முதல் வாசகம்

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16

அன்புக்குரியவர்களே, உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்; இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர். தங்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய துன்பங்களையும் அவற்றுக்குப்பின் அடையவேண்டிய மாட்சியையும் முன்னறிவித்தபோது, ஆவியால் குறிப்பிடப்பட்ட காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர். அவர்களது பணி தங்கள் பொருட்டல்ல, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. விண்ணினின்று அனுப்பப்பட்ட தூய ஆவியால் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தவர்கள், அவர்கள் முன்னறிவித்தவற்றை இப்போது உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றை அறிந்துகொள்ள வானதூதர்களும் ஆவலோடு இருந்தார்கள். ஆகவே, உங்கள் மனம் செயலாற்றத் தயாராய் இருக்கட்டும்; அறிவுத் தெளிவுடையவர்களாய் இருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருங்கள். முன்னர் அறியாமையில் இருந்தபோது இச்சைகளுக்கிசைய நடந்தது போலன்றி, கீழ்ப்படிதலுள்ள மக்களாய் இருங்கள். உங்களை அழைத்தவர் தூய்மை உள்ளவராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மை உள்ளவர்களாய் இருங்கள். `நீங்கள் தூயவராய் இருங்கள்; ஏனெனில் நான் தூயவன்' என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 98: 1. 2-3. 3-4
பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;
பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும
் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். -பல்லவி

3உ உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

மாற்கு 10:28-31

பொதுக்காலம் 8 வாரம் செவ்வாய்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31

அக்காலத்தில் பேதுரு இயேசுவிடம், ``பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே'' என்று சொன்னார். அதற்கு இயேசு, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

மாற்கு 10: 28 - 31

விருப்புரிமை

மனிதர்களாகிய நமக்கும் மற்ற விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சிரிப்பு என்று சொல்வார்கள். ஆனால் தற்போது பூனை, நாய்க்குட்டிகளும் கூட அதிகமாக சிரிப்பதாக ஆய்வு சொல்கின்றது. ஆனால் மனிதர்களுக்கு மட்டுமே உள்ள ஒரு பண்பு என்னவென்றால் அவர்களின் விருப்புரிமை. அதாவது நான் விரும்புவதை நான் செய்ய முடியும். ஆனால் இதை கேள்விக்கு உட்படுத்துவார் சார்த்தர் என்ற மெய்யியல் சிந்தனையாளர். குருவி கூடு கட்டுகிறது. குருவி என்ற ஒரு இனம் தோன்றியது முதல் அது ஒரே மாதிரித்தான் கட்டுகிறது. அதன் அமைப்பு அப்படி தான். ஆனால் நாம் நமக்கு ஏற்றவாறு விரும்புகின்ற அமைப்பில் கட்டுகின்றோம்.

இத்தகைய விருப்புரிமையை இயேசு தன் பணிவாழ்வில் நன்றாக உணர்ந்திருந்தார். அதனால் தான், தான் புதுமைகள் செய்கின்ற போது விமர்சனங்கள் எழுப்பிய பரிசேயர்களை அவர் எதிர்க்கவில்லை. அதன் அடுத்தபடியாக தன் பணிவாழ்விற்கு அழைக்கும் போது கூட யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. மற்றவர்களின் உரிமையை அவர் மதிக்கின்றார். ஆனால் நிலைவாழ்வு எது கொடுக்கும் என்று பல நேரங்களில் அவர்களுக்கு படம்பிடித்துக் காட்டுகின்றார். அதன் ஒரு பகுதி தான் இன்றைய நற்செய்தி வாசகம். இதில் இரண்டு வகையான பண்புகளை மாற்கு நற்செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார். முதல் பண்பு இயேசுவின் விருப்பமாகிய எல்லாவற்றையும் விட்டு விட்டு பின்தொடர்தல். இரண்டாவது பண்பு அவர்களுக்கு இயேசு வழங்க இருக்கக்கூடிய அந்த உரிமையான வாழ்வு அதாவது நிலைவாழ்வு. இது தான் இயேசுவின் விருப்புரிமை.

நம் வாழ்வில் விருப்பம் எதை நோக்கியதாக இருக்கின்றது? அழிந்து போகக்கூடிய பொருட்கள், மனிதர்கள் மீது உரிமை கொள்கிறோமா? அல்லது அழியாத வாழ்வு மீது உரிமை கொள்கிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

நம்பிக்கையோடு நகர்; நல்லது நடக்கும்!

மாற்கு 10: 28-31

தொடக்ககாலத் திருச்சபையில் சீடர்களின் மத்தியில் பிளவுகள் இருந்ததாகவும், பிளவுகளை களைந்து, சீடர்கள் குழுமமாக வாழ்வதற்கு, குடும்ப வாழ்க்கையை விட, ஒன்றிணைந்து வாழும் சீடத்துவ வாழ்வின் மகிழ்ச்சியே பெருமகிழ்ச்சி என்பதை குறிப்பிடவே புனித மாற்கு நற்செய்தியாளர் இந்த பகுதியை எழுதியதாக விவிலிய அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

புனித பேதுரு, தனது கூற்றை ஒரு ஆர்வத்துடன் முன்வைக்கிறாரா அல்லது தன்னையும் சீடர்களையும், பணக்காரருடன் ஒப்பிட்டு, அவர்களின் விருப்பத்தையும், பெருந்தன்மையையும் பற்றி ஓரளவு பெருமைப்படுகிறாரா என்பது கதைக்களத்திலிருந்து தெளிவாகத் தெரியவில்லை. அவருடைய கருத்து ஆழமான சந்தேகத்திலிருந்து பிறந்திருக்கலாம். இன்றைய நற்செய்திப் பகுதி நேற்றைய பகுதியின் தொடர்சியாகவே அமைகிறது. செல்வந்தரான இளைஞன் தனது கேள்விக்கு பதில் கிடைத்து திரும்பியதும், புனித பேதுரு “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றியவர்களாயிற்றே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?“ என்றே கேட்பதாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இயேசு தெளிவான பதிலைக் கொடுக்கிறார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னை பின்தொடர்பவர்கள் எல்லாவற்றையும் நூறுமடங்காக அதோடு விண்ணக வாழ்வையும் கொடையாக பெறுவார்கள் என்பதே அந்த பதில்.

புனித பேதுருவைப் போல நமக்கும் பலசந்தேகங்கள் உண்டு. நாம் செய்வது சரிதானா? சரியான பாதையில் செல்கிறோமா? எதிகாலத்திற்கு இதனால் எதாவது பயன் இருக்குமா? அல்லது ஆபத்தில் முடியுமா? என்பது போன்ற பல சந்தேகங்களுடன் நாம் கவனமாக அடியெடுத்து வைக்கிறோம். சந்தேகங்கள் மன மகிழ்ச்சியை கொன்று விடும்; நிம்மதியாக மனிதனை வாழ விடாது. நாம் சரியான பாதையில் செல்கிறோம்; சரியான செயல்களை செய்கிறோம் என்றால் துணிவோடும், நம்பிக்கையோடும் காலடிகளை நகர்த்துவோம். சரியானது சரியான காலத்தில் நம்மிடம் வந்து சேரும் இறையின் ஆசிரோடு...

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ.

........................................................................

மாற்கு 10:28-31
பற்றுக பற்றற்றானை!

நேற்றைய நற்செய்தியின் தொடக்கம் இன்றைய நற்செய்தி என்பதால் நேற்று முடித்த வரிகளில் இன்றைய சிந்தனையை தொடங்குவோம். நிலை வாழ்வு என்பது தான் மட்டும் வாழ்வதல்ல, பிறர் வாழ்வதற்கும் உதவுவது. நாம் மிகப்பெரிய இலக்கினை நம் வாழ்வில் அடைய வேண்டுமானால் கண்டிப்பாக சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது அல்லது விட்டுவிடவேண்டியிருக்கிறது. உதாரணமாக நான் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வரவேண்டுமென்று எண்ணினால், அவ்வெண்ணத்தை நிறைவேற்ற இரவு பகலாக கடுமையான பயிற்சியும், முயற்சியும் செய்ய வேண்டியிருக்கிறது.

தேர்வில் நான் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமென்றால் என் தூக்கத்தை அதிக நேரம் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சாதாரணமான நமது வாழ்வில் வெற்றிபெற இத்தனை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால், மறுவாழ்வில் நாம் அடையும் பேரின்பத்திற்காக எவ்வளவு விட்டுக் கொடுத்தலையும் தியாகங்களையும் செய்ய வேண்டியதிருக்கும். சாதாரண வாழ்விலேயே நாம் நினைத்ததை உடனடியாக அடைய முடிவதில்லை, அப்படியிருக்க எப்படி நமது மறுவாழ்வில்; நாம் பங்கெடுக்க முடியும். செபித்தால் மட்டும் போதுமா? திருப்பலியில் பங்கெடுத்தால் மட்டும் போதுமா? தெரு ஓரங்களில் நின்று ‘அல்லேலூயா’ என்று கத்தினால் மட்டும் போதுமா? இவையனைத்தும் முதற்படியே! இந்த இறையன்பின் அடித்தளத்தோடு நாம் பிறரன்பில் காலடி எடுத்து வைக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியை திரு அவை இன்றும் நேற்றும் சிந்திக்க அழைப்பதன் நோக்கம், நாம் நாளை தவக்காலத்தில் அடியெடுத்து வைக்கின்றோம் என்பதால்தான். இந்த தவக்காலம் இறையன்பிற்கும் பிறரன்பிற்கும் சான்றளிக்கின்ற காலம். எவ்வாறு இயேசு பற்றற்றவரை மட்டும் பற்றிக் கொண்டாரோ, அதுபோல அவரது சிலுவையின் பாதைகளை சிந்திக்கின்ற நாமும் நம் பற்றுகளான பதவி, பட்டம், பணம், போன்ற அனைத்துப் ‘ப’ற்றுகளையும் நீக்கிவிட்டு அவரைப் பற்றிக் கொள்வோம். (காண்க - பிலி 3:8)
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” - (குறள் - 350)

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

 

1பேதுரு 1: 10 – 16
தூய ஆவியானவர் தரும் அனுபவம்

முற்காலத்து இறைவாக்கினர்கள் பிற்காலத்தில் நடக்கவிருக்கிற மீட்பை, தூய ஆவியின் உடனிருப்பு அவர்களோடு இருந்ததால், முன்கூட்டியே அறிவித்தனர் என்று பேதுரு குறிப்பிடுகிறார். தொடக்கத்திலிருந்தே தூய ஆவியின் வழிநடத்துதல் இருந்திருக்கிறது என்பது தான், அவர் சொல்ல வருகிற செய்தியாக இருக்கிறது. தொடக்கத்திலிருந்து இன்றளவும் தூய ஆவியானவரின் வழிநடத்துதல் நம்மோடு இருப்பது இறைவன் நமக்கு வழங்கியிருக்கிற மிகப்பெரிய கொடையாகும்.

முற்காலத்தில், கடவுள் ஏற்பாடு செய்திருக்கிற மீட்புத்திட்டம் நிறைவேறும் என்பது எல்லாரும் அறிந்ததே. குறிப்பாக, அதனை துணிவோடு அறிவித்த இறைவாக்கினர்கள் அனைவருமே அறிந்திருந்தார்கள். ஆனால், அந்த மீட்பு எப்போது நடைபெறும்? எப்படி நிறைவேறும்? என்பதை, ஒருவரும் அறிந்திருக்கவில்லை. அதற்காக, அந்த காலத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதனை தீர ஆராய்ந்தார்கள். தங்களை அறிவைப் பயன்படுத்தி, அதனைப் புரிந்து கொள்ள முயன்றார்கள். ஆனாலும், அது அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால், இன்று நமக்கு அப்படியில்லை. கடவுள் வழங்கியிருக்கிற மீட்பை வெறுமனே அறிந்திருக்கவில்லை. அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

இயேசு எவ்வாறு தன்னுடைய விலைமதிப்பில்லாத இரத்தத்தை சிந்தி, நம்மையெல்லாம் மீட்டார் என்பதை நாம் அனுபவமாகப் பெற்றிருக்கிறோம். அந்த அனுபவம் நம்முடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய அனுபவமாக இருக்க வேண்டும் என்பதுதான், பேதுருவின் தீராத ஆசையாக இருக்கிறது. அந்த அனுபவத்தைப் பெற்றதனால் தான், அவருடைய வாழ்க்கையும் மாற்றம் பெற்றது. அதேபோல நம்முடைய வாழ்க்கையும் சிறப்பக அமைய நாம் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தற்பெருமை இல்லா அழைத்தல் வாழ்வு

இந்த உலக வாழ்வை வாழ்ந்து முடிக்கின்ற தருவாயில் பெரும்பாலான மனிதர்கள் கேட்கக்கூடிய கேள்வி “எனது வாழ்வின் பொருள் என்ன?” என்பதுதான். இந்த கேள்வி நிச்சயம் அழைக்கப்பட்டவர்களின் வாழ்விலும் எதிரொலிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. கடவுளுக்காக, இந்த உலக இன்பங்களை மறந்து, இந்த உலகம் சார்ந்து வாழாமல், தங்கள் வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்த, இறைவனின் ஊழியர்களுக்கு என்ன தான் கைம்மாறு? என்பது பேதுருவின் கேள்வி. நிச்சயம், இயேசுவைப் பின்தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஆசீர்வாதம். அப்படியிருக்கிறபோது, யாரும் நிச்சயம் கைம்மாறு என்று எதிர்பார்ப்பது இல்லை. இயேசுவின் ஊழியர்களாக இருப்பதே, நிறைவான செயல்தான். இருந்தாலும், மனித கண்ணோட்டத்தில் பேதுருவின் கேள்விக்கு இயேசு அருமையான செய்தியைத்தருகிறார்.

இயேசுவின் ஊழியர்களாக இருக்கிறோம் என்கிற தற்பெருமை, நம்மை தவறான இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடும், என்பது இயேசு நமக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது. பேதுரு இந்த மனநிலையோடு தான் கேட்கிறார். நான் இயேசுவின் சீடன். எனவே, எனக்கென்று இந்த சமூகத்தில் ஒரு கெளரவம் இருக்கிறது. நான் எனது வாழ்வை, மக்களுக்காக அர்ப்பணித்திருக்கிறேன். நிச்சயம் அது பாராட்டப்பட வேண்டியது, என தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக பேதுரு இந்த கேள்வியை எழுப்புகிறார். தற்பெருமை ஒருவனை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும் என்பதால், இயேசு இந்த எச்சரிக்கை செய்தியைத் தருகிறார். கடவுளின் பணியாளர் என்பது நமக்கு அழிவுக்கு அழைத்துச் செல்லும் தற்பெருமையை அல்ல, மாறாக, தாழ்ச்சியை நமக்கு நிறைவாகத் தர வேண்டும்.

கடவுளின் பணிக்காக நான் எனது வாழ்வை கொடுக்கலாம். பொருள் கொடுக்கலாம். பணம் கொடுக்கலாம். நான் கடவுள் பணிக்கு கொடுக்கிறேன் என்கிற தற்பெருமை, நமது தியாகத்தை உருக்குலைத்து விடும். கடவுளுக்காக, கடவுளின் பணிக்கா நம்மையே நாம் தியாகம் செய்கிறபோது, தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு நம்மை ஒப்படைப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

இயேசுவின் வாக்குறுதி

இதற்கு முந்தைய பகுதியான செல்வந்தனின் மனவருத்தத்தைக்கேட்ட பேதுருவுக்கு, அவருடைய நிலை பற்றிய கேள்வி எழுந்தது. ”என்னைப்பின்செல்” என்ற இயேசுவின் அழைப்பை, இளைஞன் மறுத்துச்சென்றான். அவனுடைய மறுப்பைக்கேட்ட இயேசு ”செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது கடினம்” என்று கடுமையாகச் சொல்கிறார். இயேசுவின் வார்த்தைகளைக்கேட்ட பேதுருவுக்கு, இயேசுவின் அழைப்பை ஏற்று, அவரைப்பின்தொடர்ந்த தங்களின் நிலை பற்றிய கேள்வி எழுந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இயேசுவைப்பின்தொடர்ந்தவர்கள் நூறு மடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதாகளையும் பெறாமல் போகார், என்கிற வார்த்தைகள் தொடக்ககாலத் திருச்சபையில் உண்மையிலேயே நடந்தது. ஏனென்றால், இயேசுவைப்பின்தொடர்ந்ததால், அவர்களுடைய குடும்பத்தில் அவர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டார்கள். ஆனால், கிறிஸ்தவர்களின் குழுமத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்தது. இயேசுவை ஏற்றுக்கொண்ட ஆயிரமாயிரம் கிறிஸ்தவர்களின் அன்பும், பரிவும், அரவணைப்பும் அவர்களுக்கு கிடைத்தது. தங்களது தாயின் அரவணைப்பும், தந்தையின் பாசமும் கிடைக்காமல் இருந்தாலும், ஏராளமான தந்தையர்களின், தாய்மார்களின் அன்பு கிடைத்தது. அதைத்தான் இங்கே இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

இன்றைய காலச்சூழ்நிலையில் நாம் உண்மை பேசுவதால், இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழ்வதால், நமது நெருங்கிய உறவினர்களின் வெறுப்பையும், கோபத்தையும் நாம் சந்திக்க நேரிடும். அது நமக்கு பெரிய இழப்பாகத் தோன்றினாலும், அதைவிட அதிகமான பாசத்தை, பல மக்கள் வழியாக இறைவன் நமக்கு வழங்குவார் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
    -------------------------------------------------------------

உறவில் மகிழ்வோம்

தொடக்க கால கிறிஸ்தவ வரலாற்றில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு பலவிதமான துன்பங்களும் நெருக்கடிகளும் நேர்ந்தது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் உறவுகளை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதன் பொருட்டு இழக்க நேர்ந்தது. இதை முன்னிலைப்படுத்தி தான் பேதுரு ஆண்டவரிடம் இப்படியொரு வினாவை எழுப்புகிறார். இயேசுவுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு பின்பற்றிய எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்பதுதான் பேதுரு இயேசுவிடம் மறைமுகமாக எழுப்புகிற கேள்வி. இயேசு அவருக்குத் தருகிற பதில்: இம்மையி;ல் நூறு மடங்கும், மறுஉலகில் நிலைவாழ்வும் என்பது. அதாவது, தொடக்க கால கிறிஸ்தவர்கள் இயேசுவுக்காக தங்கள் குடும்ப உறவுகளை இழந்தாலும் கூட, திருச்சபை என்கிற மிகப்பெரிய குடும்பத்தின் அங்கத்தினராக, கடவுளை தந்தையென்று ஏற்றுக்கொண்டு ஒருவர் மற்றவருக்கு சகோதர, சகோதரிகளாக மாறும் மிகப்பெரிய, மிகவும் உன்னதமான உறவைப்பெற்றனர். இதுதான் இந்த உலகில் நூறுமடங்கு வீடுகளையும், சகோதரர்களையும், நிலபுலன்களையும் பெற்றுக்கொள்வீர்கள் என்று இயேசு சொல்வதன் பொருள்.

திருத்தூதர் பணி 2: 44 – 46 ல் பார்க்கிறோம்: “நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்……”. ஆக, கிறிஸ்துவின் பொருட்டு உறவுகளை இழந்தவர்களுக்கு புதிய உறவுகளை கடவுள் கொடுக்கிறார். அந்த உறவுகள் ஏற்கெனவே இருந்த குறுகிய வட்டத்து உறவுகள் அல்ல: வெளியே சிரித்துக்கொண்டு உள்ளே பொறாமைப்படுகிற போலியான உறவுகள் அல்ல. மாறாக, தாராள உள்ளத்தோடு, திறந்த உள்ளத்தோடு கடவுளை தந்தையென்றும், ஒவ்வொருவரிலும் கடவுளின் சாயலையும் காணும் உறவுகள். இயேசுவின் பொருட்டு அனைத்தையும் இழக்கவும், எதனையும் தாங்குவதற்கும் தயாராக இருக்கும் உறவுகள். இருப்பதை மற்றவரோடு பகிர்ந்து வாழும் உறவுகள். அப்படிப்பட்ட உறவுகளாக மாறுகிறவர்கள் நிலைவாழ்வைப்பெற்றுக்கொள்வார்கள் என்பது இயேசுவின் வாக்குறுதி.

கடவுளை தந்தை என்று அழைக்கின்ற நம்மிடையே சாதி, மத, இன உணர்வால் பிரிவினைகள் இருந்தால், நாம் வெறும் உதட்டளவில்தான் கடவுளை தந்தை என்று அழைப்பதாக அர்த்தம். நம்முடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து கடவுளை ‘தந்தை’ என அழைப்போம். மற்றவர்களை நம் சகோதர, சகோதரிகளாக ஏற்றுக்கொள்ளும் பரந்த உள்ளத்தை இறைவனிடம் மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

-------------------------------------------

கடைசியானோர் முதன்மை ஆவர்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இழப்பு என்பதற்கு நம் கிறிஸ்தவம் புதிய ஒரு பொருள் கொடுப்பதைக் காண்கிறோம். பொதுவாக, விட்டுவிடுதல், இழத்தல் என்பது நம்மில் ஒரு வெற்றிடம் ஏற்படுத்துவதாக பொருள் கொள்கிறோம். ஆனால் கிறிஸ்துவின் போதனையின்படி, இவை உணர்த்துவதெல்லாம் முற்றிலும் வித்தியாசமானவை. இழத்தல் அல்லது விட்டுவிடுதல் நமக்கு மேலும் பல வேறுபட்ட செல்வத்தைக் கொண்டுவரும் என்ற கருத்தைப் பல இடங்களில் அறிய வருகிறோம்.

விட்டுக்கொடுத்தவர் எவரும் கெட்டதும் இல்லை; கெட்டவர் எவரும் விட்டுக் கொடுத்ததும் இல்லை. விட்டு விட்ட எவரும் "நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்" என்பது கிறிஸ்தவம் தரும் செய்தி. " கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.( யோவா12 :24 )

எனவே நண்பர்களே, கிறிஸ்துவின் பணிக்காக அல்லது அவரின் சாயலாகப் படைக்கப்பட்ட அவரைச் சார்ந்து வாழும் மனிதனுக்காக நீங்கள் செய்யும் தான தர்மங்களால் நீங்கள் இழக்கும் அனைத்திற்கும் பல் வேறு விதங்களில் பல நன்மைகளை இவ்வுலகிலும் மறு உலகிலும் பெறுவீர்கள். எதையும் இழந்து போவதில்லை.பேதுருவின் சந்தேகத்திற்கு இயேசு இந்த விளக்கத்தைக் கொடுத்ததன் மூலம் கிறிஸ்தவத்தின் இத் தனித்தன்மையை உறுதிசெய்கிறார். எனவே நாம் இழப்போம், கொடுப்போம், விட்டு விடுவோம். நமக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். இவ்வாறு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லீயோன்