முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 19-27

என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்: ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும், பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்ட வேண்டும். ஏனெனில் மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது. எனவே எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர், கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்று உடனே தாம் எவ்வாறு இருந்தார் என்பதை மறந்துவிடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவர். ஆனால் நிறைவான விடுதலையளிக்கக்கூடிய சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதைத் தொடர்ந்து கற்போர் தாம் கேட்பதை மறந்து விடுவதில்லை; அவர்கள் அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள்; தம் செயல்களால் பேறுபெற்றவர் ஆவார்கள். தாம் சமயப் பற்றுடையோர் என எண்ணிக் கொண்டிருப்போர் தம் நாவை அடக்காமல் இருப்பாரென்றால் தம்மையே ஏமாற்றிக்கொள்வர். இத்தகையோருடைய சமயப் பற்று பயனற்றது. தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 15: 2-3. 3-4. 4,5
பல்லவி: ஆண்டவரே, உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?

2 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;
உளமார உண்மை பேசுவர்; 3ய தம் நாவினால் புறங்கூறார். -பல்லவி

3 உ தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். -பல்லவி

4 தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்.
5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்;
- இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

காண்க அல்லேலூயா, அல்லேலூயா! இறைவன் நம்மை அழைத்ததால் எத்தகைய எதிர்நோக்கு ஏற்பட்டுள்ளது என்று நாம் அறிந்துகொள்ளும்படி, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தை நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக! அல்லேலூயா.

மாற்கு 8:22-26

ஆண்டின் பெதுக்காலம் வாரம் 6 புதன்


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 22-26

அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, ``ஏதாவது தெரிகிறதா?'' என்று கேட்டார். அவர் நிமிர்ந்து பார்த்து, ``மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்'' என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார். இயேசு அவரிடம், ``ஊரில் நுழைய வேண்டாம்'' என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

மாற்கு 8: 22 – 26
பார்வை பெறுவோம்

பட்டினத்தார் திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. பட்டினத்தார் வீட்டின் வாசலருகில் நிற்பார். அப்போது எம்.ஆர்.ராதா தன்னுடைய தோழியுடன் நின்று கொண்டு அவரைச் சந்திப்பார். எம்.ஆர்.ராதா தன்னுடைய தோழியார் அழகை வர்ணிப்பதாகவும் அதற்கு பட்டினத்தார் எதிர்வினை ஆற்றுவதாகவும் அமைகிறது அக்காட்சி. கண்ணைக் கவரும் கார்முகில் கூந்தலைப் பார் – ஈரும் பேனும் குடியிருக்கும் கூந்தலா கார்முகில்? வேலைப் பழிக்கும் கண்ணழகைப் பார் – காலையில் பார்த்தால் பீளை வடியும் கண்கள். மதுரசம் தரும் கனியிதழ் - எச்சில் நாற்றத்ததைத் தரும் கனியிதழ் கனிரசமாம், கற்கண்டாம். நிலவு போன்ற கன்னத்தைப் பார் – வரிவரியாய்த் தோன்றி வாடிப்போகும் அந்த நிலவு. இதில் எம்.ஆர்.ராதா பார்க்க முடியாதவற்றை பட்டினத்தார் பார்த்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இத்தகைய ஒரு சூழலைத்தான் நாம் பார்க்கின்றோம். இயேசுவால் பார்க்க முடிகிறது. ஆனால் மனிதனால் மற்ற மனிதர்களை பார்க்க முடியவில்லை. காரணம், அவனுக்கு கண்ணிருந்தும் குருடனாக செயல்படுகிறான். அதனால் தான் அவன் கூறுகிறான்: அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். காரணம், ஒருவன் மற்றவன் படுகின்ற துன்பத்தைக் கண்டும் காணாமல் இருக்கின்றான். எனவே தான் எழுத்தாளர் பத்ம பூஷன் இவ்வாறு கூறுவார்: ‘விலங்குகளெல்லாம் மனிதர்களாகி விட்டன. எப்படியென்றால் அது தலைநிமிர்ந்து பார்ப்பதன் வழியாக. ஆனால் தலைநிமிர்ந்து செயல்படுகின்ற மனிதர்கள் இன்னும் மனிதர்களாக வாழவில்லை. காரணம் மற்றவர்களைத் திறந்து பார்ப்பதில்லை’. நாம் தான் மற்றவர்களுக்கு பொறுப்பு. ஒருவன் இந்த சமுதாயத்தில் துன்ப்பப்படுகிறான் என்றால் அதற்கு காரணம் நானாகத்தான் இருக்க முடியும் என்று தந்தை பெரியார் கூறுவார். இது முற்றிலும் உண்மை. அதனால் தான் கடவுள் ‘உன் சகோதரன் எங்கே?’ என்று காயீனிடம் கேட்டபோது ‘நான் என்ன என் சகோதரனுக்கு காவலாளியா?’ என்று கேட்கிறான். ஆனாலும் கடவுள் அவனைப் பொறுப்பாளியாகவே பார்க்கிறார்.

நம்முடைய வாழ்வில் அயலார் துன்பப்படும் போது நாம் கண் திறக்கின்றோமா? இந்த சமுதாயம் பசியால் வாடும்போது நான் என் கண்ணை திறக்கின்றேனா? சிந்திப்போம்.

  • அருட்பணி. பிரதாப்

======================

மாற்கு 8: 22- 26
அழைப்பும் மறுஅழைப்பும்

இயேசு செய்கின்ற ஒவ்வொரு புதுமையும் பல பாடங்களை நம்முன் படம் பிடித்துக் காட்டுகின்றது. குறிப்பாக அவர் செய்த ஒவ்வொரு அற்புதமும் தன்னுடன் இருந்த, அவரைப் பின்பற்றி வந்த ஒவ்வொரு சீடருக்கும் சீடத்துவ வாழ்க்கையை எடுத்து காட்டுவது போல அமைகிறது. ஒரே சொல்லால் அவன் குணம் பெறாது சில செயல்களால் சிறிது சிறிதாக குணம் பெறுகிறான். இரண்டு முறை அவன் கண்களில் ஆண்டவர் தன் கைகளை வைத்து குணம் கொடுக்க வேண்டியதாயிற்று.

இந்த மொத்த நிகழ்ச்சியையும் இயேசுவின் சீடர்களின் வாழ்க்கையோடு ஒத்து போவதாகவே காணமுடிகிறது. முதலில் தன்னிடம் வந்தவரை ஊருக்கு வெளியே அழைத்துச் செல்கிறார். சீடர்களும் இயேசுவால் அழைக்கப்பட்ட உடன் அனைத்தையும் விட்டுவிட்டு (இவ்வுலகவாழ்வினை) அவரோடு சென்றனர். (மாற்கு 1 : 20) முதலில் அழைக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆண்டவரை அவரது இறப்பிற்கு முன்பு தனியே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். ஆண்டவரோடு இருந்து, உண்டு, உடுத்து, உறங்கியவர்களின் அகக்கண்கள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. மெசியா என்றார்கள், ஆனால் அவர்கள் அரசியல், சமுதாய மெசியாவை எதிர்ப்பார்த்தனர். இன்றைய நற்செய்தியில் கூட இதே போலத்தான் கண்தெரியாதவர் மனிதனைப் பார்த்தார். ஆனால் மரங்கள் போல இருக்கின்றார்கள் என்றார். தன் பார்வை மரங்களாய் இருக்கின்றதெனக் கூறினார். சீடர்களின் மெசியாவைக் கண்ட கிறித்தவப் பார்வையும் அப்படி தானே இருந்தது. ஆனால் இரண்டாம் நேரம் இயேசு தொடும்பொழுது அவர் முழுமையாகப் பார்வைப் பெறுகிறார். சீடர்களும் இரண்டாம் முறையாக இயேசுவின் உயிர்ப்புக்கு அழைக்கப்படுகிறார்கள். (யோவான் 21) இந்த இரண்டாம் அழைப்பின் பொழுது தான் அவர்கள் முழுமையாக மெசியாவைக் கண்டடைகிறார்கள்.

ஆக, இறை நம்பிக்கை என்பது உடனடியாக, ஒரே நாளில் உச்சமடைவதல்ல. இது கொஞ்சம் கொஞ்சமாக நம்மையே ஒருமுகப்படுத்தி தயாரிப்பது. அவரைப் பின்பற்றும் பொழுது பல புனிதர்களைப் போல நாமும் “ஆன்மாவின் இருளினை” சந்திக்கலாம். மீண்டும் மீண்டும் தவறலாம். ஆனால் இயேசுவை நம்பிக்கையோடு பற்றிப் பிடிக்கும்போது நம்முன் அவர் ஒளியாக ஒளிர்ந்து நம் பலவீனங்களை பலமாக மாற்றுவார். நம் தடைகள் ஒவ்வொன்றுக்கும் விடைகள் கிடைக்கும். நம் குறைகளை நிறைவாக்குவார். நாமும் நம் கிறித்துவ அழைப்பில் உண்மையான மெசியாவைக் காண முயல்வோம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

உறவை வலுப்படுத்த முயற்சி எடுப்போம்

19.02.14 - மாற்கு 8: 22 -26
இயேசுவிடம் பார்வையற்ற ஒருவரை அழைத்து வருகிறார்கள். இயேசு அவரை தனியே ஊருக்கு வெளியே அழைத்துச்செல்வதை பார்க்கிறோம். வழக்கமாக மக்கள் மத்தியில் அனைவரும் விசுவாசம் கொள்ளும்பொருட்டு, விசுவாசத்தின் அடிப்படையில் குணம்கொடுக்கும் இயேசுவின் இந்த செயல் சற்று வித்தியாசமானதாகவும், விசித்திரமானதாகவும் இருக்கிறது. ஏன் இந்த மாறுபாடான செயல்? பொதுவாக, நல்ல மருத்துவர் என்று மக்களால் பாராட்டப்படுகிறவர், அதிகமாக படித்தவர் என்பதில்லை, மாறாக எந்த மருத்துவர் நோயாளிகளின் உணர்வுகளைப்புரிந்துகொண்டு, மருத்துவம் செய்கிறாரோ அவர்;தான் மக்கள் நடுவில் சிறந்தவராக கருதப்படுகிறார். நோயாளியின் உணர்வுகள், அவரது பயம், அவரது கவலை அடிப்படையில் மருத்துவம் செய்கின்றபோது, நோயாளி உடனடியாக குணமடைந்துவிடுவார். ஆனால், இந்த கலை எல்லாருக்கும் இருப்பதில்லை.

இயேசு சிறந்த மருத்துவர். அவர் பார்வையற்ற அந்த மனிதரின் உணர்வுகளை நிச்சயமாக புரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப்புதுமையில் இயேசுவிடம் இரண்டு வேறுபாடுகளைப்பார்க்கிறோம். 1. இயேசு அந்த மனிதரை தனியே அழைத்துச்செல்கிறார். 2. உடனடியாக பார்வையைக்கொடுக்காமல், இரண்டு நிலைகள் தாமதித்துப்பின் பார்வை கொடுக்கிறார். இயேசுவின் இந்தப்புதிய மாற்றத்திற்கு காரணம்: பார்வையற்ற மனிதருக்கு மக்கள் கூட்டம் பயஉணர்வைத்தந்திருக்கலாம். அல்லது இதுநாள் வரை பார்வையற்றவராக இருந்துவிட்டு, மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டு இனிப்பார்வை கிடைக்க வழியே இல்லை என்ற எண்ணத்தோடு வாழப்பழகிவிட்ட அவருக்கு, திடீரென்று அவருடைய வாழ்வில் பெரிய அதிசயம் நடக்கிறபோது, அது அவருக்கு பாதிப்பாகக்கூட முடியலாம். ஒரு நல்ல மருத்துவராக இயேசு அவரது உணர்வுகளைப்புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுகிறார். பார்வையற்றவருக்கு பார்வை கொடுத்து அவரது வாழ்வில் வசந்தம் மலரச்செய்கிறார்.

மற்றவர்களின் உணர்வுகளைப்புரிந்து நடப்பது ஒரு கலை. கேட்பவரின், பேசுபவரின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது உறவை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. உணர்வுகளைப்புரிந்து வாழும் அருளை இறைவனிடம் வேண்டுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

====================================

மரங்களைப் போலத் தோன்றும் மனிதர்கள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையற்ற மனிதரை இயேசு இரு கட்டங்களாக நலப்படுத்துவதைப் பார்க்கிறோம். முதன்முதல் இயேசு அவர்மேல் கைகளை வைத்தபோது, அவர் முழுமையான பார்வை பெறவில்லை. தெளிவற்ற முறையில்தான் பார்த்தார், தாம் பார்த்ததை அவர் இவ்வாறு விவரித்தார்: "மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள்".

எனவே, இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்து அவர் முழுப் பார்வையையும் அடையச் செய்தார்.

இந்த நிகழ்வு நமக்கெல்லாம் ஒரு பாடமாக அமைகிறது. இந்த உலகில் பார்வையற்ற மனிதரை இரண்டாகப் பிரிக்கலாம். முழுப் பார்வையும் இல்லாத மனிதர்கள், இவர்களே நாம் அழைக்கும் "மாற்றுத் திறனாளிகள்". ஆனால், இவர்கள் தவிர இன்னும் ஏராளம் அரைகுறைப் பார்வை உடைய மக்கள் இருக்கிறார்கள். நாமும் அவர்களில் அடங்கலாம். யாரெல்லாம் பிற மனிதர்களைப் பார்க்கும்போது, அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்களோ, அவர்களெல்லாம் பார்வைத் தெளிவற்றவர்கள், குறைப் பார்வை உடையவர்கள்தாம்.

பெண்களை இன்பப் பொருள்களாகப் பார்க்கிறவர்கள், மனிதர்களை சாதியக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறவர்கள், உழைக்கும் மக்களை ஏளனமாக நோக்குகிறவர்கள், செல்வம் இல்லாத எளிய மக்களை செல்வாக்கற்றவர்களாகப் பார்க்கிறவர்கள், குழந்தைகளை, மாணவர்களை அடிப்பவர்கள்... இவர்கள் அனைவருமே பார்வைத் தெளிவற்றவர்கள்தாம்.

நம்மை இயேசு தொட்டு, தெளிவான பார்வை தர மன்றாடுவோமா.

மன்றாடுவோம்: உலகின் ஒளியான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். மனிதர்களை மாண்பு மிக்க எங்கள் சகோதர, சகோதரிகளாகப் பார்க்கத் தவறும் எங்கள் தெளிவற்ற பார்வையைப் போக்கி, முழுமையான பார்வை தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

இணையதள உறவுகளே

வழக்கமாக ஒரு வார்த்தையில் அல்லது சிறு தொடுதலில் குணப்படுத்தும் இயேசு, இன்று இரண்டு கட்டமாக பார்வையற்ற மனிதனைக் குணப்படுத்துவது சற்று வித்தியாசமாக எனக்கு தென்படுகிறது. ஏன் இப்படிச் செய்தார்? இதில் ஏதாவது உட் காரணம் உண்டா? அல்லது இயேசுவின் இறை ஆற்றல் குறைந்துவிட்டதா? என்ற சில கேள்விகள் என்னுள் எழுந்தன. ஆழ்ந்து தியானிக்கும்போது இதிலே இறை ஆற்றல் அதிகமாக வெளிப்படுவதாக உணர்கிறேன்.இன்னும் சில உண்மைகள் மறைந்திருப்பதைக் காண முடிகிறது.

மனிதர்கள் சில சமயங்களில் இறை ஆற்றலை உடனே காண முடியும், சில சமயங்களில் இறை வல்லமை சற்று தாமதமாக கிடைக்கும். பொறுமையோடு, தாழ்ச்சியோடு காத்திருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தி இதில் புதைந்துள்ளதை காண்கிறேன். மருத்துவ மனைக்குச் சென்றால், சிலருக்கு உடனே குணமாகும். சிலருக்கு கொஞ்ச நாள் ஆகலாம். இருவரிலும் இயேசுவின் வல்லமைதான் செயல்படுகிறது. நம்முடைய நம்பிக்ககையின் ஆழம், அகலத்திற்கேற்ப, அருள்நிலைக்கு ஏற்றவாறு, உடனேயோ அல்லது சற்று தாமதமாகவோ அது நடைபெறலாம். இரண்டிலும் இறை ஆற்றலே செயல்படுகிறது.

பார்வையற்ற மனிதனின் அருள்நிலைக்கு ஏற்றவாறு இரு கட்டமாக அந்த அருஞ்செயல் நடைபெறுகிறது. நம் வாழ்விலும் சில சமயங்களில் நம் வேண்டுதல்கள் தாமதமாகுகிது என்றால், நம் அருள்நிலைபற்றி சற்று சிந்திக்க வேண்டும். இNயுசு எப்போதும்போலவே செயல்படுகிறார். அது இரண்டாம் ழூன்றாம் நான்காம் கட்டமாக நம்மை அடைகிறது என்றால், நாம் நம் நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று பொருள். நம்பிக்கையை அதிகமாக்குவோம். கைமேல் கிடைக்கும்.  

  -ஜோசப் லீயோன்

-------------------------

''இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார்.
அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்'' (மாற்கு 8:25)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மாற்கு நற்செய்தியில் இயேசு புரிந்த பல அதிசய செயல்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இயேசு பார்வையற்றோருக்கு மீண்டும் பார்வை அளிக்கும் நிகழ்ச்சி. இயேசு தேர்ந்துகொண்ட சீடர்கள் பலமுறையும் பார்வையற்றவர்களாகவே இருந்தார்கள். இயேசு யார் என்பதை அவர்களால் கண்டுகொள்ள இயலவில்லை. இதை மாற்கு கோடிட்டுக் காட்டுகிறார். சீடரின் மந்த புத்தியைக் காட்டுகின்ற மாற்கு அச்சீடர் பார்வை பெறுவதையும் குறிக்கத் தவறவில்லை. எனவே, பார்வையற்ற ஒரு மனிதர் இயேசுவை அணுகிச்சென்று தமக்கு இயேசு நலமளிக்க வேண்டும் என்று கேட்ட நிகழ்ச்சியை விவரிக்கின்ற மாற்கு அந்நிகழ்ச்சியில் உண்மையாகவே பார்வையற்றவர்களாக இருந்தவர்கள் சீடர்கள்தாம் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார். இயேசு அவர்களுடைய கண்களைத் திறக்கிறார்.

-- சீடர்களுக்குப் பார்வை கிடைத்ததும் அவர்கள் இயேசு உண்மையிலேயே யார் என்பதை உணரத் தொடங்குகிறார்கள். இயேசு வெற்றி மமதையோடு வருகின்ற மெசியா அல்ல, மாறாக பல துன்பங்களைச் சந்தித்து, சிலுiயிலே அறையுண்டு, இறக்கப் போகின்ற ''மெசியா'' என்பதை அவர்கள் உணர்வார்கள். ஆயினும், அனைவராலும் கைவிடப்பட்ட மெசியாவைக் கடவுள் மீண்டும் உயிர்பெற்றெழச் செய்வார் என்னும் உண்மையும் சீடர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இன்று இயேசுவின் சீடர்களாக வாழ்வோர் இயேசுவைத் ''துன்புறும் மெசியா''வாக ஏற்றிடத் தயங்கலாகாது. கிறிஸ்தவ வாழ்வில் துன்பத்திற்கு இடம் உண்டு. ஆனால் அத்துன்பத்தின்மீதும் சாவின்மீதும் கடவுள் வெற்றிகொண்டுவிட்டார் என்னும் உண்மை நமக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கிறது.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் புதுப்பார்வை பெற்ற மனிதராக வாழச் செய்தருளும்

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்