முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11

ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 34: 3-4. 5-6. 15-16. 17-18

பல்லவி: நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்.

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்;
அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;
எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;
அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6 இந்த ஏழை கூவியழைத்தான்;
ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி

15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன;
அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;
அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -பல்லவி

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;
அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.
18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்;
நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

மத்தேயு 6:7-15

தவக்காலம் -முதல் வாரம் செவ்வாய்

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: ``விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.'' மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

20.02.2024 செவ்வாய்
மறப்போம் ... மறுக்காமலிருப்போம் ...
மத் 6 : 7 - 15

ஒவ்வொரு முறையும் தேர்தல் வருகின்றபோது வாக்காளர்கள் கூறுகின்ற வார்த்தை ‘ எங்கள் ஆட்சியில் ஏதாவது கடந்த முறையில் தவறு செய்திருந்தால், அதனை மறந்துவிடுங்கள், இனி அதுபோல ஒருபோதும் நடக்காது, ஆனால் மறுத்துவிடாதீர்கள் என்பதே”. அண்ணன் தம்பிகளுக்கிடையே சொத்து பிளவு பிரச்சனை வருகின்றபோது, ஒருவர் மற்றவரை நோக்கி பிரச்சனையை எண்ணிக்கொண்டே இருக்காதே மாறாக மறந்துவிடு, ஆனால் மறுத்துவிடாதே என்பதே. இதுபோன்று பல இடங்களில் இத்தகைய அடைமொழி வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அதுபோலத்தான் இயேசுவின் வேண்டுதல் ஜெபமும் இதன் அடிப்படையிலே அமைந்துள்ளது. காரணம் ஒரு மனிதனை இறைநிலைக்கு அழைத்து செல்வதே மன்னிக்கின்ற பண்புதான். அதனால்தான் இந்த ஜெபத்தினை விவிலிய பேராசிரியர்கள் இரண்டு படிவங்களாக பிரித்துக் காட்டுகின்றன. முதல் படிவம் கடவுளை புகழ்வதும், இரண்டாவது படிவம் மனிதர்களை மன்னிக்கின்ற மனம் கிடைக்கப் பெறுவதுமே. மன்னிக்கின்ற மனம்தான் இறைவனைப் புகழ இடம்கொடுக்கும் என்பதே இயேசுவின் எதிர்பார்ப்பு. அதனால்தான் விபசாரத்தில் பிடிபட்ட பெண், ஊதாரி மகன் போன்ற உவமைகளிலே இயேசு அவர்களை மன்னிக்கின்றார். காரணம் அவர்களை மறுத்துவிடக்கூடாது என்பதே இயேசுவின் எண்ணம்.

நாம் சிந்திப்போம். மன்னிக்கின்ற மனம்தான் தவறை மறந்து மறுக்காமலிருக்க ஏங்கும். நம்மிடம் இத்தகைய மனம் இருக்கிறதா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

இறைவனிடம் என்ன பேச?

மத்தேயு 6: 7-15

இன்றைய நற்செய்தியில், இயேசு தம் சீடர்களுக்கு எவ்வாறு செபிக்க வேண்டும் என்பதை கற்பிக்கிறார். செபத்தின் முதல் படி கடவுளையும் அவருடைய விருப்பத்தையும் தேடுவது. எல்லா மக்களும் கடவுளுடைய அரசிற்குச் சொந்தமானவர்கள் என்பதை புரிந்து கொண்டு தங்களைச் சமர்ப்பிக்கவும், எல்லாவற்றிலும் கடவுளுடைய சித்தம் நடக்க வேண்டும் என்றும் செபிக்க வேண்டும். நம்முடைய செபங்கள் கடவுளைத் தேடுவது, அவருடைய மகிமையைத் தேடுவது, அவருடைய சித்தத்தைத் தேடுவது ஆகியவற்றால் நிரப்பப்பட வேண்டும்.

செபத்தின் இரண்டாவது படி, கடவுளின் கவனிப்பைத் தேடுவதாகும். வனாந்தரத்தில் இஸ்ரயேல் மக்களை ஒவ்வொரு நாளும், கவனித்துக் கொண்டார். அவர்களின் காலணிகள் தேய்ந்து போகவில்லை. கடவுள் அவர்களுக்குத் தேவையான தண்ணீரையும் உணவையும் சரியான நேரத்தில் கொண்டு வந்தார். நாளை நாம் எப்படிக் கவனிக்கப்படுவோம் என்று தெரியாதபோது, கடவுளை நம்பி அவரிடம் சரணடைந்த போது இறைவன் அவர்களை பார்த்துக் கொண்டார் என்பதை வரலாறு நமக்கு பதிவு செய்கிறது. நம்முடைய உடல் தேவைகளுக்காகவும் கவலைகளுக்காகவும் செபிப்பதும் நமக்கு கடவுளின் ஆசீர்வாத்தினைப் பெற்றுத்தரும். ஒவ்வொரு நாளும் கடவுள் நம்மைக் கவனித்துக் கொள்ளும்படி செபிக்கலாம்.

மூன்றாவதாக, கடவுளிடம் மன்னிப்பு கேட்பது. நமது உடல் தினசரி தேவைகளை விட நமது ஆன்மீக தினசரி தேவைகள் என்பது மிக முக்கியமானது. ஒவ்வொரு நாளும் நமக்கு மன்னிப்பு தேவை. நாம் தவறும்போதெல்லாம் நம்மை மன்னிக்கவும், இறைவனின் சட்டத்தையும் அன்பையும் மீறியதற்காக நம்மை மன்னிக்கவும் கடவுளிடம் இறைஞ்ச வேண்டும். மன்னிப்பு மனிதர்களை நல்வழிப்படுத்தும். சோதனைகளில் கடவுளின் வழிகாட்டுதலையும் அவரிடமிருந்து விடுதலையையும் தேடுவதே செபத்தின் இறுதி படியாகும். ஆண்டவரே, இன்று சோதனை வரப்போகிறது என்று எனக்குத் தெரியும். அந்தச் சோதனைகளிலிருந்து என்னை விலக்கி, அந்தத் தருணங்களில் இருந்து என்னை விடுவித்தருளும் என்பதுதான் நமக்கு இருக்கக் கூடிய இறுதி வழியாகும்.

நம் வாழ்வில் கடவுளுடைய சித்தத்தைத் தேடுவதைப் பற்றி நாம் அவரிடம் பேசுகிறோமா? சோதனைகளில் இருந்து விடுபடுவது பற்றி கடவுளிடம் பேசுகிறோமா? மன்னிப்புக்கான நமது தேவையைப் பற்றி நாம் கடவுளிடம் பேசுகிறோமா? என்பதை சிந்திப்போம்.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ.

........................................................................

மத்தேயு 6: 7 – 15
இறை வேண்டலா? நிறைய வேண்டலா?

வேட்டையாட சென்ற அரசன் முனிவரின் வாழ்வை எண்ணிப் பார்த்து முனிவரை அரசவைக்கு அழைத்து வந்து என்ன வேண்டும் என்று கேட்டு விட்டு பூஜை அறைக்கு செல்கிறான். பூஜை அறையை விட்டு வந்த அரசனிடம் முனிவர், நீ இறைவனிடம் என்ன கேட்டாய்? என்ற போது ‘புத்திர பாக்கியத்திற்காகவும், இன்னும் அதிகமான செல்வத்திற்காகவும்’ என்று கூறினான். முனிவர் அதற்கு எனக்கு பிச்சைக்காரனிடம் பிச்சை எடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை என்று கூறி நடைகட்டியதாக பட்டினத்தார் கூறுவார். செபம் என்பது நம் கோரிக்கையை பட்டியலிடுவது அல்ல. நம் சொந்த விருப்பங்களை செயல்படுத்த வைக்கும் கருவி அல்ல. மாறாக, கடவுள் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதனைத் தோ்ந்து தெளிந்து அதனை செயல்படுத்துவதற்கான வல்லமையைக் கேட்பது. வேறு வகையில் சொல்லப் போனால் நம் விருப்பத்திற்கு ஏற்ப கடவுளை மாற்றுவதல்ல செபம். மாறாக கடவுளின் விருப்பத்திற்கேற்ப நம்மை மாற்றுவதே செபம்.

அத்தகைய செபம் எவ்வாறு அமைய வேண்டும் என்று இன்று இயேசு கற்றுக் கொடுக்கிறார். எதற்காக இயேசு கற்றுக் கொடுக்கிறாரென்றால் இயேசு காலத்தில் யூத மக்கள் வாழ்க்கையில் நாள்தோறும் இடம் பெற்றதை அவர்கள் காலையிலும், மாலையிலும் ஓதிய ‘ஹெமா’ எனப்பட்ட இறைவேண்டல். இதன் அர்த்தம் பொது இடங்களில் மக்களிடமிருந்து நல்ல பெயர் வாங்குவதற்காக துவங்கினார்கள். இதனை மாற்றுச் சிந்தனையாகத் தான் இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார். யூத மரபுகளுக்கு ஏற்றவாறு இதில் 7 விண்ணப்பங்கள் அடங்கியுள்ளது. முதல் மூன்று விண்ணப்பங்கள் கடவுளைப் பற்றியவை, அடுத்த நான்கு மானிடத் தேவைகள் பற்றியவை. முதல் மூன்று விண்ணப்பங்கள் கடவுளின் இறையாட்சி பற்றியும், கடவுள் செயல்பாடுகளில் இறையாட்சி பற்றியும், அதாவது விண்ணில் விளங்கும் கடவுளின் விருப்பங்கள் மண்ணிலும் பிறக்க வேண்டும் என்கிற கோரிக்கை பற்றியும் விளங்குகின்றன. இவை கடவுள் சார்பாக மனிதர் செலுத்தும் மூன்று அன்பு வேண்டுகோள்கள் என நாம் குறிப்பிடலாம். அடுத்த நான்கு விண்ணப்பங்கள் அன்றாட மானி வாழ்வுக்கு தேவையானவை பற்றியே. கடவுளின் அன்றாட பராமரிப்பு, பாவ மன்னிப்பு, மீண்டும் பாவத்திற்கு உட்படாதிருக்க இறையருள், தீமைகள் அனைத்திலிருந்தும் விடுதலை போன்றவை பற்றியே இந்த விண்ணப்பங்கள். இயேசு கற்றுக் கொடுத்த இந்த செபம் கடவுள் ஆட்சிபுரியும் விண்ணகத்தின் எதிரொலி மக்கள் வாழும் மண்ணகத்தில் நீடித்து ஒலிக்க வேண்டும் என்றும் மக்களின் உணர்வுகள் அனைத்தும் கடவுளை மையப்படுத்தி விண்ணோக்கியதாக விளங்க நமக்கு பாடம் புகட்டுகிறது.

நமது செபம் இறைவன் விரும்புகிறது போல விண்ணோக்கியதாக இருக்கிறதா அல்லது நாம் விரும்புகின்றது போல நிறைய காரியங்களை பெறுவது போன்று அமைகிறதா? சிந்தித்துப் பார்ப்போம்.

- அருட்பணி. பிரதாப்

====================

மத் 6 : 7 -15
அவர் ஒரு ‘மாதிரி’

தவக்கால ஆன்மீக முயற்சிகளில் (ஈதல், செபித்தல், நோன்பிருத்தல்) ஒன்றான செபித்தல் பற்றி இன்றைய நற்செய்தி விளக்குகிறது. ஆண்டவர் இயேசுவே நம் அனைவருக்கும் அனைத்திருக்குமான மாதிரியாக இருக்கின்றார் என்பதை அவர் கற்றுக் கொடுத்த செபத்தில் இருந்தும் நம்மால் கற்றுக் கொள்ள முடிகிறது. சில பிற சபையினர் இச்செபத்தைத் தினமும் எவ்வேளையும் சொல்லும் நம் தாய் திருஅவையினரைப் பார்த்து கேளி செய்வதுண்டு, ஏன் இவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்களென்று? இவர்கள் கேளியையும் கிண்டலையும் பார்த்து நாம் பின் வாங்கிட முடியாது. இவர்கள் இயேசுவையும் இறைவார்த்தையையும் கிண்டல் செய்கிறார்கள் என்பதே உண்மை. இயேசு கற்பித்த இச்செபமே தலை சிறந்த செபமாக இன்று உலகின் அதிக மொழிகளில் சொல்லப்படுகின்ற ஓர் முதன்மைச் செபமாகும்.

இதன் முதல்பகுதி, இறைவனின் இறையாட்சியை அதாவது இயேசு கண்ட கனவினை நோக்கி, இந்த உலகு உருண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைக்கின்றது. இதன் இரண்டாம் பகுதி இறையாட்சி எப்படி நம் மத்தியிலும் நமக்குள்ளும் நிகழும் என்பதை நமக்கு கூறுகிறது.

1. உடல் ரீதியான …… இங்கு உணவினைப் பற்றி கூறுவது நம் உடலின், உணர்வுகளின் தேவைகள் அனைத்தையும் நிறைவுபெற அவரை நோக்கி எழுப்புகின்ற மன்றாட்டாக இருக்கின்றது. இது மனிதர்களின் அடிப்படைத் தேவை. இதனைக் கடந்தால் அல்லது இதில் நிறைவு பெற்றால் மட்டுமே ஒருவனால் பிறரைச் சார்ந்த சிந்திக்கமுடியும் என்பதே திண்ணம்.

2. உறவு ரீதியான …… அடிப்படைத் தேவைகளை பற்றி பேசியப் பிறகு ஆண்டவர் உடனடியான உறவின் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றிக் கூறி அதற்காக செபிக்கக் கற்றுக் கொடுக்கிறார். உடல் ரீதியான தேவைகள் ஒரு தனிமனிதனோடு நின்று விடுகிறது. இந்த உறவு என்பது ஒரு குமுகத்தின் தேவையாக மாறுகிறது. இங்கு பிறரோடு உள்ள உறவும் கடவுளோடு உள்ள உறவும் மிக முக்கியம்.

3. ஆன்மீக ரீதியான ….. எவனொருவன் முதல் இரண்டு தேவைகளையும் கடக்கின்றானோ அவனால் மட்டுமே (சில விதிவிலக்குகள் அப்பாற்பட்டவை) ஆன்மீகத்தில் நிறைவு காணமுடியும். ஆனால் இந்த ஆன்மீக தேவைகளுக்கு தடையாக இருப்பது ‘தீயோன்’. இவனை அல்லது இதை விரட்டியடிக்க, வெற்றிக்கொள்ள நமக்கு கண்டிப்பாக கடவுளின் துணையும் கொடையும் வேண்டும்.

இவ்வாறு ஒரு சிறிய செபத்தில், ஆண்டவர் நம் வாழ்க்கை தத்துவத்தையும், ஆன்மீக முதிர்ச்சியையும் உண்மையான சீடத்துவத்தையும் விளக்குகிறார். ஆனால் இன்று நாம் எவ்வாறு செபிக்கிறோம்? சிந்திப்போம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

===============================

திருப்பாடல் 34: 3 – 4, 5 – 6, 15 – 16, 17 – 18
”நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்”

நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலுமிருந்து விடுவிக்கின்றார் என்று ஆசிரியம் பாடுகிறார். நீதிமான் யார்? என்ற அடிப்படை கேள்வி நம் நடுவில் எழுகிறது. எசேக்கியேல் 18: 9 இதற்கான விளக்கத்தைத் தருகிறது, ”என் நியமங்களையும், நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகொண்டால், அவன் நீதிமான் ஆவான்”. கடவுளுடைய நியமங்களையும், கடவுள் வகுத்து தந்திருக்கிற நீதி நெறிகளையும் கடைப்பிடிக்கிறவன் தான் நீதிமான். நாம் கடவுள் நமக்கு வகுத்து தந்திருக்கிற நெறிகளுக்கு ஏற்ப நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், நாம் நீதிமான்களாக வாழ ஆரம்பிக்கிறோம்.

நீதிமான்களுக்கு கடவுள் தரும் சிறப்பு என்ன? அனைத்துத் துன்பங்களிலுமிருந்து அவர்களை விடுவிக்கின்றார். கடவுள் துன்பங்களே கிடையாது என்று சொல்லவில்லை. மாறாக, துன்பங்கள் வருகிறபோது, அவர்களுக்கு விடுதலை தருவேன் என்கிறார். அப்படியென்றால், நீதிமான்களுக்கு துன்பங்கள் வருமா? நிச்சயம். நாம் கடவுள் வகுத்திருக்கிற நியமங்களின்படி வாழ்கிறபோது, நிச்சயம் நம் வாழ்க்கையில் பல துன்பங்களை நாம் சந்திக்க நேரிடும். அந்த துன்பங்களை நினைத்துப் பார்த்து நாம் கவலை கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால், கடவுள் நம் பக்கம் இருக்கிறார். அவர் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார். அவர் நம்மை விடுவிப்பார்.

நமது வாழ்க்கையில் நீதிமானாக வாழ்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். அப்படி வாழ முற்படுகிறபோது, நமக்கு வரும் துன்பங்களை எண்ணிப்பார்த்து கவலை கொள்ளாமல், மகிழ்வோடு வாழும் வரம் வேண்டுவோம். ஏனென்றால், கடவுள் நம்மோடு இருக்கிறார். நம்மோடு கடவுள் இருக்கிறபோது, நமக்கு எந்த துன்பமும் நேர்வது கிடையாது.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

கடவுளுக்கு பிரியமான செபம்

கடவுள் நமது தேவைகளை அறிந்தவராயிருக்கிறார். அப்ப நமது தேவைகளை அறிந்திருக்கிற கடவுளிடத்தில், நாம் நமது தேவைகளுக்காக மீண்டும், மீண்டும் செபிக்க வேண்டியதில்லை. ஒருவர் ஒரு தகவலை அறிந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடத்தில் அவர் அறிந்த தகவலைச் சொல்வதனால், ஏதாவது மாற்றம் வரப்போகிறதா? அல்லது ஏதாவது நன்மை இருக்கிறதா? நிச்சயம் இல்லை. அதேபோலத்தான் நாம், கடவுளுக்கு தெரிந்த நமது ஏக்கங்களை, மீண்டும், மீண்டும் சொல்வதனால், அது சரியான செபமாக அமைந்துவிட முடியாது.

அப்படியென்றால் செபம் என்பது என்ன? கடவுளைப்போற்றுவதும், அவருக்கு நன்றி செலுத்துவதும் தான் உண்மையான செபம். மக்கள் பல திருத்தலங்களை நாடிச் செல்கிறார்கள். எதற்காக செல்கிறார்கள்? தங்களது விண்ணப்பங்கள் எப்படியாவது கடவுளால் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக. பல நேர்ச்சைகளையும் இதற்காகச் செய்கிறார்கள். ஆனால், கடவுள் சந்நிதியில் நாம் வருகிறபோது,  அவரை போற்றிப்புகழ்ந்தாலே, அது சிறந்த செபமாக இருக்க முடியும். நாம் எண்ணிலடங்கா வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கவில்லை. நாம் அவரது மாட்சிமையை, மகத்துவத்தை புகழ்ந்தேற்ற ஆண்டவர் விரும்புகிறார்.

பலவேளைகளில் நமது செபம், பல வார்த்தைகளைக் கொண்டு அமைந்திருக்கிறது. எந்த அளவுக்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு அது சிறந்த செபம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அது தவறான பார்வை. நமது செபம் எளிய செபமாக, எண்ணிக்கையில் குறைந்த வார்த்தைகளைக் கொண்ட செபமாக இருக்க வேண்டும். கடவுளைப்போற்றுவதாகவும், புகழ்வதாகவும், அது அமைய வேண்டும்.

------------------------------

செப உணர்வு

செபத்தின் வல்லமையைப் பற்றி இயேசு, இந்த நற்செய்தியிலே நமக்கு தனது சிந்தனையைத் தருகிறார். ஒரு சில யூதர்கள் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செபித்தார்கள். அதற்கு யூதர்களின் செபமுறையும் உகந்ததாக இருந்தது. யூதர்கள் செபிக்கிறபோது, நின்றுகொண்டு செபித்தார்கள். அவர்களின் இருகரங்களம் விரிக்கப்பட்டு, உள்ளங்கைகள் வானத்தைநோக்கியும், அவர்களின் சிரம் தாழ்த்தியும் செபித்தார்கள். காலையும், மாலையும் அவர்கள் செபித்தார்கள். எந்த வேலையைச் செய்தாலும், இந்த வேளைகளில் எங்கிருந்தாலும் அவர்கள் செபிக்க ஆரம்பித்தார்கள். தாங்கள் எப்படி செபிக்கிறோம்? என்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்று செபித்தார்கள். குறிப்பாக தொழுகைக்கூடங்களின் முன்நின்று, நீண்ட நேரம், மற்றவர்கள் கண்ணில்படும்படி நின்றுகொண்டு செபித்தார்கள்.

ஒரு சில யூதப்போதகர்களே, மக்களை இத்தகைய செயலுக்காக கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். எனவே தான், வெளிவேடத்தனத்தோடு வேண்டப்படுகிற செபம், இறைவனால் கேட்கப்படாது என்று விளக்கம் கொடுத்தார்கள். நான்கு வகையான மக்களின் செபம் கேட்கப்படாது, என்று பொதுவாக மக்களால் நம்பப்பட்டது. கொலைகாரர்கள், பரிகாசம் செய்கிறவர்கள், பொய்யர்கள் மற்றும் வெளிவேடக்காரர்கள். எனவே, வெளிவேடத்தனத்தோடு நாம் செபிக்கக்கூடாது. அப்படியென்றால், எப்படி செபிக்கலாம்? என்பதை இயேசு கற்றுத்தருகிறார். செபம் என்பது கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட கூடியதாக இருக்க வேண்டும். அது புகழ்ச்சியாக இருக்கலாம், நன்றியாக இருக்கலாம், ஆராதனையாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் கடவுளை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். அதேபோல, கடவுள் அன்பானவர் என்கிற உணர்வு நமக்குள்ளாக இருக்க வேண்டும். அந்த உணர்வோடு நமது செபம் எழுப்பப்பட வேண்டும்.

நாம் கடவுளிடத்தில் செபிக்கிறபோது, இத்தகைய உணர்வுகள் நம்மிடத்தில் இருக்கிறதா? நமது செபங்கள் உண்மையான உணர்வுகளோடு, கடவுளை மையப்படுத்தி ஒப்புக்கொடுக்கப்படுகிறதா? கடவுளுக்கு உரிய மகிமையும், மாட்சிமையும் கொடுக்கப்படுகிறதா? சிந்திப்போம், செயல்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

”இன்று தேவையான உணவை எங்களுக்குத்தாரும்”

இயேசு கற்றுக்கொடுத்த இந்த செபம், யூதர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கப்பட வேண்டும். உணவு என்பது வானக உணவைக்குறிப்பதாக நாம் அர்த்தம் கொள்ளலாம். ஏனெனில் லூக்கா 14: 15 ல் நாம் பார்க்கிறோம்: ”இறையாட்சி விருந்தில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இறையாட்சி பற்றி யூதர்களுக் விநோதமான ஒரு கருத்து இருந்தது. மெசியாவின் ஆட்சி வருகிறபோது, மெசியாவின் விருந்து நடைபெறும். அந்த விருந்தில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற அனைவரும் கலந்து கொள்வர். அத்தகைய விருந்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பமாக, இது பார்க்கப்படுகிறது.

கடவுள் நமது உடலை பேணி வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறார் என்பதை இது நமக்கு தெளிவாக்குகிறது. ஏனென்றால், மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்க மணிக்கணக்காக தங்கியிருந்தபோது, அவர்களுக்கான உணவைப்பற்றி இயேசு கவலைப்படுவதை நாம் நற்செய்தியில் பார்க்கிறோம். உணவால் நாம் மடிந்து விடக்கூடாது என்பதற்காக, அங்கிருந்த மக்களுக்கு உணவு கொடுக்கிறார். மக்கள் ஆரோக்யமான வாழ்வு வாழ்வதற்கு, ஆரோக்யமான உணவும் தேவை என்பதை இயேசு அறியாதவரல்ல.

நமது உடலை புனிதமாக, கண்ணும் கருத்துமாக பேணிவளர்க்கின்ற போதுதான், நமது ஆன்மாவையும் நாம் நல்லமுறையில் வளர்க்க முடியும். நமது செபவாழ்வில் நாம் ஆரோக்யமாக வளர, நமது உடல் ஆரோக்யத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். நமது உடலைப்பேணி வளர்ப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளைப்போற்றுவோம்

இயேசு கற்றுக்கொடுத்த செபம் அருமையான செபம். அந்த செபம் இயேசுவின் சீடர்களுக்கே உரித்தான செபம். ஒரு சிறிய குழந்தைக்கோ, குழுவிற்கோ அல்ல இந்த செபம். மாறாக, இயேசுவின் சீடராக மாறியிருக்கிறவர்களின் செபம். அர்த்தம் பொதிந்த செபம். வெறும் இறைவேண்டலாக இதைச்செபித்தால், அதனுடைய அர்த்தம் நமக்கு பிடிபடாது. சாதாரண செபத்தைப்போலத்தான் நாமும், அதை செபிப்போம். மாறாக, இயேசுவின் சீடராக மாறி, அதை செபித்தால், அது நம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த செபத்தை இரண்டு முக்கியப்பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதி கடவுள் சார்ந்தது. இரண்டாம் பகுதி நமது தேவைகள் சார்ந்தது. இரண்டாம் பகுதியில் சில விண்ணப்பங்கள் கடவுள் முன் வைக்கப்படுகிறது. நமது வாழ்வில் கடவுள் தான் மையமாகவும், எல்லாமுமாகவும் இருக்க வேண்டும் என்பதால் தான், கடவுளுக்கு முதல் பகுதியை அர்ப்பணிக்கிறோம். இந்த உலகம், இதிலிருக்கும் படைப்புகள், நமது வாழ்க்கை அனைத்தும் கடவுளுக்குரியதாக இருக்கிறது. கடவுளுக்குரிய இடத்தைக் கொடுத்துவிட்டுதான் நாம் நமது தேவைகள் பக்கம் திரும்புகிறோம். கடவுளுக்குரிய இடத்தை நாம் கொடுக்கும்போது, மற்றவை நமக்கு இயல்பாகவே கிடைத்துவிடுகிறது என்பதின் அர்த்தம் தான் இது.

கடவுள் நமது வாழ்வில் இருக்கிறபோது, நமக்குத் தேவையானது என்று ஒன்றும் இல்லை. நமது தேவைகள் அனைத்துமே நிறைவேற்றப்படுகிறது. கடவுளை நாடுகிறபோது, நமது வாழ்வு நிறைவு பெறுகிறது. நமது வாழ்வின் அர்த்தம் நமக்கு பிடிபடுகிறது. எனவே, நமது வாழ்வில் கடவுளைப்புகழ்ந்து பாடுவோம். போற்றுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

அழகான செபம்

செபம் என்றால் என்ன? எதற்காக செபிக்க வேண்டும்? கடவுளுக்கு நமது தேவை தெரியாதா? பின் எதற்காக செபிக்க வேண்டும்? எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்றால், கடவுளிடம் எதற்காக செபிக்க வேண்டும்? செபத்தினால் கடவுளின் திருவுளத்தை மாற்ற முடியுமா? நாம் செபத்தை எப்படி புரிந்துகொண்டிருக்கிறோம். கடவுளிடம் பல வேண்டுதல்களை கேட்கிறோம். கேட்ட எல்லாமே கிடைத்ததா? இவையெல்லாம் செபிக்கின்ற ஒவ்வொருவருக்கும் எழுகின்ற கேள்விகள். இதுதான் செபம் என்று யாரும் இலக்கணம் வகுக்க முடியாது. ஆனாலும்

1சாமுவேல் 1: 13… அன்னாவுக்கும், ஏலிக்கும் இடையேயான உரையாடல் செபம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு ஒரு அழகான பதிலைத்தருகிறது. ‘ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தை கொட்டுதல்’. இதுதான் செபம்.

அப்படியானால் நம் செபம் எப்படி இருக்க வேண்டும்? எப்போது செபித்தாலும், இறுதியில் இறைவா! எனது விருப்பப்படி அல்ல! உமது விருப்பப்படி ஆகட்டும் என்பதாக நமது செபம் அமைய வேண்டும். இதனுடைய பொருள்: கடவுள் நடத்த மாட்டார் என்பதல்ல. பிள்ளை அப்பத்தைக்கேட்டால், எந்தத் தகப்பனாவது கல்லைக்கொடுப்பாரா? நேர்மையற்ற நடுவரே நீதிகொடுத்தால், நேர்மையுள்ள கடவுள், நம்மை அன்புசெய்யக்கூடிய கடவுள், நமக்கு நீதி வழங்காமல் விட்டுவிடுவாரா? கடவுள் எப்போது செய்ய விரும்புகிறாரோ, அப்போது செய்யட்டும். நான் தொடர்ந்து, நம்பிக்கை தளராது மன்றாடிக்கொண்டிருப்பே இருப்பேன். இத்தகைய புரிதல் இருந்தால், நமது செப வாழ்வு சிறப்பானதாக இருக்கும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

சீஞா 48: 1-14
மத் 6: 7-15

“இவ்வாறு வேண்டுங்கள்”

இறைவேண்டுதல் நம் இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படையான ஒன்று. எனவே, நாள்தோறும் நாம் தனியாகவும். குடும்பமாகவும், சமூகமாகவும் வேண்டுதல் செய்வது நம் கடமையும், அழைப்புமாகும்.

நாம் எவ்வாறு வேண்டுவது என்பதை ஆண்டவர் இயேசுவே நமக்குக் கற்றுத் தந்தள்ளார். இரண்டு வகையில் அவர் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்:

  1. கர்த்தர் கற்பித்த செபம்: இயேசு கற்றுத் தந்த அருமையான மன்றாட்டு. இதனை திருச்சபை கடந்த 21 நூற்றாண்டுகளாக செபித்து வருகிறது. நாம் நாள்தோறும் இதனை செபிக்கிறோம். ஆனால், இதனை ஒரு வாடிக்கையான, எந்திரத்தனமாக செபமாக மாற்றிவிடாமல், பொருளுணர்ந்து மன்றாட நாம் முயற்சி எடுக்க வேண்டும்.
  1. மாதிரி செபம்: நாம் எப்படி செபிக்க வேண்டும் என்ற ஒரு மாதிரியை இயேசு நமக்கு உருவாக்கித் தந்துள்ளார். அதன்படி, இறைவனை நாம் ‘அப்பா, தந்தாய்’‘ என அழைத்து மன்றாட வேண்டும். அத்துடன், இறைவனின் திருப்பெயரைப் போற்றவேண்டும். இறைவனின் திருவுளம் மண்ணிலும், குறிப்பாக நமது வாழ்விலும் நிறைவேறவேண்டும் என மன்றாட வேண்டும். நமக்குத் தேவையானவற்றைக் கேட்டுப்பெற வேண்டும், நமது பாவங்களுக்காக மன்னிப்பு கோரவேண்டும்.

இந்த வகையில் வழிபாடு, அர்ப்பணம், புகழ்ச்சி, மன்றாட்டு, மன்னிப்பு என ஐந்து கூறுகளைக் கொண்டதாக நமது செபம் அமையவேண்டும் என இயேசு கற்றுத் தந்துள்ளார்.

மேற்கண்ட இரு வழிகளிலும் நாம் இறைவேண்டல் செய்வோமாக!

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குக் கற்றுத் தந்தவாறே நாங்கள் அன்றாடம் இறைத் தந்தையைப் போற்றவும், அவரிடம் எங்களை அர்ப்பணிக்கவும், எங்கள் தேவைகளை எடுத்துச்சொல்லவும், மன்னிப்புக் கோரவும் அருள்தாரும். செபிப்பதற்கான ஆர்வத்தை உமது தூய ஆவியாரால் எங்களுக்குத் தந்தருளும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா


-------------------------

மன்னிக்கும் வரம் வேண்டுவோம்

‘பாவம்’ என்கிற சொல்லுக்கு புதிய ஏற்பாட்டிலே ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஐந்து வார்த்தைகளின் பொருளை நாம் பார்ப்போம். 1.‘hamartia’ இதன் பொருள் இலக்கிலிருந்து தவறுவது. இலக்கை நோக்கி குறிவைத்து சுடும்போது, இலக்கு தவறுவது. அதாவது, நாம் அடைய வேண்டிய இலக்கிலிருந்து வழிதவறிச்செல்வது பாவம். 2. ‘parabasis’ இந்த வார்த்தையின் பொருள், வரைமுறையைக்கடந்து செல்வது. இதுதான் நமது வரைமுறை என்று தெரிந்திருந்தும், அதற்குமேல் செல்வது பாவம். 3. ‘paraptoma’ என்பது, தவறி விழுவது. சகதி நிறைந்த சாலையில் நடந்துசென்றுகொண்டிருக்கிறோம். ஆனால், நம்மையறியாமல் திடீரென்று வழுவி கீழே விழுந்துவிடுகிறோம். 4. ‘anomia’ என்பது, சட்டத்தை மீறுவது. நன்மை எது? தீமை எது? என்று நமக்கு நன்றாகத்தெரியும். இருந்தும், வேண்டுமென்றே தீமையைத்தேர்ந்தெடுப்பது. 5. ‘opheilema’ என்பது, கடமையில் தவறுவது. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கடமையில் இருந்து தவறுவது.

இன்றைய நற்செய்தியிலே இயேசு கற்றுத்தந்த செபத்திலே இடம்பெற்றிருக்கிற பாவம் (குற்றம்) என்கிற சொல்லுக்கு பொருளாக மேற்கண்ட ஐந்தாவது வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அதாவது கடமையில் தவறுவது (ழிhநடைநஅய). கடவுளுக்கும், நம் அயலாருக்கும் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஒரு தந்தையாக, தாயாக, சகோரனாக, சகோதரியாக, உறவினராக, ஒரு நாட்டின் குடிமகனாக, நமக்கென்று பல்வேறு கடமைகள் இருக்கிறது. இந்த உலகத்திலே இருக்கிற யாரும், நான் என்னுடைய கடமையை முழுமையாகச்செய்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. அத்தகைய கடமையில் இருந்து நான் தவறும்போது, இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். ஆனால், இறைவன் நம்முடைய குறைகளை, குற்றங்களை அறிந்தவராக, நம்மையெல்லாம் மன்னிக்கிறவராக இருக்கிறார். நாம் செய்த தவறுகளை கடவுள் மன்னிக்கத்தயாராக இருப்பதுபோல, நாமும் மற்றவர்கள் செய்த தவறுகளை மன்னிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் எதிர்பார்ப்பு. கடவுள் என்னை மன்னிக்க வேண்டும், எனதுநிலையை அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுகிற நான், மற்றவர்களையும் மன்னிக்க வேண்டும், மற்றவர்களின் நிலையையும் அறிந்துகொள்ள முன்வர வேண்டும்.

சிலுவையில் கடினமான வேதனைகளுக்கு நடுவிலும், தான் தண்டிக்கப்படுவது முறையே அல்ல என்று தெரிந்திருந்தும், தன்னுடைய இந்த அவலநிலைக்குக் காரணமானவர்களை, இயேசு முழுமனதோடு மன்னித்து, மன்னிப்பிற்கு இலக்கணமாகத்திகழ்ந்தார். இன்றைய காலக்கட்டத்தில் இந்த உலகத்திற்கு தேவை மன்னிக்கின்ற உள்ளங்கள். நாம் அனைவரும் இறைவன் நம்மை மன்னிப்பது போல, மற்றவர்களை மன்னிக்கும் வரம் வேண்டுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=================================

இயேசு கற்பித்த செபம் !

கர்த்தர் கற்பித்த செபத்தை நம் வாழ்வில் நூற்றுக்கணக்கான முறை செபித்திருப்போம். ஆனாலும், அதன் முழுப் பொருளையும் உணர்ந்து செபித்திருப்போமா என்பது கேள்விக்குறியே.

எத்தனை முறை ஆழ்ந்து சிந்தித்தாலும், புதுப் புது அர்த்தங்களைத் தரும் அருமையான செபம் இது.
இன்றைய நாளில் இந்த செபத்திலுள்ள இரண்டு முக்கிய கருத்துக்களை மட்டும் நம் சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் எடுத்துக்கொள்வோம்.

1. "விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக". இறைவனின் திருப்பெயர் தூயது. அத்திருப்பெயர் நாள்தோறும் போற்றப்பெறவேண்டும் என்று அந்தத் தந்தையிடமே வேண்டுகிறோம். எனவே, நாமும் இறைவனை நாள்தோறும் போற்றவேண்டும், " ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன். அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்" (திபா 34:1) என்னும் வரிகளுக்கேற்ப இறைவனின் புகழ் எப்போதும் நம் நாவில் ஒலிக்கட்டும்.

2. "உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக". இறைவனின் திருவுளமே எங்கும் எப்போதும் நடக்க வேண்டும். குறிப்பாக, நம்முடைய வாழ்வில் நிறைவேற வேண்டும். நம் வாழ்வில் என்ன நடந்தாலும் நன்மைக்கே என்று ஏற்று, நன்றி செலுத்துவது இந்த செபத்தின் சிறந்த செயலாக்கம்.

மன்றாடுவோம்: விண்ணகத் தந்தையை நோக்கி இறைவேண்டல் செய்ய எங்களுக்குக் கற்றுத் தந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். தந்தையை எப்போதும் போற்றிப் புகழவும், உம்மைப் போல தந்தையின் விருப்பத்தின்படி வாழவும் எங்களுக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

-------------------------------------

இணையதள உறவுகளே

இன்றைக்கு பலருக்கு செபம் செய்யச் சொன்னால் யாரோ எதற்கோ எழுதி அச்சடித்த புத்தகத்தைத் தேடுவார்கள். வேறு சிலர் ஏற்கெனவே பலமுறை பல இடங்களில் சொல்லி பழக்கமானதால், அடுக்கு மொழியில் படு வேகமாக முழங்கிவிடுவார்கள். இன்னும் சிலர், நீங்க உங்களுக்கு ஒரு செபத்தைச் சொல்லுங்கள் என்றால் பக்கத்தில் இருப்பவரை அழைத்து, எனக்காக ஒரு செபம் செய்யுங்கள் என்பார்கள். சிலர் ரொம்ப பெருந்தன்மையுடன், சாமி நீங்களே செபம் செய்யுங்கள் என்று முடித்துவிடுவர். மொத்தத்தில் செபம் செய்வது நம்மவர்களுக்கு தெறியாது, முடியாது.

செபம் செய்யும்போது அடுக்கு மொழிக்காக அலைய வேண்டாம். தாயும் பிள்ளையுமாக பேசுங்கள். அப்பா அம்மா என அழைத்து அன்போடு ஆண்டவனிடம் பேசுங்கள். அன்றைய தினம் நீங்கள் பட்ட இன்ப துன்பங்களை அவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். சந்தித்த நண்பர்கள்,பார்த்த காட்சிகள் அதைப்பற்றி பேசுங்கள். அந்த நேரங்களில் உங்களுக்கு தேவைப்படும் உதவியை இறைவனிடம் கேளுங்கள்.

இயேசு கற்றுத்தந்த செபத்தைச் சொல்லும்போதெல்லாம் உங்கள் உள்ளத்தில் எழும் உணர்வுகளை அந்த செபத்தின் இடையே இணைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் செபமாக இருக்கும். அந்த செபத்தை இறைவன் விரும்பி கேட்பார். நீங்கள் கேட்பது கிடைக்கும். இப்ப செபிக்கலாமே.

-ஜோசப் லீயோன்


-------------------------

 

வேண்டுதலும், சொற்களும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

“நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்றவேண்டாம். மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்கவேண்டாம்” என்னும் ஆண்டவரின் அருள்மொழிகளை இன்று சிந்திப்போம். செபம் என்றதும் சொற்களைத்தான் நாம் நினைக்கிறோம். ‘எனக்குச் செபிக்கத் தெரியாது’ என்று சொல்பவர்கள், சொற்களை மனதில் வைத்துத்தான் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் சொற்களற்ற செபமும் இருக்கிறது. செபம் என்பது முதன்முதலில் ஒரு மனநிலை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இறைவனைப் பற்றிய, நம்மைப் பற்றிய, பிறரைப் பற்றிய நமது பார்வை, நமது மனநிலையே ஒரு செபம்தான். மனநிலையை சொற்களின் வழியாக வெளிப்படுத்தும்போது, அதற்கு ஒரு வடிவம் கிடைக்கிறது. அவ்வளவுதான். நல்ல மனநிலை இல்லாத சொற்கள் செபமே அல்ல. லூக் 18ல் இயேசு கூறிய பரிசேயர், வரிதண்டுவோர் இருவரின் செபம் பற்றிய உவமை இதை நன்கு விளக்குகிறது. எனவே, சொற்களைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. மிகவும் அவசியமானது நல்ல மனநிலை, நல்ல கண்ணோட்டம். அந்த மனநிலையை ஆண்டவர் இயேசு கற்றுத்தந்த “பரலோகத்தில்” என்னும்  செபத்தில் கற்றுக்கொள்ளலாம். இறைவன் நமது தந்தை, அவருக்கே நாம் முதலிடம் கொடுக்க வேண்டும், பிறரை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும், நமது தேவைகளில் இறைவனைச் சார்ந்து வாழவேண்டும் என்பவைதாம் அந்த மனநிலைகள்.  

மன்றாடுவோம்: எப்படி செபிக்க வேண்டும் என்று கற்றுத்தந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது மாதிரியை நாங்களும் பின்பற்றி, அதிக சொற்களை அடுக்காமல், நல்ல மனநிலையை எங்களில் உருவாக்கி, அதனையே செபமாக மாற்ற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

“நீங்கள் இவ்வாறு செபிக்க வேண்டாம் ” !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு ஒரு நல்லாசிரியர். எனவேதான், எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற இரண்டையும் தன் சீடர்களுக்குத் தெளிவுபடுத்தினார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் எவ்வாறு செபிக்க வேண்டும், எவ்வாறு செபிக்கக் கூடாது என செபத்தின் இரு கோணங்களையும் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக, பிற இனத்தாரைப் போலப் பிதற்ற வேண்டாம். மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போகவேண்டாம் என எச்சரிக்கிறார். நம்மில் செப ஆர்வலர்கள் பலர் இருக்கிறோம். செப ஆர்வலர்களின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகிக்கொண்டே இருக்கிறது. அதேவேளையில், தவறான செப ஆர்வமும் பெருகுகின்றது. எனவே, இயேசுவின் இந்த எச்சரிக்கை சீரிய முறையில் எடுக்கப்பட வேண்டும். அதிக நேரம் செபிப்பதோ, அதிக சொற்களைக் கொண்டு செபிப்பதோ, இறைவனுக்கு ஏற்புடைய செபமாகிவிடும் என்று நாம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சொற்களின் பின்னேயுள்ள மனநிலையும், செபத்தைத் தொடர்ந்து வரும் வாழ்வும் நேர்மையானதாக இருக்க வேண்டும். அதுபோலவே, செபத்திற்காக அதிக நேரம் செலவிடுவது மட்டுமே அதனை ஏற்புடையதாக மாற்றிவிடாது. முரண்பாடற்ற வாழ்வும், செப மனநிலையும் அவசியம் என்று பரிசேயர்களை மேற்கோள் காட்டி எச்சரிக்கிறார் ஆண்டவர் இயேசு. அதனை ஏற்று, நமது செபத்தை, மனநிலையை ஆய்வு செய்வோம்.

மன்றாடுவோம்: செப வீரரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எவ்வாறு செபிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கற்றுத் தருவதற்காக நன்றி கூறுகிறோம். எங்கள் செபங்கள் தந்தை இறைவனுக்கு ஏற்புடைமையாகுமாறு எங்கள் மனதைத் தூய்மைப்படுத்தியருளும். நாங்கள் செபிப்பதற்கேற்றவாறு வாழ அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------

''இயேசு, 'நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்;
மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல்
கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்' என்றார்'' (மத்தேயு 6:7)

சிந்தனை
-- இறைவனை நோக்கி நாம் வேண்டுதல் எழுப்பும்போது நமக்கு என்ன தேவை என மட்டுமே அவரிடம் நாம் கூறுவதில்லை. கடவுள் நம் அன்புத் தந்தை என்பதால் நமக்கு எது தேவை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். நாம் மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டு போக வேண்டிய தேவையும் இல்லை; அவ்வாறு பிற இனத்தவரே செயல்படுவர் என இயேசு கூறுகிறார். சொற்களை உச்சரிப்பதால் நாம் கேட்பதைக் கடவுள் தருவார் என நினைப்போர் இறைவேண்டலை ஒருவித மந்திரவாதம் போலத்தான் பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் பார்வையில் இறைவேண்டல் என்பது அதுவல்ல. கடவுளின் பிரசன்னத்தில் நம்மை நிறுத்துவதே இறைவேண்டலின் அடிப்படையான பண்பு ஆகும். நாம் இறைவேண்டல் செய்வதற்கு முன்னரே கடவுளின் திருவருள் நம் உள்ளத்திலும் இதயத்திலும் நிறைந்துள்ளது. எனவே இறைவேண்டலின்போது நாம் அந்த இறைப்பிரசன்னத்தை உணர்வு முறையில் ஏற்கின்றோம்.

-- இறைவேண்டல் என்பது கடவுளுக்குத் தேவையானதல்ல, மாறாக மனிதருக்குத் தேவையானது. மனிதர் கடவுளின் உடனிருப்பைத் தங்கள் நினைவிலும் உணர்விலும் கொணரும்போது மனிதர் தம் உண்மையான நிலையை அறிகின்றார்கள். தம் வாழ்வும் செயலும் இறுதி நோக்கும் இறைவனையே தோற்றமும் நிறைவுமாகக் கொண்டிருப்பதை உணர்கிறார்கள். அப்போது மனிதர் மனிதத் தன்மையை மீண்டும் கண்டுகொள்கிறார்கள். இறைவேண்டல் என்பது இவ்வாறு நம்மை இறைவனோடு இணைக்கின்றது. அது நம் உள்ளத்திற்கு அமைதி கொணர்கின்றது. ஆக, இது வேண்டும் அது வேண்டும் என இறைவனிடம் நாம் கேட்பதுதான் இறைவேண்டல் என்றில்லை. இன்பத்திலும் துன்பத்திலும் நம்மோடு கடவுள் உள்ளார் எனவும், அவரில் நாம் நம்பிக்கை கொண்டால் ஒருநாளும் அவர் நம்மைக் கைவிடார் எனவும் நாம் உளமார ஏற்றுக் கொள்ளும் போது அங்கே இறைவேண்டல் தோன்றுகிறது. கடவுளைப் புகழ்வதற்குச் சொற்கள் தேவையில்லை, ஆனால் நம் வாழ்வு முறையே கடவுளின் புகழைப் பறைசாற்ற வேண்டும். அப்போது இறைவேண்டலே வாழ்வாக மாறும்.

மன்றாட்டு
இறைவா, எந்நாளும் உம் திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இயேசு, 'நீங்கள் இவ்வாறு இறைவனை வேண்டுங்கள்: 'விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!' என்றார்'' (மத்தேயு 6:9)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இறைவனிடம் நாம் எவ்வாறு வேண்டுதல் செய்வது என்பதை இயேசு நமக்குக் கற்றுத் தருகிறார். இயேசு கற்றுத் தந்த இறை வேண்டல் இரு வடிவங்களில் உள்ளது. மத்தேயு தருகின்ற பாடம் சிறிது நீண்டது (மத் 6:9-13); லூக்கா நற்செய்தியில் வருகின்ற பாடம் சிறிது குறுகியது (லூக் 11:2-4). இரு பாடங்களும் நாம் கடவுளை எவ்வாறு அணுகிச் சென்று அவருடைய உறவை நம்மில் ஆழப்படுத்த வேண்டும் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றன. இயேசு கடவுளை நாம் ''தந்தை'' என அழைக்க நமக்குச் சொல்லித் தருகிறார். கடவுளைத் ''தந்தை'' என அழைக்கின்ற பழக்கம் யூதரிடையே இருந்தது. இயேசு கடவுளைத் தந்தை என அழைப்பதை மத்தேயு நற்செய்தி 53 தடவைகள் குறித்துள்ளார். எனவே. கடவுளுக்கு இயேசு தருகின்ற ஒரு சிறப்புப் பெயர் ''தந்தை'' என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் நற்செய்தியில் கடவுள் இன்னும் பல உருவகங்களால் அறியப்படுகிறார். எடுத்துக்காட்டாக, அப்பம் சுடுகின்ற பெண்ணுக்குக் கடவுள் ஒப்பிடப்படுகிறார் (மத் 13:13-34). திருப்பாடல்கள் நூலில் (திபா 91:4) தாய்ப்பறவை தன் குஞ்சுகளைச் சிறகால் அரவணைப்பது கடவுளுக்கு உருவகமாகிறது. அந்த உருவகத்தை இயேசு தமக்குப் பொருத்தி உரைத்து, தாய்க்கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் கூட்டிச் சேர்த்து அரவணைத்துக் காப்பதுபோலத் தாம் தம் மக்களைக் கரிசனையோடு ஏற்பதைக் குறிப்பிடுகிறார். தொடக்ககாலத் திருச்சபை கடவுளைத் தந்தை என அழைத்தது அவர் வல்லமையோடு செயல்பட்டுத் தம் மக்களைக் காக்கிறார் என்பதை வலியுறுத்தவே. உரோமைப் பேரரசர்கள் தங்களை ''நாட்டுக்குத் தந்தை'' என அழைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் கடவுள் ஒருவரே நம் தந்தை என நமக்குக் காட்டுகிறார். இயேசு கற்றுத் தந்த இறை வேண்டல் தனி மனிதர் செய்கின்ற வேண்டுதல் மட்டுமல்ல, அது குழுவாக இணைந்து மக்கள் எழுப்புகின்ற வேண்டுதலாக உள்ளது. எனவே, கடவுளை நாம் ''எங்கள்'' தந்தையே என அழைக்கின்றோம். கடவுள் எல்லா மனிதருக்கும் ஊற்றானவர். அவர் நம் தந்தை என்பதால் நாம் அனைவரும் ஒருவர் ஒருவருக்கு உடன்பிறப்புகளாக உள்ளோம்.

-- இவ்வாறு கடவுளின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக நாம் இருப்பதால் நமக்கிடையே ஆழ்ந்த உறவு நிலவ வேண்டும். கடவுளைத் தந்தை என அழைக்கின்ற நாம் அவரோடு நமக்கிருக்கின்ற உறவின் வெளிப்பாடாக அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற நம்மையே கையளிக்கின்றோம். எனவே, இயேசு கற்றுத் தந்த இறைவேண்டலில் வருகின்ற முதல் மூன்று மன்றாட்டுகளும் கடவுளைப் புகழ்வனவாக உள்ளன. கடவுளின் ஆட்சி வருவதும், அவருடைய பெயர் புகழப்படுவதும், அவருடைய திருவுளம் நிறைவேறுவதும் ஒரே கருத்தையே வெளிப்படுத்துகின்றன (மத் 6:9-10). இவ்வாறு கடவுளைப் புகழ்கின்ற நாம் அவரிடமிருந்து நமக்குத் தேவையானவற்றைக் கேட்கின்றோம். கடவுள் நமக்குத் தேவையான உணவைத் தர வேண்டும்; கடவுள் நம் பாவங்களை மன்னிக்க வேண்டும்; கடவுள் நம்மைச் சோதனையில் விழவிடாமல் தீயோனின் கைகளிலிருந்து நம்மை மீட்க வேண்டும் - இந்த மன்றாட்டுக்களை நாம் கடவுளை நோக்கி எழுப்பும்போது அவர் நம்மை அன்போடு பராமரிக்கின்ற தந்தை என்பதை நாம் மீண்டும் எடுத்துரைக்கின்றோம்.

மன்றாட்டு
இறைவா, உம்மை எங்கள் அன்புத் தந்தை என நாங்கள் ஏற்று, உம் குடும்பமாக நாங்கள் இருப்பதை உணர்ந்து அன்போடு செயலாற்ற அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: 'விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!'' (மத்தேயு 6:9)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு ஓர் இறைவேண்டல் கற்றுத் தந்தார். இந்த இறைவேண்டலை மத்தேயுவும் (6:9-13) லூக்காவும் (11:2-4) இரு வேறுபட்ட வடிவங்களில் பதிவுசெய்துள்ளனர். ''கர்த்தர் கற்பித்த செபம்'' என்னும் பெயரில் இதை நாம் பல்லாண்டுகளாக வேண்டிவந்துள்ளோம். திருச்சபை மரபில் இந்த இறைவேண்டல் தனிச் சிறப்பு வாய்ந்தது. கடவுளை இயேசு இங்கே ''தந்தை'' என அழைக்கின்றார். இயேசுவின் தந்தை நமக்கும் தந்தை. எனவே நாம் ஒருவர் ஒருவருக்குச் சகோதரர், சகோதரிகள். இவ்வாறு உடன்பிறப்புக்களாக எல்லா மனிதரும் இருப்பதால் அவர்களிடையே உண்மையான குடும்ப அன்பு நிலவ வேண்டும் என்பது இந்த இறைவேண்டலில் அடங்கியுள்ள ஒரு முக்கிய கருத்து ஆகும். கடவுளின் பெயர் தூயது எனப் போற்றப்படுவது கடவுளை நாம் உண்மையாகவே அறிந்து அன்புசெய்யும்போது நிகழும். கடவுளின் உண்மையான இயல்பு அன்பு என்பதால் அந்த அன்பு எங்கே செயல்படுத்தப்படுகிறதோ அங்கே கடவுளின் புகழும் பறைசாற்றப்படும், அவருடைய பெயர் தூயது எனப் போற்றப்பெறும்.

-- கடவுளைப் போற்றுவோர் பிற மனிதரைத் தூற்றுவோராக இருத்தல் இயலாது. எனவே, இயேசு கற்பித்த இறைவேண்டலில் சகோதர அன்பும் மைய இடம் பெறுகிறது. கடவுளின் மன்னிப்பை நாம் கேட்கும்போது ஒருவர் ஒருவருடைய குற்றங்களை நாம் மன்னிப்பதாகக் கடவுளிடம் எடுத்துக் கூறுகிறோம். பிறருடைய குற்றங்களை மன்னிக்கும்போதுதான் நமக்கு மன்னிப்பின் மதிப்பு தெரியும். அப்போது கடவுள் நம்மை மன்னிப்பதால் நாம் பெறுகின்ற மன அமைதியையும் நாம் அனுபவித்து உணர்வோம். பிறரை மன்னிக்காவிட்டால் நாம் பெறுகின்ற இறைமன்னிப்பின் சிறப்பை நம்மால் உணர இயலாது.

மன்றாட்டு
இறைவா, உம் ஆட்சி இவ்வுலகில் வருக!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

" இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்..."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

செபமே செய்யாதவர்கள் 'ஆமா, இந்த செபத்தை சொல்ல முடியாதா? ஒரு நாளைக்கு அறை மணி நேரம் பூசை வைக்க முடியாதா? செபம் செய்வது என்ன பெரிய வேலையா?' என்று கேட்பார்கள். செபம் செய்வது என்பது அவ்வளவு எளிது அல்ல. மனப்பாடம் சொல்லுவதோ, செபப்புத்தகத்தை வாசிப்பதோ, செபம் அல்ல. இறைவன் மீதுள்ள நம்பிக்கையில் எழுச்சியுற்று, உடலை ஒருமுகப்படுத்தி, மனதை இறைவனை நோக்கி எழுப்பி, உள்ளமும் உடலும் ஒன்று சேர்ந்து இறைவனைப் போற்றிப் புகழ்வதும் நன்றி செலுத்துவதும், இறை உதவியை மன்றாடுவதும், பாவ மன்னிப்பைக் கேட்பதும்தான் செபம்.

" இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்" என்று இயேசு தம் சீடர்களுக்கு கற்றுக்கொடுத்ததிலிருந்தே, செபிப்பது எவ்வளவு கடினமான காரியம் என்பதை உணரமுடிகிறது. ஆகவே அக் கடினமான ஒன்றை இயேசுவே நமக்குக் கற்றுத்தருவதும், இயேசுவோடு கற்றுக்கொள்வதும் மிகவும் சரியான பயிற்சியாகும். இயேசு கற்றுத்தந்த இந்த செபத்தை ஒவ்வொரு வார்த்தையாக, ஆரஅமர தியானியுங்கள். இறை வல்லமையை உணர்வீர்கள். செபத்தின் ஆற்றலை அறிவீர்கள்.

இறைவனின் துணையின்றி, அவர் கற்றுத்தந்தாலன்றி, நம்மால் செபிக்க முடியாது. "தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டடவரன்றி வேறு எவரும் "இயேசுவே ஆண்டவர்" எனச் சொல்ல முடியாது." (1 கொரி 12 :3) அவர் கற்றுத்தந்தவாறு செபிப்போம். னிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:-- ஜோலி --: