முதல் வாசகம

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 19: 9-11,14-21, 31-35, 36

அந்நாள்களில் அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப் படை திரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று, எசேக்கி யாவிடம் மீண்டும் தூதரை அனுப்பி, �யூதா அரசன் எசேக்கியாவிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: �எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்பட மாட்டாது� என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்து விடாதே. இதோ! அசீரிய மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ மட்டும் தப்பிவிட முடியுமா?'' எசேக்கியா தூதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின் கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார். மேலும் எசேக்கியா ஆண்டவரை மன்றாடிக் கூறியது: � கெருபுகள் மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! ஆண்டவரே! நீர் செவிசாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து என்னை நோக்கியருளும். தூதனுப்பி என்றுமுள கடவுளைப் பழித்துரைக்கும் சனகெரிபின் சொற்களைக் கேட்பீராக! ஆண்டவரே! அசீரிய மன்னர்கள் வேற்றினத்தாரையும், அவர்கள் நாடுகளையும் அழித்தது உண்மைதான்! அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர். ஏனெனில் அவை உண்மைக் கடவுளல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதன் செய்தவையே; எனவே அவற்றை அழிக்க முடிந்தது. எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும். அப்பொழுது ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச் சொன்னது: �இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னன் சனகெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டேன். அவனுக்கு எதிராக ஆண்டவர் கூறிய வார்த்தை இதுவே: கன்னிமகள் சீயோன் உன்னை இகழ்கிறாள்; உன்னைப் பார்த்து நகைக்கிறாள்; மகள் எருசலேம் பின் நின்று தலையசைக்கிறாள். ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்து வெளியேறுவர். உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று புறப்படுவர். படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்! ஆதலால் ஆண்டவர் அசீரிய மன்னனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்: இந்நகருக்குள் அவன் நுழைய மாட்டான்; அதில் அம்பு எய்ய மாட்டான்; அதை எதிர்த்துக் கேடயத்துடன் வரமாட்டான். அதற்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்ப மாட்டான். அவன் வந்த வழியே திரும்பிப் போவான்; இந்நகருக்குள் நுழையவே மாட்டான் என்கிறார் ஆண்டவர். இந்நகரை நான் பாதுகாப்பேன்; என்பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் அதை விடுவிப்பேன். அன்றிரவு ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில் எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர். எனவே அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 48: 1-2ய. 2b-3. 9-10

பல்லவி: கடவுள் தம் நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார்.

1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.
2ய தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது. -பல்லவி

2b மாவேந்தரின் நகரும் அதுவே.
3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். -பல்லவி

9 கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம்.
10 கடவுளே! உமது பெயரைப்போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது;
உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

மத்தேயு 7:12-14

பொதுக்காலம் 12 வாரம் செவ்வாய்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6,12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும். ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே. இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

2 அரசர்கள் 19: 9 – 11, 14 – 21, 31 – 35, 36
இறைவன் மீதான நம்பிக்கை

அசீரிய மன்னன் சனகெரிபு, செதேக்கியாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அவன் கடிதம் எழுதுகிறபோது, எத்தியோப்பிய மன்னன் திராக்கா, அவனுக்கு எதிராக படைதிரட்டிக் கொண்டு வருகிறான். இந்த திராக்கா பிறப்பால் ஒரு எத்தியோப்பியன். தொடக்கத்தில் நபதாவில் தன்னுடைய ஆட்சியைத் தொடங்கிய அவன், மெல்ல மெல்ல எகிப்து முழுமைக்குமாக தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். பல போர்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். பல வெற்றிகளையும் பெற்றான். குறிப்பாக, அசீரியர்களுக்கு எதிராக பல போர்களில் ஈடுபட்டு வெற்றிகளைப் பெற்றான். கிரேக்கர்களால் மிகச்சிறந்த போர்வீரனாக அறியப்படுகிறான். கி.மு.699 ல், அவன் இன்னும் எகிப்தின் அரசனாகவில்லை. எத்தியோப்பியாவின் அரசனாகவே இருந்தான். ஆனால்,எகிப்தை தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே வைத்திருந்தான். அது அசீரிய மன்னன் சனகெரிபின் தாக்குதலுக்கு உட்பட்டதால், அதனைக் காப்பாற்றுவதற்காக, அசீரியர்களுக்கு எதிராக படைதிரட்டிக் கொண்டு வருகிறான். அதுதான், இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அசீரிய மன்னன், இதுவரை தான் மேற்கொண்ட போர்களில் யூதர்களுக்கு எதிராக பெற்ற வெற்றியைக் குறிப்பிட்டு, இஸ்ரயேலின் கடவுளை நம்ப வேண்டாம் என்று கூறுகிறான். ஏனென்றால் கடவுள், "இஸ்ரயேல், அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்படாது" என்று சொல்லியிருக்கிறார். அசீரியர்கள் பல போர்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பல நாடுகளை வெற்றி கண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, நிச்சயம் யூதா அவர்களிடமிருந்து தப்பிவிட முடியாது என்பதை, எச்சரிக்கையாக அசீரிய அரசன் இங்கு குறிப்பிடுகிறான். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், யதார்த்தத்தை நம்புவதா? இதுவரை நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் முடிவெடுப்பதா? அல்லது கடவுள் கொடுத்த இறைவார்த்தையின் மீது நம்பிக்கை வைப்பதா? என்கிற குழப்பம், செதேக்கிய அரசனுக்கு ஏற்படுகிறது. இறுதியில், தன்னுடைய நம்பிக்கையை அவன், யாவே இறைவன் மீது வைக்கிறான்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில், நாம் சந்திக்கிற பிரச்சனைகள் ஏராளம். பிரச்சனைகளை எதிர்கொள்கிறபோது, நமக்குள்ளாக பலவிதமான குழப்ப மனநிலைகள் ஏற்படுகின்றன. அதில் தெளிவான முடிவெடுப்பது அவசியமாகிறது. நாம் எடுக்கிற முடிவுகள் சரியானதாகவும் இருக்க வேண்டும். இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைப்பது ஒன்று தான் இதற்கு தீர்வாக இருக்க முடியும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

கிறிஸ்தவத்தின் சவால்கள்

“தூய்மையானது எதையும் நாய்களுக்கு கொடுக்க வேண்டாம்”. தொடக்க கால திருச்சபையின் பிண்ணனியில், இதனை இரண்டுவிதமாக நாம் புரிந்து கொள்ளலாம். முதலாவதாக, இந்த சொல்லாடல், யூதர்களால் பயன்படுத்தப்பட்டது. யூதர்களைப் பொறுத்தவரையி் கடவுளுடைய கொடைகளும், அருளும் யூதர்களுக்கு மட்டும் தான் சொந்தம். வேறு எவரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது. குறிப்பாக, திருத்தூதர் பவுலின் எதிரிகளாகக் காட்டிக்கொண்டவர்கள், விருத்தசேதனம் மூலம் தான், கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக முடியும், என்று உறுதியாக நம்பியவர்கள், இந்த சொல்லாடலை பயன்படுத்தினார்கள்.

இரண்டாவதாக, தொடக்ககால திருச்சபை சந்தித்த இரண்டு சவால்களோடு இது தொடர்புடையதாக இருந்தது. புறவினத்து மக்களிடையே வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு, எப்போதுமே கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவது முதலாவது சவாலாக இருந்தது. இரண்டாவது சவால், ஒருசிலர் கிறிஸ்தவத்தையும், புறவினத்து நம்பிக்கையையும் ஒன்று சேர்த்து, ஒரு சில சமரசங்களோடு, புதிய நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சி எடுத்தனர். இந்த இரண்டு சவால்களுக்கு மத்தியில், சொல்லப்பட்ட சொல்லாடல் தான், “தூய்மையானது எதையும் நாய்களுக்கு கொடுக்க வேண்டாம்” என்பது. மேற்சொல்லப்பட்ட வரலாற்றுப்பிண்ணனி, குறுகிய பார்வையாக தோன்றினாலும், கிறிஸ்தவத்தின் மதிப்பீடுகளை எந்தவிதத்திலும் சிதைத்துவிடவோ, சமரசம் செய்துவிடவோ கூடாது என்பதற்கான முயற்சிதான், என்கிற பிண்ணனியில் நாம் புரிந்து கொண்டால், அது சரியான பார்வையாக இருக்கும்.

கிறிஸ்தவத்தின் விழுமியங்கள் எந்த காரணத்திலும், எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாதவை. அதனை சமரசம் செய்துகொண்டால், நாம் கிறிஸ்துவை விட்டு விலகிச்செல்வதாகத்தான் அர்த்தமாக இருக்கும். கிறிஸ்துவோடு இணைந்திருக்க வேண்டுமென்றால், அவரது விழுமியங்களையும் நாம் தாங்கிப்பிடிக்க வேண்டும். சவால்களையும் சந்திக்க வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

புனித வாழ்வு

தொடக்க திருச்சபை பல சவால்களை சந்திக்க நேர்ந்தது. அதில் முக்கியமான ஒன்று, புற இனத்து மக்களின் வழிபாட்டு முறை. புற இனத்து மக்களின் வழிபாட்டு முறையும், வாழ்க்கை முறையும், அடிப்படை ஒழுக்கம் இல்லாத நிலையில் இருந்தது. அது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட, தொடக்க கால கிறிஸ்தவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அவர்கள் எளிதாக வழிதவறிச்செல்வதற்கு வாய்ப்பாகவும் இருந்தது. எனவே, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் இணைந்து பங்கேற்கும் வழிபாடுகளில், தங்களுடைய புனித வாழ்க்கையின் மகத்துவத்தைப்பற்றி அதிகம் பேசப்பட்டது. இந்த புனித வாழ்வை, அழைக்கப்பட்ட வாழ்வை நினைவுபடுத்தும்விதமாக, ஒவ்வொரு உணவிலும், ”புனிதமான மக்களுக்கே, புனிதமான அனைத்தும்” என்று, அறிவிக்கப்பட்டது. தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை எடுத்துரைப்பதற்கே, இவ்வாறு சொல்லப்பட்டது. இந்த பிண்ணனியில் தான், ”தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம்” என்று சொல்லப்படுகிறது.

கிறிஸ்தவ வாழ்வு என்பது புனிதமான வாழ்வை வாழ்வதற்கான அழைப்பு வாழ்வு. அந்த வாழ்வை வாழ்வது எளிதான காரியம் அல்ல. ஏனென்றால், இந்த உலகம் தனக்கென்று ஒரு வரையறைகளை வைத்துக்கொண்டு, மக்களை தவறான பாதையில் வழிநடத்திக்கொண்டு இருக்கிறது. இந்த  உலகத்தோடு வாழக்கூடிய நாம், அதனோடு இணைந்து சென்றால், புனித வாழ்வு வாழ முடியாது. அதனை எதிர்த்து வாழ்வது என்பது எளிதானதும் அல்ல. இந்த இரண்டிற்கும் இடையேயான போராட்ட வாழ்வுதான், நமது விசுவாச வாழ்வு. அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. அத்தகைய வாழ்வை வாழ்வதற்குத்தான் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

தொடக்க கால கிறிஸ்தவர்கள் சவாலான வாழ்வை ஏற்று வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை ஒரு இறுக்கமான, கடினமான சூழ்நிலை. பாதுகாப்பில்லாத சூழ்நிலை. அப்படியிருந்தாலும், அவர்கள் புனித வாழ்வு வாழ, முழுமுயற்சியுடன் வாழ்ந்தார்கள். நாமும், அவர்களைப் பின்பற்றி வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------


பன்றிகள் முன் முத்துகள்!

“தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும், உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறியவேண்டாம். எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்”“ என்னும் இறைவாக்குகளை இன்று உள்வாங்குவோம்.

“பாத்திரமறிந்து பிச்சையிடு“ என்னும் பொன்மொழிக்கேற்ப அறிவுரைகள், பாராட்டுகள், ஊக்க மொழிகள் எவற்றையும் தகுதியற்றவர்களுக்கு வழங்கவேண்டாம் என நாம் பொருள்கொள்ளலாம். நல்ல கருத்துக்களை, ஆலோசனைகளைத் திறந்த மனம் கொண்டோரிடம் மட்டுமே நாம் பகிர்ந்துகொள்ளலாம். குறுகிய மனம் கொண்டோர், எதையும் குதர்க்க மனதுடன், குறை காணும் உளத்துடன் வாதாடுவோருடன் பேசுவது நேரத்தையும், ஆற்றலையும் விரயமாக்குவதுடன், நமக்கு மன உளைச்சலையும், சலிப்பையும் தரலாம். எனவே, நல்லவைகளை நல்லோருக்கே வழங்குவோம். தீயோரிடம் வீணாக்க வேண்டாம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். யாரெல்லாம் திறந்த மனதுடன் செவிகொடுக்கின்றரோ, அவர்களிடம் ஊக்க மொழிகளை, நற்சிந்தனைகள, பாராட்டுகளைப் பகிர்ந்துகொள்ளும் ஞானத்தைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

இடுக்கமான வாயில் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் போதனைகள் எளிதானவை அல்ல. அவை நம்மை மலர்த் தோட்டத்திற்கு இட்டுச் செல்வதில்லை. மாறாக, சிலுவைப் பாதைக்கு அழைக்கின்றன. இறைவார்த்தையை இன்று ஒரு சிலர் அற்புதங்கள், அருங்குறிகள், குணமாக்குதல் நடத்தும் கருவியாக மட்டுமே பார்ப்பது வேதனையாக இருக்கிறது. இறைவார்த்தை நமக்கு நலமும், ஆறுதலும் தருவதுபோலவே, நம்மை அறைகூவலுக்கும், சவாலுக்கும் அழைக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இயேசுவின் போதனைகள் பலவும் கடினமானவை. எனவேதான், இடுக்கமான வாயில் வழியே நுழையப் பாடுபடுங்கள் என இன்றைய வாசகம் வழியாக நாம் நினைவூட்டப்படுகிறோம்.

ஆனால், இந்த இடுக்கமான வாயில் வழியே நமக்கு முன்னால், இயேசுவும் அவரைத் தொடர்ந்து ஏராளமான புனிதர்களும், மறைசாட்சிகளும் பயணம் செய்திருக்கிறார்கள் என்பது நமக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது. எனவே, நாமும் அவர்களைப் பின் தொடர்ந்து, சவால்கள் நிறைந்த, இடுக்கமான இறைவார்த்தைப் பாதையில் பயணம் செய்வோம்.

மன்றாடுவோம்: ஒப்பற்ற செல்வமான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். உம்முடைய போதனைகள் கடினமாக இருக்கின்றன என்று நாங்கள் மனம் தளர்ந்துவிடாமல், நீர் தருகின்ற ஆற்றலில் நம்பிக்கை கொண்டு உம்மைப் பின்பற்றும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

''இயேசு, 'தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும்.
மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்' என்றார்'' (மத்தேயு 7:6)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- நாய்கள் மற்றும் பன்றிகள் பற்றிய இக்கூற்று மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படுகிறது. இக்கூற்றின் பொருள் என்ன? ''தூய்மையானது'' என இயேசு குறிப்பிடுவது கடவுளின் பெயர் (காண்க: மத் 6:9 - ''தந்தையே...உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக!''). இயேசு குறிப்பிடுகின்ற ''முத்து'' கடவுளின் ஆட்சிக்கு உருவகம் (மத் 13:45-46இல் வருகின்ற ''முத்து உவமை'' காண்க). ''நாய்கள்'' என இயேசு குறிப்பிடுவது இஸ்ரயேல் குலத்தைச் சாராத ''பிற இனத்தாரை''. இஸ்ரயேலுக்குப் புறம்பே இருந்த தீர், சீதோன் பகுதிகளில் வாழ்ந்த கானானியப் பெண் இயேசுவிடம் வந்து தன் மகளைக் குணமாக்கக் கேட்டபோது இயேசு, ''பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'' என்று கூறியதை இவண் கருதலாம் (காண்க: மத் 15:26). மேலும் யூதர்கள் நாய்களை வளர்ப்புப் பிராணிகளாக வீட்டில் வைத்திருப்பதில்லை.''பன்றிகள்'' யூதர்களின் கலாச்சாரத்தால் அசுத்தமான மிருகங்களாகக் கருதப்பட்டன. மேற்கூறிய பின்னணியில் பார்க்கும்போது இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு, அதாவது இஸ்ரயேல் அல்லாத பிற இனத்தையோ மதத்தையோ சார்ந்த மக்களுக்கு அறிவிக்க வேண்டாம் எனக் கூறியது தெரிகிறது. இயேசு நற்செய்தியை அறிவிக்க வந்தது இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே. அதுபோலவே, சீடர்களும் இஸ்ரயேலரிடையே நற்செய்தி அறிவிப்பதில் முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும் என இயேசு கேட்டார். ''பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம்'' என இயேசு திருத்தூதர்களுக்குக் கூறியதையும் நாம் கருதலாம் (காண்க: மத் 10:5-6). இஸ்ரயேல் மக்களே நற்செய்தி அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்றால் (காண்க: மத் 5:10; 10:16-36), பிற இனத்தார் அதைவிடவும் அதிக எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என இயேசு கூறியதாக நாம் பொருள் கொள்ளலாம்.

-- அதே நேரத்தில், மத்தேயு நற்செய்தியில் பிற இனத்தாருக்கும் கடவுளின் மீட்புத் திட்டத்தில் பங்குண்டு என்னும் செய்தியும் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இயேசு பிறந்ததும் பிற இனத்தாராகிய ''கீழ்த்திசை ஞானிகள்'' அவரைத் தேடி வணங்க வந்ததாக மத்தேயு குறிப்பிடுகிறார் (மத் 2:1-12). பிற இனத்தைச் சார்ந்த கானானியப் பெண் இயேசுவிடம் சென்று, பேய் பிடித்த தன் மகளுக்கு அவர் நலமளிக்க வேண்டும் என்று கேட்டபோது, அவர் முதலில் மறுத்தாலும் பின்னர் அப்பெண்ணின் நம்பிக்கையைப் போற்றியதோடு அவரின் மகளையும் குணமாக்கியதையும் நாம் கருதலாம் (காண்க: மத் 15:21-28). இறுதியாக, உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடரை அழைத்து அவர்களுக்குப் பணிப் பொறுப்புக் கொடுத்து, ''நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்'' என்று கட்டளை கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது (காண்க: மத் 28:19). ஆக, கடவுளின் திட்டத்தில் இஸ்ரயேலுக்கு ஒரு சிறப்பிடம் இருப்பது தெளிவு. அதே நேரத்தில் கடவுள் வழங்குகின்ற மீட்பும் இயேசு அறிவித்த மீட்பு நற்செய்தியும் உலகிலுள்ள எல்லா மக்களினத்தாருக்கும் கடவுளின் கொடையாக அளிக்கப்படுகிறது என்பதும் உறுதி. இயேசுவின் நற்செய்திப் பணியை நாம் தொடர்ந்து ஆற்றிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, நற்செய்தி அறிவிப்பதில் நாங்கள் உறுதியாகச் செயல்பட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்