முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 13-18

அன்புக்குரியவர்களே, உங்களிடையே ஞானமும் அறிவாற்றலும் உடையவர் யாராவது இருந்தால், ஞானம் தரும் பணிவாலும் நன்னடத்தையாலும் அவற்றைக் காட்டட்டும். உங்கள் உள்ளத்தில் பொறாமையும் மனக்கசப்பும் கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். உண்மையை எதிர்த்துப் பொய் பேசவேண்டாம். இத்தகைய ஞானம் விண்ணிலிருந்து வருவது அல்ல; மாறாக, மண்ணுலகைச் சார்ந்தது. அது மனித இயல்பு சார்ந்தது; பேய்த் தன்மை வாய்ந்தது. பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல் களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 19: 7. 8. 9. 14
பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும்.
ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி

14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்;
என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

 

மாற்கு9:14-29

ஆண்டின் பெதுக்காலம் வாரம் 7 திங்கள்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-29

அக்காலத்தில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறை நூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர். அவர் அவர்களை நோக்கி, ``நீங்கள் இவர்களோடு எதைப் பற்றி வாதாடுகிறீர்கள்?'' என்று கேட்டார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ``போதகரே, தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப் போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை'' என்று கூறினார். அதற்கு அவர் அவர்களிடம், ``நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார். அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, ``இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?'' என்று கேட்டார். அதற்கு அவர், ``குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பல முறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்'' என்றார். இயேசு அவரை நோக்கி, ``இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்'' என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, ``நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்'' என்று கதறினார். அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, ``ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே'' என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், ``அவன் இறந்துவிட்டான்'' என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான். அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, ``அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ``இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

மாற்கு 9: 14 – 29
இறை மனநிலை ஏற்போம்

இறைமனநிலை பெற்றது போல சாயம் பூசி வாழ்பவர்கள் அதிகம். அது சென்னை ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியாக இருக்கட்டும் ஹரியானா அமிர்தா மருத்துவமனையாக இருக்கட்டும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமாக இருக்கட்டும். இவர்களின் பிண்ணனி பார்க்கின்ற போது இறைமனநிலையில் உள்ளதாக மக்கள் முன் சாயம் பூசி இன்று சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார்கள்.

ஆனால் இயேசுவின் சீடர்கள் இத்தகைய இறை மனநிலைலைய பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் அதனை வைத்து சமுதாயத்தில் தொழிலும் செய்யவில்லை மற்றும் அதனை வைத்து செயலாக்கமும் பண்ணவில்லை. ஏனென்றால் அவர்களால் செயலாக்கம் பண்ண முடியவில்லை. அதனால் தான் தீய ஆவி பிடித்திருந்த அந்த சிறுவனுக்கு புது வாழ்வு கொடுக்க இயலவில்லை. அத்தகைய இறைமனநிலையை செயலாக்கம் பண்ண வைக்க வேண்டுமென்றால் இறைவேண்டல் நோன்பு தியாகம் போன்ற காரணிகளால் அத்தகைய இறை மனநிலையை புதுப்பிக்க வேண்டும். இயேசு அதனால் தான் பகல் முழுவதும் மக்களுக்கு பணி செய்யக்கூடிய தியாக வாழ்வில் ஈடுபட்டு இரவு முழுவதும் தன் தந்தையோடு செபத்தின் வழியாக உரையாடுகின்றார். இது தான் அவருக்குள் இருந்த இறைமனநிலையை செயலாக்க உதவியது. இத்தகைய செயலாக்கம் தான் அச்சிறுவன் புதுவாழ்வு பெற உதவியாக இருந்தது.

அதே இறைமனநிலையை நாமும் திருமுழுக்கு வழியாக பெற்றிருக்கின்றோம். நம்மிடம் இறைவேண்டல், தியாகம், நோன்பு போன்ற பண்பு உள்ளதா? இத்தகைய காரணிகளைக் கொண்டு புதுப்பிப்போம் புதுவாழ்வு பெறுவோம்.

  • அருட்பணி. பிரதாப்

======================

மாற்கு 9 : 14 – 21
நம்பிக்கையை அதிகமாக்கும்….

இன்றைய நற்செய்தி நம் இறைநம்பிக்கைக்கு வலுவூட்டும் விதமாக அமைந்திருக்கின்றது. இச்சிறுவனைப் பிடித்துள்ள பேய் ஆற்றல் உள்ளது. அது அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் நுரை தள்ளிப் பல்லைக் கடிக்கிறான். அவனது உடலும் விறைத்துப் போகின்றது. இப்பேயின் ஆற்றலின் முன் சீடர்களின் ஆற்றல் குறைவாகவே இருக்கின்றது. இக்குறைவிற்கு காரணம் என்ன? என்றும், இந்த சிறுவனை எப்படி நிறைவாக்க முடியும்? என்றும் ஆண்டவர் இயேசு தெளிவுபடுத்துகிறார். இன்றைய சீடர்களாகிய நமக்கு இது எப்படி முக்கியம் என்றால் நாம் பிறருக்கு பிடித்திருக்கின்ற தீய சக்திகளை விரட்டுவதைக் காட்டிலும் நம்மிடம் நம்மைச் சார்ந்து இருக்கின்ற தீய சக்திகளை விரட்டியடிக்க வேண்டும்.

“என்னிடம் நம்பிக்கைக் கொள்வோர் என்னைவிடப் பெரிய காரியங்களைச் செய்வார்” ( யோவான் 14:12) என்ற இறை வார்த்தையை முதலில் நம்ப வேண்டும். நம்பிக்கை என்பது, ‘என்னால் இயலாது, இறைவா’ உம்மால் மட்டுமே எல்லாம் இயலும் என்று அவரது ஆற்றலை ஏற்றுக் குழந்தையைப்போல் அவரிடம் சரணாகதி அடைவதே! இந்த நம்பிக்கையை அதிகப்படுத்த இன்றைய நற்செய்தியில் வருகின்ற சிறுவனின் தந்தையைப் போல நாமும் தொடர்ந்து சொல்ல வேண்டும். ‘நான் நம்புகிறேன், என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்’. இச்சொல்லினை செயலாக்க வேண்டும். நம் நம்பிக்கை இன்னும் அதிகமாக ஆண்டவர் கொடுக்கின்ற “வுipள” நோன்பிருந்து செபிப்பது. எப்படி தந்தையோடு இரவுபகலாக இயேசு மன்றாடினாரோ, உறவு கொண்டிருந்தாரோ அதனைப்போலவே நாமும் இறைவனோடு உறவு கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு திருப்பலியிலும் இறைவன் நம் உடலுக்குள் தன் உடலோடு வருகிறார். ஆனால் நாம் அவரை பெற்றும் பெறாதவர்களாக அவருடைய வார்த்தைகளைத் தினமும் கேட்டும் கேட்காத செவிடர்களாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட அனைத்தையும் பயன்படுத்தி பிறரோடு அன்பினை அவரின் வார்த்தையின் மூலமாகவும், உடலின் மூலமாகவும் பகிர்ந்து கொள்வோம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

தூய்மையான உள்ளம்

யாக்கோபு தன்னுடைய திருமுகத்தை உலகம் முழுவதிலும் சிதறுண்டு கிடக்கிற, யூதக்கிறிஸ்தவர்களுக்கு எழுதுகிறார். ஆயினும், இது எல்லாருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்வு என்பது எளிதானது அல்ல. கிறிஸ்தவனாக வாழ்வது என்றால் என்ன? அதற்கான விழுமியங்கள் என்னென்ன? என்பதை, இந்த திருமுகம் முழுவதிலும் எழுதியிருக்கிறார். அதில் முக்கியமான விழுமியமாக பார்க்கப்படுவது, ஒருவரது தூய்மையான வாழ்க்கை. ஒருவருடைய பணிவு தான், தூய்மையான உள்ளத்தோடு அவரை இறைவனிடம் அழைத்துச்செல்லும் என்பது, அவருடைய அறிவுரையாக இருக்கிறது. யார் பெரியவர்? என்று தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்ட அந்த நிகழ்வு, நிச்சயம் யாக்கோபிற்கு தங்களைப் பற்றி, சிரிப்பை வரவழைத்திருக்கும். இப்படியெல்லாம் இருந்திருக்கிறோமே என்ற நினைவை அவருக்கு தந்திருக்க கூடும்.

மனிதர்கள் கூடிவாழ்கிறபோது, தங்களுக்குள் யார் பெரியவர்? என்கிற போட்டி எழுவது இயல்பு. அறிவுள்ளவர்கள் தங்கள் அறிவைக்கொண்டு மற்றவர்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள். தங்களின் அறிவுத்திறமையைக் கொண்டு, தங்களை பெரியவர்களாக காட்டிக்கொள்ள முனைகிறார்கள். வலிமையுள்ளவர்கள் தங்கள் உடல் பலத்தைக்காட்டி வறியவர்களை அடக்குமுறைப்படுத்துகிறார்கள். பணபலம் உள்ளவர்கள் தங்கள் பணபலத்தைக் கொண்டு, பெருமைபாராட்டிக் கொள்கிறார்கள். இவையனைத்துமே தூய்மையற்ற வாழ்வாகத்தான் இருக்க முடியும். அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் பணிவு உள்ளவர்களாக வாழ வேண்டும் என்கிற சிந்தனையை அவர் தருகிறார்.

நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும், தூய்மையான உள்ளம் உடையவர்களாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். நாம் கொண்டிருக்கிற அந்த எண்ணம், நம்மை பணிவுள்ளவர்களாக வாழ வைக்கும். இறைவனின் அன்பும், அருளும் நம்மோடு இருக்கிறபோது, நமக்கு எதுவும் சாத்தியமே.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

இயேசுவின் செபவாழ்வு

நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணியை சிறப்பான விதத்தில், நேர்மையாக செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நேர்மையாகச் செய்கிறபோது, நாம் செய்யாத குற்றத்திற்காக பழிவாங்கப்படுகிறோம். அல்லது நமது பெயருக்கு களங்கம் விளைவிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது எண்ணம் எப்படி இருக்கும்? உடனடியாக நல்லது செய்வதை நாம் விட்டுவிடுவோம். மக்கள் இப்படி நன்றி கெட்டவர்களாக இருக்கிறார்களே? என்று ஆதங்கப்படுவோம். ஆனால், இயேசு அதனை மிக எளிதாகக் கடந்துவிடுகிறார்.

ஒருபுறத்தில் சிலுவைச்சாவு பற்றிய நெருக்கடி அவருக்கு இருக்கிறது. மறுபக்கத்தில் மக்களுக்கு அவர் நன்மை செய்துகொண்டிருக்கிறார். தன்னுடைய நெருக்கடி, தனது பணிவாழ்வில் எந்த ஒரு தேவையற்ற ஆதங்கத்தையும் செய்துவிடக்கூடாது என்பதில், இயேசு தெளிவாக இருக்கிறார். இந்த சிலுவைச்சாவு நெருக்கடியோடு, பரிசேயர், சதுசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்களின் நெருக்கடியும் அவருக்கு மிகப்பெரிய இடர்பாடாக இருக்கிறது. ஆனால், அவற்றை வெகு எளிதாக அவர் எதிர்கொள்கிறார். இதற்கெல்லாம் காரணமாக இருப்பது, இயேசுவின் செபவாழ்வு. தந்தையோடு அவர் நேரத்தை செலவழிக்கிறார். தன்னுடைய வாழ்விற்கு தேவையான செப ஆற்றலைப் பெற்றுக்கொள்கிறார்.

நமது வாழ்விலும் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும், அவற்றில் சலனம் இல்லாது தெளிந்த உள்ளத்தோடு, நமது வாழ்வை வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அதுதான் நமது வாழ்வை எப்படி வாழ்ந்திருக்கிறோம் என்பதற்கு அச்சாரமாக அமையும். அப்படிப்பட்ட வாழ்வை வாழ, நமது செப வாழ்வில் இன்னும் ஆழப்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

விசுவாசத்தளர்ச்சியை அகற்றுவோம்

தீய ஆவி பிடித்திருந்த பையனுடைய தந்தை இயேசுவைத்தேடி நம்பிக்கையோடு வந்திருந்தார். ஆனால், இயேசு தன்னுடைய மூன்று சீடர்களோடு உயர்ந்த மலைக்குச்சென்றுவிட்டார். எனவே, அந்த தந்தை சீடர்களின் உதவியை நாடுகிறார். ஆனால், சீடர்களால் அந்த பையனுக்கு குணம் தரமுடியவில்லை. நம்பிக்கையோடு வந்திருந்த அந்த தந்தை நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கிறார். அந்த நம்பிக்கையின்மைதான் இயேசு அங்கே வந்தபொழுது, அவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. எனவேதான், “உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்று சொல்கிறார். இயேசுவால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கையோடு வந்தவர், நம்பிக்கையிழந்து வாடுகிறார்.

இயேசுவின் வார்த்தைகள் அவருக்கு மீண்டும் நம்பிக்கையை தருகின்றன. ‘என்னுடைய ஆற்றலால் அல்ல, மாறாக உம்முடைய நம்பிக்கையினால்தான் எல்லாம் நிகழும்’ என்று நம்பிக்கையின் ஆழத்தை, அதன் மகத்துவத்தை அந்த தந்தைக்கு உணர்த்துகிறார் இயேசு. அவரின் நம்பிக்கை மீண்டும் வலுப்பெறுகிறது. தன்னுடைய தவறை உணர்ந்து, நம்பிக்கையின்மையை நீக்க மீண்டும் இயேசுவின் உதவியை நாடுகிறார். இயேசு நினைத்திருந்தால், தீய ஆவியை ஓட்டிவிட்டு அவரின் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கலாம். ஆனால், அது உண்மையான நம்பிக்கையை அந்த மனிதரிடத்தில் வளர்த்திருக்காது. மேலும், கடவுளின் அருளைப்பெற விரும்புகிறவர்கள், நம்பிக்கை இல்லாமல் எதையும் பெற முடியாது என்பதையும் உணர்த்த வேண்டிய கட்டாயம் இயேசுவுக்கு இருந்திருக்க வேண்டும். எனவேதான், அவருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தி, அவரின் வாழ்க்கையில் அற்புதத்தை, அதிசயத்தை காணச்செய்கிறார்.

விசுவாசத்தளர்ச்சி என்பது எல்லோருடைய வாழ்விலும் வரக்கூடிய இயல்பான ஒன்று. அந்தவேளையிலும் கடவுளின் துணையை நாடுவதுதான், நம் விசுவாசத்தை மீண்டும் வளர்த்தெடுக்க உறுதுணையாக இருக்கும், இறை ஆற்றலை உணர உதவியாகவும் இருக்கும். எல்லா வேளைகளிலும் இறைவனைப்பற்றிக்கொள்ளும் வரம் கிடைத்திட இறைவனை வேண்டுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

===================================

"நம்பிக்கையின்மையை நீக்க உதவும்"

தீய ஆவி பிடித்திருந்த இளைஞனின் தந்தை இயேசுவை நோக்கி, "உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு உதவி செய்யும்" என்று வேண்ட, இயேசு அவரை நோக்கி, "இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" என்று சொல்ல, அச்சிறுவனின் தந்தை "நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்" என்று கதறினார். இயேசு அவரைக் குணமாக்கினார்.

அந்தச் சிறுவனின் தந்தையைப் போன்ற மனநிலையே நம்மிலும் இருக்கலாம். அப்படியானால், அவரைப் போன்றே நாமும் மன்றாட வேண்டும். பல நேரங்களில் நமது விசுவாசம், இறைநம்பிக்கை நிறைவானதான, முழுமையானதாக இல்லை. எனவேதான், இறைவனின் நன்மைத்தனத்தை, பேரன்பை நாம் சந்தேகிக்கிறோம். எனவே, நாமும் நமது நம்பிக்கையின்மை நீங்க உதவவேண்டும் என்று இறைவனிடம் மன்றாட வேண்டும்.

மேலும், இறைநம்பிக்கை என்பதே இறைவனின் ஒரு கொடைதான் என்பதையும் இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. அவரது அருளின்றி, இறைவன்மீது நாம் நம்பிக்கை கொள்ள முடியாது, அவரை அப்பா, தந்தாய் என்று அழைக்கவும் முடியாது. எனவே, விசுவாசம் என்னும் கொடைக்காகவும், அந்த நம்பிக்கை நிறைவானதாகவும் இருக்க வேண்டுவோம்.

மன்றாடுவோம்: நன்மைகளின் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மை எங்கள் ஆண்டவராகவும், மீட்பராகவும் ஏற்கும் நம்பிக்கையை எங்களுக்குத் தந்தருளும்! எங்கள் வாழ்வில் நிகழும் அனைத்தும் எங்கள் நன்மைக்கே என்று நம்பும் மனநிலையை எங்களுக்குத் தந்தருளும். உம்மால் எல்லாம் கூடும் என்னும் என்னும் நம்பிக்கையை ஆழப்படுத்தும். எங்கள் நம்பிக்கையின்னை நீங்க உதவும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

இணையதள உறவுகளே

உங்கள் வாழ்க்கையில் உங்களுடைய கடவுள் நம்பிக்கையை தளர்வடையச் செய்யும் பல நிகழ்ச்சிகள் கட்டாயம் குருக்கிடும்.அந்த தகப்பனுக்கு மகனுக்கு தீய ஆவி பிடித்திருந்ததால் அந்த குடும்பமே பல வித நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கும்.ஆனால் அந்த குடும்பம் பக்தியும் இறை நம்பிக்கையும் உள்ள குடும்பமாக இருந்ததால் இயேசுவின் சீடரிடம் கொண்டு வந்துள்ளனர். நாமும் அதுபோல கோயில், திருத்தலம், குருக்கள், செபக்கூட்டங்கள் என்று நம் கஷ்டங்கள் நீங்க அலையாக அலைந்திருப்போம்.ஒன்றும் பலிக்காததால், அந்த தகப்பன்போல நமது நம்பிக்கையும் தளர்ந்திருக்கலாம்.ஆகவே, "முடிந்தால் பாருங்கள்" என்ற கடைசி கட்டத்திற்கு நாம் செல்லலாகாது.

மாறாக, பல துன்பங்களோடும் கஷ்டங்களோடும் வியாதிகளோடும் நாம் இருக்கும் இன்றைய நிலையும் கூட, கடவுள் நம்பிக்கை நமக்கு இட்ட கொடைதான் என்று நம்ப வேண்டும். ஏன், இதைவிட மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கலாம் அல்லவா! நமது நம்பிக்கையின் அளவுக்கேற்ப, கடவுள் நமக்குத் தந்த வாழ்க்கை இவ்வளவுதான் என்று நினைத்து, நம் நம்பிக்கையின் அளவை அதிகமாக்க வேண்டும்.அப்போது கடவுள் உயர்ந்த நம் நம்பிக்கைக்கு ஏற்ப, துன்பங்களை எல்லாம் போக்கி உயரிய வாழ்வைத் தருவார்.

"நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்" "நான் நம்புகிறேன். என் நம்பிக்கையை அதிகமாக்கியருளும்" என்று அந்த தகப்பனைப்போல தொடர்ந்து செபிப்போம். நம்முடைய நற்சுகத்திற்கும் உயர்ந்த வாழ்வுக்கும் குறைவே இராது. நீங்கள் உயர்வடைவீர்கள்.

-ஜோசப் லீயோன்

-------------------------

''உடனே அச்சிறுவனின் தந்தை, 'நான் நம்புகிறேன்.
என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என்று கதறினார்'' (மாற்கு 9:25)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- தீய ஆவி பிடித்திருந்த ஒரு சிறுவனைக் குணமாக்க இயேசுவின் சீடர்கள் முற்படுகிறார்கள். ஆனால் அவர்களால் இயலவில்லை. அப்போது அச்சிறுவனின் தந்தை இயேசுவை அணுகுகிறார். ஆழ்ந்த நம்பிக்கையோடு செயல்பட்டால் ஆகாதது ஒன்றுமில்லை என இயேசு பதிலுரைக்கிறார். அப்போது அச்சிறுவனின் தந்தை இயேசுவிடம், ''நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்'' என்று இறைஞ்சி வேண்டுகிறார் (காண்க: மாற் 9:25). இங்கு வருகின்ற ''நம்பிக்கை'' என்னும் சொல்லுக்கும் ''நம்பிக்கையின்மை'' என்னும் சொல்லுக்கும் தொடர்பு இருப்பதைக் காண்கிறோம். நம்பிக்கை என்பது கடவுளால் எல்லாம் கூடும் என உறுதியாக இருப்பதைக் காட்டுகிறது. நம்பிக்கையின்மை என்பது கடவுளின் வல்லமை குறித்து ஐயப்படுவதைக் குறிக்கிறது. நம்பிக்கையோடு கடவுளை அணுகுவோரின் வேண்டுதல் கேட்கப்படும் என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். மனிதர் கடவுளிடம் கேட்பதெல்லாம் அப்படி நிகழும் என நாம் கூறிட இயலாது. நாம் எழுப்புகின்ற எத்தனையோ வேண்டுதல்கள் கேட்கப்படாமலே போய்விடுவதுண்டு. ஆனால் நாம் கடவுள்முன் சமர்ப்பிக்கின்ற வேண்டுதல்கள் நம் உள்ளத்தை எப்போதுமே மாற்றிடும் தன்மை கொண்டவை.

-- இறைவேண்டல் என்பது நம் உள்ளத்தில் ஒரு மாற்றத்தைக் கொணர்கிறது. கடவுளால் எல்லாம் கூடும் என்னும் நம்பிக்கையோடு வாழ்ந்து செயல்படுகின்ற மனிதரின் வேண்டுதல் மனித கணிப்பின்படி நிறைவேறாமல் இருந்தாலும், கடவுளின் பார்வையில் நம் வேண்டுதல்கள் எப்போதுமே பொருள்செறிந்தனவே. நம் உள்ளத்தில் செயல்படுகின்ற கடவுளின் அருள் நாம் அவரை நோக்கி வேண்டும்போது நம் உள்ளத்தை மாற்றியமைக்கின்றது. ஆக, நாம் கடவுளின் திருவுளத்திற்கு அமைந்து நடக்க நம் வேண்டுதல்கள் நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. எனவே நம் நம்பிக்கையின்மையைப் போக்கிட வேண்டும் என நாம் கடவுளை நோக்கி மன்றாடுவது எப்போதுமே நலம் கொணர்கின்ற இறைவேண்டுதலே.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தில் நம்பிக்கையைத் தூண்டி எழுப்பியருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்