முதல் வாசகம்

குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 17-25

யோயாதா இறந்தபின், அரசர் தம்மைப் பணிந்து நின்ற தலைவர்களின் சொற்களுக்கு இணங்கினார். அதனால் அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிபட்டனர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார். அவர்கள் தம்மிடம் மீண்டும் வருவதற்கு ஆண்டவர் அவர்களிடம் இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்களும் மக்களைக் கண்டித்தனர். ஆனால் அவர்கள் செவி கொடுக்கவில்லை. அப்போது கடவுளின் ஆவி குரு யோயாதாவின் மகன் செக்கரியாவின் மேல் இறங்கியது; அவர் மக்கள் முன் நின்று அவர்களை நோக்கி: ``இதோ, கடவுள் கூறுகிறார்: ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன்? அதனால் நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே! ஆண்டவரை நீங்கள் புறக்கணித்ததால், அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்'' என்று கூறினார். அவர்கள் அவருக்கு எதிராகச் சதி செய்து, அரசரின் ஆணைக்கேற்ப ஆண்டவரின் இல்லத்து மண்டபத்தில் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர். அவர் தந்தை யோயாதா காட்டிய பேரன்பை மறந்து, அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார். அவர் இறக்கும்போது, ``ஆண்டவர் இதைக் கண்டு பழிவாங்குவாராக!'' என்றார். அடுத்த ஆண்டு, சிரியாப் படையினர் அவருக்கு எதிராக வந்து, யூதாவிலும் எருசலேமிலும் புகுந்து மக்களின் எல்லாத் தலைவர்களையும் கொன்று அழித்தனர். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தமஸ்கு மன்னனிடம் அனுப்பி வைத்தனர். சிரியர் மிகச் சிறு படையுடன்தான் வந்தனர்; இருப்பினும், தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரை இஸ்ரயேலர் புறக்கணித்ததால், ஆண்டவர் அவர்களது பெரும் படையைச் சிரியரின் கையில் ஒப்புவித்தார். அவர்கள் யோவாசைத் தண்டித்தனர். கடும் காயமுற்ற நிலையில் யோவாசைச் சிரியர் விட்டுச் சென்றனர். அவருடைய அலுவலர்களோ அவருக்கு எதிராகச் சதி செய்து, குரு யோயாதாவின் மகனின் இரத்தப் பழியின் பொருட்டு அவரது படுக்கையிலேயே அவரைக் கொன்றனர். தாவீதின் நகரத்தில் அவர் சடலத்தை அடக்கம் செய்தனர்; ஆனால் அரசர்களின் கல்லறைகளில் அவரை அடக்கம் செய்யவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 89: 3-4. 28-29. 30-32. 33

பல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.

3 `நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொண்டேன்;
என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;
உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. -பல்லவி

28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்;
அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
29 அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்;
அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன். -பல்லவி

30 அவன் புதல்வர் என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ, என் நீதி நெறிகளின்படி நடக்காவிடிலோ,
31 என் விதிகளை மீறினாலோ, என் கட்டளைகளைக் கடைப் பிடிக்காவிடிலோ,
32 அவர்களது குற்றத்திற்காக அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்;
அவர்களின் தீச்செயலுக்காக அவர்களைக் கசையால் அடிப்பேன் -பல்லவி

33 ஆயினும், என் பேரன்பை தாவீதை விட்டு விலக்க மாட்டேன்;
என் வாக்குப் பிறழாமையினின்று வழுவ மாட்டேன். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராய் இருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வர் ஆகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

மத்தேயு 6:24-34

பொதுக்காலம் 11 வாரம் சனி

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதும் இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதும் இல்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப்போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச் செய்ய மாட்டாரா? ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றை எல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

2குறிப்பேடு 24: 17 – 25
வாழ்க்கை கற்றுத்தரும் பாடம்

அரசர் யோவாஸ் அடிப்படையில் ஒரு பலவீனமான மனிதன். யாருடைய எடுப்பார் கைப்பிள்ளையாகவும் இருந்தான். சரியான வழிகாட்டிகள் இருந்தால், சரியான பாதையில் சென்றான். தவறான வழிகாட்டுதல் இருந்தபோது, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தான்.  யோயாதா இருக்கும்வரை, அரசன் ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும்படி பார்த்துக்கொண்டார். அரசரும் யோயாதா கூறியபடி, படைகளின் ஆண்டவராம் இறைவனுக்கு உண்மையாக இருந்தார். ஆனால், அவருக்குப்பின், தம்மைப் பணிந்து நின்ற இஸ்ரயேலின் தலைவர்களுக்கு இணங்கி, தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும், சிலைகளையும் வழிபட ஆரம்பித்தான். மக்களையும் வழிபட வைத்தான். இது வாக்குறுதிகளை மனிதன் எப்படி மேலோட்டமாக கடவுளுக்கு வழங்குகிறான் என்பதன் வெளிப்பாடாக இருக்கிறது.

வாக்குறுதி என்பது ஒரு மனிதரின் அர்ப்பணத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். கொடுக்கிற வாக்குறுதிக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். அது வாழ்வியல் மதிப்பீடாக, விழுமியமாக இருக்க வேண்டும். அப்போதுதான், அதை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்கிற எண்ணம் ஒருவருக்குள் எழும். ஏனோதானோவென்ற மனநிலை கொண்டிருந்தால், நிச்சயம் கொடுத்த வாக்குறுதி மேலோட்டமானதாகத்தான் இருக்கும். இஸ்ரயேல் மக்கள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்தனர். அவர்களை அழைத்த இறைவன் தன்னுடைய வார்த்தைகளுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். ஆனால், அழைக்கப்பட்டவர்கள் அப்படி இல்லை என்கிற வேதனையான உண்மையை இந்த பகுதி நமக்குக் கற்றுத்தருகிறது.

வாழ்வில் நாம் செய்யும் தவறுகளிலிருந்து பாடங்களைக்கற்றுக் கொள்ள வேண்டும். தவறு செய்தபின் அதிலிருந்து மீண்டு எழுந்து, மீண்டும் அதே தவறை செய்யாமலிருக்க முயற்சி எடுக்க வேண்டும். அதுதான் உண்மையான வாழ்க்கை. கடவுளுக்கு பிரியமான வாழ்க்கை. அந்த வாழ்க்கையை வாழ இறைவனின் ஆசீர் வேண்டி மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

மீண்டு(ம்) எழுவோம்

இந்த உலகத்தில் கவலைகொள்ளாத மனிதர்கள் இல்லை. கவலைப்படுவதினால் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது, என அறியாதவர்களும் யாரும் இல்லை. ஆனாலும், ஒவ்வொருநாளும் கவலை என்கிற கரையான், நம்மை அரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில் இயேசுவின் வார்த்தைகள் மீண்டும் ஒருமுறை, நமது சோகமயமான வாழ்வை சிந்தித்துப் பார்த்து, மகிழ்ச்சியான வாழ்வு வாழ அழைப்புவிடுக்கிறது.

அடிப்படையில் கவலை கொள்வது என்பது, கடவுள் நம்பிக்கையற்ற தன்மையைக் குறிக்கிறது. நாம் கடவுளை நம்புகிறோம். அவர் நம்மை கரம்பிடித்து வழிநடத்துகிறார் என்று விசுவசிக்கிறோம். அந்த விசுவாசத்தைத்தான் நாம் வாழ்ந்து கொண்டு, அறிக்கையிடுகிறோம். ஆனாலும், பல வேளைகளில் கவலை, அந்த நம்பிக்கையை, காட்டாற்று வெள்ளம் போல, அடித்துச்சென்று விடுகிறது. அதனை எப்படி எதிர்கொள்வது? விடாமுயற்சி. மீண்டும், மீண்டும் நாம் விழுந்தாலும், மீண்டும், மீண்டும் நாம் எழ வேண்டும். நமது முயற்சியை எக்காரணத்தைக்கொண்டும், எந்த காலத்திலும் விட்டுவிடக்கூடாது.

இயேசு எவ்வாறு தனது கல்வாரி பயணத்தின்போது, கீழே விழுந்தாலும், மீண்டும், மீண்டும் எழுந்தாரோ, அதேபோல, நாமும் மீண்டும், மீண்டும் எழுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். நாம் எடுக்கும் முயற்சி தான், நம்மை கரைசேர்க்கும். வீழ்வது இயல்பு. ஆனால், வீறுகொண்டு எழுவதில் தான் நமது விசுவாசம் அடங்கியிருக்கிறது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

இறைவன் தான் நமது செல்வம்

”நீங்கள் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது” என்று சொல்லப்படுகிற வார்த்தைகளை நாம் சற்று சிந்திப்போம். அடிமைகளின் நிலை பழங்காலத்தில் எவ்வாறு இருந்தது? என்பது நமக்குத் தெரிந்தால், இதனுடைய பொருளை நம்மால் முழுமையா அறிந்து கொள்ள முடியும். பழங்காலத்தில் அடிமைகள் மனிதர்களாகக் கருதப்படவில்லை. வெறும் பொருளாகத்தான் கருதப்பட்டார்கள். சட்டத்தின் பார்வையில், அடிமைகள் அனைவருமே சாதாரண பொருட்கள். ஒரு அடிமையின் தலைவர், அவரை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். அவரை அடிக்கலாம், விற்கலாம், கொலை செய்யலாம். அதற்கு கேள்வியே கிடையாது. அவர்கள் தலைவருடைய உடைமை.

அதேபோல, அடிமைகளுக்கென்று நேரம் எதுவும் கிடையாது. குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்து முடித்தபின்னர், ஓய்வு என்றெல்லாம் கிடையாது. எந்த நேரத்திலும், எதையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். கடவுளுடனான நமது உறவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. கடவுள் தான் நமது தலைவர். நமக்கென்று உரிமை என்று ஒன்றும் கிடையாது. இந்த வாழ்வு அவர் நமக்குத்தந்தது. ”நான் என்ன செய்ய விரும்புகிறேன்?” என்று கேட்பதைவிட, கடவுள் நான், என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்?” என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வியாக இருக்க வேண்டும். கிறிஸ்தவர்களாக இருக்கும் நமக்கு, கடவுள்தான் அனைத்துமாக இருக்கிறார் என்கிற எண்ணம் வேண்டும்.

இந்த உலகத்தில், செல்வம் தான் நமது கடவுளாக இருக்கிறது. கடவுளை நாம் தேடினாலும், அது முழுமையான தேடலாக இல்லை. கடவுளைத்தேடுவதும் செல்வத்திற்காகத்தான் என்கிற நிலை, நாம் கண்கூடாக பார்க்கிற உண்மை. கடவுள் நமது செல்வமாக மாற வேண்டும். கடவுள் நமக்கு எல்லாமுமாக இருக்குமாறு, நமது வாழ்வை மாற்றி அமைப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கவலை வேண்டாம், நம்பிக்கையோடு வாழ்வோம்

வாழ்க்கையின் அநேக நிகழ்வுகளை நம்முடைய மனித அறிவினால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது. அதே போலத்தான் துன்பங்களும், சோதனைகளும். ஏன் எனக்கு மட்டும் இந்தச்சோதனை? பதில் பெற முடியாது. ஆனால், துன்பங்கள் வாழ்வின் அங்கம். துன்பங்கள் வாழ்வின் இயல்பு என்பதைப்புரிந்துகொண்டு விட்டால், வாழ்வை நாம் ஏற்றுக்கொண்டு விடுவோம். துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மத்தியில் நம்பிக்கையோடு வாழ்வதுதான் கிறிஸ்தவ வாழ்வு. அதுதான் கடவுள் நம்பிக்கை மிகுந்த வாழ்வு.

இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்திலே 40 ஆண்டுகள் தங்கியிருந்தார்கள். அப்போது எத்தனைபேர் இறந்திருப்பார்கள்? அவர்களுக்கு நினைப்பு கட்டாயம் வந்திருக்கும்? என்னடா இது? கடவுள் பாலும், தேனும் பொழிகின்ற கானான் தேசத்துக்கு நம்மை அழைத்துச்சொன்னதாக சொன்னார். ஆனால், நம்முடைய தலைமுறைகள் எல்லாம் இங்கேயே இறந்துகொண்டிருக்கிறார்களே? என்று ஆனால், அந்த தருணத்திலும், எத்தனையோ கடவுள்கள் இருந்தபோதிலும் தாங்கள் நம்பிய யாவே என்கிற ஒரே கடவுள் மீது விசுவாசம் கொண்டு, நம்பிக்கையோடு வாழ்ந்ததுதான், இ;ஸ்ரயேல் மக்களின் கடவுள் அனுபவம்.

ஏன் வாழ்க்கையில் துன்பம், பிரச்சனைகள்? என்ற கேள்விகள் கேட்பதற்கு பதிலாக, துன்பங்கள், பிரச்சனைகள் வாழ்வில் இயல்பானது என்று ஏற்றுக்கொண்டுவிட்டு, அதனை எப்படி எதிர்கொள்வது? என்ற வழிகளை ஆராய்ந்து பார்ப்பதுதான் நமது வாழ்வுக்கு உகந்ததாக இருக்க முடியும். இதைத்தான் இன்றைய நற்செய்தி நமக்க சொல்கிறது. மத்தேயு 6: 27 ல் பார்க்கிறோம்: “கவலைப்படுவதால் உங்களில் எவர்தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்டமுடியும்?” கவலைகளையும், கண்ணீரையும் விட்டுவிட்டு கடவுள் மட்டில் நம்பிக்கையோடு வாழ்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

2 குறி 24: 17-25
மத் 6: 24-34

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்!

“நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்”“ என்னும் அருள்நாதரின் சொற்களை இன்று சிந்திப்போம்.

மீண்டும் நம்மை மலைக்க வைக்கிறது இயேசுவின் உளவியல் ஞானம். ஏன் நாளைக்காகக் கவலைப்படவேண்டும்? ஒவ்வொரு நாளும் இறைவன் புதிய கொடைகளை, புதிய விடைகளை, புதிய வழிகளை அருள்கின்றார். இதை நாம் நம்பவேண்டும். இறைவனின் பேரன்பில் நம்பிக்கை கொள்ளவேண்டும்.

கவலைப்படுவது என்பதே இறைநம்பிக்கையின்மையின் ஒரு வெளிப்பாடுதானே? ஒவ்வொரு நாளும் புதிய சிக்கல்களைக் கொண்டுவருவது போல, ஒவ்வொரு நாளும் புதிய தீர்வுகளையும் கொண்டுவரும். இது இறைவனின் திட்டம், அவரது பேரன்பின் வெளிப்பாடு. எனவே, நாளையைப் பற்றிய கவலைகளைத் தூரத் தூக்கி எறிந்துவிட்டு, இன்றைய நாளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். இன்றைய சிக்கல்களுக்கு வழி தேடுவோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்குத் தேவையான அன்றாட உணவை நாள்தோறும் தருவதுபோல, அன்றாடச் சிக்கல்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய தீர்வுகளைத் தருவதற்காகவும் நன்றி கூறுகிறோம். எங்கள் கவலைகளைப் போக்கி, ஆறுதல் தருவீராக. உமது தூய ஆவியால் எங்களை நிரப்புவீராக, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகம் ஏராளமான வாழ்வியல் கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. அவற்றில் #8220;நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழிபிறக்கும்” என்னும் வரிகளை மட்டும் இன்று நம் மனதில் ஏற்றுவோம். இறைவன் நமது வானகத் தந்தை. எனவே, நமது தேவைகள் அனைத்தையும் அவர் அறிவார், அவற்றை அவரது திருவுளத்திற்கேற்ப நிறைவேற்றித் தருவார். எனவே, பறவைகளைப் போல, மலர்களைப் போல கவலைப்படாமல் வாழ்வோம். பறவைகளை உண்பிக்கும் இறைவன், மலர்களை அழகுபடுத்தும் தந்தை நம்மையும் பராமரிப்பார். எனவே, நாளைய தினத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். இன்றைய நாளை இனிய நாளாகக் கொண்டாடுவோம். மகிழ்ச்சி அடைவோம். நம்மில் பலர் நாளைய தினத்தைப் பற்றிய கவலையில், இன்றைய நாளை அனுபவிக்கத் தவறி விடுகிறோம். இதோ, இந்த நாள், இந்த நேரம் இறைவனின் இனிமையான பராமரிப்பை உணர்வோம். நன்றி கூறுவோம். நாளைய கவலைகளைப் போக்குகின்ற வழியை இறைவனே நமக்குத் தருவார், இன்றல்ல: நாளை. எனவே, இந்த நேரத்தை மனநிறைவுடன் கழிப்போம்.

மன்றாடுவோம்: காலத்தை வென்ற காவிய நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இந்த நாளுக்காக, இந்த நேரத்துக்காக நன்றி. இன்றைய நாளில் நீர் எனக்குச் செய்துள்ள அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகிறேன். நாளைய தேவைகளையும், கவலைகளையும் நீரே பொறுப்பேற்றுக்கொள்வீர் என்ற நம்பிக்கையில், இறைவா,  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

சரியான நம்பிக்கை கொள்வோம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இப் பகுதிகளில் தவிர்க்க வேண்டிய மூன்றைச் சொல்லுகிறார்.

1. மண்ணுலகில் செல்வம் சேர்த்து வைக்க வேண்டாம். 2.கவலை வேண்டாம்.3. தீர்ப்பிட வேண்டாம் என்பன.

2.கவலை வேண்டாம்: உண்பதும் உடுத்துவதும் மனிதனின் அடிப்படைத் தேவை. அதைப்பற்றிக் கூட கவலைப்படக் கூடாது என்பது இயேசுவின்போதனை.ஆனால் இன்று நாம் எதைப்பற்றியெல்லாமோ கவலைப்படுகிறோம். பொழுது விடிந்தால் சலிப்பு; பொழுது மங்கினாலும் சலிப்பு.மழை பெய்தாலும் குறை சொல்லுகிறோம், வெயிலடித்தாலும் குறை சொல்லுகிறோம். ஏழையும் கவலைப்படுகிறான்; பணக்காரனும் கவலைப்படுகிறான். எனவே இயேசு சொல்லுவதை ஆழ்ந்து சிந்தித்தால் எதற்காகக் கவலைப்பட வேண்டும் என்பது புலப்படும்.

நாம் கவலைப்பட வேண்டியது 'அது' இல்லை 'இது' இல்லை என்பதற்காக அல்ல. மாறாக கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் மட்டுமே கவலைப்பட வேண்டும். முடியாத ஒன்றுக்காக நாம் பல சமயங்களில் கவலைப்படுகிறோம்.காசு பணமோ, கடின உழைப்போ இன்றி நம்மால் எதுவும் முடியாது. இந்த நம்மால் முடியாதவைபற்றிக் கவலைப்படுகிறோம். ஆனால் இலவசமாகக், கொடையாகக், கொடுக்கப்படும் கடவுளின் பராமரிப்பின் மீது நம்பிக்கை இல்லாததுபற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. இந்த இறை நம்பிக்கை குறித்துக் கவலைப்பட்டலால் எல்லாம் குறைவின்றி கிடைக்கும்.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்