முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-9

என் சகோதரர் சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள் பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக்கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, ``தயவுசெய்து இங்கே அமருங்கள்'' என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, ``அங்கே போய் நில்'' என்றோ அல்லது ``என் கால்பக்கம் தரையில் உட்கார்'' என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா? என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வோர் யார்? செல்வர் அல்லவா? கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப் பழிப்பவர்களும் அவர்களல்லவா? ``உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!'' என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது. மாறாக, நீங்கள் ஆள் பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்; நீங்கள் குற்றவாளிகள் என அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 3-4. 5-6
பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;
எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

மாற்கு8:27-33

ஆண்டின் பெதுக்காலம் வாரம் 6 வியாழன்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-33

அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா'' என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்'' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், ``என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்'' என்று கடிந்துகொண்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

மாற்கு 8: 27 – 33
கடிந்து கொள்ளுதல் கருணையின் வெளிப்பாடு

கோடிக்கணக்கான மக்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் தொடர்பில் இருக்க உதவக்கூடிய பேஸ்புக்கின் (முகநூல்) நிறுவனரும் இளம் பில்லியனருமான மார்க் சக்கர்பர்க் ஆரம்பத்திலேயே இதனைப் பற்றி தந்தையிடம் எடுத்துரைத்த போது அவர் மறுப்பு தெரிவித்து கடிந்து கொள்கின்றார். இவர் இதனை கருணையின் வெளிப்பாடாக பார்த்ததால் தான் இன்று முகநூலின் தந்தையாகிறார். ஜப்பானியக் கவி சான் கிக்கி டோகோ என்பவர் தான் இன்று ஜப்பான் உலகமே மீண்டும் எழவும் நிரந்தர அமைதி நிலவவும் மனந்தளராது பாடுபட்டவர். இவர் இளம் வயதிலே நாட்டுக்காக போராட தன் ஆவலை தெரிவித்தபோது இவர் தந்தை இவரைக் கடிந்து கொள்கிறார். இதனை கருணையாக பார்த்ததால் தான் இன்றும் ஜப்பான் அமைதியின் நாடாக காட்சியளிக்கிறது.

இத்தகைய ஒரு கடிந்தலைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நாம் பார்க்கிறோம். இன்றைய சமுதாய பார்வையில் பார்க்கின்ற போது பேதுருவின் கடிந்து கொள்ளுதல் நியாயமானது. ஏனென்றால் உண்மையான அரசியல் தொண்டன் போல செயல்படுகிறார். அதாவது மனிதப் பார்வையில் அவர் பார்க்கின்றார். ஆனால் இயேசுவின் கடிந்து கொள்ளுதல் தெய்வீக தன்மையில் அமைகிறது. காரணம் அவரின் வாழ்வு மீட்பின் வாழ்வு. அவர் இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்பது தான் தந்தையின் திட்டம். இத்தகைய தெய்வீக தன்மையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே இயேசு அங்கு பேதுருவைப் பார்த்து கடிந்து கொள்கின்றார். இருவரின் கடிந்து கொள்ளுதலும் கருணையின் அடிப்படையில் அமைகிறது. அதனால் தான் இயேசு சொன்னது போன்று இறந்து உயிர்த்தெழுகின்றார். பேதுரு திருச்சபையின் தலைவராக மாறுகிறார்.

சமுதாயத்தில் நம்முடைய கடிந்து கொள்ளுதல் எவ்வாறு இருக்கிறது? கருணையின் அடிப்படையிலா அல்லது காழ்ப்புணர்ச்சி அடிப்படையிலா? பல நேரங்களில் அடுத்தவரின் வளர்ச்சிக்கு தடையாகவே நம்முடைய கடிந்து கொள்ளுதல் அமைகிறது. சிந்திப்போம்.

  • அருட்பணி. பிரதாப்

======================

மாற் 8 : 27 -33
மெசியாவைப் பற்றிய என் புரிதல்

இயேசுவின், “நான் யார்?” என்ற கேள்வியைப் பற்றிப் பார்க்கும் முன்பாக, இயேசு எந்த இடத்தில் இந்த கேள்வியைக் கேட்கிறார் என்பதைப் பார்த்து விடுவோம். “பிலிப்புச் செசரியா” என்றால் ஏரோதின் மகனான பிலிப்பு சீசரைக் குறிக்கும் பொருட்டும் தன் புகழினை நிலைநாட்டும் பொருட்டும் கட்டப்பட்டது தான் இந்த நவீன நகரம். எங்கு திரும்பினாலும் எட்டுத்திசைகளிலும் அரசர்களைப் பற்றிய துதிகளும் அவர்களின் பிள்ளைகளாகவே இருந்தன. இந்த இடத்தில், பிற இனத்து மக்கள் அதிகமாக வாழ்ந்ததினால் அவைகளின் சிலைகளும், கோவில்களும் அதிகமாக இருந்தன. இப்பேற்பட்ட இடத்தில் வைத்து தான், ‘தாவீது மன்னரை விட மிகச் சிறந்த மன்னராக மெசியா வருவார்’ என எதிர்பார்த்திருந்தவர்களிடம் இயேசு ‘நான் யார் என்று மக்கள் சொல்லுகிறார்கள்? என்று கேட்டார்.

எவ்வாறு யோர்தான் நதிக்கரை அனுபவம் இயேசுவின் பணிவாழ்வுக்கு தொடக்கப்புள்ளி வைத்ததோ அதனைப்போல பிலிப்பு செசரியாவால் கேட்ட கேள்வி ஒரு சிறு திருப்பத்தை அவருக்கு கொடுத்தது அதாவது அதுவரைக்கும் போதனைகளையும் புதுமைகளையும் செய்து வந்தவர், திடீரென தான் அனுபவிக்கிற துன்பங்களையும் சிலுவைச் சாவையும் பற்றி அறிவித்து தன் சீடர்களைத் தயாரிக்க ஆரம்பிக்கிறார். இதுவரைக்கும் கடந்து வந்த பாதை சரிதானா? என ஒரு சுய மதிப்பீட்டினைச் செய்கிறார். இதன் பிறகே அவரது போதனையின் போக்கு மாறியது.

மெசியா என்பவர் வல்லமையுள்ளவராகவும், நம்மை உடனடியாக இரட்சிப்பவராகவும், அவரைப் பின்பற்றுபவருக்கு எந்த துன்பமும் தராதவராகவும், அனைத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் இருப்பார். நான் கேட்கும் போதெல்லாம் எனக்கு அவர் நன்மைகளைச் செய்வார், புதுமைகளைச் செய்வார். அந்தப் போதகர் சொன்னால், செபித்தால் உடனடியாக செவிமடுப்பார் என்றெல்லாம் நினைத்து கொண்டிருப்பவர்களும் இன்றைய நற்செய்தியில் வருகின்ற பேதுருவும் ஒன்றே. இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு அவரைத்தேடி அலைபவர்களை அவர் ‘அப்பாலே போ சாத்தானே’ என்று விரட்டி விடுவார். நாம் நினைக்கின்ற மாதிரி அவர் இருக்க வேண்டும் என்பதை மாற்றிவிட்டு அவரது விருப்பத்திற்கேற்ப, அவரது வார்த்தைக்கேற்றார் போல நம் வாழ்வினை மாற்ற முயலுவோம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

எல்லோர்க்கும் எல்லாமுமான இயேசு

20.02.14 - மாற்கு 8: 27 – 33
இயேசுகிறிஸ்துவை எதற்காக திருமுழுக்கு யோவான், எலியா அல்லது இறைவாக்கினருள் ஒருவர் என்று மக்கள் சொல்ல வேண்டும்? திருமுழுக்கு யோவான் ஏரோதால் கொல்லப்பட்டார். ஆனாலும், மக்கள் நடுவில் திருமுழுக்கு யோவானுக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இருந்தது. அவர் தான் உயிரோடு வந்திருக்கிறார் என்று மக்கள் நம்பினர். யூத மக்கள் மெசியாவின் வருகைக்கு முன்னால் எலியா வருவார் என்று நம்பினர். மலாக்கி 4: 5 கூறுகிறது, “இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்”. எனவேதான் இன்றளவும், யூதர்கள் பாஸ்கா திருவிழாவைக் கொண்டாடும்போதும் எலியாவிற்காக ஒரு இருக்கையை காலியாக வைத்திருப்பர். எலியா மீண்டும் வருவார் என்று காத்திருந்தார்கள்.

இயேசு ஒரு முழுமையின் வடிவம். எல்லார்க்கும் எல்லாமுமாக இருந்தவர், இருக்கிறவர் இயேசு. எனவேதான் இயேசுவை மக்கள் பலவிதமாக பார்த்தார்கள். இயேசுவின் தனித்தன்மையும் இதுதான். இயேசு நமது மகிழ்ச்சியில் பங்குகொண்டு நமது மகிழ்ச்சியில் இன்பம் கொள்கிற நல்ல நண்பராக இருக்கிறார். துன்பங்களினால், துயரங்களினால் அலைக்கழிக்கப்படுகிறபோது, நம்மை விட்டு விலகாமல் நம்மோடு இருக்கிற தாயாக, தந்தையாக இருக்கிறார். சோதனை, பலவீனங்களினால் நாம் வீழ்கிறபோது நம்மைத்தூக்கிவிடுகிற நல்ல சகோதரனாக இருக்கிறார். மற்றவர்களுக்காக நமது வாழ்வைத்தியாகம் செய்து, பொதுநலனுக்காக உழைக்கிறபோது, நம்மை வெற்றியைநோக்கி வழிநடத்திச்செல்லுகிற, நல்ல இறைவனாக இருக்கிறார்.

எல்லார்க்கும் எல்லாமுமாக இருக்கிற இயேசுவாக நாமும் மாற வேண்டும் என்பது இறைத்தந்தையின் விருப்பம். கடவுள் இந்த உலகத்தைப்படைத்தது எல்லாருக்காகவும் தான். ஒருவர் மற்றவரோடு தோளோடு தோளாக துணைநின்று இறையரசை கட்டியெழுப்ப முனைவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

==========================================

மக்கள் என்ன சொல்கிறார்கள் ?

தம்மைப் பற்றி மக்களும், தம் சீடர்களும் என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள இயேசு விரும்பியது ஒரு நல்ல தலைமைப் பண்பு. பிறரின் எண்ணங்களை அறிந்தால்தானே, அதற்கேற்ப உத்திகளை வகுக்க முடியும்?

இயேசு தம் சீடரை நோக்கி, "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார். இந்தக் கேள்வியையே இன்றைய நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். இன்று இயேசுவைப் பற்றி மக்கள், பொதுவாக பிற சமய சகோதர, சகோதரிகள் என்ன நினைக்கிறார்கள் என்று எப்போதாவது, யாரிடமாவது கேட்டிருக்கிறோமா? இதுவரை இல்லாவிட்டால், இன்றாவது கேட்கலாமே!

காரணம், இந்தக் கேள்வி நம் இறைநம்பிக்கையோடும், நம் வாழ்வோடும் நெருங்கிய தொடர்புகொண்டது. நம் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு அவசியமானது. "இயேசு உண்மையாகவே இறைவன், இன்றும் ஆற்றலோடு செயல்படுகிறார்" என்று பிறர் சொல்லும் அளவுக்கு நம் வாழ்வும், எண்ணங்களும், பணிகளும் அமைகின்றனவா? அல்லது இயேசுவின் சீடர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களின் இடறலான வாழ்வின் காரணமாக இயேசுவையே மக்கள் மதிக்காத அளவுக்கு நாம் நடந்துகொள்கிறோமா?

நமது சொற்கள், எண்ணங்கள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் பற்றிக் கவனமாயிருப்போம். அவற்றைக் கொண்டுதான் "இயேசு யார்?" என மக்கள் சொல்லப் போகிறார்கள்.

மன்றாடுவோம்: உலகின் ஒளியாக உம்மை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீரே ஆண்டவர், மீட்பர் என்னும் செய்தியை எங்கள் வாழ்வாலும், பணியாலும் அறிவிக்கும் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

இணையதள உறவுகளே

நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? மாற் 8:29 என்னைப் பொருத்த மட்டில், இயேசு இன்றைய சமுதாயத்தில் நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுபவர்.குரலற்றோர் சார்பில் குரல் கொடுப்பவர். விழிம்பில் வாழ்வோரின் பாதுகாவலர். கடைநிலை மக்களின் மீட்பர். பாதிக்கப்பட்டோரின் புகலிடம். இயேசுவின் கேள்விக்கு நாம் என்ன பதில் கொடுக்கிறோமோ, அதுவே நம் வாழ்வாகவும் இருக்கும்.

பேதுரு இயேசுவைப்பற்றிய தன் அனுபவத்தை சரியான பதிலாகக் கொடுத்தார். ஆயினும் அந்த பதிலை முழுமையாக அவர் வாழவில்லை என்பதை தொடர்ந்து வரும் பகுதியில் காணமுடிகிறது.  மானிடமகன் துன்பப்பட வேண்டும் கொலை செய்யப்படுவார் உயிர்த்தெழுவார் என்று இயேசு கற்பித்ததை அவரால் எற்றுக் கொள்ள முடியவில்லை.இயேசுவைப்பற்றிய அறிவையும் அனுபவத்தையும் வாழ்வாக்கும்போது பல துன்பங்களை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. உடலிலும் உள்ளத்திலும் பல வேதனைகளுக்கு ஆளாகிறோம். இருப்பினும் உயிர்ப்பு, வெற்றி, புது வாழ்வு என்ற ஒரு நிகழ்வு நம் காலத்தில், கண்முன் கிடைக்காத போதிலும், சற்று காலம் தாழ்த்தி காணும்போது அது மகிழ்ச்சி அளிக்கிறது.

நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?  உங்கள் பதிலை எழுதுங்கள். இயேசுவைப் பற்றிய உங்கள் அறிவு, அனுபவம் என்ன? அதை வாழ்வாக்குவதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? உங்கள் பதிலை மின் அஞ்சலில் பதிவு செய்யும். பலருக்கும் பயனள்ள பகிர்வாக இருக்கும்.

-ஜோசப் லீயோன்

-------------------------

''வழியில் இயேசு தம் சீடரை நோக்கி, 'நான் யார் என
மக்கள் சொல்கிறார்கள்?' என்று கேட்டார்'' (மாற்கு 8:27)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தம்மைப் பற்றியும் தம் பணி பற்றியும் தெளிவான பார்வை கொண்டிருந்தார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவருடைய சீடர்கள் இயேசுவைப் பற்றியும் அவருடைய போதனை மற்றும் பணி பற்றியும் தெளிவான பார்வை கொண்டிருக்கவில்லை. எனவே, இயேசு அவர்களைப் பாhத்து, ''நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்ட கேள்விக்கு இரு பொருள்கள் இருந்தன. ஒன்று, இயேசு ஒருவிதத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்துகிறார். அதாவது, பொது மக்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முதல் பொருள். அதே நேரத்தில் இயேசு தம் சீடர்கள் தம்மைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என அறியவும் விரும்புகிறார்.

-- இன்று நம்மிடம் இயேசு கேட்கும் கேள்வியும் அதுவே. நாமும் இயேசு யார் என்னும் கேள்விக்குப் பதில் அளிக்க அழைக்கப்படுகிறோம். இயேசுவைப் பற்றி நற்செய்தி நூல்கள் தருகின்ற தகவல்களின் அடிப்படையில் இயேசு பற்றிய சில வரலாற்றுச் செய்திகளை நாம் அறிகிறோம். ஆனால் இயேசு யார் என்னும் கேள்விக்கு நாம் அளிக்க வேண்டிய பதில் நம் உள்ளத்தின் ஆழத்தில் நாம் இயேசுவை எவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். இயேசுவை ஏற்பதால் நம் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது? அவர் நம் வாழ்வுக்கு வழியாகவும் நம் மதிப்பீடுகளைப் புரட்டிப்போட்டு இறையாட்சியின் மதிப்பீடுகளை நாம் ஏற்று வாழ நம்மைத் தூண்டுபவராகவும் உள்ளார். எனவே இயேசுவை யார் என அடையாளம் காணவேண்டும் என்றால் இயேசுவின் மன நிலை நமது மன நிலையாக மாற வேண்டும்; இயேசுவின் வாழ்க்கைப் பாணி நமது வாழ்க்கைப் பாணியாக மாற வேண்டும். அப்போது நம் ''யார் இந்த இயேசு?'' என்னும் கேள்விக்கு நம் வாழ்க்கையாலே பதிலளிக்க இயலும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் இயேசுவை ஆழமாக அறிந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்