ஆண்டவரின் திருக்காட்சி


முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6

எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.

உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்�

திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!
உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. -பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக;
நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்;
பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். -பல்லவி

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்;
சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.
11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்.
எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். -பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.
13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்;
ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3, 5-6


சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.

மத்தேயு 2:1-12

மூவரசர் திருவிழா


நற்செய்தி வாசகம்�

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, �யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்'' என்றார்கள்.

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், �யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.

ஏனெனில், `யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இi றவாக்கினர் எழுதியுள்ளார்'' என்றார்கள்.

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், �நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்'' என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

08.01.2023
திருக்காட்சி பெருவிழா

இந்த உலகத்திலே எல்லா காட்சிகளும் நமக்கு ஏதாவது ஒரு அர்த்தத்தையோ அல்லது மகிழ்ச்சியையோ கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. பிறந்த குழந்தையின் காட்சி தாயின் உள்ளத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. சூரியனின் காட்சி மனித உடலுக்குத் தேவையான வெப்பநிலையைக் கொடுக்கின்றது. இயற்கையின் காட்சி கடவுளின் பிரசன்னத்தை காட்டுகின்றது. ஆனால் ஆண்டவருடைய திருக்காட்சி நமக்கு வாழ்வைக் கொடுக்கின்றது. ஏனென்றால் ஆண்டவரைக் கண்டு இத்தகைய வாழ்வைப் பெற்ற மூன்று நபர்களைத் தான் இன்றைய வாசகத்தில் நாம் பார்க்கின்றோம்.

விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி இந்த மூன்று நபர்களும் (கஸ்பார், மெல்கியோர், பல்தசார்) ஞானிகள் அல்ல. ஒருவேளை ஞானிகளாக இருந்திருந்தால் யூதர்களின் அரசனாக பிறந்தவர் எங்கே என்று சாதாரண அதாவது பட்டறிவோடு செயல்படும் அரசரிடம் கேட்க வாய்ப்பில்லை. அதுவும் ஏரோது தன் பதவியை தக்க வைக்க தன் உறவினர்களைக் கொன்றவன். இவர்கள் அரசர்களாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனென்றால் அரசர்களாக இருந்தால் ஒருவேளை ஏரோது தன் அரண்மனையில் அவர்களை தங்க வைத்து விட்டு, தன் படைவீரர்களை அனுப்பி தேட கட்டளை பிறப்பித்திருக்கலாம். உண்மையில், இவர்கள் யார் என்றால் வானியல் பண்டிதர்கள். நட்சத்திர நகர்வு, பறவை இடம் பெறுதல் போன்றவற்றை வைத்துக் காலங்களை கணிக்கக்கூடியவர்கள். அதனால் தான் பிறந்தவர் அரசராக ஆட்சி செய்வார் (பொன்), கடவுள் நிலையை பெற்றவர் (தூபம்), மனிதனாக செயல்படுவார் (வெள்ளைப்போளம்) என்று இந்தப் பொருட்களை காணிக்கையாக கொடுக்கின்றார்கள்.

பாலன் இயேசுவின் காட்சி எப்படி இவர்களுடைய வாழ்க்கையில் வாழ்வைக் கொடுக்கிறது என்றால் இவர்கள் ஒற்றுமையோடு வருகின்றார்கள். வெவ்வேறு நாட்டவர்களாக இருந்தபோதிலும் ஒற்றுமையோடு ஒரு விண்மீன் வழிகாட்டுதலால் வந்தார்கள். வெவ்வேறு இனத்தவர்களாக இருந்தாலும் இவர்களுடைய ஒற்றுமை பாலனின் காட்சி வாழ்வைக் கொடுக்கிறது. நாமும் கடவுளைக் காண ஆலயம் வருகின்றோம். ஒற்றுமையோடு வருகிறோமா? பாலன் இயேசு பிறந்ததை அறிந்ததும் தங்களிடமுள்ளதை பகிர்ந்து கொள்ள முன் வருகின்றார்கள். இடையர்கள் தங்களிடமுள்ளதை கொடுக்க பாலனைத் தேடினார்கள். கண்டு கொண்டு வாழ்வு பெற்றனர். ஏரோது இயேசுவிடமிருந்து எடுக்க தேடினான், எனவே காட்சி கிடைக்கவில்லை. விவிலியத்தில் கூட சாரிபாத் கைம்பெண், ஏழை கைம்பெண், சக்கேயு கொடுக்க முன்வந்தனர். கடவுளிடமிருந்து வாழ்வு பெற்றனர். விரும்பிக் கொடுக்கும் மனம் இருக்கிறதா? மூன்று நபர்களும் மகிழ்ச்சியோடு வந்தனர். கண்டு கொண்டனர். ஏரோது துக்கத்தோடு தேடினான். எனவே இயேசுவின் காட்சி கிடைக்கவில்லை. நாம் கடவுளை காண மகிழ்ச்சியோடு வந்திருக்கிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===================

 

தியானப் பாடல் சிந்தனை:திருப்பாடல் 72: 1 – 2, 7 – 8, 10 – 11, 12 – 13

“ஆண்டவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்”

இந்த திருப்பாடல் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தாவீது அரசர் தன்னுடைய இறுதிகாலத்தில் இந்த பாடலை சொல்ல, சொல்ல வேறு ஒருவர் எழுதியிருக்கலாம். ஏனென்றால், அவருக்கு அடுத்து, அவருடைய மகன் சாலமோன் ஆட்சி செய்வதற்கான தயாரிப்பாக இந்த திருப்பாடல் பார்க்கப்படுகிறது. தனக்கு பின், தன்னுடைய வாரிசான சாலமோன் சிறப்பான விதத்தில் மக்களை வழிநடத்த வேண்டுமென்ற ஒரு செபஉணர்வு இந்த பாடலில் அதிகமாகக் காணப்படுகிறது.

எல்லா இனத்தவரும் கடவுளுக்கு ஊழியம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது. தர்சீசு. தீவுகள். செபா, சேபா போன்ற இடங்களும் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் என்ன பொருள்? தர்சீசு என்பது மிகப்பெரிய நகரமாகச் சொல்லப்படக்கூடிய ஓர் இடம். இஸ்ரயேலம் மக்கள் வாழ்ந்த இடத்திலிருந்து வெகுதூரத்தில் மறுமுனையில் காணப்படக்கூடிய ஓர் இடம். அதேபோல மற்ற இடங்களும் இங்கே சுட்டிக்காட்ட விரும்பக்கூடிய செய்தி, அவையனைத்தும் எங்கோ காணப்படக்கூடிய இடங்கள். ஆக, உலகம் முழுவதிலிருந்தும் மக்கள், கடவுளின் பேரன்பை. இஸ்ரயேல் மக்கள் வழியாக கண்டுகொண்டு, அவரை அரசராக ஏற்றுக்கொண்டு ஊழியம் செய்வார்கள் என்பதுதான், இங்கே நாம் அறிந்துகொள்கிற செய்தியாக இருக்கிறது.

கடவுளின் அன்பையும், வல்லமையையும் மற்ற மக்கள் கண்டுகொள்ளக்கூடிய அளவுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கண்டுகொள்ளாதது வேதனையிலும் வேதனை தான். நாம் முதலில் கடவுளின் பேரன்பை முழுமையாக உணர வேண்டிய அருள் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------

திருக்காட்சிப் பெருவிழா

திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர். அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது.

இன்றைக்கு திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின் வழிகாட்டுதல், அவர்கள் மெசியாவை ஆராதிப்பதற்கு உதவியாக இருந்தது. அவர்களின் உள்ளம் இயேசுவைக் காண வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தபோது, வழிதெரியாமல் திணறிக்கொண்டிருந்தாலும், அந்த நேர்மையான எண்ணம், அவர்களைக் கடவுளின் மகனிடம் கொண்டு சேர்த்தது.

நமது எண்ணம் சிறந்து இருந்தால் சிறப்பு. நிச்சயம் நாம் செல்ல வேண்டிய எல்லையை அதுவே நமக்குக்காட்டும். நமது வாழ்வில் நாம் எப்போதும் நல்லவற்றை எண்ணுவோம். மற்றவர்களிடம் நம்மை ஒப்பிடாமல், நாமே நல்ல உதாரணமாக வாழ, முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

யூதேயாவிலுள்ள பெத்லகேம் மெசியாவின் பிறப்பிடம் தான்! அனைத்தையும் கடந்த கடவுள் மனிதனாய் வருவதென்றால் ஒரு குறித்த காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் கால்பதிக்க வேண்டும் அல்லவா? ஆயினும் இந்த மெசியா யூதரின் அரசர் என அழைக்கப்பட்டாலும், அனைத்துலகின அரசர், எல்லா இனங்களையும் தன் ஆளுமையால், தன் அதிகாரத்தால், தன் வார்த்தையால், தன் மரணம், உயிர்ப்பால் ஒன்றினைக்கக் கூடியவர். இறைவனின் ஒளி எல்லா இனங்களின் மேலும் ஒளிச் செய்ய தோன்றியவா என்பைதை தேடி வந்து ஞானியர் அனுபவத்த தரிசனமும். வெளிப்பாடும, தேன்றி வழநடத்திய சிறப்பு விண்மீனும் வெளிப்படுத்துகின்றன.

பணி. மைக்கிள் மரியதாஸ் cmf.

---------------------------------------------

திருப்பாடல் 72: 1-2, 7-8, 10-13

"ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்"

இன்றைய விழாவுக்குப் பொருத்தமான ஒரு திருப்பாடலைப் பதிலுரைப் பாடலாகச் செபிக்கிறோம். ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவாகிய இன்று, குழந்தை இயேசுவைத் தேடி கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து வணங்கிய நிகழ்வைக் கொண்டாடி, மெசியாவாம் இயேசு புற இனத்தாருக்கும் தம்மை வெளிப்படுத்தியதை நினைவுகூர்கிறோம்.

எனவே, இந்த நாளில் "ஆண்டவரே, எல்லா இனத்தாரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்" என்ற பல்லவியைப் பாடுவது பொருத்தமானதே.

திருப்பாடல் 72 ஓர் அரச திருப்பாடல், அதாவது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் அரசர்களின் பெருமைகள், அவர்களின் அரியணை ஏறுதல் போன்ற விழாக்களைப் புகழ்ந்து பாடிய பாடல்கள். இந்தப் பாடல்கள் பின்னர் மெசியாமீது ஏற்றிப் புரிந்துகொள்ளப்பட்டன. திருப்பாடல 72 "அரசருக்காக மன்றாடல்" எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. "சாலமோனுக்கு உரியது" என அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.

இந்தத் திருப்பாடலைக் கூர்ந்து வாசித்தால், அரசன் சாலமோனுக்காக (அல்லது ஏதோ ஓர் இஸ்ரயேல் அரசனுக்காக) இறைவனை மன்றாடி பாடப்பட்ட பாடல் என்பது தெளிவாகும். ஆனால், பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் ஒளியில் புதிய பொருள் பெறுகிறது என்னும் மீட்பின் பார்வையில் இயேசுவே அந்த அரசர் என இன்றைய விழாவில் நாம் புரிந்துகொள்கிறோம்.

"தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள். சேபாவிலும், செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்" (72:10-11) என்னும் வரிகள் இன்றைய விழாவுக்கு நன்கு பொருந்துகின்றன. கீழ்த்திசை ஞானிகள் "நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்" என்ற நற்செய்தி வாசக வரிகள் இத்திருப்பாடல் வரிகளின் நிறைவாக அமைகின்றன.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகன் இயேசுவை எல்லா இனத்தாரும் வணங்குவர் என்னும் மறையுண்மையை இன்று நாங்கள் கொண்டாடி உம்மைப் போற்றுகிறோம். எல்லா இனத்தாரும் இயேசு வழியாக உமக்கு ஊழியம் செய்வார்களாக, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

-------------

ஆண்டவரின் திருக்காட்சி!

இயேசு தன்னைப் புற இனத்தவருக்கு வெளிப்படுத்திய விழா இன்று. "எருசலேமே எழு! ஒளி வீசு. உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன் மேல் உதித்துள்ளது" என்று எசாயா இறைவாக்கினர் வழியாக ஆண்டவர் உரைத்த வாக்குறுதி குழந்தை இயேசுவில் நிறைவேறியது. அதே இறைவாக்கு இன்று நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒலிப்பதுதான் இன்றைய விழா.

நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விழா. இருளில் இருப்போருக்கு ஒளி பிறந்துள்ளது எனப் பறைசாற்றும் விழா. இந்த உலகில் நன்மையும், உண்மையும் வெல்லும் என முழங்கும் விழா. இறைவன் நம் அனைவருக்கும் ஆண்டவர், இந்தப் புவி முழுவதும் அவரது மாட்சி ஒளிரும் என அறிவிக்கும் விழா. எனவே, நாம் நம் இதயங்களில் புதைந்துள்ள அவநம்பிக்கை என்னும் இருளை அகற்றி, நம்பிக்கைத் தீபம் ஏற்றுவோம். இறைவன் இந்த உலகைக் கைவிட்டுவிடவில்லை. இறைவனின் கரங்களில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்னும் நம்பிக்கையுடன் வாழுவோம். அந்த நம்பிக்கையைப் பிறருக்கும் ஊட்டுவோம்.

மன்றாடுவோம்: உலகின் ஒளியாக உம்மை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உலகில் வாழும் அனைத்து நாட்டு மக்களுக்கும் நீரே மீட்பராக, ஒளியாக, வழியாக, நம்பிக்கை நாதமாக உம்மை வெளிப்படுத்தியிருப்பதற்காக நன்றி கூறுகிறோம். இந்த நம்பிக்கை எங்கள் வாழ்விலும் வழிபாட்டிலும் வெளிப்படுவதாக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


- அருட்பணி. குமார்ராஜா

---------------------=========================

இணையதள உறவுகளே

ஞானிகள் பொன்னும், சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள், பொன்னைக் கொடுத்தவர், அந்த குழந்தையை ஒரு அரசனாகக் கண்டார். சாம்பிராணியைக் கொடுத்தவர்,தெய்வமாகக் கண்டார். வெள்ளைப்போளத்தைக் கொடுத்தவர் மனிதனாகப் பார்த்தார்,

பார்க்கும் ஒவ்வொரு குழந்தையிலும் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிலும் நிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இறைவனின் சாயலை கண்டு, இருப்பதைப் பகிர்ந்தால் இந்த பூவுலகம் புனிதமாகுமல்லவா.இத்தகைய சூழல்களில் இறைச்சாயலைக் காண மனிதன் தவறும்போது, மனிதன் எதிர்பாராவிதமாக தன்னை வெளிப்படுத்துவதை மனிதன் தவிர்க்கமுடிவதில்லை: தாங்க முடிவதும் இல்லை.

ஆகவே, இதமான சூழலில் இறைவன் தன்னை வெளிப்படுத்தும் போது, அதில் இறைச் சாயலைக் கண்டு, இருப்பதை இல்லாதாரோடு பகிர்வோம். பெரு மகிழ்ச்சியோடு திரும்பிய ஞானிகளைப் போல, நம் வாழ்வும் மகிழ்ச்சியால் நிரம்பும்.

-ஜோசப் லீயோன்

 

ஆண்டவரின் திருக்காட்சி!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு தன்னைப் புற இனத்தவருக்கு வெளிப்படுத்திய விழா இன்று. “எருசலேமே எழு! ஒளி வீசு. உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன் மேல் உதித்துள்ளது” என்று எசாயா இறைவாக்கினர் வழியாக ஆண்டவர் உரைத்த வாக்குறுதி குழந்தை இயேசுவில் நிறைவேறியது. அதே இறைவாக்கு இன்று நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒலிப்பதுதான் இன்றைய விழா.

நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விழா. இருளில் இருப்போருக்கு ஒளி பிறந்துள்ளது எனப் பறைசாற்றும் விழா. இந்த உலகில் நன்மையும், உண்மையும் வெல்லும் என முழங்கும் விழா. இறைவன் நம் அனைவருக்கும் ஆண்டவர், இந்தப் புவி முழுவதும் அவரது மாட்சி ஒளிரும் என அறிவிக்கும் விழா. எனவே, நாம் நம் இதயங்களில் புதைந்துள்ள அவநம்பிக்கை என்னும் இருளை அகற்றி, நம்பிக்கைத் தீபம் ஏற்றுவோம். இறைவன் இந்த உலகைக் கைவிட்டுவிடவில்லை. இறைவனின் கரங்களில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்னும் நம்பிக்கையுடன் வாழுவோம். அந்த நம்பிக்கையைப் பிறருக்கும் ஊட்டுவோம்.

மன்றாடுவோம்: உலகின் ஒளியாக உம்மை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உலகில் வாழும் அனைத்து நாட்டு மக்களுக்கும் நீரே மீட்பராக, ஒளியாக, வழியாக, நம்பிக்கை நாதமாக உம்மை வெளிப்படுத்தியிருப்பதற்காக நன்றி கூறுகிறோம். இந்த நம்பிக்கை எங்கள் வாழ்விலும் வழிபாட்டிலும் வெளிப்படுவதாக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

 

-------------------

''கிழக்கிலிருந்து ஞானிகள் வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?
அவரது விண்மீண் எழக் கண்டோம்.
அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள்'' (மத்தேயு 2:2)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- கீழ்த்திசை ஞானியர் இயேசுவை வணங்கினர் என்னும் செய்தி மத்தேயு நற்செய்தியில் இடம் பெறுகிறது. மனிதராகப் பிறந்த இறைக் குழந்தை இஸ்ரயேலரை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரையும் மீட்க வந்தார் என்னும் கருத்து இவ்வரலாற்றில் கூறப்படுகிறது. கீழ்த்திசை ஞானியர் பிற இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் நேரிய உள்ளத்தோடு கடவுளைத் தேடுகின்ற எல்லா மனிதருக்கும் அடையாளமாக அமைகின்றார்கள். இயற்கையில் தோன்றிய ஒரு சிறப்பு நிகழ்வு அவர்களைக் கடவுளிடம் இட்டுச் செல்கிறது. அதாவது, அதிசய விண்மீன் ஒன்று அந்த ஞானியருக்கு வழிகாட்டியாக அமைந்து அவர்களை வழிநடத்துகிறது.

-- மனிதர் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க உருவாக்கப்பட்டவர்கள். அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் கடவுள் வேட்கை பதிந்துள்ளது. எனவேதான் தொடக்க காலத்திலிருந்தே மனிதர் கடவுளைத் தேடி வந்துள்ளனர். சில வேளைகளில் மனிதர்கள் கடவுளைத் தவறாக அடையாளம் கண்டதுண்டு. ஏன், இன்றுகூட கடவுள் என்றால் யார் என்னும் கேள்விக்கு ஒத்த கருத்துடைய பதில் கிடைப்பது அரிது. ஆனால் அமைதியின்றி அலைமோதுகின்ற மனித உள்ளம் கடவுளைக் கண்டு, உணர்ந்து அனுபவிக்கின்ற நிலையில்தான் உண்மையான அமைதியைக்; கண்டடையும். கடவுளிடமிருந்து அகன்று போகின்ற வேளைகளில் நம் உள்ளத்தில் சஞ்சலம் உண்டாவதை நாம் உணர்கின்றோம். ஞானியருக்கு வழிகாட்டிய விண்மீன் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்த வேளைகளில் அவர்களும் வழிதடுமாறியதுண்டு. ஆனால் அவர்களுடைய தேடல் தொடர்ந்தது. விண்மீன் காட்டிய ஒளியும் இறுதிவரை குறைபடவில்லை. கடவுளின் அருள் என்னும் ஒளி நம் இதயத்தில் ஒளிர்ந்து, நம்மை வழிநடத்துவதை நாம் உணர வேண்டும். நம் இதயம் நம்மில் தூண்டுகின்ற ஆழமான ஆவல்களை நாம் உதறித் தள்ளிவிடாமல் தொடர்ந்து வழிநடந்தால் உலகின் ஒளியாகிய கிறிஸ்துவைக் கண்டுகொள்வோம். ஒளிபெற்ற நாம் நம் நம்பிக்கைப் பயணத்தை மீண்டும் தொடர்வோம். பிறரை இயேசுவிடம் இட்டுச்செல்கின்ற சாட்சிகளாக மாறிடுவோம்.

மன்றாட்டு
இறைவா, நீர் காட்டுகின்ற ஒளியைத் தொடர்ந்து எங்கள் நம்பிக்கைப் பயணம் அமைந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

------------------

-"விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்"-

இயேசுவின் அன்புக்குரியவரே!

இயற்கை இறைவனின் குரல். விண்மீன் சிலருக்கு வாழ்வைக் கொடுத்தது. சிலருக்கு அழிவைக் கொடுத்தது. சிலர் மகிழ்ந்தனர். வேறு சிலர் கலங்கினர். சிலர் அறிவு தெழிவு பெற்றனர். மற்றும் சிலர் குழப்பமடைந்தனர். இறைவனின் குரலைக் கேட்டோர் மகிழ்ந்தனர், தெழிவு பெற்றனர். அவர் குரலைக் கேளாதோர் கலக்கமும் குழப்பமும் அடைந்தனர்.

விண்மீன், சுனாமி, நில நடுக்கம் எல்லாம் இறைவன் பேசும் விதம். நோவா காலத்துப் பெரு வெள்ளம், "மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டதன்"(தொ.நூ 6'5-6) விழைவு. சோதோம்,கொமோராவின் அழிவு "சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது"( தொ.நூ 18'20) என்பதை உணர்த்தவில்லையா!

விண்மீனும் சுனாமியும் பெரு வெள்ளமும் கந்தகமும் நெருப்பும் தோன்ற வேண்டும். அதன் மூலமாகத்தான் கடவுள் பேச வேண்டும் என்று காத்திருப்பது அறிவீனம். வீட்டிலும் வீதியிலும் நடக்கும் சிறு நிகழ்ச்சியிலும் கடவுள் பேசுகிறார். இக்குரலைக் கேட்கும் இறை அமைதி நம்மிலும் நம்மைச் சுற்றலும் நிலவுமாயின் தவறைத் திருத்திக்கொள்வோம். குழப்பத்திற்கு அவசியம் இல்லை. மகிழ்ச்சி உங்களில் நிலவும். வாழ்த்துக்கள். ஆசீர்.

:- ஜோசப் லியோன்