முதல் வாசகம்

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-25

அன்புக்குரியவர்களே, உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும். உலகம் தோன்றும் முன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார். உண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா தூய்மை அடைந்துள்ளதால் நீங்கள் வெளிவேடமற்ற முறையில் சகோதர அன்பு காட்ட முடியும். எனவே நீங்கள், தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். நீங்கள் அழியக்கூடிய வித்தினால் அல்ல; மாறாக, உயிருள்ளதும், நிலைத்திருப்பதுமான, அழியா வித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள். ஏனெனில், ``மானிடர் அனைவரும் புல்லைப் போன்றவர்; அவர்களது மேன்மை வயல்வெளிப் பூவைப் போன்றது; புல் உலர்ந்துபோம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.'' இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 147: 12-13. 14-15. 19-20
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். -பல்லவி

14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. -பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

மாற்கு 10:32-45

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 32-45

அக்காலத்தில் சீடர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழ இருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார். அவர், ``இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; அவர்கள் ஏளனம் செய்து, அவர்மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்'' என்று அவர்களிடம் கூறினார். செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், ``போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்'' என்றார்கள். அவர் அவர்களிடம், ``நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, ``நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்'' என்று வேண்டினர். இயேசுவோ அவர்களிடம், ``நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ``இயலும்'' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ``நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப் புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்'' என்று கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ``பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்'' என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------


1பேதுரு 1: 18 – 25
தூய்மையான உள்ளம்

ஓர் ஆன்மாவின் மீட்பு என்பது விலைமதிக்க முடியாதது. அதனை இந்த உலகத்தின் வெள்ளி, தங்கத்தைக் கொண்டு மீட்க முடியாது. இந்த உலகம் முழுவதையும் கொடுத்தாலும் ஒருவன், அதனை வைத்து தன்னுடைய ஆன்மாவையோ, அல்லது அடுத்தவருடைய ஆன்மாவையோ மீட்க முடியாது. ஏனென்றால், ஆன்மா அழிவில்லாதது. முடிவில்லாதது. அழியக்கூடிய செல்வத்தைக் கொண்டு, நாம் அழிவில்லாத ஆன்மாவை மீட்க முடியாது. மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்று, பேதுரு குறிப்பிடுவது அவர்களது நடத்தை சார்ந்த பொருளில் அல்ல. மாறாக, பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளிலிருந்து கொடுக்கிறார்.

மோசே அவர்களுக்கு கடவுளின் சட்டங்களைக் கொடுத்தார். அந்த சட்டங்களை அவர்கள் விளக்கங்கள் கொடுத்து, தங்களுக்கு ஏற்புடையதாக்கி, அதனுடைய உண்மையான கருத்தை மறக்கச்செய்து, தங்களுக்கு ஏற்புடையதாக்கிக் கொண்டார்கள். கடவுளுக்கு விரோதமான காரியங்களைச் செய்தார்கள். அதுதான் இங்கு பாவமாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், அந்த பாவத்தை இயேசு தூய்மையான உள்ளத்தினால் அழித்தொழித்து நமக்கு புது வாழ்வு தந்திருக்கிறார். அந்த தூய்மையான வாழ்விற்கு பல உதாரணங்களை நாம் இயேசுவின் வாழ்க்கையில் பார்க்கலாம். குறிப்பாக, சிலுவையில் உயிர்விடுகிற தருணத்திலும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை மனதார மன்னிக்கிறார். இது இயேசுவின் தூய்மையான உள்ளத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

அத்தகைய தூய்மையான உள்ளம் நமதாக வேண்டும். அத்தகைய தூய்மையான உள்ளத்தோடு நாம் மற்றவர்களுக்கு அன்பு காட்ட வேண்டும். அவர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து கொள்ள நாம் வழிகாட்டிகளாய் அமைய வேண்டும். அந்த உன்னதமான பணியை நாம் அனைவரும் சிறப்பாக செய்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

இறைவனின் வழிகாட்டுதல்

மனித வாழ்க்கையில் பயம் என்பது வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது. தவறான ஒரு செயலில் ஈடுபடுகிறோம் என்றால், நம்மை அறியாமல் நமக்குள்ளாக ஒருவிதமான பயம் வரும். சரியான ஒன்றை, எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாம் துணிந்து செய்கிறபோதும், நமக்குள்ளாக பயம் வரும். ஆனால், இந்த இரண்டு பயத்திற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. தவறான செயலுக்காக நாம் பயப்படுகிறபோது, நம்முடைய ஆன்மாவிற்கு அது மிகப்பெரிய இடறலாக மாறுகிறது. சரியான செயலை எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்கிறபோது, நமக்குள்ளாக நமது ஆன்மா நம்மை அந்த பயத்திலும் ஈடுபட வைக்கக்கூடிய மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது.

இன்றைய நற்செய்தியில் சீடர்களுக்குள்ளாக ஒருவிதமான பயம், கலக்கம். இதுவரை வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் இயேசுவுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. அதிகாரவர்க்கத்தினர் இயேசுவை எதிரியாக நினைத்திருந்தாலும், மக்கள் அவரை மெசியாவாக பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். எனவே, அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம், சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு இருந்தது. இப்படி வாழ்க்கை மிக நன்றாக சென்று கொண்டிருக்கிறபோது, இயேசு தன்னுடைய முடிவைப்பற்றியும், அது நெருங்கிவிட்டது என்று, எருசலேமுக்கு போகிறவழியில் சொல்வது, நிச்சயம் அவர்களுக்குள்ளாக கலக்கத்தையும், கலகத்தையும் ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இயேசு நல்லவர். மக்களுக்கு வாழ்வு தரக்கூடியவர். அவரோடு நாம் எதற்கும் நிற்போம், என்று நிச்சயம் சீடர்களின் ஆன்மா, அந்த பயத்தின் நடுவில், கலக்கத்தின் மத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

நமது வாழ்வில் உண்மைக்கு துணைநிற்பதற்கு நாம் ஒதுங்கியிருக்க தேவையில்லை. நம்மால் இந்த தீமையை எப்படி எதிர்க்க முடியும் என்று ஓடி ஒளிய தேவையில்லை. இறைவன் நம்மை இயக்குவார். இறைவன் நம்மை வழிநடத்துவார். அந்த நம்பிக்கை சீடர்களுக்கு இருந்தது. அதே நம்பிக்கையை நாமும் வளர்த்துக் கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

இயேசுவின் கடைசிப்பயணம்

இயேசு தனது கடைசிப்பயணத்தை மேற்கொள்வதற்காக, யெருசலேமை நோக்கி தனது சீடர்களுடன் சென்று கொண்டிருக்கிறார். தனது கடைசிப்பயணம் இதுதான் என்பது, இயேசுவுக்குத் தெளிவாகத்தெரிகிறது. ஏனென்றால், இயேசு இந்த பயணத்தை பலமுறை தவிர்த்திருக்கிறார். சிலசமங்களில் வடக்கிற்கும், செசரியா, பிலிப்பு பகுதிக்கும், கலிலேயாவிற்குமாகச்சென்று .கலிலேயப்பயணத்தைத் தவிர்த்த இயேசு, இப்போது, யெருசலேம் செல்வதற்கு ஆயத்தமாகிறார். தனது கடைசி பயணத்திற்கு தயாராக இருப்பதை, அவரது பேச்சின் உறுதி நமக்கு அறிவுறுத்துகிறது.

இயேசு தனது சீடர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருப்பதாக நற்செய்தியாளர் எழுதுகிறார். எதற்காக அவர் சீடர்களோடு செல்லவில்லை. சீடர்களுக்கு முன்னால் தனிமையாக ஏன் செல்கிறார்? சீடர்களும் அவரிடத்தில் கேள்வி கேட்கவோ, நெருங்கவோ தயங்குகிறார்கள். இயேசுவின் தனிமைக்குக் காரணம், அவர் தனது பாடுகளை ஏற்றுக்கொண்டதற்காக அடையாளம். தனது பாடுகளை எண்ணிப்பார்ப்பதற்கான தருணம். சிலசமயங்களில் நமக்கு தனிமை தேவை. நம்மை உறுதிப்படுத்திக்கொள்ள, வரக்கூடிய துன்பங்களை ஏற்றுக்கொள்ள தனிமை தேவை. ஒருவேளை, சீடர்களின் உடனிருப்பு, இயேசுவின் கடைசிப்பயணத்திற்கு தடைக்கல்லாக இருந்திருக்கலாம். எனவேதான், தனது எண்ணத்தில் உறுதிப்பட இயேசு சீடர்களுக்கு முன்னால், தனிமையாகச் செல்கிறார்.

நமது வாழ்வில் சிலசமயங்களில் தனிமையும் இருக்க வேண்டும். நமது வாழ்வைப்பற்றிச் சிந்திப்பதற்கு, நமது செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு, நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோமா? என்று யோசித்துப்பார்ப்பதற்கு தனிமை தேவை. அந்த தனிமை, நம்மை இறைவன் அருகில் கொண்டுவரட்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
    -------------------------------------------------------------

இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

வாய்சொல் வீரர் நிறைய உண்டு. வாய்ப் பந்தல் போடுவோருக்கு இன்று குறையே இல்லை. கடினமான பாதையை கைகாட்டிவிட்டு நடையைக் கட்டுகிறவர்கள் உண்டு. எருசலேம் நோக்கிய பயணம் பாடுகள், துன்பங்கள் நிறைந்தது. அவமானம், சிலுவை மரணத்தில் முடிவது. பிறர் வாழ்வுக்காக தன்னை இழப்பது.இந்த வாழ்கையை கையை காட்டிவிட்டு மாற்றுப் பாதையில் இயேசு செல்லவில்லை.

" இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார்" (மாற் 10:32) கரடு முரடான காட்டுவழியில் அவர் நமக்கு முன் நடந்து தடம் அமைத்து தந்துள்ளார். பூகம்பம் நிறைந்த வாழ்வில் புதிய புரட்சிப் பாதை அமைப்பதில் இயேசு நமக்கு முன் நடந்து புதிய பாதை அமைத்துள்ளார். நம் வாழ்வின் துன்பப் பயணத்தில் நமக்கு முன் நடந்துகொண்டிருக்கிறார்.உன் வாழ்வின் இருள் சூழ்ந்த நேரங்களில், பகுதிகளில் உனக்கு முன் உன் தெய்வம் இயேசு அங்கு வந்து உன் வாழ்வின் இருளை அகற்றி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். இதுவே உன் தெய்வம் இயேசு.

உங்கள் வாழ்வின் துன்பமும் கவலையும் இருளும் சூழ்ந்த இடங்களில் எல்லாம் இயேசு உங்களுக்கு முன் சென்று அனைத்தையும் நிவர்த்தி செய்து, மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த உயிர்ப்பின் அனுபவமாக மாற்றித்தருவதை உங்களால் நம்ப முடிகிறதா! இதுவே உண்மை. சீடர்கள் திகைப்புற்றனர். ஏனையோர் அச்சம் கொண்டனர். நீங்கள் நம்புங்கள். நல்லவை நடக்கும். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லீயோன்