முதல் வாசகம்
எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17 ம-அ, ச-வ

சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை அவர் பின்வருமாறு மன்றாடினார். ``என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்; ஏனெனில், நான் என் உயிரைப் பணயம் வைத்துள்ளேன். ஆண்டவரே, நீர் எல்லா இனங்களிலிருந்தும் இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்தீர் என்றும் அவர்களின் மூதாதையர் அனைவரிடையிலிருந்தும் எங்கள் முன்னோரை என்றென்றைக்கும் உம் உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்தீர் என்றும், நீர் அவர்களுக்கு வாக்களித்ததையெல்லாம் நிறைவேற்றினீர் என்றும், நான் பிறந்த நாள்தொட்டு என் குலத்தாரும் குடும்பத்தாரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆண்டவரே, எங்களை நினைவுகூரும்; எங்கள் துன்ப வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும். தெய்வங்களுக்கெல்லாம் மன்னரே, அரசுகள் அனைத்துக்கும் ஆண்டவரே, எனக்குத் துணிவைத் தாரும். சிங்கத்துக்குமுன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்; எங்களுக்கு எதிராகப் போரிடுபவனை மன்னர் வெறுக்கச் செய்யும்; இதனால் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியச் செய்யும். ஆண்டவரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்; ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2. 2,3. 7-8

பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்;
தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி

2bஉ உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;
ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

7உ உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்;
ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு;
உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.

மத்தேயு 7:7-12

தவக்காலம் -முதல் வாரம் வியாழன்


நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 7-12

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா! ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

மத்தேயு 7: 7 – 12
கேட்டல்

கேளுங்க! கேளுங்க! கேட்டுக்கிட்டு இருங்க! என்பது சூரிய FM விளம்பர நிகழ்வு. இது ஒரு விளம்பர தூதாக இருக்கிறது. நம்முடைய சிந்தனை வளர வேண்டுமென்றால், இதனை கேட்பதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் நம்முடைய ஆன்மீக வாழ்வு செழிக்க வேண்டுமென்றால் இறைவனிடம் கேட்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால் கேட்பதற்கு இல்லை என்ற பதில் இறைவனிடம் மட்டுமே கிடையாது. அதனால் தான் ஒரு இசுலாமிய பாடல் வரிகள் “இறைவனிடம் கையேந்துங்கள். அவர் இல்லை என்று சொல்வதில்லை”.

ஆனால் அத்தகைய கேட்டல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற புரிதலைத் தான் இன்றைய வாசகங்கள் கொடுக்கின்றன. முதல் வாசகத்தில் எஸ்தர் அரசி கூறுகின்றார்: கடவுளின் திருவுளம் என்ன என்பதனை புரிந்து கொள்ளக்கூடிய ஞானத்தினை கேட்க வேண்டும் என்று கூறுகிறார். ஏனென்றால் இயேசுவின் புதுமைகளை கண்டு இவர் நமக்காக எல்லாவற்றையும் செய்தார் என்று பாமர மக்கள் எண்ணினர். தாங்கள் விரும்புகிற எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள். இதற்கான புரிதலாக தான் இயேசு, பிறர் உங்களுக்கு செய்ய வேண்டும் என்று விரும்புகிறவற்றை நீங்களும் செய்யுங்கள் என்ற புதிய விதியைக் கொடுக்கின்றார்.

நம்முடைய கேட்கின்ற பண்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது? என்னுடைய விருப்பத்தில் கேட்கிறேனா? அல்லது கடவுளின் விருப்பம் அறிந்து பெற்றுக் கொள்ள ஆவல்படுகிறேனா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=======================

மத் 7 : 7- 12
நிறைவை நிறைவானவரிடம் கேட்க, தேட, தட்ட

இத்தவக்காலத்தில் செபத்தின் முக்கியத்துவத்தையும், செபிப்பதின் விளைவுகளையும், நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதையும் பல கோணங்களில் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தியும் செபத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தையும், ஆன்மீகத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறது. ‘கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்’ என்றவுடன் நாம் நமது தேவைகளை மளிகைக்கடை பட்டியல் போல எடுத்துவிட ஆரம்பித்து விடுகிறோம். அது பல நேரங்களில் எங்கு? எப்படி? தொடங்குகிறது என்றே தெரியாது. குறிப்பாக இன்று பலபேர் அருட்கொடை இயக்கத்தில் செபிப்பது போலவே செபிப்பது செபம் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் ஆண்டவர் நாம் கேட்கின்ற பொருளாதாரக் காரியங்களை விரும்பிக் கேட்பாரோ என்றால் அது கேள்விக் குறியே! காரணம் அவர் செல்வந்தர்களின் மனநிலையை அடியோடு வெறுக்கிறார். மிகுதியான உடைமைகளை வைத்திருப்பவர்களை அடித்து விரட்டுகிறார். இன்னுமொரு இடத்தில் “நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது, நீங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்” (மத் 6 : 6) அங்கே கதவை அடைக்கச் சொன்னவர், இங்கே திறக்கப்படும் என்று சொல்கிறார். அப்படியிருக்க இது என்ன செபம்? இது எதைக் குறிக்கிறது?

1. கேளுங்கள் கொடுக்கப்படும் - நாம் எதைக்கேட்க வேண்டுமென்றால் எதையும் இறைவனின் திருவுளம் என ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்தைக் கேட்க வேண்டும். இதுவே ஆன்மீக முயற்சியாகவும், உண்மையான சீடத்துவமாகவும் இருக்க முடியும். நமக்குத் தவக்காலம் தருகின்ற பார்வை இதுவே.

2. தேடுங்கள் கண்டடைவீர்கள் - உங்களை உங்களுக்குள்ளேயே தேடுங்கள். நான் யார்? நான் ஏன் இறைவனின் சாயல்? எனக்கும் அவருக்குமான தொடர்பு என்ன? அவரை நோக்கியே ஏன் எனது மனம் ஈர்கின்றது? அவரில் நிறைவடைவதே என் முழு நிறைவு - இது ஏன்? இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கு விடையை உங்களுக்குள் தேடும்போது இத்தவக்காலத்தில் கண்டடைவீர்கள்.

3. தட்டுங்கள் திறக்கப்படும் - எப்படி உள்ளறைக்குச் செல்லச் சொன்னாரோ, இன்று அந்த உள்ளறையின் கதவினைத் தட்டிக் கொண்டேயிரு, உனக்குள் நீ சென்று கொண்டேயிருப்பாய். உள்ளே செல்லச் செல்ல தடைகள் அனைத்தும் நீங்கும், உனக்குள் ஓர் உள்ளொளியைக் கண்டுபிடிப்பாய். அதுவே உலகின் ஒளி. அது உன்னை இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்லும்.

திருத்தொண்டர் வளன் அரசு

===============================

திருப்பாடல் 138: 1 – 2a, 2b – 3, 7 – 8
”ஆண்டவரே! நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்”

கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்று நம்புகிறோம். அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு மத்தியில் திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகள் நமக்கு ஒரு சில கேள்விகளை எழுப்புகிறது. நாம் மன்றாடுகிற நாளில் மட்டும் தான், கடவுள் நமக்கு உதவி செய்வாரா? நம்மை வழிநடத்துவாரா? நாம் மன்றாடவில்லை என்றால், அவர் நமக்கு துணைநிற்க மாட்டாரா? என்ற கேள்விகள் நம் உள்ளத்தை அரிக்கிறது. இதனை எப்படி புரிந்து கொள்வது?

கடவுள் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தார் என்கிற வரிகள், கடவுள் நமக்கு வழங்கியிருக்கிற சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. கடவுள் இந்த உலகத்தைப் படைத்து, நமக்கு வாழ்வையும் கொடுத்திருக்கிறார். எல்லாவற்றையும் கொடுத்த கடவுள், அவரே நம்மை இயக்கினால், நாம் பெற்றுக்கொண்ட வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே, அவர் நமக்கு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறார். நன்மை எது? தீமை எது? என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். தொடக்கநூலில் நமது முதல் பெற்றோரிடம், இந்த உலகத்தை ஒப்படைத்தபோது, கடவுள் இதைத்தான் சொல்கிறார். ”தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே”. இங்கே கடவுள் எதைச் செய்ய வேண்டும்? எதைச்செய்யக் கூடாது? என்று தெளிவாகச் சொல்கிறார். ஆனாலும், மனிதன் தன்னுடைய சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறான். அதற்கான பலனையும் அனுபவிக்கிறான். கடவுள் நமக்குச் சுதந்திரத்தைக் கொடுத்து, நாம் தவறு செய்வதை வேடிக்கைப் பார்ப்பவரல்லர். நாம் உதவி என்று கேட்கிறபோது, அதனையும் நமக்குச் செய்வதற்கு காத்திருக்கிறார். இது கடவுள் எந்த அளவுக்கு நம்மை அன்பு செய்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

நமது வாழ்க்கையில் எப்போதும், கடவுளின் உதவியை நாட வேண்டும். கடவுள் நமக்கு உதவி செய்வதற்காக காத்திருக்கிறார். நாம் திக்கற்று நிற்கிறபோது, கடவுள் நிச்சயம் நமக்கு வழிகாட்டுதலாக இருப்பார். நம்மை எல்லாவித சோதனைகளிலுமிருந்து விடுவிப்பார்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

கடவுளின் அன்பு

கடவுளிடத்தில் நாம் செபிக்கிறபோது, எப்படிப்பட்ட கடவுளிடம் நாம் செபிக்கிறோம்? என்பது பற்றிய தெளிவு நமக்கு இருக்க வேண்டும்? அந்த தெளிவு நம்மிடத்தில் இருக்கிறபோதுதான், நமது செபம் இன்னும் வலிமையானதாக மாற்றம் பெற முடியும். நான் முணுமுணுக்கிற கடவுளிடம் செபிக்கிறேனா? அல்லது கேட்டால் தான் கொடுப்பேன் என்கிற தற்பெருமை உள்ள கடவுளிடம் செபிக்கிறேனா? அல்லது இரக்கமும், கனிவும் உள்ள கடவுளிடம் செபிக்கிறேனா? இதைப்பற்றிய தெளிவு நமக்கு முதலில் இருக்க வேண்டும். நாம் எப்படிப்பட்ட கடவுளிடம் செபிக்கிறோம்? என்பதை இயேசுவின் வார்த்தைகள் நமக்கு பதிலாக அமைகிறது.

நாம் எப்படிப்பட்ட கடவுளிடம் செபிக்கிறோம்? என்பதற்கு இயேசு மிக எளிதான பதிலைத் தருகிறார். தந்தை – மகன் உறவு தான், கடவுளுக்கும் நமக்கும் இடையேயான உறவு. ஒரு மகன் தந்தையிடத்தில் கேட்பதுதான் நாம் கடவுளிடம் கேட்பது. ஒரு மகன் தந்தையிடம் எப்படி கேட்கிறான்? கேட்க வேண்டுமா? கேட்டால் தான் தந்தை கொடுப்பாரா? கேட்காமலே கொடுக்கிறவர் என்றால் நாம் எதற்காக கேட்க வேண்டும்? இப்படி பல கேள்விகள் நமக்குள்ளாக தோன்றினாலும், தந்தைக்கும், மகனுக்கும் உள்ள உறவின் ஆழத்தை நாம் உணர்ந்திருந்தால், அந்த அனுபவம் தான், நாம் மேலே கேட்ட கேள்விகளுக்கான பதிலாக இருக்கிறது.

இந்த உலகத்தில் இருக்கிற பெற்றோரின் அன்பு நம்மை கடவுளின் அன்பையும், அவரது அனுபவத்தையும் சொல்வதாக அமைய வேண்டும். நாமும் நமது பெற்றோரை அன்பு செய்ய வேண்டும். பெற்றோரை அவர்களது வயதான காலத்தில், சுமைகளாகக் கருதக்கூடிய நிலை மாற வேண்டும். அவர்களை அன்பு செய்வதும், பேணிக்காப்பதும், இறைவனுக்கே செய்கிற தொண்டாக நாம் உணர வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

கடவுளிடம் நமது செபம்

கடவுளிடத்திலே செபிக்கிற ஒவ்வொருவருமே தாங்கள் எப்படிப்பட்ட கடவுளிடம் செபிக்கிறோம் என்கிற கேள்வி நிச்சயம் அவர்கள் மனதில் இருக்கும். தாங்கள் செபிக்கிற கடவுள், தங்களது செபங்களைக் கேட்பாரா? கோபப்படுவாரா? தங்கள் மீது இரக்கம்காட்டுவாரா?  அல்லது தங்களது செபங்களை ஒரு பொருட்டாக எடுக்காமல் விட்டுவிடுவாரா? நாம் செபிக்கிற கடவுள் எப்படிப்பட்டவர்? என்பதற்கு இயேசு இன்றைய நற்செய்தியில் விளக்கம் தருகிறார்.

இயேசு செபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பிண்ணனியிலிருந்து வருகிறவர். யூதச்சமுதாயம் செபத்தை தங்கள் வாழ்வின் மையமாகக்கொண்டிருந்தனர். அவர்கள் செபத்தை மிகவும் விரும்பினர். காதிற்கு அருகில் இருக்கும் வாய் போல, படைப்பின் அருகாமையில் கடவுள் இருக்கிறார் என்கிற யூதப்போதகரின் சொல்லாடல், செபத்தின் மாண்பைப் பறைசாற்றுகிறது. இயேசுவின் வாதம் மிகவும் எளிமையானது. ”எந்த தந்தையாவது மகனின் வேண்டுகோளை மறுப்பாரா?” என்பதுதான் அவருடைய வாதம். கடவுள் தன்னை நோக்கி மன்றாடும் மக்களின் வேண்டுகோளை நிராகரிக்க மாட்டார். அவர்களது வேண்டுகோளுக்கு கனிவோடு செவிசாய்ப்பார். அவர்களுக்குத் தேவையானதை தகுந்த நேரத்தில் கொடுத்து ஆசீர்வதிப்பார்.

கடவுள் மட்டில் நாம் விசுவாசம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். கடவுள் நிச்சயம் நமது வேண்டுகோளை ஏற்பார் என்கிற நம்பிக்கை, கடவுளிடமிருந்து நிறைவான அருளை நமக்குத்தரும். செபத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களாக அதிக நேரத்தை கடவுளோடு செலவழிப்போம். 

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறை ஆற்றலைத்தருவது செபம்

செபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யூதர்கள். அனைத்திலும் முதன்மையானது செபம் என்பது அவர்களின் எண்ணம். செபத்தைப்பற்றி யூதர்களுக்கு ஏதாவது கவலை இருந்தததென்றால், அது நாள்முழுவதும் நம்மால் செபிக்க முடியவில்லையே என்பதுதான். அந்த அளவுக்கு செபத்திற்கு வாழ்வில் முக்கிய இடத்தை கொடுத்திருந்தார்கள். யூதர்களுடைய வாழ்வே செபத்தை மையப்படுத்தியதாகத்தான் இருந்தது. இத்தகைய பின்புலத்தில் இயேசு, செபிப்பதால் கிடைக்கும் பலன்களை நமக்குச்சொல்கிறார். இறைவன் நம் செபத்தைக் கேட்கிறாரா? நாம் கேட்பதை இறைவன் நமக்குத்தருவாரா? இறைவன் எப்படிப்பட்டவர்? போன்ற கேள்விகளுக்கு பதிலையும் இன்றைய நற்செய்தியிலே தருகிறார்.

செபம் இறைவனோடு பேசுவதற்கு மட்டுமல்ல, இறை ஆற்றலை நிறைய பெற்றுக்கொள்வதற்கான பலமான ஆயுதம் என்பதை இயேசு ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இயேசு இங்கே தருகிற எடுத்துக்காட்டு தந்தைக்கும், மகனுக்கும் உள்ள உறவு. அதாவது, ஒரு மகன் ஊதாரித்தனமாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். வீட்டில் யார் பேச்சையும் கேட்காமல், தான்தோன்றித்தனமாக திரிகிறான். தவறுகளுக்கு மேல் தவறு செய்கிறான். குற்றங்கள் பல செய்கிறான். அப்படி ஒருவருடைய மகன் இருப்பதால், அந்த தந்தை அவனை வெறுத்து விடுவாரா? ஒருவேளை அந்த மகனுக்கு அடிபட்டு விட்டது, அல்லது அவன் தவறுசெய்தது தெரிந்து காவல்துறை அழைத்துச்சென்று விட்டது, அல்லது நோயுற்று இருக்கிறான். அவனுடைய தந்தை சும்மா விட்டுவிடுவாரா? எப்படி இருந்தாலும் தன் மகன் என்ற பாசம் அவரை உடனடியாக அவனுக்கு உதவ உந்தித்தள்ளாதா? எப்படி இருந்தாலும் தன் இரத்தம் என்கிற அந்த உணர்வு அவனைக்காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யாமல் இருக்குமா? சாதாரண மனிதர்களுக்கே இந்த உணர்வு என்றால், படைப்பின் சிகரமான மனிதனை தன் முழுமையான அன்பில், தனது சாயலில் படைத்த இறைவனுக்கு நம்மீது எவ்வளவு அன்பிருக்கும்? நாம் கேட்பதை தராமல் இருப்பாரா? நம்மை தேவையில் இருக்கவிடுவாரா? என்பதுதான் இயேசுவின் கேள்வி. இறைவன் நிச்சயம் நம்முடைய தேவைகளை அறிந்தவராக இருக்கிறார். நாம் கேட்பதையெல்லாம் தந்தால் அவர் நல்ல தந்தையாக இருக்க முடியாது. மாறாக, நமக்குத் தேவையானதை தருவார். அதுவும் நாம் விரும்புகிறபடியெல்லாம் அல்ல, அவரது திருவுளத்தின்படி. ஏனென்றால் அவர் முக்காலமும் அறிந்தவர். நம்முடைய தேவைகளை நிறைவாகத் தெரி;ந்தவர். எனவே, கடவுள் நிச்சயம் நமக்குத் தேவையானதை, அவருடைய வழியில் தருவார் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.

இறைவன் நம்மைப் படைத்தவர் மட்டுமல்ல, பராமரித்து பாதுகாக்கிறவரும் கூட. நமக்கு பார்த்து பார்த்து நல்லது செய்கிறவர். நம்முடைய தேவை அறிந்து நமக்கு உதவி செய்கிறவர். இறைவனை நம்பிக்கையோடு அணுகுவதுதான் கடவுள் அவருடைய பிள்ளைகளாகிய நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அவரின் பிள்ளைகளாகிற நம் அனைவரின் கடமையாகும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

==============================

இறைவனைத் தேடுங்கள் !

"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்" என்னும் இயேசுவின் அருள்வாக்கை இன்று தியானிப்போம். இத்தவக்காலத்தில் நாம் அனைத்திற்கும் மேலாக இறைவனைத் தேடும் மனநிலையை வளர்ப்போம்.

நாம் இந்த உலகில் பலவற்றைத் தேடியலைகிறோம். பணம், பதவி, புகழ், உலக இன்பங்கள், பொழுதுபோக்கு... எனப் பலவற்றைத் தேடுகிறோம். அவற்றைக் கண்டடைந்தாலும்கூட அவற்றில் நாம் நிறைவு காணமுடிவதில்லை. ஆனால், இறைவனைத் தேடிக் கண்டடைந்தாலோ, நாம் அனைத்தையுமே பெற்றுக்கொள்வோம்.

எனவே, இத்தவக்காலத்தில், அதிகாலை நேரத்தில் இறைவார்த்தையில், நற்கருணையில் இயேசுவைத் தேடுவோம். பகலில் நமது பணியில், வேலைகளின் பரபரப்பில், அயலாருக்கு உதவும் வேளைகளில் ஆண்டவரைத் தேடுவோம். இரவில் அமைதியின் வேளையில் ஆண்டவரைத் தேடுவோம். கண்டுகொள்வோம்.

மன்றாடுவோம்: "தேடுங்கள், கண்டடைவீர்கள்" என்று திருவுளம் பற்றிய இறைவா, உம்மைப் போற்றுகிறோம். ஞானம் என்னும் கொடையை எங்களுக்கு நிறைவாகத் தந்தருளும். இதனால் நாங்கள் பொதுநன்மைக்காக வல்ல செயல்கள் புரியும் வலிமையைப் பெற்றுக்கொள்வோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

-------------------------------

 

இணையதள உறவுகளே

இறைவனிடம் கேளுங்கள். அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. உங்களை கையேந்தச் சொல்லவில்லையே. தாயும் பிள்ளையும் என்ற உறவில் கேட்கச் சொல்கிறார். நம் இயேசு நமக்கு அந்நியன் அல்ல. நம் தந்தை. எங்கள் தந்தையே என்றுதானே அழைக்கச் சொன்னார். ஆகவே செபிக்கும்போது உறிமையோடு உறவோடு கேளுங்கள். பிச்சைக்காரனாக கெஞ்ச வேண்டாம்.

கொடுப்பதில் அவர் தந்தை. நம்மீது அக்கறை உள்ளவர். சரியானதை சரியான வேளையில் போதுமான அளவும் அதற்கு மேலாகவும் கொடுப்பார். வேறுபாடு காட்டமாட்டார். விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ஆண்டவர் முன் அமர்ந்து செபியுங்கள். நீங்கள் கேட்டது என்ன? கிடைத்தது என்ன? கிடைக்காமல் போனது என்ன? நீங்கள் கேட்காமல் கிடைத்தது என்ன? கிடைத்தது எல்லாம் உங்கள் முயற்சியால் கிடைத்தது என்று நினைத்தால் கிடைக்காமல் போவதற்குக் காரணமும் நீங்களாகத்தான் இருக்கும். எனவே நிறைய கிடைக்கவேண்டும், பெரிதாக கிடைக்கவேண்டும் என்றால் இறைவனிடம் கேட்க தயங்காதீர்கள். கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.

-ஜோசப் லீயோன்

-------------------------

“தேடுங்கள் ” ...!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என்னும் ஆண்டவர் இயேசுவின் அழைப்பில், தேடுங்கள் என்னும் சொல்லை மட்டும் இன்றைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். தேடுங்கள், கண்டடைவீர்கள் என்கிறார் ஆண்டவர். தமது ஆட்டைத் தொலைத்த ஆயர், பிற ஆடுகளை விட்டுவிட்டு, தொலைந்துபோன ஒரே ஒரு ஆட்டைத் தேடி அலைந்தார், கண்டுபிடித்தார். தனது ஒரு நாணயத்தைத் தொலைத்த பெண் மற்ற வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு, தொலைந்த நாணயத்தைத் தேடிக் கண்டுபிடித்தார். விடாமுயற்சியோடு தேடுபவர்கள் தாங்கள் தேடுவதை நிச்சயம் கண்டடைவார்கள் என்பது ஆண்டவர் இயேசுவின் அமுத மொழி.

நாம் எதைத் தேடுகிறோம்? எப்படித் தேடுகிறோம்? பொன்னை, பொருளை, இவ்வுலக இன்பங்களைத் தேடாமல், இறையாட்சியை, இறையாட்சியின் இலக்குகளான நீதி, அன்பு, சமத்துவத்தைத் தேடுகிறோமா? நிலைவாழ்வின் ஊற்றான இறைவனைத் தேடுகிறோமா? இத்தவக்காலத்தில் இறைவனைத் தேட முன்வருவோம். இரண்டாவதாக, தேடுவோர் அனைத்தையும் விட்டுவிட்டு தேடுவதில் மட்டுமே கவனம் கொள்;ளவேண்டும். எனவே, இத்தவக்காலத்தில் தொலைக்காட்சி, உலக இன்பங்கள் இவற்றில் அதிக நாட்டம் கொள்ளாமல், இறைவனுக்குரியவற்றில் மட்டுமே கவனம் கொண்டால், நம் தேடுதல் வெற்றியில் முடியும்.

மன்றாடுவோம்: தேடுங்கள், கண்டடைவீர்கள் என்று மொழிந்த ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் உலக இன்பங்களைத் தேடாமல், உம்மையே தேடும் அருளைத் தாரும். அனைத்தையும் விட்டுவிட்டு, முழு முனைப்போடு உம்மை மட்டுமே தேடும் அருளைத் தருவீராக். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

------------------

''இயேசு, 'கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்;
தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்' என்றார்'' (மத்தேயு 7:7)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மனிதர் தம் தேவைகளை நிறைவுசெய்ய எவ்வளவுதான் முயன்றாலும் அதில் முழுமையாக வெற்றிபெறுவதில்லை. மனித வாழ்வின் நிறைவு அந்த வாழ்வையும் தாண்டிச் செல்கின்ற ஒன்றாகவே இருக்கிறது. அந்த நிறைவை நமக்குக் கடவுள் ஒருவரே கொடையாக வழங்க முடியும். அதே நேரத்தில் நம் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவுசெய்யவும் நாம் கடவுளின் உதவியை நாட வேண்டும் என்றும், அவ்வாறு நாம் கடவுளை நாடிச் செல்லும்போது அவர் நமக்கு உதவுவார் என்றும் இயேசு கற்பிக்கிறார். நாம் கேட்பதையெல்லாம் கடவுள் தருவார் என்பதற்குப் பதிலாக நமக்குத் தேவை எது என கடவுள் கருதுகிறாரோ அதை நமக்குத் தருவார் என்பது பொருத்தமாகும். வீட்டில் பிள்ளைகள் தாம் விரும்பும் பொருள்களைத் தம் பெற்றோரிடம் கேட்டுப் பெறுவார்கள். இயேசுவுக்கும் அந்த வாழ்வு அனுபவம் இருந்தது. எனவே அவர் நம் வானகத் தந்தையாகிய கடவுளை, நாம் அவருடைய பிள்ளைகள் என்னும் முறையில் அணுகிச் சென்று நம் தேவைகளை அவரிடம் எடுத்துக் கூறினால் நமக்கு எது நன்மையோ அதைக் கடவுள் செய்யாமல் இருக்கமாட்டார் என்று கற்பித்தார்.

-- கடவுளின் பிள்ளைகளாக நாம் இயேசுவின் வழியாகப் புதுப்பிறப்பு அடைந்துள்ளோம். எனவே உரிமையோடு நாம் கடவுளை நம் தந்தை என அழைக்கமுடியும், அவ்வாறே அழைக்கவும் வேண்டும். அப்போது தந்தைக்குரிய பாசத்தோடு கடவுள் நம் தேவைகளை நிறைவுசெய்வார். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான்: நாம் அவருடைய அன்புப் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்றால் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப நம் வாழ்வை அமைத்திட வேண்டும்; சகோதர அன்போடு எல்லா மனிதரையும் அணைத்துப் பேணிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம்மைத் தேடிக் கண்டுபிடிக்கும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"இன்னும் மிகுதியாகரூhநடடip;.."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இன்னும் வேண்டும். இதற்கு மேலும் வேண்டும். வேண்டும் வேண்டும் என்பதற்கு அளவே இ;ல்லை. ஆனால், இப்படி கேட்கும்போதெல்லாம் கொடுப்பதற்கு யார் இருக்கிறார்கள். பெற்ற தாயும் உற்ற மனைவியும் கூட கேட்கும்போதெல்லாம் கேட்டதை எல்லாம் தர மாட்டார்கள். இயேசு, உன் இனிய தெய்வம், நீ கேட்பதற்கும் மேலாக 'இன்னும் அதிகமாக' தருகிறார்.

"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!"(மத் 7:7) "நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, உங்கள் மேல் ததும்பி வழியுமாறு ஆசி வழங்கிறேனா இல்லையா எனப் பாருங்கள."(மலாக்கி 3:10) "அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்".(லூக் 6:38) "மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்"(எசாயா 55 :7)

நம் இறைவனின் பெருந்தன்மையை இங்கு காண்கிறோம். எதையும் அளவு பார்த்து, ஆள் பார்த்து கொடுப்பவர் அல்ல. மாறாக உன் நம்பிக்கை, ஆண்டவன் மீதுள்ள அன்பு இதை மட்டுமே அவர் எதிர்பார்ப்பது. அன்போடு ஆர்வத்தோடு கேட்போம். உறவோடு உறிமையோடு தட்டுவோம். நம்பிக்கையோடு மனஉறுதியோடு தேடுவோம். இன்னும் மிகுதியாக கிடைக்கும். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:-- ஜோலி --: