முதல் வாசகம்

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19

மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு. ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும், உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும் கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாக வும், அவர் குரலுக்குச் செவிகொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய். நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும், அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 119: 1-2. 4-5. 7-8
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்;
ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்;
முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். -பல்லவி

4 ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்;
அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.
5 உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க,
என் நடத்தை உறதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! -பல்லவி

7 உம் நீதி நெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.
8 உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்;
என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும். -பல்லவி

 

நற்செய்திக்கு முன் வசனம்

இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

மத்தேயு 5:43-48

பொதுக்காலம் 11 வாரம் செவ்வாய்

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: `உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', `பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

24.02.2024 சனி
ஒன்றாக நன்றாக ...
மத் 5 : 43 - 48

சிலிகுரி உயிரியல் பூங்காவில் ‘சீதா” என்ற பெண் சிங்கம் மற்றும் ‘அக்பர்” என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே பகுதிக்குள் அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் அம்மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு மனு. காரணம் இரண்டுமே ஒரே இடத்தில் அடைப்பது இன்னொரு மதத்தினை இழிவுபடுத்துவதாக மனு. ஒருசில நாட்களுக்கு முன் வந்த தீர்ப்பு, இனி ஒரு மதத்தின் வழிபாட்டுத்தலத்திற்கு செல்வதாக இருந்தால் அந்த மதத்தின் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அனுமதி மறுக்கப்படும் என்று தீர்ப்பு.

இவ்வாறு சமுதாயமானது கேவலமான (அ) கொடுரமான பாதையிலே சென்றுகொண்டிருக்கின்றது. ஆனால் இயேசு நம் அனைவரையும் ஒன்றாக உருவாக்குவதற்கான வழிமுறைகளை இன்றைய வாசகத்தின் வழியாக நமக்கு கற்றுக்கொடுக்கின்றார். ஏனென்றால் பழைய ஏற்பாட்டு சமுதாயமானது பழிக்குப் பழி என்பது அவர்களின் அன்றாட நடைமுறையாக இருந்தது. ஏனென்றால் ஒன்றாக வாழக்கூடிய பண்பானது உடைந்து காணப்பட்டது. அவர்களை நெறிப்படுத்தவே கடவுள் பத்து கட்டளைகைள கொடுத்தார். அதிலும் கூட அன்பையே நீங்கள் அடித்தளமாக வைத்து செயல்பட வேண்டுமென்று கற்றுக்கொடுத்தார். ஆனால் இயேசு நம் வாழ்வே அன்பினால் இயங்க வேண்டும் என்ற புதிய போதனையை புகுத்துகின்றார். அதனால்தான் ஒடுக்கப்பட்டோரை அன்பு செய்தார். பாவியானவர்களிடம் அன்பின் உரையாடல் நடத்துகின்றார். காரணம் எல்லோரையுமே ஒன்றாகி, இறையாட்சியில் அனைவரையும் நன்றாக மாற்ற.

நாம் ஒற்றுமையை ஏற்படுத்தும் காரணிகளாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

நாம் கடவுளின் பிள்ளைகளா?

மத்தேயு 5: 43-48

விண்ணிலிருக்கிற நம் தந்தையின் பிள்ளைகளாவதற்கு நம் அனைவருக்கும் ஒரு அடிப்படை தகுதி தேவைப்படுகிறது குழந்தைகள் தங்கள் பெற்றோரை பிரதிபலிக்கிறார்கள். நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதை, எதிரிகளை நேசிக்கத் தொடங்கும் போது காட்டுகிறோம். கடவுள் சூரியனை நல்லவர்கள் மீது மட்டுமல்ல, தீயவர்கள் மீதும் உதிக்கச் செய்கிறார்; மழையை நீதிமான்கள் மீது மட்டுமல்ல, தீயோர்கள் மீதும் விழச்செய்கிறார். கடவுள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் தயவைக் காட்டுகிறார். நாம் தந்தையாகிய இறைவனைப் பிரதிபலிக்க வேண்டும், நம் நண்பர்களை மட்டுமல்ல எதிரிகள் உட்பட அனைவரையும் நேசிக்கும் போது நாம் கடவுளின் குழந்தைகள் என்பதை உலகுக்குக் காட்டுகிறோம். இதை யோவான் நற்செய்தி 13 ம் அதிகாரத்தில் இயேசுவும் கூறுகிறார். ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர்.’

எதிரிகளை அன்பு செய்வதற்கான இரண்டாவது காரணம், நாம் வித்தியாசமான வாழ்க்கையை வாழ அழைக்கப்பட்டிருகிறோம். நம்மை நேசிப்பவர்களை மட்டுமே நாம் நேசிப்போம் என்றால், அப்படி என்ன பெரிதாக செய்துவிட போகிறோம்? நாம் நம் நண்பர்களை நேசிப்பதாலும், நமக்கு நல்லது செய்பவர்களை நேசிப்பதாலும் கடவுளின் கட்டளையை நாம் உண்மையில் பின்பற்றுகிறோம் என்று நினைக்கிறோம். இந்த சிந்தனையை பைத்தியக்காரத்தனம் என்று இயேசு கூறுகிறார். உங்களை நேசிப்பவர்களை நீங்கள் நேசிப்பதில் உங்களுக்கு என்ன பெருமை? உங்களை நேசிக்கும் நபர்களை நேசிப்பது எளிதான செயலாகும். உங்கள் எதிரிகளை நேசிப்பதுதான் கடினமான செயல். உங்கள் நட்பு வட்டம் மட்டுமல்ல, மற்ற கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் இரக்கம் காட்டுங்கள். பிறர் நமக்கு எதிரியாக இருந்தாலும் அவர்களைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும். அவர்களை மன்னிக்கும் போது அவர்கள் நம் இரக்கத்தைப் பெறுகிறார்கள், ஏனென்றால் நாம் கடவுளிடமிருந்து அதைப் பெற்றுள்ளோம்.

-- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ.

........................................................................

மத்தேயு 5: 43 – 48
தன்னலமில்லா அன்பு

ஹலிவுட் இயக்குனர் மைக் டாலின் என்பவர் நடந்த உண்மை நிகழ்வை படமாக வெளியிட்டார். அது தான் ரேடியோ. அந்த படத்தின் கருத்து என்னவென்றால் “சக மனிதர்களிடம் காட்டுகின்ற அன்பு, அந்த அன்பின் வெளிப்பாடாக கொடுக்கின்ற பரிசு ஒருவனுடைய வாழ்வை எந்த அளவிற்கு உயர்த்தும் என்பதனை வெளிப்படுத்துகின்றது. அதனால் தான் கவிஞர் தேசிய விநாயகம் இவ்வாறு கூறுவார், “வாழ்வின் இன்பத்திற்கு மற்ற எல்லாவற்றையும் விட அன்பே முக்கியம்”. இது உண்மை.

இத்தகைய சிந்தனையைத்தான் இறைமகன் இயேசு இன்றைய நாளில் கற்றுக் கொடுக்கின்றார். நம்மோடு வாழ்கின்ற சக மனிதர்களின் வழியாகத்தான் கடவுள் பிரதிபலிக்கின்றார். எதற்காக சக மனிதர்களை அன்பு செய்ய அழைக்கிறார் என்றால், சீடர்கள் மத்தியில் ஒரு எண்ணம் இருந்தது. தங்களுக்குள் யார் பெரியவர்? யாரிடம் வல்லமை அதிகம் வெளிப்படுகிறது? என்றும், பரிசேயர்கள் மத்தியில் தாங்கள் தான் அதிகம் படித்தவர்கள் மற்றும் சட்ட திட்டங்களை அப்படியே பின்பற்றக் கூடியவர்கள் என்ற மதந்தையில் வாழ்ந்தார்கள். அத்தகைய பண்பினை மாற்ற தான் இயேசு உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கொள்வாயாக என்ற புதிய சிந்தனையை கொடுக்கின்றார்.

நம்முடைய அன்பு எப்படி இருக்கின்றது? குறுகிய வட்டத்துக்குள் முடிந்து விடுகின்ற அன்பா? எல்லோரையும் அன்பு செய்து ஏற்றுக் கொள்கின்ற பரந்த அன்பா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=======================

மத் 5 : 43 -48
அன்பே மனிதன்

‘அன்பே கடவுள்’ (1யோவான் 4:8) என்பது உண்மையென்றால் ‘அன்பே மனிதன்’ என்று அமைவது தான் நியதி. ஒவ்வொருவரும் கடவுளின் சாயலோடு படைக்கப்பட்டிருக்கிறோம். ‘என் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள் என்கிறார் இயேசு. மனிதனின் நிறைவு என்பது அவன் புனிதனின் நிலையை அடைவதே. அவரின் சாயலோடு படைக்கப்பட்டவர்கள் அவரின் சாயலாகவே மாற வேண்டும். இது சாத்தியமா? சாத்தியமே.

எப்படியென்றால், அன்பினால் இது சாத்தியமாகும். நாங்கள் தான் எங்களை அன்பு செய்கிறவர்களை அன்பு செய்கிறோமே என்பது போதாமை. மாறாக விண்ணகத் தந்தை எவ்வாறு அனைவரையும் ஒன்று போல் அன்பு செய்கிறாரோ அவரைப் போல நாமும் தீயவர்களையும், நமது பகைவர்களையும் அன்பு செய்ய வேண்டும். அவன் எனது பெயரைக் கெடுத்து விட்டானே! வாழ்வை சீர்குலைத்து விட்டானே! எனக்குரிய வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து விட்டானே! அவனை எவ்வாறு அன்பு செய்ய முடியும் என்று நினைக்கும் பொழுதெல்லாம் உடனடியாக சற்று நம் கண்களை உயர்த்தி நம் முன்னால் இருக்கும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைப் பார்க்க வேண்டும். அவர் அனைத்தையும் சொல்லிவிட்டு நம்மை விட்டு தள்ளிச் செல்லவில்லை மாறாகத் தனது செயலில் காட்டிச் சென்று விட்டார்.

நம்மை அன்பு செய்கிறவர்களைப் பார்த்தவுடன் அன்பானது நம் உள்ளத்தில் இருந்து பிறக்கின்றது. ஆனால் இயேசு இத்தவக்காலத்தில் நம்மிடம் விரும்பும் அன்பு நாம் வலிய முயற்சி செய்து, நமது இயற்கை நாட்டங்களுக்கு எதிராக, நம்மையே ஒறுத்து வெளிப்படுத்தும் அன்பு. இப்படி அன்பு செய்தால் ‘அன்பே மனிதன்’ எனலாம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

===============================

திருப்பாடல் 119: 1 – 2, 4 – 5, 7 – 8
”ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்”

இந்த திருப்பாடல் ஒரு சில தனித்தன்மைகளைப் பெற்ற திருப்பாடல். இருபத்திரெண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இருபத்திரெண்டு என்பது எபிரேய மொழியில் இருக்கக்கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு பிரிவும், எபிரேய எழுத்து வரிசையில் தொடங்கக்கூடியதாக இருக்கிறது. (தமிழில் ஆத்திச்சூடி பாடல் அமைந்திருப்பது போல…. றம் செய்ய விரும்பு, றுவது சினம், யல்வது கரவேல்…) திருச்சட்டத்தின் புகழைப் பரப்பும் பாடல் என்றும் சொல்லலாம். இளைய தலைமுறையினருக்கான அறத்தையும், வாழ்க்கைநெறிகளையும் கற்றுத்தரும் பாடல். அவர்களது வாழ்க்கையின் மீதுள்ள அக்கறையினை வெளிப்படுத்தும் பாடல்.

திருச்சட்டம் என்பது கடவுள் வகுத்துக்கொடுத்தச் சட்டம். அந்த சட்டத்தை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஆண்டவர் பணிக்கிறார். கடவுளுடைய சட்டம் நாம் தவறான பாதைக்குச் செல்வதிலிருந்து பாதுகாப்பு தருகிறது. அவரைப் பற்றிப்பிடித்து வாழ, அவரது வழியில் நடக்க நமக்கு பேருதவியாக இருக்கிறது. நாம் அனைவருமே சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்று கடவுள் பணிக்கிறார். நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்று அவர் எண்ணுகிறார். அதற்கு நாம் கடவுளின் நெறிமுறைகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். இப்படிப்பட்ட வாழ்க்கைநெறிகளை நாம் பின்பற்றி வாழ்கிறபோது, கடவுளின் முன்னிலையில் நாம் பேறுபெற்றவர்களாக மாறுகிறோம்.

நமது வாழ்வின் சங்கடங்களுக்கு மனம் போன போக்கில் வாழ்வதுதான் காரணம். அந்த மனம்போன போக்கை வாழாமல், கடவுள் நமக்குக் காட்டிய வழியில் நாம் வாழ முற்பட வேண்டும். அந்த வாழ்க்கை நமக்கு நிறைவான ஆசீரை தரக்கூடிய வாழ்வாக இருக்கும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

கடவுள் நம் அனைவரின் தந்தை

யூத ராபிக்களிடையே, கடவுள் எகிப்தியர்களை செங்கடலில் மூழ்கடித்த நிகழ்வுகளைப் பற்றி ஒரு கதை ஒன்று சொல்வார்கள்: எகிப்தியர்கள் இஸ்ரயேல் மக்களைத் துரத்தி வருகிறார்கள். செங்கடலை கடந்து விட்ட, இஸ்ரயேல் மக்களை அவர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். கடல் நீர் பொங்கி எழுந்து அனைத்து எகிப்தியர்களும் மூழ்கி இறந்து போகிறார்கள். இதனைக்கண்ட வானதூதர்கள் மகிழ்ச்சியில் கடவுளைப் புகழ்ந்து பாடினார்கள். ஆனால், கடவுளோ மிகவும் சோகமாக, என்னுடைய படைப்புகள் அங்கே இறந்து கொண்டிருக்கிறது. நீங்களோ என்னை புகழ்ந்து கொண்டிருக்கிறீர்களே, என்று வேதனைப்பட்டாராம். இதுதான் கடவுளின் அன்பு. கடவுளின் அன்பை நாம் எதனோடும் ஒப்பிட்டு கூற முடியாது. அவரது அன்பு ஈடு இணையில்லாதது.

இந்த கடவுளின் அன்பை நாம் நமது மனித இயல்பில் புரிந்து கொள்ளவே முடியாது. அதனை புரிந்து கொள்வதற்கான ஆற்றல், நமது அறிவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. கடவுள் இந்த உலகத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கிறார். இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைவரையும் தனது பிள்ளைகளாகப் பாவிக்கிறார். நாமோ மக்களைப் பிரித்துப்பார்க்கிறோம். காரணம், கடவுளை நம் தந்தை என்று சொல்கிறோமே தவிர, அவரை தந்தையாகப் பார்க்கவில்லை.  ஒருவேளை அவரை நமது தந்தையாகப் பார்த்திருந்தால், நிச்சயமாக அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலை நம்மில் இருந்திருக்கும். இயேசு அனைவரையும் ஒட்டுமொத்தமாக பார்க்கக்கூடிய மனநிலையைப் பெற்றிருந்தார். எனவே தான், அவரால் அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையை வெளிப்படுத்த முடிந்தது.

நமது வாழ்விலும் நாம் மற்றவர்களை பிரித்துப் பார்க்காமல், நம்மில் ஒருவராக, நம்மோடு உறவாடக்கூடிய மனிதர்களுள் ஒருவராகப் பார்ப்போம். அப்படி பார்ப்பதுதான், நாம் கடவுளை நமது தந்தையாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் பெற்றிருப்பதாக அர்த்தமாகக் கொள்ள முடியும். இல்லையென்றால், வெறுமனே கடவுளை வார்த்தைகளில் தந்தை, என்று அழைப்பவர்களாகத்தான் இருக்க முடியும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

இறைவனின் அளவற்ற அன்பு

கிறிஸ்தவ அன்பில் நாம் வளர வேண்டும் என இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். கிறிஸ்தவ அன்பு என்றால் என்ன? இயேசு அன்பின் நிறைவிற்கு, முழுமைக்கு கடவுளை உதாரணமாகத் தருகிறார். கடவுள் நல்லவர், தீயவர் என்று பாராமல் அனைவர் மேலும், தனது கதிரவனைப் படரவிடுகிறார். அனைவருக்கும் மழை கிடைக்கச் செய்கிறார். ஒருவன் நல்லவன் என்பதனால் அவனுக்கு ஒன்றும், மற்றவன் கெட்டவன் என்பதால் அவனுக்கு ஒன்றும், கடவுள் செய்வதில்லை. அதுதான் அன்பின் நிறைவு. அந்த அன்பின் நிறைவு தான் கிறிஸ்தவ அன்பு.

ஏன் இந்த கிறிஸ்தவ அன்பு நமக்கு கட்டாயம் தேவை? இந்த கிறிஸ்தவ அன்பு நம்மில் இருக்கிறபோதுதான், நாம் கடவுளின் பிள்ளைகளாக மாறுகிற தகுதியைப் பெறுகிறோம். கடவுளின் பிள்ளைகளாக, அவரின் உரிமைக்குடிமக்களாக நாம் மாற வேண்டுமென்றால், அதில் நாம் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. இந்த கிறிஸ்தவ அன்பு என்பது, இதற்கு மேல் அன்பு என்ற ஒன்று இருக்க முடியாது, என்கிற உணர்வை நமக்குத்தருகிறது. நாம் படைக்கப்பட்ட நோக்கமும் இந்த அன்பில் நிலைத்து வாழ்வதற்காகத்தான். ஆக, கிறிஸ்தவ அன்பு என்பது, நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை, இது நமக்கு தெளிவுபடுத்துகிறது.

இன்றைக்கு, நாம் வாழக்கூடிய மனித சமுதாயம் வன்முறைகளால், வெறுப்பால், பகைமையுணர்வால் சிதைக்கப்பட்டு, சீரழிந்த நிலையில் காணப்படுகிறது. இதனை சரிசெய்ய அன்பு என்கிற அருமருந்தால் மட்டும் தான் முடியும் என்பது, இயேசுவின் போதனை. அதனையே நமக்கு வாழ்வாகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதனை நமது வாழ்விலும் வாழ, முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

அன்பு வாழ்வு

பகைவர்களிடமும், துன்புறுத்துவோரிடமும் நம் அனைவரையும் அன்பு செய்ய இயேசு அழைப்பு விடுக்கின்றார். எதற்காக இத்தகைய அன்பை நாம் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்? நாம் கடவுளின் பிள்ளைகளாக, கடவுளைப்போல இருக்க வேண்டும் என்பதுதான், இயேசுவின் விருப்பம். அப்படி இருப்பதற்கு, பகைவரை அன்பு செய்ய வேண்டும். இங்கு இயேசுவின் ”உங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்” என்கிற வார்த்தைகள் நினைவுகூறத்தக்கவை. நமக்குள்ளாக கேள்வி எழலாம்? விண்ணகத்தந்தையைப் போல நாம் எப்படி நிறைவுள்ளவராக முடியும் என்று? அதற்கான வழிதான், பகைவரை அன்பு செய்வது.

இயேசு கடவுளின் இரக்க குணத்தை உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டுகிறார்? கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழைபொழியச்செய்கின்றார். அவர் இஸ்ரயேலுக்கு வெயிலையும், புறவினத்தார்க்கு புயலையும் கொடுப்பதில்லை. அவருடைய இரக்கம் அனைவருக்கும் சமமே. யூத போதகர் நடுவில், கடவுளின் இரக்கக்குணத்திற்கு கதை ஒன்று சொல்லப்படுகிறது. எகிப்தியப்படைகள் இஸ்ரயேல் மக்களைத் துரத்தி வருகிறபோது, செங்கடலிலே மூழ்கி இறக்க நேரிடுகிறது. அப்போது, வானதூதர்கள் எல்லாரும் இணைந்து மகிழ்ச்சியோடு ஆர்ப்பரிக்கிறார்கள். அதைப்பார்த்த கடவுள், “என்னுடைய படைப்பு தண்ணீரில் மூழ்கி சாகிறபோது, நீங்கள் இப்படியா மகிழ்ச்சியடைவீர்கள்?“ என்று அவர்களைப்பார்த்து கேட்கிறார். இதுதான் கடவுளின் அன்பு. இதுதான் கடவுளின் இரக்ககுணம்.

கடவுளின் சாயலைப்பெற்றிருக்கிற நாம் அனைவரும் அத்தகைய அன்பை மற்றவர் மீது காட்டுவதற்கு அழைக்கப்படுகிறோம். பகைமையும், வெறுப்புணர்வும் அதிகமாகிக்கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில், அன்பு வாழ்வு வாழ நாம் அனைவரும் கடவுளிடத்தில் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தூய்மையான அன்பு, பகைவரை மன்னிக்கும் அன்பு

அன்பு என்கிற வார்த்தை கிரேக்க மொழியில் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டது. ‘storge’ என்கிற அன்பு பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே காணப்படுகிற அன்பு. பாசம் என்று தமிழில் நாம் சொல்லலாம். ஒரு குடும்பத்தில் தாயோ, தந்தையோ தன் பிள்ளைகள் மீது காட்டுகிற அன்புதான் இது. ‘eros’ என்கிற வார்த்தை காதலன், காதலிக்கு இடையேயான அன்பைக்குறிக்கும் சொல். காதல் என்று நாம் சொல்லலாம். இது உணர்வுகள் தொடர்பானது. இந்த வார்த்தை புதிய ஏற்பாட்டில் எங்கேயும் பயன்படுத்தப்படவில்லை. ‘philia’ என்பது நண்பர்களுக்கிடையேயான அன்பு. நட்பு என்று நாம் பொருள்படுத்தலாம். ‘agape’ என்பது மற்றவர்கள் எனக்கு நன்மை செய்கிறார்களோ, தீமை செய்கிறார்களோ அதைப்பற்றி கவலை இல்லை, ஆனால் அவர்களை நிறை, குறைகளோடு ஏற்றுக்கொண்டு செய்கிற தூய்மையான அன்பைக்குறிக்கும் சொல்லாகும். இங்கே இந்தப்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தை இதுதான்.

இயேசு நம்மை, நமக்கு நெருக்கமானவர்களிடம் நாம் காட்டும் அன்பை, அதாவது, பெற்றோர் பிள்ளைகளிடம் காட்டும் அன்பையோ, காதலன், காதலியிடம் காட்டும் அன்பையோ, நண்பர்கள் மற்றவர்களிடம் காட்டும் அன்பையோ இங்கே சொல்லவில்லை. அப்படிப்பட்ட அன்பை நாம் நம் பகைவரிடம் காட்ட வேண்டும் என்று சொல்வது நியாயமானதாகவும் இருக்காது, அது முடிகிற ஒன்றாகவும் இருக்காது. மாறாக, இங்கே இயேசு பயன்படுத்துகிற அன்பு, முயற்சியின்பால் எழுகிற அன்பு. அதாவது, நம்முடைய பகைகை உணர்வுகளையும், வெறுப்பையும் கடந்து மற்றவர்களை அன்பு செய்கிற மனப்பாங்கைப் பெற நாம் ஒவ்வொருவரும் முயல வேண்டும். அதைத்தான் இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். இயேசு இதை வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். நம்மாலும் முடியும் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.

நம்மை அன்பு செய்வோரை மட்டுமே நாம் அன்பு செய்தால், அதனால் நமக்கு கிடைக்கும் கைம்மாறு ஒன்றுமில்லை. நமக்கு எதிராக தீங்கு செய்வோரை, நம்மை வெறுப்போரை, நம்முடைய பகைவரை நாம் அன்பு செய்ய முயற்சி எடுக்க வேண்டும். தற்போதைய உலகத்திலே வெறுப்பும், வைராக்கியமும் அதிகமாக வளர்ந்து வருகிறது. போட்டியும், பகைமையுணர்ச்சியும் மனிதர்களிடையே பிளவை அதிகமாக ஏற்படுத்துகிறது. இந்தச் சூழ்நிலையில் இயேசுவின் இந்தப்போதனை நம்மிடையே மிகப்பெரிய எழுச்சியை உருவாக்க வேண்டும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

===========================

இறையருள் வேண்டுவோம்

பகைவர்களை மன்னிக்கச் சொன்னது மட்டுமன்றி, தனது வாழ்விலும் வாழ்ந்து காட்டியவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. சிலுவையில் இருந்து அவர் தனது பகைவர்கள் மீது காட்டிய இரக்கம், அவரை ஒரு தனித்துவமிக்க அரசராகக் காட்டியது. இயேசு கடவுளின் மகன். அவரால் மற்றவர்களை மன்னிப்பதும், ஏற்றுக்கொள்வதும் எளிதாகச் செய்ய முடியும். நம்மால் முடியுமா? என்கிற கேள்வி நம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் குழப்புகின்ற கேள்வி. மன்னிப்பது சாத்தியமா? மற்றவர்கள் செய்த துரோகத்தை மறப்பது முடிகிற காரியமா? இந்த கேள்விகளுக்கு பதிலை, நற்செய்தியிலே தேடுவோம்.

பகைவர்களை மன்னிப்பது என்கிற இயேசுவின் கட்டளை நிச்சயம் சாத்தியமே. சாத்தியம் இல்லாத ஒன்றை, இயேசு எப்போதுமே சொல்ல மாட்டார். நம்மால் முடிகிறவற்றைத்தான் அவர் எப்போதும் சொல்வார். இயேசு கடவுளின் மகனாக இருந்தபோதிலும், முழுக்க, முழுக்க மனிதனாகத்தான் வாழ்ந்தார். அவரால் முடிந்தது என்றால், நம்மாலும் முடியும் என்பதை, இயேசு வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஆனால், அது சாதாரண காரியமல்ல. அதை நமது வாழ்வில் செய்து காட்ட, இயேசுவின் அருள் நமக்குத் தேவை. இயேசுவால் பகைவர்களை மன்னிக்க முடிந்தது என்றால், அதற்கு காரணம், இயேசு கடவுளின் அருளால் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தார். அதேபோல் நாமும் மற்றவர்களை மன்னிக்க கடவுளின் அருள் நமக்கு அதிகம் தேவை. கடவுளின் அருளோடு நம்மால் மற்றவர்களை மன்னிக்க முடியும். அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும்.

இந்த உலகத்திலே நல்லவர்களையே ஏற்றுக்கொள்ளாத நிலை இருக்கிறபோது, பகைவர்களை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக நம் மத்தியில் இருந்தாலும், கடவுளின் அருள் துணையோடு நம்மால் அனைத்தையும் செய்ய முடியும். ”எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” (பிலிப்பியர் 4: 13) என்ற பவுலடியாரின் வார்த்தைகள் இங்கே நாம் நினைவுகூர்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுள் அன்பு

அன்பு என்பது பரந்த, எல்லையில்லாத பண்பாக இருக்க வேண்டும். அதுதான் கடவுளின் அன்பு. கடவுளின் அன்பிற்கு எல்லையில்லை. அவர் அனைவரையும் அன்பு செய்கிறார். நல்லவரையும் அன்பு செய்கிறார். கெட்டவர்களையும் அன்பு செய்கிறார். அதனால் தான் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து வளங்களையும் அனைவருமே பயன்படுத்த அனுமதிக்கிறார். கடவுள் கெட்டவர்களையும் அன்பு செய்கிறார் என்பதனால், கெட்டவற்றை ஏற்றுக்கொள்கிறார் என்பது அர்த்தமல்ல. மாறாக, அவர் தன்னுடைய எல்லையில்லா அன்பினால் அவர்களும் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு தருகிறார்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தை, பரந்துபட்ட அன்பை ஒவ்வொருவரும் வெளிப்படுத்த வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து இருக்கிறது. கடவுளை தந்தையாக ஏற்றுக்கொள்ளும் அனைவரும் நிச்சயமாக எல்லோரையும் அன்பு செய்வர் என்பது இயேசுவின் எண்ணம் மற்றும் நம்பிக்கை. அந்த எண்ணத்தை இந்த நற்செய்தியில் வெளிப்படுத்துகிறார். கடவுளை தந்தையென்று ஏற்றுக்கொள்ளாத மனிதர்களால் நிச்சயம் தங்களோடு வாழ்கிற சகோதர, சகோதரிகளை அன்பு செய்ய முடியாது.

கடவுள் நம் அனைவருக்கும் தந்தை என்கிற எண்ணம் நம் மனதில் மேலோங்க வேண்டும். அத்தகைய எண்ணம் தான் வாழ்வை நேர்மறையோடு பார்ப்பதற்கு உதவி செய்யும். மற்றவர்களை மாண்போடும் மதிப்போடும் நடத்துவதற்கு உறுதுணையாக இருக்கும். எனவே கடவுளை நம் தந்தையாக ஏற்றுக்கொள்ளும் அருளை இறைவனிடத்தில் வேண்டுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

1 அர 21: 17-29
மத் 5: 43-48

மன்னிப்பின் செயல் வடிவம்!

பகைவரை அன்பு செய்தல், தீமை செய்தோரை மன்னித்தல்... இவை இரண்டும் எத்தனை கடினமானவை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். மனித இயல்புக்கும், மனித உளவியலுக்கும் மிகப் பெரும் வெல்விளியாக, சவாலாக அமைவது மன்னிப்பும், பகைவர்க்கு அன்பு செய்தலும்.

ஆனால், உளவியலின் நாயகனான இயேசு நமக்கொரு வழியைக் காட்டித் தருகிறார். அதுதான் இறைவேண்டல். “உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்”“ என்னும் பரிந்துரை நாமெல்லாம் ஏற்கக்கூடியதே.

யாரை அன்பு செய்ய முடிவதில்லையோ, யாரை மன்னிக்க முடிவதில்லையோ, அவர்களை இறைவனின் திருமுன் கொண்டு வந்து, “ ஆண்டவரே, அன்னாரை ஆசிர்வதியும். அவர் நலமுடன் வாழட்டும்”“ என சிறியதொரு மன்றாட்டை முன் வைத்தால், அன்பு, மன்னிப்பு, மன்றாட்டு என ஒரே கல்லில் மூன்று கனிகளை வீழ்த்திவிடலாம். முயற்சி செய்வோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். யாரெல்லாம் எனக்குத் தீமை செய்ததாக நான் எண்ணுகிறேனோ, யாரையெல்லாம் என்னால் மன்னிக்க இயலவில்லையோ, யாரையெல்லாம் என்னால் அன்புகூரக் கடினமாக இருக்கிறதோ, அவர்களையெல்லாம் இப்போது உம் முன்னிலையில் கொண்டு வந்து அவர்களுக்காக வேண்டுகிறேன். ஆசிர்வதியும், அருளால் நிரப்பும், அவர்கள் நன்றாக இருப்பார்களாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி -ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

அனைவருக்கும் இறையாசி!

"நல்லோர் மேலும் தீயோர்மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்" என்னும் வரிகளை இன்று சிந்திப்போம்.

இறைவனின் இறைப் பண்புகளுள் ஒன்று அவர் அனைவருக்கும் பொதுவானவர், அனைவரையும் சமத்துவமாக நடத்துபவர் என்பது. எனவேதான், அவர் "நல்லோர்மேலும், தீயோர்மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார், நேர்மையுள்ளோர்மேலும், நேர்மையற்றோர்மேலும் மழை பொழியச் செய்கிறார்" என்று இயேசு மொழிந்துள்ளார். இவ்வாறு, வானகத் தந்தையின் இறைப் பண்பை இயேசு நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். இயேசுவே இவ்வுண்மையை அறிவித்துள்ளதால், நாமும் இதனை நமது விசுவாசமாக ஏற்றுக்கொள்கிறோம்.

இந்தச் செய்தியிலிருந்து நாம் கற்றுக்கொள்பவை:

1. இறைவன் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் தந்தை. எனவே, யாரையும் நாம் தீர்ப்பிடவோ, பழித்துப் பேசுவதோ கூடாது.

2. இறைவனின் நன்மைகள், ஆசிகள் அனைவருக்கும் உரியவை. அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

3. யாரெல்லாம் நன்மைகளை அனுபவிக்கிறார்களோ, அவர்கள் தீயோராக இருந்தாலும்கூட இறைவனின் ஆசியைப் பெற்றவர்கள் என்பதை உணர்வோம்.

மன்றாடுவோம்: சமத்;துவத்தின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது தாராளக் கொடைகளுக்காக நன்றி கூறுகிறோம். உம்மைப் போலவே, நாங்களும் அனைவரையும் சமமாக நடத்தும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

------------------------------------------------------

துன்புறுத்துவோருக்காக வேண்டுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

பகைவர்களை அன்பு செய்யவேண்டும் என்னும் அழைப்பு கடினமாக இருக்கிறது என்று நினைத்தால், அதை எளிதாக்கவதற்கு ஆண்டவர் இயேசுவே நல்லதொரு பரிந்துரையை முன்வைக்கிறார். #8220;உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்பதுதான் அந்தப் பரிந்துரை. நல்லுறவு என்பது அன்பின் வெளிப்பாடு. அந்த நல்லுறவை யாருடனெல்லாம் நம்மால் கொள்ள முடியவில்லையோ, அவர்களுக்காக செபிப்பது என்பது அடுத்த வழி. சில வேளைகளில் சிலரது செயல்பாடுகள், அவர்கள் மேல் நமக்கு வெறுப்பை ஏற்படுத்தி, அவர்களிடம் உரையாடவோ, உறவாடவோ முடியாதபடி மாற்றி விடுகின்றன. இருப்பினும், அத்தகையோரிடமும் அன்பு கொள்வதற்கான வழிதான் அவர்களுக்காக இறைவேண்டல் செய்வது. இயேசு தனது வாழ்வில் அதனைச் செயல்படுத்திக்காட்டினார். நாமும் நமது பகைவர்கள் என்று யாரையெல்லாம் கருதுகிறோமோ, அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுவதன் வழியாக அவர்களை மன்னித்து, நமது அன்பை அவர்களுக்கு வழங்க முன் வருவோம்.

மன்றாடுவோம்: மன்னிப்பின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இந்நேரத்தில் யாரையெல்லாம் நான் எனது பகைவர்களாக, எதிரிகளாகக் கருதுகிறேனோ, அவர்களையெல்லாம் உமது திருமுன் கொண்டு வந்து, அவர்களுக்காக செபிக்கிறேன். அவர்களை ஆசிர்வதியும். நலப்படுத்தும். உமது அன்பால் அவர்களை நிரப்பும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

துன்புறுத்துவோருக்காக வேண்டுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தவக்காலம் மனமாற்றத்தின் காலம். நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியாக அலசி, ஆய்வு செய்து, மாற்றிக்கொள்ள அழைப்பு விடுக்கும் காலம். இன்றைய வாசகம் நம்மைத் துன்புறுத்துவோருடன் நமக்குள்ள உறவை மறு ஆய்வு செய்ய அழைக்கின்றது.

உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள். உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள் என்கிறார் இயேசு. கிறித்தவ வாழ்வின் மிகப் பெரும் சவால்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. மனித இயல்பை மீறி, இறைத்தன்மைக்குள் இட்டுச் செல்லும் அழைப்பு இது. எனவேதான், இப்படிச் செய்வதால் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள் என்றார் இயேசு. கடினமான அழைப்பு, ஆனால் முடியாதது அல்ல. காலம் காலமாக திருச்சபையின் மறைசாட்சிகள், மாபெரும் புனிதர்கள் செய்து வந்த ஒன்றுதான். இயேசுவே சிலுவையில் தொங்கியபொழுது தன் பகையாளருக்காகப் பரிந்து பேசி செபித்து, நமக்கெல்லாம் பாதை காட்டியிருக்கிறார். எனவே, நாமும் அதைச் செய்யலாம். செய்ய வேண்டும். இத்தவக்காலம் அதற்கான பொருத்தமான காலம். எனவே, நமது துன்புறுத்துவோர் பட்டியலில் உள்ள ஒவ்வொருவரையும் நினைவுகூர்ந்து, அவர்களுக்காக இறைவனை மன்றாடுவோம். இறைத் தந்தையின் பிள்ளைகள் ஆவோம்.

மன்றாடுவோம்: எங்கள் வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். உம் அன்புத் திருமகன் இயேசு தம் போதனையாலும், வாழ்வாலும் எங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கடைப்பிடிக்க அருள்தாரும். யாரெல்லாம் எங்களைத் துன்புறுத்துவதாக நாங்கள் கருதுகிறோமோ, அவர்களை எல்லாம் இப்போது நினைவுகூர்ந்து, அவர்களுக்காக உம்மை மன்றாடுகிறோம். அவர்களை ஆசிர்வதியும். உயர்த்தி, வலிமைப்படுத்தும். நலம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

----------------------

''இயேசு, ''உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக, பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக'
எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்' என்றார்'' (மத் 5: 43-44)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ''அன்பு'' என இங்கே குறிக்கப்படுவது வெறும் உணர்ச்சியல்ல. மாறாக, அன்பு என்பது கடவுள் தம் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் பிரமாணிக்கமாகக் கடைப்பிடிப்பதில் அடங்கும். இப்பொருளில் ''உனக்கு அடுத்திருப்போர்மீது அன்புகூர்வாயாக'' என்னும் கட்டளை பழைய ஏற்பாட்டில் உண்டு (லேவி 19:18). ஆனால், பகைவரை வெறுக்க வேண்டும் என்றொரு கட்டளை பழைய ஏற்பாட்டில் இல்லை. ஆயினும் ''அடுத்திருப்போர்'' என்னும் சொல்லுக்குப் பொதுவாக வழங்கப்பட்ட பொருள் இஸ்ரயேலர் உடன்படிக்கைக் குழுவைச் சார்ந்த மக்களாகிய தம் குலத்தவர் மட்டில் அக்கறை கொண்டிருக்கவேண்டும் என்பதே. இந்த உடன்படிக்கைக் குழுவுக்குப் புறம்பே இருந்தவர்கள் ''அடுத்திருப்போர்'' என அறியப்படாததால், அவர்களை அன்புசெய்யவேண்டும் என்பது கட்டளையாக இருக்கவில்லை.

-- ''வெறுத்தல்'' என்பதற்குக் ''குறைவாக அன்புசெய்தல்'' என்னும் பொருள் உண்டு (காண்க: மத் 6:24). இயேசு மேற்கூறிய விளக்கம் சரியல்ல எனக் காட்டுகிறார். உடன்படிக்கைக் குழுவைச் சார்ந்தவர்களானாலும் சரி அதற்குப் புறம்பே உள்ளவர்களானாலும் சரி, எல்லார் மட்டிலும் அன்பு காட்ட வேண்டும் என்பதே இயேசுவின் போதனை. சீடர்கள் தம்மைத் துன்புறுத்துவோருக்காக இறைவனை வேண்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள் (காண்க: மத் 10:23; 23:34). பிறரை வாழ்த்துதல் என்பதற்கு, பிறர் வாழ வேண்டும் எனவும் நலம்பெற்றுச் சிறக்க வேண்டும் எனவும் விரும்புவதைக் குறிக்கும் (மத் 5:47). பகைவரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்பதற்கு இயேசு தருகின்ற காரணம் கருதத்தக்கது. நம் வானகத் தந்தை மனிதர் நல்லவர் கெட்டவர் என வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் நன்மை செய்கிறார் (மத் 5: 45). அதுபோலவே, இயேசுவின் சீடர்களும் தம் நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் அன்புகாட்ட அழைக்கப்படுகிறார்கள். நாம் இவ்வாறு செய்தால் ''நிறைவுள்ளவர்களாய்'' இருப்போம் (மத் 5:48). இங்கே நிறைவு என்பது முழுமை என்னும் பொருளில் வருகிறது. நம் தந்தையாம் கடவுள் எல்லையற்ற அன்போடு நம்மை ஏற்பது போல நாமும் பிறர் மட்டில் காட்டுகின்ற அன்புக்கு எல்லைகள் இடாதிருக்க வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் எந்த வேறுபாடுமின்றி எல்லா மனிதர்களையும் அன்போடு ஏற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இயேசு, 'உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல
நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்' என்றார்'' (மத்தேயு 5:48)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருக்கிறார் என்றால் பொருள் என்ன? மத்தேயு நற்செய்தியில் வருகின்ற இக்கூற்றுக்கு இணைக் கூற்றாக லூக்கா நற்செய்தியில் வருவதை நாம் கருதினால் கடவுளின் ''நிறைவு'' எதில் அடங்கியிருக்கிறது என்பது பற்றித் தெளிவு கிடைக்கிறது. ''உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்'' (லூக்கா 6:36) என்பது லூக்கா தருகின்ற பாடம். இந்த இரு பாடங்களையும் ஒப்பிட்டும் இணைத்தும் பார்க்கும்போது கடவுள் நிறைவுள்ளவராய் இருக்கிறார் என்பதும் கடவுள் இரக்கம் உள்ளவராய் இருக்கிறார் என்பதும் ஒரே பொருள்தருகின்ற கூற்றுக்களே என்பதை நாம் அறியலாம். ஆக, இயேசுவின் சீடர்கள் கடவுளின் நிறைவை (இரக்கத்தை) தங்கள் வாழ்வில் கொண்டிருக்க அழைக்கப்படுகிறார்கள். கடவுளின் நிறைவும் இரக்கமும் எல்லா மனிதரையும் எந்தவொரு வேறுபாடுமின்றி அன்புசெய்வதில் அடங்கியிருக்கின்றன.

-- எனவே, நாமும் நம் விண்ணகத் தந்தையைப் போல நிறைவுள்ளவர்களாக மாற வேண்டும் என்றால் கடவுளிடம் துலங்குகின்ற அதே இரக்கப் பண்பு நம் வாழ்விலும் துலங்கவேண்டும். கடவுள் ஒருசிலருக்கு இரக்கம் காட்டி வேறு சிலருக்கு இரக்கம் காட்டாமல் இருப்பவரல்ல. நல்லவரும் சரி தீயவரும் சரி, எல்லா மனிதருமே கடவுளிடமிருந்து இரக்கம் பெறுபவரே. ஆக, நாமும் நண்பர் என்றும் பகைவர் என்றும் வேறுபடுத்திப் பார்க்காமல் அனைத்து மனிதரையும் அன்போடு அரவணைத்து அவர்கள் மட்டில் இரக்கம் காட்டினால் நம்மிடத்தில் கடவுளின் நிறைவு குடிகொள்ளும். இதுவே நாம் கிறிஸ்துவிடமிருந்து பெறுகின்ற அழைப்பு.

மன்றாட்டு
இறைவா, உம் நிறைவை நாங்கள் அடைந்திட எங்கள் உள்ளத்தை இரக்கத்தால் நிரப்பியருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"நிறைவுள்ளவர்களாய் இருங்கள்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

ஒப்பிடுதல் பகுதியின் இறுதியாக, அதன் உச்ச நிலையாக இப்பகுதி அமைந்துள்ளது. 'பகைவனிடம் வெறுப்புக் கொள்வாயாக' (வி.ப 21:24) பழைய ஏற்பாட்டுப் பகுதியை ஒப்பிட்டு, அதற்கு மாற்றாக தன் புதிய போதனையை இங்கு தருகிறார். "உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."(மத் 5:44)

பகைவர்யார்? என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார். உங்களைத் துன்புறுத்தும் அனைவரும் உங்கள் பகைவர்கள். அன்பு கூர்வதும், இறைவனிடம் வேண்டுவதும் நம் பகைவருக்காக நாம் செய்ய வேண்டிய நற்செயல். இச் செயல்களைச் செய்யும் போது, நாம் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்யும் இறைத்தன்மையில் பங்கு பெருகிறோம். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்யும் இறைவனின் பெருந்தன்மையை நம் வாழ்விலும் கடைபிடிக்கிறோம்.

இதனால் நாம் குறைந்து போவதில்லை. முற்றிலும் வேறுபாடான, இறை பண்புதனை நம் வாழ்வில் கடைபிடிப்பதன் மூலம் நாம் மென்மேலும்; ஆசீவதிக்கப்டுவோம்.குறைந்துபோவதில்லை. எல்லா நிறைவும் உள்ள வானகத்தந்தைபோல நாமும் எல்லாவற்றிலும் நிறைவு பெற்றவர்களாய் இருப்போம். இந்த நிறைந்த வாழ்வைப் பெற்று வாழுங்கள். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:-- ஜோலி --: