முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 8-15

அன்பிற்குரியவரே, தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன். பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்; நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.� இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து. வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவது பயனற்றது; அது கேட்போரின் அழிவுக்கு ஏதுவாகும் எனக் கடவுள் முன்னிலையில் சான்று பகர்ந்திடு. நீ கடவுள் முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்; உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ வெட்கமுற வேண்டியதில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்

திபா 25: 4-5. 8-9. 10,14

பல்லவி: உம் பாதைகளை ஆண்டவரே, நான் அறியச் செய்தருளும்.

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்;
உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;
ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;
ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;
எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி

10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,
அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்;
அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப் பிடிப்பேன். அல்லேலூயா.

மாற்கு 12:28-34

பொதுக்காலம் 9ஆம் வாரம் வியாழன்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28-34

அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? என்று கேட்டார். அதற்கு இயேசு, இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், நன்று போதகரே, கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது என்று கூறினார்.
அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், �நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

-------------------------


17.03.2023 – மாற்கு 12: 28 – 34
அன்பு அணை ஓங்கட்டும்

எல்லா மதங்களும் தாங்கி நிற்கின்ற ஒரு வார்த்தை அன்பு. எந்தவொரு மனிதனாக இருக்கட்டும், ஏதாவது ஒரு மதத்தின் அடிப்படையில் தான் அவன் வாழ முயற்சி எடுக்கிறான். ஆனால் சமுதாயத்திற்குள் வருகின்ற போது அவனது மதக் கோட்பாடுகளை தவிடு பொடியாக மாற்றி அவன் சிந்தனையில் எழுகின்றவற்றை மட்டும் பிரதிபலிக்க அவன் முயல்கிறான். இதனாலேயே அநியாயம், அக்கிரமம், வன்முறை அதிகமாக சமூகத்தில் நடைபெறுகின்றன. காரணம், அன்பு என்ற வார்த்தை மறைந்து விட்டது.

ஆனால் இயேசு இதனை சற்று மாற்று சிந்தனையில் நமக்கு தருகின்றார். உன்னை அன்பு செய்வது போல உன அயலாரையும் அன்பு செய். காரணம் உனக்கு அடுத்த நபர் கடவுள் என்பது இயேசுவின் மனபோதனை. ஏனென்றால் யூத சமூகத்தில் இருந்த ஒரு நடைமுறை என்னவென்றால் வகுப்பு பிரிவு. குறைந்த வகுப்பினர் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்கக்கூடாது, பொது இடங்களில் பேச கூடாது என்பது அவர்களின் விதிமுறை. அதனால் தான் சமாரியப் பெண் தன் நிலையையும், கனானியப் பெண் தன் நிலையையும் எடுத்துக் கூறி இயேசுவை பிரித்துப் பார்க்கின்றார்கள். பிறகு இயேசு இறைமகன் என்பதனை அறிந்த பிறகு அவரோடு ஒன்றிணைகின்றார்கள். அதனால் தான் இயேசு மறைநூல் அறிஞர்களுக்கு பாடம் புகட்டுகின்றார். அடுத்தவர்களையும் அன்பு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் கடவுளின் பிம்பங்கள், கடவுளின் சாயல்கள் என்பதனை வலியுறுத்துகின்றார்.

நாம் அடுத்தவர்களை அன்பு செய்கிறோமா? அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொள்கிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

========================


மாற்கு 12: 28 – 34
அன்பு அணை ஓங்கட்டும்

எல்லா மதங்களும் தாங்கி நிற்கின்ற ஒரு வார்த்தை அன்பு. எந்தவொரு மனிதனாக இருக்கட்டும், ஏதாவது ஒரு மதத்தின் அடிப்படையில் தான் அவன் வாழ முயற்சி எடுக்கிறான். ஆனால் சமுதாயத்திற்குள் வருகின்ற போது அவனது மதக் கோட்பாடுகளை தவிடு பொடியாக மாற்றி அவன் சிந்தனையில் எழுகின்றவற்றை மட்டும் பிரதிபலிக்க அவன் முயல்கிறான். இதனாலேயே அநியாயம், அக்கிரமம், வன்முறை அதிகமாக சமூகத்தில் நடைபெறுகின்றன. காரணம், அன்பு என்ற வார்த்தை மறைந்து விட்டது.

ஆனால் இயேசு இதனை சற்று மாற்று சிந்தனையில் நமக்கு தருகின்றார். உன்னை அன்பு செய்வது போல உன அயலாரையும் அன்பு செய். காரணம் உனக்கு அடுத்த நபர் கடவுள் என்பது இயேசுவின் மனபோதனை. ஏனென்றால் யூத சமூகத்தில் இருந்த ஒரு நடைமுறை என்னவென்றால் வகுப்பு பிரிவு. குறைந்த வகுப்பினர் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்கக்கூடாது, பொது இடங்களில் பேச கூடாது என்பது அவர்களின் விதிமுறை. அதனால் தான் சமாரியப் பெண் தன் நிலையையும், கனானியப் பெண் தன் நிலையையும் எடுத்துக் கூறி இயேசுவை பிரித்துப் பார்க்கின்றார்கள். பிறகு இயேசு இறைமகன் என்பதனை அறிந்த பிறகு அவரோடு ஒன்றிணைகின்றார்கள். அதனால் தான் இயேசு மறைநூல் அறிஞர்களுக்கு பாடம் புகட்டுகின்றார். அடுத்தவர்களையும் அன்பு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் கடவுளின் பிம்பங்கள், கடவுளின் சாயல்கள் என்பதனை வலியுறுத்துகின்றார்.

நாம் அடுத்தவர்களை அன்பு செய்கிறோமா? அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொள்கிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

========================

2தீமோத்தேயு 2: 8 – 15
பவுலடியாரும், இயேசுவின் பாடுகளும்

தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், இதுவரை பவுலடியார், துன்பத்தைத் தாங்குவதில் அவர் கொண்டிருந்த தனித்துவத்தைப் பற்றி அறிவுரையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், இரண்டாவது அதிகாரத்தின் தொடக்கத்திலிருந்து, அவருடைய அறிவுரை இயேசுவின் பாடுகளை நோக்கி நகர்கிறது. ”இயேசு உயிர் பெற்று எழுந்தார் என்பதை நினைவில் கொள்” என்று சொல்கிறார். அதாவது, இயேசுவின் பாடுகள் அழுத்தம் பெறுகிறது, அவருடைய துன்பங்கள் அறிவுரையின் மையமாகிறது.

கடவுளுடைய வார்த்தையை யாரும் சிறைப்படுத்த முடியாது. இயேசுவை, அவருடைய சாவு சிறைப்படுத்தி விடும் என்று, பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தப்புக்கணக்கு போட்டார்கள். ஆனால், இயேசு சாவிலிருந்து உயிர் பெற்றெழுந்தார். பவுலடியாருடைய துன்பங்களும், பாடுகளும் யாருக்கும் மீட்பைப் பெற்றுத்தரப் போவதில்லை. ஆனால், அவருடைய வாழ்க்கை பலருக்கு உந்துசக்தியாக இருக்கப்போகிறது. குறிப்பாக, துன்பங்களைத் தாங்குவதற்கு மற்றவர்கள் கற்றுக்கொள்கின்ற வாழ்க்கை அனுபவமாகவும் இருக்கிறது. நாம் கிறிஸ்துவோடு இருக்கிறபோது, துன்பங்களைத் தாங்குவதற்கான வல்லமையைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதுதான் பவுலடியார் இங்கு சொல்ல வருகிற செய்தியாக இருக்கிறது.

துன்பங்களைக் கண்டு எவரும் அஞ்ச வேண்டியதில்லை. ஏனெனில், இயேசுவே அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். அவரே நமக்கு அனுபவமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அந்த இயேசுவோடு உடனிருக்கிறபோது, அவருடைய பாடுகளை எண்ணிச் சிந்தித்துப் பார்க்கிறபோது, நம்முடைய கவலைகள் நமக்கு பெரிதாக தோன்றுவதில்லை. அதனை நம்முடைய வாழ்வின் பாடமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து, இறைவனோடு இணைந்திருப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

முதன்மையானது அன்பு

யூதப்பாரம்பரியத்தில் எப்போதுமே இரட்டை மனநிலை காணப்பட்டது. திருச்சட்டத்தை இன்னும் பல சட்டங்களாக விளக்கமளிக்கும் மனநிலை, இரண்டாவது திருச்சட்டம் முழுவதையும் ஒரே வாக்கியத்தில் கூறும் மனநிலை. இந்த இரட்டை மனநிலை தான், இறைவாக்கினர்களின் போதனையிலும் வேற்றுமையைக் காட்டியது. ஒரு சில இறைவாக்கினர்கள் ஏராளமான எண்ணிக்கையில் கடவுளின் திருச்சட்டங்களைக் கொடுத்தனர். ஆனால், மற்றவர்கள், விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் கடவுளின் சட்டங்களைக் கொடுத்தனர்.

உதாரணமாக, மோசே 613 சட்டங்களைப் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த 613 சட்டங்களை, தாவீது தன்னுடைய திருப்பாடல் 15ல், 11 ஆக குறைக்கிறார். இறைவாக்கினர் எசாயா(33: 15), இதனை மிகச்சுருக்கமாக ஆறாக, குறைக்கிறார். மீக்கா இறைவாக்கினர்(6:8) அதனை மூன்றாக குறைக்கிறார். மீண்டும் எசாயா இறைவாக்கினர், இதனை அடிப்படையில் இரண்டு திருச்சட்டங்களாக (56: 1) பிரிக்கிறார். இறுதியில் அபகூக்கு இறைவாக்கினர்(2: 4) ஒரே வரியில், “நேர்மையுடையவரோ தன் நம்பிக்கையினால் வாழ்வடைவர்” என்று, நிறைவு செய்கிறார். இவ்வாறு பழைய ஏற்பாட்டில், இறைவாக்கினர்களின் பல்வேறு விளக்கங்களுக்கும் இரத்தினச்சுருக்கமாக, இன்றைய நற்செய்தியில், இயேசு திருச்சட்டத்தின் சாராம்சத்தை விளக்குகிறார். கடவுளையும், சக மனிதர்களையும் அன்பு செய்வதே திருச்சட்டத்தின் சுருக்கம், என்பதை இங்கே வலியுறுத்துகிறார்.

நமது வாழ்வில் இந்த அன்பு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறதா? என சிந்தித்துப் பார்ப்போம். நாம் செய்கிற செயல்பாடுகள் அனைத்திலும், அன்பே முதன்மையானதாக இருக்க வேண்டும். இயேசுவின் வாழ்வில் முதன்மையாக இருந்து அன்பு, நமது வாழ்விலும் நிலைபெறட்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளன்பும், பிறரன்பும்

யூதச்சட்டங்களைப்பொறுத்தவரையில், இரண்டுவிதமான பார்வைகள் இருந்தது. சட்டங்களில் பெரிய சட்டங்கள் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஒரு குழுவும், சிறிய பெரிய என அனைத்து சட்டங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது என மற்றொரு குழுவும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இப்படிப்பட்டச் சூழ்நிலை இருந்த காலத்தில்தான், ஒருவர் இயேசுவிடம் வந்து, ”அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்கிறார்.

அந்த மனிதர் இந்த இரண்டு பார்வையைப் பிரதிபலிக்கிறார். அனைத்திலும் முதன்மையானது கடவுளன்பா? அல்லது பிறரன்பா? என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. ஒரு குழு கடவுளை அன்பு செய்வதுதான் முதன்மையானது என்று நம்பியது. ஏனென்றால், கடவுள்தான் அனைத்திற்கும் மேலானவர். அவரன்றி அணுவும் அசையாது என்று உறுதியாக நம்பினர். மற்றொரு குழுவோ, மற்றவர்களை அன்பு செய்வதைத்தான் கடவுள் முழுமையாக விரும்புகிறார் என்று நம்பினார்கள். இயேசு இரண்டையும் இணைத்துப்பேசுகிறார். அதுதான் இயேசுவின் சிறப்பு. இதுவரை எந்த யூத போதகர்களும், இரண்டையும் இணைத்து விளக்கம் தந்ததில்லை. ஆனால், இயேசு கடவுளன்பையும், பிறரன்பையும் நேர்கோட்டில் வைத்துப்பார்க்கிறார். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லையென்பது இயேசுவின் வாதம்.

மற்றவர்களை அன்பு செய்யாமல், கடவுளை ஒருவர் அன்பு செய்ய முடியாது. பிறரன்புதான், கடவுளன்பை முழுமையாக்குகிறது. நிறைவாக்குகிறது. கடவுளை மட்டும் அன்பு செய்வதோ, மற்றவர்களை மட்டும் அன்பு செய்வதோ முழுமையான, நிறைவான அன்பாக முடியாது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

வாழ்வை மாற்றாத வழிபாடுகள்

மதம் என்பது இயேசுவைப் பொறுத்தவரையில் கடவுளையும், மனிதர்களையும் அன்பு செய்வதாகும். கடவுளை அன்பு செய்ய வேண்டுமென்றால், அதற்கான எளிதான வழி, சக மனிதர்களை அன்பு செய்வது. இங்கே அன்புதான் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது. மறைநூல் அறிஞர்களும், அன்பு என்கிற இந்த மதிப்பீட்டை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றனர். 1சாமுவேல் 15: 22 சொல்கிறது: ”ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரிபலிகள், பிறபலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் எரிபலியை விட சிறந்தது, கீழ்ப்படிதல் ஆட்டுக்கிடாய்களின் கொழுப்பை விட மேலானது”. ஓசேயா 6: 6 ”உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்”.

ஆனால், நமது வாழ்க்கையில் வழிபாடுகளும், பக்திமுயற்சிகளும் தான் அதிகமாக இருக்கிறதே தவிர, அது காட்டும் நெறிமுறைகளை யாரும் பின்பற்றுவதும் கிடையாது. அதைப்பற்றிய கவலையும் கிடையாது. அன்பு இருக்க வேண்டிய இடத்தில் நாம் வெறும் பக்திமுயற்சிகளை வைத்திருக்கிறோம். வாழ்வு மாற்ற வேண்டிய வழிபாடுகள், வெறும் சடங்கு, சம்பிரதாயங்களாக நின்றுவிடுகிறது. உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தாக எரிபலிகளும், பக்திமுயற்சிகளும் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படாதவை. உண்மையான வழிபாடு என்றால் என்ன? என்பது தெரியாததால் தான், நல்ல சமாரியன் உவமையில் லேவியரும், குருவும் அடிபட்டுக்கிடந்த மனிதனை விட்டுவிட்டுச் சென்றார்கள்.

இன்றைக்கு நாம் பல வழிபாடுகளில் பங்கேற்கிறோம். கடவுளுக்கு நேர்ச்சைகள் செய்கிறோம். சடங்கு, சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனாலும், நாம் செய்கின்ற காரியங்கள் நமது வாழ்வை மாற்றவில்லையென்றால், அதனால், நமது வாழ்வு எந்தவகையிலும் மாற்றம் பெறவில்லையென்றால், அதனால், நமக்கு ஒரு பயனும் இல்லை.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுள் அன்பு

சதுசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் எப்போதுமே மறைமுகமான பகைமையுணர்வு இருந்து வந்தது. மறைநூல் அறிஞர்கள் ‘மிஷ்னா’ எனப்படும் வாய்மொழி சட்டத்தைக்கற்பிப்பவர்கள். சதுசேயர்கள் வாய்மொழியாக வந்த சட்டங்களை நம்பாதவர்கள். இதற்கு முந்தையப் பகுதிகளில் பரிசேயரும், சதுசேயரும் இயேசுவை சிக்கவைப்பதற்காக சில கடினமான கேள்விகளை முன்வைக்கிறார்கள். ஆனால், மறைநூல் அறிஞர் இயேசுவை சிக்கவைக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, பரிசேயர் மற்றும் சதுசேயர் இரண்டு பேருக்கும் இயேசு அருமையாக பதிலைச்சொல்ல அவர்களின் வாயை அடைத்ததற்கு நன்றியுணர்வாகவும், இயேசுவால் எவ்வளவு அருமையாக விளக்கங்களைத்தர முடியும் என்பதை மற்றவர்களுக்கு மீண்டும் வெளிப்படுத்தும்விதமாக, மறைநூல் அறிஞர் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.

இயேசு சொல்கிற முதல் பதில் இணைச்சட்டம் 6: 5 ல் இருந்து எடுக்கப்பட்டது. இந்த இறைவார்த்தை யூத மதத்தின் அடிப்படை கோட்பாடு. ஒவ்வொரு யூத வழிபாடும் இந்த இறைவார்த்தையோடுதான் தொடங்கும். ஒவ்வொரு யூதக்குழந்தையும் இந்த இறைவார்த்தையை மனப்பாடம் செய்ய வேண்டும். கடவுளை முழுமையான உள்ளத்தோடு அன்பு செய்வதுதான் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை நெறியாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் கடவுளின் அன்பில் படைக்கப்பட்டவர்கள். கடவுள் மனிதனை முழுமையான அன்பில் படைத்தார். அத்தகைய கடவுளின் அன்பில் படைக்கப்பட்ட நாம் அனைவரும் அந்த அன்புக்கு பிரமாணிக்கத்தோடு இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் வாதம். கடவுள் அன்பே முதன்மையானது, முழுமையானது. கடவுளை அன்பு செய்யாதவன் எவரையும் அன்பு செய்ய முடியாது.

கடவுள் அன்பை நாம் நம்முடைய வாழ்வில் உணர்வதுதான் நம் வாழ்வை மாற்றக்கூடிய ஒன்றாக இருக்க முடியும். கடவுள் அன்பை நம் வாழ்விலிருந்து எடுத்துவிட்டால், நம் வாழ்வே சூன்யமாகிவிடும். எனவேதான் இஸ்ரயேல் மக்கள் கடவுள் அன்பிற்கு முதலிடம் கொடுத்தார்கள். கடவுள் அன்பை உணர்ந்தவர்கள் தான் புனிதர்கள். எந்தவொரு மனிதன் கடவுள் அன்பை உணர்கிறானோ, அந்த மனிதன்தான் இந்த உலகத்திலேயே மகிழ்ச்சியான, நிறைவான மனிதன். அத்தகைய நிறைவைப்பெற கடவுள் அன்பை நம் வாழ்வில் உணர்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

அறிவு, ஆர்வம், திறந்த மனம்

“அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கான விடைக்குத் தனது சொந்த விளக்கத்தையும் அளித்த மறைநூல் அறிஞர் ஒருவரை இயேசு “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” எனப் பாராட்டும் நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்.

இந்தப் பாராட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்:

  1. மறைநூல் அறிஞரின் அறிவுத் திறனை இயேசு பாராட்டுகிறார். அறிவாற்றல் இறைவனைப் பற்றி அறிவதில், வாழ்வின் மதிப்பீடுகளை தெரிந்துகொள்வதில் செலவழிக்கப்படுவது பாராட்டுக்குரியது. மாறாக, இறைவனை மறுப்பதற்கோ, இறையாட்சி மதிப்பீடுகளைச் சிதைப்பதற்கோ பயன்படுத்தப்படும் அறிவு அழிவுக்குரியது.
  1. அறிவாற்றல் மிக்க மறைநூல் அறிஞரின் ஆர்வம் இங்கே பாராட்டப்படுகிறது. அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான், இயேசு “சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு” தாமும் கேள்வி கேட்க முன்வந்தார். “அணுகி வந்தார்” என்னும் சொல்லாடல் கவனத்திற்குரியது. ஆர்வம் இருந்தால் அணுகிவரவேண்டும்.
  1. மறைநூல் அறிஞரின் திறந்த மனதை இயேசு பாராட்டினார். அறிவும், ஆர்வமும் மிக்க பலரும் இறையாட்சியை நெருங்கிவருவதில்லை. காரணம், அவர்களிடம் திறந்த மனம் இல்லை. ஆனால், இயேசு சொன்ன விளக்கத்தை ஏற்று, “இறையன்பும், பிறரன்பும் பலிகளைவிட மேலானது” என்று கண்டுணர்ந்த உண்மையை அறிக்கையிடுகிறார் இந்த அறிஞர்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இறையாட்சியின் மதிப்பீடுகளைக் கண்டுணரவும், இறையாட்சியை நெருங்கி வரவும், எங்களுக்கு அறிவும், ஆர்வமும், திறந்த மனமும் தந்தருள்வீராக. உமது தூய ஆவியால் எம்மை நிரப்புவீராக. ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

முதன்மையான கட்டளை!

அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? என்னும் கேள்விக்கு ஆண்டவர் இயேசு அளித்த விடையை இன்றைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

"நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை" என்பதே இயேசுவின் விடை.

இந்த முதன்மையான கட்டளையை நாம் நிறைவேற்றுகிறோமா? நன்றாக நிறைவேற்றுகிறோமா? என்பது நாம் நம்மையே கேட்கவேண்டிய கேள்வி. முழு இதயம், முழு உள்ளம், முழு மனம், முழு ஆற்றல்... என நான்கு சொற்கள் இறையன்பின் மேன்மையையும், அவசியத்தையும் வெளிப்படுத்துகின்றன.

பல நேரங்களில் நமது அன்பின் வெளிப்பாடுகளான செபம், வழிபாடு, கடமையுணர்வு போன்றவை அரை மனத்தோடும், அரைகுறை ஆற்றலோடும் வெளிப்படுவது நாம் முதல் கட்டளையை மீறுகிறோம் என்பதையே காட்டுகிறது. நம் வாழ்வின் அனைத்துமான இறைவனுக்கு, நம் வாழ்வின் அனைத்தையும் கொண்டு நாம் அன்பு செய்யவேண்டும்.

நமது இறையன்பின் ஆழத்தை ஆழப்படுத்துவோம். அனைத்திற்கும் மேலாக இறைவனை அன்பு செய்வோம். இறைவனுக்காக நேரம், ஆற்றல், பொருளைப் பயன்படுத்துவோம்.

மன்றாடுவோம்: எங்களைப் படைத்து, காத்து, வழிநடத்தும் அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இறையன்பால் எங்களை நிரப்பும். உம்மை முழுமையாக அன்புசெய்யும் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

அறிவுத்திறனோடு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மறைநூல் அறிஞர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம் “நீர் இறையாட்சியினின்று தொலையில்; இல்லை” என்று பாராட்டினார் என்று இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். எதற்காக இந்த உளமார்ந்த பாராட்டு? இறைவனை அன்பு செய்வதும், அயலாரை அன்பு செய்வதும் எரிபலிகளையும், வேறு பலிகளையும்விட மேலானது என்று பதிலுக்குத்தான் இந்த பாராட்டு. உண்மையில் அது ஞானம் நிறைந்த ஒரு பதில். இறைவனை அன்பு செய்வதும், அயலாரை அன்பு செய்வதுமே இறைவனுக்கு உகந்த பலி, அதைவிடச் சிறந்த காணிக்கையோ, பலியோ, செபமோ, வழிபாடோ வேறு எதுவும் இல்லை என்று உணர்வது சிறந்த ஞானம். அந்த மறைநூல் அறிஞருக்கு இந்த ஞானம் இருந்தது. நமக்கு இருக்கிறதா?

இத்தவக்காலத்தில் நமது அன்பை, அன்பின் மனநிலையை, அன்பின் சொற்களை, அன்புச் செயல்களை ஆழப்படுத்திக்கொள்வோம். அதிகரித்துக்கொள்வோம்.  காரணம், அன்புதான் அனைத்திலும் உயர்ந்தது. அதிலும் சிறப்பாக, இறைவனை முழு இதயத்தோடும், முழு அறிவோடும், முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவோம். அனைத்திற்கும் மேலாக இறைவனையே நம் வாழ்வின் தலைசிறந்த மதிப்பீடாகவும், ஒப்பற்ற செல்வமாகவும், பேரின்பமாகவும் கொள்வோம்.

மன்றாடுவோம்: ஞானத்தின் ஊற்றே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். அனைத்திற்கும் மேலாக உம்மை அன்பு செய்வதும், எங்கள் அயலாரை அன்பு செய்வதுமே சிறந்த செபம், வழிபாடு என்னும் ஞானத்தை, அறிவுத் திறனை எங்களுக்குத் தாரும். உம்மை எங்கள் முழு இதயத்தோடும், முழு ஆற்றலோடும், முழு அறிவோடும் அன்பு செய்கிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

 

------------------------
''மறைநூல் அறிஞருள் ஒருவர்...இயேசுவை அணுகிவந்து,
'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?' என்று கேட்டார்.
அதற்கு இயேசு,...'உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக...
உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்றார்'' (மாற்கு 12:28-31)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- யூத சமயம் மக்களுக்குப் பல கட்டளைகளை வழங்கியிருந்தது. அக்கட்டளைகளுள் முக்கியமானது எது என்னும் கேள்விக்குப் பல யூத அறிஞர்கள் பதில் தந்தனர். இயேசுவை அணுகிச் சென்று ''அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'' என்று கேட்ட மறைநூல் அறிஞர் நல்ல எண்ணத்தோடுதான் அக்கேள்வியைக் கேட்டார். இயேசு அவருக்கு அளித்த பதில் ''கடவுளை அன்பு செய்க; மனிதரை அன்பு செய்க'' என்பதாகும். இயேசு இப்பதிலைப் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டி எடுத்துரைக்கிறார் (காண்க: இச 6:4-5; லேவி 19:18). கடவுள் நம்மைப் படைத்து, பாதுகாத்து, அன்போடு வழிநடத்துகின்ற தந்தை. எனவே, அவரை நாம் முழுமையாக அன்புசெய்வது பொருத்தமே. அவரிடத்தில் நம்மை நாம் எந்தவித நிபந்தனையுமின்றிக் கையளித்திட வேண்டும். இது முதன்மையான கட்டளை. இதற்கு நிகரான கட்டளையாக இயேசு ''பிறரை அன்புசெய்க'' என்னும் வழிமுறையை நல்குகின்றார். நாம் எல்லா மனிதரையும் வேறுபாடின்றி அன்பு செய்ய அழைக்கப்டுகிறோம்.

-- இயேசு அன்புக் கட்டளை பற்றி அளித்த பதிலைக் கேட்ட மறைநூல் அறிஞர் இயேசு கூறிய பதிலை முழுமையாக ஏற்றுக்கொண்டதோடு, அன்புக் கட்டளையை நிறைவேற்றுவது எருசலேம் கோவிலில் நிகழ்ந்த பலிகளை எல்லாம் விட மிகச் சிறந்தது எனக் கூறித் தம் இசைவைத் தெரிவிக்கிறார் (மாற் 12:32-33). இயேசு பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட அன்புக் கட்டளையை மக்களுக்கு மீண்டும் எடுத்துக் கூறிய நேரத்தில் அன்பு என்பது இரு பக்கங்களைக் கொண்டது எனக் காட்டுகிறார். கடவுளை அன்புசெய்வதோடு நாம் பிறரையும் அன்புசெய்ய வேண்டும். ஒன்றில்லாமல் மற்றது இல்லை. எனவே, இயேசு கடவுளின் அன்பில் எந்நாளும் நிலைத்திருந்து, அதே நேரத்தில் நம்மை முழுமையாக அன்புசெய்து நமக்காகத் தம்மையே பலியாக்கியதுபோல நாமும் இறையன்பிலும் பிறரன்பிலும் சிறந்து விளங்க அழைக்கப்படுகிறோம். அன்பு இல்லாத இடத்தில் வேறு நற்பண்புகளும் இராது. அன்பு இருக்குமிடத்தில் தன்னலம் மறையும்; பிறருடைய நலனுக்கு நாம் முன்னுரிமை கொடுப்போம். கடவுள் நம்மை எந்தவொரு நிபந்தனையுமின்றி அன்புசெய்வது போல நாமும் முழுமையாகக் கடவுளை அன்புசெய்து, அவருடைய அன்பின் தூண்டுதலால் எல்லா மக்களையும் அன்புசெய்திட முன்வருவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் வாழ்க்கை அன்பின் வெளிப்பாடாக அமைந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவின் போதனையைச் சுருக்கமாகத் தருவதாக இருந்தால் அது ''அன்புக்கட்டளை''யில் அடங்கும் எனலாம். இந்த அன்புக் கட்டளைக்கு இருபக்கங்கள் உண்டென இயேசு விளக்கினார். கடவுளை நாம் அன்புசெய்வதும் நம்மை அடுத்திருப்போரை அன்புசெய்வதும் அன்பின் இரு பக்கங்கள் ஆகும். அவற்றில் ஒன்றில்லையென்றால் மற்றதும் இல்லை. ஆனால் மனிதர் கடவுளையும் பிற மனிதரையும் அன்புசெய்வதற்கு அடிப்படை என்ன? கடவுள் நம் அனைவரையும் எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கிறார் என்பதே அந்த அடிப்படை. ஆக, கடவுள் நம்மை அன்புசெய்வதால் நாம் கடவுளையும் அவரால் அன்புசெய்யப்படுகின்ற மனிதரையும் அன்புசெய்திட அழைக்கப்படுகிறோம். இயேசுவை அணுகிவந்து ''முதன்மையான கட்டளை எது?'' என்று கேட்ட மறைநூல் அறிஞர் அக்கேள்வியை எழுப்பியதற்கு ஒரு பின்னணி உண்டு. அதாவது, அக்கால யூத அறிஞர் கருத்துப்படி விவிலியத்தில் மொத்தம் 613 கட்டளைகள் உண்டு. அவற்றுள் 248 நேர்முக வடிவிலும் 365 எதிர்மறை வடிவிலும் அமைந்தவை. அக்கட்டளைகளில் பெரியவை யாவை என்றும் சிறியவை யாவை என்றும் வகைப்படுத்தினர். இயேசுவோ பழைய ஏற்பாடு முழுவதிலும் (''திருச்சட்டமும் இறைவாக்குகளும்'' - மத் 22:35-40) காணப்படுகின்ற அனைத்துக் கட்டளைகளிலும் முதன்மையானது அன்புக்கட்டளையே எனப் போதிக்கிறார்.

-- கடவுளை அன்புசெய்வது பற்றிய கட்டளை இச 6:4-5இலும் பிறரை அன்புசெய்வது பற்றிய கட்டளை லேவி 19:18இலும் உள்ளன. ஆனால் இயேசுவோ அவ்விரு கட்டளைகளையும் ஒன்றாக இணைத்து நம் வாழ்வுக்கு அன்பின் நெறியை வகுத்துக் கொடுத்துள்ளார். கடவுளை முழுமனதோடு அன்புசெய்வோர் பிற மனிதர் அனைவரையும் வேறுபாடின்றி ஏற்றுக்கொண்டு அன்புசெய்வர். இவ்வாறு அன்புசெய்வதற்கு இயேசுவே தலைசிறந்த முன்மாதிரியாக உள்ளார். எனவேதான் அன்புக் கட்டளை என்றால் என்னவென்று அறிந்து உணர விரும்புவோர் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடந்தால் அன்பைச் சுவைத்து மகிழ்வர்.

மன்றாட்டு
இறைவா, அன்பில் நாங்கள் நிலைத்திருக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

முதன்மையான கட்டளை எது? அன்பு செய்வது. சரி. இரண்டாவது இடத்தில் உள்ள கட்டளை எது? அன்பு செய்வது.அதுவும் சரி. மூன்றாவது இடத்தில் உள்ள கட்டளை எது? அன்பு செய்வது. எல்லா கட்டளைகளுக்கும் மூலம், ஆதாரம், அடிப்படை அன்புதான்.எனவேதான் எல்லா கட்டளைகளையும் சுருக்கி இரண்டு கட்டளையாக்கினார். அதையும் இயேசு சுருக்கி "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்"(யோவா 13:34) என்னும் புதிய கட்டளையை; கொடுத்தார்.

ஆகவே சட்டங்கள், கட்டளைகள் எல்லாம் யாருக்கு? முதலாவது, இரண்டாவது என்று தரம் பிரிப்பது யாருக்கு? அன்பு வற்றி வரண்டுபோன சமுதாயத்திற்கு கட்டளைகளும் சட்டங்களும் அவசியம். காவல்துறையும் நீதிமன்றமும் கட்டாயத் தேவையாகிவிடுகிறது.

தாயும் தகப்பனும் பிள்ளைகளும் பாசப்பிணைப்பில்வாழும் குடும்பத்திற்கு என்ன சட்டம் வேண்டும்? கொடுத்து எடுத்து வாழ்வதற்கு யார் இவர்களுக்குச் சட்டம் இயற்றுவது? எனவேதான் எல்லா சட்டங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, அன்பு ஒன்றையே சமுதாயத்தின் தாரக மந்திரமாக்கச் சொல்லுகிறார் இயேசு. இதுவே இறையாட்சியின் தொடக்கம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்

இறையாட்சியின் நெருக்கத்தில்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இறையாட்சியின் நெருக்கத்தில் அமர்ந்து அமைதி வாழ்வு வாழ்வோர் சட்டத்தைச் சரிவர கடைபிடிப்போரே! இல்லை, ஆண்டவனுக்கு அன்றாடம் பலி செலுத்துவோரே! என்ற இரு வரம்புக்குள் இரு பிரிவினரும் கருத்துக்களைக் கடுமையாக பகிர்ந்து கொள்ளலாம். சட்டத்தைக் கடைபிடித்தால் இறையாட்சியின் நிம்மதி வாழ்வைப் பெற்றுவிடலாம். இல்லை, ஆண்டவரே! ஆண்டவரே என்று கண்ணீர் விட்டு, கை தட்டி செபம் செய்தால், இறையாட்சியின் நிறைவைப் பெற்றுவிடலாம்.

இத்தகையோருக்கு இயேசு சொல்லுவது; என்னை நோக்கி, ஆண்டவரே ஆண்டவரே என்றுச் சொல்பவன் எல்லாம் விண்ணரசு சேரமாட்டான்.(மத் 7:21) உங்கள் திரு விழாக்களை அருவருக்கிறேன்.(ஆமோஸ் 5:21-26) இம் மக்கள் உதட்டால் என்னைப் போற்றுகின்றனர். உள்ளமோ வெகு தொலைவில் உள்ளது.

ஆகவே இறையாட்சிக்கு உட்படுதல் என்பது சட்டங்களைக் கடைபிடித்தலும் அல்ல, இறை புகழ்ச்சியும் அல்ல. மாறா இரண்டிலும்; கருவாகி உருப்பெற்று அயலானை அன்பு செய்வதில் நிறைவடைதல் ஆகும். ஆதலின் சட்டத்தைக் கடைபிடித்தலும் செப வாழ்வும் அடித்தளமாக அமைந்து, அயலானின் அன்பு வாழ்வு என்னும் கட்டடம் கட்டி எழுப்பப்படுமாயின், அங்கு இறையாட்சியின் மாட்சி நிறைந்திருக்கும்.இவ்வாறு வாழ்வோர் இறையாட்சிக்குத் தொலைவில் இல்லை. நாமும் இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லியோன்