மத்தேயு 5:17-19


17 "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

18 "விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.

-------------------------

கடைப்பிடித்துக் கற்பிக்கிறவர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இறையாட்சியின் செய்திகளை அறிவிக்கிறவர்களாக வாழவே இயேசு சீடர்களைத் தேர்ந்துகொண்டார். அச்சீடர்களை இரு பிரிவினராகப் பிரிக்கிறார் இயேசு. அவரது கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி, அவ்வாறே பிறருக்கும் கற்பிக்கிறவர்கள் விண்ணரசில் சிறியவர் என அழைக்கப்படுவர். ஆனால், அக்கட்டளைகளைக் கடைப்பிடித்து, அப்படியே பிறருக்கும் கற்பிக்கிறவர் பெரியவர் எனப்படுவர். இன்றைய திருச்சபையில் நாம் சிறியோர் பலரைப் பார்க்கிறோம். ஆனால், கடைப்பிடித்துக் கற்பிக்கும் பெரியோரைக் காண்பது அரிதாகவே உள்ளது. இறைவனின் கட்டளைகளை முழு மனதோடு கடைப்பிடிப்பது என்பது மிகப் பெரிய சவால். அதற்கு இறையாசி தேவை. கடைப்பிடிப்பதைப் பிறருக்கு அறிவிப்பதே நற்செய்தி அறிவிப்புப் பணி. அப்பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வோமாக.

மன்றாடுவோம்: கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கின்ற கட்டளைகளை முழு மனதோடு ஏற்று, அதன்படி வாழும் வரத்தைத் தந்தருளும். அவ்வாறு, வாழ்வதைப் பிறருக்கு அறிவிக்கின்ற பேற்றினையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

 

கடைப்பிடித்துக் கற்பிப்பவர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

#8220;இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்” என்னும் ஆண்டவரின் அருள்மொழிகளை இன்று தியானிப்போம்.

இறைவார்த்தையின்மீது ஆர்வமும் தாகமும் கொள்வது பாராட்டுக்குரியது. இறைவார்த்தையைப் பிறருக்கு அறிவிப்பதும் நமது கடமையாகிறது. ஆனால், இறைவார்த்தையைக் கடைப்பிடித்து, தாம் கடைப்பிடிப்பதைப் பிறருக்கு அறிவிப்பதுதான் நமது தலையாய அறைகூவலாக இருக்கிறது. இறைவார்த்தையை அறிவிக்கிறவர்கள் பெரியவர்கள் அல்லர். அது எளிதான ஒரு செயல்தான். இறைவார்த்தையின்படி வாழ்ந்து, அறிவிப்பவர்கள்தான் உண்மையிலேயே பெரியவர்கள். அவர்களைத்தான் நாம் புனிதர்கள் என்று போற்றுகிறோம். இத்தவக்காலத்தில் நாமும் இறைவார்த்தையை நம் வாழ்வாக்க முயல்வோம். இறைவார்த்தையின்படி வாழ்வதே மிகப் பெரிய நற்செய்தி அறிவிப்பு என்பதை உணர்வோம்.

மன்றாடுவோம்: வாழ்வு தரும் வார்த்தையான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். #8220;விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும். என் வார்த்தைகள் மாறாது” என்று மொழிந்தீரே. நன்றி! உமது வார்த்தைகளை நாங்கள் ஆர்வத்தோடு கடைப்பிடிக்கும் அருளை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

------------------------

 

''இயேசு, 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன்
என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல,
நிறைவேற்றுவதற்கே வந்தேன்' என்றார்'' (மத்தேயு 5:17)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வரவில்லை என இயேசு கூறியபோது யூத மரபில் தாம் வேரூயஅp;ன்றியிருப்பதை அவர் காட்டினார். திருச்சட்டம் என்பது யூத மக்களுக்கு மோசே வழியாக வழங்கப்பட்டது. இறைவாக்கு என்பது கடவுளின் திட்டத்தை மக்களுக்குக் கடவுளின் பெயரால் எடுத்துரைத்த இறைவாக்கினரின் போதனையைக் குறிக்கும். யூத மக்களின் சமய நூலில் காணப்படுகின்ற போதனைகள் முழுவதையும் ''திருச்சட்டமும் இறைவாக்குகளும்'' என்னும் சொல்வழக்கு உள்ளடக்கும். எனவே, இயேசு யூத சமயப் போதனைகளைத் தாம் அழிக்க வரவில்லை என்றும், அவற்றை ''நிறைவேற்ற'' வந்ததாகவும் கூறுகிறார். இங்கே ஒரு முரண்பாடு உள்ளதுபோலத் தோன்றலாம். அதாவது, இயேசு பல தருணங்களில் யூத சமயப் பழக்கங்களைக் கடுமையாக விமரிசத்தது உண்டு. சமயச் சடங்குகளுக்கு முன்னிடம் கொடுத்து, உள்ளத்தின் ஆழத்தில் நேர்மையின்றி நடந்தோரை இயேசு கடிந்தது உண்டு. அதே நேரத்தில் அவர் திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்ற வந்ததாகவும் கூறுகிறார். இங்கே இரு முக்கியமான உண்மைகளைக் காண்கின்றோம். இயேசு பழைய ஏற்பாட்டு மரபைப் புறக்கணிக்கவில்லை என்பது முதல் உண்மை. கடவுள் யூத மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தி, அவர்களுக்கு ஒரு வாழ்க்கை முறையை அளித்து வழிநடத்தியதை இயேசு ஏற்கிறார். யூத சமயத்தில் வழக்கிலிருந்த ஆன்மீக நெறியே இயேசுவின் வாழ்க்கைக்கு ஒளியாக இருந்தது. இரண்டாவது உண்மை இயேசு ஆற்றிய பணி பற்றியது. இயேசு பழைய ஏற்பாட்டு நெறியை ''நிறைவு'' செய்தது அந்த நெறியை அழிக்காமல் அதன் அடித்தளத்தில் ஒரு புதிய நெறியை அறிவித்தது ஆகும்.

-- இயேசு வழங்கிய புதிய நெறி அன்புக் கட்டளை ஆகும். பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்ற இக்கட்டளைக்கு இயேசு புதிய அர்த்தம் அளித்தார். கடவுளின் அன்பை மக்களுக்கு எடுத்துக்காட்டி அதை அவர்களோடு பகிர்வதே தம் பணி என இயேசு போதித்தார். கடவுளின் உள் இயல்பு அன்புதான். அக்கடவுள் நமக்குத் தந்தையாக இருந்து நம்மைப் பேணுகின்றவர். அவர் அனுப்பிய மீட்பராக வந்த இயேசு கடவுளின் அன்பு வெளிப்பாடாகத் தம்மை அடையாளம் காட்டியதோடு கடவுளின் ஆவியால் நம்மைத் தொடர்ந்து வழிநடத்துகிறார். இவ்வாறு இயேசு திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றினார். இயேசுவைப் பின்செல்வோர் அவருடைய பணியைத் தொடர்ந்து ஆற்ற அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனின் பணியை நாங்கள் மனமுவந்து ஆற்றிட அருள்தாரும்.

 

''இயேசு, 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்கவந்தேன்
என நீங்கள் எண்ண வேண்டாம்' என்றார்'' (மத்தேயு 5:17)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ''திருச்சட்டமும் இறைவாக்குகளும்'' என்னும் கூற்று விவிலியத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. ''திருச்சட்டம்'' என்பது மோசே வழியாகக் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய வாழ்க்கை நெறியைக் குறிக்கும். அதை விளக்கியுரைத்தனர் இறைவாக்கினர். எனவே, இயேசு ''பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருப்பவற்றை'' அழிக்கவரவில்லை என மத்தேயு இவண் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். என்றாலும், இயேசு பழைய ஏற்பாட்டுப் பழக்கங்கள் பலவற்றை விமர்சித்தார்; அவற்றை ஒதுக்கிவைத்தார். எடுத்துக்காட்டாக, உணவருந்துமுன் கைகழுவுதல், கலன்களைச் சுத்தம் செய்தல் போன்றவை குறித்து இயேசு படிப்பித்ததையும், ஓய்வுநாள் கடைப்பிடிப்பதுபற்றி இயேசு கொணர்ந்த புதிய போதனையையும், பழைய ஏற்பாட்டுச் சட்டங்களை அவர் வித்தியாசமாக விளக்கியுரைத்ததையும் இவண் குறிப்பிடலாம் (காண்க: மத் 15:1-20; மத்23:25; மத் 12:1-8; மத் 5:21-48). எனவே, இயேசு திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிப்பதற்கல்ல, அவற்றை ''நிறைவேற்றவே'' வந்தார் (மத் 5:17) என்பதன் பொருள் என்ன?

-- இயேசு யூத மரபில் பிறந்து வளர்ந்தவர். எனவே, அவருடைய ஆன்மீகம் யூத முறையில் அமைந்திருந்தது என்பதை நாம் ஐயமற ஏற்கலாம். என்றாலும், இயேசு யூத சமய நெறிகளைச் சீர்திருத்தவதையும் தன் பணியின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதை நற்செய்தி நூல்கள் தெளிவுபடுத்துகின்றன. யூத சமய மரபு சில வேளைகளில் சட்ட நுணுக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, சட்டத்தின் உண்மைப் பொருளை மறந்துபோனதுண்டு. இதை இயேசு கண்டிக்கிறார். அதுபோலவே, யூத சமய நெறிகளை விளக்கியுரைத்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் அவற்றின் ஆழ்ந்த பொருளை மறந்துவிட்டிருந்தனர். எனவே இயேசு தம் சீடரின் நெறி ''மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிடச் சிறந்திருக்கவேண்டும்'' எனக் கோரினார் (காண்க: மத் 5:20). இயேசுவின் சீடர்களாக வாழும் நாம் அவருடைய வாழ்வில் துலங்கிய நெறியை நமதாக்கிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் அன்பில் நாங்கள் எந்நாளும் நிலைத்திருக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

மாற்றமும் நிறைவை நோக்கியே

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

பேறு பெற்றோர் யாவர் என்ற விவரம் சொன்ன உடன், மலைப் பொழிவைத் தொடங்கும் முன்அருமையான விளக்கம் கொடுக்கிறார் மத்தேயு. இயேசுவின் இப் போதனைப் பகுதி மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கிவிடக் கூடாது என்பதைத் தெளிவாக உணர்ந்து இப் பகுதியை முன் வைக்கிறார்.புதிய போதனையின் நோக்கம், சட்டத்தையும் இறைவாக்குகளையும், உடைப்பதோ மாற்றுவதோ அழிப்பதோ அல்ல மாறாக அதன் நோக்கத்தை முழுமை பெறச் செய்வதே என்பதை உறுதி செய்கிறார்.

பழைய விண்ணும் மண்ணும் அழிந்து, கிறிஸ்துவின் உயிர்ப்பில் புதிய உலகம் உருப்பெற்றுள்ளதால் இப் புதிய உலகில் புதிய சட்டங்களும் இறை வாக்குகளும் இப்போதே இம் மலைப் பொழிவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இப் புதிய சட்டங்கள், பழைய சட்டங்கள் இறைவாக்குகள் அனைத்தையும் முழுமை பெறச் செய்வது போல இன்றும் திருச்சபையின் போதனைகள், விளக்கங்கள், இறையியல் வெளிப்பாடுகள், இயேசுவின் போதனையின் உட்பொருளை, அவர் பேசிய மொழி,கலாச்சாரம் இவற்றின் அடிப்படையில் புறிந்து கொள்ள நமக்கு அழைப்பு கொடுக்கிறது.

இயேசுவோ. திருச்சபையின் போதனையோ அழிப்பதற்கல்ல, நிறைவுறச் செய்யவதற்கே.சிலரின் தப்பறையான போதனைகளும் விளக்கங்களும், சில சமயங்களில் அதிகாரப்பூர்வமான மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்றுக்கொள்ளாமையும் நம்மை விண்ணரசில் சிறியவராக்கிவிடும்.எனவே நம் இதயம் திறந்திருக்கட்டும்.ஆவியின் வெளிப்பாடுளை ஏற்றுக் கொள்ளட்டும்.விண்ணரசிலும் இவ்வுலகிலும் பெரியோராய் வாழ்வோம்.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்

"அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

சாமானியன் சருகை மிதித்தாலும் கூட ஓலமிடும் சமுதாயம், பசைஉள்ளவன் பசுமரத்தை வேரோடும் விழுதோடும் அழிக்கும்போது மௌனம் சாதித்து விடுகிறது.நீதி தேவதை கண்ணை கருப்புத்துணியால் இருகக் கட்டிக்கொள்கிறாள்.சட்டம் தன் பாதையில் சருக்காமல் செல்லும் என்று நறுக்கென சொல்லி நாசுக்காக நழுவிவிடுவர். சட்டம் ஒரு இருட்டறை என்று இலக்கணம் பேசி தனக்கு மட்டும் விடியல் தேடிக்கொள்வர்.

இப்படிப்பட்ட மனிதர்களையெல்லாம் கடைந்து வடித்தெடுத்து உருக்கொடுத்தவைதான் இயேசுவின் போதனைகள். அவை சட்டங்களைக் கடந்தவை. வெளி வேடங்களைவிட உள்ளத்து உணர்வுகளை முறைப்படுத்துபவை. மனிதனின் உடலை அல்ல. உள்ளத்தை உருவாக்குபவை.ஆகவேதான், கொலையைச் சட்டமிட்டு குறைப்பதை விட, கோபத்தைக் களையச் சொல்லுகிறார்.(மத்5:22) சட்டம்போட்டு விபசாரத்தை தடுப்பதைவிட, மனதைக்கட்டுப்படுத்தி மாண்புடன்; வாழச் சொல்லுகிறார்.(மத்5:28) மதத்தைக் காப்பாற்ற மனிதனைக்கொல்லும் சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் இயேசுவின் தீவிரமும், அவனுள் இருக்கும் தெய்வீகத்தை நிறைவுரச்செய்வதற்காகவே.

இயேசுவின் இப்புனித பணி தொடர்ந்தால் மட்டுமே சிறியவர்கள், சார்ந்து வாழ்பவர்கள், சாமானியர்கள்,சக்தியற்றவர்கள், பாதுகாக்கப்படுவர், சட்டத்தால் பயன்பெறுவர்.அப்போது சட்டம் நிறைவேறும். சட்டத்தால் நிறைவு பெறுவர். இயேசுவோடு குரல் கொடுப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்