முதல் வாசகம்

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-15ய,17-18

அன்புக்குரியவர்களே, கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும். புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள். நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு எனக் கருதுங்கள். அன்பார்ந்தவர்களே, நீங்கள் இவற்றையெல்லாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, உங்கள் உறுதி நிலையினின்று விழுந்துவிடாதபடி கவனமாயிருங்கள். நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள். அவருக்கே இன்றும் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்

திபா 90: 2. 3-4. 10. 14,16

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

2 மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்கும் முன்பே,
ஊழி, ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! பல்லவி

3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்.
4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி

10 எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது;
அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன,
நாங்களும் பறந்து விடுகின்றோம். பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக. அல்லேலூயா.

மாற்கு 12:13-17

ஆண்டின் பொதுக்காலம் 9ஆம் வாரம்
செவ்வாய் கிழமை

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-17

அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, ``போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தட்டுமா, வேண்டாமா?'' என்று கேட்டார்கள். அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு, ``ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டு வாருங்கள். நான் பார்க்க வேண்டும்'' என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களிடம், ``இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ``சீசருடையவை'' என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

-------------------------

ஏமாற்றி சுரண்டாதே!

மாற்கு 12: 13-17

இங்கே விவரிக்கப்பட்டுள்ள முழு நிகழ்வும் இயேசுவுக்கு வைக்கப்பட்ட ஒரு பொறியைப் பிரதிபலிக்கிறது. உரோமை வரிவிதிப்பை இயேசு உறுதிப்படுத்தினால், அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை புண்படுத்துவார். அவர் அதை நிராகரித்தால், அவர் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும். பொறிக்கு இயேசுவின் பதில், உருவம் மற்றும் உரிமையின் கருத்துகளைச் சுற்றி வருகிறது. பொதுவான தெனாரிய நாணயத்தை (அடிப்படையில், ஒரு நாள் ஊதியம்) ஆராய்ந்து, நாணயத்தில் யாருடைய "படம்" உள்ளது என்று இயேசு கேட்கிறார். நாணயங்களில் பேரரசரின் உருவம் உள்ளது என்று சொல்ல, இயேசுவோ அப்படியெனில் பேரரசருக்கு அவருடைய பணத்தினை கொடுங்கள் என்றும் மனிதர்கள் கடவுளின் உருவத்தை தாங்குவதால் (தொட.நூல் 1:26-27, கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்ட மனிதர்கள்), நீங்கள் உங்கள் வாழ்க்கையையே கடவுளுக்கு கொடுங்கள் என்றும் அழுத்தமாக பதிவு செய்கிறார்.

அரசரை விட இறைவனுக்கு மனிதர்கள் மீது அதிக உரிமைகள் இருப்பதை இயேசு சுட்டிகாட்டுகிறார். அதே நேரத்தில் இயேசு வரி விதிப்புக்கு சாதகமான பதில்களையும் சொல்ல வில்லை. பணம் கடவுளுக்கு சொந்தமானது என்பதையும் அவர் மறுக்கவில்லை. பணம் சீசருக்கு சொந்தமானது என்றால், அது இன்னும் அதிகமாக கடவுளுக்கு சொந்தமானது, ஏனென்றால் சீசர் கடவுளின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறார் (உரோ 13:1-17; 1 பேதுரு 2:13-14). இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் வேலையில் நிச்சயமாக மற்றவர்களைப் பற்றியும் கவலைபடுவார்கள். அப்படி மக்களை பற்றி கவலைபட வில்லையெனில், அவன் அரசனாக இருந்தாலும் இறைவழியில் நடக்கவில்லை என்பதே உண்மை. நம்மால் கட்டுப்படுத்தக் கூடிய வேலையில் மற்றவர்களை ஏமாற்றுவதை நாம் கட்டுப்படுத்தலாம் (மாற்கு 10:18), எனவே அதைச் செய்யாதீர்கள். நீங்கள் வரி செலுத்த வேண்டுமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது (மாற்கு 12:17), எனவே அவற்றை செலுத்துங்கள் என்பதுதான் இயேசுவின் கோரிக்கையாக இருந்திருக்க முடியும்.

ஒரு வேளை நாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்றால், மக்களை சுரண்டகூடிய வரிகளை விலக்கி விடலாம். இல்லையென்றால், நாம் வாழக்கூடிய பகுதிகளில், தொழில் செய்யும் முறைகளில் சாதரண மக்களை ஏமாற்றாமல், சுரண்டாமல் வாழ வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாக இருக்கிறது.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ.

........................................................................

மாற்கு 12: 13 - 17
வரி – வாழ்வா? சாவா?

நம்முடைய சமுதாயம் வரி நிறைந்த சமுதாயமாக மாறிவருகிறது. மக்களின் அன்றாட பொருட்களிலிருந்து அதிகமாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் வரை வரி என்ற போர்வையினால் மூடப்பட்டிருப்பதை நாம் உணர்கிறோம். கடந்த ஒரு சில நாட்களாகவே மிகவும் அதிகமாக வைரலாகி வரும் செய்தி மது பாட்டில்கள் மீது அதிக வரி வசூலிப்பது. அது போல மக்களின் அன்றாட தேவையாகிய பால் மீது அதிக வரி வசூலிப்பது. இவ்வாறு நம்முடைய சமுதாயம் வரி நிறைந்த சமுதாயமாகவே மாறி வருகிறது.

யூத மக்களின் அன்றாட வாழ்வை அதிகமாக பாதித்தது அன்றைய உரோமை அரசு மக்கள் மீது திணித்த வரிகள். தாங்கள் உரோமை அரசின் குடிமக்கள் என்பதைக் காட்டவே அவர்கள் வரிகள் செலுத்த வேண்டியிருந்தது. உரோமைப் பேரரசின் சீசரின் பெயரும் உருவமும் பதித்த ஒரு வெள்ளிக்காசு தங்கள் அடிமைத்தனத்தின் அடையாள வரியாக செலுத்தப்பட்டது. இத்தகைய ஒரு வரி விதிக்கப்பட்ட போது தான் ‘செலாத்தியர்’ எனப்பட்ட தீவிரவாதிகள் உரோமை அரசை எதிர்த்து கலவரம் செய்து, பிறகு அழிக்கப்பட்டனர் என்கிற வரலாறு உண்டு என்று விவிலிய ஆசிரியர்களின் கருதுகிறார்கள். எதற்காக இயேசுவின் பதில் மாறுபட்டதாக இருந்தது என்று பார்க்கின்ற போது உரோமை அரசை அவர்கள் ஏற்றதால் தான் சீசரின் உருவம் பதித்த காசையும் ஏற்றுக் கொண்டதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். அதாவது யூத மரபிலே உருவத்தைப் பொறித்து அதை ஏற்றுக்கொள்வதும் வணக்கம் செலுத்துவதும் ஒரு பாவம். கடவுள் வழங்கிய பத்துக் கட்டளைகளில் முதல் கட்டளைப்படி யூதர்கள் தங்கள் நீண்ட கால மரபுக்கு எதிராக செய்த ஒரு பாவத்தை சுட்டிக் காட்டி இயேசு தம் எதிரிகளை நிலைகுலைய வைக்கிறார். இயேசுவை சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்கிற கேள்விக்கு அவர் தரும் பதில் அவர்களையே ஒரு சிக்கலில் மாட்டி விட்டது.

அநியாய வரிகளை தட்டிக் கேட்கிறேனா? வரி பற்றிய என்னுடைய பார்வை எவ்வாறு இருக்கிறது? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=======================

கடவுளுக்கான காணிக்கையை செலுத்தி விட்டீர்களா?

மாற்கு12:13-17

நம் வாழ்க்கையை திறனாய்வு செய்து பார்க்கின்ற போது ஒரு உண்மை புலனாகிறது. அந்த உண்மை என்னவெனில் கடவுள் நமக்கு கொடுப்பதில் கணக்குப் பார்ப்பதில்லை. எப்படி இருந்த நான் இப்படி இருக்கிறேன்? இந்த கேள்வியை கேட்டுப் பார்த்தீர்களா? நம்முடைய உடல் ஆரோக்கியம், பொருளாதாரம், கல்வி மற்றும் வாழ்கைத்தரம் இவைகளில் எவ்வளவோ வளர்ந்திருக்கிறோம். இன்னும் கடவுள் நம்மை விசேசமாய் உயர்த்தப் போகிறார் என்பதை எல்லாம் நினைக்கும் போது என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகிறது என்று பாடிய அன்னை மரியாளோடு சேர்ந்து பாடத் தோன்றுகிறது.

இத்தனையையும் இனிதே இன்முகத்தோடு குறித்த நேரத்தில் அருவியாய் பொழியும் ஆண்டவருக்கு நான் கொடுப்பது என்ன? என்ற கேள்வியைக் கேட்க சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடவுளுக்கு உரியதை கடவுளுக்கு கொடுங்கள் என்கிறார். ஒரு சிலருக்கு கடவுளுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது.

இதோ உங்களுக்கான இரண்டு பதில்கள்:1) நம்மிடம் கொடுக்கும் உள்ளம் இருக்கிறதா என கடவுள் தேடி பார்ப்பார். அத்தனையும் அளக்காமல் அனைத்து நேரங்களிலும் கொடுத்தேனே? இவர்களிடம் கொடுக்கும் உள்ளம் இருக்கிறதா என கடவுள் பார்க்கிறார். முதலில் தனக்கு கொடுப்பதில் எப்படி இருக்கிறார்கள் என்றும் கடவுள் பார்க்கத் தவறுவதில்லை.

2) திருச்சபையில் ஆண்டவருக்கான பணிகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமெனில் நாம் கொடுப்பது மிக மிக அவசியம். திருச்சபையின் பணிகளுக்கு கொடுக்க வேண்டியது யார்? ஒவ்வொரு கத்தோலிக்க கிறிஸ்தவனும் கிறிஸ்தவளும். நாம் கொடுக்காமல் யார் கொடுப்பது?

ஆகவே ஆண்டவரில் அன்பார்ந்தவர்களே! இந்த இரண்டும் உங்களுக்கு தெளிவாய் விளங்கி விட்டதா? கடவுளுக்கு காணிக்கைள் கொடுக்க ஒருபோதும் உங்கள் மனதை சுருக்கிக்கொள்ள வேண்டும். மனதை விரியுங்கள். கடவுளின் விரிந்த ஆசீர்வாதத்திற்குள் உங்கள் குடும்பங்களை கொண்டு வாருங்கள்.

மனதில் கேட்க..

1) ஞாயிற்றுக்கிழமை காணிக்கை போடும் பழக்கம் என் குடும்பத்திற்கு உண்டா?

2) நன்கொடைகள் கடவுளுக்காக கொடுக்கும் போது மனம் சுருங்குகிறதா? அல்லது விரிந்து கொடுக்கிறதா?

மனதில் பதிக்க…

ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்(திபா105:5)

- அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
============================

2பேதுரு 3: 12 – 15, 17 – 18
இயேசு விரும்பும் மாற்றம்

மனுமகன் எப்போது மீண்டும் வருவார் என்பது தந்தைக்கு மட்டுமே தெரியும் என்பது இயேசுவின் போதனை. ஆனால், பேதுரு தன்னுடைய போதனையில், ”கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும்” என்று சொல்கிறார். இது முரண்பாடானது இல்லையா? நாம் எப்படி அவருடைய வருகையை விரைவுபடுத்த முடியும்? இதனை நாம் எப்படி புரிந்து கொள்வது?

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, பல்வேறு பணிகளை நாம் செய்வதற்காக விட்டுச் சென்றிருக்கிறார். குறிப்பாக, உலகெங்கிலும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்கிற மிகப்பெரிய கட்டளையை அவர் நம் அனைவருக்கும் தந்திருக்கிறார். நமக்காக கடவுள்தன்மையிலிருந்து இறங்கி, மனிதராகப் பிறந்து பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை, அனைவரும் அறிந்து கொள்வதற்கு நாம் உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதனைத்தான் பவுலடியாரும் தன்னுடைய வாழ்க்கையில் செய்துவந்தார். கடவுள் நமக்காக கொடுத்திருக்கிற, ஒப்படைத்திருக்கிற இந்த பணிகளைச் செய்கிறபோது, இயல்பாகவே இறைவனின் வருகை விரைவில் நிகழும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பு. இறைவனின் வருகை, நாம் எந்த அளவுக்கு கடவுளின் கருவிகளாய் இருந்து, நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணிகளை விரைவாகச் செய்கிறோமோ, அந்த அளவுக்கு விரைவாக கடவுளின் மறுவருகை அமையும் என்று, பேதுரு தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

இந்த சமுதாயம் மாற வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். ஆனால், யாரோ மாற்றுவார்கள் அல்லது யாரோ மாற்றட்டும் என்று, அந்த மாற்றத்தை வரவழைப்பதற்கு, நம்முடைய பங்களிப்பைச் செய்வதற்கு நாம் முன்வருவது கிடையாது. மாற்றம் என்பது நம்மிலிருநந்து உருவாக வேண்டும் என்பார் காந்தியடிகள். இந்த சமுதாயம் மாறுவதற்கு நாம் உறுதுணையாக இருப்போம். இந்த சமுதாயத்தை மாற்றுவதில், நம்முடைய பங்களிப்பை நாம் அர்ப்பண உணர்வோடு வெளிப்படுத்துவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

இயேசுவின் பற்றற்ற தன்மை

உரோமையர்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்திருந்தனர். தங்களது அதிகாரத்தை அமைதியோடு ஏற்றுக்கொண்டவர்கள் ஒரு பிரிவு. இவர்களைப்பொறுத்தவரையில் எந்த பிரச்சனையும் இல்லை. தங்களது அதிகாரத்தை ஏற்றுக்கொண்டாலும், எந்த நேரத்திலும் அதிகாரத்திற்கு எதிராக போராட்டம் செய்துகொண்டிருக்கக்கூடியவர்கள் மற்றொருபிரிவினர். பாலஸ்தீனத்தின் தென்பகுதி, இரண்டாவது பிரிவில் இருந்தது. அங்கிருந்தவர்கள் உரோமையர்களின் அரசுக்கெதிராக போராட்டம் செய்து கொண்டிருந்தனர். சைரேனியஸ் ஆளுநராகப்பொறுப்பேற்றவுடன் அவர் இட்ட முதல் ஆணை மக்கள்தொகை கணக்கெடுப்பு. ஏனென்றால், மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம், சரியான வரிவிதிப்பையும், சிறந்த நிர்வாகத்தையும் தரமுடியும் என்பது அவரது நம்பிக்கை.

உரோமையர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட மக்கள், தங்கள் மீதான வரிவிதிப்பை வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொண்டனர். ஆனால், அவர்களில் யூதா என்கிறவர், உரோமையர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். மக்களை ஒரே சக்தியாக உருமாற்றினார். அமைதியாக இருந்த மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அவர்களை உரோமை அரசுக்கெதிராக கொதித்தெழுவதற்கு, அவர் பயன்படுத்திய ஆயுதம்: ”யூதர்களுக்கு கடவுள் மட்டும்தான் அரசர் என்ற தாரக மந்திரம்”.உரோமையர்களுக்கு வரி செலுத்துவதன் மூலமாக, கடவுளை நாம் புறந்தள்ளுகிறோம், என்ற அவரது விளக்கம் யூதர்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மக்கள் அனைவரும், உரோமையர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். யூதா கொல்லப்பட்டாலும், அவர் விதைத்த புரட்சியை உரோமையர்களால் அடக்கமுடியவில்லை. இந்த சூழ்நிலையில்தான், இந்த வாக்குவாதம் எழுகிறது.

இயேசு ஒரு நாணயத்தை தன்னிடம் கொண்டுவருமாறு அங்கிருந்தவர்களைப்பணிக்கிறார். இதிலிருந்து, இயேசுவிடம் ஒரு நாணயம் கூட இல்லை என்பது தெளிவாகிறது. இயேசு பணத்தின் மீது பற்றற்றவராக இருந்தார். கடவுளின் மகனாக இருந்தபோதிலும், தனது பணிதான், அவருடைய பெரும் செல்வமாக இருந்தது. நாமும், இயேசுவைப்போல பற்றற்றவர்களாக வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

சிக்க வைக்கும் புகழ்ச்சி!

பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, "போதகரே, நீர் உண்மையுள்ளவர். ஆள் பார்த்து செயல்படாதவர். எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று சொல்லி, வரி செலுத்துவது முறையா, இல்லையா என்று கேட்டனர்.

இந்த நிகழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் எளிய பாடங்கள்:
1. புகழ்ச்சியிலும் சிக்கல் இருக்கிறது. பாராட்டுவதற்குப் புகழ்கிறவர்களும் இருக்கிறார்கள், சிக்க வைப்பதற்காகப் புகழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.

2. போலியான புகழ்ச்சியில் மயங்கிவிடக்கூடாது. இயேசு பொய்யான புகழ்ச்சியைப் புரிந்துகொண்டார். "அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு" என்று எழுதியுள்ளார் மாற்கு. எனவேதான், "ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்.

3. உள்நோக்கமின்றிப் பிறரைப் புகழவேண்டும். நமது பாராட்டுகள் நேர்மையானதாக அமையட்டும்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் பாராட்டுரைகள் உறவை வளர்ககும் வகையில் அமைய அருள்தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

இணையதள உறவுகளே

ஒரு லட்ஷம் கோடி மக்கள் பணம், அரசுப் பணியாளர்களால் தவறாக கையாளப்பட்டு மக்களின் வரிச்சுமை அதிமாக்கப்படுகிறது. இப்படிப்பட்ட அரசுப் பணியாளர்கள் இருக்கும்போது இந்த நியாமான கேள்வி எழுவது இயற்கைதான். சீசருக்கு (அரசுக்கு) வரி செலுத்துவது முறையா? இல்லையா? ஆள்வோரும் அரசுப்பணியாளரும் அமைச்சர்களும் லஞ்சம் ஊழல், கையாடல் செய்யும்போது, மக்கள் வரிப்பணம் தவறாக சுயநலத்திற்குப் பயன்படுத்தப்படும்போது திரும்பத் திரும்ப பல விதங்களில் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது.

தவறு செய்தவர்கள் முறையாக முழுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இயேசுவுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் ஒரு தவறு மற்றொரு தவறுக்கு சட்டச்சலுகை வழங்க முடியாது. ஒரு தவறு இன்னொறு தவறைச் செய்வதற்கு நியாயமாகாது. ஆகவே அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை வழங்க வேண்டியது எல்லோருடைய கடமை. உரோமையர்களின் ஆட்சியை யூதர்கள் விரும்பவில்லை. ஆனாலும் இயேசு வரி கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.வரியைக் கொடுப்போம். தவறு செய்தோருக்கு தண்டனையும் வழங்குவோம்

-ஜோசப் லீயோன்

-------------------------

 

''இயேசு ஏரோதியரை நோக்கி, 'சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும்
கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்' என்றார்'' (மாற்கு 12:17)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா என்னும் கேள்வியை இயேசுவிடம் கேட்டவர்கள் அவரைப் ''பேச்சில் சிக்கவைக்க'' முயன்றனர். அவர்களுடைய உள்ளத்தில் நேர்மை இல்லை. ஆனால் இயேசு அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொள்கிறார். அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலும் அளிக்கிறார். ''சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுப்பதே முறை'' என்று இயேசு கூறியதைப் புரிந்துகொள்வதில் ஒரு சிக்கல் உள்ளது. சிலர் ''சீசர்'' என்றால் இவ்வுலக ஆட்சியாளர்களையும் நாட்டுத் தலைவர்களையும் குறிக்கும் என்று பொருள்கொண்டு, இவ்வுலகு சார்ந்த காரியங்களுக்கும் கடவுள் சார்ந்த காரியங்களுக்கும் இடையே உறவு கிடையாது என்றும், அவற்றிற்கிடையே நிலவுகின்ற வேறுபாட்டை நாம் போக்க இயலாது என்றும் முடிவுசெய்கின்றனர். இவர்கள் உலகு சார்ந்த காரியங்களாக அரசியல், சமூக அமைப்பு, கலாச்சாரப் பாணிகள் போன்றவற்றைக் கருதுவர். இவற்றிற்கும் கடவுளுக்கும் தொடர்பு இல்லை எனவும், சமயக் கருத்துக்களின் அடிப்படையில் உலக அமைப்பை மாற்றியமைக்க முயல்வது முறையற்றது எனவும் வாதாடுவர். ஆனால் இயேசு இப்பொருளில் பேசவில்லை. அவர் ''சீசருக்கு உரியது'' எனக் குறிப்பிட்டது அவரிடம் காட்டப்பட்ட தெனாரியம் என்னும் வெள்ளி நாணயத்தை. அதில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. யாருடைய உருவம் நாணயத்தில் உள்ளதோ அவரே அந்நாணயத்தை உருவாக்கியவர் என்னும் முறையில் அதற்கு உரிமையாளர் என இயேசு முடிவுசெய்கிறார். எனவே, சீசருக்கு வரிசெலுத்துவது சீசருக்கு உரியதைத் திருப்பிக் கொடுப்பதே ஆகும். இதைக் கூறியபின் இயேசு ''கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்குக் கொடுங்கள்'' என்றார்.

-- இங்கே இயேசு ஆழ்ந்ததோர் உண்மையை அறிவிக்கிறார். சீசரின் உருவம் இருந்தது நாணயத்தில்; ஆனால் கடவுளின் ''உருவமும் சாயலும்'' இருப்பது மனிதரில். ஏனென்றால் கடவுள் மனிதரைத் தம் சாயலிலும் உருவிலும் உருவாக்கினார்; அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார் (காண்க: தொநூ 1:27). எனவே, மனிதர் கடவுளுக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் கடவுள் ஒருவருக்கே பணிந்து நடக்கக் கடமைப்பட்டவர்கள். இவ்வுலக அதிகாரம் மனிதரை அடிமைப்படுத்துவதும் அடக்கியாளுவதும் தவறு. இந்த உண்மையை இயேசு அழகாக எடுத்துரைத்தார். இன்று நாம் மனிதரில் கடவுளின் சாயலலைக் காண்பது அவர்களுடைய மாண்பை நாம் மதிப்பதில் அடங்கும். மனிதர் மனிதரை அடிமைகளாவோ தங்கள் சொத்தாகவோ கருதுவது முறையன்று. நாம் அனைவரும் கடவுளுக்கு உரியவர்கள் என்னும் முறையில் கடவுளையே நம் கதியாக ஏற்றிட வேண்டும். அப்போது பிறருடைய மாண்பினைப் போற்றி ஏற்றிட நாம் முன்வருவோம்.

மன்றாட்டு
இறைவா, மனிதர் அனைவரையும் உம் சாயலில் படைத்துள்ளீர் என நாங்கள் உணர்ந்து மனித மாண்பை மதித்திட அருள்தாரும்.

 

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

"சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்". பாவப்பட்ட மனிதர்கள் பயந்தாவது அரசுக்கு உறியதை அமர்க்களம் பண்ணாமல் கொடுத்துவிடுவர். வில்லங்கம் பிடித்த ஒரு சிலர் வரி கொடுக்காமல் ஏய்ப்பதற்கு என்ன வழி உண்டோ அனைத்தையும் கையாள்வர். உரோமை அரசுக்கு வரி கட்டி வாழ, யாவே இறைவனை மட்டுமே தங்கள் அரசனாகக் கொண்ட யூதர்கள் விரும்பாததால் இந்தக் கேள்வியைக் கேட்டனர்.

இயேசுவின் பதில் அவர்களின் வெளிப்படையான கேள்விக்கும், உள்ளத்தில் பதுங்கியிருந்த கேள்விக்கும் பதிலாகிவிட்டது. கடவுளுக்குக் கொடுப்பதுபற்றி அவர்கள் கேட்காமலே நினைவுபடுத்துகிறார். ஏனென்றால் கடவுளுக்கு கொடுக்கும் விஷயத்தில் அவர்கள் அவ்வளவு சிக்கனமாக இருந்தார்கள். எனவே இணைச்சட்டத்தை நினைவுபடுத்துகிறார். நமக்கும்தான்.

'ஆண்டுதோறும் உன் நிலத்தில் விளையும் எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் ஆண்டவனுக்குக் கொடு'. (இணைச் சட்டம் 14:22) 'மூன்றாம் ஆண்டின் இறுதியில் அவ்வாண்டில் விளைகின்ற எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்து, அன்னியரும், அனாதைகளும், கைம்பெண்களும் உண்டு நிறைவு கொள்ள வழங்கு'. (இணைச் சட்டம் 14:28) 'ஏழாம் ஆண்டின் முடிவில் அது ஆண்டவருக்கெனக் குறிக்கப்பட்ட விடுதலை ஆண்டாகையால், தனக்கு அடுத்திருப்பவனுக்கோ தன் சகோதரனுக்கோ கொடுத்த கடனைத் தண்டல் செய்ய வேண்டாம்.' (இணைச் சட்டம் 14:28)

கடவுளுக்குக் கொடுக்கவும் இயேசு நினைவூட்டுகிறார். கொடுத்து இறை ஆசீரும் வாழ்வின் அனைத்துக் கொடைகளும் பெறு;வோம். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லியோன்