முதல் வாசகம்

புலம்பல் நூலிலிருந்து வாசகம் 2: 2,10-14,18-19

ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்; அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின் அரண்களைத் தகர்த்தார்; அவற்றைத் தரைமட்டமாக்கினார். அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும் மேன்மை குலையச் செய்தார். மகள் சீயோனின் பெரியோர் தரையில் மௌனமாய் அமர்ந்துள்ளனர்; அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக் கொண்டுள்ளனர்; சாக்கு உடை உடுத்தியுள்ளனர்; எருசலேமின் கன்னிப் பெண்கள் தங்கள் தலைகளைத் தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர். என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன! என் குலை நடுங்குகின்றது! என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத் தரையில் சிதறுகின்றது! என் மக்களாகிய மகள் நசுக்கப்பட்டுள்ளாள்! நகர் வீதிகளில் குழந்தைகளும் மழலைகளும் மயங்கிக் கிடக்கின்றனர்! அவர்கள் தங்கள் அன்னையரிடம், `அப்பம், திராட்சை இரசம் எங்கே?' என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப் போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர் விட்டவர் போல் ஆகின்றனர்! மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப் போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்? உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர்; நீ நாடுகடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் சொல்லவில்லை; அவர்கள் பொய்யையும் அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு, உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்! அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது; மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்! எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு! உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றிவிடு! தெரு முனையில் பசியால் மயங்கி விழும் குழந்தைகளின் உயிருக்காக, அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 74: 1-2. 3-4. 5-7. 20-21

பல்லவி: சிறுமைப்படும் உம் மக்களின் உயிரை மறந்துவிடாதீர் ஆண்டவரே!

1 கடவுளே! நீர் ஏன் எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்?
உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல் உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது?
2 பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபைக்கூட்டத்தை நினைத்தருளும்;
நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட இனத்தாரை மறந்துவிடாதேயும்;
நீர் கோவில் கொண்டிருந்த சீயோன் மலையையும் நினைவுகூர்ந்தருளும். -பல்லவி

3 நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவீராக!
எதிரிகள் உமது தூயகத்தில் அனைத்தையும் பாழ்படுத்தி விட்டார்கள்.
4 உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில் வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்;
தங்கள் கொடிகளை வெற்றிக்கு அடையாளமாக நாட்டுகின்றார்கள். -பல்லவி

5 அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட மரப் பின்னல் வேலைப்பாடுகளைக் கோடரிகளால் சிதைத்தார்கள்.
6 மேலும் அங்கிருந்த மர வேலைப்பாடுகள் அனைத்தையும் சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு தகர்த்தெறிந்தார்கள்;
7 அவர்கள் உமது தூயகத்திற்கு தீ வைத்தார்கள்;
அவர்கள் உமது பெயருக்குரிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். -பல்லவி

20 உமது உடன்படிக்கையை நினைத்தருளும்!
நாட்டின் இருளான இடங்களில் கொடுமை நடக்கும் குடியிருப்புகள் நிறைந்திருக்கின்றன.
21 சிறுமையுற்றோர் மீண்டும் வெட்கமுறாதபடி செய்யும்;
எளியோரும் வறியோரும் உமது பெயரைப் புகழ்வராக! -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.

மத்தேயு 8:5-17

பொதுக்காலம் 12 வாரம் சனி

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17

அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். ``ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்'' என்றார். இயேசு அவரிடம், ``நான் வந்து அவனைக் குணமாக்குவேன்'' என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, ``ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்'' என்றார். இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்'' என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, ``நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்'' என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான். இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார். பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, `அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

30.06.2018 – மத்தேயு 8: 5 – 17
புலம்பல் நூல் 2: 2, 10 – 14, 18 – 19
உண்மை உரக்க ஒலிக்கட்டும்

"உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர். நீ நாடு கடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் செல்லவில்லை" என்று, எரேமியா இறைவாக்கினர் கூறுகிறார். இது யூதர்கள் பாபிலோனியர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட நிகழ்வையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் படம்பிடித்துக் காட்டுகிறது. அந்த தருணத்தில், இறைவாக்கினர் எரேமியா அரசனிடம், பாபிலோனியர்களிடம் சரணடைந்து விடுவதுதான், நாட்டிற்கு நல்லது என்றும், அதுதான் கடவுளின் வார்த்தை என்றும் அரசனுக்கு அறிவித்தார். ஆனால், அரசர் பொய்யான இறைவாக்கினர்களின் பேச்சைக் கேட்டு அதனை நம்பி மறுத்து, இத்தகையை இழிநிலையை, மக்களுக்கு கொண்டு வந்துவிட்டான் என்று வருத்தப்படுகிறார்.

யூதாவின் கடைசி காலத்தில் ஏராளமான போலி இறைவாக்கினர்கள் வாழ்ந்து வந்தனர். இதனை இறைவாக்கினர் எரேமியாவும், எசேக்கியாவும் எடுத்துரைத்தனர். போலி இறைவாக்கினர்கள் கடவுள் என்ன சொல்கிறார்? என்று கூறுவதை விட, அரசனுக்கு எது மகிழ்ச்சியைத் தருமோ, அதனை அறிவித்து அவனுடைய நற்பெயரைப் பெறுவதில் போட்டி போட்டுக்கொண்டனர். ஆனால், உண்மையான இறைவாக்கினர்களோ, அரசருக்கு மகிழ்ச்சியோ, கவலையோ அது முதன்மையல்ல. மாறாக, கடவுள் என்ன சொல்கிறாரோ, அதனைச் சொல்வது தான், தங்கள் கடமை என்று, அதனைத் துணிந்து சொல்கின்றனர். போலி இறைவாக்கினர்களின் கூற்றுப்படி, கடவுள் பாபிலோனியர்களிடமிருந்து அரசனையும், நாட்டினையும் மீட்பார். ஆனால், எரேமியா அதற்கு எதிரான கருத்தைக் கூறியதால், சிறையில் அடைக்கப்படுகிறார். உண்மைக்கு அல்ல, பொய்மைக்குத்தான் மதிப்பு தரப்படுகிறது.

இன்றைக்கு நாம் வாழும் சமூகத்திலும், போலித்தனத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. உண்மையான நட்பிற்கோ, உறவுக்கோ இங்கு மதிப்பு இல்லை. பொய்மைக்கு முதன்மையான இடம் தரப்படுகிறது. இப்படிப்பட்ட உலகத்தில் பொய்மையைப் பழித்துரைப்பதை விட, நாம் உண்மையான உறவுகளாக வாழ்வதில் முனைப்பு காட்டுவோம். உண்மைக்காக குரல் கொடுப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசுவின் பரந்த மனம்

இயேசுவின் இன்றைய வார்த்தைகள், யூதர்களின் நம்பிக்கை பற்றிய பார்வையை அடியோடு புரட்டிப்போடுகின்ற வார்த்தைகள். நூற்றுவர் தலைவன், தனது பையனை குணப்படுத்த இயேசுவின் உதவியை நாடுகிறார். அதில் உள்ள பிரச்சனையும் அவருக்குத் தெரியும். யூதச்சட்டப்படி, ஒரு யூதர் புற இனத்தவரின் வீட்டிற்குச் செல்லக்கூடாது. புறவினத்தார் வாழக்கூடிய பகுதிகள், யூதர்களின் பார்வையில் தூய்மையற்றவை. இயேசு ஒரு யூதர். நூற்றுவர் தலைவன் ஒரு புற இனத்தவர். இந்த சிக்கல் இரண்டு பேருக்குமே தெரியும். அப்படியிருந்தும், இயேசு ”நான் வந்து அவனைக் குணப்படுத்துவேன்” என்று சொல்கிறார். இயேசு தெரியாமல் சொல்லவில்லை. மாறாக, மற்றவர்களின் பதிலை, எதிர்வினையை எதிர்பார்த்துச் சொல்கிறார்.

இங்கே தான், நூற்றுவர் தலைவனின் ஆழ்ந்த விசுவாசம் வெளிப்படுகிறது. அந்த விசுவாசத்தை பாராட்டும் இயேசு, அடுத்த ஒரு இடி போன்ற செய்தியை அறிவிக்கிறார். அதாவது, ”கிழக்கிலும், மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்பதுதான் அந்த செய்தி. மெசியா வருகிறபோது, செய்யப்படுகிற விருந்தில், புற இனத்தவர்க்கு இடமே கிடையாது, என்ற நம்பிக்கையில் இருந்த யூதர்களுக்கு, இந்த செய்தி உண்மையிலே கடுமையான செய்திதான். ”உனக்கு பணிபுரியாத வேற்றுநாடோ, அரசோ அழிந்துவிடும்”     (எசாயா 60: 12) என்று புறவினத்தாரைப்பற்றி வைத்திருந்த ஒரு பார்வையை, இயேசு முற்றிலும் மாற்றிக் கொடுக்கிறபோது, அது நிச்சயம் யூதர்களுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

இயேசுவின் எண்ணம் பரந்துபட்ட எண்ணம். அது அடிமைத்தளைகளை உடைத்தெறிகிற எண்ணம். அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எண்ணம். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களையும், கடவுளின் பிள்ளைகளாகப் பார்க்கக்கூடிய எண்ணம். அதனையே நாமும், நமது வாழ்வில் கொண்டிருப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் பரந்த மனம்

இயேசுவின் இன்றைய வார்த்தைகள், யூதர்களின் நம்பிக்கை பற்றிய பார்வையை அடியோடு புரட்டிப்போடுகின்ற வார்த்தைகள். நூற்றுவர் தலைவன், தனது பையனை குணப்படுத்த இயேசுவின் உதவியை நாடுகிறார். அதில் உள்ள பிரச்சனையும் அவருக்குத் தெரியும். யூதச்சட்டப்படி, ஒரு யூதர் புற இனத்தவரின் வீட்டிற்குச் செல்லக்கூடாது. புறவினத்தார் வாழக்கூடிய பகுதிகள், யூதர்களின் பார்வையில் தூய்மையற்றவை. இயேசு ஒரு யூதர். நூற்றுவர் தலைவன் ஒரு புற இனத்தவர். இந்த சிக்கல் இரண்டு பேருக்குமே தெரியும். அப்படியிருந்தும், இயேசு ”நான் வந்து அவனைக் குணப்படுத்துவேன்” என்று சொல்கிறார். இயேசு தெரியாமல் சொல்லவில்லை. மாறாக, மற்றவர்களின் பதிலை, எதிர்வினையை எதிர்பார்த்துச் சொல்கிறார்.

இங்கே தான், நூற்றுவர் தலைவனின் ஆழ்ந்த விசுவாசம் வெளிப்படுகிறது. அந்த விசுவாசத்தை பாராட்டும் இயேசு, அடுத்த ஒரு இடி போன்ற செய்தியை அறிவிக்கிறார். அதாவது, ”கிழக்கிலும், மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்பதுதான் அந்த செய்தி. மெசியா வருகிறபோது, செய்யப்படுகிற விருந்தில், புற இனத்தவர்க்கு இடமே கிடையாது, என்ற நம்பிக்கையில் இருந்த யூதர்களுக்கு, இந்த செய்தி உண்மையிலே கடுமையான செய்திதான். ”உனக்கு பணிபுரியாத வேற்றுநாடோ, அரசோ அழிந்துவிடும்”     (எசாயா 60: 12) என்று புறவினத்தாரைப்பற்றி வைத்திருந்த ஒரு பார்வையை, இயேசு முற்றிலும் மாற்றிக் கொடுக்கிறபோது, அது நிச்சயம் யூதர்களுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

இயேசுவின் எண்ணம் பரந்துபட்ட எண்ணம். அது அடிமைத்தளைகளை உடைத்தெறிகிற எண்ணம். அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எண்ணம். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களையும், கடவுளின் பிள்ளைகளாகப் பார்க்கக்கூடிய எண்ணம். அதனையே நாமும், நமது வாழ்வில் கொண்டிருப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

ஒரு வார்த்தை!

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் “ஒரு வார்த்தையின்” பெருமையை இருமுறை பறைசாற்றுகிறது.

கப்பர்நாகும் ஊர் நூற்றுவர் தலைவரின் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் போராடியபோது, அவர் இயேசுவிடம் “ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் பையன் நலமடைவான்” என்று சொல்லி, இயேசுவையே வியப்படையச் செய்தார், அதனால் மகனையும் நலமாகப் பெற்றுக்கொண்டார்.

மாலைவேளையில் பேய் பிடித்த பலரும் இயேசுவிடம் கொண்டுவரப்பட்டபோது, “அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின”.

இந்த நற்செய்திப் பகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை:

  1. இயேசுவின் ஒரு வார்த்தையே வலிமையானது. அவரில் நம்பிக்கை கொள்வோம்.
  1. இறைவார்த்தை ஆற்றல் மிக்கது. விவிலியத்தின்மீது நம்பிக்கை கொள்வோம். இறைவார்த்தையை வாசித்து, வளர்ச்சியடைவோம்.
  1. மானிட வார்த்தைகளும் வலிமையானவை. தேவையற்ற வார்த்தைகளைத் தவிர்த்து, ஒரு வார்த்தையே பேசினாலும், இனிய, ஆற்றல்மிக்க, ஊக்கமூட்டும், அருள்வளர்ச்சிக்கேற்ற சொற்களை மட்டுமே பேசுவோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தையால் நாள்தோறும் எங்களை வழிநடத்துவதற்காகவும், நலப்படுத்துவதற்காகவும் நன்றி கூறுகிறோம். நாங்கள் நல்ல வார்த்தைகளையே பேச தூய ஆவியால் எங்களை நிரப்புவீராக, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

ஒரு வார்த்தை சொல்லரூhநடடip; !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நேற்றைய வாசகத்தில் இயேசு தொழுநோயாளரைத் தொட்டுக் குணமாக்கிய நிகழ்ச்சியை வாசித்தோம். இன்று ஒரு வார்த்தையால் அலகைகளை விரட்டிய நிகழ்ச்சியை வாசிக்கிறோம். #8220;பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின” என்று வாசிக்கிறோம். இயேசுவின் தொடுதல் எவ்வாறு ஆற்றல் மிக்கதாக இருந்ததோ, அதுபோலவே அவரது சொற்களும் வலிமை மிக்கனவாக இருந்தன. இதைப் பலரும் அனுபவத்தில் கண்டுணர்ந்திருந்தனர். எனவேதான், நுhற்றுவர் தலைவன் இயேசுவிடம் #8220;ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் பையன் நலமடைவான்” என்று துணிவுடன், நம்பிக்கையுடன் கூறமுடிந்தது.

இன்றும் இயேசு நம்மோடு பேசுகிறார். அவரது வார்த்தையை விவிலியத்தில் வாசிக்கிறோம். அந்த வார்த்தைகள் ஆற்றலோடும், வல்லமையோடும் நம்மில் செயல்பட நம்மை அனுமதிப்போம். இறைவார்த்தை நம் வாழ்வை மாற்ற வரம் கேட்போம்.

மன்றாடுவோம்: வார்த்தை மனுவான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். ஒரு வார்த்தையால் நீர் குணமாக்கினீர். அசுத்த ஆவிகளை விரட்டினீர். இன்றும் உமது வார்த்தையால் எங்களுக்கு நலமும், வலிமையும், ஞானமும் அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

''நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, 'ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்துவைக்க நான் தகுதியற்றவன்.
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் பையன் நலமடைவான்' என்றார்'' (மத்தேயு 8:8)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது நற்கருணை உட்கொள்வதற்கு முன், ''ஆண்டவரே, தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் என் ஆன்மா குணமடையும்'' என நாம் கூறுகின்ற சொற்கள் நற்செய்தியில் வருகின்ற இயேசுவின் ஒரு புதுமையை அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கப்பர்நாகுமுக்குச் செல்கிறார். அப்போது பிற இனத்தவராகிய உரோமையரைச் சார்ந்த ஓர் அதிகாரி அவரை அணுகுகிறார். பாலஸ்தீனப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த உரோமைக் காவல் படையினர் நூறு பேருக்கு அவர் தலைவர். எனவே அவருடைய பதவிப் பெயர் ''நூற்றுவர் தலைவர்'' என்பதாகும். இந்த அதிகாரி தம் பணியாள் (அல்லது அவருடைய ''குழந்தை'') நோய்வாய்ப்பட்டிருப்பதாக இயேசுவிடம் கூறுகிறார். இயேசு நினைத்தால் பணியாளுக்கு நலம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை அந்த அதிகாரியிடம் இருந்தது. பிற இனத்தாரோடு யூதர் பழகுவதில்லை. ஆனால் இயேசுவோ அந்த அன்னியராகிய அந்த உரோமை அதிகாரியைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, அவருடைய வீட்டுக்குச் சென்று பணியாளரைக் குணப்படுத்தப் போவதாக இயேசு கூறுகிறார். அப்போது நூற்றுவர் தலைவர் இயேசுவைப் பார்த்து, ''ஐயா, நான் தகுதியற்ற மனிதன்'' என்று கூறி, இயேசு ஒரு வார்த்தை சொன்னால் போதும், தன் பணியாள் குணமாவார் என்கிறார்.

-- இச்சொற்களைக் கேட்ட இயேசு அந்த அதிகாரியின் ஆழ்ந்த நம்பிக்கையைப் போற்றுகிறார். இஸ்ரயேலரிடம்கூட அத்தகைய ஆழ்ந்த நம்பிக்கை இல்லையே என இயேசு வருத்தத்தோடு கூறுவது நம் காதுகளில் விழுகிறது (காண்க: மத் 8:10). பிற இனத்தாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டு, அவர்களும் இறையாட்சியில் பங்குபெற வருவர் என்பதை இயேசு இச்செயல்வழியாகக் காட்டுகிறார் (காண்க: எசா 2:2-4; மீக் 4:1-4; செக் 8:20-23). எனவே உலகின் எத்திசையிலுமிருந்து மக்கள் வந்து இறையாட்சியில் பங்கேற்பர். இதை இயேசு ''விருந்து'' என்னும் உருவகம் வழியாக எடுத்துக் கூறுகிறார் (மத் 8:11). வழக்கமாக இயேசு நோயாளரை நேரடியாகச் சந்தித்து அவர்களைக் குணமாக்குவார். இங்கோ அவர் நோயாளரின் அருகே செல்லாமலே, தொலையிலிருந்துகொண்டே குணமளிக்கிறார். இதில் இயேசுவின் ''அதிகாரம்'' (மத் 8:9) வெளிப்படுகிறது. ஒருவேளை பிற இனத்தாராகிய நூற்றுவர் தலைவரின் வீட்டுக்குள் நுழைந்தால் தீட்டு ஏற்பட்டுவிடலாம் என்பதற்காக இயேசு அங்குச் செல்லவில்லையோ என சில அறிஞர் கருதுகின்றனர். கடவுளின் முன்னிலையில் நாம் தகுதியற்றவர்களாகவே உள்ளோம். ஆனால் அவரே முன்வந்து, இயேசு வழியாக நம்மைத் தம்மோடு ஒன்றுபடுத்துகிறார். இந்த உறவு என்னும் அருள்கொடையை நாம் நன்றியோடு ஏற்று எந்நாளும் இறைபுகழ் பாடிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, தகுதியற்ற எங்களை உம் பிள்ளைகளாக நீர் ஏற்றதற்கு நன்றி.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

அனுபவமே சிறந்த விசுவாசம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

முதல் அருஞ்செயலில் தொழுநோயாளியைத் தொட்டு குணப்படுத்தி, இறை உறவில் புதிய வரலாறு படைத்த இயேசு, மத்தேயுவின் இரண்டாவது அருஞ்செயலில் புற இனத்தாராகிய உரோமைப் படையின் நூற்றுவர் தலைவரின் பையனைக் குணப்படுத்தி மீண்டும் ஒரு சமூக மறுமலர்ச்சி ஏற்படுத்துவதை இங்குக் காண்கிறோம். "இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை." என்ற பாராட்டு இஸ்ராயேல் மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருந்தாலும் பிற மக்களுக்கு ஒரு பாராட்டாக அமைந்தது.

"ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்."(மத் 8:8) எத்தகைய நம்பிக்கை பாருங்கள்.இந்த இறை உறவை, விசுவாசத்தை, கடவுள் நம்பிக்கையை இந்த நூற்றுவர் தலைவன் தன் அன்றாட வாழ்க்கை அனுபவமாகப் பார்ப்பதை நாம் இங்கு காண்கிறோம்." நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் "செல்க" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம்" வருக" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து" இதைச் செய்க" என்றால் அவர் செய்கிறார்"(மத் 8:9). கடவுள் பக்தி, நம் அன்றாட வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பிறப்பெடுக்க வேண்டும். அதுவே ஆழமான விசுவாசம். அசைக்க முடியாத நம்பிக்கை.புனிதமான அன்பு.

நம் வாழ்வில் நாம் சந்திக்கும் நோய், இழப்பு, பிரச்சனை, மன அழுத்தம், பொருளாதார நெருக்கடி, குடும்ப பாரங்கள் இவைகளின் மத்தியில் நம் விசுவாசம் கட்டி எழுப்பப்பட வேண்டும். இத்தகைய நேரங்களில் வெளிப்படும் இறை நம்பிக்கை இறைவனின் பாராட்டுதலையும் பரிசையும் பெற்றுத் தரும்.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்