முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4:13-21

அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். ``நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்'' என்று கூறினார்கள். அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, ``இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது'' என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, ``உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது'' என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 118: 1,14-15. 16,18. 19-21

பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
14 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.
15 நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது;
ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. -பல்லவி

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது;
ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்;
ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. -பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்;
அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால்,
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

மாற்கு 16:09-15

பாஸ்கா காலம்-முதல் வாரம் சனி


நற்செய்தி வாசகம்

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை. அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். இயேசு அவர்களை நோக்கி, ``உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' என்றுரைத்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

மாற்கு 16: 9 - 15
நல்லதும் நன்மையற்றதும்

இந்த சமுதாயத்திலே பல செய்திகள் வெளிவருகின்றன. எல்லா செய்திகளும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறதா என்றால் இல்லை. ஏனென்றால் மனிதனுடைய சிந்தனை வேறு, செய்திகள் அமைக்கப்பட இருக்கின்ற அமைப்புகள் வேறு. எனவே தான் பெரும்பாலும் மனிதர்கள் விரும்பக்கூடிய எதிர்பார்க்கக்கூடிய தகவல்களை மேற்கோடிட்டு காண்பிக்கின்றன. ஏனென்றால் மனிதன் எல்லாவற்றிலும் நாட்டம் கொள்வதில்லை. ஆனால் பெரும்பாலும் நன்மையற்றதுக்கே முக்கியத்துவம். எனவே தான் பல தவறான செய்திகள் அறிவிக்கப்படுகின்றன.

இயேசுவின் உயிர்ப்பு செய்தி பல இடங்களில் நன்மையற்றதாக பார்க்கப்படுகின்றது. அதற்கு உதாரணம் தான் இன்றைய நற்செய்தி வாசகம். ஏனென்றால் தான் பயிற்றுவித்த பயனாளிகள் இயேசுவின் செய்தியை மனித வடிவிலே உணர்ந்தார்கள். அதனால் தான் தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்ற போட்டி, ஏன் எங்களால் வல்ல செயல்கள் செய்ய முடியவில்லை என்ற குழப்பம். இத்தகைய எண்ண அலைகளுக்குள் மூழ்கியே இருந்ததால் தான் இயேசுவின் உயிர்ப்பு காட்சி செய்தி அவர்களுக்கு நன்மையற்றதாக பார்க்கின்றார்கள். எனவே தான் இயேசு தன்னுடைய பயிற்சிக்கு செயல்வடிவம் கொடுக்க அவர்களோடு பந்தியில் அமர்கின்றார்.

நாம் மற்றவர்களோடு உரையாடுகின்ற செய்தி எவ்வாறு இருக்கிறது? நன்மை தரக்கூடியதாக இருக்கின்றதா பிறருக்கு? அல்லது மற்றவர்களின் வாழ்வை அழிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறதா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=====================

உயிர்ப்பு நம்மை உசுப்பிவிட, உரச… (மாற்கு 16 : 9-15)

மாற்கு நற்செய்தியாளர் சுருக்கமான சுவைக்குப் பெயர் போனவர். அவரது பாணியிலேயே இவரும் இயேசுவின் உயிர்ப்பினை மிகச் சுருக்கமாக அதே நேரத்தில் பொருளுள்ள விதத்தில் பதிவு செய்கிறார். உயிர்த்த இயேசு முதன்முதலில் பாவிக்குத் தோன்றினார். இந்த ‘பாவி’ என்கின்ற பதம் மகதலா மரியாவையேக் குறிக்கின்றது என் பல விவிலிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் நாம் அனைவரும் பாவிகளே! என்பதை மறந்துவிடக் கூடாது. எப்படிப் பாவிகளுக்காக இயேசு இவ்வுலகில் பிறந்தாரோ அதைப் போலவே பாவிகளுக்காக அவர் இறந்து உயிர்க்கின்றார். இவ்வாறு அவரின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு அனைத்தும் பாவிகளாகிய நம்மைச் சுற்றியே நடக்கின்றது. “பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது” என்கிறார் பவுலடியார் ( உரோ 5:20) இதைத்தான் நாம் பாஸ்கா புகழுரையில் ‘ஆதாமின் குற்றமே ….. பாக்கியமான குற்றம்’ என்கிறோம்.

இதனால் நான், தொடர்ந்து பாவங்களைச் செய்யுங்கள் என்று கூறவில்லை. மாறாகத் தொடர் பாவத்தினால் நமது வாழ்க்கையில் விரக்தியடையத் தேவையில்லை. நம்பிக்கையிழக்கத் தேவையில்லை. உயிர்ப்பு நம்மை உசுப்பிவிட வேண்டும், உயிர்ப்பு நமக்கு இன்னும் உத்வேகம் கொடுக்க வேண்டும், உயிர்ப்பு நமது வாழ்க்கையை இன்னும் உரசிப் பார்க்க வேண்டும்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 118: 1, 14 – 15, 16, 18, 19 – 21 (21a)
”ஆண்டவரது வலக்கை உயர்ந்துள்ளது”

நமது அன்றாட வாழ்வில், நமக்கு நெருக்கமானவர்களைப் பார்த்து நாம் சொல்வோம்: ”இவர் என்னுடைய வலக்கரம் போன்றவர்”. இங்கு வலக்கரம் என்பது நம்பிக்கைக்குரியவராக அடையாளப்படுத்தப்படுகிறது. எசாயா 41: 13 ”நானே உன் கடவுளாகிய ஆண்டவர். உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, ”அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்”. பொதுவாக எல்லா மக்களுமே வலது கையை முக்கியமாக பயன்படுத்துவதால், அது ஒருவருடைய பலத்தை, ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. லூக்கா 20: 43 ”நான் உம் பகைவரை உமக்கு கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று திருப்பாடலில் உள்ள வசனம் மேற்கோள் காட்டப்படுகிறது. இங்கு வலது கரம், அதிகாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிறது.

மாற்கு 10: 37 ல், யாக்கோபு மற்றும் அவருடைய சகோதரர்கள், இயேசுவின் வலப்பக்கத்தில் அமரும் பாக்கியத்தைக் கேட்கின்றனர். மத்தேயு 25 வது அதிகாரத்தில், தந்தையின் ஆசீர் பெற்றவர்களை வலதுபுறத்தில் ஒன்று சேருமாறு கட்டளையிடுகிறார். இவ்வாறு, வலது கரம் முக்கியமான ஒன்றின் அடையாளமாக விவிலியத்திலும் சரி, நமது வாழ்க்கையிலும் சரி அடையாளப்படுத்தப்படுகிறது. முற்காலத்தில், வலது கரம் ஆசீர்வாதத்தை வழங்கக்கூடிய அடையாளமாகவும் இருந்தது. இஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்கள், தங்களது பிள்ளைகளுக்கு வலது கரத்தை வைத்து, ஆசீர்வதித்தார்கள். ஆண்டவரது வலக்கை உயர்ந்துள்ளது என்கிற இந்த வரிகள், கடவுளின் பலத்தையும், அவர் எதிரிகளின் மீது கொண்டிருக்கிற வல்லமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

 

நமது வாழ்க்கையில் கடவுள் பல்வேறு தீமைகளுக்கு எதிராக நம் சார்பில் இருந்து போராடுகிறார். நமக்கு பாதுகாப்பாக இருக்கிறார். அவரது பலம், நமக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு. நமக்கு பாதுகாப்பும் புகலிடமும் அளிக்கக்கூடிய இறைவனிடத்தில் நம்மையே முழுமையாக ஒப்புக்கொடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

உயிர்ப்பு தரும் செய்தி

மரியா சீடர்களுக்கு, இயேசு உயிரோடு இருக்கிறார் என்று சொன்னபோது, சீடர்கள் நம்பவில்லை, என்று நற்செய்தியில் பார்க்கிறோம். எதற்காக சீடர்கள் மரியாவின் செய்தியை நம்பவில்லை? இயேசு தான் நிச்சயம் உயிர்ப்பேன் என்று உயிரோடு இருந்தபோது அவர்களுக்குச் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கிறபோது, சீடர்கள் உயிர்ப்பை நம்பாததற்கு, அவர்களின் விசுவாசமின்மை காரணமா? என்று கேட்டுப்பார்த்தால், விசுவாசமின்மை என்பதை விட, அதற்கு மேல் மற்றொன்று, அதை நம்புவதற்கு தடையாக இருந்தது. அது என்ன? என்றால், அவர் தான் மரியா. ஏன் சீடர்கள் மரியாவை, அவருடைய செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு தயங்கினார்கள்?

மரியா ஒரு பெண். யூத சமுதாயத்தில் பெண்ணை ஒரு பொருளாகத்தான் பார்த்தார்கள். அவர்களுக்கென்று உரிமை ஏதும்  கிடையாது. அவர்களின் நிலை மிகவும் தாழ்வாக இருந்தது. அதிலும் மரியா ஒரு பாவியாக சித்தரிக்கப்பட்டிருந்தாள். ஏழு பேய்கள் குடிகொண்டிருந்தவளாகவும் மக்கள் அவளைப் பார்த்தனர். இவ்வளவுக்கு கீழே இருக்கக்கூடிய ஒரு பெண்ணுக்கு இயேசு எப்படி காட்சி கொடுத்திருக்க முடியும்? அவளது செய்தியை, நாம் எப்படி நம்புவது? என்பன போன்ற கேள்விகள், சீடர்களின் மனதில் நிறைந்திருந்தது. அதுதான் நம்புவதற்கு தடையாகவும் இருந்தது.

இயேசு தனது உயிர்ப்பிலும் ஒரு அருமையான செய்தியைத் தருகிறார். இந்த உலகில் கடவுள் பாரபட்சம் காட்டுவதே கிடையாது. அனைவரும் கடவுள் முன்னிலையில் சமம். கடவுள் யாரையும் பெண் என்றோ, பாவி என்றோ ஒதுக்கி வைப்பது கிடையாது. அனைவரையும் சமமாகப் பாவித்து நடப்பதுதான் கடவுளின் வழி. அந்த வழியை நாமும் கற்றுக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் பார்வையில் பெண்கள்

இயேசு முதன் முதலாக ஒரு பெண்ணிற்கு உயிர்த்த பிறகு தோன்றுகிறார். யூத சமுதாயம் ஓர் ஆணாதிக்கம் கொண்ட சமுதாயம் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காத சமுதாயம். இயேசுவும் இந்த சமுதாயத்தில் பிறந்தவர் தான். ஆனாலும், பெண்களைப்பற்றிய இயேசுவின் பார்வை வேறுபாடுள்ளதாக இருக்கிறது. தான் வாழ்ந்தபோதே, பெண்களை மிகுந்த மதிப்போடு நடத்தியவர் இயேசுகிறிஸ்து. அவருடைய பார்வையில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. அனைவரும் கடவுளின் பிள்ளைகள். அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள். எனவேதான், தனது தாயை அதிகமாக அவர் நேசித்தார்.

இயேசுவின் இந்த பார்வை பெண்களைப்பற்றிய உயர்ந்த பார்வை பார்ப்பதற்கு வழிகாட்டுகிறது. இயேசு வாழ்ந்தபோதும் சரி, இன்றைக்கு நற்செய்தியில் நாம் பார்ப்பது போல இறந்து உயிர்த்த பிறகும் பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். அன்புக்கு நாம் உதாரணமாக தாயைத்தான் சொல்கிறோம். எந்தச்சூழ்நிலையிலும், தனது பிள்ளையை விட்டுக்கொடுக்காதவர் நிச்சயம் நமது அன்னைதான். பெண்களை நாம் மதிக்கவும், அவர்களை மாண்போடு நடத்தவும் இயேசுவின் வாழ்க்கை நமக்கு கற்றுத்தருகிறது.

இந்த உலகம் அறிவியலில் எவ்வளவுதான் முன்னேற்றம் அடைந்தாலும், பெண்களைப்பற்றிய பார்வை மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. பெண்கள் எவ்வளவுதான் சாதனைகள் பல படித்தாலும், பெண்ணடிமைத்தனம் இந்த மண்ணிலே ஆழமாக ஊறியிருக்கிறது. பெண்மையைப்போற்றுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுதரும் ஆசீர்வாதம்

உயிர்த்த ஆண்டவர் சீடர்களுக்கு மூன்றுவிதமான வல்லமையைத்தருவதை இன்றைய நற்செய்தி பறைசாற்றுகிறது. 1. நற்செய்தி அறிவித்தல் 2. குணமளித்தல் 3. வல்லசெயல்கள் செய்ய ஆற்றல் அளித்தல்.

1. நற்செய்தி அறிவித்தல்: ஆண்டவர் இயேசுகிறிஸ்து தனது பணிவாழ்வைத்தொடங்குகின்ற போது சொல்லக்கூடிய வார்த்தைகள், ‘மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்’. நற்செய்திக்கு ஆண்டவர் இயேசுகிறிஸ்து நற்செய்திக்கு முக்கியத்துவத்தையும், முதன்மையான இடத்தையும் கொடுக்கிறார். இங்கே நற்செய்தி என்பது தந்தையின் அன்பைக்குறிக்கிறது. தந்தையின் அன்பை மக்களுக்கு எடுத்துரைப்பதுதான் நற்செய்தி. அதைத்தான் இயேசு தன் பணிவாழ்வு முழுவதிலும் செய்தார். முடவர்களை நடக்கச்செய்தபோதும், கைசூம்பிப்போனவர்களை குணமாக்கியபோதும், குருடர்க்கு பார்வை கொடுத்தபோதும் தந்தையின் அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். சமுதாயத்தினால் ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு இருந்த அவர்களுக்கு கடவுளின் அன்பு நிச்சயம் உண்டு என்பதை ஆணித்தரமாக புதுமைகள், அருங்குறிகள் மூலம் எடுத்துரைத்தார். இந்த நற்செய்தியை நாம் ஒவ்வொருவருக்கும் நமது வாழ்வு மூலமாக அறிவிக்க வேண்டும்.

2. குணமளித்தல்: உலகத்திலே வாழும் மக்கள் உடல்நோயினால், மன நோயினால், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு குணமளிக்கக்கூடிய வல்லமையை கிறிஸ்து திருச்சபைக்கு தந்திருக்கிறார். இந்த வல்லமையைப்பயன்படுத்தி மக்களை நோயிலிருந்தும், வேதனையிலிருந்தும், மனப்பாரங்களிலிருந்தும் விடுவிக்கக்கூடிய பொறுப்பு திருச்சபையின் பிள்ளைகளாக இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அத்தகைய வல்லமையை அனைவரும் பெற்றுவிடமுடியாது. அத்தகைய வல்லமையைப் பெறுவதற்கு நம்மையே தயாரிக்க வேண்டும், தகுதியாக்கிக்கொள்ள வேண்டும்.

3. வல்லசெயல்கள் செய்ய ஆற்றல் அளித்தல்: மனிதர்கள் குறைவுள்ளவர்கள், பலவீனர்கள். நாம் எவ்வளவுதான் இதிலிருந்து விடுபட முயற்சி எடுத்தாலும், நம்மால் அது இயலாத காரியமாக இருக்கிறது. எனவேதான் ஆண்டவர் இயேசுகிறிஸ்து தனது வல்லமையை நமக்குத்தந்து, நம்முடைய பலவீனம், குறைபாடுகளிலிருந்து விடுதலைபெற நமக்கு உதவிசெய்கிறார். நமது முயற்சியும், ஆண்டவரின் வல்லமையும் இணையும்போது நம்மால், நம்முடைய குறைகளிலிருந்து விடுதலை பெற முடியும். வல்ல பல செயல்களை, ஆச்சரியமூட்டும் செயல்களைச் செய்ய முடியும். இறைவன் தரும் அத்தகைய ஆற்றலை பயன்படுத்தி, நிறைவுள்ளவர்களாக வாழுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்!

" உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால், அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்" என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்வரும் சான்றுகள் இருந்தனர்:

1. மகதலா மரியா மற்றும் இதர பெண்களின் சான்று.

2. எம்மாவு நோக்கிச் சென்ற இரு சீடர்களின் சான்று

3. பதினொருவருக்குத் தோன்றிய நிகழ்வு

இத்தனைக்கும் பிறகும், சிலர் உயிர்த்த இயேசுவை நம்பவில்லை. கடின உள்ளத்தோடு இருந்தனர். எனவேதான், இயேசு அவர்களைக் கண்டிக்கின்றார்.

கடின உள்ளம் என்பது இதுதான்: சொந்த அனுபவத்தை ஒருவர் பகிர்ந்துகொள்ளும்போதுகூட அதனை நம்ப மறுப்பது.

நமது வாழ்விலும் இத்தகைய கடின உள்ளம் இருக்கிறதா? இறைவனின் வல்ல செயல்களை நமது வாழ்விலும், பிறரது வாழ்விலும், நாம் கண்டபிறகும் இன்னும் அவநம்பிக்கையோடும், கவலையோடும், துயரத்தோடும் வாழ்ந்து வருகிறோமா? இதுதான் கடின உள்ளம்.

அதற்காக மனம் வருந்துவோம். இறைநம்பிக்கையில் வளர்வோம்.

மன்றாடுவோம்: சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்விலும், பிறரது வாழ்விலும் நீர் செய்த வியத்தகு செயல்களுக்காக நன்றி கூறுகிறோம்! இத்தகைய அனுபவத்தைப் பெற்ற பிறகும் உமது உயிர்ப்பின் ஆற்றலில் நம்பிக்கையின்றி வாழ்வதற்காக எங்களை மன்னியும். நம்பிக்கை என்னும் கொடையால் எங்களை நிரப்பும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

#8220;அவர்கள் நம்பவில்லை” !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

#8220;அவர்கள் நம்பவில்லை” என்னும் சொற்களும், கருத்தும் எத்தனை முறை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வருகின்றன என்று கவனிப்போம். 1. மகதலா மரியா உயிர்ப்புச் செய்தியை அறிவித்தபோது, அவர்கள் நம்பவில்லை. 2. வயல்வெளியில் நடந்துசென்ற (எம்மாவு) சீடர்களின் உயிர்ப்பின் சாட்சியத்தையும் அவர்கள் நம்பவில்லை. 3. எனவே, இயேசு அவர்களுக்குக் காட்சி தந்தபோது அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார் என்று பார்க்கிறோம்.

பாஸ்கா எண்கிழமையில் இருக்கிற நமது உயிர்ப்பின் நம்பிக்கை எவ்வாறு உள்ளது? நாம் இயேசுவின் உயிர்ப்பை நம்புகிறோமா? நமக்காக இறந்து, உயிர்த்த இயேசு இன்றும் நம்மோடு வாழ்கிறார் என்று ஏற்றுக்கொள்கிறோமா? இயேசுவின் அந்நாளைய சீடர்கள்போலவே, இந்நாள் சீடர்களும் நம்பிக்கையின்மை என்னும் நோயால் வாடுகிறோம். இயேசு இன்று ஒருவேளை நம்மையும் கடிந்துகொள்ளலாம். நாம் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டவர்களாக, நேரான பார்வை கொண்டவர்களாக, உண்மைக்கும், நேர்மைக்கும் தோல்வி இல்லை என்பதை அறிவிப்பவர்களாக வாழ்வோம்.

மன்றாடுவோம்: நம்பிக்கையின் ஊற்றே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உயிர்ப்பில் நம்பிக்கை இழந்த உம் சீடர்களைக் கடிந்துகொண்டீரே. எங்களது நம்பிக்கை இன்மைக்காக மனம் வருந்தி, மன்னிப்பு கோருகிறோம். எங்களை மன்னித்து, நாங்கள் உயிர்ப்பின் மக்களாக வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

''இயேசு சீடர்களை நோக்கி, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம்
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர்
மீட்புப் பெறுவர்' என்றார்'' (மாற்கு 16:15-16)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மாற்கு நற்செய்தி 16:8 என்னும் சொற்றொடரோடு முடிகிறது என்றும், அதற்குப் பின் வருகிற 16:9-20 பகுதி ஒரு பிற்சேர்க்கை என்றும் அறிஞர் கூறுவர். சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு மீண்டும் உயிர்வாழ்கின்றார் என்னும் அதிர்ச்சி தரும் செய்தியைக் கேட்ட பெண்கள் ''கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்'' என்றும், ''நடுக்கமுற்று மெய்ம்மறந்தவர்களாய் யாரிடமும் ஒன்றும் சொல்லவில்லை'' என்றும் மாற்கு நற்செய்தி முடிவடைவது சிறிது விசித்திரமாகப் படலாம். ஆயினும் அந்நிகழ்ச்சி நமக்கு ஓர் ஆழ்ந்த உண்மையை வெளிப்படுத்துகிறது. அதாவது, இயேசுவின் உயிர்த்தெழுதல் இயேசுவின் சீடர்களைப் பொறுத்தமட்டில் ஒரு பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தம் ஆசிரியராக இருந்த இயேசு இறந்தபிறகு எல்லாமே முடிந்துவிட்டது என்று நம்பிக்கை இழந்து தளர்ந்துபோயிருந்த சீடர்களுக்கு அதிர்ச்சி அளித்த நிகழ்ச்சி இயேசுவின் உயிர்த்தெழுதல். இவ்வாறு அதிர்ச்சியுற்ற பிறகும் இயேசுவைப் பின்சென்றோர் அவர் உயிர்பெற்றெழுந்தார் என நம்புவதற்கு ஒரு முக்கிய காரணம் அவர் அவர்களுக்குத் தோன்றி தாம் உயிர்வாழ்வதாக அவர்களுக்கு உணர்த்தியதுதான். அப்போது இயேசு சீடர்களுக்கு ஒரு கட்டளை தருகிறார்: ''உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' (மாற் 16:15).

-- மாற்கு தம் நூலின் தொடக்கத்தில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எழுத்தில் பதிப்பதாகக் கூறியிருந்தார் (காண்க: மாற் 1:1). இப்போது தம் நூலின் இறுதியிலும் நற்செய்தி தொடர்ந்து அறிவிக்கப்படவேண்டிய தேவையை எடுத்துக்காட்டுகிறார். யூதர்களுக்கு மட்டுமன்றி, உலக மக்கள் அனைவருக்குமே இந்நற்செய்தி அறிவிக்கப்படும். எல்லா மக்களும் இயேசுவைப் பற்றி அறிந்து, அவரில் நம்பிக்கை கொண்டு மீட்புப் பெற வேண்டும் என்பதே நற்செய்தியறிவிப்பின் நோக்கமாக இருக்கும். இன்று வாழ்கின்ற நாம் நற்செய்தியின் தூதுவர்களாகச் செயல்பட அழைக்கப்படுகிறோம். நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தியை வாழ்வில் கடைப்பிடிப்பதோடு அச்செய்தியைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதும் நம் பொறுப்பு.

மன்றாட்டு
இறைவா, உம் அன்பின் செய்தியை அனைவருக்கும் அறிவிக்க எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்".

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நல்லவைகளை நாலு பேரிடம் சொல்லத் துடிக்கும் மனது. இது இயற்கை. அனுபவத்தை அண்டை அயலானோடு பகிரந்துகொள்ள ஆசைகொள்வதும் இயல்பு.அதிலும் அதிசயங்கள் அற்புதங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். வித்தியாசமான செய்திகள் என்றால் அவ்வளவு வேகம், விறுவிறுப்பு. பத்திரிக்கைகள் இதைத்தானே முதலீடு செய்கிறது.

இயல்போடு இணைந்து இயங்கும் இயேசுவும் இதன் அடிப்படையிலே படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றும் பெறும் பணியை தன்சீடர்களிடம் ஒப்படைக்கிறார். முதன்முதலாக உயிர்த்த இயேசுவைக் கண்ட மகதலா மரியா, இயல்பாக புறப்பட்டுச் சென்று, இயேசுவின் சீடர்களுக்கு அதை அறிவித்து தன் நற்செய்தியைப் பறைசாற்றும் பணியைத் தொடங்கியுள்ளார். அதன் பின் உயர்த்த இயேசுவை கண்ட சீடர்களுக்கு இயல்பான இச் செயல் ஒரு உன்னத பணியாகக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு இயல்பான ஒன்றை, ஒரு பணியாக ஒப்படைத்ததன் மூலம், இந் நற்செய்தியை பறைசாற்றுவது ஒரு பெருங்கடமை என்பதை உறுதிப்படுத்துகிறார்.

திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அதே உயிர்த்த இயேசுவைப் பார்த்தவர்கள். திருமுழுக்கால் இயேசுவோடு இறந்து உயிர்த்தவர்கள் நீங்கள். ஆகவே அந்த உயிர்ப்பின் அனுபவத்தை உங்கள் அருகில்உள்ள உங்கள் நண்பருக்கு அறிவிக்க வேண்டியது உங்கள் கடமை. சோர்ந்திருக்கும் உங்கள் நண்பருக்கு ஆறுதலும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொடுங்கள். நீங்கள் இயேசுவின் மிகச் சிறந்த நற்செய்திப் பணியாளர். இயேசுவின் ஆசீர் பெறுவீர்கள். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்