அனைத்துப் புனிதர்கள் பெருவிழா
நவம்பர் 1
புனிதர் அனைவர் பெருவிழா
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14

கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வான தூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, ``எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்'' என்று அவர்களிடம் கூறினார். முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப் பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம். இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். அவர்கள், ``அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது'' என்று உரத்த குரலில் பாடினார்கள். அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். ``ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்'' என்று பாடினார்கள். மூப்பர்களுள் ஒருவர், ``வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?'' என்று என்னை வினவினார். நான் அவரிடம், ``என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்'' என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: ``இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 24: 1-2. 3-4. 5-6

பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்;
ஆறுகள் மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. -பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4 கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்;
பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். -பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே:
யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-3

சகோதரர் சகோதரிகளே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பது போல் தம்மையே தூயவராக்க வேண்டும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மத்தேயு 5:1-12

நவம்பர் 1
அனைத்துப் புனிதர்கள் பெருவிழா

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: ``ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

மத்தேயு 5: 1 - 12
மகிழ்ச்சி

2013 ம் ஆண்டு நமது திருத்தந்தை எழுதிய ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’ என்ற திருத்தூது இதழில் மகிழ்ச்சிக்கான காரணம் என்ன என்பதனை ‘துன்பமும் துயரமும் கரைவதே’ என்றும் கூறுகின்றார். கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்னதாக வந்த ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகர் தன்னுடைய கதாபாத்திரத்தின் எல்லா சூழ்நிலையிலும் கூறக்கூடிய வார்த்தை: மகிழ்ச்சி. தாயின் வயிற்றில் கரு தங்கியிருக்கிறதா அல்லது இல்லையா என்று வினவ, மருத்துவரிடம் செல்கின்றபோது, மருத்துவர் கூறுகின்ற வார்த்தை கணவருக்கும், மனைவிக்கும் மகிழ்ச்சி. இத்தகைய மகிழ்ச்சி வெளியிலிருந்து ஒரு நபரின் வழியாக நமது மனதிற்கு எட்டுவதாக அமைகிறது. இது உண்மையான மகிழ்ச்சி அல்ல. உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது என்பதனை உளவியல் சிந்தனையாளர் சிக்மண்ட் ப்ராய்ட் இவ்வாறு கூறுவார், “ஒருவனின் இன்பமோ, துன்பமோ, அதனை அவனுடைய சுய சிந்தனையில் கடக்க முயல்வதே மகிழ்ச்சி தரும்”. இது தான் உண்மையான மகிழ்ச்சி.

அத்தகைய ஒரு மகிழ்ச்சியைத் தான் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து பெற்றார். அதனை உணர்ந்து தான் மக்களை மகிழ்ச்சியாக இருக்க அழைப்பும் விடுக்கின்றார். இயேசு பெருமையுடன் முழங்கும் எட்டு பேறுகள் யூத மரபுக்கு அப்பாற்பட்டவை. இந்த மலைப்பொழிவினை விவிலிய பேராசிரியர்கள் இரண்டு விதமாக பிரித்து முதல் நான்கு வகை ‘பேறுபெற்றோர்’ வழியாக கடவுளோடும், மற்றொரு நான்கு வகை ‘பேறுபெற்றோர்’ வழியாக சகமனிதர்களோடும் நல்லதொரு உறவு வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளதாக கூறுவார்கள். அப்படிப்பட்ட உறவு தான் நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதனைத் தான் இன்றைய முதல் வாசகத்தில் பார்க்கின்றோம். ‘அனைவரும் ஆண்டவரை நாடுங்கள். ஏனென்றால் அவர் எல்லா சிக்கல்களையும் கடந்தவர். அதனால் தான் வலுவற்றவையில் தான் மகிழ்ச்சி என அறிந்து கொண்டார்’ என்று பவுல் இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார். மகிழ்ச்சி சமுதாயத்திலே புறந்தள்ளப்பட்ட பாமர மக்களிடையே புகுந்து கிடக்கிறது என்பதனை வெளிப்படுத்தத்தான் சமுதாயம் எவையெல்லாம் புறந்தள்ளப்பட்ட குலமாக கருதியதோ அவர்களெல்லாம் பேறுபெற்றவர்கள் என கூறுகின்றார். அதனால் தான் பிறப்பின் செய்தியே புறந்தள்ளப்பட்ட இடையர்களுக்கு கொடுக்கப்பட்டது. மகிழ்ச்சி அதன் வழியாகத் தான் வெளிவருகிறது.

நான் மகிழ்ச்சியை எங்கே தேடுகிறேன்? வசதியிலா? அல்லது எளிமையிலா? பணத்திலா? அல்லது குணத்திலா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=======================

 

புனிதர் அனைவர் பெருவிழா
சாதாரணமானது ஆனால் வரலாறானது
மத்தேயு 5:1-12

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் புனிதர் அனைவரின் பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து புனிதர்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக!

மனிதர்கள் என நாம் மரியாதை செலுத்துவோர் தங்களுடைய வாழ்வையும் பணியையும் முழுமையாக இறைசித்தத்திற்கு அர்ப்பணித்து துன்பங்களை, இன்பங்களாக ஏற்று, உலக மக்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டிகளாக இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். இவர்களையே கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்கள் என அடையாளப்படுத்துகிறது. கடவுளை வழிபடுகிற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது மேலான கடமையாகும். அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்விற்கு நன்றி கூறுவது தகுதியும் நீதியுமாகும். இவ்விழா நாம் புனித வாழ்விற்குள் நுழைய வருக! வருக! என அழைக்கிறது. அதற்கு இரண்டு யோசனைகளையும் வழங்குகிறது.

1. சாதாரணமானது
புனிதர்கள், நம்மைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள். இவர்கள் எல்லாருக்கும் ஒரு தொடக்கம், ஒரு முடிவு இருக்கிறது. இவர்களுக்கென்று உடல் இருக்கிறது. உறவுகள் உள்ளன. ஊர் இருக்கிறது. இவர்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்வில், அந்த வாழ்வுச் சூழலில் இவர்கள் உன்னதமான மாற்றங்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறார்கள். இவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும். ஆகவே ஒவ்வொரு நாளும் கவனமாய் புனித வாழ்வு நடத்துவோம். புனிதர்களாய் கவனமாய் செயல்படுவோம்.

2. வரலாறானது
புனிதர்கள் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. வாழ்வில் அவர்கள் எடுத்த முடிவிலிருந்து திரும்பிச் செல்லவில்லை. எந்தப் பிரச்சனை வந்தாலும், எந்த இடர் வந்தாலும் அவர்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருந்தனர். மனிதத்தை புனிதத்தால் வென்றனர். ஆகவே அவர்கள் வெற்றி கண்டனர். அவர்கள் வாழ்வு இப்போது நமக்கு வரலாறானது. சாதாரண வாழ்வு மிகப்பெரிய வரலாறாக உருவெடுத்திருக்கிறது. நாமும் சாதாரணதை சரித்திரமாக மாற்றுவோம். வரலாறு படைப்போம்.

மனதில் கேட்க…
1. புனிதராக மாற வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறதா? அதற்கான முயற்சிகளை நான் எடுத்ததுண்டா?
2. என்னுடைய சாதாரண பிறப்பை ஒரு வரலாறாக மாற்றலமா?

மனதில் பதிக்க…
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்கு கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்(மத் 5:12)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

திருவெளிப்பாடு 7: 2 – 4, 9 – 14
புனித வாழ்வு

இந்த உலகத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்தார். மனிதா்கள் அவர்களிலிருந்து புனிதர்கள் என்கிற புதியவர்களைப் படைத்தார்கள். யார் இந்த புனிதர்கள்? அவர்களைத்தான் இன்றைய வாசகம் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ”வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்கள்” என்று, திருவெளிப்பாடு புத்தகம் இவர்களை அறிமுகப்படுத்துகிறது. இவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? என்கிற கேள்விக்கு, ”இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள். தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்” என்று பதில் தரப்படுகிறது.

மனிதர்கள் அனைவருமே, கடவுள் தந்த வாழ்க்கை தங்களுக்கானது என்கிற குறுகிற நோக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தில், ஒரு சிலர் மட்டும், கடவுள் கொடுத்திருக்கிற இந்த வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்கிறார்கள். எதற்காக கடவுள், மனிதர்களைப் படைத்தாரோ, அதற்காக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்த வாழ்க்கையை வாழ்வது அவ்வளவு எளிதானல்ல, என்பதையும் புரிந்து கொண்டார்கள். ஆனாலும், தங்கள் முயற்சியை அவர்கள் கைவிடவில்லை. அதனை வாழ்ந்து காட்ட மெனக்கெடுகிறார்கள். அதன்பொருட்டு, பல்வேறு துன்பங்களைச் சந்திக்கிறார்கள். ஆனால், அதைப்பற்றியெல்லாம் அவர்கள் புலம்பிக்கொண்டிருக்கவில்லை. இறுதிவரையிலும், சிறப்பான வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். இவர்களைத்தான் திருச்சபை புனிதர்கள் என்று அறிவிக்கிறது.

மனிதர்கள் ஒவ்வொருவருமே புனித வாழ்வு வாழ வேண்டும் என்பது தான், இறைவனின் விருப்பமாக இருக்கிறது. அந்த வாழ்வை, பலர் நமக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றி, நாமும் இந்த மனித வாழ்வின் உண்மையான இலக்கை அடைவதற்கு முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

திருப்பாடல் 24: 1 – 2, 3 – 4ஆ, 5 – 6
”ஆண்டவரின் மலையில் ஏறத்தகுதியுள்ளவர் யார்”

கடவுளின் முன்னிலையில் நிற்பதற்கு தகுதியுள்ளவர் யார்? என்கிற கேள்வியும் அதற்கான பதிலும் தான், இன்றைய திருப்பாடல். இதனுடைய பொருள் இறைவனுடைய அன்பையும் அருளையும் யார் பெற முடியும்? என்பது. ஆண்டவரது மலை என்று சொல்லப்படுவது விண்ணகத்தைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக நாம் பார்க்கலாம். இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கைப்படி, கடவுள் இஸ்ரயேல் அனைவருக்கும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வார். இஸ்ரயேல் மக்கள் மட்டுமே இந்த விருந்தில் கலந்து கொள்ள முடியும். அதனை உருவகமாகக் கொண்டு இந்த பாடல் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த திருப்பாடல் இஸ்ரயேல் மக்களுக்கு சொல்லப்படுகிற பாடலாக நாம் பார்க்க முடிகிறது. இஸ்ரயேல் மக்களிடையே ஒரு கட்டத்தில் வேற்றுத்தெய்வ வழிபாடுகள் அதிகமாகிவிட்டன. ஏழைகளை, எளியவர்களைச் சுரண்டிப்பிழைப்பது அவர்களுடைய கைகளை கறைபடுத்திவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் இருந்தால், அவர்கள் கடவுள் ஏற்பாடு செய்கிற விருந்திற்கு தகுதி பெற முடியாது என்பது ஆசிரியரின் எண்ணம். அதனையே அவர் பாடலாக வடித்து, இஸ்ரயேல் மக்களை எச்சரிக்கிறார். ஏழை, எளியவர்கள் சார்பில் இருப்பதும், உண்மையான கடவுளாகிய “யாவே“ இறைவன் பக்கம் திரும்புவதும் தான், கடவுளின் திருத்தலத்தில் நிற்பதற்கான தகுதியை அவர்களுக்கு கொடுக்குமே தவிர, வேறு எதுவும் கொடுக்காது என்கிற ஆழமான செய்தி இங்கு தரப்படுகிறது.

நம்முடைய வாழ்வு எப்படி அமைந்திருக்கிறதோ, அதற்கு ஏற்றது போல நாம் தீர்ப்பிடப்படுவோம். நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான வாழ்வாக அமைய வேண்டும். அந்த எடுத்துக்காட்டான வாழ்வு, மற்றவர்களுக்கு வழிகாட்டுதலாகவும், நமக்கு விண்ணகப் பேரின்பத்தைத் தருவதாகவும் அமைதல் வேண்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

அனைத்துப் புனிதர்களின் விழா

இன்றைய நாளில் அனைத்து புனிதர்களின் விழாவினை தாய்த்திருச்சபையோடு இணைந்து கொண்டாடுகிறோம். இந்த உலகத்தின் பார்வையில் பிழைக்கத்தெரியாதவர்களாக, மற்றவர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களாக, இப்படியும் வாழ முடியுமா? என்று விமர்சனமாக பார்க்கப்பட்டவர்களின் விழா, இந்த விழா. அவர்களின் கூற்றுக்களையெல்லாம் பொய்யாக்கிய விழா. இந்த உலக மதிப்பீடுகளைப் புறந்தள்ளிவிட்டு, உண்மைக்காக, நீதிக்காக உயிர்கொடுத்தவர்களை, ஏழை, எளியவர்களுக்காக தியாகமாக்கியவர்களை, கடவுள் எந்த அளவுக்கு உயர்த்துவார் என்று, நம்மை வியந்து பார்க்க வைக்கும் விழா.

புனிதர்கள் யார்? அவர்களைப் புனிதர்களாக வாழ தூண்டியது எது? அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு எது காரணமாக அமைந்தது? இப்படி பல கேள்விகள், புனிதர்களைப் பற்றி சிந்திக்கிறபோது, நமக்குள்ளாக எழுவது இயல்பு. அவர்களது வாழ்வு ஒரு சிந்தனையை நமக்குத் தெளிவாக்குகிறது. புனிதராக வாழ்வது கடினம் என்பது உண்மை தான். ஆனால், புனிதராக, கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே போதும், அந்த எண்ணத்திற்கு ஏற்ப, நமது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலே போதும். மற்ற பலத்தை கடவுள் தருவார். அவர் நாம் தொடங்குகிற நற்செயலை நிறைவு செய்து வைப்பார்.

நமது எண்ணம், சிந்தனை அனைத்தும், நாம் எப்படி புனிதராவது? அது கடினம் என்பதாக இருக்கக்கூடாது. நானும் கடவுள் முன்னிலையில் ஒரு புனித வாழ்க்கை வாழ வேண்டும், என்ற எண்ணம் உடையவராக இருக்க வேண்டும். அந்த எண்ணம் நம்மை கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

அனைத்துப் புனிதர்களின் விழா

புனிதம் என்பது திருச்சபையால் கொடுக்கப்படும் மிகப்பெரிய மணிமகுடம். நிறைவாழ்வை தங்கள் பலவீனங்களோடு, குறைகளோடு நிறைவாக வாழ முற்பட்டவர்களை, தாய்த்திருச்சபை புனிதர்கள் என்று, போற்றி பெருமைப்படுத்துகின்றது. திருச்சபையினால் அங்கீகரிக்ப்பட்ட புனிதர்கள், இன்னும் வெளிஉலகிற்கு தெரியாமல் புனித வாழ்க்கை வாழ்ந்தவர்களும், நிச்சயம் இந்த உலகத்தில் ஏராளமான பேர் இருப்பார்கள். அவர்களையெல்லாம் இந்த நாளிலே நாம் சிறப்பாக நினைவு கூற வேண்டும்.

இந்த விழாவானது, அனைத்து ஆன்மாக்கள் தினத்திற்கு முன்னதாக, நவம்பர் முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில், கீழைத்திருச்சபையில் நினைவுகூர்ந்து சிறப்பிக்கப்பட்ட மறைசாட்சிகளின் நினைவுநாளே பிற்காலத்தில் அனைத்து புனிதர்களின் பெருவிழாவாக உருவாவதற்கு காரணமாக அமைந்தது. திருத்தந்தை மூன்றாம் கிரகோரி அவர்கள், புனித பேதுரு பேராலயத்தில் அனைத்து புனிதர்களையும் மறைசாட்சிகளையும் நினைவுகூறும் அடையாளமாக, சிற்றாலயம் ஒன்றை எழுப்பி, அவர்களை மாட்சிமைப்படுத்தினார். இதுவே நவம்பர் முதல் தேதியில் அனைத்து புனிதர்களின் தினமாக அனுசரிக்க, தூண்டுதலாக அமைந்தது. இடைக்காலத்தில் அனைத்து புனிதர்களின் விழாவிற்காக இரவு திருவிழிப்பு மற்றும் எட்டுநாள் கொண்டாட்டம் தொடங்கியது. பின்னர், 1955 ம் ஆண்டில் நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பில், இவ்விழாவிற்கான திருவிழிப்பு மற்றும் எட்டுநாள் கொண்டாட்டங்கள் நீக்கப்பட்டன.

புனித வாழ்வு வாழ்ந்த இந்த புனிதர்களிடம், நாம் அனைவரும் இணைந்து, நமக்காகவும், நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்காகவும், பரிந்து பேச மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

பயன்படுத்தும் வார்த்தைகள்

”இயேசு திருவாய் மலர்ந்து” என்கிற வார்த்தையின் அர்த்தத்தை நாம் பார்ப்போம். இது ஏதோ, ஒரு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. மாறாக, அர்த்தத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு, கிரேக்க மொழியில் இரண்டு அர்த்தங்கள் தரப்படுகிறது. 1. கடவுளின் இறைவாக்கை அறிவிப்பதைச் சொல்லும் வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. இந்த வார்த்தைகளுக்கு தனி அழுத்தம் உண்டு. இந்த வார்த்தைகள் வழக்கமான சாதாரண அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்ல.

இந்த வார்த்தையின் இரண்டாவது பொருள் 2. மக்கள் தங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து பேசுவதைக்குறிப்பது. இது சாதாரண போதனையல்ல. இயேசு பலமுறை மக்களுக்குப் போதித்திருக்கிறார். இந்தப் போதனையை சாதாரண போதனையோடு நாம் ஒப்பிடக்கூடாது. இது அதைவிட மேலானது. தனது உள்ளத்தின் ஆழக்கிடங்கை இயேசு வெளிப்படுத்துகிறார். இயேசுவை நேர்மையான உள்ளத்தோடு பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவருக்கும், இதுதான் வாழ்வின் மையமாக இருக்க வேண்டும், என்கிற ஆதங்கத்தோடு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள். நாம் பொதுவாகப் பேசுவதற்கும், முக்கிய கூட்டத்தில் பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டிற்குமே ”பேசுதல்” என்கிற வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறோம். அதுபோலத்தான், மத்தேயு தனது வார்த்தைகளை தனி அர்த்ததோடு பயன்படுத்துகிறார்.

நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லா நேரத்திலும் ஒரே பொருளை தருவதில்லை. வார்த்தைகள் ஒன்றாக இருந்தாலும் அதன் அர்த்தங்கள் மாறுபடுகிறது. எனவே, வார்த்தைகளைப் பயன்படுத்தும் விதத்தில் நாம் எச்சரிக்கை உணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். .இடத்திற்கும், சூழலுக்கும் தகுந்த வார்த்தைகளை நாம் பயன்படுத்த வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தெளிந்த சிந்தனை உள்ளவர்களாக…..

இயேசுவின் மலைப்பொழிவு இன்றைய நற்செய்தியாக நமக்குத்தரப்படுகிறது. இந்த மலைப்பொழிவு போதனையின் முக்கியத்துவத்தை இங்கே சிந்திப்போம். முதலில் இயேசு மலைமீது ஏறி அமர்ந்ததாக சொல்லப்படுகிறது. அமர்தல், உட்காருதல் என்பதற்கு ஆழமான பொருள் சொல்லப்படுகிறது. பொதுவாக, போதகர்கள் எழுந்து நின்று மக்களுக்குப்போதிப்பார்கள். ஆனால், அவர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்து சொல்கிறார்கள் என்றால், அது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்து சொல்வது, ஆயர் தன்னுடைய அதிகார இருக்கையில் அமர்ந்து போதிப்பதற்கு தனி விளக்கமே இருக்கிறது. இவை அவர்களின் அதிகாரத்தையும், போதனையின் முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது.

இயேசு திருவாய் அமர்ந்து போதிப்பதாகவும் நற்செய்தியாளர் சொல்கிறார். அதாவது இதயப்பூர்வமாக இயேசு போதிக்கிறார். உள்ளத்தின் ஆழத்திலிருந்து, உணர்வின் உறைவிடத்திலிருந்து இயேசுவின் வார்த்தைகள் வருகிறது. அவருடைய போதனையின் மைய அறிக்கைகள் தான் இந்த மலைப்பொழிவு. தான் யாருக்காக வந்திருக்கிறேன்? தன்னுடைய பணி யாருக்காக இருக்கப்போகிறது? கடவுளின் பிள்ளைகள் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்வதற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் இங்கே தெளிவாக்கப்படுகிறது. ஆக, தன்னுடைய நிலைப்பாட்டில், சிந்தனையியலில் இயேசு தெளிந்த சிந்தனையுடையவராக இருப்பது இங்கே வெளிப்படுகிறது.

நமது சிந்தனைகளும், எண்ணங்களும் அடிப்படையில் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமது செயல்பாடுகள் நல்லவகையாக இருக்கும். தெளிந்து சிந்தனையைத்தருகிறவர் கடவுள். சிந்தனையில் தெளிவு இருக்கும்போது, நம்மால் துணிவோடு பேச முடியும், எதைக்கண்டும் பயப்படாமல் மதிப்பீடுகளுக்கா நிற்க முடியும். அதற்கான அருளை இறைவனிடம் வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்,

ஏழைகள் என்றால் யார்? ஏழைகளுக்கு, விவிலியத்திலே இரண்டு வார்த்தைகள், கிரேக்க மொழியில் பயன்படுத்தப்படுகிறது. 1. Pநநௌ 2. Pவழமழள. Pநநௌ என்றால், நம்முடைய வழக்கிலே, அன்றாடங்காய்ச்சிகள் என்று, பொருள் கொள்ளலாம். தங்களுடைய உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்கள். இவர்கள் தினமும் உழைப்பதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை ஓட்டுபவர்கள். தங்களுக்கென்று, வேறு எதுவும் கிடையாது. உழைப்பை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள். Pவழமழள என்றால், தங்களுடைய ஒருவேளை உணவுக்காக கூட மற்றவர்களுடைய தயவை எதிர்பார்த்து இருப்பவர்கள். மனிதன் என்கிற தங்களுடைய மாண்பை இழந்து, மற்றவர்களிடம் கையேந்துபவர்கள். ஒருவேளை உணவு கிடைத்தாலும் உண்டு, இல்லையென்றால் பட்டினி என்ற நிலையோடு வாழ்பவர்கள்.

மத்தேயு நற்செய்தியிலே, இந்த இரண்டாவதாக பொருள்படக்கூடிய ஏழையைத்தான் இங்கே குறிப்பிடுகிறார். அதாவது, ஒருவேளை உணவுக்காகக்கூட, மற்றவர்களை எதிர்பார்த்து, சார்ந்து இருக்கக்கூடிய ஏழைகளை, இங்கே கூறுகிறார். அப்படியானால், ஏழையரின் உள்ளத்தவர்கள் என்றால் என்ன பொருள்: யாரெல்லாம், தங்களுடைய செல்வம், திறமை, அழகு, பதவி, பட்டங்கள் மீது நம்பிக்கை வைக்காமல், கடவுள் ஒருவர்தான் எங்களுடைய வாழ்க்கை, கடவுள் தான் எனக்கு எல்லாமே என்று, கடவுளை மையமாகக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் தான், ஏழையரின் உள்ளத்தவர். அப்படிப்பட்டவர், பணக்காரராகவும் இருக்கலாம். ஏழையாகவும் இருக்கலாம். ஒருவர் பணக்காரராக இருப்பதால், ஏழையரின் உள்ளத்தைக்கொண்டிருக்க முடியாது என்றில்லை. அதேபோல, ஒருவர் ஏழையாக இருப்பதால், ஏழையரின் உள்ளத்தைக் கொண்டிருப்பார் எனவும், கூற முடியாது.

அப்படிப்பட்ட ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றவர்கள் என, இந்த நற்செய்தி நமக்கு கூறுகிறது. பேறுபெற்றவர்கள் என்பதன் பொருள், பேரானந்தம், பேரின்பத்தைப் பெற்றவர்கள் என்று பொருள். அவர்களுக்கு, வேறு ஒன்றுமே இந்த உலகத்தில் தேவையில்லை. இறைவனை முழுமையாகப் பற்றிக்கொண்டு வாழும்போது நம் வாழ்வில் இத்தகைய பேரானந்தத்தைப் பெற்றுக்கொள்கிறோம். அத்தகைய பேரின்பத்தைப்பெற இறைவனிடம் மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

நாமும் புனிதர்களே !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

புனிதர்கள் மொத்தம் எத்தனை பேர் என்று உங்களுக்குத் தெரியுமா? நினைவிலிருந்து சில பெயர்களைச் சொல்லச் சொன்னால், இருபது பெயர்களுக்குப் பிறகு யோசிக்கத் தொடங்கி விடுவோம். புனிதர்களின் பிரார்த்தனையில் ஏறக்குறைய 50 புனிதர்களின் பெயர்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இணைய தளத்தில் நுழைந்து பார்த்தால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புனிதர்களின் பெயர்களைப் பார்க்கலாம். இவர்களெல்லாம் திருச்சபையால் புனிதர்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்கள்தான். உண்மையில், இறைத் திருவுளத்தின்படி வாழ்ந்து, இன்று விண்ணி;ல் இறையின்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் என்னும் பார்வையில் பார்த்தால், இலட்சக்கணக்கான புனிதர்களை எண்ணலாம்.

இன்றைய நாளில் திருச்சபை அனைத்துப் புனிதர்களையும் நினைவுகூர்ந்து, இறைவனைப் போற்றுகிறது. நன்றி கூறுகிறது. பெயர் தெரிந்த, பெயர் தெரியாத அனைத்துப் புனிதர்களையும் இன்று எண்ணிப்பார்க்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். புனிதர்கள் என்பார் யார்? தங்களுடைய வாழ்வையும், பணியையும் இறைவனின் விருப்பத்துக்கேற்ப அமைத்துக்கொண்டவர்கள்தான் புனிதர்கள். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்கும் மலைப்பொழிவைத் தம் வாழ்வாக்கிய அனைவருமே புனிதர்கள்தான். இந்த நாள் நமக்கு விடுக்கும் அழைப்பு: நாமும் புனிதராக வாழவேண்டும். புனித வாழ்வை விரும்ப வேண்டும். புனிதர்கள் என்பவர்கள் நமக்கு அப்பாற்பட்டவர்கள், வியத்தகு வரங்களைப் பெற்றவர்கள் என்று எண்ணாமல், அவர்களும் நம்மைப் போன்ற நிறைகளும், குறைகளும் கொண்டவர்களே என்பதையும், ஆனால், நாள்தோறும் தங்கள் வாழ்வை இறைவார்த்தையின்படி நடத்தியவர்கள் என்பதையும் நினைவுகூர்ந்தால், நாமும் புனிதர்களாக வாழலாம், முயற்சி செய்யலாம்.

 

மன்றாடுவோம்: புனிதர்களின் பேரின்பமே இறைவா, தங்கள் வாழ்வில் உம்மை மாட்சிப்படுத்தி, இன்று உம்மோடு வாழும் பேறுபெற்ற அனைத்துப் புனிதர்களுக்காகவும். அவர்களுக்கு நீர் அளித்த மாட்சியின் மணிமுடிக்காகவும் உம்மைப் போற்றுகிறோம். இறைவா, எங்கள் வானகத் தந்தையாகிய நீர் தூயவராய், இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல. நாங்களும் வாழவும், அதன்வழி புனிதர்களாய் மாறவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

--------------------------------------------------------

இணையதள உறவுகளே

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வுலகு ஏகப்பட்ட போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்தது. பணம் சம்பாதிக்க வேண்டும். எந்த வழியிலாவது பதவி உயர்வு பெற்றுவிட வேண்டும் என்று யாருடைய கையை காலை பிடிக்கவும் பையை நிறைக்கவும் தயாராக இருக்கிற காலம்.அடித்து பிடித்து அள்ளிவிடத் துடிக்கும் காலகட்டம்.

இந்த ஒரு காலகட்டத்தில், ஏழையரின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர்,நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர்,தூய்மையான உள்ளத்தோர்,அமைதி ஏற்படுத்துவோர்,நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் என்னும் பட்டியல் வகைக்கு உதவுமா என்ற ஐயம் எழலாம். நியாயமானதே. ஆனால் இத்தகையோரே வரலாற்றில் வாழவோர். அன்னை தெரேசா, மகாத்மா காந்தி இவர்கள் இம்மலைப்பொழிவுப் பகுதியால் ஈர்க்கப்பட்டு, தங்கள் வாழ்வை, அன்பு வழியிலும் அகிம்ஸை வழியிலும் வாழ்ந்து வரலாறு படைத்தனர். வரலாறு அவர்களை வாழ்த்துகிறது.

இப்படி வாழ முடியாது. இது கஷ்டம் என்பதற்காக இக் கொள்கைகளை ஒதுக்குவதும் நடைமுறைப்படுத்த தயங்குவதும் மனித நேயத்திற்கு முரணானது. மனித இயல்பை புறக்கணிப்பதாகும். முழுமையாக இந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி, அம்முயற்சியில் முழுமை பெறாவிட்டாலும் நாம் பேறுபெற்றவராவோம். முயல்வோம். பேறு பெற்றோராவோம்.

-ஜோசப் லீயோன்

-------------------------------

''நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்'' (மத்தேயு 5:6)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ''தாகமுற்றோர்க்குக் கடவுள் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மைகளால் நிரப்பினார்'' எனத் திருப்பாடல்கள் நூல் கூறுகிறது (காண்க: திபா 107:5,9). பசியும் தாகமும் மனிதருக்கு இயல்பான அனுபவம். உணவும் நீரும் பசிதாகம் போக்க உதவுகின்றன. நீதியை நிலைநாட்ட வேண்டும் என்னும் ''வேட்கை''யும் அடிப்படையில் பசி, தாகம் போன்ற ஆவல்தான். அந்த வேட்கையை நாம் நிறைவுசெய்ய வேண்டும் என்றால் எத்தகைய நீதியை நிலைநாட்டுவது என்னும் கேள்வி எழுகிறது. பழைய ஏற்பாட்டில் ''நீதி'' என்பது கடவுள் தம் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை முழுமனத்தோடு கடைப்பிடிப்பதைக் குறித்தது. மத்தேயு ''நீதி'' என்னும் சொல்லை ஏழு முறை பயன்படுத்துகிறார். இயேசுவின் மலைப் பொழிவில் மட்டும் இச்சொல் ஐந்துமுறை வருகிறது (மத் 5:6,10,20; 6:1,33). தமிழ் மொழி பெயர்ப்பில் ''நீதி'', ''நெறி'', ''அறச்செயல்'', ''ஏற்புடையவை'', ''நீதிநெறி'' (காண்க: மத் 3:15; 21:32) என்னும் பல சொல்கள் ஒரே கருத்தை வலியுறுத்தும் வகையில் உள்ளன. எனவே, நாம் ''நீதிநிலைநாட்டுவதில் வேட்கை'' கொண்டிருக்க வேண்டும் என இயேசு கற்பிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் விவிலியப் பார்வையில் நீதி எதைக் குறிக்கிறது என்பதை அறிவது தேவை.

-- இவ்வுலகில் மனிதர் எவ்வாறு வாழ வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறாரோ அவ்வாறு நாம் வாழ்ந்தால் நாம் நீதியைக் கடைப்பிடிக்கிறோம் என்பது பொருள். இது உறவுகளின் அடிப்படையில் எழுகின்ற ஓர் ஒழுங்குமுறை எனலாம். கடவுள் நம்மோடு உறவாடுகின்றார். அந்த உறவின் பயனை நாம் அனுபவிக்கின்ற அதே வேளையில் கடவுளோடு நாமும் நல்லுறவு கொள்வது ''நீதி'' ஆகும். கடவுள் எல்லா மனிதரையும் அன்புசெய்து அவர்களுக்குத் தம் வாழ்வில் பங்களிக்கின்றார். அதையே நம் வாழ்க்கை நெறியாக நாம் கொள்ளும்போது ''நீதி'' நம் வாழ்வில் துலங்கும். இறுதியாக, கடவுள் தாம் படைத்த உலகை அன்போடு பராமரிக்கின்றார். நாமும் படைப்புலகைப் பொறுப்போடு ஆண்டு நடத்தும்போது ''நீதி'' அங்கே துலங்கும். இத்தகைய வாழ்க்கை நெறியை இயேசு நமக்குக் கற்றுத் தருகிறார். அந்நெறிப்படி நாம் நடக்கும்போது எந்நாளும் நீடிக்கின்ற வாழ்வை, விண்ணக நாட்டை நாம் அடைவோம் என்பது இயேசு நமக்குத் தருகின்ற வாக்குறுதி (காண்க: மத் 5:6).

மன்றாட்டு
இறைவா, எங்கள் வாழ்வில் நல்லுறவுகள் நாளும் வளர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

-------------------------
''இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: 'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது'...'' (மத்தேயு 5:1-3)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ''மலைப் பொழிவு'' என்னும் பெயரில் வருகின்ற மத்தேயு நற்செய்திப் பகுதி (மத்தேயு அதி. 5-7) தனிச் சிறப்பு வாய்ந்தது. அதன் தொடக்கத்தில் நாம் காண்பது ''பேறுபெற்றோர்'' என இயேசு கூறுகின்ற சொற்றொடர்கள். ஒன்பது முறை இச்சொல் வருகிறது (மத் 5:3-12). இயேசு ''பேறுபெற்றோர்'' என வாழ்த்துகின்ற மனிதர் யார் என்னும் கேள்விக்குப் பதில் கூறுவதுபோல அமைந்திருப்பது முதல் கூற்று ஆகும்: ''ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது'' (மத் 5:3). கடவுளாட்சியே மத்தேயு நற்செய்தியில் ''விண்ணரசு'' என அழைக்கப்படுகிறது. ''விண்'' என்னும் சொல் நாம் அண்ணாந்து பார்த்தால் தெரிகின்ற வானத்தைக் குறிப்பதில்லை; மாறாக, நம்மைக் கடந்து வாழ்கின்ற கடவுளைக் குறிக்கிறது. எனவே ''விண்ணரசு'' என்பது கடவுளின் ஆட்சி எனப் பொருள்படும். கடவுளின் ஆட்சியில் நாம் பங்கேற்க வேண்டும் என்றால் நாம் ''ஏழையரின் உள்ளத்தைக் கொண்டிருக்க வேண்டும்''. இங்கே ஏழையர் எனக் குறிக்கப்படுவோர் உலகச் செல்வங்கள் இல்லாமல் வறுமையில் வாடுவோர் மட்டுமல்ல. ஏழையர் என்போர் ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பிழைக்க வழியறியாமல் வாடுவோர், தங்கள் அன்றாட வாழ்க்கைக்குப் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோர், சமுதாயச் சம்பிரதாயங்களின் ஆதிக்கத்தின் காரணமாகக் கூனிக் குறுகி நிற்போர் போன்ற எண்ணிறந்த மக்களை உள்ளடக்குவர்.

-- இவ்வாறு பல வகையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகின்ற மக்கள் யாரிடம் அடைக்கலம் புகுவார்கள்? அவர்களுக்கு ஆறுதல் அளிப்பவர் கடவுள் ஒருவரே. எனவே, ''ஏழையரின் மனநிலை'' நமதாக இருக்க வேண்டும். நாம் எப்போதும் கடவுளை நம்பி வாழ வேண்டும். நம் சொந்த சக்தியால் பெரிதாக ஒன்றையும் நம்மால் சாதிக்க இயலாது என்பதை உணர்ந்து ஏற்று, நாம் கடவுளிடம் கையேந்தி நிற்க வேண்டும். அப்போது கடவுள் நம் கைகளை மட்டுமல்ல, நம் உள்ளத்தையும் வாழ்வையும் தம் கொடைகளால் நிரப்புவார். அவர் தருகின்ற உயர்ந்த கொடை அவருடைய வாழ்வில் நமக்குப் பங்களிப்பதே. இதையே நாம் ''விண்ணரசு'' என்கிறோம். கடவுளின் வாழ்வில் நாம் பங்கேற்கின்ற பேற்றினை இவ்வுலகிலேயே பெற்றுள்ளோம். இப்பேறு இறுதிக்காலத்தில் நிறைவாக மலரும். இயேசு நம்மைப் பேறுபேற்றோர் என வாழ்த்த வேண்டும் என்றால் நாம் அவர் எதிர்பார்க்கின்ற பண்புகளை நம் வாழ்வில் கொண்டிருக்க வேண்டும். கடவுளின் கொடையாக வருகின்ற ஆட்சியில் நாம் பங்கேற்க அழைக்கப்படுகிறோம். அந்த ஆட்சியை நமக்கு வழங்குகின்ற கடவுள் முன்னிலையில் நாம் ஏழையரின் உள்ளத்தோராக, கனிவுடையோராக, நீதி வேட்கை கொண்டோராக, இரக்கமுடையோராக, தூய்மையுடையோராக, அமைதியை நாடுவோராக, துன்பத்தின் நடுவிலும் கடவுளை நம்புவோராக வாழ்ந்திட வேண்டும் (மத் 5:3-12).

மன்றாட்டு
இறைவா, உம் ஆட்சியில் நாங்கள் பங்கேற்று, பிறரையும் உம்மிடம் அழைத்துவர எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

...... பேறுபெற்றோர்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

'பேறுபெற்றோர்' இறை அருள் பெற்றவர், ஆண்டவரின் ஆசீர் பெற்றவர்,எனப் பொருள் கொள்ளலாம்.
ஏழையரின் உள்ளத்தோர்: கடவுள் பராமரிக்கும் மக்கள்,(வி.ப 22:25;, கடவுளைச் சார்ந்திருப்போர்

துயருறுவோர்: இழப்புக்களாலும் வாழ்க்கைச் சுமையாலும் கடவுளின் தண்டனையை நினைத்தும் (ஏசா 61:3) உள்ளத்தில் மனத்துயர் அனுபவிப்போர்

கனிவுடையோர்: மத் 11:29,குறிப்பிடும் இனிய, எளிய உள்ளம் உடையோருக்க இவ்வுலகில் ஆசீர் வழங்கப்படுகிறது. தி,பா 37:11 எளியோர் நிலத்தை உடைமையாகப் பெறுவர்; அவர்கள் வளமிகு வாழ்க்கையில் இன்பம் காண்பர்.

நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர்: நீதியை நிலை நாட்டுவதில் உள்ள அவசரத்தையும் அழுத்தத்தையும் வேட்கை கொண்ட மனிதனின் நிலைக்கு ஒப்பிட்டு உணர்த்துகிறார்.
இரக்கமுடையோர்: "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்"(மத் 9:13) துன்புறும் மனிதனில் தெய்வத்தைக் காணும் இரக்கம் இங்கு குறிப்பிடப்படுகிறது.

தூய்மையான உள்ளத்தோர்: ஓரு மனம்,ஒரே மனம்கொண்டு இறைவனைப்பற்றியோர். "கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்"(திபா.19:3)

அமைதி ஏற்படுத்துவோர்: மிகவும் உயர்த்தப்படுகின்றனர்.மத் 5:21,43-48 ல் குறிப்பிடும் செயலைச் செய்வோர் அமைதியை ஏற்படுத்துகின்றனர். கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்: இயேசுவுக்காக, நற்செய்தி மதிப்பீட்டின்படி வாழ்வதால் துன்புறுவோர்(மத்10:16-31)

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

 

--அருட்திரு ஜோசப் லியோன்