முதல் வாசகம்

முதலாம் வாசகம் தொடக்க நூல் 22:1-2,9-13,15-18

அந்நாள்களில் கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் `இதோ! அடியேன்' என்றார். அவர், ``உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்'' என்றார். ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று `ஆபிரகாம்! ஆபிரகாம்' என்று கூப்பிட, அவர் `இதோ! அடியேன்' என்றார். அவர், ``பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்'' என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார். ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, ``ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப்போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக்கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 116: 10,15. 16-17. 18-19
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

10 `மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்.
15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. -பல்லவி

16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்;
உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.
17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். -பல்லவி

18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே!
உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;
19 உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில்,
ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். -பல்லவி

இரண்டாம் வாசகம்

புனித சின்னப்பர் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம் (உரோமை 8:31-34)

சகோதரர் சகோதரிகளே, கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.''

மாற்கு 9:2-10

தவக்காலம் -இரண்டாம் வாரம் ஞாயிறு

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (மாற்கு 9:2-10)

ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, 'ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் ' என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், 'மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது ' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, 'இறந்து உயிர்த்தெழுதல் ' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

25.02.2024 ஞாயிறு
உருகவே ...
மா 9 : 2 - 10

ஒரு குழந்தை இந்த சமுதாயத்திலே பரிணாம வளர்ச்சியினை பெற்று உருமாறுகிறதென்றால், அந்த குழந்தை தன்னுடைய இலக்கை அடைவதற்காகவே என்பார் அயன்ஸ்டின். ஒரு வாலிபன் தன் வாழ்வில் கல்வியை முடித்து, எதிர்காலத்தை அமைக்கும் விதத்தில் பணியில் சேர்ந்து உருமாற்றம் பெறுவதே இந்த உலகத்தில் பயணிக்கவே. ஒரு இல்லம் பத்து வருடத்திற்கு ஒருமுறை வளர்ச்சிபெற்று மாற்றம் காண்கிறதென்றால், எந்த அளவிற்கு பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது என்பதனை தெளிவுபடுத்தவே. ஆக யாருமே (அ) எதுவுமே பிறர் வளர்ச்சிக்காக தாங்கள் மாறியது இல்லை என்பதனை நினைவுப்படுத்துகின்றது.

ஆனால் இந்த சமுதாயம் மீட்படைய, வளர்ச்சி பெற ஒருவன் இறைத்தன்மையிலிருந்து, மனித தன்மைக்கு மாறி, பாடுகளை அனுபவிக்க உருமாற்றம் பெறுகின்றாரென்றால் அது நம் இயேசு கிறிஸ்துவே. சொகுசான வாழ்வுக்காக அல்ல, சுடப்படக்கூடிய வாழ்வுக்காக. அதனால்தான் இயேசுவின் பணிவாழ்வில் நடந்த உருமாற்றங்களில் இது மட்டுமே வித்தியாசமான அனுபவத்தினை சீடர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றது. காரணம் இயேசுவோடு பயணிக்கின்றபோது அனைத்துவிதமான சுகங்களையும் பெற்றுக்கொள்கின்றார்கள். ஆனால் பிரிந்து செல்லவே உருமாற்றம் பெறுகின்றோர் என்று அறிந்ததுமே வாதாட துவங்கின்றார்கள். ஆக யாரெல்லாம் இந்த சமுதாய மாற்றத்திற்காக தங்களை உருகி மாற்றம் பெறுகின்றார்களோ இயேசுவாக மாறுகின்றார்கள்.

நாம் அடுத்தவர்களுக்காக உருகுகின்றோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

கடவுளை அன்பு செய்வோம்

இயேசு தன்னோடு மூன்று சீடர்களை அழைத்துக்கொண்டு உயரமான ஒரு மலைக்குச் செல்கிறார். அந்த மூன்று சீடர்கள் முறையே, பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான். இயேசுவைப் பின்தொடர்ந்த சீடர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் பன்னிரென்டுபேரை தன்னோடு இருப்பதற்காக சிறப்பாகத் தேர்ந்தெடுக்கிறார். அதிலும் சிறப்பாக, மூன்று பேரை தன்னோடு முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்.

அந்த மூன்று சீடர்களின் இயல்பு என்ன? ஏன் அவர்கள் மீது இயேசுவுக்கு இவ்வளவு நம்பிக்கை. விவிலியத்திலே இதற்கு தெளிவான விளக்கம் காணப்படவில்லை என்றாலும், ஓரளவு நம்மால் அதற்கான பதிலைப் பெற்றுக்கொள்ள முடியும். இயேசு முக்கியமான இடங்களுக்கு அவர்களை அழைத்துச்சென்றது, அவர்கள் பாவமே செய்யாதவர்கள் என்பதால் அல்ல. அவர்களும் பலவீனர்கள் தான். பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். யாக்கோபு மற்றும் யோவான் இயேசுவோடு அதிகாரத்தில் இருப்பதற்கு தங்களது தாயின் மூலம் பரிந்துரைக்கச் செய்கிறார்கள். ஆனாலும், அவர்களை இயேசு தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அவர்களின் அன்பு. அவர்கள் இயேசுவை முழுமையாக அன்பு செய்தார்கள். அவர்களுடைய உண்மையான அன்பு தான், அவர்களை இயேசுவின் பார்வையில் மிகவும் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்றது.

கடவுள் நம்மை அன்பு செய்ய வேண்டும் என்று எண்ணாமல், நாம் கடவுளை அன்பு செய்வோம். கடவுளிடம் நாம் காட்டும் அன்பு எதிர்பார்ப்பில்லாத அன்பாக, தூய்மையான அன்பாக, இருக்க வேண்டும். தூய்மையான, கள்ளம் கபடற்ற அன்பை கடவுளிடம் நாம் காட்டுவோம். 

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
  • ---------------------------------

இரு தந்தையர், இரு மகன்கள் !

இன்றைய முதல் வாசகத்தையும், நற்செய்தி வாசகத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை. இரண்டு வாசகங்களுக்கும் உள்ள ஒற்றுமை நம் கவனத்தை ஈர்த்து, வாழ்வுக்கு வழிகாட்டுகின்றது.

முதல் வாசகத்தில் ஆபிரகாம் என்னும் அன்பான தந்தை இறைவனுக்குப் பணிந்து, தம் ஒரே மகனையே பலியிட முன்வருகின்றார். இறைவன் அவரது இறைப் பற்றில் மகிழ்ந்து, அவரை ஆசிர்வதிக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் தந்தை இறைவன் ஆபிரகாமைப் போலவே, தம் ஒரே மகனைப் பலியிட முன் வருகின்றார். அன்பு மகன் இயேசுவும், தந்தை இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வருகிறார். தமது உயிரையும் கையளிக்கின்றார். எனவேதான், "என் அன்பார்ந்த மகன் இவரே, இவருக்குச் செவி சாயுங்கள்" என்று இறைவன் அறிவிக்கின்றார்.

நாமும் இறைவனின் மகன்- மகள்தானே!
எனவே, ஈசாக்கைப் போல, நம்மை இறைவனின் திருவுளத்துக்குக் கையளிப்போம்.
இயேசுவைப் போல, இறைவனுக்குப் பணிந்து நடந்து, தந்தை இறைவனின் பாராட்டையும், பெருமையையும் பெற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உமக்கு நன்றி. இயேசுவைப் போல எங்களையும் நீர் உமது "அன்பார்ந்த மகன்" என்று அழைக்கும் வண்ணம் எங்கள் வாழ்வு அமைவதாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

தோற்றம் மாறினார் !

தமக்கு நெருக்கமான மூன்று சீடர்களை அழைத்துக்கொண்டு உயர்ந்த மலையில் ஏறிய இயேசு அவர்கள் முன் தோற்றம் மாறினார் என்னும் வியப்பான ஒரு செய்தியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். "தோற்றம் மாறுவது" என்றால் என்ன? அது எதற்காக?

இயேசு மானிட உருவில் தோன்றிய இறைமகன். அவர் பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப் போலவே வாழ்ந்தவர். ஆனாலும், அவரது வல்ல செயல்களும், அதிகாரம் மிக்க போதனையும் அவரை ஓர் இறைவாக்கினராக மக்களுக்குக் காட்டின. ஆனாலும், அவரது சீடர்கள்கூட இயேசு இறைவாக்கினரைவிட மேலானவர் என எண்ணவில்லை. எனவே, இயேசு தம்மைத் தமது முழு இறைமாட்சியில் அவர்களுக்கு வெளிப்படுத்த விரும்பினார். எனவே, மிக நெருக்கமான மூன்று சீடர்களை மட்டும் அழைத்து, மலையுச்சிக்கு சென்று அங்கே அவர் தமது முழு மாட்சிமையை, தமது இறைத்தன்மையை வெளிப்படுத்தினார். இதுவே அவரது தோற்றம் மாறிய நிகழ்வு.

ஏன் இயேசு தோற்றம் மாறினார்? வர இருக்கிற பாடுகளுக்கும், துன்பங்களுக்கும் தம் சீடரைத் தயாரிக்கவும், தாம் இறைமகனாய் இருந்தும் தந்தைக்குப் பணிந்து சாவை ஏற்க முன்வருவதை சீடர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான் இயேசு தோற்றம் மாறினார்.

இயேசுவின் உருமாற்றம் நமக்குக் கற்றுத் தருவது என்ன?

1. இயேசு மெய்யான இறைவனும், மெய்யான மனிதனும் என்னும் நம் விசுவாசத்தை, இறைநம்பிக்கையை ஆழப்படுத்திக்கொள்வோம்.

2. இயேசு மாட்சிமிகு இறைவனாய் இருந்தபோதும், தம்மைத் தாழ்த்தி சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டதுபோல, நாமும் நம் வாழ்வின் சிலுவைகளை ஏற்க முன்வருவோம்.

3. வாழ்வின் நிறைகளின் மகிழ்வும், குறைகளில் ஏற்பு மனநிலையும் வளர்த்துக் கொள்வோம்.

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது மாட்சிமிகு இறைத்தன்மைக்காக உம்மை வணங்குகிறோம். உம்மைப் போல நாங்களும் வாழ்வில் வரும் மேன்மைகளையும், துன்பங்களையம் சம மனநிலையுடன் ஏற்றுக்கொள்ளும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

 

இயேசுவின் உருமாற்றம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய இன்று ஆண்டவர் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை நமக்கு இறைமொழி விருந்தாகத் தருகிறது தாய்த் திருச்சபை. இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான நிகழ்வுகளின் தொகுப்புதான் உருமாற்ற நிகழ்வு. மொத்தம் எத்தனை நிகழ்வுகள்?
1. மலைமீது இயேசு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது,
2. அவரது முகத்தோற்றம் மாறியது.
3. அவருடைய ஆடையும் வெண்மையாக மாறியது.
4. மோசேயும், எலியாவும் தோன்றி அவரோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
5. வரவிருக்கும் இயேசுவின் இறப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர் என்கிறார் நற்செய்தியாளர்.
6.
மேகத்திலிருந்து தந்தையின் குரல் ஒலித்து, இயேசுவுக்கு ஒப்பிசைவு கொடு;த்தது.

இத்தனை நிகழ்வுகளும் இணைந்ததுதான் இயேசுவின் உருமாற்றம். இயேசுவின் இறைத்தன்மையை, அவருடைய மாட்சிமையை வெளிப்படுத்திய அதே வேளையில், அவருடைய பாடுகளை, கீழ்ப்படிதலையும் சீடர்களுக்கு உணர்த்தியது.

இந்த உருமாற்ற நிகழ்விலிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
1.
நாம் இறைவேண்டலின் வழியாக, இறைவனோடு நெருக்கமான உறவுகொள்வதன் வழியாக அவருடைய மாட்சியில் பங்குபெறலாம். அவரது சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
2. இறைத் தந்தைக்குப் பணிந்து வாழ்வதன் மூலமே அவருடைய ஒப்பிசைவைப் பெறமுடியும் என்பதை உணரவேண்டும்.
3.
துன்பங்கள், தோல்விகள் நிரந்தரமல்ல. அவை வெற்றிக்கான படிக்கட்டுகள். எனவே, துணிவுடன் அவற்றை எதிர்கொள்ளலாம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இத்தவக்காலத்தில் இந்த சிந்தனைகளை நம் சிந்தையில் கொள்வோம்.

மன்றாடுவோம்: எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது சாயலாகப் படைக்கப்பட்டிருக்கும் நாங்கள் எங்களது உண்மையான சாயலை, மாட்சியைக் கண்டுகொள்ளும் அனுபவங்களை எங்களுக்குத் தாரும். இத்தவக்காலத்தில் நாங்கள் செபத்திலும், தவ முயற்சிகளிலும் உம்மோடு ஒன்றித்து, உரு மாறுவோமாக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

------------------------

உருமாற்றம் தரும் மனமாற்றம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று நம் ஆண்டவரின் உருமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். இயேசுவோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த சீடர்களில் மூவருக்கு மட்டுமே கிடைத்த ஒரு வியப்புக்குரிய அனுபவம் இந்த உருமாற்றம்.

இயேசுவின் மானிடத் தன்மை மறைந்து, அவரது இறைத் தன்மை, இறை மாட்சியை வெளிப்படுத்தப்பட்ட விவரிக்க முடியாத ஓர் அனுபவத்தை இந்த மூவரும் உயர்ந்த மலை மேலே கண்டனர். அத்தோடு, இயேசு இறைத் தந்தையின் அன்பார்ந்த மகன். அவருக்கு செவி மடுப்பது இறைவனுக்கே செவிமடுப்பதாகும் என்னும் இறைவனின் குரலையும் கேட்கும் பேறு பெற்றனர்.

இந்த உருமாற்றம் உடனடியாக இல்லாவிட்டாலும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் அவர்களின் இறைநம்பிக்கையை ஆழப்படுத்த உதவியது. இயேசு இறைமகனாய், மாட்சிமை நிறைந்தவராய் இருந்தும்கூட, இறைத் திருவுளத்துக்குப் பணிந்து அனைத்தையும் துறந்து, எளிய மானிடராய் வாழ்ந்தார் என்னும் உண்மையை இந்தச் சீடர்கள் எத்தனையோ நாள்கள் எண்ணி, எண்ணி வியந்திருப்பர். தமது பணியில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பர்.

நாமும் இன்று இயேசுவின் இந்த வியப்புக்குரிய எளிமையை, கீழ்ப்படிதலை, பணிவை எண்ணி வியப்போம். நம்மால் இயன்ற வரை நமது விருப்பங்களை, ஆசைகளை விட்டுக்கொடுத்து, எளிமை, பணிவு, இழத்தல் என்னும் இறையாட்சி விழுமியங்களோடு வாழ முயல்வோம்.

மன்றாடுவோம்; தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற உம்மையே எளிமையாக்கிக் கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எவ்வளவு மாட்சி நிறைந்த நீர், எவ்வளவு எளிமையாய், பணிவாய் பணியாற்றினீர். இவ்வாறு, தந்தைக்குப் பெருமை சேர்த்தீரே. உமக்கு நன்றி. நாங்களும் உம்மைப் போல தந்தையின் விருப்பத்தையே நிறைவேற்றவும், இறைத் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

''ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும்
ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.
அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.
அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது'' (மத்தேயு 17:1-2)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை மாற்கு, மத்தேயு, லூக்கா ஆகிய மூவரும் விவரிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை விவரிப்பதில் பழைய ஏற்பாட்டு உருவகங்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன. மலை, கதிரவனைப்போல் ஒளிரும் முகம், ஒளிமயமான மேகம், மேகத்திலிருந்து வரும் குரல், மோசேயும் எலியாவும் தோன்றுதல் போன்ற உருவகங்கள் ஆழ்ந்த பொருளை உணர்த்துகின்றன. அதாவது மோசே சீனாய் மலையில் ஏறிய போது கடவுள் அவரோடு பேசிய நிகழ்ச்சியின் எதிரொலிப்பு இங்கே உள்ளது. மேகம் என்பது கடவுளின் உடனிருப்பைக் குறிக்கும் அடையாளம். மோசே திருச்சட்டத்தையும் எலியா இறைவாக்கையும் குறிக்கின்றார்கள். இயேசு ''திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிக்கவல்ல, அவற்றை நிறைவேற்றவே வந்தார்'' என்னும் செய்தியை மத்தேயு ஏற்கெனவே அறிவித்தார் (காண்க: மத் 5:17). வானிலிருந்து வந்த குரல் இயேசுவைக் கடவுளின் மகன் என அடையாளம் காட்டுகிறது (மத் 17:6). இயேசு வானகத் தந்தையின் ''அன்பார்ந்த மகன்''. நாம் அவருக்குச் செவிசாய்க்க வேண்டும் (மத் 17:6).

-- இயேசுவின் தோற்றம் மாறியதையும் வானிலிருந்து குரல் எழுந்து இயேசுவைக் கடவுளின் மகன் என அடையாளம் காட்டியதையும் கண்டு, கேட்டு அனுபவித்த சீடர்கள் அதன் விளைவாக முகங்குப்புற விழுகிறார்கள். அவர்களை அச்சம் மேற்கொள்கிறது. அப்போது ''இயேசு அவர்களிடம் வந்து, அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார்'' (மத் 17:7). கடவுள் நம்மைத் தம்மிடம் ஈர்க்கின்ற சக்தி கொண்டவர்; நம் உள்ளம் அவரை நாடித் தேடுகிறது. அதே நேரத்தில் கடவுளின் பிரசன்னத்தில் நாம் அஞ்சி நடுங்குகிறோம். ஆனால் இயேசு நாம் அஞ்சவேண்டியதில்லை என நமக்கு உறுதியளிக்கிறார். அவரோடு நாம் இருக்கும்போது நம் வாழ்வில் அச்சம் நீங்கும்; நம் உள்ளத்தில் உறுதி பிறக்கும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று,
'என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவி சாயுங்கள்'என்று ஒரு குரல் ஒலித்தது'' (மாற்கு 9:7)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீடர்களும் இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சிகளின் போது அவரோடு கூட இருந்தார்கள். எடுத்துக்காட்டாக, பேதுருவின் மாமியார் குணமடைந்தபோதும் (மாற் 1:29-31), தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் மகள் உயிர்பெற்றெழுந்தபோதும் (மாற் 5:37), கெத்சமனித் தோட்டத்தில் இயேசு இறைவேண்டல் செய்தபோதும் (மாற் 14:33) இயேசுவோடு கூடச் சென்றவர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரே. இவர்கள் இயேசு தோற்றம் மாறிய வேளையிலும் அவரோடு இருந்தார்கள். அப்போது இயேசு யார் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. வானிலிருந்து வந்த குரல் இயேசுவை அடையாளம் காட்டுகிறது; ''இயேசு கடவுளின் மகன்''.

-- இயேசுவின் போதனைக்குச் செவிமடுப்போர் கடவுளின் குரலுக்கே செவிமடுக்கின்றனர் என்னும் உண்மை இங்கே வெளிப்படுகிறது. வானில் தோன்றிய மேகம் கடவுளின் பிரசன்னத்திற்கு அடையாளம். எனவே, இயேசுவுக்கும் அவர் தந்தை என அழைத்த கடவுளுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததை நற்செய்தி சுட்டுகின்றது. இன்று இயேசுவின் சீடராக வாழ்வோர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்க அழைக்கப்படுகின்றனர். இயேசுவின் போதனையை நாம் ஏற்று அதற்கேற்ப வாழும்போது அது நம் உள்ளத்தையும் இதயத்தையும் உருமாற்றுவதோடு நம்மைப் புதுப் பிறப்புகளாகவும் மாற்றும். கடவுளின் புத்துயிரைப் பெறும் நாம் அதைப் பிறரோடு பகிர்ந்திட முன்வருவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளங்களில் ஒலிக்கின்ற உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் எப்போதும் செவிசாய்த்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

 

''பேதுரு இயேசுவைப் பார்த்து,
'ரபீ,நாம் இங்கேயே இருப்பது நல்லது' என்றார்'' (மாற்கு 9:6)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளின் பிரசன்னத்தில் நாம் இருக்கும்போது அதில் ஒரு மகிழ்ச்சி உள்ளது. நம்மைத் தம் சாயலில் உருவாக்கி, நம்மோடு எந்நாளும் உறைபவர் நம் கடவுள். அவருடைய அன்பு நம்மீது பொழியப்படுகிறது. நம்மைப் போல மனிதராக மாறி நம்மோடு இருக்கும் இறைமகன் இயேசு நம் நிலையைத் தம் சொந்த அனுபவித்தில் அறிந்தவர். எனவே நம் உள்ளத்தின் சிந்தனைகளை அவர் முற்றிலுமாக அறிவார். உயர்ந்த மலைக்கு இயேசுவோடு சென்ற சீடர்கள் அங்கே அதிசயமான ஒரு நிகழ்ச்சியைக் காண்கிறார்கள். அதாவது இயேசு அவர்களுடைய முன்னிலையில் ''தோற்றம் மாறுகிறார்''. இம்மாற்றம் இயேசுவின் இறைத்தன்மையைச் சீடருக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது மட்டுமல்ல, இயேசுவோடு மோசே மற்றும் எலியா ஆங்கிருந்தனர். அவர்கள் பழைய ஏற்பாட்டு உடன்படிக்கையையும் கடவுள் வழங்கிய திருச்சட்டத்தையும் குறிக்கின்ற அடையாளமாவர்.

-- அப்போது பேதுரு கூறிய சொற்கள்: ''ரபீ, நாம் இங்கேயே இருப்பது நல்லது'' (மாற் 9:6). இனிய ஓர் அனுபவம் நமக்கு ஏற்படும்போது அது எக்காலத்திற்கும் நீடிக்காதா என்னும் ஏக்கம் நம்மில் எழுவதுண்டு. குறிப்பாக, கடவுளோடு நம்மை இறுகப் பிணைத்து இணைக்கின்ற ஒன்றிப்பு அனுபவம் நமக்குக் கிடைத்தால் அந்த மகிழ்ச்சிநிறைந்த தருணம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் உயர்ந்த மலையில் ஏற்பட்ட அந்த இறையனுபவம் சீடர்களையும் ஒருவிதத்தில் மாற்றம் அடையச் செய்கிறது. அவர்கள் அனுபவித்த இறையனுபவத்தை அன்றாட வாழ்க்கைச் சூழமைக்குள் கொhண்டு வருவது தேவையாகிறது. நாமும் இயேசுவோடு மலை உச்சிக்குச் சென்று இறையனுபவம் பெற அழைக்கப்படுகிறோம். நாம் பெற்ற அனுபவத்தை நமக்கென அடைத்துவைக்காமல் அதையும் அது நம்மில் கொணர்ந்த தாக்கத்தையும் அதனால் நாம் பெற்ற மாற்றத்தின் விளைவையும் நம் சகோதர சகோதரிகளோடு பகிர்ந்துகொள்ள நாம் ''மலை உச்சியிலிருந்து சமதளத்திற்கு இறங்கிவர வேண்டும்''. அங்கே நாம் கடவுளின் அன்புக்குச் சாட்சிகளாகச் செயல்படுவோம். கடவுளின் அன்பார்ந்த மகனாகிய இயேசுவுக்கு மனமுவந்து ''செவிசாய்ப்போம்'' (மாற் 9:7).

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனின் குரலுக்கு எப்போதும் செவிசாய்க்க எங்கள் இதயத்தைத் திறந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

கூடாரம் அமைப்போம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

பேதுருவின் நியாயமான ஆசை. மூன்று பேருக்கும் மூன்று கூடாரம் அமைக்க விரும்பினார். கூடாரங்கள் விவிலியத்தில் இறைப் பிரசன்னத்தின் அடையாளம். பழைய ஏற்பாட்டில் பாலை வனப் பயணத்தில் இஸ்ராயேல் மக்களோடு யாவே இறைவன் தனக்கென தனி கூடாரம் அமைத்துக் குடிகொண்டார். "மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம்அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்." (விடுதலைப் பயணம் 33.7)

இறை மாட்சியைக் கண்ட பேதுரு அத் தெய்வீகப் பிரசன்னம் தங்களோடு என்றும் தங்கியிருக்க விரும்பினார்.உண்மையில் இறைவன் நம்மோடு வாழும் தெய்வம். இம்மானுவேல் என்பது அவரது பெயர்.உலகம் முடியும்வரை நம்மோடு இருக்கும் தெய்வம். பேதுருவின் ஆசையிலும் இறைவனின் இயல்பிலும் ஒரே கருத்து உள்ளோடுவதை உணரமுடிகிறது.

இதைச் செயல்படுத்துவதில் சில வேறுபாடுகளைக் காணமுடிகிறது. மாட்சியும் பெருமையும் அவரைக் கவர்ந்தது. பேரொளி, பெரிய ஆட்கள் அவருக்குப் பெருமை சேர்த்தது. உயர்ந்த மலை உடலுக்கு இதமாக இருந்தது. இத்தகைய சுனம் கண்டதால், அங்கு ஆண்டவனுக்குக் கூடாரம் அமைப்பதை அவர் விரும்பவில்லை. மாறாக, தன் பாடுகள், மரணம் இவற்றால் மாட்சி அடைவதை அவர் விரும்பினார். "மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது" என்பதை இயேசு கூடாரம் அமைப்பதின் கொள்கையாகக் கொண்டார். மாய சுகத்தில் அமைக்கும் கூடாரம் நிலைக்காது. உழைத்து உருவாக்கிய கூடாரம் இறைவன் விரும்புவது. அங்கு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லீயோன்