புனித மாற்கு - நற்செய்தியாளர் விழா

முதல் வாசகம்

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-14

அன்பிற்குரியவர்களே, ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், ``செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்.'' ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார். அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 89: 1-2. 5-6. 15-16 (பல்லவி: 1ய)
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.

1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்;
நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்;
உமது உண்மை வானைப் போல் உறுதியானது. -பல்லவி

5 ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன;
தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும்.
6 வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்?
தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்? -பல்லவி

15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்;
ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
16 அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்;
உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அவர் கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். (அல்லேலூயா.)

மாற்கு 16:15-20

தூய மாற்கு பெருவிழா

நற்செய்தி வாசகம்

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20

அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றி, ``உலகெங்கும் சென்று படைப்பிற் கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்'' என்று கூறினார். இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

--------------------------------

மாற்கு 16: 15 - 20
நம்பிக்கை

உளவியல் சிந்தனையாளர் சிக்மண்ட் ப்ராய்டு மனிதர்களின் நம்பிக்கையை இவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவார். எல்லாவற்றையும் நம்புவவர்கள் எதையுமே நம்பாதவர்கள் தோ்ந்து தெளிந்து நம்புவர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவர்கள் எல்லாவற்றையும் நம்பக்கூடியவர்கள். இது மனதிலிருந்து பறக்கக்கூடியது. மோசமான சந்தேகப்பேர் வழிகள். இவர்கள் எதையுமே நம்பாதவர்கள். அதாவது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து பெற்றவர்கள். இந்த இரண்டு நிலைகளையும் தவிர்த்து எதை நம்புவது, எதைத் தவிர்ப்பது என்ற தெளிவை யார் பெறுகின்றார்களோ அவர்களே மூன்றாவது வகையைச் சார்ந்தவர்கள். இவர்கள் நல்ல உறவைக் கட்டியெழுப்புவார்கள்.

இறைமகன் இயேசு கிறிஸ்து விரும்புகின்ற நம்பிக்கை இத்தகையதே. அவர்களால் மட்டுமே இறைபுதுமையை காண முடியும் என்று வலியுறுத்துகின்றார். எவ்வாறெனில் இயேசு இறந்தவுடனே சீடர்கள் அவர்களின் பழைய பணியினை தொடர்கின்றனர். மக்கள் மெசியாவாக பார்த்த இயேசு இனி வரவே மாட்டார் என்ற மாய இருளுக்குள் தள்ளப்பட்டனர். அத்தகைய இருள் திரை அகற்றப்பட வேண்டும் என்பதற்காகத்த தான், திறப்பாளர்களாக சீடர்களை அனுப்புகின்றார். ஏனென்றால் சீடத்துவம் இயேசுவுடன் இருப்பதிலும் நற்செய்தியைப் பறைசாற்றுவதிலும் தீய சக்திகளை அகற்றுவதிலும் அடங்கியிருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டி அதற்கு வேண்டிய பயிற்சியை சீடர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இதிலும் பல பிரச்சனைகள் எழுந்தன. ஒருவன் காட்டி கொடுத்து கசப்பான அனுபவத்தைப் பெறுகிறான், மற்றொருவன் கைகழுவி துரோகமான அனுபவத்தைப் பெறுகிறான். இந்த மத்தியில் தான் உயிர்த்த ஆண்டவர் மக்கள் மத்தியில் நம்பிக்கையின் செய்தியை பறைசாற்ற ஆணையிடுகின்றார். இந்த நம்பிக்கையின் செய்தி தரும் தாக்கத்தையும் சீடர் வழியாக எடுத்துக் கூறுகிறார்.

நம் வாழ்வில் நம்பிக்கையின் வழி தாக்கத்தைப் பெற்றிருக்கிறோமா? அல்லது நம்பிக்கையின்மையின் வழி வருகின்ற தாக்கத்தைப் பெற்றிருக்கிறோமா? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்

===========================

1பேதுரு 5: 5 – 14
கிறிஸ்துவில் கொண்டிருக்கிற பற்றுறுதி

தொடக்க கால கிறிஸ்தவ வரலாற்றில், ஆங்காங்கே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்கள், ஒரு குழுவாக வாழ ஆரம்பித்தனர். சிறு சிறு கிறிஸ்தவ குழுக்கள் தோன்றின. தொடக்கத்தில் அவர்களோடு சீடர்கள் தங்கி, அவர்களுக்கு இறைவார்த்தையை அறிவித்திருந்தாலும், மற்ற இடங்களுக்கும் நற்செய்தி அறிவிக்க செல்ல வேண்டும் என்பதால், அவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றனர். அதேவேளையில், அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியமாக இருந்தது. இதற்கு சீடர்கள் கண்டுபிடித்த முறை தான், கடிதங்கள். தாங்கள் நற்செய்தி அறிவித்து, கிறிஸ்துவில் உறுதிப்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்கள் அவ்வப்போது, கடிதங்களை எழுதி, அவர்கள் தொடர்ந்து விசுவாசத்தில் வளர்வதற்கு, துணைநின்றனர். அப்படிப்பட்ட கடிதம் தான், இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு தரப்படுகிறது.

இந்த திருமுகத்தில் பேதுரு மக்களுக்கு பல அறிவுரைகளைச் சொல்கிறார். குறிப்பாக, கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏற்படும் கவலைகளையும், சோதனைகளையும் அவர் விளக்கிக் கூறுகிறார். குறிப்பாக தீமைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டிய முக்கியத்துவத்தை அவர் விளக்குகிறார். நம்மை சோதிப்பதற்கும், நாம் கொண்டிருக்கிற விசுவாசத்திலிருந்து அடிபிறழச் செய்வதற்கும், அலகை காத்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் விசுவாசத்தளர்ச்சி வருகிற சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, நம்மை வீழ்த்துவதற்காக அலகை காத்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து நாம் வெற்றி பெற வேண்டுமென்றால், கிறிஸ்துவில் நாம் கொண்டிருக்கிற விசுவாசத்தில் பற்றுறுதியோடு இருக்க வேண்டும். அப்படி பற்றுறுதியோடு இருக்கிறபோது, நாம் கடவுளின் மாட்சியில் பங்கு பெறுவோம் என்று அறிவுறுத்துகிறார். சோதனை என்பது எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய ஒன்றாகும். அந்த சோதனைகளைக் கண்டு பயந்து விடாமல், பற்றுறுதியோடு நாம் வாழ முயற்சி எடுக்க வேண்டும்.

வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும், கிறிஸ்துவில் நாம் கொண்டிருக்கிற விசுவாசத்தில் நிலைத்திருக்கிறபோது, இறைவன் நம்மை வழிநடத்துவார். சோதனைகளைக் கடந்து, மகிழ்ச்சியோடு வாழ நமக்கு உதவி செய்வார். அத்தகைய விசுவாசத்தில் நாம் வாழ, வளர, இறைவல்லமை வேண்டி மன்றாடுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

 

திருப்பாடல் 89: 1 – 2, 5 – 6, 15 – 16
”உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள்”

கடவுள் நீதியுள்ளவர் என்று விவிலியம் முழுமைக்குமாக பார்க்கிறோம். கடவுளுடைய நீதி இந்த உலக நீதி போன்றது அல்ல. ஏனென்றால், கடவுள் உள்ளத்தையும் ஊடுருவிப்பார்க்கக்கூடியவர். ஆராய்ந்து அறிந்து செயல்படக்கூடியவர். மனிதரைப்போன்று வெளித்தோற்றத்தை வைத்து, ஒருவரை தீர்ப்பிடக்கூடியவர் அல்ல.கடவுளுடைய நீதிக்கும் மனிதர்களுடைய நீதிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மனிதர்கள் பதவிக்காக, பணசுகத்திற்காக, நீதி என்கிற பெயரில் அநீதியை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே யார் பணபலத்தில் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் நீதியை தங்களுக்கு ஏற்ப வளைத்துவிடுகிறார்கள். ஆனால், கடவுளிடத்தில் அப்படி செய்ய முடியாது.

இந்த உலகத்தின் பார்வையில் இஸ்ரயேல் மக்களுக்கு நீதி என்பது கிடைக்க முடியாத ஒன்று. அவர்கள் நீதிக்காக போராட வலிமை படைத்தவர்களாகவும் இல்லை. நீதியைக் கேட்டுப்பெற்றுக்கொள்ளும் நிலையிலும் இல்லை. அவர்களுக்கு நீதி வழங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை. ஏனெனில் அவர்கள் சாதாரணமான மக்கள். எளிய மக்கள். அடித்தட்டு மக்கள். பாமர மக்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், அது கடவுள் நீதிபதியாக இருந்தால் மட்டும் முடியும். அவர்கள் நீதியை பெறுவதற்கு தகுதியிருந்தாலும், இந்த உலகம் அவர்களுக்கு நீதி வழங்கவில்லை. ஏனெனில், வலியவர் மட்டுமே நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும். கடவுள் அவர்கள் சார்பாக இருப்பதனால், கடவுளின் நீதியை முன்னிட்டு அவர்கள் மேன்மை அடைவார்கள் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

கடவுள் சாதாரண, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று போராடக்கூடியவர். அவர்கள் பக்கம் இருந்து, அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருகிறவர். நமது வாழ்க்கையில் நாம் அநீதி செய்யாமல், கடவுள்பக்கம் இருக்கிறவர்களாக வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

நற்செய்தி அறிவிப்பு

ஒரு நூல் எழுதுவது என்பது இப்போது எளிதான செயலாக இருக்கலாம். ஆனால், சுமார் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னால், அது கடினமானது மட்டுமல்ல, அது மிகப்பெரிய சவாலான செயல். ஆனாலும், இயேசுபைப்பற்றிய நற்செய்தி அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக, எல்லா சவால்களையும் துணிவோடு மேற்கொண்டு, இன்றைக்கு நாம் கிறிஸ்துவைப்பற்றி அறிவதற்கான மிகப்பெரிய ஆதாரமாக இருக்கக்கூடிய இந்த மாற்கு நற்செய்தியை எழுதிய, யோவான் மாற்கு உண்மையில் மாமனிதர்.

நற்செய்தி நூல் எழுதுவது மட்டும் கடினமானது அல்ல, அது எழுதப்படுகிற காலச்சூழலும், நற்செய்தியாளரின் வீரதத்தையும், துணிவையும் நமக்கு எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலம். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பலவிதமான சித்திரவதைகளுக்கு உள்ளான காலம். இயேசுவைப்பற்றி அறிவதற்கு, அறிவிப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட காலம். இந்த காலக்கட்டத்தில் நிச்சயமாக நற்செய்தி எழுதுவது என்பது மிகப்பெரிய சவால். சவால்களை துணிவோடு எதிர்கொண்டு எழுதுவதுதான் உண்மையான எழுத்துப்பணி. இது அறிவை வெறுமனே பகிர்ந்து கொள்ளக்கூடிய முயற்சி அல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்துகின்ற பணி. அந்த பணியைச் செய்திருக்கிற மாற்கு நற்செய்தியாளர் உண்மையிலே, நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் தான்.

நற்செய்தி அறிவிப்பு நம்மீது சுமத்தப்பட்ட கடமை, என்கிற பவுலடியாரின் சிந்தனை கிறிஸ்தவர்கள் அனைவருடைய மனத்திலும் விதைக்கப்பட வேண்டும். நற்செய்தி அறிவிப்பு எளிதாக பல வழிகளில் அறிவிக்கப்பட முடியும் என்ற நிலை இருக்கிற இந்த காலக்கட்டத்தில், நான் எப்படி இயேசுவை அறிவிக்கப்போகிறேன்? என்ற கேள்வியோடு, நாம் பதில் தேட முனைவோம். நற்செய்தி அறிவிப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

இயேசு நம்மில் செயலாற்றுகிறார்

நற்செய்தியைப்பறைசாற்ற இயேசு தனது சீடர்களை அனுப்புகிற நிகழ்ச்சி இன்றை வாசகமாக நமக்குத்தரப்படுகிறது. இயேசு தனது சீடர்களை நற்செய்திக்கு அனுப்பியதோடு தனது கடமை நிறைவேறிவிட்டது என்று நினைத்து ஒதுங்கிவிடவில்லை. மாறாக, சீடர்களோடு இருந்து செயலாற்றுகிறார். அவர்களை உறுதிப்படுத்துகிறார். இயேசு நம்மை விட்டு வெகுதூரம் இருக்கக்கூடிய கடவுள் அல்ல. மாறாக, நம்மில் ஒருவராக இருந்து செயலாற்றுகிற கடவுள்.

இயேசுவின் பிரசன்னம் இந்த உலகத்தில் அவர் வாழ்ந்ததோடு முடிந்துவிடவில்லை. அவருடைய பணி உயிர்ப்போடு நிறைவுபெறவில்லை. அவருடைய கடமை விண்ணேற்றத்தோடு நின்றுவிடவில்லை. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தன்னைத் தேடுகிற ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர் ஒளியேற்றுகிறார். தனது பணியைச்செய்யும் பணியாளர்களை அவர் உறுதிப்படுத்துகிறார். துவண்டுபோகிறபோதெல்லாம் அவர்களைத் தாங்கிப்பிடிக்கிறார். தோளோடு தோள் கொடுக்கிறார். இயேசுவின் சீடர்களும் தங்களின் வாழ்க்கையில் இதனை அதிகமாக உணர்ந்தனர். அவர்களுடைய முரட்டுத்தனமான துணிவிற்கு இயேசுவின் வல்லமைதான் காரணம்.

இயேசுவின் பணியை நாம் அனைவருமே முன்னெடுத்துச்செல்ல வேண்டும். இறைப்பணியாளர்கள் மட்டுமல்ல, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அறிக்கையிடுகிற அனைவருமே நற்செய்தியின் பணியாளர்கள்தான். இயேசு நம்மிலே தொடர்ந்து செயலாற்ற, நம்மையே முழுவதுமாக இயேசுவிடம் கையளிப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

துன்பத்தின் வழியாகவும் நற்செய்தி அறிவிப்பு!

மாற்கு நற்செய்தியாளரின் விழாவாகிய இன்று நமது நற்செய்தி அறிவிப்புக் கடமையைப் பற்றிச் சிறிது சிந்திக்க அழைப்பு விடுக்கிறது திருச்சபை.

இன்றைய நற்செய்தி வாசகமும், முதல் வாசகமும் நற்செய்தி அறிவிப்பின் இரு எதிர்கோணங்களை எடுத்தியம்பி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”””””””’’“ என்று கட்டளையிடுகிறார். நற்செய்தி அறிவிப்பின் அடையாளங்களையும் ஆண்டவர் பட்டியல் இடுகிறார். அவற்றில் முகாமையான ஒன்று உடல் நலமற்றோரைக் குணமாக்குவது. நோயுற்றோருக்காகப் பரிந்து மன்றாடி அவர்களை நலம்பெறச் செய்வது ஒரு நற்செய்தி அறிவிப்பு உத்தி.

அதே வேளையில், முதல் வாசகத்தின்படி, “சிறிது காலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்”” “ என்னும் செய்தியின் வழியாக பேதுரு, துன்பத்தின் வழியாகவும் நாம் நற்செய்தி அறிவிக்க முடியும் என ஊக்குவிக்கிறார்.

எனவே, நோயுற்றோருக்காக மன்றாடுவதோடு, அவர்கள் நலம் பெற இயலாவி’ட்டால், அத்துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதன் வழியாக சான்று பகரும் வாய்ப்பினை அவர்கள் பெறுகின்றனர் என்னும் செய்தியையும் நாம் பகிர்ந்துகொள்வோம்.

மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இறைவா என்ன நேர்ந்தாலும் நன்றி கூறி, உமக்கு சான்று பகர்ந்து, நற்செய்தி அறிவிக்கும் பேற்றினை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

''இயேசு சீடர்களை நோக்கி, 'இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்;
மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்...நீங்கள் துயருறுவீர்கள்;
ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்' என்றார்'' (யோவான் 16:16,20)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவருந்திய வேளையில் அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். விரைவில் தாம் இறக்கப் போவதை இயேசு முன்னறிவித்தார். எனவே, ''இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்'' என்று இயேசு கூறினார். இயேசுவைக் காணாமல் சீடர்கள் துயருறுவார்கள் என்பதும் அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. சீடர்கள் அனுபவித்த துயரம் சிறிது காலத்திற்கு மட்டுமே. எனவேதான் இயேசு அவர்களை நோக்கி, ''மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்'' என்றார். இது இயேசுவின் சாவுக்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்பெற்றெழுந்து, சீடர்களுக்குத் தோன்றுவார் என்னும் செய்தியின் முன்னறிவிப்பாயிற்று. ஆக, சீடர்கள் துயரப்படுவார்கள் என்பது உண்மையாயினும் அவர்களுடைய துயரம் ஒருநாள் மகிழ்ச்சியாக மாறும் என்பது அதைவிட அதிக உறுதியான உண்மை.

-- இயேசுவின் சீடர்களாக வாழ்கின்ற நமக்கும் இயேசு கூறுகின்ற வார்த்தைகள் பொருந்தும். அதாவது, இயேசுவை நம்பிக்கையோடு வாழ்கின்ற மக்களுக்குத் துன்ப துயரங்கள் வரும். அவர்களுடைய நம்பிக்கையின் பொருட்டு அவர்கள் இன்னல்களுக்கு ஆளாவர். அவர்களைத் துன்புறுத்துவோர் ஏதோ நல்ல காரியம் செய்வதுபோல நினைக்கக் கூடும். ஆனாவ் இத்துன்பமும் துயரமும் ''சிறிது காலம்'' மட்டுமே நீடிக்கும். ஏனென்றால் இயேசு தம் சீடர்களுக்கு மகிழ்ச்சியின் நற்செய்தியை அறிவிக்கவே வந்தார். அந்த மகிழ்ச்சி நம் மண்ணுலக வாழ்வுக்குப் பின் வருகின்ற விண்ணுலக வாழ்வைச் சார்ந்தது மட்டுமல்ல. இயேசு வாக்களிக்கின்ற மகிழ்ச்சி இவ்வுலகத்திலேயே தொடங்குகிறது என்பதே உண்மை. ஏனென்றால் இயேசு நம்மோடு வாழ்கின்றார். அவர் ஒருபோதும் நம்மைவிட்டுப் பிரிந்து போய்விடவில்லை. இதை நாம் உண்மையாக நம்பினால் நம் உள்ளத்தில் துயருறுவதற்குத் தேவையில்லை. இயேசு நம்மைவிட்டு மறைந்ததுபோன்ற உணர்வு நம்மில் எழுந்தாலும் அது ''சிறிது காலம்'' மட்டுமே என நாம் அறிவோம். ஆக, இயேசுவின் சாவிலும் உயிர்த்தெழுதலிலும் பங்குபெறுவோர் இவ்வுலகிலேயே விண்ணகத்தின் முன்சுவையை அறிகின்றார்கள் எனலாம். நமக்கு வழங்கப்படுகின்ற மகிழ்ச்சி ஒருநாள் நிறைவுபெறும், முழுமையடையும் என்பது நம் நம்பிக்கை.

மன்றாட்டு
இறைவா, எங்கள் துன்ப துயரங்களின் நடுவிலும் உம் உடனிருப்பை உணர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இயேசு சீடர்களை நோக்கி, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம்
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்றார் (மாற்கு 16:15)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு கொணர்ந்த நற்செய்தி என்ன? கடவுள் நம்மை அன்புசெய்கிறார்; நாம் கடவுளின் பிள்ளைகளாக இருப்பதால் கடவுள் காட்டும் வழியில் நடந்து சென்று அவரிடத்தில் நிலையான அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள வேண்டும்; கடவுள் உலகின்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் தன் ஒரே மகனை (இயேசுவை) நமக்கு மீட்பராக அளித்தார்; அவரிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். - இதுவே இயேசு கொணர்ந்த நற்செய்தியின் சுருக்கம். இச்செய்தியை இயேசு ஒருசில மனிதர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படவேண்டிய இரகசியமாகக் கருதவில்லை. மாறாக, உலகில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் இந்நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இயேசுவின் பார்வை. ஆகவே, அவர் தம் சீடர்களுக்கு ஒரு முக்கிய கட்டளை தருகிறார்: ''உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' என்பதே இக்கட்டளை. இதை மத்தேயு இன்னும் விரிவாகத் தருகிறார் (காண்க: மத் 28:16-20). இயேசுவின் சீடர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணி ''நற்செய்தி அறிவித்தல்'' ஆகும். இது வெறும் வார்த்தைகளால் நடைபெறுகின்ற நிகழ்வு அல்ல. மாறாக, நற்செய்தி என்பது ஒரு வாழ்க்கை முறை. இயேசுவின் போதனையை உள்ளத்தில் ஏற்று, அதை வாழ்வில் கடைப்பிடிப்பதே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம். இதையே நாம் ''சான்று பகர்தல்'' என்கிறோம்.

-- இவ்வாறு நாம் நற்செய்திக்கு நம் வாழ்வின் வழியாகச் சான்று பகர்ந்தால் உலக மக்கள் நற்செய்தியை அன்னியமாகப் பார்க்கமாட்டார்கள். மேலும், இயேசுவின் போதனை மனிதரை ஓர் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் வழியாக உள்ளது. இவ்வுலகத்தோடு எல்லாமே முடிந்துபோகும் என்றில்லாமல், கடவுளின் ஆட்சி நிறைவுறும் காலம் இவ்வுலகைக் கடந்தது என கிறிஸ்தவ நம்பிக்கை நமக்கு அறிவுறுத்துகிறது. அதே நேரத்தில் இவ்வுலகை அன்பு நிலவும் ஓர் இடமாக, நீதி தவழ்கின்ற தளமாக மாற்றியமைத்திட நாம் உழைக்க வேண்டும் என்பதும் நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம் ஆகும். இவ்வாறு, இயேசுவைப் பின்செல்வோர் அவருடைய ஆவியால் உந்தப்பட்டு நற்செய்தியின் தூதுவர்களாக மாறினால் இவ்வுலகில் கடவுளின் ஆட்சி இன்னும் தெளிவாகத் துலங்கும். நற்செய்தியை அறிவிப்போர் கிறிஸ்துவையே உலகுக்குக் கொண்டுசெல்கின்ற கருவிகளாகச் செயல்படுவர். நற்செய்தியின் ஆற்றல் இவ்வுலகை உருமாற்றும் திறன் கொண்டது என நாம் உணர்ந்தால் நம் வாழ்வு அனைத்துமே நற்செய்தியில் தோய்ந்ததாக மாறும்.

மன்றாட்டு
இறைவா, உம் மகன் வெளிப்படுத்திய நற்செய்தியால் நாங்கள் உருமாற்றம் அடைய அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்