முதல் வாசகம்

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 17: 5-8,13-15,18

அந்நாள்களில் அசீரியா மன்னன், நாடு முழுவதன் மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான். ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான். ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர். மேலும் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும், இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின் படியும் நடந்து வந்தனர். ஆயினும் ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: �உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள். ஆனால் அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்; ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்து, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்; �வேற்றினத் தாரைப் பின்பற்றலாகாது� என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர். எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளிவிட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 60: 1. 2-3. 10-12

பல்லவி: எங்களுக்குத் துணை செய்யும் ஆண்டவரே, எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!

1 கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டீர்;
எங்களை நொறுக்கிவிட்டீர்;
எங்கள்மீது சீற்றம் கொண்டீர்;
இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும். -பல்லவி

2 நிலத்தை நீர் அதிரச் செய்தீர்; அதில் பிளவு உண்டாகச் செய்தீர்;
அதன் வெடிப்புகளைச் சீர்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது;
3 உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்;
மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். -பல்லவி

10 கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு விட்டீர் அன்றோ!
கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ!
11 எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்;
மனிதர் தரும் உதவியோ வீண்.
12 கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்;
அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது. அல்லேலூயா.

மத்தேயு 7:1-5

பொதுக்காலம் 12 வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், `உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக் கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

2அரசர்கள் 17: 5 – 8, 13 – 15, 18
இறைவனுக்கு கீழ்ப்படிவோம்

வடக்கு மகாணத்தில் உள்ள, பத்து இனங்களும் வீழ்ந்து போகிற நிகழ்வுகளை இன்றைய வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. நெபாவின் மகனான் யெரோபாவின் தலைமையில் தொடங்கிய இந்த வடக்கு மகாண அரசு, 265 ஆண்டுகள் நீடித்தது. இந்த அதிகாரத்தின் முதல் ஆறு இறைவார்த்தைகள், இதன் அழிவைப்பற்றி நமக்கு விளக்குகிறது. அதற்கு பிறகான 25 வரை உள்ள வசனங்கள், அழிவுக்கான காரணத்தையும், கடவுள் அந்த அழிவைக் கொண்டு வந்ததை நியாயப்படுத்துவதையும், மற்றவர்களுக்கான எச்சரிக்கையாகவும் இது தருகிறது. அவர்களை அடக்கி ஆண்ட அரசுகளைப் பற்றி மற்ற இறைவார்த்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது.

இந்த பகுதியில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம், இறைவனுடைய வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கவில்லை என்றால், அழிவு நிச்சயம் என்பதுதான். இறைவன் இந்த மனித இனத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவராகவே இருந்திருக்கிறார். முதல் மனிதன் ஆதாமைப் படைத்தபோதும், வெள்ளத்திலிருந்து நோவாவைக்காப்பாற்றியபோதும், தொடர்ந்து இஸ்ரயேல் மக்களை தன் சொந்த இனமாக தேர்ந்தெடுத்தபோதும், அவர் அன்பு நிறைந்தவராக, அவர்களை தன் சொந்த பிள்ளைகளாக கருதுகிறவராகவே இருந்திருக்கிறார். ஆனால், மனிதன் எப்போதும் கடவுளுக்கு கீழ்ப்படியாமலேயே இருந்திருக்கிறான். அதன்பொருட்டு பல அழிவுகளைச் சந்தித்தபோதிலும், அவன் திருந்தியபாடில்லை என்பதைத்தான் இந்த பகுதி நமக்கு விளக்கிக் கூறுகிறது.

இன்றைக்கு நம்மை வழிநடத்துகின்ற பெரியவர்களுக்கு, அனுபவம் உள்ள நம்முடைய பெற்றோர்களுக்கு, பிள்ளைகளாயிருக்கிற நாம் செவிசாய்ப்பதில்லை. அதன்பொருட்டு பல துன்பங்களை நாம் சந்தித்தாலும், அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்கிறோம். நம்முடைய வாழ்வில் இறைவனுக்கும், நம்மை வழிநடத்துகிறவர்களுக்கும் நாம் செவிசாய்க்க வேண்டும். அதுதான், நம் வாழ்க்கையை வளப்படுத்தும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

நிறைவோடு வாழ குறைகளைக் களைவோம்

கற்றுக்கொள்வதை வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற ஆர்வத்தைவிட, கற்றுக்கொள்வதை பல இடங்களில் சொல்லி பாராட்டு பெற வேண்டும் என்பதுதான், கற்றுக்கொள்கிறவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. பலவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம். பல கருத்துக்கள் நமது மனதுக்கு இதமாக இருக்கிறது. கருத்துக்களின் பொருளை நாம் வியந்து பார்க்கிறோம். ஆனால், அதனை வாழ்வாக்குவதற்கு எடுக்கிற முயற்சியைவிட, அதனை வெறுமனே பயன்படுத்த மட்டுமே நினைக்கிறோம். உலகத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் பலவற்றிற்கு இதுதான் காரணம்.

இன்றைய நற்செய்தி வாசகம், எப்படி நாம் கற்றுக்கொள்வதை வாழ்ந்தால், சிறப்பாக மகிழ்ச்சியாக நாமும் வாழ முடியும், மற்றவர்களையும் வாழ வைக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இன்றைக்கு வெறுமனே மற்றவர்களை குறைகூருவதும், தாங்கள் தான் நேர்மையாளர்கள் என்று காட்டிக்கொள்வதும், இத்தகைய பகட்டால் வரக்கூடிய நோயாக இருக்கிறது. ஒருவேளை, நாம் கற்றுக்கொள்வதை நமது வாழ்வில் வாழாவிட்டாலும், வாழ முயற்சியாவது எடுத்தால், நிச்சயம் நாம் மற்றவர்களைப் பற்றியோ, அவர்களின் குறைகளைப் பற்றியோ தவறாக பேச மாட்டோம். நமது நிறைவில் நாம் எப்போதும் குறைகாண மாட்டோம். நமது குறைவில் தான், மற்றவர்களிடம் குறைகளைக் காண்போம். நாம் எந்தளவுக்கு நிறைவோடு இருக்கிறோம் என்பதை, நாம் எந்தளவுக்கு மற்றவர்களிடத்தில் குறைகாண்கிறோம் என்பதில் இருக்கிறது.

நிறைவோடு வாழ்வதற்கு முயற்சி எடுப்போம். அடுத்தவரில் உள்ள குறைகளைக் காணாது, நம்மிடத்தில் உள்ள குறைகளை நாம் சீர்தூக்கிப் பார்ப்போம். அதுதான் நமது வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும். எப்போதுமே நம்மை நாம், மற்றவர்களைப் பார்க்க விரும்புகிற தராசில் வைக்கிறபோது, நிச்சயம் நமது வாழ்க்கை அடுத்த தளத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மகிழ்ச்சியும், அன்பும்

எதை விதைக்கிறோமோ, அதையே அறுவடை செய்கிறோம், என்ற சொல்லாடல் நம் மத்தியில் பேசப்படுவதுண்டு. செயல்பாட்டை விட, அடுத்தவா் செய்கிறவற்றைப்பற்றிப் பேசுவதே நம்மில் அதிகமாகக் காணப்படுகிறது. இன்றைய உலகின் பிரச்சனைகளுக்கு அதிகமாகச் சொல்லப்படுவது, மற்றவர்களைப்பற்றிய தேவையில்லாத பேச்சு. வீண் விமர்சனங்களும், அடுத்தவரைப்பற்றிய தரக்குறைவான எண்ணங்களும் தான், நமது வாழ்வை சீர்குலைக்கக்கூடியவையாக, நம்மை கடவுள் முன்னிலையில் குற்றவாளியாக மாற்றக்கூடியவையாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியும் இதைத்தான் வலியுறுத்திக்கூறுகிறது.

நாம் அனைவரும் நம்மையும், நமது வாழ்வையும் விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டுமேயன்றி, மற்றவர்களை விமர்சனத்திற்கு உள்ளாக்கக்கூடாது. கடவுள் கொடுத்த இந்த வாழ்வை எப்படி வாழ வேண்டும்? என்பதைத்ப்பற்றித்தான் கவலைப்பட வேண்டுமே தவிர, மற்றவர்களை விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பது, நமது எண்ணமாக இருக்கக்கூடாது. அடுத்தவர்களை ஏளனமாகப்பார்ப்பதும், தங்களை உயர்வாகவும் எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த இயேசுவின் போதனை, நமக்கும் மிகப்பெரிய சாட்டையடி. நாமும் இதே மனநிலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பிறரை அன்பு செய்வதும், அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்வதும் தான், நமது நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்களை காயப்படுத்துவதும், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பதும் நமது எண்ணமாக இருக்கக்கூடாது. அப்படி வாழ்கிறபோது, மகிழ்ச்சியும், அன்பும் நமது உள்ளத்தில் என்றும் கொண்டிருக்கும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

எண்ணங்கள் உயர்வாக இருக்கட்டும்

இயேசு மலைப்பொழிவில் இந்தப்பகுதியைப் பற்றி கூறும்போது, யூதர்களின் எண்ணங்களையும், சிந்தனைகளையும் தொடர்புபடுத்திக்கூறினார் என்றால் அது மிகையாகாது. யூதப்போதகர்கள் எப்போதுமே மற்றவர்களை தீர்ப்பிடுவதை கடுமையாகக் கண்டித்து வந்தனர். அவர்கள் விண்ணுலக வாழ்வு பெற சிறந்த பண்புகள் என்று ஆறுவகை நல்ல பண்புகளை வகுத்திருந்தனர். அவை முறையே: கல்வி, நோயாளிகளை சந்திப்பது, விருந்தோம்பல், பக்தி முயற்சி, சட்டம் பற்றி குழந்தைகளுக்கு கல்வி, மற்றவர்களைப்பற்றி உயர்வான எண்ணம் கொண்டிருத்தல். இதில் சொல்லப்படும் ஆறாவது பண்பிற்கும் இந்த நற்செய்தி வாசகத்திற்கும் உள்ள தொடர்பு நமக்கு நன்றாக விளங்கும்.

மற்றவர்களைப்பற்றி உயர்வாக எண்ணுகின்ற பண்பு செயல்படுத்துவதற்கு எளிது போல தோன்றினாலும், வரலாற்றுப்பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால், இந்த எண்ணம் தவறு என்பது புலனாகும். ஏனென்றால் வரலாற்றில் பல நல்ல மனிதர்களை இந்த சமுதாயம் மோசமானவர்கள் என்று தீர்ப்பிட்டு, புறந்தள்ளியிருக்கிறது, அவர்களை அவமானப்படுத்தியிருக்கிறது. மற்றவர்களைப்பற்றி தவறாகப் பேசுகிறவர்கள், பிறரைத்தீர்ப்பிடுகிறவர்கள் யாருமே இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு, இந்த உலகம் மலிந்து போய் இருக்கிறது. ஏதாவது ஒரு சூழ்நிலையில், நம் அன்றாட வாழ்வில் மற்றவர்களை நாம் தீர்ப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். மற்றவர்களின் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் விளைவித்துக்கொண்டு தான் இருக்கிறோம். மற்றவர்களை தரக்குறைவாக அடுத்தவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையிலிருந்து நம்முடைய வாழ்வை சீர்தூக்கிப்பார்க்க இந்த நற்செய்திப்பகுதி நமக்கு அழைப்பு விடுக்கிறது.

மற்றவர்களைப்பற்றி உயர்வாக எண்ண நமக்கு மனம் இல்லையென்றாலும், மற்றவர்களை தாழ்வாகவோ, தவறாகவோ எண்ண நமக்கு உரிமை கிடையாது என்பதை நாம் உணர வேண்டும். அது கடவுளுக்கு எதிராக செய்யப்படும் குற்றம். குறை சொல்லாமல் இருக்கக்கூடிய பண்பை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். தீர்ப்பிடாத எண்ணமுள்ள மனம் பெற இறைவனிடம் மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

2 அர 17: 5-8, 13-15, 18
மத் 7: 1-5
தீர்ப்பு அளிக்காதீர்கள்!

“பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்”“ என்னும் ஆண்டவரின் அருள்வாக்கை இன்று சிந்திப்போம்.

பிறருடைய தவறைச் சுட்டிக்காட்டி, தீர்ப்பளிக்கும் உரிமை ஒரு சிலருக்குத்தான் உண்டு. அவற்றையும் இறைவனே தந்துள்ளார்:

  1. நியாய மன்றத்தில் தீர்ப்புக் கூறும் உரிமையை நடுவருக்கு இறைவன் தந்திருக்கிறார். எனவே, நடுவர்கள் தீர்ப்பு வழங்கலாம், நல்ல தீர்ப்பாகச்  சொல்ல வேண்டும்.
  1. இறைவனின் சார்பாக பிறரின் குற்றங்களைச் சுட்டிக்காட்டும் உரிமை இறைவாக்கினர்களுக்கும் உண்டு. அது ஓர் அழைத்தல். அழைக்கப்பட்டோர் அக்கடமையை ஆற்றவேண்டும்.

இவர்களைத் தவிர வேறு எவருக்கும் தீர்ப்பிட அதிகாரம் இல்லை. எனவே, யாரையும் நாம் தீர்ப்பிட வேண்டாம். நமது குறைகளையும், குற்றங்களையும் மனதில் கொண்டு, அமைதி காப்போம். தீர்ப்பிடும் உரிமை படைத்த இறைவன் ஒருவரே பிறருக்குத் தீர்ப்பு வழங்கட்டும். நம்மீது இரக்கம் கொள்ளட்டும்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் தகுதியின்மையை ஏற்றுக்கொண்டு, அமைதி காக்கும் நேர்மையை எங்களுக்குத்  தாரும். ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

தீர்ப்பு அளிக்காதீர்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

பிறரைத் தீர்ப்பிடுவது என்பது எளிதாக நம் அனைவருக்கும் வந்துவிடுகிறது. #8220;நீ செய்வது தவறு”, #8220;அவன் செய்வதற்கு அவன் அனுபவிக்கிறான்” என்றெல்லாம் நாம் அடிக்கடி பேசுகிறோம். பிறரைத் தீர்ப்பிடுகிறோம். பிறரைத் தீர்ப்பிடுவதற்கு நமக்கு எளிதாக இருப்பது ஏன் என்பதற்கு உளவியலாளர்கள் இரண்டு காரணங்களைத் தருகிறார்கள்: 1. அடிப்படையில் இந்த உலகம் குறைகள் நிறைந்ததாக இருக்கிறது. உலகில் நிறைகளைவிடக் குறைகளே அதிகமாக இருப்பதினால், பிறரது குறைகளே நமது கண்ணுக்கும் மனதுக்கும் முதலில் தென்படுகின்றன. 2. அதைவிட மேலாக, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற குறைகளையே, நாம் பிறர்மீது ஏற்றிப் பார்க்கிறோம். அதனை (pசழதநஉவழைn) என்கிறார்கள். இதன் காரணமாகவே, நாம் பிறரைத் தீர்ப்பிடும் பழக்கத்தில் எளிதில் விழுந்துவிடுகிறோம் என்கின்றனர் இவர்கள். இருப்பினும், இறையியல் பார்வையில், ஆன்மீகப் பார்வையில் தீர்ப்பிடுவது என்பது தவறு, நாம் அத்தவறிலிருந்து விடுபட வேண்டும். அப்போதுதான், நாமும் தீர்ப்புக்குள்ளாக மாட்டோம் என்னும் உறுதியை இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக நாம் மேற்கொள்வோம்.

மன்றாடுவோம்: தீர்ப்பிடாதீர்கள் என்று எடுத்துச் சொன்ன இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பிறரைத் தீர்ப்பிடும் கண்களால் நோக்காமல், உம்மைப் போல, பரிவின் கண்களால் நோக்கும் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

''இயேசு, 'உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின்
கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?' என்றார்'' (மத்தேயு 7:3)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- துரும்புக்கும் தூணுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை நாம் அறிவோம். ஒன்று மிகச் சிறிது, மற்றது மிகப் பெரிது. கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை நாம் ''துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான்'' எனக் கூறுவதுண்டு. இயேசு துரும்பையும் தூணையும் ஒப்பிட்டுப் பேசுவது மனிதரிடையே நிலவ வேண்டிய உறவுகளை நாம் எவ்வாறு வளர்க்கலாம் என்பதை ஓர் உருவகம் வழியாகச் சுட்டிக்காட்ட வழியாகிறது. நம்மைவிடவும் பிறரிடம் அதிக செல்வம் இருக்கலாம்; பிறர் நம்மைவிட அதிகமான புகழ் பெறலாம். அப்போது நம் உள்ளத்தில் பொறாமை எழுகிறது. இவ்வாறு பொறாமைப்படுவது தவறு என இயேசு கற்பிக்கிறார். இது மட்டுமல்ல, பிறரிடம் குறைகாண்பதையும் நாம் தவிர்க்க வேண்டும். பிறர் தவறு செய்தால் நாம் கண்களை மூடிக்கொண்டு, அத்தவற்றைக் காணாததுபோல நடக்க வேண்டும் என இயேசு கூறவில்லை (காண்க: மத் 7:3-5). மாறாக, பிறரிடம் குறை காண வேண்டும் என்னும் ஒரே நோக்கத்திற்காக அவர்களுடைய சொல்லையும் செயலையும் பூதக் கண்ணாடி கொண்டு ஆய்கின்ற மன நிலையை இயேசு கண்டிக்கிறார். தவறு செய்யாத மனிதர் இல்லை. எனவே, பிறரிடம் தவறு உண்டு எனத் தீர்மானிப்பதற்கு முன்னால் தன்னிடம் இருக்கின்ற தவற்றினை அடையாளம் காண்பதே முறை. பிறரிடம் நாம் காண்கின்ற குறை ஒரு துரும்புக்கு நிகர் என்றால் நம் குறை ஒரு பெரிய தூணுக்கு அல்லது ''மரக்கட்டைக்கு'' நிகராக இருக்கக் கூடும்.

-- நம்மிடம் இருக்கின்ற குறைகளை நாம் களைந்துவிடுவது முக்கியம். அப்போது பிறரிடம் குறையிருந்தாலும் அக்குறையை அவர்கள் களைவதற்கு நாம் துணைசெய்ய இயலும். இது பிறருடைய குற்றத்தை மிகைப்படுத்தும் நோக்கத்தோடோ, அல்லது அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்தோடோ நிகழ்கின்ற செயலாக இராது. மாறாக, பிறர்மேல் நாம் உண்மையான அன்பு கொண்டிருந்தால் அவர்கள் தங்கள் குறைகளைக் களைந்து இன்னும் சிறப்பான மனிதராக உயர்ந்திட நாம் அவர்களுக்குத் துணையாக வர முடியும். ''மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்'' என இயேசு கூறிய உண்மை இங்கே வெளிப்படுவதைக் காண்கிறோம் (மாற் 6:14). பிறர் நலனில் நாம் அக்கறை கொண்டால் நம் நலனில் கடவுளும் அக்கறை கொள்வார்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் குற்றங்களை நீர் மன்னிப்பதுபோல நாங்களும் பிறர் குற்றங்களை மன்னிக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

புதிய அளவுகோல்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நீதிபதியாக இருப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். தீர்ப்பிடுவதற்கு ஒரு கண்ணியம் இருக்க வேண்டும்.பட்டமும் பணமும் பதவியும் அல்ல அந்த தகுதி. "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்"(யோவா 8:7) என்பது சாதாரணமாக எதிர்பார்க்கும் தகுதி. இயேசுவின் போதனையின் இப்பகுதி, தீர்ப்பு அளிக்க வேண்டாம் என்பதைவிட, தீர்ப்பு அளிப்பதற்கானத் தகுதியை முன் நிறுத்துகிறது.கடவுளின் முன்னிலையில், பிறருக்குத் தீர்ப்பு அளிக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா என்று சிந்திப்பது நலம்.

நம் கண்ணில் மரக்கட்டை உள்ளதா? நம் முதுகில் அழுக்கு உள்ளதா? நம் மனதில் பாவச் சுவடுகள் படிந்துள்ளதா? இவை இருக்குமாயின் எழுதும் தீர்ப்பு ஒருதலைப்பட்சமாக இருக்கும். நமது தகுதியற்ற நிலையை நாம் உணர்ந்து, அதன் பின் நாம் வழங்குகின்ற தீர்ப்பு, தீர்ப்பாக அமையாது; மாறாக அடுத்தவரை ஆழமாகப் புறிந்துகொள்ளும் மனித நேயமும், தெய்வீகமும் இழையோடுவதால், அந்த தீர்ப்பு ஒரு தண்டனையாக, சுமையாக அமையாமல் சுவையாக, புதிய தொடக்கமாக அமைந்துவிடும்.

இத்தகைய ஒரு செயல்முறையை நாம் அயலானுக்குக் கடைபிடித்தால், அயலானும் ஆண்டவனும் நம்மிடமும் அதே பேரன்போடு நடந்து கொள்வார்கள். நாம் எந்த அளவையால் அளக்கிறோமோ அதே அளவை நமக்கும் தயாராக இருக்கும்.அயலானும் ஆண்டவனும் நாம் அளந்த அதே அளவையால் நமக்கும் அளப்பார்கள். எனவே நம்மைத் தகுதி உள்ளவராக்கி,மனிதாபிமானத்துடன், இறை உறவில் அயலானை அணுகுவோம். நம்மையும் அவ்வாறே அணுகுவார்கள். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்