நவம்பர் 30

புனித அந்திரேயா - திருத்தூதர் விழா

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 9-18


சகோதரர் சகோதரிகளே, `இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், ``அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்'' என்பது மறைநூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். ``ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்'' என்று எழுதியுள்ளது அல்லவா? ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? இதைப் பற்றியே, ``நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன'' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆயினும் எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைக் குறித்தே எசாயா, ``ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்?'' என்று முறையிடுகிறார். ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு. அப்படியானால், அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், ``அவர்களது அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவர்கள் கூறும் செய்தி உலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 19: 1-2. 3-4

பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;
வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது;
ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;
அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது;
அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது. -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மத்தேயு 4:18-22

அப்போஸ்தலரான புனித அந்திரேயா விழா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 18-22

அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். � இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா
அந்திரேயா - ஆண்டவர் பக்கமே!
மத்தேயு 4:18-22

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

அந்திரேயா பெத்சாய்தாவைக் சார்ந்தவர்; பேதுருவின் சகோதரர். மீன்பிடித் தொழிலை செய்துகொண்டிருந்தவர். விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி அந்திரேயா தொடக்கத்தில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். ஒருநாள் ஆண்டவர் இயேசு வழியோரமாக சென்றுகொண்டிருக்கும்போது திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களிடம் (அந்திரேயா அங்கு இருந்தார்), "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று இயேசுவை சுட்டிக்காட்டினார். உடனே அந்திரேயா இயேசுவிடம், "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்க, அவர் "வந்து பாரும்" என்று சொன்னார். அந்திரேயா ஆண்டவர் இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்றார். அந்த அனுபவத்தை தன்னுடைய சகோதரரான பேதுருவிடம் எடுத்துச் சொல்லி அவரை இயேசுவிடம் அழைத்து வருந்தார்( யோவா 1:35-42). இவரிடமிந்து இரண்டு பாடங்களை நாம் படிக்க போகிறோம்.

1. நிறுத்தவே இல்லை
ஒருமுறை பாத்ராஸ் என்னும் இடத்தில் நற்செய்திப் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது அந்நகரின் ஆளுநராக இருந்த ஏஜெடிஸ் என்பவரின் மனைவி மாக்ஸ்மில்லா நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாய் இருப்பதை அறிந்தார். எனவே அந்திரேயா அவருடைய இடத்திற்குச் சென்று, அவரைக் குணப்படுத்தினார். உடனே அவர் கிறிஸ்துவைத் தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட ஆளுநன் சினம்கொண்டு அந்திரேயாவிடம், "நீ கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதை நிறுத்தவில்லை என்றால், உன்னைச் சிறையில் அடைப்பேன்" என்று பயமுறுத்தினான். ஆனால் புனிதரோ நற்செய்தியை அறிவிப்பதை நிறுத்தவே இல்லை. இதனால் அவன் அவரைச் சிறையில் அடைத்து கடுமையாகச் சித்ரவதை செய்தான்.

சில நாட்களுக்குப் பிறகு அங்கு வந்த உரோமைப் படைவீரர்கள் பெருக்கல் வடிவில் இருந்த சிலுவையில் அவரை அறைந்து துன்புறுத்தினார்கள். அப்போதும் அவர் இரண்டு நாட்களுக்கு அங்கு வந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இறந்தார். அந்திரேயா மறைசாட்சியாக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்த நாள் கி.பி.70 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 30 ஆம் நாள்.

இது நடந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்காட்லாந்து மக்கள் அந்திரேயாவை பற்றிக் கேள்விப்பட்டு, அவருடைய உடலை கான்ஸ்டான்டி நோபிளுக்கு கொண்டுவந்தார்கள். அன்று முதல் ஸ்காட்லாந்து மக்கள் அந்திரேயாவை பாதுகாவலராகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

2. போகவே இல்லை
அந்திரேயாவை இயேசு அழைத்தபோது அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் உலக செல்வங்களைத் துறந்து, உண்மையான செல்வதைப் பற்றிக் கொள்கிறார். அவர் உலக செல்வத்தின் பின்னால் போகவே இல்லை.

அவர் இயேசுவை செல்வமாக பிடித்துக்கொண்டதால் அவர் அனுபவித்த ஆசீர்வாதங்கள் எண்ணிடலங்கா. அவற்றுள் சில இதோ: ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு இவர் சித்தியாவிற்கு(ரஷ்யா) நற்செய்தி அறிவிக்கச் சென்றார்; அங்கே பைசாந்திய நகரின் ஆயராக இருந்தார் என்று திருச்சபையின் தந்தைகளில் ஒருவரான ஆரிஜின் குறிப்பிடுகிறார்.

மேலும் இவரைப் பற்றிய செய்தி 'அந்திரேயாவின் பணி' என்ற திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத நூலிலிருந்து அதிகமாக படித்தறிய முடிகிறது.
அந்திரேயா பார்வையற்றவருக்கு பார்வையளித்தார் என்றும், இறந்தவரை உயிர்ப்பித்தார் என்றும், பேய்களை ஓட்டினார் என்றும் அந்த நூலிலே படிக்கின்றோம். இவையெல்லாம் இயேசுவின் பின்னால் போனதால் இவருக்கு கிடைத்த ஆசீர்கள்.

மனதில் கேட்க…
1. அந்திரேயாவைப் போன்று நானும் ஆண்டவர் பக்கம் மட்டுமே இருக்கலாமா?
2. கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவிப்பை அந்திரோ நிறுத்தவே இல்லை. நானும் அவரை பின்பற்றலாமா?

மனதில் பதிக்க…
நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்கு கேடு! (1கொரி 9:16)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

உரோமையர் 10: 9 – 18
இறைவன் வழங்கும் மீட்பு

இறைவன் அனைவருக்கும் தந்தையாக இருக்கிறார். நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்பது தான், இந்த வாசகத்தின் ஒட்டுமொத்த சிந்தனையாக இருக்கிறது. தொடக்கத்திருச்சபையில் நிலவிய மிகப்பெரிய பிரச்சனை, யூதர்களைப் போல விருத்தசேதனம் செய்து கொண்டால் தான், மீட்புப் பெற முடியும் என்பது. யூதர்கள் மட்டுமே மீட்பு பெற முடியும் என்கிற நிலையிலிருந்து, யூதர்களைப் போல மாறினால், எல்லாரும் மீட்பு பெற முடியும் என்கிற மாற்றத்தை, யூதர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆனாலும், இந்த வேறுபாடு தொடக்க கால திருச்சபைக்கு சற்று மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

இன்றைய வாசகத்தில் பவுலடியார் சொல்கிறார்: ”இயேசு ஆண்டவர், என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளுர நம்பினால், மீட்புப் பெறுவீர்கள்”. இது திருச்சபையின் அடுத்த இலக்காக இருக்கிறது. இதனுடைய பொருள், கடவுள் வழங்கும் மீட்பைப் பெறுவதற்கு, ஒருவர் எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, விருத்தசேதனம் செய்திருந்தாலும், செய்யவில்லை என்றாலும் தடையில்லை. இயேசுவை தலைவராக ஏற்றுக்கொண்டு, அறிக்கையிடுவதே ஒருவரின் மீட்பிற்கு போதுமானது என்று சொல்கிறார். இங்கே, மீட்பு பெறுவதில் இருக்கிற அடிமைத்தளை உடைத்தெறியப்படுகிறது. அனைவரும் ஆண்டவர் வழங்கும் மீட்பின் உரிமைக்குடிமக்கள் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

இறைவனின் பிள்ளைகளாக இருப்பதில், நாம் எப்போதும் பாரபட்சம் காட்டக்கூடாது. உண்மையின் பிள்ளைகளாக, ஒளியின் பிள்ளைகளாக நாம் வாழ வேண்டும். இறைவனை நம்முடைய முழுமுதற்தலைவராக ஏற்றுக்கொண்டு, நாம் எப்போதும், இறைவன் வழங்கும் மீட்பில் மகிழ்ச்சியடைவோம். அவருடைய பிள்ளைகளாக மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

திபா 19: 1-2. 3-4
”படைப்புக்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது

கடவுள் மனுக்குலத்திற்கு இரண்டு புத்தகங்களை பரிசாகத் தந்திருக்கிறார். ஒன்று படைப்புக்களைப் பற்றிய புத்தகம். மற்றொன்று, நம்மை வழிநடத்துகின்ற திருச்சட்டப்புத்தகம். ஒன்று இறைவனின் மாட்சிமையை நாம் அறிந்து கொள்ள உதவி செய்கிறது. மற்றொன்று, நாம் வாழ வேண்டிய வழிமுறைகளை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த திருப்பாடலில் கடவுள் எழுதிய படைப்புக்கள் பற்றிய புத்தகத்தை நமக்கு அழகாக ஆசிரியர் படம்பிடித்துக்காட்டுகிறார்.

அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் நாம் பார்க்கக்கூடிய, பெரிதும் கண்டுகொள்ளாத ஆனால் ஆச்சரியமூட்டக்கூடிய பணிகளைச் செய்கிற இயற்கையின் வழியாக நமக்கு கடவுளைக் காட்டுகிறார். காலையில் உதிக்கின்ற சூரியன், இரவில் ஒளி தருகிற கதிரவன், முத்து முத்தாக இரவிலும் கண்சிமிட்டிக்கொண்டிருக்கும் விண்மீன்கள், பச்சையாய் ஆடைய உடுத்தி பூமிப்பந்தில் படர்ந்திருக்கும் அழகிய செடி, கொடிகள் என, கடவுளின் படைப்புக்கு உதாரணமாய் திகழும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த படைப்புக்கள் ஒவ்வொருநாளும் கடவுளைப்பற்றி, தங்களைப் படைத்தவரைப் பற்றி எடுத்துரைத்துக்கொண்டே இருக்கின்றன. இறைவனை மாட்சிமைப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

படைப்புக்களோடு இணைந்து, படைப்பின் சிகரமாக இருக்கிற மனிதர்களும் இறைவனைப் போற்றிப்புகழ வேண்டும் என்பதுதான் இந்த பாடலின் நோக்கமாக இருக்கிறது. அதுவே ஆசிரியரின் விருப்பமாகவும் இருக்கிறது. நம்மை படைத்த கடவுளின் பெயரை நாமும் போற்றுவோம். கடவுளோடு இணைந்திருப்போம்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

திருப்பாடல் 18: 2 – 3, 4 – 5
”நான் புகலிடம் தேடும் மலை அவரே”

மலை என்று சொல்வது உயரத்தை மட்டுமல்லாது, பாதுகாப்பு அரணாக இருப்பதையும் குறிக்கக்கூடிய அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் உருவகம் ஆகும். கடுங்குளிரிலிருந்து, புயல் காற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு கவசமாக மலை இருப்பதை நாம் பார்க்கலாம். அது மட்டுமல்லாமல், எதிரிகள் துரத்தி வருகிறபோது, மறைந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் இடமாகவும் மலை காணப்படுகிறது. பாலஸ்தீனப்பகுதி கரடு, முரடான மலைப்பாங்கான பகுதி. பாலைவனச்சூழல் அங்கே நிலவுகிற இடம். தாவீது அரசரை, சவுல் அரசர் கொல்வதற்காக ஆளனுப்பியபோது, அவர்களிடமிருந்து தப்பித்து காடுகளிலும், மலைகளிலும் மறைந்து வாழ்ந்தார். இந்த பிண்ணனியில் இந்த பாடலை எழுதியிருக்கலாம்.

ஆண்டவரை மலைக்கு ஒப்பிட்டு திருப்பாடல் ஆசிரியர் பேசுகிறார். கடவுள் நமக்கு மலையாக இருக்கிறார் என்கிற வரிகளின் பொருள், கடவுள் நம்மை ஆபத்துக்களிலும், விபத்துக்களிலும் உடனிருந்து பாதுகாக்கிறவராக இருக்கிறார் என்கிற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. கடவுள் நம்மோடு உடனிருக்கிறபோது, நாம் மலையின் பாதுகாப்பை உணர்கிறோம். எத்தகைய புயற்காற்று வந்தாலும், அது தடுத்து மறுபுறத்தில் இருக்கிறவர்க்கு பாதுகாப்பு வழங்குவது போல, எத்தனை எதிரிகள் வந்தாலும், அவர்களிடமிருந்து கடவுள் முழுமையான பாதுகாப்பை வழங்குகிறார். தன்னை நம்பி வருகிறவர்களைக் கைவிடாமல் காக்கிற மலையைப் போல், இறைவனும் தன்னுடைய பக்தர்களைக் காப்பாற்றுகிறார் என்பது, இந்த பாடல் வழியாக நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.

நம்முடைய வாழ்வில் மலையாக இருந்து நம்மைப் பாதுகாக்கிற இறைவனிடம் நம்மை முழுமையாக ஒப்படைப்போம். இறைவன் எல்லாவிதமான சவால்கள், நெருக்கடி வேளைகளிலிருந்து நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடுவோம். இறைவனின் ஆசீர் நமக்கு நிச்சயம் வழிகாட்டுதலாய் இருக்கும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

திருத்தூதர் அந்திரேயா

அந்திரேயாஸ் என்னும் கிரேக்கச்சொல்லுக்கு பலமுள்ளவன், ஆண்மையுள்ளவன் என அர்த்தம் சொல்லப்படுகிறது. சீமோன் பேதுருவின் மூத்த சகோதரர் தான் அந்திரேயா. திருத்தூதர்களில் இவர் தான் வயதில் மூத்தவர். இவருடைய சகோதரர் பேதுருவுக்கு நேர் முரணானவர் அந்திரேயா. ஏனென்றால், பேதுரு அதிகம் பேசுகிறவர். எதற்கெடுத்தாலும், முதலில் ஏதாவது ஒரு பதிலைச் சொல்கிறவர். ஆனால், அந்திரேயா அமைதியானவர்.

அந்திரேயா தான் இயேசுவின் முதல் சீடர் என்று சொன்னால், அது மிகையாக இருக்காது. அதேபோல தான் பார்த்த இயேசுவைப்பற்றி, தன்னுடைய சகோதரர் பேதுருவிற்கு நற்செய்தி அறிவித்தவர் இந்த அந்திரேயா. எனவே, இவரை முதல் மறைபோதகர் என்று அழைத்தாலும், அந்த பட்டம் இவருக்கு சரியாகப் பொருந்தும். அந்திரேயாவிடத்தில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான பண்பு ஒன்று இருக்கிறது. பேதுருவை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தியது அந்திரேயா தான். ஆனால், பேதுரு தான், மூன்று முக்கிய சீடர்களுள்ள ஒருவராகத் திகழ்ந்தார். இது அந்திரேயாவிற்கு பொறாமையைக் கொடுக்கவில்லை. தன்னுடைய சகோதரன் இயேசுவுக்கு நெருக்கமாக இருப்பதைப் பார்த்து, அவர் மகிழ்ச்சியடைகிறார். திருத்தூதர்களுள் ஒருவராக இயேசு கொடுத்த கொடையையே, அவர் மிகுந்த பாக்கியமாகக் கருதக்கூடியவராக எண்ணினார்.

இன்றைய உலகில் சகோதரப்பாசம் என்றால் என்ன? என்று கேட்கக்கூடிய அளவில் தான், சகோதரர்களுக்கு இடையேயான பாசம் இருக்கிறது. திருமணம் முடிந்தவுடன், தங்களுக்கென்று குடும்பம் வந்தவுடன், பாசம் மறைந்து, பணமும், சொத்தும் மிகப்பெரிய பிரச்சனைகளாக உருவெடுக்கின்றன. பணத்திற்காக, சொத்திற்காக கொலை செய்யக்கூடிய அளவுக்கு சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உடன்பிறந்தவர்களை அன்பு செய்யும் வரம் வேண்டி, ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

இயேசுவின் மகிழ்ச்சியான வாழ்வு

முப்பது ஆண்டு காலம் தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக, கீழ்ப்படிதலோடு வாழ்ந்த இயேசு தனது பணிவாழ்வைத் தொடங்குகிறார். சாதாரண மக்களில் ஒருவராக வாழ்ந்த இயேசு, இனி தன்னை அடையாளப்படுத்தக் கொள்ள வேண்டிய நேரம் வந்ததும், அதற்கு தன்னையே தயார்படுத்துகிறார். இதுவரை அவரது வாழ்க்கையில், கவலை ஒன்றும் இல்லை. தனது தாயோடு, தாய்க்கு நல்ல மகனாக, வாழ்வின் இனிமையை உணர்ந்து, பூரிப்போடு இருக்கிறார். வாழ்க்கை இப்படிப்போனால், அது நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இயேசு அதற்காக வரவில்லை. அதையும் தாண்டிச்செல்லக்கூடிய பயணம் தான் அவரது வாழ்க்கை. அதற்காகத்தான் அவர் வந்திருக்கிறார்.

தனது நேரம் வருமளவும் பொறுமையோடு, பணிவோடு காத்திருக்கிறர். நேரம் வந்ததும், அதற்கான முழுவீச்சில் தனது பணியை ஆரம்பிக்கிறார். முப்பது ஆண்டுகள் தனது குடும்பத்தோடு வாழ்கிறபோது, அதை மகிழ்வோடு நிறைவோடு வாழ்கிறார். மூன்று ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, வாழ்ந்தபோதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார். ஆக, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், மகிழ்வோடு வாழ்கிறார்.

இன்றைய நமது வாழ்க்கை எதிலும் நிறைவில்லாமல் இருக்கிறது. குருமடத்தில் இருக்கிறபோது, எப்போது அருட்பணியாளராக மாறுவோம் என்ற ஆசை இருக்கிறது. அருட்பணியாளராக மாறியவுடன், எப்போது பங்குத்தந்தையாக மாறுவோம் என்று எண்ண ஆரம்பிக்கிறோம். பங்குத்தந்தையாக மாறியவுடன், குருமட வாழ்வை நினைத்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறோம். இல்லாத வாய்ப்பிற்காகப் போராடுகிறோம். வாய்ப்பு வருகிறபோது, தவறவிடுகிறோம். இதை தொடர்கதையாக மாற்றாமல், முழுமையாக, நிறைவாக, நமது வாழ்வை வாழப்பழகுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

மனிதரைப் பிடிப்பவரான அந்திரேயா !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

திருத்தூதரான புனித அந்திரேயாவின் விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இவர் பேதுரு சீமோனின் சகோதரர்.  மீன் பிடிப்பவர். இவரை இயேசு சந்தித்து என் பின்னே வாருங்கள். உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்று அழைத்தார். அந்த அழைப்பை அந்திரேயா உடனே ஏற்றுக்கொண்டார். தன் சகோதரர் பேதுருவுடன் இணைந்து வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார். இயேசுவும் அவரைத் திருத்தூதராக்கி, இறையாட்சிக்காக மனிதரைப் பிடிக்கும் மீனவராக மாற்றினார்.

இந்த நாளில் புனித அந்திரேயாவின் மாதிரியை நாமும் பின்பற்றுவோம். அழைப்பைக் கேட்டதும் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் என்ற வரிகள் அவர்களின் செவிமடுத்தலின் தன்மையை விளக்குகின்றன. இயேசுவின் சீடர்கள் தேவையற்றவைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்ற வேண்டும். நம் வாழ்வின் வலைகள் என்ன என்பதைக் கண்டு, அவற்றை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றுவோம்.

மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, அந்திரேயாவை உம் சீடராகப் பெயர் சொல்லி அழைத்ததுபோல, என்னையும் அழைத்ததற்காக நன்றி. அந்திரேயாவைப்போல அனைத்தையும் விட்டுவிட்டு உம்மைப் பின்தொடரும் வரம் தாரும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

-------------------------

''இயேசு அவர்களைப் பார்த்து, 'என் பின்னே வாருங்கள்;
நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்றார்'' (மத்தேயு 4:19)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தபோது அவர்கள் தம்மைப் பின்செல்ல வேண்டும் எனக் கேட்டார். இவ்வாறு இயேசு விடுத்த அழைப்பைச் சிலர் ஏற்றனர்; சிலர் ஏற்கவில்லை. ஆயினும் ஒருசில மனிதரை இயேசு தனிப்பட்ட முறையில் அழைத்தார் என எல்லா நற்செய்தியாளர்களும் குறித்துள்ளனர் (காண்க: மத் 4:18-22; மாற் 1:15-20; லூக் 5:1-11; யோவா 1:35-51). இவ்வாறு இயேசு தம் சீடர்களை அழைத்தார் என்பது சிறப்பு வாய்ந்த நிகழ்வுதான். இயேசு வாழ்ந்த காலத்தில் பல யூத குருக்களும் அறிஞர்களும் யூத சமய நெறியை மக்களுக்கு விளக்கியுரைத்தனர். அவர்களிடம் பாடம் கற்க விரும்பியோர் அந்த அறிஞர்களைத் தேடிச் சென்று அவர்களிடம் சீடர்களாகச் சேர்ந்தார்கள். ஆனால் இயேசுவோ தம்மோடு நெருங்கிய விதத்தில் ஒத்துழைப்பதற்காகப் பன்னிருவரைத் தாமே அழைக்கின்றார். அவர்களுக்குத் ''திருத்தூதர்'' (அப்போஸ்தலர்) என்னும் பெயரையும் அளிக்கின்றார். இது ஒருவேளை தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம். கிரேக்க மொழியில் ''அப்போஸ்தலர்'' என வரும் சொல் ''அனுப்பப்பட்டவர்'' (''தூதர்'') என்னும் பொருளைத் தரும். கடவுள் அளிக்கின்ற பணியை நிறைவேற்ற ''வான தூதர்'' இருப்பதுபோல இயேசு அளித்த பணியை நிறைவேற்ற ''திருத்தூதர்'' தெரிந்துகொள்ளப்பட்டனர். இவர்கள் ஆற்றவேண்டிய பணி யாது? அவர்கள் இயேசுவிடமிருந்து பெற்ற பணி ''மனிதரைப் பிடிப்பது''. இங்கே இயேசு திறமையான விதத்தில் சொல் விளக்கம் தருவது தெரிகிறது. அதாவது இதுவரை ''மீன்களைப் பிடித்தவர்கள்'' இனிமேல் ''மனிதர்களைப் பிடிப்பார்கள்'' என்னும் சொல்லாடல் படித்து இன்புறத் தக்கது (மத் 4:19).

-- மனிதரைப் ''பிடிப்பது'' எப்படி? மீன் பிடிப்பவர்கள் கடலில் அல்லது ஏரியில் வலைவீசுவார்கள். அதுபோல இயேசுவின் சீடர்களும் உலகு என்னும் கடலில் வலைவீச வேண்டும். அந்த வலை இயேசு நமக்குத் தருகின்ற இறையாட்சிப் போதனையே. இயேசுவின் போதனையை நாம் சொல்லளவில் மட்டுமே எடுத்துரைப்பதோடு நின்றுவிடாமல் நம் வாழ்விலும் எண்பிக்கும்போது நாம் வீசுகின்ற வலை உறுதியாய் இருக்கும். அந்த வலையில் வந்துசேர்கின்ற மனிதரை நாம் கவனமாகக் கரை சேர்க்க வேண்டும். கரையில் நமக்காகக் காத்திருக்கிறார் இயேசு. இங்கே யோவான் நற்செய்தியில் வரும் நிகழ்ச்சி கருதத்தக்கது. ''ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை'' (யோவா 21:4). இருளின் ஆட்சி முடிகின்ற வேளையில், கதிரவன் வீசுகின்ற ஒளியைப் போல காலைவேளையில் தோன்றுகிறார் இயேசு. அவர் ''கரையில்'' நிற்கிறார். நமக்காகக் காத்திருக்கிறார். ஆனால் நாம் அவரை உடனே அடையாளம் காண்பதில்லை. ஏனென்றால் ஒளிமயமான அவருடைய தோற்றம் நம் கண்களைக் கூசச் செய்கிறது. இருப்பினும், கரைநோக்கி நாம் வரும்போது அவரை அடையாளம் காண்கின்றோம். அவர் மாட்சியோடு விளங்குகின்ற இயேசு என அறிகின்றோம். நாம் பிடித்துவந்த மீன்களை அவரிடம் காணிக்கையாக்குகின்றோம். இயேசுவிடம் மனிதர்களை இட்டுச் செல்கின்ற பணி மாண்புமிக்கதொரு செயல். எனவே இயேசுவுக்காக ''மனிதரைப் பிடிப்பவர்'' ஆவோம்; அவரில் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற சீடர்களாக மாறுவோம்.

மன்றாட்டு
இறைவா, வலைவீசி மனிதரைப் பிடித்து உம்மிடம் அழைத்துவர எங்களுக்கு நீர் அளித்த பணியை நாங்கள் மனமுவந்து ஆற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

---------------------------

உம்மோடு தங்க வேண்டும்

புனித அந்திரேயா விழாவை இன்று கொண்டாடுகிறோம். இவரது மறை பரப்புப் பணி சற்று வித்தியாசமானது. மனிதர்களை அவர்களது உள்ளங்களை அறியும் ஆற்றல் படைத்தவர் இவர். யார் எத்தகையவர் என உணர்ந்து அதற்கேற்ப செயல்படுபவர். தன் இத்திறமையைப் பயன்படுத்தி பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டு வந்தார்.

தொடக்க காலத்தில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்த இவர், கிறிஸ்துவின் தொடர்புக்குப் பின் இயேசுவின் சீடராகிறார். இயேசுவை யார் என்று அனுபவித்து உணர அவரோடு தங்க வேண்டும் என்னும் உண்மையை "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?"(யோவா1'38) மூலம் நமக்கு உணர்த்தியவர். இயேசுவோடு தங்கியதால், மெசியாவைக் கண்டார். தெய்வத்தைக் காண, அவர் அருள் பெற, அவரோடு தங்கவேண்டும் என்பதை தன் அனுபவத்தால் நமக்கு உணர்த்தியவர்.

தன் சகோதரர் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தார்.(யோவா 1'41) ஐந்து அப்பம் பகிரும்போதும் "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன"(யோவா 5'9) என்று சிறுவனின் விவரங்களை அறிந்து அறிமுகம் செய்து வைத்து, அற்புதமான அந்த நிகழ்ச்சி நடை பெற காரணமாக இருந்ததும் இவரே.

புனித அந்திரேயா போல நாமும் இயேசுவோடு தங்குவோம். அவரது வலிமை பெறுவோம். பெரு மகிழ்வோடு வாழ்வோம். பிறரும் அந்த மகிழ்வைப் பெற, அவர்களுடன் பேசி இயேசுவை எடுத்துச் சொல்லி அவரிடம் அழைத்து வருவோம். மகிவைப் பெருக்குவோம்.

--அருட்திரு ஜோசப் லியோன்