முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-10

சகோதரர் சகோதரிகளே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணம் என்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெற முடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள். விபசாரர் போல செயல்படுவோரே, உலகத்தோடு நட்புக் கொள்வது கடவுளைப் பகைப்பது என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கு நண்பராக விரும்பும் எவரும் கடவுளைப் பகைப்பவர் ஆவார். அல்லது ``மனித உள்ளத்திற்காகக் கடவுள் பேராவலோடு ஏங்குகிறார். அதற்கு அவர் அளிக்கும் அருளோ மேலானது'' என மறைநூல் சொல்வது வீண் என நினைக்கிறீர்களா? ஆகவே, ``செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்'' என்று மறைநூல் உரைக்கிறது. எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள். இருமனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள். உங்கள் நிலையை அறிந்து, துயருற்றுப் புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்பு புலம்பலாகவும், மகிழ்ச்சி ஆழ் துயரமாகவும் மாறட்டும். ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 55: 6-7. 8-9. 9-10. 22
பல்லவி: கவலையை ஆண்டவர்மேல் போட்டுவிடு; அவரே உனக்கு ஆதரவு.

6 நான் சொல்கின்றேன்: `புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்?
நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே!
7 இதோ! நெடுந்தொலை சென்று, பாலை நிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பேனே! -பல்லவி

8 பெருங் காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப் புகலிடம் தேட விரைந்திருப்பேனே!
9 என் தலைவரே! அவர்களின் திட்டங்களைக் குலைத்துவிடும்; அவர்களது பேச்சில் குழப்பத்தை உண்டாக்கும். -பல்லவி

9 ஏனெனில், நகரில் வன்முறையையும் கலகத்தையும் காண்கின்றேன்.'
10 இரவும் பகலும் அவர்கள் அதன் மதில்கள் மேல் ஏறி அதைச் சுற்றி வருகின்றனர். -பல்லவி

22 ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்;
அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன். அதன் வழியாகவே, உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.

மாற்கு9:30-37

ஆண்டின் பெதுக்காலம் வாரம் 7 செவ்வாய்


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் மலையை விட்டுப் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், ``மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்'' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்தபொழுது இயேசு, ``வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?'' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், ``ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்'' என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, ``இத்தகைய சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

21.02.2023 – மாற்கு 9: 30 – 37
எதில் எனது முதன்மை இருக்கிறது?

எல்லோருமே முதன்மையானவர்களாக இருக்க விரும்புகிறோம். இது சமுதாயத்தில் துவங்கி ஒரு சாதாரண வீட்டிற்குள் முடியும் சண்டை வரை பின்புலமாக இருக்கிறது. எதற்காக நாம் முதன்மையானவர்களாக இருக்க விரும்புகிறோம் என்றால், அனைவருடைய கவனமும் அவர் மீது இருக்கின்றது. உதாரணமாக, ஏதாவது பொது நிகழ்ச்சியில் பங்கெடுக்கிறோம். திடீரென முதன்மையானவர் வரும்போது அனைவரும் அவரை நோக்கி திரும்புகின்றனர். அனைவருமே அவருக்கு பணிவிடை செய்வர். அனைவரும் அவருடைய வார்த்தைக்கு கட்டுப்படுவர். உக்ரைன் – சிரியா போருக்கு முதல் காரணம் தங்களிடையே யார் முதன்மையானவர்கள் என காட்ட. இந்த முதன்மைத்துவம் என்ற விழுமியம் எவ்வாறு தோன்றுகிறது என்பதற்கு ‘யாரும் பயணம் செய்யாத பாதை’ என்ற நூலின் ஆசிரியர் ஸ்காட்பெக் ‘க்ராட்டிஃபிகேஷன்’ என்ற வார்த்தையின் வழியாக அறிமுகம் செய்கின்றார். அதாவது நீண்ட கால மகிழ்ச்சிக்கு காத்திராத மனம் சின்ன சின்ன சிற்றின்பங்களை நாடி, தன்னையே ‘கிராட்டிஃபை செய்து கொள்ள நினைக்கிறது. உதாரணமாக, குழு வாழ்வு என்பது நல்ல மதிப்பீடு. எல்லாருமே சோ்ந்து வாழ்வது, சோ்ந்து உழைப்பது, சோ்ந்து சாப்பிடுவது. ஆனால் இதனை எளிதில் பெற முடியாது. எனவே, நாம் காத்திருக்க வேண்டும். அவ்வாறு காத்திருக்க முடியாமல் சாதி அடிப்படையில், மத அடிப்படையில், மொழி அடிப்படையில் பிரிந்து செல்பவர்கள் முதன்மையாக இருக்க விரும்புகின்றனர்.

ஆனால் இயேசு விரும்புகின்ற முதன்மைத்துவம் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. அதாவது பொறுப்பில் அல்ல. மாறாக பணியில் முதன்மையாக இருங்கள் என்ற பாடத்தினை கற்றுக் கொடுக்கின்றார். ஏனென்றால் சீடர்களோடு இணைந்து கப்பர்நாகும் செல்கிறார். பெரும்பாலும் சீடர்கள் கப்பர்நாகுமைச் சார்ந்தவர்கள். எனவே சொந்த ஊர் என்பதனால் தாங்கள் செய்த புதுமைகள், போதனைகளை மற்றவர்களிடம் எடுத்துக் காட்டி, முதன்மையான அல்லது முக்கியமான பணியாளன் என்ற மகுடத்தை ஊரில் பெற விரும்புகின்றார்கள். இயேசு அவர்களின் எண்ண அலையினை மாற்ற எதில் முதன்மைத்துவம் செயல்பட வேண்டுமென்றால் பணி செய்வதில் இருக்கட்டும் என்று புகட்டுகின்றார். இந்த பணி ஆர்வம் எல்லோர்க்குமானதாக இருக்க வேண்டும். இந்த பண்பு குழந்தைகளிடம் உண்டு. குழந்தைகள் தான் எல்லோரையும் ஏற்றுக்கொள்வர். எனவே உங்கள் முதன்மைத்துவம் பணி செய்வதில் இருக்கட்டும் என சுட்டிக் காட்டுகிறார்.

எனது முதன்மைத்துவம் எதில் இருக்கிறது? ஆட்சிப்படுத்துவதிலா அல்லது பணி செய்வதிலா? வீடு துவங்கி சமுதாய அமைப்புகள் வரை இது தொடர்கிறது. சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

================================

மாற்கு 9 : 30 – 37
இன்றைய சீடர்களான நாம் எப்படி?

தம் இறப்பின் வழியே நமக்கு வாழ்வளிக்க வந்த இறைமகன் இரண்டாம் முறையாகத் தன் பாடுகள்- மரணம்- உயிர்ப்புப்பற்றி பேசுகிறார். அவமான சின்னத்தை தூக்கிச் சென்று அதில் அறையப்பட்டு இறக்க அவர் மனம் வருந்தவில்லை. அதை ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டே தன்னைத் தயார் படுத்த ஆரம்பித்து விட்டார். முதல்முறையாக தம் இறப்பினை அறிவிக்கும் பொழுது மூப்பர்கள், தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் புறக்கணிக்கப்படுவார் என்ற குறிப்பு உள்ளது. இங்கோ, ‘மனுமகன் மனிதர்களிடம் கையளிக்கப்படுவார்’ என்ற கூடுதலான அறிவிப்பை இன்றைய நற்செய்தியில் பார்க்க முடிகிறது. யூதாசின் துரோகச் செயலை மேலோட்டமாக இங்கே ஆண்டவர் குறிப்பிடுகிறார். மேலும் இறைவனின் திட்டத்தில் மனித மீட்புக்காகக் கடவுளாலும் அவர் கையளிக்கப்படுவார் என்ற உண்மையும் இங்கு தொனிக்கிறது. “நம் குற்றங்களுக்காக சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார், நம்மை தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்” (உரோ 4:35)

உரோமைய ஏகாதிபத்தியத்தை முறியடித்து மீண்டும் இஸ்ரயேலின் அரசை மிக வலிமையாக மெசியா நிறுவுவார் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு, இவர் பணி செய்ய வந்ததாகவும் பலியாகப்போவதாகவும் கூறியது சீடர்களுக்கு புறியாத புதிர்.எனவே அவர்கள் அவருடைய மரணம் பற்றி ஏதும் கவலைக் கொள்ளாமல், வரவிருக்கின்ற மெசியாவின் ஆட்சியில் யார் பெரியவர்கள் என்று சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை கூர்ந்து கவனிக்கும் போது இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்குமிடையே முற்றிலுமான ஒரு புரிதலின்மை இருப்பது தெரிய வருகிறது. இது தான் இன்று நமக்கான பாடமாகவும் அமைகிறது. இயேசு துன்பத்தினை முன் வைத்து தன் இறப்பினைக் கூறும் பொழுது இவர்கள் மாட்சிமையை, மகிமையை, பெயரினை, புகழினை முன் வைத்து தன் வாழ்வினை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் தன்னை வெறுமையாக்குவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, இவர்கள் தன்னை எப்படியெல்லாம் அணி செய்து கொள்ள முடியும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இயேசுவின் சிந்தனையெல்லாம் எப்படி பிறருக்காக தன்னை ‘அளிப்பது’ என்பதைப்பற்றி அறிவுறுத்தும் பொழுது, இவர்கள் பிறரை எப்படி தன் முன்னேற்றத்துக்காக ‘அழிப்பது’ என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று இயேசுவின் சீடர்களான நாமும் இவ்வாறு தான் அவருடைய இறையரசுக் கனவுக்கெதிராக, ஒன்றுமே தொடர்பில்லாத காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அன்றைய சீடர்கள் இயேசு பக்கத்தில் இருக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு அவரிடம் கேட்க அஞ்சி தள்ளி வந்த பிறகு ஏதோ அவர்களின் பழைய வாழ்க்கைக்கு சென்றுவிடுகிறார்கள். இதோபோலதான் இன்று நாம் கோவிலுக்குள் இருக்கும்போது வானதூதர்களைப் போலவும், வெளியே வந்த பிறகு தண்ணீர் பிடிக்கும் இடத்தில் சண்டைப்போடும் பெண்களாகவும் மதுக்கடைகளிலிருந்து வெளிவரும் ஆண்களாகவும் மாறிவிடுகிறோம். அவரிடமே நம் வாழ்க்கைக்கான விளக்கம் கேட்போம். விளக்கம் கேட்க அஞ்சவேண்டாம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

 

யாக்கோபு 4:1-10
எண்ணங்கள் தூய்மையானதாக இருக்கட்டும்

இந்த உலகத்தில் நடக்கிற அநீதி, அக்கிரமங்களுக்கு ஒருவருடைய தீய எண்ணமே காரணமாய் இருக்கிறது என்று யாக்கோபு சொல்கிறார். உலக நாடுகளிடையே அமைதி இல்லை. குடும்பங்களில் சமாதானம் இல்லை. மனிதர்களுக்கு நிறைவு இல்லை. அடுத்தவரின் வளர்ச்சி கண்டு பொறாமை எண்ணம் குடிகொள்கிறது. இவற்றிற்கெல்லாம் காரணம், ஒருவருடைய உள்ளத்தில் இருக்கிற தீய எண்ணமே. இந்த தீய எண்ணம் ஒருவருக்குள்ளாக எப்படி வருகிறது? ஒரு மனிதர் எப்போது சிற்றின்ப ஆசைக்கு அடிமையாகுகிறாரோ, இந்த உலகத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்போது அவருக்குள்ளாக தீய எண்ணம் வருகிறது. ஆக, ஆசைகளை விடுப்பதே நல்ல எண்ணத்தோடு வாழ்வதற்கான அடித்தளமாகும்.

ஆசையை எப்படி விடுப்பது? போதுமென்ற மனம் தான், ஆசையை துறப்பதற்கான திறவுகோல். நாம் நிறைவுள்ளவர்களாக இருக்க வேண்டும். இருப்பதில் நிறைவு காண வேண்டும். இன்றைய நவநாகரீக உலகத்தில், மனிதர்களுக்கு நிறைவு இல்லை. ஒரு கோடி சேர்த்து வைத்தவனுக்கும் நிறைவு இல்லை. மேலும், மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறான். பல ஆயிரம் கோடி சம்பாதிக்கிறவனுக்கும் நிறைவு இல்லை. ஆசை அளவுக்கு அதிகமாய் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பதை வைத்து மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என்கிற எண்ணத்திற்குள்ளாக மனித மனம் செல்வதில்லை. இதுதான் மனிதர்களின் அடிப்படை பிரச்சனையாக இருக்கிறது. மனிதர்களின் இந்த எண்ண ஓட்டத்தை அறிந்திருக்கிற அலகை, வெகு எளிதாக நம்மை தன்வயப்படுத்திவிடுகிறது. எனவே, இருப்பதில் நிறைவுள்ளவர்களாக வாழ்வோம் என்பதுதான், யாக்கோபு நமக்கு விடுக்கும் அழைப்பாக இருக்கிறது.

நம்முடைய வாழ்வில் இந்த சிந்தனை இருந்தால், நமக்கு எந்த ஒரு குறையும் இருக்காது. ஆசைக்கு எல்லை இல்லை. ஆனால், நம்முடைய மனதை நல்ல சிந்தனையோடு வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சமுதாயத்தில் ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாதவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால், கடவுள் நம்மை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார். நமக்கு இருக்கிற செல்வத்தைக் கொண்டு, அவர்களுக்கு உதவி செய்கிற, நல்ல எண்ணத்தை வளர்த்துக்கொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

தேவையில் இருக்கிறவர்கள்

”சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர், என்னையே ஏற்றுக்கொள்கிறார்” என்று இயேசு சொல்கிறார். இதனுடைய பொருள் என்ன? இயேசு சிறுபிள்ளைகளை உவமையாக எதற்கு ஒப்பிடுகிறார்? எந்த பெற்றோரும், தனது பிள்ளைகளை சுமையாக நிச்சயம் கருதமாட்டார். அவர்களை ஏற்றுக்கொள்வது யாருக்கும் கடினமானது அல்ல. எனவே, குழந்தைகளை ஏற்றுக்கொள்வதைப்பற்றி இயேசு இங்கே பேசவில்லை. குழந்தைகளை உவமையாகப் பயன்படுத்துகிறார். அப்படியென்றால், குழந்தைகளை, இயேசு யாருக்கு ஒப்பிடுகிறார்?

இங்கே குழந்தைகள் என்று வருகிற வார்த்தையை, நாம் புரிந்து கொள்ளும் சிந்தனை, சிறுகுழந்தைகள் யாருக்கும் எதுவும் கொடுக்க முடியாது. அவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து இருப்பார்கள். குழந்தைகளின் பெற்றோர், அவர்களுக்கு தேவையானவற்றை பார்த்து, பார்த்து செய்கிறார்கள். குழந்தைகள் மற்றவர்களின் உதவியில் தான், வாழ்கிறார்கள். அந்த குழந்தைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவர்களை அன்பு செய்கிறோம். அது போலவே, தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத, ஏழை, எளியவர்களை, வறியவர்களை இயேசு குழந்தைகளுக்கு ஒப்பிடுகிறார்கள். அவர்களை நாம் ஏற்றுக்கொள்ள பணிக்கிறார். தேவையில் இருப்பவர்களை ஏற்றுக்கொள்வது, இயேசுவையே ஏற்றுக்கொள்வதைப்போல ஆகும்.

இன்றைய உலகில் மக்கள் தெய்வங்களுக்கு கொடுக்கும் உதவியை, நடமாடும் தெய்வங்களாக இருக்கக்கூடிய மனிதர்களுக்கு, ஏழை, எளியவர்களுக்கு கொடுக்க மனமில்லாமல் இருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? மக்களை நாம் பயிற்றுவிக்கவில்லையா? வழிபாடுகள் அவர்களை முறையாக வாழ்வதற்கு கற்று தரவில்லையா? சிந்திப்போம். அதற்கேற்றவாறு செயல்படுவோம். 

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

இயேசுவின் வழியில் நடப்போம்

நாம் அனைவருமே நம்மைப்பற்றி உயர்வாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நாம் உடுத்துவதும், உண்பதும் மற்றவர்கள் பார்வையில் மதிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக மெனக்கெடுகிறோம். அனைவருமே நம்மைப் பற்றி உயர்வாகப் பேச வேண்டும். மற்றவர்கள் பார்வையில் நாம் பெரியவர்களாக இருக்க வேண்டும் என்று அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக்கொண்டிருக்கிறோம். சீடர்கள் மத்தியிலும் இதே கேள்விதான். தங்களுள் யார் பெரியவர்? இயேசுவின் பார்வையில் யார் பெரியவர்? நிச்சயம் அனைவருமே அவரவர் பார்வையில் பெரியவர்களாகத்தான் எண்ணியிருப்பார்கள். அதை மற்றவர்கள் சொல்ல, அவர்கள் எண்ணுகிறார்கள். ஏனென்றால், இதற்கு முந்தைய அதிகாரத்தில், இயேசுவும் தன்னை மக்கள் யார் என எண்ணுகிறார்கள்? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதனுடைய தொடர்ச்சியாக சீடர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவுக்கு சீடர்களின் இந்த கேள்வி நிச்சயமாக அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனென்றால், தான் பாடுகளைப்படப் போகிறதைச் சொன்ன இந்த நேரத்தில், சீடர்கள் இந்த உலகக்காரியங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்களே என்று அவர் வருந்தியிருக்கக்கூடும். அவர்களுடைய அந்த செய்கைக்கு இயேசுவின் மறுமொழி, உடனடியாக அனைவரையும் அழைக்கிறார். இயேசுவும் அமர்கிறார். அவர்களுக்கு தெளிவுபடுத்த ஆரம்பிக்கிறார். குரு அமர்தல், என்பது அது முக்கியமானதைக்குறித்துக் காட்டக்கூடிய செயல். தான் சீடர்களுக்கு தன்னுடைய இறுதிகட்ட வாழ்வை தெளிவுபடுத்தியே ஆக வேண்டும் என்பதின் வெளிப்பாடுதான், இயேசு அமர்ந்து போதித்த அந்த நிகழ்ச்சியாகும்.

இயேசுவின் சீடர்களைப்போல நாமும் வாழ்வில் நடக்கும் பல நிகழ்ச்சிகளின் அர்த்தத்தைப்புரிந்து கொள்ளாமல், நமது வாழ்வைப்பற்றியே குறுகிய கண்ணோட்டத்திலே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாம் வாசிக்கும் இறைவார்த்தை, இயேசுவின் போதனை சீடர்களின் மனநிலையை மாற்றியதுபோல, நம்மையும் மாற்றட்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

அனுபவமே சிறந்த ஆசான்

இயேசு தன்னுடைய பாடுகளைப்பற்றி இரண்டாம் முறை முன்னறிவிக்கிறார். ஒருவேளை தன்னுடைய சீடர்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பதை அறிந்துகொள்ள மீண்டும் இயேசு இதைச்சொல்லியிருக்கலாம். ஏனென்றால், தான் இந்த உலகத்தை விட்டுச்செல்வதற்கு முன்னதாக தன்னுடைய சீடர்களுக்கு தன்னுடைய பணியின் அர்த்தத்தை உணர வைக்க வேண்டும். தன்னுடைய சீடர்கள் எந்தநிலையில் இருக்கிறார்கள்? என இயேசு தெரிந்துகொள்ள ஆர்வமும் இதில் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ஆனால், சீடர்கள் இன்னும் இயேசுவிடமிருந்து சரியான முறையில் கற்றுக்கொள்ளவில்லை, இயேசுவை முழுமையாகப்புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான், நாம் அங்கே பார்க்கிறோம். இயேசு சொன்னது அவர்களுக்கு விளங்கவும் இல்லை, இயேசுவிடம் அவர்களுக்கு இருந்த பயமும் போகவில்லை.

இயேசுவை சீடர்கள் சரியாகப்புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் இரண்டாம் பகுதி நமக்கு விளக்கிக்கூறுகிறது. யார் தங்களுக்குள் பெரியவர்? என்பதைப்பற்றி வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். இயேசுவிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்பது அவர்களிடையே தெளிவு. இயேசுவால் உரோமையர்களின் அடிமைத்தளையிலிருந்து மீட்க முடியும் என்பதும் அவர்களது நம்பிக்கை. இது சாதாரணமாக எல்லா மக்களிடமும் இயேசுவைப்பற்றி இருந்த பார்வைதான். ஆனால், இயேசுவோடு உண்டு, உடுத்தி, உறங்கும் சீடர்களும் அதே பார்வையைத்தான் வைத்திருந்தார்கள் என்றால், இயேசுவைப்பொறுத்தவரையில் இது மிகப்பெரிய ஏமாற்றம். இன்னும் தன்னை சரியாகப்புரிந்துகொள்ளவில்லை என்பதை அவர்களின் வாக்குவாதத்திலிருந்து தெரிந்துகொள்கிறார். கோபப்படுவதற்கு நேரமில்லை, இருக்கிற சிறிதுநாட்களில் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற தெளிவு இயேசுவிடம் இருப்பதைப்பார்க்க முடிகிறது. எனவேதான் அவர் அமர்கிறார். ‘அமர்தல்’ என்பது பொதுவாக, குரு சீடர்களுக்கு கற்றுக்கொடுக்க இருப்பதைக்குறிக்கும் சொல். அவர் தன் சீடர்களுக்கு இன்னும் அதிகத்தெளிவாய், நிதானமாய் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறார்.

வாழ்வு என்பது ஒரு தேடல். வாழ்வில் நாம் ஒவ்வொரு கணமும் ‘கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற ஆர்வம் இருக்க வேண்டும். கற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் வாழ்வை நகர்த்திச்செல்ல வேண்டும். ஆர்வம் இல்லையென்றால், நம்மால் எதையும் செய்ய முடியாது. வாழ்வை ஆர்வத்தோடு மகிழ்ச்சியோடு வாழ இறைத்துணையை நாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

===========================

யார் பெரியவர் ?

தங்களுக்குள் யார் பெரியவர் என்று தம் சீடர்கள் வாதாடிக்கொண்டிருந்ததை அறிந்த இயேசு வருத்தத்துடன் அவர்களுக்கு இறையாட்சியின் மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுக்கிறார்.

"ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிலும் கடைசியானவராகவும், அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்பதே இயேசுவின் போதனை. இறையாட்சியின் மதிப்பீடு.

ஆனாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் திருச்சபையில், துறவற சபைகளில், பங்குகளில், அன்பியங்களில் "யார் பெரியவர்?" என்னும் விவாதம் எழத்தானே செய்கிறது? காரணம், கிறித்தவம் என்பது என்ன என்பதை நாம் இன்னும் புரிந்துகொள்ளாததுதான். பதவிக்கான போட்டிகளும், பிறர் முன்னேறிவிடக்கூடாது என்னும் பொறாமை உணர்வும் இன்னும் நமது மனங்களிலே புதைந்துகிடப்பதால்தான்.

இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, நம்மையே தாழ்த்திக்கொள்ள, பிறருடைய தலைமையின்கீழ் பணிபுரிய முன்வருவோம். அப்போது, இறையரசில் நாம் பெரியவர்களாயிருப்போம்.

மன்றாடுவோம்: இறைமகனாயிருந்தும் உம்மையே தாழ்த்திக் கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் மத்தியில் உள்ள "யார் பெரியவர்?" என்னும் போட்டி மனநிலையை அகற்றி, நாங்கள் ஒருவருக்கொருவர் பணி செய்யவும், பிறரின் தலைமையை ஏற்று செயல்படவும் நல்ல மனதை எங்களுக்குத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

எதைப் பற்றி வாதாடிக்கொண்டிருந்தீர்கள் ?

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

குடும்பங்களில், குழுக்களில், பணித்தளங்களில், ஏன் எங்கெல்லாம் மனிதர்கள் ஒன்று கூடுகிறார்களோ, அங்கெல்லாம் உரையாடல்கள் நடைபெறுகின்றன. அவற்றில் சில முறைகள் வாதாட்டமும், சொற்போரும் நிகழுகின்றன. இது இயல்புதான். ஆனால், இந்த வாதாடுதலும், சொற்போர்களும் எதை மையம் கொண்டிருக்கின்றன என்பதுதான் அந்தக் குழுமங்களின், குடும்பங்களின், கூட்டங்களின் தராதரத்தை எடுத்துக்காட்டுகின்றன. வருத்தமூட்டும் வகையில், இயேசுவின் சீடர்கள் வாதாடிக்கொண்டு வந்தது தங்களுக்குள் யார் பெரியவர்? என்பது பற்றி. அவர்களின் தாழ்வான மனநிலையை வெள்ளிடை மலையாகக் காட்டிவிடுகிறது இந்த நிகழ்வு. இயேசு அவர்களின் தவறைச் சுட்டிக்காட்டுகிறார், திருத்துகிறார். உண்மையிலே பெரியவர் யார் என்பது பற்றிய புதிய விளக்கத்தை அளிக்கின்றார்.

நமது உரையாடல்களைச் சற்றே ஆய்வு செய்வோமா? நாம் உணவு உண்ணும் நேரங்களில், பொழுதுபோக்காகப் பேசிக்கொண்டிருக்கும் வேளைகளில் எதைப் பற்றி வாதாடுகிறோம் என்பதைப் பற்றித் தன்னுணர்வு கொள்ளவும், வாதாட்டு மையப் பொருள்களை மாற்றி அமைக்கவும் இன்றைய நற்செய்தி வாசகம் அழைப்பு விடுக்கிறது. இனிமேலாவது, தனி நபர்களின் நிறை,குறைகள் பற்றியோ, பதவி, பெருமைகள் பற்றியோ வாதாடுவதைத் தவிர்ப்போம். வாதாடுதல் பல வேளைகளில் உறவு முறிவுக்கே இட்டுச்செல்கிறது என்பதையும் மனதில் கொள்வோம். தேவையிருந்தால், மனித மாண்பை, உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் வகையில் நம் சொற்போர்கள் அமையட்டும். இல்லாவிட்டால், அமைதி காப்பதே நலம்.

மன்றாடுவோம்: தாழ்ச்சியின் நாயகனே இயேசுவே, யார் பெரியவர் என்று வாதாடிக்கொண்டு வந்த சீடர்களுக்கு உண்மையை உணர்த்தியதற்காக உம்மைப் போற்றுகிறோம். எங்கள் உரையாடல்களில் எங்கள் பெருமையை, உயர்வைத் தேடாமல், பிறருக்குத் தொண்டாற்றும் மனநிலையை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

----------------------

''பிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,
'இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும்
என்னையே ஏற்றுக்கொள்கிறார்...' என்றார்'' (மாற்கு 9:36-37)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கிறிஸ்தவ நம்பிக்கையைத் தம் வாழ்வில் கடைப்பிடித்து, அதைப் பிறருக்கு அறிவிக்கின்ற மனிதர்கள் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது வரலாறு கூறும் உண்மை. இயேசுவே துன்பங்களை எதிர்கொண்டார்; சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டார். ஆயினும், இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கூறியது அவருடைய சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. மாற்கு நற்செய்தியில் இயேசு தாம் கொல்லப்படப் போவதை ஒருமுறையல்ல, இருமுறையல்ல, மூன்று முறை முன்னறிவித்தார் எனக் காண்கிறோம் (காண்க: மாற் 8:31-38; 9:30-32; 10:32-34). ஆனாலும் அவருடைய சீடர்கள் ''துன்புறும் மெசியா''வை ஏற்க மறுத்தார்கள். அவர்களுடைய பார்வையில் இயேசு அதிகாரத்தோடு போதித்து, இஸ்ரயேல் மக்களை அடிமைநிலையிலிருந்து விடுவித்து, அவர்களைச் சுதந்திர மக்களாக்கி ஆட்சி செய்வார்; மகிமை மிகுந்த அவரது ஆட்சியில் தங்களுக்கும் அதிகாரப் பொறுப்புகள் வழங்கப்படும் என இயேசுவின் சீடர்கள் கனவு கண்டார்கள். எனவே, இயேசு துன்புறப் போகிறாரே என்பது பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் சீடர்கள் மட்டும் ''தங்களுள் யார் பெரியவர்'' என்னும் வாதத்தில் ஈடுபட்டார்கள்.

-- அப்போது இயேசு சீடர்களுக்கு ஒரு முக்கியமான போதனையை வழங்குகிறார். ''இயேசு அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிடுகிறார்''. பின் அவர்களைப் பார்த்து, அவர்கள் முதலிடங்களை நாடுவதற்குப் பதிலாக ''அனைவருக்கும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும்'' மாற வேண்டும் என்கிறார் (மாற் 9: 35). ''கடைசியானவர்'' எப்படி இருப்பார் என்பதை இயேசு ஒரு செயல் வழியாகக் காட்டுகிறார். அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, சீடர் நடுவே நிறுத்துகிறார். அப்பிள்ளையை அன்போடு அரவணைக்கிறார். ''இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்'' எனக் கூறுகின்றார் (மாற் 9:37). சிறுபிள்ளைகள் அக்காலத்தில் தம் தந்தையரின் ''உடைமை'' எனக் கருதப்பட்டார்கள். சிறுபிள்ளைகளுக்கு உரிமைகள் கிடையாது; சமுதாயத்தில் மதிப்போ மரியாதையோ கிடையாது. அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவுசெய்ய பிறரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஆக, சமுதாயத்தில் கடைநிலையில் இருந்த ''சிறு பிள்ளை'' போல யார் தம்மையே தாழ்த்தக்கொள்கிறார்களோ அவர்களே கடவுள் முன் பெரியவர்கள் ஆவர் என இயேசு போதிக்கிறார். மேலும் இயேசு தம்மையே அச்சிறு பிள்ளைக்கு ஒப்பிடுகிறார். சமுதயாத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை நாம் மதிப்போடும் மரியாதையோடும் நடத்தும்போது நாம் உண்மையிலேயே துன்புற்ற இயேசுவை ஏற்று மதிப்பளிக்கிறோம் என்பது ஓர் ஆழ்ந்த உண்மை. ஏழைகளின் மட்டில் தனிக் கவனம் செலுத்துவது கிறிஸ்தவ மரபு. அதைப் பின்பற்றி நாமும் பெருமையையும் செல்வத்தையும் தேடிச் செல்வதற்குப் பதிலாகக் கடவுளின் பார்வை கொண்டு செயல்பட வேண்டும். அப்போது சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரின் முகத்தைப் பார்க்கும்போது அங்கே இயேசுவையே நாம் காண்போம். ''இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்'' (மாற் 8:37) என்னும் இயேசுவின் சொற்கள் நாம் கடவுளின் பார்வையில் பெரியவர்களாக மாறுவதற்கான வழியைச் சுட்டிக்காட்டுகின்றன. மன மகிழ்வோடு பிறருக்குப் பணிசெய்வதே அந்த வழி.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் தாழ்ச்சியும் பணிவும் கொண்ட உள்ளத்தோடு உம்மை அணுகிவர எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------

''இயேசு, 'ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும்
அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்' என்றார்'' (மாற்கு 9:35)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- உலகத்தின் கண்களுக்குப் பெரியவர் என்றால் எல்லாராலும் போற்றப்பட்டு, புகழப்பட்டு, உயர்நிலையில் வைக்கப்படுகின்ற மனிதர்தாம். ஆனால் இயேசுவின் பார்வையில் பெரியவர் என்பவர் அனைவரிலும் சிறியவராக மாற வேண்டும். உலகப் பார்வையில் சிறப்பு மிக்கோர் பிறரிடமிருந்து பணிவிடை பெறுவார்களே தவிர பிறருக்குப் பணிவிடை செய்பவர்கள் அல்ல. இக்கருத்தையும் இயேசு புரட்டிப் போடுகின்றார். இயேசு இவ்வாறு உலகப் பார்வைக்கு நேர்மாறான கருத்தை ஏன் கூறுகிறார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மனிதர் எப்போதுமே சிறப்பான நிலையை அடைய விரும்புகிறார்கள். ஆனால் சிறப்பு நிலை எதில் அடங்கியிருக்கிறது என்பதுதான் கேள்வி. பிறருக்குத் தொண்டுசெய்வதும் பிறரைத் தமக்கு உயர்ந்தவராகக் கருதுவதும் உண்மையான சிறப்புக்கு அடையாளம் என்றால் இயேசு நமக்கு வழங்குகின்ற மதிப்பீடுகள் உலக மதிப்பீடுகளிலிருந்து மாறுபட்டவை என்பதுதான் பொருள். இயேசுவின் மதிப்பீடுகள் கடவுள் நம்மை வழிநடத்தப் பயன்படுத்துகின்ற தூண்டுதல்கள் ஆகும்.

-- இயேசுவின் வாழ்வில் துலங்கிய மதிப்பீடுகளை அவருடைய சீடர்களும் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் நடுவே யார் பெரியவர் என்னும் கேள்வி எழுவதே சரியல்ல என இயேசு உணர்த்துகிறார். உண்மையான சிறப்பு பிறருக்குப் பணிசெய்வதிலே அடங்கும் என்று போதித்த இயேசு அதை முழுமையாகத் தம் வாழ்வில் கடைப்பிடித்தார். அவர் தம் சீடருடைய காலடிகளைக் கழுவினார். வேலைக்காரர் தம் வீட்டுத் தலைவர்களுக்கு ஆற்றிய பணி அது. எனவே, இயேசுவைப் பின்செல்வோருக்குத் தரப்படுகின்ற வழிமுறை இவ்வுலகப் பார்வையைப் புரட்டிப்போடுகின்ற வழிமுறை. அவ்வழியே நாம் நடந்தால் நாமும் கடவுளின் பார்வையில் சிறப்புடையோர் ஆவோம்.

மன்றாட்டு
இறைவா, பணிசெய்கின்ற மன நிலையை எங்களுக்குத் தந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்