முதல் வாசகம்
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28

ஆண்டவர் கூறுவது: தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார். அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்பட மாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர். உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத்தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானது எதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும் செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர். ஆயினும், `தலைவரின் வழி செம்மையானதாக இல்லை' என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகள் அன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் தம் உயிரை அவர்கள் காத்துக்கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 130: 1-2. 3-4. 5-6 7-8
பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;
2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;
என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். -பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால்,
யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?
4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்;
மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். -பல்லவி

5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்;
என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட,
என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. -பல்லவி

7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு;
பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.

மத்தேயு 5:20-26

தவக்காலம் -முதல் வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்: ``கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்'' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ `முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; `அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச்செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

23.02.2024 வெள்ளி
மனித உறவில் இறை உறவைக் காண ...
மத் 5 : 20 - 26

பர்மாவில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள், யாரோடாவது சண்டை போடுவதாகக் கனவு கண்டால் கூட மறுநாள் தங்கள் கைகளில் பூக்களை ஏற்றி, அவற்றை அவர்களிடம் கொடுத்து மன்னிப்பு கேட்பார்களாம். காரணம் மணித உறவு உடையாமல் இருக்க, நீக்ரோ மக்கள் வருடத்திற்கு இரண்டு முறை ஒன்றாக அனைவருமே கூடுவர். அந்த நாளில் யார் யாரை வேண்டுமென்றாலும் வெளிப்படையாக பேசி தங்கள் உறவை புதுப்பித்துக்கொள்ளலாம். நமது பண்பாடுபடி பார்த்தோமென்றால் (நண்பர்கள் சந்திப்பு) இவையெல்லாம் இந்த மண்ணில் இருக்கின்ற உறவை வலுப்படுத்தவே.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இறைமகன் இயேசு கிறிஸ்து இதனைத்தான் நமக்கு கற்றுக்கொடுக்கின்றார். மனித உறவை வளர்த்துக்கொள்ளக்கூடிய காரணிகளை நமக்கு கற்றுக்கொடுக்கின்றார். ஏனென்றால் பரிசேயர்களின் மத்தியில் ஒரு கோட்பாடு காணப்பட்டது. அதாவது எல்லாம் அறிந்த ஞானிகளாக, கடவுளுக்கு நெருக்கமானவர்களாக தங்களையே உயர்த்திப் பார்த்தார்கள். அதாவது இறை உறவுக்கு தாங்களே இணைப்புப் பாலம் என்ற கண்ணோட்டத்தில் வாழ்ந்தவர்கள். ஆனால் அடிப்படையான மனித உறவை கட்டியெழுப்ப மறந்துவிட்டார்கள். அதனால்தான் இயேசு மனித உறவை சரிசெய்யாமல் இறைஉறவை கட்டியெழுப்ப முடியாது என்ற பாடத்தினை புகட்டுகின்றார்.

தவக்காலத்தில் பயணிக்கும் நாம் மனித உறவை புதுப்பிக்க முயற்சி எடுக்கின்றோமா. அதன் வழி இறை உறவை நெறிப்படுத்த முயற்சி எடுக்கிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

மத்தேயு 5: 20 – 26
மன்னிப்பு

அமொிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு “கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ஸ்” என்ற பெயரில் ஓர் ஆய்வானது செயல்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தியானது வெளியிடப்பட்டது. அது போன்று ஏல் மெடிக்கல் பல்கலை கழக ஆய்வுகள், ‘மன்னிக்கின்ற குணம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புகள் மிக குறைவு’ என்று கூறுகின்றது. மன்னிப்பு என்பது கோழைத்தனம். அது கையாலாகதவர்களின் ஆயுதம் என்று கருதப்பட்டு வந்த சூழலில் மன்னிப்பதால் உடலும் உள்ளமும் நலமாக மகிழ்ச்சியாக இருக்கும் என்று மருத்துவ ஆய்வுகூடங்கள் கூறுகின்றது.

ஆனால் இயேசு சற்று உயர்ந்து நாம் பிறருடன் மனத்தாங்கலோடு மன்னிக்க முடியாத இதயத்தோடு கொண்டு வரக் கூடிய காணிக்கையை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்ற மாற்றுச் சிந்தனையை இன்றைய வாசகத்தின் வழியாக கொடுக்கின்றார். ஏனென்றால் யூதனுக்கு இன்னாரு யூதன் அடுத்தவன் என்ற கண்ணோட்டத்தில் யூதர்கள் வாழ்ந்தார்கள். மற்ற மனிதர்கள் யாரையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் தான் இயேசு மன்னிக்கக்கூடிய மனம் தான் கடவுள் முன் வாசனை தரும், ஜொலிக்கும் என்ற சிந்தனையைக் கற்றுக் கொடுக்கின்றார்.

நான் மற்றவர்களை மன்னிக்க முன் வருகிறேனா? அல்லது பழிவாங்கக்கூடிய நாற்ற மலராக செயல்படுகிறேனா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=======================

மத் 5 : 20 -26
மனநிலையும் வழிபாடும்

கண்ணால் காணமுடியாத கடவுளை அன்பு செய்கிறேன். அவருக்குப் பலி செலுத்துகிறேன் என்று அவருக்கும் நமக்கும் உள்ள உறவினை சரிசெய்வதற்கு முன்பாக, முதலில் கண்ணால் நீ காண்கின்ற உன் அயலானோடு உள்ள உறவுச் சிக்கலை சரிசெய்ய வேண்டும் என்பதே இன்றைய நற்செய்தி நமக்கு முன் படைக்கின்ற பாடமாகும்.

இதற்கு பரிசேயர்களின் அறநெறியைக் காட்டிலும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களின் அறநெறி சிறந்ததாக இருக்க வேண்டும். பரிசேயர்களின் அறநெறி என்பது சட்டத்தை மட்டுமே சார்ந்தது. இரக்கம், அன்பு, மன்னிப்பு இவற்றிற்குச் சட்டத்தில் வேலையில்லை. ஆனால் இயேசு ‘நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்று சொல்லி அவர்களின் சட்டத்திற்கு புதிய பொருளும், அழுத்தமும் கொடுக்கிறார். அவர்களின் சட்டங்கள் அனைத்தும் ஒருவரின் செயலினை மட்டும் கொண்டே மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் ஆண்டவர் கூறும் புதிய நெறியில் செயலுக்குக் காரணமான மனநிலையையும் (யுவவவைரனந) நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்.

எடுத்துக்காட்டாக, கொலை செய்யாதிருப்பாயாக! என்பதில் ஒருவனை கொலை செய்வதை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் ஒருவனுடைய பெயரைக் கெடுப்பது, அவனுக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லுவது, புறங்கூறுவது, ஒருவனிடம் கோபம், வைராக்கியம் காட்டிப் பகைப்பது, இவையனைத்துமே நாம் ஒருவரை நம் மனத்தால் கொலை செய்வதற்குச் சமம் என்கிறார் இயேசு. சட்டங்களிலும், கட்டளைகளிலும் சொல்லப்படுவதைவிட நமது மனநிலையில்தான் மாற்றங்கள் வேண்டும். இதற்கான அழைப்பே இத்தவக்காலம், மனமாற்றத்திற்கானக்காலம்.

மிகவும் இன்றியமையாத இன்னொரு பாடத்தையும் இன்றைய நற்செய்தி இன்று நமக்குத் தருகிறது. பரிசேயர்களின் அறநெறி என்பது வாழ்க்கை எப்படியிருந்தாலும் பரவாயில்லை நம் வழிபாடு சரியாக இருக்க வேண்டும் என்றது. ஆனால் இயேசுவின் நெறியோ நமது வாழ்வினையும் வழிபாட்டினையும் பிரிக்க முடியாததாக அமைந்துள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளது என்பதை எடுத்துக் கூறுகிறது. செயலில் இல்லாத இறை நம்பிக்கை செத்த நம்பிக்கையே! இத்தவக்காலத்தில் நம் வழிபாட்டினை வாழ்வாக்குவோம்!

- திருத்தொண்டர் வளன் அரசு

===============================

திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8
”எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார் தான் நிலைத்து நிற்கமுடியும்?”

இந்த திருப்பாடல் ஓர் ஆன்மாவின் திருப்பாடலாக அமைகிறது. இறந்தவர்களின் உடல்களை அவர்களது இல்லத்திலிருந்து குருவானவர் எடுத்து வருவதற்கு முன்னதாகச் சொல்லப்படும் செப வழிபாட்டில் இடம்பெறும் பதிலுரைப்பாடலாகவும் இது அமைந்துள்ளது. வெறும் உலக காரியங்கள் சார்ந்தோ, தனிப்பட்ட, பொதுக்காரியங்கள் சார்ந்தோ அல்ல. உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசும் ஆன்மாவின் பாடல் என்று சொல்லலாம். மனவருத்தத்தை வெளிப்படுத்தும் ஏழு திருப்பாடல்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. தவறான வழியில் சென்றவர்கள் மீண்டும் திருச்சபைக்குள் சேர்க்கப்படுகிறபோது, பாடப்படும் பாடலாகவும் இது அமைந்துள்ளது. தவறான வாழ்க்கை வாழ்ந்து கடவுளை நாடிவருகிறவர்களும், இந்த பாடலை பாடிச் செபிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

கடவுள் முன்னிலையில் தன்னுடைய உண்மையான நிலையை, தன்னுடைய பலவீனத்தை, தான் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மனிதனின் பாடல் தான் இந்த வரிகள். ஒருவன் எவ்வளவு தான், தன்னை நல்லவனாகக் காட்டிக்கொண்டாலும், கடவுள் முன்னிலையில் வருகிறபோது, தன்னுடைய நிலையை அவன் உணர்ந்து தான் ஆக வேண்டும். தன்னுடைய பலவீனத்தை அவன் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அதனை யாரிடமும் மறைக்க முடியாது. குறிப்பாக, கடவுளிடத்தில் அவன் மறைக்கவே முடியாது. அந்த நிலையை உணர்கிறபோது, அவன் புனித பாதையில் நடக்க ஆரம்பிக்கிறான். ஆக, இந்த திருப்பாடலை நாம் முழுமையான ஈடுபாட்டுடன் தியானிக்கிறபோது, நமது வாழ்க்கை கடவுளுக்கு விருப்பமுள்ள ஒரு பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறது.

நமது வாழ்க்கையில் நமது குற்றங்களையும், நாம் செய்யும் தவறுகளையும் எண்ணிப்பார்த்தாலே, கடவுள் நம் மீது காட்டும் அன்பையும், நாம் மற்றவர்கள் மீது காட்டும் தேவையில்லாத வெறுப்பையும் உணர்ந்து கொள்ளக்கூடிய நிலைக்கு மாறி விடுவோம். அது நம்மையும், நமது வாழ்வையும் சரியான பாதைக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

இறைவனின் அழைப்பு

தண்டனை என்பது உடனே தரப்படுவது கிடையாது. தண்டனை கொடுப்பதற்கு முன்னதாக, திருந்தி வாழ்வதற்கு பல வாய்ப்புகள் நமக்குத் தரப்படுகிறது. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நமது வாழ்வை நாம் மாற்ற முன்வருகிறோமா? என்று, நமது வாழ்வை சிந்தித்துப் பார்க்க அழைப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம்.

கடவுள் இரக்கமுள்ளவராய் இருக்கிறார். அவர் எவரும் தண்டனைத்தீர்ப்பு பெற வேண்டும் என்று விரும்புவது கிடையாது. எனவே தான், நாம் திருந்தி வாழ்வதற்கு அவர் பல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார். பல மனிதர்கள் வாயிலாக நமது வாழ்வை நாம் ஆராய்ந்து அறிவதற்கு உதவுகிறார். இவ்வளவு வாய்ப்புகள் நமக்கு தரப்படுகிறபோது, அவற்றைப்பயன்படுத்தாமல் நாம் வீணடித்தோம் என்றால், அதற்கு நாம் தான் முழுமையான பொறுப்பு. அதற்கான பலனை நாம் நிச்சயம் அனுபவித்தே ஆக வேண்டும். இந்த இடத்தில், கடவுள் மனமிரங்கவில்லை என்று நாம் சொல்ல முடியாது. ஏனென்றால், கடவுள் நீதியுள்ளவராகவும் இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகத்தில் நாம் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பம். இந்த வாழ்க்கையை நிறைவாக வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனை மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் வாழ வேண்டும் என்றும் விரும்புகிறார். இறைவனின் அழைப்பை ஏற்று நமது வாழ்வை மாற்றுவதற்கு முன்வருவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

இயேசுவின் மறைநூல் அறிவு

இயேசுவின் அதிகாரம் மிகுந்த போதனையை நாம் பார்க்கிறோம். இயேசுவின் அதிகாரம், இதுவரை யூதப்போதகர்கள் யாருமே வெளிப்படுத்தியிராத போதனை. அவர்கள் அப்படியொரு அதிகாரத்தை நினைத்துக்கூட பார்க்காத போதனை. இயேசுவின் போதனையைக்கேட்டவர்கள், அவர் தீய ஆவிகளை அதிகாரத்தோடு ஓட்டும்போது உடனிருந்தவர்கள், நிச்சயம் இயேசுவைப்பார்த்து அதிர்ச்சியடைந்திருப்பார்கள். ஏனென்றால், அவருடைய போதனையின் அதிகாரமும் சரி, துணிவும் சரி, சாதாரண மக்களிடமும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இயேசுவின் அதிகாரத்தைப் பார்த்து ஏன் மக்கட்கூட்டம் வியந்தது? யூதர்களைப் பொறுத்தவரையில், திருச்சட்டம் ஒன்றுதான், அதிகாரத்தைக் கொண்டிருந்தது. யூதப்போதகர்கள் தங்களுடைய போதனையை, இந்த திருச்சட்டத்தின் அடிப்படையில் போதித்தனர். அவர்களுக்கு திருச்சட்டம் தான் வாழ்வும், உயிருமாக இருந்தது. ஏனென்றால், அது கடவுளுடையது மற்றும் கடவுளால் கொடுக்கப்பட்டது. திருச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு வாழ்வு இல்லை, என்பதுதான் போதகர்களின் போதனையாக இருந்தது. தொழுகைக்கூடத்தில் போதிப்பதற்கு முன்னதாக, ஏட்டுச்சுருளேட்டை எடுத்து, பவனியாக வலம்வந்து, அதற்குரிய மரியாதையைச் செலுத்தியபின் தான், அடுத்தகட்ட வழிபாடுகள் தொடங்கப்பட்டது. அந்த அளவு திருச்சட்டம் மக்கள் மத்தியில் மாட்சிமை பெற்றிருந்தது. இவ்வளவுக்கு மதிப்பு பெற்றிருந்த திருச்சட்டத்திற்கும் மேலாக, இயேசுவின் வார்த்தைகள் அதிகாரம் பெற்றிருந்ததைக் கேட்ட மக்கள், உண்மையில் வியப்பில் ஆழ்ந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

இயேசுவின் இந்த அதிகாரத்திற்கு அவருடைய இறையியலின் ஆழம் தான் மிகமுக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது. கடவுளைப்பற்றியும், திருச்சட்டத்தையும் பற்றி, தெளிவுற கற்றுத்தேர்ந்திருந்தார். நாமும் நமது வாழ்க்கையில் இறைவார்த்தையின் மீது தாகம் உள்ளவர்களாக, கடவுளைப்பற்றி முழுமையாக உணர்ந்தவர்களாக, கடவுள் அனுபவம் பெற்றவர்களாக வாழ்வதற்கு முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

கறைபடாத வாழ்வு வாழ்வோம்

தன் சகோதரரையோ, சகோதரியையோ ”அறிவிலியே” என்பவர் எரிநரகத்திற்கு ஆளாவார் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார். எரிநரகம் என்பதன் பொருள் என்ன? யூதர்களுக்கு மத்தியில் இந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இது யெருசலேமின் தென்மேற்கில் இருக்கக்கூடிய, பென் இன்னோம் பள்ளத்தாக்கைக் குறிக்கிறது. இங்குதான் ஆகாஸ் மன்னன் பாகால் தெய்வங்களுக்கு வார்ப்புச்சிலைகளைச் செய்தான். இந்த பள்ளத்தாக்கில், அந்த தெய்வங்களுக்கு தூபம் காட்டினான். ஆண்டவர் முன்னிலையில் அருவருக்கத்தக்கவகையில், தனது புதல்வர்களையே தீயிலிட்டு எரித்தான். (2குறிப்பேடு 28: 1 – 4)

ஆகாசிற்கு பிறகு வந்த, யோசியா அரசர் இதை அடியோடு அழித்தார். பாகால் தெய்வமான மோலேக்கு சிலைக்கு யாரும் தங்கள் புதல்வர்களை பலியிடாதவாறு, அதை அப்புறப்படுத்தினான். அனைத்தையும் தகர்த்தெறிந்தார். பீடங்களை உடைத்து, மனித எலும்புகளால் நிரப்பினார். இவ்வாறாக, அந்த இடமே மாசுபட்ட இடமாக, மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியற்ற இடமாக, அருவருக்கத்தக்க இடமாக மாற்றப்பட்டது. (2 அரசர்கள் 23: 10 முதல்). இந்த இடம் அணையாத நெருப்பாகவும், கொடுமையானதாகவும் கருதப்பட்டது. ”அறிவிலியே” என்கிற வார்த்தை, அறிவில்லாத தன்மையை அல்ல, மாறாக, மற்றவர்களின் ஒழுக்கக்கேடான வாழ்வையும், அவமதிப்பையும் குறிக்கக்கூடிய சொல். மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதும், அவர்களின் ஒழுக்கத்தைப்பற்றிப் பேசுவதும், நரகத்திற்கு அழைத்துச்செல்லக்கூடிய வார்த்தைகள் ஆகும்.

நாம் எப்போதும் கடவுள் முன்னிலையில் மாசற்றவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். அதற்கு நம்மை கறைப்படுத்தும் செயல்களிலிருந்து, வார்த்தைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களை கறைபடுத்தும் எதுவும், நம்மை கறைபடுத்துவதாக அமையும். அதற்கேற்ப நமது வாழ்வை, தூய்மையான வாழ்வாக மாற்றிக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளுக்கு உகந்த பலி

கடவுளுக்கு பலி செலுத்துவதற்கு முன்னால், சக மனிதர்களோடு ஏதேனும் உறவில் மனத்தாங்கல் இருந்தால், முதலில் அதைச்சரி செய்ய வேண்டும் என்று இயேசு சொல்கிறார். இயேசு புதிதாக ஒன்றும் சொல்லவில்லை. ஏற்கெனவே மக்கள் அறிந்த வழக்கத்தை இங்கே மீண்டும் வலியுறுத்திக்கூறுகிறார். பலி செலுத்துதலில் இரண்டு காரியங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். முதலாவது, ஒரு மனிதன் தனது உணர்வின் உந்துதலில், தன்னையும் மீறி தவறு செய்துவிட்டால், அதன்பொருட்டு பலி செலுத்தும்போது, அதற்கு நிச்சயம் பலன் உண்டு. ஆனால், வேண்டுமென்றே செய்துவிட்டு, பெயரளவுக்கு பலிசெலுத்தினால் அதனால் எந்த பயனும் கிடையாது.

இரண்டாவது, பலி செலுத்துவது என்பது வெறும் சடங்கானது மட்டுமல்ல. நாம் ஒப்புக்கொடுக்கும் பலிப்பொருள் கடவுளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமானால், நல்ல தயாரிப்பு நமக்கு வேண்டும். செய்த தவறுக்கு மன்னிப்பும், அந்த தவறைத்திருத்திக்கொள்ள உண்மையான முயற்சியும் இருக்க வேண்டும். அப்போதுதான், ஒப்புக்கொடுக்கிற பலிப்பொருளில் அர்த்தம் இருக்கும். அது கடவுளுக்கு ஏற்றதாக இருக்கும். உண்மையான பலி செலுத்துவதாக இருக்கும். இயேசு இத்தகைய பலியை கடவுளுக்குச் செலுத்த நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

நமது வாழ்வில் பெரும்பாலான நமது வழிபாடுகள் வெறும் சடங்கு, சம்பிரதாயமாகத்தான் இருக்கிறது. உண்மையான தாக்கத்தை அது நமக்குள்ளாக ஏற்படுத்தவில்லை. சடங்குகளுக்கு, சம்பிரதாயங்களுக்கு அதிகமாக செலவிடுகிற நாம், உண்மையான அர்த்தத்தை இன்னும் புரிந்துகொள்ளாமல் தான் இருக்கிறோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் அதிகாரம் மிகுந்த போதனை

மக்கள் இயேசுவி;ன் போதனையைக்கேட்டு எப்பொழுதுமே ஆச்சரியமடைந்தனர். மாற்கு 1: 22 “ஏனெனில் அவர் மறைநூல் அறிஞர்களைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்”. மத்தேயு 7: 28 “இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்”. இயேசுவின் போதனை அதிகாரத்தோடு போதிக்கிற போதனையாக இருந்தது என்பதைத்தான் மேற்கண்ட இறைவார்;த்தை நமக்குக்கூறுகிறது. அத்தகைய அதிகாரமான போதனையை இயேசு இன்றைய நற்செய்தியிலும் போதிக்கிறார். யூதர்களைப்பொறுத்தவரையில் திருச்சட்டம் என்பது புனிதமானது. அதன் ஓர் எழுத்து, ஒரு புள்ளிகூட அவர்களுக்கு தெய்வீகமானது. அப்படிப்பட்ட மதிப்பைப்பெற்றிருந்த திருச்சட்டத்தை ஒப்பிட்டு, திருச்சட்டத்திற்கு சிறிது மாறுபட்டு, முரண்பட்டு இயேசு அதிகாரத்தோடு புதிய போதனையைப் போதிக்கிறார். இதுவரை எந்தப்போதகர்களும் போதிக்காத, போதிக்கத் தயங்குகிற, போதிக்கத்துணிவில்லாத ஒரு போதனையை இயேசு போதிக்கிறார்.

இயேசு என்றைக்குமே திருச்சட்டத்திற்கு எதிராகப் பேசியதில்லை. திருச்சட்டத்தை முழுமைப்படுத்தவே வந்தேன் என்று இயேசுவே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இங்கும் இயேசுவின் கருத்து முரண்பாடானது அல்ல, மாறாக, திருச்சட்டத்தின் பொருளை இயேசு முழுமைப்படுத்துகிறார். கொலை செய்யாதே, கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாவர் என்று திருச்சட்டம் சொல்கிறது. ஆனால், இயேசு கொலை செய்கிறவர் மட்டுமல்ல, தவறு செய்ய வேண்டும் என்று எண்ணுகிறவரே தண்டிக்கப்பட வேண்டியவர் என்று சொல்கிறார். அதாவது, ‘செயல்’ மட்டும் தீர்ப்பிடப்படக்கூடியது அல்ல, அந்தச் செயலுக்கு காரணமாக இருக்கும் ‘எண்ணமும்’ தீர்ப்பிடப்பட வேண்டும். இங்கு திருச்சட்டம் முரண்படவில்லை, முழுமைப்படுத்தப்படுகிறது. மனிதர்களாகிய நாம் ஒருவரின் செயல்பாட்டைக்கொண்டு தீர்ப்பிடுகிறோம். அவர்களின் எண்ணங்களை அறிந்துகொள்ள நம்மால் முடியாது. ஆனால், கடவுள் நம் எண்ணத்தையும் அறிந்தவராக இருக்கிறார். எனவேதான், இயேசு மறைநூல் அறிஞர், பரிசேயர்களின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்ததாக இருக்கட்டும் என்கிறார். அதாவது, பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் செயல்பாடுகள் அவர்களை நல்லவர்களாகக் காட்டுகிறது. ஆனால், அவர்களின் எண்ணங்கள் சரியான எண்ணங்கள் அல்ல. எனவே, எண்ணங்களைத் தூயதாக வைத்திருக்க இயேசு அழைப்புவிடுக்கிறார்.

எண்ணங்களைத் தூய்மையாக வைத்திருப்பதில் நாம் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நல்லவற்றைப்பார்ப்பது, நல்லவற்றைக் கேட்பது, நல்லவற்றைப் படிப்பது நம்முடைய எண்ணங்களைத்தூய்மையாக வைத்திருப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது. எப்பொழுது இதற்கு நேர்மாறான செயல்களைச் செய்கிறோமோ, அப்பொழுது நம் எண்ணங்கள் தீயதாக மாறுகிறது. எண்ணங்களைத் தூய்மையாக வைத்திருக்க இறைஆற்றல் வேண்டி மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

======================================

கோபம் அகற்றுவோம்

விடுதலைப்பயணம் 20: 13 சொல்கிறது: கொலை செய்யாதே. இயேசு இதற்கு மாற்றாக ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறார். “தம் சகோதரர், சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாவார்” (5: 22). மற்றவரிடம் கோபப்படுதலே நம்மை தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாக்கும் என்பது இயேசுவின் வாதம். கோபம் என்றால் என்ன? விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற கோபம் என்ற வார்த்தையின் உண்மையான பொருளென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

கிரேக்க மொழியில் ‘கோபம்’ என்ற பொருளுக்கு இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. முதல் வார்த்தை: ‘துமோஸ்’. காய்ந்த வைக்கோற்புல்லில் எரிவதற்கு சமமாக இதனைப் பொருள்படுத்தலாம். காய்ந்த வைக்கோற்புல் உடனடியாக எரியக்கூடியது. அதேபோல் எரிந்த வேகத்தில் அணையக்கூடியது. இந்த வகையான கோபம் உடனடியாக வந்து, வந்த வேகத்தில் மறைந்துவிடக்கூடியது. இரண்டாம் வார்த்தை: ‘ஓர்கே’. இது ஆழமானது. நீண்டநாள் இருக்கக்கூடியது. இந்த வகையான கோபம் எளிதில் மறையாத, வைராக்யம் நிறைந்தது. இங்கே இயேசு பயன்படுத்துகிற வார்த்தை இந்த இரண்டாம் வகையான வார்த்தையாகும். இதனை இயேசு கண்டிக்கிறார். விவிலியத்தின் ஆங்காங்கே கோபம் கண்டிக்கப்படுகிறது. யாக்கோபு 1: 20 சொல்கிறது: “மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது”. கொலோசையர் 3: 8 ல் பார்க்கிறோம்: “நீங்கள் சினம், சீற்றம், தீமை ஆகிய அனைத்தையும் அகற்றி விடுங்கள்”

கோபம் கடவுளுடைய அருளைப் பெற தடையாயிருக்கிறது என்று இறைவார்த்தை சொல்கிறது. அப்படியென்றால், கோபம் எந்த அளவுக்கு நமக்கு அழிவைத்தர வல்லது என்பது இதிலிருந்து புலனாகிறது. கோபத்தை அறவே நம்மிடமிருந்து அகற்ற நாம் முழுமுயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் கடவுளின் வல்லமையை நாம் பெற முடியும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

ஆளுமைக் கொலை!

“கொலை செய்யாதிருப்பாயாக” என்பது இறைவனின் கட்டளை. நம்மில் பெரும்பாலானோர் வாழ்நாளில் கொலையே செய்ததில்லை.

ஆனால், இயேசுவின் புதிய பார்வையில், பிறரிடத்தில் சினம் கொள்வதே ஒரு பாவம்தான். சகோதர, சகோதரிகளை “முட்டாளே” “அறிவிலியே” என அழைப்பதும் எரிநரகத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பெரும் பாவமாகும்.

இதுபோக, பிறருடைய நற்பெயரைக் கெடுக்கும் வகையில் பேசுவது, வதந்திகளைப் பரப்புவது, அவதூறு ஏற்படுத்துவது போன்றவையும் ஆளுமைக் கொலைகளே. ஒருவருடைய புகழைக் கொலை செய்வது, அவரது ஆளுமையையே கொல்வதற்கு ஒப்பாகும். எனவே, இத்தகைய செயல்களை நினைத்து நாம் அஞ்சவேண்டும்.

நம்முடைய உரையாடல்களில் மூன்றாம் நபர்கள் பற்றிய நேர்மறைச் செய்திகள் மட்டுமே இடம்பெற வேண்டும். அவதூறான செய்திகளைப் பற்றிப் பேசுவதில்லை என உறுதிபூணுவோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் சகோதர, சகோதரிகளைப் பற்றிய நல்லெண்ணத்தில் வளர, நல்லவைகளைப் பேச எங்களுக்கு அருள்தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

தவிர்க்க வேண்டிய சொற்கள் !

"தம் சகோதரரையோ, சகோதரியையோ "முட்டாளே" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு உள்ளாவார். "அறிவிலியே" என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்" என்னும் இயேசுவின் அமுத மொழிகளை இன்று வாழ்வாக்க முயல்வோம்.

நம்மில் பலருக்கும் இழிவான, கண்ணியக்குறைவான, பிறரைப் புண்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட காலப் பழக்கமாகவே மாறியிருக்கலாம். முட்டாளே, அறிவிலியே... போன்ற சொற்களை கோபத்தில் வெளிப்படுத்துபவர்களாக நாம் இருக்கலாம். இத்தவக்காலத்தில் அத்தகைய சொற்களை அடியோடு நிறுத்த உறுதிபூணுவோம்.

இழிவான சொற்களை நிறுத்தி, இனிமையான சொற்களைப் பயன்படுத்தும் இன்மொழிக் கலாசாரத்தை நம் வாழ்வில் புதிதாக அறிமுகம் செய்வோம். நமது சொந்த தன்னாய்வின் மூலமாகவும், நமக்கு நெருக்கமானவர்களிடம் உரிமையோடு கேட்பதன் வழியாகவும் தரமற்ற சொற்கள் எவற்றையெல்லாம் நாம் பயன்படுத்துகிறோம் என்பதை முதலில் கண்டறிய வேண்டும். பின்னர், முயற்சி எடுத்து, அத்ததைய சொற்களை அறவே தவிர்த்துவிடுவோம்.

கடந்த காலங்களில் இத்தகைய சொற்களைப் பயன்படுத்தியதற்காக மனம் வருந்தி, இனிமேல் அத்தகைய சொற்களை அறவே தவிர்த்து, இனிய சொற்களைப் பேசுவோமாக.

மன்றாடுவோம்: அருள்மொழி வேந்தனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களது வாயில் இறைபுகழ்ச்சியும், மாந்த நேயம் மிக்க சொற்கள் மட்டுமே ஒலிக்கின்ற வரத்தைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

-------------------------------------------

இணையதள உறவுகளே

நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்க இயேசு இன்று ஒரு வழியை நமக்குக் காட்டுகிறார். அது சினம் கொள்ளக்கூடாது என்பது. எபேசியர் 4 : 31 மனக்கசப்பு, சீற்றம், சினம்;, கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். சினம் கொள்ளுதல் தவறல்ல. ஆனாலும் அது நீக்கப்பட வேண்டிய ஒன்று. அந்த சினத்தால் யாருக்காவது இழப்பு ஏற்படுமாயின்அது தவறு. அதில் மாற்றுக் கருத்து இல்லை;. எபேசியர் 4 : 26 சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்.

உங்கள் சினம் பாவத்திற்கோ உறவின் முறிவுக்கோ இட்டுச் செல்லுமாயின் அது உடனே தவிர்க்கப்பட வேண்டும். உங்கள் கோபத்ததால் வைராக்கியம் உண்டாகி காவல்துறை,நீதிமன்றம் என்று நீட்டிக்கொண்டே செல்வீர்களாளால், அது உறவின் முறிவில் சென்று முடியும். பகை உணர்வை அதிகமாக்கும். உங்கள் நிம்மதியை அழித்துவிடும். பிறருக்கும் பொருளுக்கும் இழப்பை ஏற்படுத்தும். அத்தகைய சினம் பாவத்திற்கு இட்டுச் செல்லும் சினம். தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இறைவனுக்கு ஏற்புடையதல்ல.

ஆகவே ஒவ்வொரு சினமும் உறவை முறிக்காத வரையில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் அமைவது முறையானது. அது முறைப்படுத்தப்பட்ட சினம். தீங்கிழைக்காது. நல்லவற்றையே நாடுவது. முறைப்படுத்துவோம். இனிது வாழ்வோம்.

-ஜோசப் லீயோன்

------------------------

உங்கள் நெறி உயர்ந்திருக்கட்டும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

“மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட, உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்” என்னும் ஆண்டவரின் அமுத மொழிகளை இன்று தியானிப்போம். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் வாழ்வு முறை சாதாரண மக்களைவிட, மேலானதாக, கடினமானதாக இருந்தது. லூக் 18ல் வருகிற உவமையில் பரிசேயன் வாரத்தில் இரு நாள்கள் நோன்பிருப்பதாகவும், வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியைக் காணிக்கையாகக் கொடுப்பதாகவும் பார்க்கிறோம். எனவே, இறைப்பற்று, சட்டங்களைப் பின்பற்றுவதில் அவர்கள் பிரமாணிக்கமுள்ளவர்களாக இருந்தனர். ஆனால், ஆண்டவர் இயேசுவே சுட்டிக்காட்டியதுபோல, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் போல, வெளிப்பார்வைக்கு நேர்மையாளர்களாகவும், உள்ளே முரண்பாடுகள் நிறைந்தவர்களாகவும் விளங்கினர். இறையன்பில் சிறந்து விளங்கினர், ஆனால், பிறரன்பு இல்லாமல் வாழ்ந்தவனர். எனவேதான், அவர்களின் ‘நெறியைவிட, உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்’ என்று இயேசு கூறும்பொழுது, அவர்களின் நல்லவற்றை எடுத்துக்கொண்டு, அவர்களின் முரண்பாடுகளைக் களைந்து வாழுங்கள் என்று அழைக்கிறார். ஆகவே, நாம் செப வாழ்விலும், பணி வாழ்விலும் அர்ப்பணத்தோடு வாழும்போது, நமது வாழ்வு இயேசுவின் எதிர்பார்ப்புக்கேற்றவாறு அமையும்.

மன்றாடுவோம்: ஆவியைத் தருபவரான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் தந்த அழைப்;பை ஏற்று, எங்கள் வாழ்வு பரிசேயர், மறைநூல் அறிஞரின் வாழ்வைவிட மேலானதாக அமைய அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

 

“முட்டாளே, அறிவிலியே” !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தம் சகோதரரையோ, சகோதரியையோ முட்டாளே என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்.  அறிவிலியே என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார் என்னும் ஆண்டவரின் அருள்வாக்கை இன்று சிந்திப்போம். சொற்கள் வலிமை வாய்ந்தவை. ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும் என்று எச்சரித்தனர் நமது முன்னோர்;. எனவே, நாம் பேசும் சொற்களைப் பற்றிக் கவனமாயிருக்க வேண்டும். நாம் தவிர்க்க வேண்டிய சொற்களில் முட்டாளே, அறிவிலியே போன்ற அன்பற்ற, பிறரன்புக்கெதிரான சொற்களை ஆண்டவர் சுட்டிக்காட்டுகிறார். சிலருடைய வாயிலிருந்து இத்தகைய சொற்கள், தாராளமாக வெளிவரும். அதை ஒரு பழக்கமாகவே சிலர் கொண்டிருக்கின்றனர். சிலர் அதனைத் தங்கள் பாணியாக, ஸ்டைலாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர். சிலர் தாங்கள் பேசும் சொற்கள் பற்றிய தன்னுணர்வு இன்றியே பேசித் திரிகின்றனர். இயேசுவின் இறைமொழியைத் தீவிரமாகப் பின்பற்ற விரும்பும் எவரும் தங்கள் சொற்களின்மீது கட்டுப்பாடு கொண்டவர்களாக இருக்கவேண்டும். இழிவான சொற்களைக் கொலை செய்வதற்கு ஒப்பிடுகிறார் ஆண்டவர். ஆம், இழிவான சொற்கள் மனித மாண்பைக் கொலை செய்கின்றன. இத்தவக்காலத்தில் நாம் செய்யவேண்டியது நமது சொற்களின்மீது கட்டுப்பாடு கொள்வது. நாம் எத்தகைய சொற்களைக் கையாள்கிறோம் என்று நம் நண்பர்களிடமிருந்து திறானாய்வாக அறிந்துகொள்வோம். நாம் பயன்படுத்தும் இழிவான சொற்களைப் பட்டியலிடுவோம். இத்தவக்காலத்தில் அச்சொற்களை அறவே தவிர்த்து, நல்லுறவில் வளர்வோம்.

மன்றாடுவோம்: நல்லுறவின் நாயகனான ஆண்டவரே, நாங்கள் தவறாகப் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுக்கும் இறுதி நாளில் கணக்கு கொடுக்க வேண்டும் என்று அறிந்துள்ளோம். இத்தவ நாள்களில் பிறரைக் காயப்படுத்தும் சொற்களைத் தவிர்த்து, உறவை வளர்க்கும் சொற்களை அதிகம் பயன்படுத்த, உமது ஆவியை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

----------------------

''இயேசு, 'மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்.
இல்லையnனில், நீங்கள் விண்ணரசில் புக முடியாது
என உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றார்'' (மத்தேயு 5:20)

-- இயேசுவின் மலைப்பொழிவு பல போதனைகளை உள்ளடக்கியது. குறிப்பாக, இயேசு தம் சீடர்களுக்கும் மக்களுக்கும் ஒரு ''புதிய வாழ்க்கை முறை''யை அறிவிக்கின்றார். அதாவது பழைய நெறிக்குப் பதிலாக ஒரு புதிய நெறி நமக்கு வழங்கப்படுகிறது. முற்காலத்தில் கடவுளின் கட்டளைகளுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கத்தை இயேசு ஏற்றாலும் அந்த விளக்கத்தை விடவும் அதிக வேரோட்டமான விதத்தில் அவர் திருச்சட்டத்திற்கு விளக்கம் தருகின்றார். இது குறிப்பாக, ''கொலை'', ''விபசாரம்'', ''மண முறிவு'', ''பொய்யாணை''. ''பழிக்குப் பழி'', ''பிறர் மட்டில் அன்பு'' ஆகிய ஆறு பொருள்கள் பற்றிய கட்டளைகளுக்கு இயேசு தருகின்ற புதிய விளக்கத்தை உள்ளடக்கும். கொலை என்பது பிற மனிதரோடு நமக்குள்ள உறவு முற்றிலும் முறிந்துவிட்ட நிலையில் நிகழ்கின்ற குற்றம். கடவுள் மோசே வழியாக வழங்கிய சட்டம் ''கொலை செய்யாதே'' என்று கூறுகிறது (காண்க: விப 20:13; இச 5:18). ஆனால் பிறர்மட்டில் சினம் கொள்வதே தவறு என இயேசு போதிக்கிறார். கோபம் எழுகின்ற வேளைகளில் நல்லுறவை மீண்டும் ஏற்படுத்த நாம் முயல வேண்டும். இதை இயேசு மூன்று எடுத்துக்காட்டுகள் வழியாக விளக்குகின்றார். பிறரை நாம் ''அறிவிலியே'' என அழைப்பது தவறு; கடவுளுக்குக் காணிக்கை செலுத்திவிட்டால் முறிந்த உறவு சரியாகிவிடும் என்று எண்ணாமல், முறிந்த உறவை முதலில் சரிப்படுத்திவிட்டு, அதன் பின் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதே முறை; நீதி மன்றம் செல்கின்ற அளவுக்கு நாம் உறவுகளை முறித்துவிடலாகாது. இந்த மூன்று எடுத்துக்காட்டுகள் வழியாக நாம் உண்மையான அன்பைக் கடைப்பிடிக்கின்ற முறையை இயேசு விளக்குகிறார்.

-- எனவே, ''கொலை செய்யாதே'' என்னும் கட்டளையின் பொருள் பிறருடைய உயிரைப் பறிப்பது தவறு என்பதை மட்டும் குறிப்பதன்று. மாறாக, பிறரோடு நாம் கொள்ள வேண்டிய நல்லுறவுக்குத் தீங்கு விளைவிக்கின்ற சொல், செயல் அனைத்தையும் நாம் விலக்க வேண்டம். இவ்வாறு செய்தால் ''நம் நெறி மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விடச் சிறந்ததாய் இருக்கும்'' (காண்க: மத் 5:20). அப்போது நாம் கடவுளின் ஆட்சியில் பங்கேற்கத் தகுதி பெறுவோம்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் பிறரன்பில் சிறந்து விளங்க அருள்தாரும்.

 

''இயேசு, 'மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட
உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்' என்றார்'' (மத்தேயு 5:20)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு வாழ்ந்த காலத்தில் யூத சமயத்தைப் பற்றிய அறிவை அதிகமாகப் பெற்றிருந்தோர் ''மறைநூல் அறிஞர்'' ஆவர். அவர்கள் யூத சமயத்தின் சட்டதிட்டங்களையும் வழிபாட்டு நுணுக்கங்களையும் நன்றாகவே தெரிந்துவைத்திருந்தார்கள். அதுபோல, பரிசேயர் என்னும் குழுவினர் தங்களைத் தூயவர் என்று கருதி, சாதாரண மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டு, தாங்களே சமயச் சட்டங்களைத் துல்லியமாக அனுசரித்ததாகப் பெருமை பாராட்டிக்கொண்டார்கள். பரிசேயர் எல்லாருமே போலிகள் என்பதற்கில்லை. ஆனால் அவர்களிடையே ஒருவித சட்ட மனப்பான்மை உருவாகியிருந்தது. அதாவது, சமயம் சார்ந்த கட்டளைகளின் உட்பொருள் என்னவென்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வெளி அனுசாரங்களுக்கே பல பரிசேயர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர். இம்மனப்பான்மையை இயேசு வன்மையாகக் கண்டித்தார். இயேசுவைப் பொறுத்தமட்டில் சமயம் சார்ந்த சட்டங்களும் வழக்கங்களும் கடவுளுக்குப் புகழ் சேர்க்கவும் மனிதரின் நலனை மேம்படுத்தவுமே உள்ளன.

-- ஆகவே, எச்சட்டம் கடவுளுக்கும் மனிதருக்கும் எதிராக இருக்கின்றதோ அது அகற்றப்பட வேண்டும் என்பது இயேசுவின் போதனை. சட்டத்தின் உட்பொருளை அறிந்து நாம் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப ஒழுக வேண்டும் என இயேசு கேட்கின்றார். இதுவே இயேசு வழங்குகின்ற நெறி. அதை இயேசு தம் வாழ்வில் காண்பித்தார். ஒருவிதத்தில் இயேசுவே நாம் பின்பற்ற வேண்டிய நெறி அல்லது வழி என்று கூறலாம். அப்போது பரிசேயரும் மறைநூல் அறிஞரும் வெளிவேடமாக அனுசரித்த நெறியை நாம் பின்பற்றாமல் இயேசுவின் வாழ்வை நம் வாழ்வுக்கு முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வோம். அதுவே விண்ணரசு புகுந்திட வழியாகும் (மத் 5:20).

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தில் தூய்மை வளர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

------------------------------

"காணிக்கையை வைத்து விட்டுப் போய்.. .."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

'கொலை' அது பழி பாவச் செயல். எந்தச் சமுதாயமும் அதை ஏற்றுக்கொள்வதில்லை. பத்துக் கட்டளைகளுள் ஆறாம் கட்டளையாகக் 'கொலை செய்யாதிருப்பாயாக'(வி.ப 20:13; இ.ச 5:17) என்று மோசே வழியாக உறுதிபட இறைவன் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வெளிப்பாடு, இயேசுவின் போதனைகள் அடங்கிய இப்பகுதியில் முழுமையடைகிறது. கொலை என்னும் கொடூர நிகழ்ச்சியின் பரிணாம வளர்ச்சியை படமாக விவரிக்கிறார்.

சிறிய அளவில் கருவான 'மனத்தாங்கல்' (5:23), வார்த்தை கடந்து 'முட்டாளே' ' அறிவிலியே' (5:22) என்று வளர்ச்சி பெற்று,தடித்து, 'கோபம்' 'சினம்'(5:22) என்னும் கோர வடிவம் எடுத்து 'கொலை' என்னும் பாவத்தில் முழுமை அடைவதை இயேசு விலாவாரியாக விவரிக்கிறார். முளையிலே கிள்ளி எறியச் சொல்லுகிறார்.

இறைவனுக்குப் பலி செலுத்துவதைக் கூட நிறுத்திவிட்டு, கரு அளவில் உள்ள மனத்தாங்கலையும் களைந்துவிட்டு 'நல்லுறவை'(5:24) ஏற்படுத்தச் சொல்லுகிறார். காவல்துறை, 'நீதிமன்றம்'(5:25) என பிரச்சனையைப் பெரிதாக்காமல், 'உடன்பாடு' (5:25) என்னும் பாச வலைக்குள் கட்டுப்பட்டு உறவை வளர்க்கச் சொல்லுகிறார். அங்கு கொலையுணர்வுக்கு இடம் இருக்காது. இயேசுவின் இந்த அறிவுரையை வாழ்வாக்குவோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லீயோன்

கடுஞ் சொல்லும் கொலையே

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இயேசு கூறுவது முற்றிலும் உண்மை. கொலை மட்டுமே மனிதனின் நிம்மதி வாழ்வைக் குலைத்துவிடுவதாக நினைக்கக் கூடாது. சினம், இன்னும் ஒரு படி இறங்கிச் சென்றால், கடின வார்த்தை மனிதனின் வாழ்வைக் கெடுத்துவிடுகிறது. எனவேதான் இயேசு இறை வெளிப்பாட்டின் நிறைவை இத்தகைய மாற்றங்கள் வழியாக வளங்குகிறார். எனவே கொலை செய்வதுதான் பாவம் என்னும் பழைய ஏற்பாட்டு நியதியை மாற்றி, கோபமும் கடின வார்த்தையும் கொலைக்குச் சமமானது என வலியுறுத்துகிறார்.

இவ்வாறு கடின வார்த்தைகளால், கடுஞ்சினத்தால் கொலைக்குச் சமமான மன இருக்கத்தையும் அழுத்தத்தையும் தனக்கும் அயலானுக்கும் கொடுத்து அவர்களில் வாழ்வை அழித்துவிடுவதால், கடினவார்த்தையும் கோபமும் கொலைக்குச் சமமானவை. இச் சூழல்களில் ஆலயம் வந்தால் அந்த மன இருக்கமும் அழுத்தமும் குறைந்துவிடும். பாவ மன்னிப்பும் பரிகாரப்பலியும் செலுத்தினால் குற்றமும் குறையும் நீங்கிவிடும்,உண்மைதான்.

ஆயினும் இயேசு உணர்த்தும் உண்மை பெரிது. வெறும் சடங்கும் ஆச்சாரப் பலியையும்விட, ஆண்டவனோடு மனம் ஒன்றித்து,செய்த தவறுக்காக மனம் வருந்தி, மனமாற்றம் அடைந்து, வருத்திய நபரோடு நல்லுறவை ஏற்படுத்திய பின் ஆண்டவனுக்குச் செலுத்தும் பலியே இறைவனுக்கு ஏற்புடைய பலியாகும் என்பது முற்றிலும் சரியான புதிய வெளிப்பாடு மட்டுமல்ல. எல்லோருடைய வாழ்வுக்கும் உகந்தது.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்