முதல் வாசகம்


அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 1-16

அந்நாள்களில் இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரயேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. ஆகாபு நாபோத்திடம், "உன் திராட்சைத் தோட்டம் என் அரண்மனை அருகில் இருப்பதால், நான் அதைக் காய்கறித் தோட்டம் ஆக்கும்படி என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாய் அதைவிட நல்ல திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன். உனக்கு விருப்பமானால், அதன் விலையை வெள்ளியாகத் தருகிறேன்" என்றான். அதற்கு நாபோத்து ஆகாபிடம், "என் மூதாதையரின் உரிமைச் சொத்தை நான் உமக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக!" என்றான். "என் மூதாதையரின் உரிமைச் சொத்தை உமக்குக் கொடுக்க மாட்டேன்" என்று இஸ்ரியேலனாகிய நாபோத்து தன்னிடம் சொன்ன வார்த்தைகளை முன்னிட்டு, ஆகாபு ஆத்திரத்துடனும் கோபத்துடனும் தன் அரண்மனைக்கு வந்தான்; முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் கட்டிலில் படுத்துக்கிடந்தான்; உணவருந்த மறுத்துவிட்டான். அப்போது அவனுடைய மனைவி ஈசபேல் அவனிடம் வந்து, "நீர் ஏன் மனம் சோர்ந்திருக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை?" என்று அவனைக் கேட்டாள். அதற்கு அவன் அவளிடம், "நான் இஸ்ரியேலனாகிய நாபோத்திடம் பேசினேன். "உன் திராட்சைத் தோட்டத்தை அதற்கான வெள்ளிக்கு எனக்குக் கொடுத்துவிடு. உனக்கு விருப்பமானால், அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்" என்றேன். அதற்கு அவன் "என் திராட்சைத் தோட்டத்தை உமக்குத் தர மாட்டேன்" என்று சொல்லிவிட்டான்" என்றான். அப்போது அவன் மனைவி ஈசபேல் அவனை நோக்கி, "இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்துகொள்வது? எழுந்திருந்து உணவருந்தி மனமகிழ்வாய் இரும். இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நானே உம்மிடம் ஒப்படைக்கிறேன்" என்றாள். எனவே அவள் ஆகாபின் பெயரால் மடல்கள் எழுதி, அவற்றில் அவனது முத்திரையைப் பொறித்து, அம்மடல்களை நாபோத்துடன் நகரில் குடியிருந்த பெரியோருக்கும் உயர்குடி மக்களுக்கும் அனுப்பினாள். அம்மடல்களில் அவள், "நீங்கள் ஒரு நோன்பு அறிவித்து நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமரச் செய்யுங்கள். அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவிவிட்டு, "நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்" என்று அவன் மீது குற்றம் சாட்டச் செய்யுங்கள். பின்னர் அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள்" என்று எழுதியிருந்தாள். நாபோத்துடன் அந்நகரில் குடியிருந்த பெரியோரும் உயர்குடி மக்களும் ஈசபேல் தமக்கு அனுப்பிய மடல்களில் எழுதி இருந்தவாறே செய்தனர். அவர்கள் ஒரு நோன்பு அறிவித்து, நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமர்த்தினர். அப்பொழுது அந்த இழி மனிதர் இருவரும் வந்து நாபோத்துக்கு எதிரே உட்கார்ந்தனர். அந்த இழி மனிதர் மக்களைப் பார்த்து, "நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான்" என்று அவன் மீது குற்றம் சாட்டினர். எனவே, அவர்கள் அவனை நகருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றனர். பிறகு அவர்கள், ``நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்" என்று ஈசபேலுக்குச் செய்தி அனுப்பினர். நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்ததை ஈசபேல் கேட்டவுடன் அவள் ஆகாபை நோக்கி, "நீர் எழுந்து சென்று இஸ்ரியேலனாகிய நாபோத்து உமக்கு விற்க மறுத்த அதே திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்; நாபோத்து உயிரோடில்லை; அவன் இறந்து போனான்" என்றாள். நாபோத்து இறந்து போனதை ஆகாபு கேட்டு, இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டுப் போனான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 5: 1-2ய. 4-5. 5-6
பல்லவி: ஆண்டவரே, என் பெருமூச்சைக் கவனித்தருளும்.

1 ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்;
என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
2 என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும். -பல்லவி

4 ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை;
உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5ய ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்கமாட்டார். -பல்லவி

5 தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.
6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;
கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.

மத்தேயு 5:38-42

ஆண்டின் பொதுக்காலம் 11ஆம் வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``கண்ணுக்குக் கண்', `பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

பழிவாங்கும் உரிமை மனிதனுக்கு இல்லையே!

மத்தேயு 5: 38-42

தவறுகள் நடந்தால் நீதி வழங்கப்பட வேண்டும் என்பது மனித மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. நாம் காயப்படுத்தப்பட்டால், பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டால், துன்புறுத்தப்பட்டால், நாம் நமக்கான நீதி என்ன என்பதில் கவனம் செலுத்துகிறோம். நம்மைப் புண்படுத்துபவர்கள் தாங்கள் செய்த பாவங்களைப் பற்றி சிறிதும் வருத்தப்படாமல், தங்கள் பாவங்களை நிராகரிப்பது மோசமான நிகழ்வாக மாறிவிடுகிறது. தங்கள் முட்டாள்தனமான செயல்களால், ஏற்பட்ட சேதங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதுதான் சிறந்த செயலாக இருக்க முடியும். நமக்கு எதிராகப் பாவம் செய்பவர்கள் தங்கள் பாவத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்கும்போது அவர்களை மன்னிப்பது எளிதான ஒன்றாக மாறிவிடுகிறது. இருப்பினும், நமக்கு எதிராகச் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தாதவர்களுக்கு நாம் எவ்வாறு பதிலளிப்பது? நாம் எப்படி மற்றவர்களை மன்னிப்பது? நாம் எவ்வளவு நீடிய பொறுமையுடன் இருக்க வேண்டும்? என்பதற்கு இறைவார்த்தை தெளிவாக பதில் சொல்கிறது: பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எத்தனை முறை என்றாலும் மன்னிக்க வேண்டும் என்பதே!

அதேநேரத்தில் அன்பு செய்வதையும் மன்னிப்பதையும் தேர்ந்தெடுப்பது பாவத்தை அங்கீகரிக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ செய்யாது என்பதையும் இறைவார்த்தை தெளிவுபடுத்துகிறது. "ஒருவருக்கும் தீமைக்குத் தீமை செய்யாமல், அனைவரின் பார்வையிலும் கண்ணியமானதைச் செய்யச் சிந்தியுங்கள்" (உரோமை 12:17). "அன்பானவர்களே, நீங்கள் ஒருபோதும் பழிவாங்க வேண்டாம், ஆனால் அதை கடவுளின் கோபத்திற்கு விட்டுவிடுங்கள், ஏனென்றால் 'பழிவாங்குவது என்னுடையது, நான் திருப்பிச் செலுத்துவேன்,' என்று ஆண்டவர் சொல்லுகிறார். மாறாக, "உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவருக்கு உணவு கொடுங்கள்; அவர் தாகமாக இருந்தால், அவருக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் எரியும் கனலை அவன் தலையில் குவிப்பீர்கள்." தீமையால் வெல்லாமல், தீமையை நன்மையால் வெல்லுங்கள்" (உரோமை 12:19-21).

இது நமக்குச் சொல்வது, முறையான நீதிக்காக பழைய ஏற்பாட்டில் உள்ள பழிவாங்கும் சட்டத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இயேசு அதை ஆமோதித்தார். ஆனால், மனிதன் தனிப்பட்ட பழிவாங்கலுக்கு இதைப் பயன்படுத்துவதை இயேசு அறிந்திருந்ததால் நல்லிணக்கத்தின் ஒரு முறையாக பழிவாங்குவதை விட அன்பையும் மன்னிப்பையும் தேர்வு செய்ய தம்மைப் பின்பற்றுபவர்களை ஊக்குவித்தார்.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ.

........................................................................

1அரசர்கள் 21: 1 – 16
நீதி வழங்கும் இறைவன்

ஆண்டவர் எப்போதும் ஏழைகள் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நிற்கிறார் என்பதற்கு இன்றைய வாசகம் சிறந்த சாட்சியாக அமைகிறது. இறைவன் இந்த உலகத்திலிருக்கிற எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்று விருப்பம் கொண்டிருக்கிறார். அந்த விருப்பத்தோடு தான், இந்த உலகத்தைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதனைப் படைத்த இறைவன், அவனுக்கு இந்த உலகத்தின் எல்லா செல்வங்களின் மீதும் நிர்வகிக்கிற பொறுப்பை வழங்குகிறார். எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதுதான், இறைவன் இந்த உலகத்தைப் படைத்ததன் நோக்கமாகும்.

பேராசை கொண்ட மனிதன், இந்த உலகத்தை அடக்கி ஆள வேண்டும் என்று எண்ணுகிறான். அங்கே அடிமைத்தனம் உருவாகிறது. வளங்களைக் கொள்ளையடிக்கிறான். பொருளாதாரப் பிளவை உண்டாக்குகிறான். நாம் வாழ்கிற இந்த உலகத்தில் மட்டுமல்ல. ஆண்டாண்டு காலமாக, அதிகாரவர்க்கமும், அவர்கள் அடக்கி ஆள்வதற்கு பாமரரர்களும் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர். இறைவன் எப்போதும் எளியவர்களுக்கு பாதுகாப்பாகவும், ஏழைகள் சார்பாகவும், மக்களுக்கு சரியான நீதியை வழங்குகிறவராகவும் இருந்து வந்திருக்கிறார். அதனையே தொடர்ந்து செய்து வருகிறார். இறைவனின் நீதி உலக மக்களுக்குக் கிடைக்க நாம் அனைவரும் அவருடைய கருவிகளாக செயல்படுவதற்கு, இந்த வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இறைவன் நமக்கு வழங்குகிற இந்த அன்பும், அரவணைப்பும் நமக்கு எப்போதும் கிடைக்க வேண்டும். இறைவனிடமிருந்து நாம் பெறுகின்ற அன்பை, நாம் மட்டும் வைத்துக் கொள்ளாமல் அனைவரும் பெறக்கூடிய வகையில் சிறப்பாக செயல்பட மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

நிறைவைத்தேடி…

நிறைவு என்பதுதான் இந்த உலகத்தில் அனைவரும் தேடி அலைகின்ற ஒன்றாக இருக்கிறது. வாழ்க்கையில் நிறைவை பலவற்றில் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நிறைவு இல்லாமல் நமது தேடலை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு பலர், நிறைவைத்தராதவற்றில் நமது நேரத்தை வீணடித்துக்கொண்டு நிறைவுக்காக அலைந்து கொண்டிருக்கிறோம். நிறைவு இதில் இல்லை என்று பலர் சொல்லியும், அதனைக் கேட்காமல் தொடர்ந்து அதிலே மூழ்கிக்கொண்டிருக்கிறோம். நாம் எதில் நிறைவைத்தேட வேண்டும் என்பதை நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது.

விண்ணகத்தந்தை நிறைவாக இருக்கிறார் என்று நற்செய்தி சொல்கிறது. அதற்கான காரணத்தையும் அது தருகிறது. விண்ணகத்தந்தை மற்றவர்களை மன்னிக்கிறார். அனைவரையும் அன்பு செய்கிறார். அனைவரையும் பராமரிக்கிறார். அனைவரையும் தனது பிளளைகளென சமமாகப் பாவிக்கிறார். எனவே தான், விண்ணகத்தந்தை நிறைவாக இருக்கிறார். நாமும் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராக இருப்பது போல, நிறைவுள்ளவராக இருக்க வேண்டுமென்றால், மற்றவர்களை மன்னிக்க வேண்டும். அனைவரையும் அன்பு செய்ய வேண்டும்.

இந்த உலக செல்வத்திலும், பதவியிலும், அதிகாரத்திலும் நாம் பெற முடியாத நிறைவை, மன்னிப்பிலும், உண்மையான அன்பிலும், உதவி செய்வதிலும் பெற்றுக்கொள்ளலாம். அது கடினமான பணி அல்ல. ஆனாலும் சவாலான பணி. அந்த சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயாரா? சிந்திப்போம். செயல்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

நிறைவோடு வாழ…

பாரசீகர்கள் மத்தியில்  செய்திகளைச்சுமந்து செல்வதற்கு வசதியாக ஒரு பழக்கம் இருந்தது. அனைத்து சாலைகளும், பல இலக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. செய்தியைச் சுமந்து செல்கிறவர் குறிப்பிட்ட தூரத்திற்குச் சென்று, அதை அந்த இலக்கில் காத்துக்கொண்டிருக்கிறவரிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் அடுத்த இலக்கிற்கு சுமந்து செல்வார். செய்தியைக் கொண்டுவருகிறவருக்கும், அவருடைய குதிரைக்கும் தேவையான உணவு மற்றும் தங்கிச்செல்ல வசதி, குறிப்பிட்ட இலக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி இல்லையென்றால், அங்கே இருக்கிறவர்கள் அனைத்தையும் அவருக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். இதேமுறை, உரோமையர்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டிருந்த, பாலஸ்தீனத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது.

உரோமை காவலர்கள் தனது ஈட்டியால் யாரையாவது தொட்டால், அதனுடைய பொருள், அவர் உடனடியாக உதவி செய்ய வேண்டும். இயேசு சிலுவை சுமந்து சென்றபோது, சீமோன் உதவி செய்ய வந்தது இப்படித்தான். அதை மீறினால், அவர்கள் தண்டிக்கப்படுவர். இந்த பிண்ணனியில் தான், இயேசு இந்த செய்தியை நமக்குச்சொல்கிறார். இயேசுவின் செய்தி இதுதான்: மற்றவர்கள் நம்மைக் கட்டாயப்படுத்திச் செய்யச்சொல்லும் செயலை, முகம் கோணாமல், வெறுப்போடு அல்லாமல், மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். அதை எரிச்சலோடு அல்லாமல், நிறைவோடு, பொறுப்பாக உணர்ந்து, நல்ல மனத்தோடு செய்ய வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. தன்னை ஒறுத்து, மற்றவர் வாழ கையளிப்பதுதான் உண்மையான சாட்சிய வாழ்வு.

வாழ்க்கையில் நாம் பலவற்றை வெறுப்போடும், எரிச்சலோடும் செய்து வருகிறோம். மற்றவர்களுக்கு உதவுவதாக இருக்கட்டும், மற்றவர்களுக்காக வாழ்வதாக இருக்கட்டும். அனைத்தும் நிறைவோடு, மகிழ்ச்சியோடு செய்யப்பட இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். அதை ஏற்று, நமது வாழ்விலும் செய்கிறவற்றை, நிறைவோடு செய்ய கற்றுக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

அன்பால் அவனியை வெல்லுவோம்

விவிலியத்தில் பழிவாங்கக்கூடிய சட்டங்கள் இருக்க முடியுமா? அன்பாக இருக்கும் கடவுளால், மன்னிக்கக்கூடிய கடவுளால், இரக்கம் காட்டக்கூடிய கடவுளால் கடுமையான, சித்திரவதை செய்வது போன்ற சட்டங்களைக் கொடுக்க முடியுமா? என்ற கேள்விகள் நமக்குள்ளாக எழுவது இயல்பு. விவலியத்தின் உண்மையான பொருளை அறிந்துகொள்ள அதன் பிண்ணனி நமக்கு நன்றாகத்தெரிந்திருக்க வேண்டும். பிண்ணனியோடு அறிகின்றபோதுதான், நம்மால் உண்மையான அர்;த்தத்தை அறிந்துகொள்ள முடியும்.

‘கண்ணுக்கு கண்’, ‘பல்லுக்குப்பல்’ என்ற சட்டங்கள் இருந்தாலும், பழைய ஏற்பாட்டு காலத்தில் அது அப்படியே நிறைவேற்றப்பட்டதில்லை. சட்டத்தின் நோக்கம் பாதிக்கப்பட்டவருக்கு முழு நீதி கிடைக்க வேண்டும் என்கிற கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தான் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. குற்றம் இழைத்தவருக்கு வெறுமனே தண்டனை கொடுப்பது மட்டும் சட்டமாக இருக்கவில்லை. மாறாக, குற்றம் இழைத்தவர் 5 வகைகளில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு செய்ய வேண்டும். காயத்திற்கு, அதனால் ஏற்பட்ட வலிக்கு, மருத்துவ செலவிற்கு, இந்த காலகட்டத்தில் வேலைக்கு செல்ல முடியாததால் ஏற்படும் இழப்பிற்கு மற்றும் இந்த சமுதாயத்தில் அவர் இழந்த மாண்பிற்கு என இவை அனைத்திற்கு சேர்த்து குற்றம் செய்தவர் இழப்பீடு தர வேண்டும். இந்த அடிப்படையில் நீதியை தழைத்தோங்கச்செய்வதற்காகவே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இயேசு இதையும் தாண்டி இன்னும் ஒருபடி மேலே சென்று, மன்னிப்பை முன்னிறுத்துகிறார். அன்பை வெளிப்படுத்த அறிவுறுத்துகிறார்.

எத்தகைய இழப்பையும் அன்பால் மட்டும்தான் இழப்பீடு செய்ய முடியும் என்பது இயேசு நமக்கு வெளிப்படுத்தும் பாடம். அன்பாக இருக்கும் கடவுள் அதையே நமக்கு வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். அதையே நமது வாழ்வின் பாடமாக ஏற்று, நல்லமுறையில் மற்றவரை அன்பு செய்து வாழ வரம் வேண்டுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

1 அர 21: 1-16
மத் 5: 38-42

அன்பின் தீவிரங்கள்!

அன்பு என்பது உணர்வு அல்ல, ஒரு செயல் என்பதனை இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு அழுத்திச் சொல்கிறார்.

அன்பின் செயல் வடிவங்களில் சிலவற்றை இயேசு நமக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறார்:

  1. தீமை செய்வோரை எதிர்க்க வேண்டாம், அவர்களை அனுமதியுங்கள்.
  1. உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள விரும்புவோருக்கு, அதைவிட அதிகமாக அளியுங்கள்.
  1. உங்களைக் கட்டாயப்படுத்தி உதவி வேண்டுவோருக்கு இரு மடங்கு செய்யுங்கள்.
  1. கேட்கிறவர்களுக்கு முகம் கோணாமல் கொடுங்கள்.

இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது, இரு தரவுகள் புரிகின்றன.

  • நமது சொந்த முயற்சியினால், இயல்பால் இவற்றைச் செய்ய இயலாது. இவை மனித இயல்புக்கும், நியாய உணர்வுக்கும் முரணானவை. இறை அருளால் மட்டுமே, இவற்றைச் செய்ய முடியும். எனவே, தூய ஆவியின் ஆற்றலை நாம் பெறவேண்டும்.
  • ஆழமான இறை நம்பிக்கையும் நமக்குத் தேவை. “தீமை செய்வோரிடம் நாம் பணிந்தால், இறைவன் நம்மை மீட்பார்””“, “இருப்பதைப் பிறருக்கு அளித்தால், இறைவன் அதைவிட அதிகமாக நமக்குத் தருவார்”“, “நமக்கு அநீதி இழைக்கப்படுவதைப் பொறுத்துக்கொண்டால், இறைவன் நீதியை நிலைநாட்டுவார்“... இவற்றையெல்லாம் நாம் நம்புகிறோமா? இறைவனின் இரக்கத்தில், நீதியில், வாக்குப் பிறழாமையில் நமக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறதா? ஆம், என்றால்தான் மேற்கண்டவற்றை நாம் செய்ய முடியும். எனவே, நம் நம்பிக்கையை அதிகரிக்க ஆண்டவரிடமே மன்றாடுவோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் இறைநம்பிக்கையை ஆழப்படுத்தி, தூய ஆவியாரின் ஆற்றலால் எங்களை நிரப்பி, அன்பின் செயல் வடிவங்களை நாங்கள் செயல்படுத்த எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

---------------------------------------------------------

தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

#8220;தீமை செய்பவர்களை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்காட்டுங்கள்” என்னும் ஆண்டவரின் அறைகூவல் மொழிகளை இன்று தியானிப்போம். இயேசுவின் கட்டளைகள் ஆழமானவை, நடைமுறைப்படுத்த சிக்கலானவை. எனவேதான், இயேசுவே #8220;குறுகலான பாதை வழியே நுழையப் பாடுபடுங்கள்” என்று சொன்னார். இன்றைய சூழ்நிலையில், தீமை செய்பவர்களை எதிர்த்து நில்லாமல் இருப்பது நல்லதோர் அறிவுரையே. #8220;பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்,  தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்” என்னும் குறளுக்கேற்ப, பிறருக்குத் தீமை செய்பவர்களுக்குப் பதில் தீமை தானாகவே வரும். எனவே, நாமே அவர்களுக்கு அந்த தீமையைச் செய்ய வேண்டாம். பழிவாங்கும் கடமையை இறைவனிடம் விட்டுவிடுவதே சிறந்தது. இறைவன் நல்லவர், நீதியானவர். அவரே அவரவர் செயல்களுக்கேற்ப பரிசும், தண்டனையும் வழங்குவார். எனவே, தீமை செய்கிறவர்களை எதிர்த்து நில்லாமல், விலகிச் செல்வோம். அவர்களுக்குரிய சன்மானம் இறைவனால் அவர்களுக்கு வழங்கப்படும்.

மன்றாடுவோம்: நல்ல நடுவரான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் தந்த அறிவுரைக்கேற்ப நாங்கள் தீமை செய்வோரை எதிர்த்து நில்லாமல், பொறுமை காக்கின்ற அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

 

''இயேசு, 'தீமை செய்வோரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு
மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' என்றார்'' (மத்தேயு 5:39)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- நமக்கு எதிராக அநீதியான முறையில் செயல்பட்டு நம்மை வன்முறையாகத் தாக்குவோரை நாம் என்ன செய்வது? இயேசுவின் போதனைப்படி, வன்முறையை வன்முறையால் எதிர்ப்பது சரியா அல்லது வன்முறைக்கு முன் நாம் பணிந்து செல்ல வேண்டுமா? அநீதிகளை நாம் எதிர்க்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் போதனை. ஆனால் அநீதியை நாம் வன்முறையால் எதிர்ப்பது சரியல்ல என்று இயேசு கற்பிக்கிறார். தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பிறரை வன்முறையால் தாக்குவோரை நாம் எவ்வாறு நடத்துவதது என்பதற்கு இயேசு மூன்று எடுத்துக்காட்டுகள் தருகிறார். வலது கையின் பின்புறத்தைக் கொண்டு பிறருடைய கன்னத்தில் அறைவது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகக் கருதப்பட்டது. அச்சூழ்நிலையில் பழிக்குப் பழி என்று எண்ணாமல், நாம் இடது கன்னத்தைக் காட்டினால் நம்மைத் தாக்குவோர் வலது கையின் பின்புறத்தைக் கொண்டு நம்மை இன்னொரு முறை அறைய இயலாது. இதனால் அவர் வெட்கமுற்றுத் தம் நடத்தையைத் திருத்தலாம் (மத் 5:39). இரண்டாம் எடுத்துக்காட்டு அக்கால மனிதர் உடுத்துகின்ற ஆடைகளைப் பற்றியது. கடன் கொடுத்த ''ஒருவர் உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள்'' என இயேசு கூறுகிறார் (மத் 5:40). அக்காலத்தில் மக்கள் உள்ளாடை (அங்கி), மேலாடை என இரண்டு ஆடைகளை அணிவது வழக்கம். பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்க இயலா நிலையில் உள்ள ஏழை மனிதரிம் சென்று, அவருடைய உள்ளாடையைப் பறிக்க வருபவரிடம் தம் மேலாடையையும் கொடுத்துவிட்டால் அம்மனிதர் அம்மணமாகத்தான் நிற்பார். இதைக் கண்டாவது கடன் கொடுத்த மனிதர் வெட்கமுற்று, தம் செயல் முறையற்றது என உணர்ந்து மனம் மாறலாம் என்பது எதிர்பார்ப்பு. இங்கே அக்காலத்தில் நிலவிய அநீதியான பொருளாதார அமைப்பை இயேசு கடிந்துகொள்கிறார். மேலும் கடன் கொடுத்தவரும் கடன் பெற்றவரும் கடவுள் முன் அம்மணமாகவே உள்ளனர் என்பதால் அவர்களுடைய மனித மாண்பு மீறத் தகாதது எனவும் இயேசு குறிப்பாக உணர்த்துகிறார்.

-- மூன்றாம் எடுத்துக்காட்டு உரோமைப் படைவீரர்களின் செயல் பற்றியது. தமக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி படைவீரர்கள் சாதாரண மக்களைக் கட்டாயப்படுத்தித் தம் பொருள்களைச் சுமந்து வழிநடக்க வற்புறுத்தும் பழக்கம் இருந்தது. இவ்வாறு ஒரு கல் தொலை செல்லக் கட்டாயப்படுத்தினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இரண்டு கல் தொலை செல்வதாக இருந்தால் அந்தப் படைவீரருக்கு அவருடைய மேலதிகாரிகளிடமிருந்து தண்டனை கிடைக்கும் (மத் 5:41). இவ்வாறு ''இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யும்போது'' (குறள் 987) அவர்கள் வெட்கமுற்று மனம் திரும்பலாம் என்பது எதிர்பார்ப்பு. இயேசு கூறிய இந்த மூன்று எடுத்துக்காட்டுகளிலும் பிற்காலத்தில் மகாத்மா காந்தி வழங்கிய அகிம்சைக் கொள்கை துலங்குவதை நாம் காணலாம். வள்ளுவர் ''இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு?'' எனக் கூறும் செய்தியும் இயேசுவின் போதனையை எதிரொலிப்பதை இங்கே நாம் காணலாம்.

மன்றாட்டு
இறைவா, பழி வாங்கும் மனப்பான்மையை நாங்கள் களைந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

'நான் உங்களுக்குச் சொல்கிறேன்'

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

கல்வியும் கலாச்சாரமும் வளர்ச்சி பெறாத காலத்தில் பழிவாங்குதல் ஒரு பெரிய பாவச் செயலாகக் கருத வாய்ப்பு இல்லை. ஆகவே யாராவது ஒரு சிறிய இழப்பு ஏற்படுத்தினாலும் பதிலுக்குப் பதில் செய்யும் கலாச்சாரத்தைப் பெரிய தவறாகக் எண்ணவில்லை. "தமக்கு அடுத்திருப்பவருக்குக் காயம் விளைவித்தால், அவருக்கும் அப்படியே செய்யப்படும். முறிப்புக்கு முறிப்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; இதுபோன்றே காயம் விளைவித்தவருக்கும் செய்யப்படும். விலங்கைக் கொன்றால் பதிலாகக் கொடுக்க வேண்டும்; மனிதரைக் கொன்றால் கொலை செய்யப்பட வேண்டும்." (லேவி 24:19-21) காண்க: வி.ப 21:23-25, இ.ச 19:21

அறிவும் அருளும் இரக்கமும் வெளிப்பட்டுள்ள இக்காலத்தில் இந்த கலாச்சாரம் தவிர்க்கப்பட வேண்டியது; தண்டிக்கப்படக்கூடியது.ஆகவே தவறு செய்தவரைப் பழிக்குப் பழி வாங்குவதைவிட, அன்பு காட்டி, மன்னித்து, ஒப்புரவாகுவது, அருளும் இரக்கமும் பெருகிடும் இக் காலத்தின் கலாச்சாரமாக அமைய வேண்டியது பொருத்தமானதாகும்.

வலக்கன்னத்தில் அறைவது என்பது, அந்த மனிதனை மிகவும் அலட்ச்சியப்படுத்தி, கேவலப்படுத்தி , ஒரு பொருட்டாக கருதாததற்குச் சமமாகும். ஓருவன் இடக்கையால் அடித்தால் அல்லது வலது புறங்கையால் அடித்தால் மட்டுமே அடுத்தவனது வலது கன்னத்தில் அடிக்க முடியும். இது ஒரு கேவலமாக ஒருவனை நடத்துவதற்குச் சமம். இத்தகைய சூழ்நிலையிலும் பழி வாங்காது, அவனோடு உறவை உருவாக்க மறு கன்னத்தையும் காட்டுவது புதிய கலாச்சாரம். இந்த புதிய புதுமை கலாச்சாரத்தை வாழ்ந்த, வாழும் மனிதர்கள் இன்றும் நம்மிடையே இருக்கின்றனர். நீங்களும் செய்து பார்க்கலாம். கட்டாயம் வாழ்வீர்கள். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்