புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழா

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5 - 2: 2

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் இயேசு கிறிஸ்துவிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவர் ஆவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோம் என்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யர் ஆக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும். என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 124: 2-3. 4-5. 7-8

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். -பல்லவி

4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்;
பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;
5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். -பல்லவி

7b கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.
8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

மத்தேயு 2:13-18

மாசில்லா குழந்தைகள் திருநாள்



நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ``நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும் வரை அங்கேயே இரும். ஏனெனில் குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்'' என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ``எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றம் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கு ஏற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். அப்பொழுது ``ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை'' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

1யோவான் 1: 5, 2: 2
கிறிஸ்துவுடனான வாழ்க்கை

நேர்மை என்பது நமது வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் இடையே நிலவுகிற இணக்கம். இது எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவர் நேர்மையாளராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். இதைத்தான் யோவான், தன்னுடைய மடலில் குறிப்பிடுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது, இப்படிப்பட்ட நேர்மையான வாழ்க்கை வாழ்வது ஆகும். நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோம் என்று அறிக்கையிட்டால் மட்டும் போதாது, மாறாக, அவருடைய விழுமியங்களை நாம் வாழ்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

”நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நட்புறவு உண்டு என்போமென்றால், நாம் பொய்யராவோம்”. நம்முடைய வாழ்க்கை பல நேரங்களில் இப்படித்தான் அமைவதாக இருக்கிறது. கிறிஸ்துவுக்குள்ளாக நாம் வந்து விட்டோம் என்று சொல்கிறோம். ஆனால், நம்முடைய வாழ்க்கை அதனை வெளிப்படுத்தவில்லை. அதற்கு சான்றுபகரவும் இல்லை. நம்முடைய வாழ்க்கை அதற்கு சான்று பகராதபோது, நாம் எப்படி, கிறிஸ்துவுக்குள் வாழ்வதாகச் சொல்ல முடியும்? அது தவறானது மட்டுமல்ல, முற்றிலும் முரண்பட்ட ஒரு வாழ்க்கை ஆகும். அப்படிப்பட்ட வாழ்க்கை, கடவுளுக்கு எதிரான வாழ்க்கை.

நேர்மையோடு வாழ வேண்டும் என்கிற விருப்பம் மட்டும் நமக்கு போதாது. அதனை வாழ வேண்டும் என்பது நம்முடைய வாழ்வின் அங்கமாக மாற வேண்டும். அதற்காக முயற்சி எடுக்க வேண்டும். இறைவனின் துணையோடு, நம்மால் அந்த வாழ்க்கையை வாழ முடியும் என்கிற நம்பிக்கை வேண்டும். அப்போது, நிச்சயம் நம்மால் அந்த வாழ்க்கையை வாழ முடியும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

மாசற்ற குழந்தைகள் திருவிழா

மாசற்ற குழந்தைகள் தினம் என்றால் என்ன? இதனைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? உரோமை அரசால், யூதர்களை ஆள்வதற்கு என்று நியமிக்கப்பட்ட ஏரோது அரசரால் கொல்லப்பட்ட குழந்தைகளைத்தான், மாசற்ற குழந்தைகள் தினமாக, திருச்சபை கொண்டாடுகிறது. ஏரோது எதற்காக, ஒன்றுமறியாத பச்சிளங்குழந்தைகளைக் கொல்ல வேண்டும்?

ஞானிகளால் மெசியா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த ஏரோது, குழந்தையினால் தன்னுடைய அரசுக்கு ஆபத்து என்று நினைத்தான். ஆனால், எந்த குழந்தை தன்னுடைய பதவிக்கு ஆபத்தாக வருகிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய பதவியை காப்பாற்றுவது ஒன்றே, அவனுடைய இலக்காக இருந்தது. அதற்காக எத்தனை குழந்தைகளை பழிகொடுத்தாலும் தகும் என்று நினைத்தான். அவர்கள் அனைவரையும் ஈவு, இரக்கமில்லாமல் கொன்றொழித்தான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால், கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவருமே, திருச்சபையினால் மறைசாட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதிகார வெறிக்கு பழிகடாக்கள் தான் இந்த மாசற்ற குழந்தைகள். இன்றைக்கு பெற்றோர், தாங்கள் நிறைவேற்ற முடியாத ஆசைகளை தங்களின் குழந்தைகளிடத்தில் திணித்து, அவர்களை தங்களுடைய விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப வளர்க்க வேண்டும் என்று நினைத்து, குழந்தைகளின் ஆளுமையைச் சிதைக்கின்றனர். குழந்தைகளை அவர்களின் இயல்பில் வளர நாம் முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

கடவுளின் கரம்

யூதப் பாரம்பரிய மக்கள் கனவு வழியாக கடவுள் மக்களோடு பேசுகிறார் என்று நம்பினர். எனவே, கனவு வருகிறபோது, அவர்கள் அதை சாதாரணமானதாக கருதுவதில்லை. அதில் இருக்கக்கூடிய அர்த்தங்களை விளக்குவதற்கு ஏராளமான பேர், பாலஸ்தீனத்தில் இருந்தார்கள். எனவே, யோசேப்பு கனவை சிந்தித்து, அர்த்தம் கண்டுபிடிக்க முனைவதில், பொருள் இருக்கிறது. ஆனால், இந்த பகுதியை வாசிக்கிறபோது, நமக்கு எழுகிற முக்கியமான கேள்வி: யோசேப்பு எதற்காக எகிப்திற்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்? எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் என்ன தொடர்பு? இவற்றை இப்போது பார்ப்போம்.

யூதர்களுக்கு எப்பொழுதெல்லாம் வேற்று அரசர்கள் வந்து அவர்களைத் துன்புறுத்தினார்களோ, அப்போதெல்லாம் தாங்கள் புகலிடம் செல்லும் இடமாக எகிப்தை அவர்கள் வைத்திருந்தார்கள். ஒருவேளை அவர்களது முன்னோர் அங்கே பல ஆண்டுகளாக பாரவோன் மன்னனுக்கு அடிமைகளாக இருந்ததால், அவர்களின் பல உறவுகள் அங்கே இருந்தனர். அங்கிருந்து வேற்று நாட்டிற்கு வந்துவிட்டாலும் கூட, நிச்சயம் எகிப்தும் அவர்களுக்குத் தாய்வீடு போன்றதுதான். அவர்களது முன்னோர் வாழ்ந்த நாடு. இதனால், எகிப்தின் ஒவ்வொரு நகரங்களிலும் ஏராளமான யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அலெக்ஸாண்டிரியாவில் மட்டும் ஏறத்தாழ பத்து இலட்சம் யூதர்கள் வாழ்ந்ததாக ஒரு புள்ளவிபரம் கூறுகிறது. எனவே, எகிப்திற்குச் சென்றால் உணவுக்கோ, தங்குமிடத்திற்கோ கவலைப்படத் தேவையில்லை. அது அவர்களுக்கு அந்நிய தேசம் அல்ல. ஆக, குழந்தைக்கு ஆபத்து என்றதும், யோசேப்பு தப்பியோட, எகிப்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியம் அல்ல.

கடவுளுடைய கரம் தேவைப்படுகிற நேரத்தில், யோசேப்பிற்கு கிடைக்கிறது. என்ன செய்வது? ஏது செய்வது? என்ற குழப்பமான நேரத்தில் கடவுள் யோசேப்பிற்கு உதவி செய்கிறார். நிச்சயம் அந்த கடவுளின் கரம் நம்மையும் தேற்றும் என்றால் அது மிகையாகாது. நாம் துன்பப்படுகிற நேரத்தில் கடவுள் தாமே, தம் தூதரை அனுப்பிக் காத்திடுவார்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

மாசில்லாக் குழந்தைகள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

குழந்தை இயேசுவின் பொருட்டுத் தம் உயிரை இழந்து, மறைசாட்சிகளான மாசில்லாக் குழந்தைகளின் விழாவை இன்று கொண்டாடுகிறோம். இந்த நாளில் நமது குடும்பங்களிலுள்ள அனைத்துக் குழந்தைகளைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போமா.

நாம் வாழும் நாள்கள் வியப்பான, விரைவான நாள்கள். இக்காலத்தில் குழந்தைகள் வெகு விரைவிலேயே தங்கள் மாசின்மையை இழந்துவிடுகின்றனரோ என்னும் சந்தேகம் நமக்கு எழுவது இயல்பே. இக்காலத்துக் குழந்தைகள் அறிவாற்றலிலும், திறன்களிலும், புரிந்துகொள்ளும் தன்மையிலும் பெரிதும் வளர்ச்சி பெற்றிருக்கின்றனர். குறிப்பாக, தொலைக்காட்சி ஊடகத்தின் தாக்கம் பெரிய அளவில் அவர்கள்மீது ஏற்பட்டுள்ளது.

1. தொலைக்காட்சியினால் நல்ல பல செய்திகளை அவர்கள் பெற்றுக்கொண்டாலும், வன்முறை, பாலியல் வன்முறை போன்ற தவறான செய்திகளையும் தொலைக்காட்சியின் மூலம் இளம் வயதிலேயே நம் குழந்தைகள் பெற்றுவிடுகின்றனர்.

2. அத்துடன், குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் பழக்கமும் பல நாடுகளிலும் வெளிவராத செய்தியாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

3. நமது கல்வி முறையும் இளம் வயதிலேயே அதிக வேலை தரும் களைப்பான, போட்டிகள் நிறைந்த, மன அழுத்தம் தரும் கல்வி முறையாக இருக்கிறது. இவை அனைத்துமே குழந்தைகள் தம் மாசின்மையை விரைவிலேயே இழக்கும் நிலைக்குக் காரணமாக இருக்கின்றன. பெற்றோரும், கல்வியாளர்களும், சமூக ஆhவலர்களும் இவை பற்றிச் சிந்தித்து, குழந்தைகளை இத்தகைய ஆபத்துகளிலிருந்து மீட்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால். பெத்லகேமைச் சுற்றியிருந்த பகுதிகளில் தம் உயிரை இழந்த மாசில்லாக்  குழந்தைகளின் நிலை இனிமேலும் நம் இல்லங்களில் தொடரத்தான் செய்யும்.

மன்றாடுவோம்: குழந்தைகளைப் பெரிதும் நேசித்த அன்பு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். குழந்தைகள் என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் குழந்தைகளை ஆசிர்வதித்து, அவர்கள் ஊடகங்களாலும், கல்வி முறையாலும், மனச்சான்றில்லாத மனிதர்களாலும் தங்கள் மாசின்மையை இழந்துவிடாமல் காப்பாற்றுவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

-- அருள்தந்தை குமார்ராஜா

--------------------

குழந்தைகள் என் சாட்சிகள்

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

குழந்தைகள், இவர்கள்தான் இயேசுவின் அன்புக்குறியவர்கள். "குழந்தைகளை இயேசு தொடவேண்டும்" (லூக் 18 :15) "ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினார" ( லூக்10 :21) "பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடு செய்தீர்"(மத் 21 :16). இயேசுவுக்காக இரத்தம் சிந்தி முதல்முதலில் மறை சாட்சியம் தந்தவர்களும் இக் குழந்தைகளே.

இரண்டு வயது குழந்தைகள் தங்கள் உயிரைக் கொடுத்து இயேசுவைப் பாதுகாத்தனர். இன்றும் கொல்லப்படுகின்ற குழந்தைகள் ஒவ்வொன்றும் இயேசுவைப் பாதுகாக்கின்றது. உண்மை, நீதி, தூய்மை, இறைச்சார்பு இவைபோன்ற ஆண்டவனின் பண்புகளைப் பாதுகாக்கின்றனர். குழந்தைகளே அன்பு, எளிமை, அமைதி, மகிழ்ச்சி, நல்மனது இவைகளை இன்றும் உலகுக்கு அவ்வப்போது அறிமுகம் செய்கின்றனர், நினைவூட்டுகின்றனர்.

தன்னைப் பாதுகாக்க, தன் ஆட்சியை, பெருமையை தக்கவைக்க அப்பாவி குழந்தைகளைக் கொன்றான்;. இன்று நடக்கவில்லையா? தங்கள் இன்பத்துக்காக எத்தனை பிறக்கும் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். பணத்திற்காக எத்தனை குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்கள் என்னும் போர்வைக்குள் நசுக்கப்படும் குழந்தைகள் எத்தனை? இன்றைய ஏரோதுக்கள் வாழ அநியாயமாகக் கொல்லப்படும் இயேசுவின் சாட்சிகள்.

நீ இயேசுவாக இருந்தால் எனக்காக எத்தனை குழந்தைகளையும் இந்த சமுதாயம் தயார்.ஆனால் ஏரோதுகளுக்காக கருவில் உள்ள குழந்தையையும் இழக்க முடியாது. இறைவன் இக்குழந்தைகளுக்கா போராடி இத்தகைய ஏரோதுக்களை அழிப்பார்.

அருட்திரு ஜோசப் லியோன்