருக்கும் தருவாயில், திடீரென்று மத்திய அரசின் ‘பெட்ரோல் விலை குறைக்கப்பட இருக்கிறது” என்ற அறைகூவல் புரியாத புதிராகவே இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தை சாராதவர்கள் அந்த குறிப்பிட்ட மதக் கருவூலத்திற்கு (கோவில்) செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது என்ற உச்சநீதிமன்றத்தின் திடீர் அறிவிப்பு புரியாத புதிராகவே மக்களுக்கு காட்சியளிக்கின்றது.

ஆனால் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்திலே சீடர்களின் புரியாத தன்மையைக் கண்டு வெகுண்டெழுகின்ற நிகழ்வினைத்தான் வாசிக்கின்றோம். எதற்காக புளிப்பு மாவு பற்றி பேசுகின்றார் என்றால் தீய சக்தியின் வடிவம். புளிப்பு மாவு என்பது ஒரு தீய சக்தியின் வடிவமாக பார்க்கப்பட்டது. பரிசேயர்களும் ஏரோதியரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தினை தவறுதலாக பயன்படுத்துகின்றார்கள். ஏனென்றால் ஏரோது, உண்மையை எடுத்துரைக்க முயன்ற திருமுழுக்கு யோவானை கொலை செய்துவிடுகின்றான். பரிசேயர்கள் இயேசுவை மெசியாவாக மீட்பு கொடுப்பார் என்று எண்ணி, அவரை அரசராக வைத்து அரசியல் செய்ய நினைத்தனர். ஆனால் இயேசுவின் வாழ்வு, மாற்று சிந்தனையை கற்றுக்கொடுத்தது. இதனை சீடர்கள் புரியாமல் செயல்பட நினைத்தார்கள். அதனால்தான் இயேசுவின் வல்லமையையும் புரிந்துகொள்ளவில்லை.

நாம் சிந்திப்போம். நம்மைச்சுற்றி நடக்கக்கூடிய நிகழ்வுகளை நாம் புரிந்து கொள்கிறோமா? நமது கிறிஸ்தவ நம்பிக்கை எந்த அளவில் இருக்கிறது என்பதனை புரிந்துகொள்கிறோமா?

- அருட்பணி. பிரதாப்

===========================

மாற்கு 8 :14 -21
மழுங்கி போய்விட்டோமா?

இன்றைய நற்செய்தியை 15- ஆம் இறைவார்த்தையை வாசித்துவிட்டு மீண்டும் 14 ஆம் வசனத்தை வாசித்து, தொடர்ந்தால் இன்னும் நேர்த்தியாக இருக்கும். எப்பொழுதுமே இயேசு தனிமையில் தன் சீடர்களோடு இருக்கும் போது அவர்களுக்கு பலவற்றைக் கற்பிப்பார். அப்படித்தான் இன்றைய நற்செய்தியில் ஏற்கனவே அடையாளம் கேட்டு சோதித்த பரிசேயர்களையும் ஏரோதியர்களையும் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்று தன் பாடத்தை இயேசு கிறிஸ்து கொஞ்சம் கடினமாக ஆரம்பிக்கும் பொழுதே சீடர்கள், சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? என்ற விவாதத்தில் வரும் குழந்தையைப் போல சாப்பாடு தான் முக்கியமென்று தங்களிடம் உள்ள அப்பத்தைப் பற்றி மாறி மாறி கண்களாலும் சாடைகளினாலும் விவாதிக்க ஆரம்பித்த விட்டார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆண்டவர் இன்னும் அதிகமாக எரிச்சலுற்று தன் இதயக் குமுறலை வெளிப்படுத்துகிறார். தான் ஏற்கனவே செய்த அப்பம் பலுகுதலைச் சொல்லி அவர்களைச் சாடுகிறார். அவர் செய்த அனைத்து அருங்குறிகளையும் உட்பொருளையும் பரிசேயரும் பொதுமக்களும் புரிந்து கொள்ளாததில் வியப்பில்லை. ஆனால் சீடர்கள் இவ்வாறு இருந்தது அவருக்கு வேதனையளித்தது.

இது எப்படியிருக்கிறதென்றால் பல ஏக்கர் கணக்கில் வாழைத் தோட்டத்தை வைத்தவர், எனக்கு சாப்பிடுவதற்கு ஒரு வாழை இலை இல்லையே என வாழைத்தோட்டத்திற்குள் நின்று கொண்டு அழுது புலம்புவதைப் போன்று இருக்கிறது. இன்று நாமும் நம் வாழ்வில் எத்தனையோ அற்புதங்களையும் அதிசயங்களையும் பார்த்துக்; கொண்டிருக்கிறோம். ஆயினும் ஒரு சிறு பிரச்சனை வந்தாலும் உடனடியாக கிறிஸ்துவை அறியாதவர்கள் போல புலம்பித் தவிக்கிறோம். அர்ப்பமாண காரியங்களுக்காவும் நம்பிக்கையில்லாமல் கண்ணீர் வடிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலான செபங்களில் தலைச்சிறந்த செபமான திருப்பலியையும் நற்கருணையையும் நம்மோடு வைத்து கொண்டு, அந்த போதகர் அப்படி செய்வார், இப்படி செய்வார், அந்த பூசாரி மந்திரிச்சுக் கட்டுகிற கயிறைக் கையில் கட்டினால் எல்லாம் சரியாயிரும் என சொல்வதெல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கிற நம் ஆண்டவர் தினமும் குமுறிக் கொண்டுதான் இருப்பார். “மீதித் துண்டுகளை எத்தனைக் கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்பது அவர் நாம் விரும்புவதற்கும் கேட்பதற்கும் மிகுதியாக மீதியிருக்கும் அளவுக்கு செய்வார் என்பதைக் குறிக்கிறது.

- திருத்தொண்டர் வளன் அரசு

===================================

விண்ணரசில் நுழைய முற்படுவோம்

பரிசேயர் மற்றும் ஏரோதுவைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்க இயேசு அழைப்பு விடுக்கிறார். எதற்காக பரிசேயர்களை, ஏரோதுவோடு இயேசு ஒப்பீடு செய்கிறார்? பரிசேயர்களுக்கும், ஏரோதுவுக்கும் உள்ள தொடர்பு என்ன? பரிசேயர்கள் மெசியாவை அடிமைத்தளையிலிருந்து மீட்கக்கூடிய, மிகப்பெரிய இராணுவத்தை வழிநடத்தில வெற்றிகொள்கின்றவராகப் பார்த்தனர். ஏரோதுவின் எண்ணமும் இந்த மண்ணகத்தில் தனது அரசை நிறுவ வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. அதற்கு குறுக்கே வருகிற அனைவரையும் கொன்றுவிடுவதற்குக்கூட அவன் தயாராக இருந்தான்.

சற்று இரண்டுபேருடைய எண்ணங்களைப் பார்த்தால், இரண்டுபேருடைய எண்ணங்களும் இந்த மண்ணகம் சார்ந்ததாக இருந்தது. இந்த மண்ணகத்தில் அரசை நிறுவ வேண்டும், இங்கே மகிழ்ச்சியாக அதிகாரத்தோடு, பதவியோடு வாழ வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால், இயேசு இந்த எண்ணத்தை நிராகரிக்கிறார். இவர்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள். இவர்களுடைய எண்ணம் மக்களுடைய எண்ணமாக மாறிவிடும். மக்களும், இந்த மண்ணகம் சார்ந்த சிந்தனையிலே வளர்ந்து விடுவார்கள். எனவே, பரிசேயர் மற்றும் ஏரோதுவின் சிந்தனைத்தாக்கம் மக்களை வழிதவறிச்செல்வதற்கு காரணமாகிவிடக்கூடாது என்பது இயேசுவின் ஆவல். ஏனென்றால், இயேசுவின் போதனை விண்ணகத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது அரசு விண்ணகம் சார்ந்தது.

நமது வாழ்வும் கூட மண்ணகம் சார்ந்ததாகத்தான் இருக்கிறது. இங்கே இருக்கக்கூடிய பதவி, அதிகாரம், பலம் இவற்றைப்பெறுவதற்காகத்தான் நாமும் முயன்றுகொண்டிருக்கிறோம். கடவுளின் அரசைப்பற்றி நாம் பலவற்றைக்கேட்டாலும், அவற்றை நாம் பொழுதுபோக்காகத்தான் கேட்கிறோமே தவிர, பொருட்டாக எண்ணுவதில்லை. நாமும் அப்படி இல்லாமல், கடவுளின் அரசில் நுழைய முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் சாட்சிகளாய்……..

18.02.14 - மாற்கு 8: 14 – 21
பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக்குறித்து மிகவும் கவனமாயிருங்கள், என்று இயேசு கூறுவதன் பொருளை அறிந்துகொள்ள இதற்கு முந்தைய பகுதிகளை இணைத்துப்படிக்க வேண்டும். தன்னுடைய பதவியைக்காப்பாற்றுவதற்காக ஏரோது, உண்மையைச்சொன்ன திருமுழுக்கு யோவானை கொன்றுவிட்டான். அவன் செய்தது தவறு என்று தெரிந்திருந்தும் யாரும் அவனைக்கண்டிக்கவில்லை. இதற்கு காரணம் அவர்களின் சுயநலம். அதேபோல், பரிசேயர்களும் மெசியாவை எதிர்பார்த்தது தங்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, தனது அரசை நிறுவுவார், தாங்களும் அதில் பங்குபெறலாம் என்கிற சுய இலாபத்திற்காககத்தான். இரண்டு பேருமே தங்களின் சுயநலத்துக்காகத்தான் எதையும் செய்துவந்தார்கள். தங்களின் விருப்பு, வெறுப்புகளை மையமாக வைத்தே தங்கள் வாழ்வை நகர்த்தி வந்தனர்.

புளிப்பு மாவு என்பது யூதர்களுக்கு தீய சக்தியின் வடிவம். இதனால்தான், இயேசு புளிப்பு மாவோடு இவர்களை ஒப்பிடுகிறார். தாங்களும் கெட்டவர்களாக வாழ்ந்து, தங்களுடைய அதிகாரத்தால், பலத்தால் தங்கள் தவறான சிந்தனைகளை, எண்ணங்களை சாதாரண மக்கள் மத்தியில் விதைத்து, இந்த சமுதாயத்தையே கறைபடிந்த சமுதாயமாக மாற்றுவது இப்படிப்பட்ட ஏரோதியர்களும், பரிசேயர்களும் தான் என்பதால்தான் இயேசு கடுமையாகச் சாடுகிறார். அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். தங்களுடைய விருப்பு, வெறுப்புகளை விட்டுவிட்டு, மக்கள் வளர்ச்சியிலே, நலனிலே அக்கறை கொள்கிறவர்களாக இருக்கின்றபோது, இறையரசு இந்த மண்ணில் நிச்சயமாக மலரும். அப்படி பொறுப்புணர்வோடு இருக்கிறவர்களை அதிகாரத்தில் அமர வைப்பது ஒவ்வொருவரின் கடமை.

பணத்துக்காக, சுயநலத்துக்காக அதிகாரத்தில் அமர நினைப்பவர்களை உறவுக்காக, நம் சொந்த இலாபத்துக்காக ஏற்றுக்கொள்வதோ, அதற்கு உடன் இருந்து உதவி செய்வதோ, இறையரசுக்கு எதிரான செயலாகும். மக்கள் நலனில் அக்கறைகொண்டு தங்கள் வாழ்வையே தியாகம் செய்ய காத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கு நம்முடைய உடனிருப்பைக்காட்டுவதுதான், இயேசுவுக்குச்சான்று பகர்கின்ற வாழ்வாகும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=================================

இருக்கிறதா, இல்லையா ?

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சிறிய, ஆனால் சுவையான நிகழ்வைச் சொல்கிறது. மாற்கு நற்செய்தியாளருக்கே உரிய தனித்தன்மைகளுள் ஒன்று இத்தகைய சிறு, சிறு தனித்தன்மை வாய்ந்த செய்திகளைப் பதிவு செய்திருப்பது.

படகிலே பயணம் செய்துகொண்டிருக்கும்போதுதான் சீடர்களுக்கு நினைவு வருகிறது தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள் என்று. படகில் அவர்களிடம் ஒரேயொரு அப்பம் மட்;டுமே இருந்தது. அந்த ஒரு அப்பத்தைக் கொண்டு எத்தனை பேருக்கும் உணவளிக்கும் ஆற்றல் மிக்க ஆண்டவர் தம்முடன் இருந்ததை அவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதையும் மாற்கு இயேசுவின் வாய்மொழி வழியாகப் பதிவு செய்துள்ளார்.

இந்த நிகழ்வு இரண்டு பாடங்களைக் கற்றுத் தருகிறது:

1. நம்மிடம் என்ன இருக்கிறது என்று பார்க்காமல், என்ன இல்லை என்றே நாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். அது தவறு. பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து, நம்மிடம் "அது இல்லை, இது இல்லை" என்று நாம் புலம்பிக்கொண்டிருக்கலாம். "இது இருக்கிறதே" என்று நிறைவும், மகிழ்வும் அடைய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

2. நம்மிடம் இருக்கும் சிறியவற்றையும் கொண்டு இறைவன் பெரிய செயல்களைச் செய்ய வல்லவர் என்பதை நாம் மறக்கக்கூடாது. வெறும் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியவர், ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பலுகச்செய்தவர், நம்மிடம் உள்ள எளியவற்றைக் கொண்டு பெரிய, மகத்தான வெற்றிகளைத் தருவார் என்று நம்புவோமாக.

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களிடம் இல்லாதததைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிராமல், இருப்பவற்றுக்காக நன்றி செலுத்தவும், இருப்பவற்றைக் கொண்டு பெரிய செயல்களை ஆற்ற உமது அருளையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

இணையதள உறவுகளே

சில மனிதர்கள் உண்டு. சாப்பாடு கொடுத்தால் போதும் எல்லாவற்றையும் மறந்து விடுவர். ஒரு தட்டு பிரியாணி  கொடுத்தால் தன்மானம் இழந்து எதையும் செய்வர். 500 ரூயஅp;பாய் கொடுத்தால் போதும், பிரமாணிக்கமாக ஓட்டு போட்டு விடுவார்கள்.அசனம்தான் சில பங்குகளின் பிரதான பணி. சாப்பாடுதான் அவர்களுக்குப் பெரிது. நம் மானம் மரியாதை காற்றில் பறக்கிறதே என்ற எண்ணமே இல்லை அல்லவா! ஏன் சாப்பாடு போடுகிறான்? எதற்காக பணம் கொடுக்கிறான்? அதன் உள் நோக்கம் என்ன ? இதை சிந்திப்பதற்கு நேரமும் இல்லை. ஆட்களும் இல்லை.

சீடர்கள்  அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இயேசு அப்பத்தை புளிக்க வைக்கும் புளிக்காரத்தைபற்றி சொல்லிக்கொண்டிருக்கிறார். சாப்பாட்டைபற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே, உங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டிருக்கும் பரிசேயர், ஏதோதியர் மட்டில் கவனமாய் இருங்கள் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார். சரியான விளிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

இயேசுவின் இந்த விளிப்புணர்வுப் பணி நம் பங்குகளில் கிராமங்களில் நடைபெற வேண்டும். சோறு போடுவதும் அசனம் நடத்துவதும் மக்களை ஏமாற்றும் கீழ்தர ஏமாற்று வேலை. ஒரு ஊரில் அசனத்திற்கு 60 கிடா, 100 ழூடை அரிசி. ஏன் அந்த ஊர் மக்கள் பட்டினியாக கிடக்கிறார்களா? அல்லது யானைப் பசியா? முன்னேற்றப் பணிகளுக்குப் பயன்படுத்தலாமே! விளிப்புணர்வு ஏற்படுத்துவோம், ஏமாற்ற வேண்டாம்.  

 -ஜோசப் லீயோன்

-------------------------

ஓர் அப்பம் மட்டுமே இருந்தது !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் பணிவாழ்வில் நடைபெற்ற ஒரு சுவையான நிகழ்வை எடுத்துச் சொல்கிறது. பயணம் புறப்படும்போது, இயேசுவின் சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்கள். மாற்கு நற்செய்தியாளரின் தனிச் சிறப்புகளில் ஒன்று இத்தகைய தனித்தன்மை வாய்ந்த நிகழ்வுகளை, தகவல்களைப் பதிவு செய்திருப்பது. ஆனால், இந்த சாதாரண ஒரு நிகழ்ச்சியின் மூலம், அருமையான ஒரு செய்தியைச் சொல்ல மறக்கவில்லை.

அப்பங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்கள் என்று சொன்ன உடனே, அவர் தருகின்ற அடுத்த தகவல், படகில் அவரிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அந்த ஓர் அப்பம் இயேசுவே என்கின்றனர் சில விவிலிய அறிஞர்கள். ஆம், ஐந்து அப்பங்களைக் கொண்டு, ஐயாயிரம் பேருக்கு உணவு அளிக்கும் ஆற்றல் நிறைந்த இயேசு அவர்களோடு இருக்கும்போது, சீடர்கள் ஏன் கலங்க வேண்டும்? எனவேதான், இயேசு விளக்கமாக அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார். “இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்கிறார். புரியாமல் இருந்தது அவர்கள் மட்டுமல்ல, நாமும் கூடத்தான். அது இல்லை, இது இல்லை என்று நம்மிடம் இல்லாததைப் பற்றிக் கவலை கொள்ளாமல், இயேசு நம்முடன் இருக்கிறார் என்னும் நம்பி;க்கையில் நாம் வளர்ந்தால், நமக்கு என்ன குறை? ஏது கவலை?

மன்றாடுவோம்: போதுமானவரான இயேசுவே, நீர் எங்களோடு இருப்பதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் எனக் கவலை கொள்ளாமல், நீர் எங்களுடன் இருக்கிறீர். எனவே, நாங்கள் எது பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என உணரும் ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு சீடர்களை நோக்கி, 'நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக் கொள்கிறீர்கள்?
இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்?
உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?' என்று கேட்டார்'' (மாற்கு 8:17)

சிந்தனை
-- இயேசு சீடர்களிடம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகிறார். அக்கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் கூற முடியாமல் சீடர்கள் திணறிப்போயிருப்பார்கள். இயேசு கேட்ட கேள்விகளின் பின்னணி என்ன? இயேசு இருமுறை பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு உணவளித்ததைச் சீடர்கள் நேரடியாகக் கண்கொண்டு பார்த்திருந்தார்கள். இப்போது தங்களிடம் அப்பம் இல்லையே என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் (காண்க: மாற் 8:16). ஒருவேளை இதற்குமுன் செய்ததுபோல இப்போதும் இயேசு அதிசயமான விதத்தில் தங்களுக்கு உணவளிப்பார் என அவர்கள் நினைத்தார்களா? அல்லது புதுமைகள் புரிகின்ற இயேசு யார் என்னும் கேள்விக்குச் சரியான பதில் தெரியாமல் குழப்பம் அடைந்தார்களா? எவ்வாறாயினும், இயேசு அவர்களை நோக்கி, ''உங்கள் உள்ளம் மழுங்கிப் போயிற்றா?'' (மாற் 8:17) எனக் கேட்பது நம்மைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும்.

-- மனித எதிர்பார்ப்புகளைத் தாண்டிச் செல்ல வேண்டும் என இயேசு தம் சீடர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர்கள் இயேசுவை அதிசயங்கள் புரிகின்ற பெரிய மனிதர் என்று மட்டுமே நினைத்தால் அது தவறு என இயேசு உணர்த்துகிறார். கடவுள் பற்றிய உண்மையை அறிந்து உணர நமக்கு உலகப் பார்வை உதவாது. நேரடியாகப் பார்த்து, கேட்டு, அறிகின்றவற்றை நாம் தாண்டிச் செல்ல வேண்டும். அப்போதுதான் கடவுள் இயேசு வழியாகச் செயல்படுவது நம் அகக் கண்களுக்குப் புலனாகும். இயேசு வழியாகக் கடவுள் செயலாற்றுகிறார் என்பதை உணர்கின்ற அதே நேரத்தில் இயேசு நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் மனிதரல்ல, மாறாக அவர் தம்மையே வெறுமையாக்கி, துன்பங்கள் வழியாக நமக்குப் புது வாழ்வு தருகிறார் என நாம் ஏற்க முன்வர வேண்டும். இதற்கு நேரடியான நிரூயஅp;பணங்கள் நமக்குக் கிடையாது. ஆனால் நம் உள்ளம் ''மழுங்கிப் போகாமலும்'' கடினமாகிப் போகாமலும் இருந்து, ''இளகிய'' ஒன்றாக மாறிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் இளகிய உள்ளம் கொண்டவர்களாக மாறிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல

 


''இயேசு, 'பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்'
என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டார்'' (மாற்கு 8:15)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மக்களுக்கு அதிசயமான விதத்தில் இயேசு உணவளித்தபின் மீண்டும் ஓர் உணவைப் பற்றிப் பேசுகிறார். அதுவே ''புளிப்புமாவு'. சிறிதளவு புளிப்புமாவை எடுத்துப் பெருமளவு மாவில் சேர்க்கும்போது மாவு முழுவதும் புளிப்பேறி அப்பம் சுடுவதற்குத் தயாராகும். எனவே புளிப்புமாவும் ஒருவிதத்தில் உணவு சார்ந்ததே. மூன்று மரக்கால் அளவுகொண்ட பெருமளவு மாவையும் சிறிதளவு புளிப்புமா சிறப்பான விதத்தில் புளிப்பேற்றிவிடுவதை முன்னொருமுறை ஓர் உவமையாக எடுத்துரைத்து (மத் 13:13), அச்செயலைக் கடவுளாட்சிக்கு ஒப்பிட்டிருந்தார் இயேசு. ஆனால் இம்முறையோ இயேசு புளிப்புமாவுக்கு ஒரு தனி அர்த்தம் கொடுக்கிறார். நலமான போதனை என்றாலும் சரி, தவறான போதனை என்றாலும் சரி, அது மனித உள்ளத்தில் ஏற்கப்படும்போது அந்த உள்ளத்தை மாற்றிவிடுவதும் புளிக்காரத்தின்; செயலுக்கு ஒப்பிடப்பட்டது. பரிசேயரும் தம் போதனையால் மக்களின் உள்ளத்தைத் தவறான வழியில் கொண்டுசெல்லும் ஆபத்து இருந்ததால் அத்தகைய ஆபத்து நிகழ்ந்துவிடலாகாது என்பதைக் காட்ட இயேசு பரிசேயரின் வெளிவேடத்தை இங்கே குறிப்பிடுகிறார்.

-- வெளிவேடம் என்பது மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் கவர்ச்சியாக நமக்குத் தோற்றமளிக்கலாம். ஆனால் வெளிவேடம் மனிதரின் உள்ளத்திலிருக்கின்ற உண்மையை மறைத்துவிட்டு, வெளியே மட்டும் ஒரு மாயையை உருவாக்கி நம்மை நெறிபிழறச் செய்துவிடும். இயேசுவே உண்மையான உணவு என்றால் பரிசேயரின் போக்கும் ஏரோதின் நடத்தையும் சீடருக்கு வாழ்வுதரும் உணவாக இல்லாமல் அவர்களை மாய்த்துவிடுகின்ற நஞ்சாகவே மாறிவிடும். இது இயேசு நமக்கு விடுக்கின்ற எச்சரிக்கை.

மன்றாட்டு
இறைவா, நல்வழி காட்டுகின்ற இயேசுவை நாங்கள் உறுதிபடைத்த நெஞ்சோடு பின்பற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்