முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து `புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்' என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப் பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9
பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1 `ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். -பல்லவி

4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்;
இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க
ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன.
அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். -பல்லவி

6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்;
உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!
7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக!
உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!" -பல்லவி

8 "உன்னுள் சமாதானம் நிலவுவதாக!'' என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
9 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும். அல்லேலூயா.

மத்தேயு 8:5-11

நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11

அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். ''ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக்கிடக்கிறான்'' என்றார். இயேசு அவரிடம், ''நான் வந்து அவனைக் குணமாக்குவேன்'' என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, ''ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்'' என்றார். இதைக் கேட்டு, இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, ''உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5, 6 – 7, 8 – 9
”எருசலேமே! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக”

இந்த திருப்பாடல் முழுவதும் எருசலேம் நகரைப்பற்றியும் அதன் மேன்மையையும் எடுத்துரைப்பதாக இருக்கின்றது. எருசலேம் என்பது சாதாரண நகர் மட்டுமல்ல. அது இஸ்ரயேல் மக்களின் அடிநாதம். இஸ்ரயேல் மக்களின் உயிர்முடிச்சு. எப்போதெல்லாம் எருசலேம் நகருக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களின் இதயத்தில் வலி பெருக்கெடுத்து ஓடும். அந்த எருசலேம் நகரத்தின் மகிமையை, மகத்துவத்தைப் போற்றக்கூடிய பாடலாக இந்த திருப்பாடல் முழுவதும் அமைந்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

எருசலேம் இவ்வளவு மகிமைக்கு உரியதாக விளங்குவதற்கு காரணம் என்ன? எருசலேமில் கடவுள் குடிகொண்டிருக்கிறார். கடவுளின் பிரசன்னம் எருசலேம் நகரில் இருக்கிறது. எருசலேம் கடவுளின் பாதுகாப்பில் இருக்கிற நகரம். எனவே, யாரெல்லாம் எருசலேமில் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருமே இறைவனின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் நிறைவான ஆசீரைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எருசலேம் நகரில் இருக்கிறவர்களுக்கு கடவுளே அரணும், கோட்டையுமாக இருக்கிறார். எருசலேமில் இருக்கிறவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று எருசலேமின் பெருமைக்கான காரணத்தை, இந்த திருப்பாடல் வெளிக்காட்டுகிறது.

நம்முடைய உடல் இறைவன் வாழும் ஆலயமாக இருக்க வேண்டும் என்பதனை இன்றைய நாளுக்கான சிந்தனையாக நாம் பெற்றுக்கொள்ளலாம். கடவுள் தன்னுடைய உருவத்தில் மனிதர்களைப் படைத்தார். நம்முடைய உடல் கடவுளின் சாயலைப் பெற்றுள்ளது. அப்படியென்றால், நாம் இறைவன் தங்கியிருக்கிற ஆலயமாக இருக்க வேண்டும். இறைவனே நமக்கு எல்லாமுமாக இருக்கும்படியும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

கடவுளிடம் நாம் கொண்டுள்ள நம்பிக்கை

இயேசுவிடம் உதவி கேட்டு வருகிறவர்கள் பலவிதமான பதில்களைத் தருகிறார்கள். இயேசுவும் அவர்களுக்கு பல கேள்விகளைக் கொடுக்கிறார். எல்லாவற்றிலும் அவர்களது நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, இயேசு அவர்களுக்கு உதவி செய்கிறார். இயேசுவின் இந்த கேள்விகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வேறு வேறாகவே இருக்கிறது. உதாரணமாக, கானானியப்பெண் தன்னுடைய மகளுக்காகப் பரிந்து பேசக்கூடிய நிகழ்ச்சியில் இயேசு முதலில் மறுப்பதற்கான பதில்களையும், மழுப்பலான பதில்களையும் தருகிறார். இறுதியில் அவளது நம்பிக்கை வெற்றிபெறுகிறது. அவளது தேவையை இயேசு நிறைவேற்றுகிறார்.

இன்றைய நற்செய்தியில், நூற்றுவர் தலைவர் உதவி கேட்ட உடனே, தான் அவரோடு நேரிலேயே வருவதாக வாக்களிக்கிறார். அவரது ஒரு வார்த்தை தன்னுடைய மகனைக் குணப்படுத்தும் என்கிற அந்த நூற்றுவர் தலைவனின் விசுவாசத்தில், இயேசு ஆச்சரியம் கொள்கிறார். அவனுடைய தேவையை நிறைவேற்றுகிறார். இரண்டுமே வெவ்வேறு விதமான நிகழ்வுகள், கோணங்கள். ஆனால், இரண்டிலும், கடவுளின் ஆசீரைப் பெற்றுக்கொடுத்தது அவர்களின் உண்மையான நம்பிக்கை. கடவுளிடம் நாம் செல்ல, அவரிடம் உதவி கேட்க நமக்கு தேவைப்படுவது நம்பிக்கை மட்டும்தான். அதைத்தான் இந்த நிகழ்ச்சியும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

கடவுளிடம் நாம் எப்போதும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அவரிடத்தில் ஒருபோதும் நமது நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. உண்மையான நம்பிக்கை நமக்கு நிறைவான கடவுளின் ஆசீரை வழங்கும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மனிதர்களை கடவுளின் சாயலாகப்பார்ப்போம்

நூற்றுவர் தலைவர்கள் புதிய ஏற்பாட்டில் மதிப்போடு குறிப்பிடப்படுகிறார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது, இயேசுவை “உண்மையிலே இறைமகன்” என்று ஒரு நூற்றுவர் தலைவர் சொன்னதை நாம் வாசித்திருக்கிறோம்.(மத்தேயு 27: 54). இயேசுவை ஏற்றுக்கொண்ட முதல் புறவினத்தார் கொர்னேலியு ஒரு நூற்றுவர் தலைவர். (தி.பணி 10: 22) பவுல் உரோமைக்குடிமகன் என்று கேள்விப்பட்டதும், அவரைக்கலகக்கும்பலிடமிருந்து காப்பாற்றியவர் ஒரு நூற்றுவர் தலைவர். (தி.பணி 22: 26) யெருசலேமுக்கும் செசரியாவிற்கும் இடையே பவுலைக் கொல்ல முயற்சி நடந்தபோது, அந்த சதியை ஆயிரத்தவர் தலைவரிடம் சொல்ல பவுலால் ஏற்பாடு செய்யப்பட்டவர் ஒரு நூற்றுவர் தலைவர்.(தி.பணி 23: 17) ஆளுநர் பெலிக்ஸ், பவுலை நன்றாகக்கவனித்துக்கொள்ள ஏற்பாடு செய்ததும் ஒரு நூற்றுவர் தலைவன்தான்.(தி.பணி 24: 23) உரோமைக்கான இறுதிப்பயணத்தின் போது, வெள்ளத்தினால் கப்பல் அலைக்கழிக்கப்பட்டபோது, அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்துகொடுத்து, பவுலை தலைவராக ஏற்றுக்கொண்டதும் ஒரு நூற்றுவர் தலைவர் தான். (தி. பணி 27ம் அதிகாரம்).

இன்றைய நற்செய்தியில் வருகிற நூற்றுவர் தலைவரும் சற்று வேறுபட்ட ஒரு மனிதராகவே இருக்கிறார். தனது ஊழியர் மேல் அளவுகடந்த அன்புள்ளவராக, ஏன் தனது பிள்ளைக்குரிய மரியாதையோடு அவருக்காக இயேசு பரிந்து பேசுகிறார். அவருடைய ஊழியர் நிச்சயம் ஓர் அடிமையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவரை அடிமையாக நடத்தவில்லை. உரோமை அரசில், அடிமைகளுக்கு மதிப்பில்லை. அவர்களைப்பற்றி யாரும் கவலைப்படுவதுமில்லை. அவர்கள் நோய்வாய்ப்பட்டாலும், இறந்தாலும் கேள்வி கிடையாது. அடிமைகளுக்கு உரிமை கிடையாது. இந்தப்பிண்ணனியில் இருந்து வருகின்ற நூற்றுவர் தலைவன், தனது அடிமைக்காக, இயேசு என்கிற மனிதரிடம் வருகிறார் என்றார், மனிதர்களை மனிதர்களாகப்பார்க்கக்கூடிய பக்குவத்தை அந்த நூற்றுவர் தலைவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு மனிதர்களை மனிதர்களாகப்பார்க்காமல், அவர்களுடைய சாதி அடிப்படையிலே நாம் பார்க்கிறோம். நமது உறவும் அதற்கேற்பதான் அமைகிறது. நாம் மற்றவரோடு நெருங்கிப்பழகுவதற்கு நமது சாதியும், புவியியல் பிண்ணனியும் தான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களை வெறுத்து ஒதுக்குவதற்கும் இதுதான் காரணமாக இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நூற்றுவர் தலைவரின் மனநிலையைப்பெற்றுக் கொள்ள மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

''இயேசு, 'உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும்
இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை' என்றார்'' (மத்தேயு 8:10)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு தம் பணிவாழ்வின்போது பல புதுமைகள் புரிந்தார். அப்புதுமைகள் எல்லாம் மக்களுக்கு நன்மை கொணர்ந்தன. நோயுற்றோர் நலமடைந்தனர்; பசியுற்றோர் பசியாறப்பெற்றனர்; பார்வையிழந்தோர் பார்வை பெற்றனர்; முடமானோர் நடக்கும் திறன் பெற்றனர்; பேச்சிழந்தோர் பேசும் ஆற்றல் பெற்றனர். இவ்வாறு இயேசு மக்களுக்கு நலம் கொணர்ந்தபோதெல்லாம் அவர்களிடமிருந்து தகுந்த பதில் மொழி எதிர்பார்த்தார். அப்பதில் மொழிதான் ''நம்பிக்கை'' என்னும் நற்பண்பாகும். நம்பிக்கை என்பது கடவுளிடத்தில் நம்மையே முழுமையாகக் கையளிப்பதைக் குறிக்கும். நம்பிக்கை என்றால் நமது சொந்த சக்தியை நம்பியிராமல் கடவுளின் வல்லமையை நம்பியிருப்பதைக் குறிக்கும். ஒருநாள் இயேசு கப்பர்நாகும் ஊருக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் என்னும் பதவி வகித்த ஓர் அலுவலரைச் சந்திக்கிறார். இந்த அலுவலர் உரோமைப் பேரரசின் ஆட்சியோடு ஒத்துழைத்தவர்; அவருடைய தலைமையின்கீழ் நூறு போர்வீரர்கள் இருந்தனர். அவர் இஸ்ரயேல் இனத்தவரல்ல. மாறாக, யூத மக்களை ஒடுக்கிய அன்னிய அரசைச் சார்ந்தவர். ஆனால், அவருடைய உள்ளத்தில் கடவுள் நம்பிக்கை இருந்தது. எனவே, இயேசுவை அணுகிச் சென்று தம் ''பையன் (பணியாள், வேலைக்காரச் சிறுவன்) முடக்குவாதத்தால் மிகுந்த வேதனைப்படுவதாக'' (காண்க: மத் 8:6) கூறி, இயேசு அச்சிறுவனைக் குணமாக்கவேண்டும் என மன்றாடுகிறார்.

-- நூற்றுவர் தலைவர் தம் சொந்த நலனுக்காக இயேசுவைத் தேடி வரவில்லை. மாறாக, தம் வீட்டுப் பணியாள் மட்டில் இயேசு இரக்கம் காட்ட வேண்டும் என மன்றாடுகிறார். இந்த மன்றாட்டு இயேசுவின் காதுகளில் விழுந்ததும் இயேசு வியப்படைந்திருக்க வேண்டும். ஏனென்றால், இவ்வாறு இயேசுவை அணுகிச் சென்ற மனிதர் யூதரல்ல, மாறாக யூதரை ஒடுக்கிய அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர். ஆனால் அந்த அதிகாரி இயேசுவிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவரிடம் துலங்கிய நம்பிக்கை இயேசுவின் இனத்தாராகிய யூத மக்கள் சிலரிடம் காணப்பட்ட நம்பிக்கையைவிட அதிக வலுவுள்ளதாய் இருந்தது. எனவே இயேசு நூற்றுவர் தலைவரைப் போற்றியுரைக்கிறார்: ''இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை'' (மத் 8:10). கடவுளிடத்திலும் இயேசுவிடத்திலும் நம்பிக்கை கொள்கின்ற மனிதர் நமது சாதாரண கணிப்புக்கு உட்பட்டுத்தான் அவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாம் முடிவுசெய்ய இயலாது. கடவுளின் அருள் எந்த மனிதரின் உள்ளத்தையும் தொட முடியும்; அவர்களுடைய இதயத்தில் நம்பிக்கையை உருவாக்க முடியும். கடவுளின் பார்வை நம் பார்வையைவிட விரிவானது. நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தவேண்டும் என நாம் கடவுளை நோக்கி இடையறாது இறைஞ்ச வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் இதயத்தில் நம்பிக்கை என்னும் நற்பண்பை நீர் வளர்த்திட எங்களை முழுமையாக உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்