முதல் வாசகம்

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 2: 1, 6-14

ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ள இருந்த பொழுது, எலியாவும் எலிசாவும் கில்காலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். மீண்டும் எலியா எலிசாவை நோக்கி, "ஆண்டவர் என்னை யோர்தானுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு" என்றார். அதற்கு அவர், "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்" என்றார். ஆகவே அவர்கள் இருவரும் தொடர்ந்து பயணம் செய்தனர். அவர்கள் யோர்தான் நதிக் கரையை அடைந்து அங்கே நின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இறைவாக்கினர் குழுவினர் ஐம்பது பேரும் சற்றுத் தொலையில் நின்று கொண்டனர். அப்பொழுது, எலியா தம் போர்வையை எடுத்துச் சுருட்டி அதைக் கொண்டு நீரை அடித்தார். தண்ணீர் இருபுறமும் பிரிந்துகொள்ள, இருவரும் உலர்ந்த தரைமீது நடந்து நதியைக் கடந்தனர். அவர்கள் அக்கரைக்குச் சென்றவுடன் எலியா எலிசாவை நோக்கி, "உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்" என்று கேட்டார். அதற்கு எலிசா, "உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக!" என்றார். எலியா அவரை நோக்கி, "நீ கேட்பது கடினமான காரியம். உன்னிடமிருந்து நான் எடுத்துக் கொள்ளப்படும் போது, நீ என்னைக் காண்பாயாகில், அது உனக்குக் கிடைக்கும்; இல்லையெனில் கிடைக்காது" என்றார். இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டு வழிநடந்து செல்கையில், இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார். எலிசா அதைக் கண்டு, "என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே!" என்று கதறினார். அதற்கு மேல் அவரால் அவரைக் காண முடியவில்லை. எனவே அவர் தம் உடைகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்துக் கொண்டார். மேலும் அவர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எடுத்துக் கொண்டு, திரும்பிச் சென்று யோர்தான் கரையில் நின்றார். பின்பு அவர், "எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்?" என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 31: 19. 20. 23

பல்லவி: ஆண்டவரை நம்புவோரே, உள்ளத்தில் உறுதி கொண்டிருங்கள்.

19 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது!
உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! -பல்லவி

20 மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்!
நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! -பல்லவி

23 ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்;
ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்;
ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மத்தேயு6:1-6, 16-18


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக் கை செய்வது இடக் கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள், அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

மறைவான செயல்; அரிதான வெகுமதி!

மத்தேயு 6: 1-6, 16-18

இயேசுவின் சீடர்கள் சரியானதை அல்லது நல்லதைச் செய்ய வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அவர் தம்முடைய சீடர்களின் செயல்களை விடவும் அந்த செயல்களைச் செய்வதற்கான பின்னனியில் உள்ள எண்ணங்களைப் பற்றி கவலைப்படுகிறார். அவர்களின் செயல்களும் முடிவுகளும் கடவுள் மீதுள்ள அன்பு, மக்கள் மீதான அன்பு ஆகியவற்றிலிருந்து வெளிப்பட வேண்டும் என்றும் உண்மையிலேயே அன்பு தான் முக்கியம் என்பதையும் வலியுறுத்துகிறார். நாம் எதனை முன்நிறுத்தி நமது உதவிகளை செய்கிறோம்? சில சமயங்களில், மற்றவர் என்னைப் பற்றி நன்றாக நினைப்பதற்காக நான் ஏதாவது செய்ய விரும்புகிறேனா? சமூக ஊடகங்களின் வளர்ச்சியால், உலகம் முழுவதும் பார்க்கும் வகையில் அவர்களின் புகைப்படங்களை இடுகையிட மக்கள் விரும்புகிறார்கள். இந்த புகைப்படங்களில் அவர்கள் செய்கின்ற தொண்டு நடவடிக்கைகளும் அடங்கும். மேலும், யார் அதிக "விருப்பங்கள்" (Likes) அல்லது எதிர்வினைகளைப் (Dislike) பெறுகிறார்கள் என்பதில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் உதவிகள் செய்து அதை வைத்து விளம்பரம் தேடுவதில் பெயர், புகழ் தேடுகிறார்கள்.

இன்றைய நற்செய்தியில் உதவி செய்பவர்கள், இறைவனிடம் செபிப்பவர்கள் அல்லது நோன்பு இருப்பவர்கள் வெகுமதி பெற மாட்டார்கள் என்று இயேசு மூன்று முறை எச்சரிக்கிறார், ஏனென்றால் அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெறும் பாராட்டு அவர்களுக்கு ஏற்கனவே போதுமான வெகுமதியாக உள்ளது. மாறாக அதை மறைவாகச் செய்யும்படி அவர் நம்மைத் தூண்டுகிறார், விண்ணகத்திலுள்ள நம்முடைய தந்தை நமக்கு வெகுமதி அளிப்பார். நாம் சரிபார்க்க வேண்டியது நமது உந்துதலைத்தான். இதைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக நாம் உதவி வழங்கினால் அல்லது செபித்தால், அதன் மூலம் நம் அகந்தையை அதிகரிக்கச் செய்தால், நாம் இயேசுவின் எச்சரிக்கையின் கீழ் வருகிறோம். இருப்பினும், கடவுளுக்கு மகிமை கொடுப்பதைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றால் இறைவன் நம் செயல்களையும் நம்மையும் ஆசீர்வதிப்பார்.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ.

........................................................................

மத்தேயு 6: 1 – 6, 16 – 18
“ஒன்றுமில்லாமல் பிறந்து ஒன்றுக்குமாகாதவற்றிற்குள் செல்ல”

40 ஜோடி காலணி வைத்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறக்கின்ற போது மாற்று துணி கூட அணிய நபர்கள் இல்லாமல் இறந்து போனார். 150 லாரிகளை தகுந்த ஆவணங்கள் இல்லாமல் அதிகாரத்தில் இருக்கின்ற போது வாங்கிய மாமனிதர் அதிகாரம் அழிய வாகனங்கள் கைவிடப்பட்டு சிறைவாசனை அனுபவித்து வரும் மனிதர்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். தன் அதிகாரத்தை காப்பாற்ற 6 இலட்சம் யூதர்களை கொன்று குவித்தவனும் இறக்கின்ற போது ஒன்றுமில்லாமல் செல்கின்றான். இந்த சாம்ராஜ்ஜியத்தையே தன் கைக்குள் கொணர முனைந்த மனிதனும், சவப்பெட்டியில் செல்லும் போது ஒன்றுமில்லாமல் தான் செல்கிறான். ஒன்றுமில்லாமல் பிறந்து ஒன்றுக்குமாகாதவற்றிற்குள் மனிதன் செல்கிறான்.

இத்தகைய ஒரு சிந்தனையைத் தான் இன்றைய வழிபாடு சிந்திக்க அழைப்பு விடுக்கின்றது. இன்று நம் நெற்றியில் பூசப்படுகின்ற சாம்பல் ஒன்றுமில்லாமையின் அடையாளம். ஒரு காற்றில் பறந்து விடுகிறது. அது போல தான் மனித வாழ்வு. இதனை எண்ணி நம் வாழ்வை அலசி பார்க்கத்தான் இந்த தவக்காலம். இதனை எப்படி அலசி ஆராய்வது என்பதற்காகத்தான் இயேசு நோன்பு, இறைவேண்டல், உதவி இவற்றில் ஈடுபட வேண்டுமென்று அழைக்கிறார். விவிலியத்தில் சாம்பலை துக்கத்தின் அடையாளமாகவும் பயன்படுத்தினார்கள் என்பது விவிலிய ஆசிரியர்களின் கருத்து. எவ்வாறென்றால் தாமார் மற்றும் மொர்த்தொக்காய் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்த தன் மீது சாம்பலை பூசுகின்றார்கள். இந்த தவக்காலங்களில் தன்னை ஆணவத்தோடு காட்டாமல், தன் குற்றங்களை எண்ணி அன்போடு செயல்பட வேண்டுமென்று இயேசு கூறுகின்றார். சாம்பல் மனந்திரும்புவதற்கு அடையாளமாகவும் விவிலியத்தில் பயன்படுத்துகின்றார்கள். நினிவே மக்கள் தங்கள் பாவ வாழ்விலிருந்து வெளிவந்ததற்கு அடையாளமாக சாம்பலில் அமர்கின்றார்கள். நாம் நம் வாழ்வில் ஒரு மாற்று வழியை U Turn எடுத்து பார்க்க அழைப்பு. ஒன்றுமில்லாமல் இந்த உலகத்தில் பிறந்த நாம் ஒன்றுமில்லாதவற்றிற்குள் செல்வதற்கு எதற்காக இந்த ஆணவம் என்று சிந்திக்க இந்த வழிபாடு அழைக்கிறது.

நாம் எவற்றை கொண்டு வந்தோம்? எவற்றையெல்லாம் ஒன்றுமில்லாத மண்ணிற்குள் எடுத்துச் செல்ல போகிறோம்? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

==================

2அரசர்கள் 2: 1, 6 – 14
எலிசாவின் பிடிவாதம்

1அரசர்கள்  புத்தகத்தில் 17 ம் அதிகாரத்தில் எலியாவை காண்கிறோம். குறிப்பாக ஆகாபு அரசருக்கு எதிராக கடவுளின் வார்த்தையை துணிவோடு அறிவித்ததைப் படித்தோம். இரண்டாம் அரசர்கள் புத்தகத்தில் எலியா விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடப்படுகிறது. எலியா, தான் இறைவனால் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படப்போவதை அறிந்தவராக, எலிசாவை அவரைப் பின்தொடராமல் அங்கேயே தங்கியிருக்கச் சொல்கிறார். ஆனால், எலிசா அவரைப்பிரிவதற்கு மனமில்லாதவராக இருக்கிறார். எலிசாவின் பிடிவாதத்தைக் கண்டு, எலியாவும் அவரைப் பின்தொடர்வதற்கு அனுமதிக்கிறார். இங்கு எலிசா, பிடிவாதமாக இறைவாக்கினரைப் பற்றிக் கொள்வதைப் பார்க்கிறோம்.

இறைவாக்கினர் எலிசாவிடம் இருக்க வேண்டிய பண்பானது நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டிய பண்பாக இருக்கிறது. இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த பண்பு. இறைவாக்கினர் எலியா, எலிசாவைப் பின்தொடர வேண்டாம் என்று சொன்னது, தனக்கு நடக்கப்போவதை அறிந்ததனால். ஏனென்றால், அவர் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறார். தன்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிற எலிசாவினால் அதனைத்த தாங்கிக் கொள்ள முடியாது என்று நினைத்திருக்கலாம். எனவே, அவர் தடுத்துப் பார்க்கிறார். ஆனால், எலிசாவின் பிடிவாதத்தைக் கண்டு, அவரைப் பின்தொடர அனுமதிக்கிறார்.

இறைவனிடத்தில் நாம் நம்முடைய தேவைகளுக்காக செபிக்கிறபோது, மற்றவர்களுக்காக மன்றாடுகிறபோது, இப்படிப்பட்ட பிடிவாதம் நமக்கு தேவைப்படுகிறது. எது நடந்தாலும், இறைவன் எனக்கு இதனைத் தராமல் நான் அவரை விட மாட்டேன் என்கிற அந்த பிடிவாதம் நம்முடைய விசுவாச வாழ்விலும் இருக்கட்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

கிறிஸ்தவ ஆன்மீகம்

கிறிஸ்தவ ஆன்மீகத்தின் சாராம்சத்தை இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு ஆன்மீகம் இருக்கிறது. கிறிஸ்தவம் என்பது பக்தியோடு நின்றுவிடுவது கிடையாது. மாறாக, செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. இன்றைக்கு வழிபாடா? செயல்பாடா? என்று, மக்கள் மத்தியிலும், அருட்பணியாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சிலர் வழிபாட்டில் நிறைவு காண்கிறார்கள். மற்றும் சிலர், செயல்பாடே சரியான பாதை என்று, அதில் மகிழ்ச்சி காண்கிறார்கள். இவையிரண்டையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதை, இயேசுவின் போதனையும், அவரது வாழ்வும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

செபம், தவம் மற்றும் தர்மம் என்கிற, இந்த மூன்றையும் இணைத்து, புரட்சிகரமான ஆன்மீகத்தைத் தருவதுதான் கிறிஸ்தவ ஆன்மீகம். செபம் நம்மை செயல்பாட்டிற்கு உந்துசக்தியாக இருக்கும் வகையில் வழிநடத்த வேண்டும். அதேபோல, செயல்பாடு சிறப்பாக அமைய நமது செபவாழ்வு சிறப்பாக அமைய வேண்டும். ஒன்று மற்றொன்றிற்கு இணையானதாக, இயல்பானதாக வழிநடத்த வேண்டும். இயேசு இந்த இரண்டையும் தனது வாழ்க்கையில் ஒருசேர இருக்குமாறு பார்த்துக்கொண்டார். செபிப்பதை அவர் விட்டுவிடவில்லை. அதேபோல, அவருடைய செயல்பாடும் அதற்கு இணையானதாக இருந்தது.

நமது கிறிஸ்தவ வாழ்க்கை பல சமயங்களில் வழிபாட்டோடு முடங்கிப்போவதாக இருக்கிறது. வாழ்வைத்தொடாத வழிபாடுகள் தான், நம் மத்தியில் ஏராளம். இன்றைக்கு வழிபாட்டின் மீதான ஈர்ப்பும் குறைந்து வருவது வேதனையிலும் வேதனை. ஆனாலும் உண்மை. இந்த வேறுபாடுகள் மறைந்து, இணைந்த ஓர் ஆன்மீக வாழ்வை நாம் முன்னெடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

பக்தி முயற்சிகள்

நோன்பு என்பது உன்னதமான ஒன்று. கடவுளோடு இணைந்திருக்க நம்மையே அடக்கி ஆள்வதற்கு உந்துசக்தியாக இருக்கிறது. நோன்பு என்பது பக்தியின் அடையாளம். அது வெளிவேடமாக, பக்தியின் பெயரால் நடத்தப்படும் நாடகமாக்கப்படுவதை இன்றைய நற்செய்தியில் இயேசு கண்டிக்கிறார். ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாளன்று, அனைத்து யூதர்களும் நோன்பிருக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இது தவிர, சில பாரம்பரிய யூதர்கள் வாரத்திற்கு இரண்டுமுறை, திங்களும், வியாழனும் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும்தான் சந்தை கூடும் நாள். எனவே, கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் யெருசலேமுக்கு மக்கள் அனைவரும் கூடும் நாட்கள், இந்த இரண்டு நாட்களாகும். பக்தியின் பெயரால் பகல் வேடம் போடும், ஒரு சில யூதர்கள் இந்த நாட்களை தங்களின் பக்தியை தம்பட்டம் அடிப்பதற்கு இந்த நாட்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். மற்றவர்கள் முன்னிலையில் தாங்கள் நோன்பிருக்கக்கூடியவர்கள் என்பதையும், அதனால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் பெருமைப்பாராட்டிக்கொண்டனர்.

தாங்கள் நோன்பிருப்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, தங்களது தலைமுடியை சீவாமல் வாட்டமாக முகத்தை வைத்துக்கொண்டனர். அழுக்கடைந்த ஆடைகளை உடுத்தினர். தாங்கள் சோகமாக இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ள முகத்தில் வெள்ளை வண்ணம் பூசிக்கொண்டனர். இது அப்பட்டமான பக்தியின் வெளிவேடம். நோன்பு என்பது ஒறுத்தல் முயற்சி. தற்பெருமைக்காக அல்ல, மாறாக, உணர்வுகளை அடக்கி ஆளவும், அதன் வழியாக கடவுளோடு நெருங்கி வரவும்தான். தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும், தங்களை முன்னிறுத்தவும், தங்களை பெருமைப்பாராட்டிக்கொள்ளவும் செய்கின்ற அனைத்துமே, அது வெளிப்புறத்தில் மக்களால் பாராட்டப்பட்டாலும், கடவுள் முன்னிலையில் அருவருக்கத்தக்கவை.

இன்றைய நவீன உலகில், ஒவ்வொருவருமே தங்களது பெருமைபாராட்டுகின்ற செயல்பாடுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆண்டவரின் மகிமையைப் பறைசாற்றவும், கடவுளோடு நெருங்கி வரவும் நாம் எடுக்கும் முயற்சிகள் மிகவும் சொற்பமாக இருக்கின்றன. கடவுளைப் புகழ்ந்தேத்துவதும், அவரோடு நெருங்கிவரவும், நமது பக்தி முயற்சிகள் உதவியாக இருக்கட்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

எதிர்பார்ப்பு இல்லாத உதவி

இயேசு கைம்மாறு, வெகுமதி பற்றி பேசும்போது, இந்த உலகம் சார்ந்த பொருட்செல்வத்தைப்பற்றிப் பேசவில்லை. பழைய ஏற்பாட்டில், செல்வமும், வெகுமதியும் பெற்றவர்கள், நல்லவர்களாகக் கருதப்பட்டனர். அதிகமான குழந்தைச் செல்வத்தைப் பெற்றவர்கள், அறுவடை நிறைவாகப் பெற்றவர்கள் அனைவருமே, கடவுளின் ஆசீரைப் பெற்றவர்களாக மக்கள் நினைத்தனர். யோபு புத்தகத்திலும், இந்த கருத்துதான் மீண்டும், மீண்டும் வலிறுத்தப்படுகிறது. யோபு தான் தவறு செய்யவில்லை என்று தன்னுடைய நண்பர்களிடத்தில் சொன்னாலும், அவருடைய நண்பர்கள் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், நல்லவர்கள் என்றுமே கடவுளின் அருளைப்பெற்று வாழ்வர் என்பது அவருடைய நண்பர்களின் வாதம். இயேசு அப்படிப்பட்ட கருத்தை நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார். ஏனென்றால், ஏழைகளோடு, ஒடுக்கப்பட்டவர்களோடு, அடிமைப்படுத்தப்பட்டவர்களோடு நெருங்கிப்பழகியவர் இயேசு கிறிஸ்து.

அப்படியானால், இயேசு சொன்ன செய்தியின் பொருள் என்ன? இயேசு கைம்மாறு என்று எதனைக் குறிப்பிடுகிறார்? மக்கள் எதையும், நாம் இப்போது கொடுத்தால், பிற்காலத்தில் கடவுள் நமக்குக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு கொடுத்தால், அவர்களுக்குரிய கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மாறாக, கொடுப்பதை வாழ்வு அனுபவமாக, அன்பு அனுபவமாக எதையும் எதிர்பாராமல் கொடுப்பவர்களுக்கு நிச்சயம் கடவுள் ஏராளமானவற்றைக் கொடுப்பார். கொடுத்தால் நமக்கு கிடைக்கும் என்ற எண்ணத்தோடு நாம் கொடுக்கக்கூடாது. எதையும் எதிர்பாராமல் கொடுப்பவர்களுக்கு கடவுள் நிச்சயம் கொடுப்பார்.

இந்த உலகத்தில் கொடுக்கிறவர்கள் அனைவருமே எதையாவது எதிர்பார்த்துதான் கொடுக்கிறார்கள். பிள்ளைகள் முதல் பெற்றோர் வரை இத்தகைய மனநிலை தான் நீடித்துவருகிறது. எப்போது எதிர்பார்க்காமல் கொடுக்கக்கூடிய மனநிலை வருகிறதோ, அப்போதுதான் கடவுளின் ஆசீர் நமக்கு நிறைவாகக் கிடைக்கும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கைம்மாறு காணாத வாழ்வு

கைம்மாறு என்கிற வார்த்தைக்கு இயேசுவின் போதனையில் என்ன இடம்? துன்பப்படுவதும், விழுமியங்களுக்காக, நல்லவற்றிற்காக குரல் கொடுப்பது வெறும் கைம்மாறு பெறுவதற்காகத்தானா? என்ற கேள்வி நமக்குள்ளாக எழலாம். மத்தேயு 5: 12 சொல்கிறது: “வி;ண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்”. மத்தேயு 10: 42 “இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”. மத்தேயு 25 வத அதிகாரத்திலும், கைம்மாறு பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு சொன்னதன் அர்த்தம் தான் என்ன?

இயேசு நிச்சயம் கைம்மாறு பெறுவதற்காக நல்ல வாழ்வு வாழ சொல்லியிருக்க மாட்டார். ஒன்றை எதிர்பார்த்து செய்வது நிச்சயம் சரியானதாக இருக்காது. கைம்மாறு எதிர்பார்க்காமல் செய்வது தான் இயேசு விடுக்கும் அழைப்பு. வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் வந்தாலும், அதற்கு பயந்துவிடாமல், கைம்மாறு கிடைக்கிறதோ இல்லையோ, அதைப்பற்றி எதிர்பார்க்காமல், வாழ்வை நிறைவோடு வாழ்வதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும் என்பது இயேசு தரும் பாடம். கைம்மாறு எதிர்பார்த்து வாழ்வது உண்மையான கிறிஸ்தவ வாழ்வு அல்ல. எதையும் எதிர்பார்க்காது, வாழ்வை நேர்மையோடு, துணிவோடு, உண்மைக்கு குரல் கொடுக்கும் நல்ல மனச்சான்றோடு வாழ்வதுதான் சரியான பார்வை.

இந்த உலகம் எதிர்பார்க்கும் உலகம். எதையும் எதிர்பார்த்துதான் எதையும் செய்யும். கைம்மாறு இல்லையென்றால் மற்றவரை ஒதுக்கிவிடும். இத்தகைய உலகத்தில் வாழும் நாம் எப்படி, கைம்மாறு கருதாத வாழ்வு வாழப்போகிறோம். சிந்திப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

2 அர 2: 1, 6-14
மத் 6: 1-6, 16-18

வெளிவேடம் தவிர்ப்போம்!

இறைவேண்டல், தர்மம் செய்தல் போன்ற அன்பு, அறப் பணிகள், நோன்பிருத்தல்... இவை மூன்றும் அனைத்து சமயங்களிலும் முதன்மை பெற்ற ஆன்மீகச் செயல்பாடுகளாக அமைந்திருக்கின்றன. ஆண்டவர் இயேசுவும் தம் சீடர்களிடமும், தம்மைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்திடமும் இவற்றை வலியுறுத்துகிறார்.

ஆனால், முகாமையான ஒரு வன்கட்டோடு, அதாவது நிபந்தனையோடு... வேண்டுதல், தர்மம், நோன்பு - மூன்றும் வெளிவேடமின்றி நிகழவேண்டும். பிறர் பார்க்க வேண்டும், பிறரின் பாராட்டைப் பெறவேண்டும், நல்ல பெயர் வாங்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு இவற்றைச் செய்யும்போது, அங்கே வெளிவேடம் புகுந்துவிடுகிறது. உள்நோக்கம் நுழைந்துவிடுகிறது. பாராட்டும், நற்பெயரும் கிடைக்கும்போது, உள்நோக்கம் நிறைவேறிவிடுகிறது. எனவே, இறையாசி தவறிவிடுகிறது.

எனவே, இவை மூன்றையும் மறைவாக, பிறருக்குத் தெரியாமல், இறைவனுக்கு மட்டுமே உணர்கின்ற வகையில் ஆற்றுவோம். இறைவனின் பாராட்டை, ஆசிகளைப் பரிசாகப் பெறுவோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். வெளிவேடமற்ற, உள்நோக்கமற்ற நேர்மையான உள்ளத்தை எங்களுக்குத் தாரும். எங்கள் செபம், செயல், ஆன்மீகம் அனைத்தும் உமக்கு மட்டுமே புகழ் தரும் செயல்களாக அமைவனவாக, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

---------------------------------

''இயேசு, 'நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.
வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும்
சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்' என்றார்'' (மத்தேயு 6:2)

சிந்தனை
-- மத்தேயு நற்செய்தியில் இயேசு வழங்கிய ''மலைப் பொழிவு'' மைய இடம் பெறுகிறது (மத் 5:1-7:29). முற்காலத்தில் மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுளின் திருச்சட்டத்தை அறிவித்ததுபோல, இயேசு உலக மக்கள் அனைவருக்கும் இறையாட்சி பற்றிய நற்செய்தியை ''அதிகாரத்தோடு'' அறிவித்தார் (மத் 7:29). இயேசுவை நம்பி ஏற்போரிடத்தில் துலங்க வேண்டிய பண்புகள் யாவை? யூத சமயத்தில் முக்கியமான அறநெறியாகக் கருதப்பட்ட நோன்பு, இறைவேண்டல், ஈகை ஆகியவை எத்தகைய மனநிலையோடு செய்யப்பட வேண்டும்? இக்கேள்விகளுக்கு இயேசு ''மலைப் பொழிவின்'' போது பதில் வழங்கினார். இயேசு வாழ்ந்த காலத்தில் ஏழை மக்கள் பலர் இருந்தார்கள். ஆனால் அவர்களது தேவையை நிறைவேற்ற அரசு திட்டங்கள் இருக்கவில்லை; இலவச மருத்துவ வசதி, சத்துணவுத் திட்டம், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை நடைமுறையில் இல்லை. நிலைமை இவ்வாறிருந்ததால் பல மக்கள் பிறரிடம் கையேந்தி உதவிபெற்றுத்தான் வாழ வேண்டியிருந்தது. எனவே, தர்மம் செய்வது உயர்ந்த பண்பு எனவும், தர்மம் செய்யாதிருப்பது தவறு எனவும் திருச்சட்டம் இஸ்ரயேலருக்கு உணர்த்தியது.

-- இப்பின்னணியில்தான் இயேசு மக்கள் எவ்வாறு தர்மம் செய்ய வேண்டும் என எடுத்துக் கூறுகிறார். பிறருக்கு நான் தாராள உள்ளத்தோடு உதவினாலும் அதனால் பிறர் என்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என நான் விரும்பி அவ்வாறு செய்தால் எனக்குக் கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது. அவ்வாறு நான் செய்யும் உதவி வெறும் ''வெளிவேடம்'' என இயேசு கூறுகிறார். தர்மம் செய்வது தன்னிலேயே நல்ல செயல்தான். ஆனால் எந்த நோக்கத்தோடு அதைச் செய்கிறோம் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறர் நம்மைப் புகழ வேண்டும் என்பது நமது நோக்கமாக இராமல் கடவுள் நம் செயலைப் பார்க்கிறார், அதுவே நமக்குப் போதும் என நாம் செயல்பட வேண்டும். அப்போது கடவுள் நமக்குக் கைம்மாறு வழங்குவார். அவரது கைம்மாறு கிடைக்கும் என்பதற்காகவன்றி, நாம் செய்யும் தர்மம் கடவுளுக்கு உகந்தது எனவும் பிறருக்கு நலம் பயப்பது எனவும் நமக்குத் தெரிந்தால் அதுவே போதும் என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.

இறைவாக்கு
இறைவா, பிறருக்கு உதவும் வேளையில் நாங்கள் தன்னலம் நாடாது செயல்பட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

------------

''இயேசு, 'மக்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள்முன்
உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்' என்றார்'' (மத்தேயு 6:1)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- நோன்பு இருத்தல், இறைவேண்டலில் ஈடுபடுதல், தர்மம் செய்தல் ஆகியவை தலைசிறந்த அறச்செயல்களாகக் கருதப்பட்டன. இயேசு இச்செயல்களின் மதிப்பையோ தேவையையோ சிறப்பையோ மறுத்துக் கூறவில்லை. அன்றுபோல இன்றும் நோன்பு, இறைவேண்டல், ஈகை ஆகிய நற்செயல்கள் மனிதருக்குத் தேவையே. ஆனால் இயேசு அறச்செயல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் நாம் அச்செயல்களைச் செய்து பிறருடைய பாராட்டுதலையும் புகழ்ச்சியையும் எதிர்பார்க்கின்ற மனநிலை கொண்டிருப்பது சரியல்ல என உணர்த்துகின்றார். நோன்பிருப்போர் பிற மனிதரின் பசியைப் போக்கும் எண்ணம் கொண்டுள்ளனரா? இறைவேண்டல் செய்வோர் பிறருக்காகக் கடவுளை மன்றாடுகின்றனரா? தர்மம் செய்வோர் பிறருக்கு உதவுகின்ற மனநிலை கொண்டிருக்கிறார்களா? இக்கேள்விகளுக்கு நாம் ''ஆம்'' எனப் பதில் இறுக்க முடிந்தால் அறச்செயல்கள் நமக்கு நன்மை கொணரும்; கடவுளின் அருளை நாம் அடைந்திட வழியாகும்.

-- இதற்கு நேர்மாறாக, நாம் புரிகின்ற ''அறச்செயல்கள்'' வெளிவேடமாக இருந்தால் அவற்றால் ஒருவேளை பிறர் நலமடைந்தாலும் நாம் நலமடையப் போவதில்லை. கடவுள் நம் உள்ளத்தில் உறைபவர்; அவர் நம் உள்ளத்தைத் துருவி அறிபவர். எனவே கடவுளின் பார்வையில் நாம் நல்ல மனிதராக இருந்திட வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் தூய்மையும் நேர்மையும் ஓங்கி விளங்க வேண்டும். அதே நேரத்தில் நாம் புரிகின்ற அறச்செயல்கள் பிறருடைய நன்மைக்காகக் செய்யப்பட வேண்டும். அப்போது நாம் தொடங்குகின்ற தவக்காலம் நமக்குக் கடவுளின் அருளைப் பெற்றுத் தருகின்ற தருணமாக இருக்கும்.

மன்றாட்டு
இறைவா, தூய உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இன்று சாம்பல் புதன். 'மனிதனே நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்' என்பதை நினைவுபடுத்ததும் நாள். இவ்வுலகில் நாம் செய்யும் ஆர்பாட்டங்கள் ஏராளம். ஒரு நொடிப்பொழுது நாம் நினைத்துப்பார்த்தால் நாம் செய்யும் ஆர்பாட்டங்கள் தேவையற்றது என உணரலாம். தவக்காலம் அருளின் காலம். இந்த நாற்பது நாட்களும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவிற்காக நம்மைத் தயரிக்க கொடுக்கப்பட்டிருக்கும் காலம். நம் வாழ்வைச் சீர்தூக்கிப்பார்த்து தீயவைகளை புறம் தள்ளவும் நல்லவைகளை நாடிச்செல்லவும் அழைக்கும் காலம். நமது ஜெபத்தாலும் தவமுயற்சிகளாலும், அருள்வாழ்வாலும் நம்மை இறைவனோடும் பிறரோடும் ஒப்புறவாக்கிக்கொள்ளும் காலம்.

நற்செயல்கள் தவக்காலத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் செய்ய வேண்டும். அந்த நற்செயல்களும் விளம்பரத்திற்காகவோ அல்லது பிறர் போற்றவேண்டும் என்பதற்காகவோ புகழுக்காகவோ செய்வது ஏற்புடையதல்ல. ஆலயங்களில் சிலர் குளல் விளக்குகள் (டியுப் லைட்) வாங்கிவைப்பார்கள். விளக்கை விட அதில் பெயர்கள் பெரிதாகப் பொறிக்கப்பட்டிருக்கும். இன்றய நற்செய்தி இவர்களைப் போன்றோருக்கு இயேசு கொடுக்கும் சாட்டையடி.

அறம் செய்வோம். நற்செயல்கள் செய்வோம். தர்மம் செய்வோம். பலனை எதிர்பார்த்து அல்ல, நற்பெயருக்காக அல்ல, புகழுக்காக அல்ல. கடவுளின் மாட்சிக்காக, இறையரசு மண்ணில் மலர.

இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:--மரியதாஸ்--: