முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 10-17

அன்புக்குரியவரே, என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு, மன உறுதி ஆகியவற்றைப் பின்பற்றி வந்திருக்கிறாய். அந்தியோக்கியாவிலும், இக்கோனியாவிலும், லிஸ்திராவிலும் எனக்கு நேரிட்ட இன்னல்களும் துன்பங்களும் உனக்குத் தெரியும். இத்தகைய இன்னல்களைப் பொறுத்துக் கொண்டேன். இவை அனைத்திலிருந்தும் ஆண்டவர் என்னை விடுவித்தார். கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். ஆனால் தீயோர்களும் எத்தர்களும் மேலும் மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள். நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 119: 157-160. 161,165. 166,168

பல்லவி: உம் திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு நல்வாழ்வு உண்டு.

157 என்னைக் கொடுமைப்படுத்துவோரும் பகைப்போரும் பலர்;
ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு நான் தவறுவதில்லை.
160 உண்மையே உமது வார்த்தையின் உட்பொருள்;
நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம் என்றும் நிலைத்துள்ளன. -பல்லவி

161 தலைவர்கள் என்னைக் காரணமின்றிக் கொடுமைப்படுத்துகின்றனர்;
ஆனால், உம் வாக்கை முன்னிட்டு என் உள்ளம் நடுங்குகின்றது.
165 உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு;
அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை. -பல்லவி

166 ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக நான் காத்திருக்கின்றேன்;
உம் கட்டளைகளைச் செயல்படுத்துகின்றேன்.
168 உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப் பிடிக்கின்றேன்;
ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை. -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம் என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மாற்கு 12:35-37

ஆண்டின் பொதுக்காலம் 9ஆம் வாரம் வெள்ளிக் கிழமை



நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-37

அக்காலத்தில் இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? தூய ஆவியின் தூண்டுதலால், ஆண்டவர் என் தலைவரிடம், ``நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் என்று உரைத்தார் எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி? என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

-------------------------

அறிய வேண்டிய உண்மை!

மாற்கு 12: 35-37

மெசியாவைப் பற்றிய குறைபாடான பார்வையை மறைநூல் அறிஞர்களிடம் இயேசு சுட்டிக்காட்டுகிறார். மெசியா தாவீதின் வழித்தோன்றலாக இருக்கப் போகிறார் என்பதை அவர்கள் சரியாகப் புரிந்துகொண்டனர். ஆனால் மெசியா தாவீதின் மகனாக இருக்கப் போகிறார் என்பதை அவர்கள் உணரவில்லை. தாவீது மெசியாவை "என் ஆண்டவர்" என்று அழைத்ததாக திருப்பாடல் 110 கூறுகிறது. யூத மக்கள் மனதில், ஒருவரின் வழித்தோன்றல் அந்த நபரின் இறைவனாக இருக்க முடியாது என்ற எண்ணத்தை கொண்டிருந்தனர். அப்படி இருக்கையில், தாவீது எப்படித் தன் மகனை “இறைவன்” என்று அழைக்க முடியும்?

"மை லார்ட்" என்பதில் உள்ள "இறைவன்" என்ற வார்த்தை, பெரிய எவருக்கும் பயன்படுத்தக்கூடிய வார்த்தையாகும். அந்த நபர் “கடவுள்” என்று அர்த்தம் இல்லை. (திருப்பாடல் 110-ன் எபிரேய மொழிபெயர்ப்பில், தாவீது தந்தையாகிய கடவுளைக் குறிக்கும் போது, பயன்படுத்தும் சொல்லாடலான "இறைவன்" என்ற வார்த்தை "என் இறைவன்" (மெசியா) என்பதில் இருந்து வேறுபட்டது.

மிக எளிமையாக, இயேசு மறைநூல் அறிஞர்கள் மற்றும் அவரது சீடர்களின் சிந்தனையை நீட்டி, தாவீதின் சந்ததியை விட மெசியா பெரியவராக இருப்பார் என்று கூறுகிறார். இயேசு தமக்கு செவிசாய்ப்பவர்கள் கிறிஸ்துவைப் பற்றிய சிந்தனையில் மெறுகேற்றப்பட வேண்டும் என்று விரும்பும்போது, ஒரு குறிப்பிட்ட நபரை மனதில் வைத்திருப்பதாக பார்க்கத் தோன்றுகிறது. இதற்கு முன் உள்ள வசனங்களில், இயேசு ஒரு குறிப்பிட்ட நபருடன் உரையாடுகிறார். கடவுளை முழு மனதோடு நேசிப்பதும், உங்களைப் போலவே உங்கள் அடுத்திருப்பவரை நேசிப்பதும் மிகப்பெரிய கட்டளை என்று இயேசு அவரிடம் கூறும்போது, அந்த குறிப்பிட்ட நபர் இயேசுவிடம் ஒரு உண்மையைச் சொன்னார், நன்றாக பதிலளித்தார் என்று இயேசு கூறுகிறார் (வச. 32). அவர் இறையாட்சியிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்றும் இயேசு அவரிடம் கூறுகிறார் (வச. 34).

இந்த நபர் இயேசு சொல்வதை மனம் திறந்து கேட்கிறார். அவர் தனது மனதை மாற்றுவதற்குத் திறந்தவர். இயேசு கோவிலில் இருக்கும்போதே, இந்த மனிதர் உட்பட, கேட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் அவர்களின் மனதை மாற்றுவதற்கான தகவல்களைக் கொடுக்கிறார். 110 ஆம் திருப்பாடலைப் பற்றி இயேசு பேசி, இந்த மனிதனை அணுகுவதை காண முடிகிறது. கடவுள் தம்மைத் தேடுபவர்களுக்கு வெகுமதி அளிக்கிறார் (எபி 11:6), இந்த மனிதன் உண்மையைத் தேடுகிறான். இறைவன் கொடுத்த தகவலை வைத்து இந்த மனிதன் என்ன செய்தான் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது இயேசு உண்மையைப் பேசுகிறார், அவர் ஞானமுள்ளவர், கிறிஸ்து தான் நினைத்ததை விட பெரியவர் என்று அவருக்குத் தெரியும். அவர் இயேசுவை "போதகர்" என்று அழைத்தார் (வச. 32). இயேசு ஒரு போதகர் என்பதைவிட மேலானவர் என்பதை அவர் பின்னர் உணர்ந்திருக்கலாம். ஒருவேளை பிற்பாடு அவர் தான் கிறிஸ்து என்று கூட நம்பி இருக்கலாம்!

உணரவேண்டிய பெரிய உண்மை இது, இல்லையா? எவரேனும் இறைவனைத் தேடினால், அவர் மேலும் தகவல்களைத் தருவார். தேடும் நம்பிக்கையற்றவரை பொறுத்தவரை, அவரை விசுவாசத்திற்கு நெருக்கமாக நகர்த்துவதற்கு இயேசு கையை நீட்டுவார். இறைவனைப் பற்றி மேலும் அறிய விரும்பும் விசுவாசிக்கு, நம்பிக்கை கொண்டு தேடுபவருக்கு இறைவன் வெகுமதி அளிப்பார். எவரும் இருளில் இருப்பதை விரும்பாத, மேலும் மேலும் வெளிச்சத்தைக் கொடுக்கும் கருணையுள்ள இறைவன் நமக்கு இருக்கிறார்.

நாம் எந்நிலையில் இறைவனிடம் செல்கிறோம்? திறந்த மனதினை கொண்டு இறைவனை நோக்கினால் அவர் நாம் செல்லக்கூடிய பாதைக்கு அதிக வெளிச்சம் பாய்ச்சுவார்.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ.

........................................................................

புதிய சிந்தனைகள்

எபிரேய மொழியிலிருந்து எழுதப்பட்ட கிரேக்க விவிலியத்தில், “ஆண்டவர்“ (Lord) என்ற வார்த்தை ”யாவே” (Yahweh) என்ற வார்த்தையின் மொழிபெயர்ப்பு. இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறபோதெல்லாம், இஸ்ரயேல் மக்கள் மனத்தில், கடவுளைப்பற்றிய எண்ணம் தான் வரும் எப்போதெல்லாம், அவர்கள் ”ஆண்டவர்” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்களோ, அப்போதெல்லாம், கடவுள் செய்த நன்மைகள், அவருடைய ஆற்றல்கள், மாண்பு மற்றும் மகத்துவம், இஸ்ரயேல் மக்களுக்கு நினைவில் வரும்.

இயேசு இந்த வார்த்தையை பயன்படுத்துவதன் மூலம், மக்கள் மனதில் ஒரு புதிய சிந்தனையை விதைக்கிறார். மெசியா என்றாலே, அரசர், போர், மண்ணகத்தில் அரசாட்சி என்ற மனநிலையோடு, சிந்தனையோடு வாழ்ந்து வந்த மக்களுக்கு, இயேசு இந்த வார்த்தையின் மூலம் கடவுளின் அரசை நினைவுறுத்துகிறார். மக்கள் மனதில் இருக்கக்கூடிய மெசியா, போர் தொடுத்து, கடவுளின் அரசை நிலைநிறுத்த வேண்டும் என்ற, எண்ணத்தை எடுத்துவிட்டு, உண்மையான மெசியா, அமைதியின் அரசர் என்ற செய்தியை அவர் விதைக்கிறார்.

இயேசுவின் மிகப்பெரிய சவால், மக்களின் தவறான புரிதல்களை அகற்றிவிட்டு, புதிய சிந்தனைகளை, புதுமை சிந்தனைகளைப் புகுத்த வேண்டும் என்பதுதான். காலத்திற்கேற்ப, நாம் நமது எண்ண ஓட்டங்களை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். நமது சிந்தனைகள் பழமையிலே ஊறியிருக்கக்கூடாது. வளர்ச்சிக்கான புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் வருகின்றபோது, அதை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் மறைநூல் அறிவு!

இந்த வாரம் முழுவதும், மாற்கு நற்செய்தியின் 12ஆம் அதிகாரத்திலிருந்து இயேசு பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்களுடன் சொற்போர் நிகழ்த்தி, வெற்றிகொள்வதைப் பற்றி வாசித்தோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மறைநூல் அறிஞரின் மறைநூல் அறிவைத் தகர்த்தெறிவதையும், அதனை மக்கள் திரள் மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்த்தையும் வாசிக்கின்றோம்.

இன்றைய பகுதியில் இயேசு திருப்பாடல் 110ஐ மேற்கோள் காட்டி, அதற்கான விளக்கத்தையும் கொடுத்து, மெசியா “தாவீதின் மகன்” என மறைநூல் அறிஞர் கூறுவது சரியல்ல, மெசியா தாவீதுக்கே தலைவர், தாவீதைவிட மேலானவர் என எடுத்துரைக்கிறார். அவரது வாதம் மற்றும் மறைநூல் அறிவைக் கேட்டு வியந்த மக்கள் அவருக்கு மனமுவந்து செவிமடுக்கின்றனர். இதே நிகழ்வைப் பதிவு செய்திருக்கும் மத்தேயு, அதுமுதல் எவரும் அவரிடம் கேள்வி எதுவும் கேட்கத் துணியவில்லை என எழுதியிருக்கிறார்.

இயேசுவிடமிருந்த பல தலைமைப் பண்புகளில் இன்று நாம் சிந்தித்து, வியப்படையும் பண்பு அவரது மறைநூல் அறிவு. இயேசு மறைநூலை, இன்னும் குறிப்பாகத் திருப்பாடல்களை நன்கு அறிந்திருந்தார். திருப்பாடல்களை மனப்பாடமாக அறிந்திருந்தார், செபித்தார், அவற்றின் முழுமையான பொருளையும் உணர்ந்திருந்தார்.

இயேசுவைப் போல நாமும் மறைநூலை அறியும் ஆர்வம் கொள்வோமா!

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் மறைநூல் ஆர்வம் மிக்கவர்களாக எங்களை மாற்றும். திருப்பாடல்களை செபிக்கவும், வாழ்வின் நெறியாகக் கடைப்பிடிக்கவும் அருள்தாரும். தூய ஆவியால் எம்மை நிரப்புவீராக. ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

''இயேசு...'மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி?...தாவீது அவரைத்
தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?' என்று கேட்டார்'' (மாற்கு 12:35-37)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் தாவீதின் வழித்தோன்றலாக ஒருவர் தோன்றி மக்களை வல்லமையோடு வழிநடத்துவார் என்னும் கருத்து உண்டு (காண்க: எசா 9:5-6; எரே 23:5-6; எசே 34:23-24). யூதர்கள் பொதுவாக இவ்வழித்தோன்றலை ''மெசியா'' என்று குறிப்பிட்டார்கள். தாவீது அரசர் எழுதியதாக மரபுவழிக் கருதப்படுகின்ற ''திருப்பாடல்கள்'' நூலில் 110ஆம் பாடலை இயேசு மேற்கோள் காட்டி, தாவீது மெசியாவைத் தம் ''தலைவர்'' என்று குறிப்பிடுவதால் மெசியா தாவீதுக்கு மகனாக இருக்க முடியுமா என்னும் கேள்வியை எழுப்புகிறார். மகனைத் தந்தை ''தலைவர்'' என அழைப்பதில்லை; மகனே தந்தையைத் தம் தலைவராக ஏற்றுக்கொள்வார். எனவே, மெசியாவாக வந்த இயேசு ஒருவிதத்தில் தாவீதுக்கு மகனாக இருக்க முடியாது. அவர் உண்மையில் ''கடவுளின் மகன்''. அதே நேரத்தில் அவர் தாவீதின் வழித்தோன்றலாகப் பிறந்தார் என்பதை நற்செய்தி நூல்கள் காட்டுகின்றன. இந்த வழித்தோன்றல் உலகப் பாணியில் அமைந்த அதிகாரத்தோடு வந்து, உரோமையரை முறியடித்து, இஸ்ரயேலுக்கு அரசியல் விடுதலை வழங்குகின்ற மெசியாவாக இருக்க மாட்டார் என்பதை இயேசு உணர்த்துகிறார். எனவே, ஒருவிதத்தில் இயேசு ''தாவீதின் மகன்'' என்றாலும் அதற்கு இயேசு தருகின்ற பொருள் வேறுபட்டதாக இருப்பதைக் காண்கிறோம்.

-- இயேசு உண்மையிலேயே மெசியாவாக வந்தார். ஆனால் மக்கள் எதிர்பார்த்த மெசியாவைப் போல அவர் படைபலமோ, பொருள்வளமோ, அதிகாரத் தோரணையோ கொண்டவராக வரவில்லை. அவர் ''துன்புறும் மெசியாவாக'' வந்தார். அதே நேரத்தில் இயேசுவை நாம் தாவீதின் வழித்தோன்றல் எனச் சாதாரணப் பொருளில் புரிந்துகொள்வது சரியாகாது. ஏனென்றால் இயேசு கடவுளின் மகனாகவும் இருப்பதால் கடவுளால் மாட்சிபெற்றுள்ளார். கடவுளுக்கே உரித்தான மகிமை அவருக்கு உண்டு. இப்பொருளில் அவர் தாவீதை விட எத்துணையோ உயர்ந்தவர். இவ்வாறு இயேசு தம்மைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்த போது மக்கள் அவர் கூறியதை முழுமையாகப் புரிந்திருப்பார்களா என்பது ஐயமே. என்றாலும், மக்கள் ''இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்'' (மாற் 12:27). நாமும் இயேசுவின் சொற்களைத் திறந்த உள்ளத்தோடு கேட்க வேண்டும். அதே நேரத்தில் நாம் கேட்டவற்றைப் புரிந்துகொள்ள நாம் இறையருளை நாட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் இயேசுவை முழுமையாகப் பின்செல்ல எங்களுக்கு அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

இயேசு, தாவீதின் மகன்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இயேசுவின் காலத்திலும் யூத மறைநூல் வல்லுநர்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மெசியா தாவீதின் மகனாக தாவீதின் குலத்திலிருந்து தோன்றுவார் என்பதை முழுமையாக நம்பினர். இன்றும் இயேசுவை மெசியா என்று நம்பவில்லை. மெசியா தாவீதின் குலத்திலிருந்து தோன்றுவார் என்று இன்றும் காத்திருக்கின்றனர்.இவர்களின் சந்தேகத்திற்கு இயேசு அன்றே பதில் கொடுத்துள்ளார்.

மெசியா தாவீதின் வழிதோன்றல்; பேரரசராய் இருப்பார். மெசியா அரசியல் விடுதலை கொடுப்பவர் என்று நம்பினர். ஆனால் மெசியா இறைமகன்; தந்தை இறைவனோடு வலப்பக்கம் அமர்ந்து அனைத்தையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு இறையாட்சி நடத்துபவர். 'இருக்கிறவர் நாமே' என்னும் தன் தெய்வீக நிலையை அவர் கொண்டுள்ளார் என்ற எண்ணம் அவர்களில் இல்லை. இவ்வாறு ஆன்மீக விடுதலையை இலக்காகக் கொண்ட முழு மனித விடுதலையை நோக்கி மனிதனை நடத்துவார் என்று மெசியாவைப்பற்றி உணரத் தவறினர். தாவீதின் குலத்தில் மனிதனாக, இயேசுவாக பிறப்பார் என்னும் உண்மைளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யூத மறைவல்லுநரின் மெசியாபற்றிய தவறான கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

தாவீதே மெசியாவைத் தன்னுடைய தலைவர் என்று ஏற்றுக்கொண்டார் என்பதை திருப்பாடல் 110:1 லிருந்து மேற்கோள் காட்டி உறுதிசெய்கிறார். தலைவர் என்பதால் மெசியா தன்னைவிட பெரியவர், முந்தியவர் என்பதை தாவீதே ஏற்றுக்கொள்ளுகிறார். மெசியாவின் இறைத்தன்மையையும் அங்கு வலியுறுத்துகிறார். ஆகவே இயேசு வெறுமனே தாவீதின் மகன் மட்டுமல்ல.அவரே மெசியா. இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லியோன்