முதல் வாசகம்

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 2: 6-10, 13-16

ஆண்டவர் கூறுவது இதுவே: ``இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்; ஏனெனில், அவர்கள் நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும் வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள். ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்; ஒடுக்கப்பட்டோரின் நெறியைக் கெடுக்கின்றார்கள்; மகனும் தந்தையும் ஒரே பெண்ணைக் கூடி, என் திருப்பெயரைக் களங்கப்படுத்துகிறார்கள். கடன்காரரிடமிருந்து பறித்த ஆடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பலிபீடங்களின் முன்பும் கிடந்து கொண்டு அபராதம் விதித்துக் கிடைத்த மதுவினைத் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கின்றார்கள். நானோ கேதுரு மரத்தின் உயரமும் கருவாலி மரத்தின் வலிமையும் கொண்ட எமோரியரை அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்; மேலே அவர்களுடைய கனிகளையும், கீழே அவர்களுடைய வேர்களையும் அழித்து விட்டேன்; மேலும், எகிப்து நாட்டிலிருந்து உங்களை அழைத்து வந்து, நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி, எமோரியர் நாட்டை நீங்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்தேன். வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுந்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன். விரைந்தோடுகிறவனும் தப்பமுடியாது; வலிமையுள்ளவனும் தன் வலிமையை இழந்து விடுவான்; வீரனாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது. வில்லேந்தும் வீரன் எதிர்த்து நிற்கமாட்டான், விரைந்தோடுபவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டான், குதிரை வீரனாலும் தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியாது. அந்நாளில் வலிமை மிக்கவர்களுள் நெஞ்சுரம் கொண்டவன் கூடப் படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு ஓடுவான்'' என்கிறார் ஆண்டவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 50: 16bஉ-17. 18-19. 20-21. 22-23

பல்லவி: கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்.

16 என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி?
என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்;
என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். -பல்லவி

18 திருடர்களைக் கண்டால் அவர்களோடு விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்;
கற்பு நெறி தவறியவர்களோடும் உங்களுக்கு உறவு உண்டு.
19 உங்கள் வாய் உரைப்பது தீமையே; உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே. -பல்லவி

20 உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்;
உங்கள் தாயின் மக்களைப் பற்றி அவதூறு பேசுகின்றீர்கள்.
21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்;
நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்;
ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்;
உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன். -பல்லவி

22 கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்;
இல்லையேல், நான் உங்களைப் பீறிப் போடுவேன்; உங்களை விடுவிக்க யாரும் இரார்.
23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர்.
தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

மத்தேயு 8:18-22

பொதுக்காலம் 13 வாரம் திங்கள்

 

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 18-22

அக்காலத்தில் இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, ``போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்'' என்றார். இயேசு அவரிடம், ``நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'' என்றார். இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, ``ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

ஆமோஸ் 2: 6 – 10, 13 – 16
இறைவனின் அன்பு

"அவர்கள் நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும், வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள்". இங்கு இறைவாக்கினர் நீதி விசாரணையைப் பற்றி பேசவில்லை. மாறாக, விற்பதையும், வாங்குவதையும் பற்றிப் பேசுகிறார். விற்பது? வாங்குவது? என்றால் என்ன? கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒருவரோ, வறிய நிலைக்குத் தள்ளப்பட்ட ஒருவரோ, அடிமையாக மற்றொரு எபிரேயரிடத்தில் இருப்பதை, சட்டம் அனுமதித்தது. ஆனால், அவன் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தது. லேவியர் 25: 39, 40: "சகோதரர் ஏழ்மைப்பட்டு உனக்கு விலையாகிப் போனால், அவர்களை அடிமைபோல் நடத்த வேண்டாம். அவர் கூலியாள் போலும், விருந்தினர் போலும், உன்னோடு தங்கி யூபிலி ஆண்டு வரை உன்னிடத்தில் பணியாற்றட்டும்". இவ்வளவு ஒழுங்குகள் இருக்கிறபோது, நேர்மையாளரை சாதாரண வெள்ளிக்காசுக்கும், வறியவரை காலணிக்காகவும் விற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இறைவாக்கினர் கூறுகிறார்.

சட்டங்களும், நெறிமுறைகளும் மக்களைக் காப்பாற்றுவதற்காகவே. ஆனால், அதிலிருக்கிற சந்தர்ப்பங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஏழைகளையும், வறியவர்களையும், நேர்மையாளர்களையும் கொடுமைப்படுத்துவது ஆண்டவரின் பார்வையில் அருவருக்கத்தக்கது என்கிற கடுமையான செய்தியை ஆமோஸ் இறைவாக்கினர் அறிவிக்கிறார். சாதாரண நிலையிலிருந்த, இந்த உலகத்தின் பார்வையில் அடிமைகளாக இருந்த, இஸ்ரயேல் மக்களை கடவுள் மேன்மையாக உயர்த்தினார். ஆனால், அந்த நன்றியுணர்வு இல்லாமல், இன்றைக்கு உயர்வான நிலைக்கு, மற்றவர்கள் மதிக்கிற நிலைக்கு வந்தவுடன், அவர்கள் தங்களையே அடிமைப்படுத்துவதில் சுகம் காண்கின்றனர். இது தவறானது என்பது, இறைவாக்கினர் சுட்டிக்காட்டுகிற செய்தியாக இருக்கிறது.

கடவுள் எப்போதும் நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார். ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ வேண்டும் என்று விரும்புகிறார். அந்த அன்பு எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அந்த அன்பை முழுமையாக உணர, இந்த வாசத்தை தியானிப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

செயல்பாடுகளும், எண்ணங்களும்

நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறபோதும், நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று நினைக்கிறபோதும், மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைக்கிறபோதும் அதனை நாம் உடனே செய்ய வேண்டும். பல வேளைகளில் நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் செய்வதில்லை. அந்த கணம் மறைந்தபிறகு, அதனை நிச்சயமாக செய்ய முடியாது. அதேபோல ஒருவருக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த நேரத்தில் சொல்லவில்லை என்றால், அந்த கணம் மறைந்துவிடும். அதற்கு பிறகு அதேபோ ஒரு தருணத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. அதேபோலத்தான் இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைத்தாலும், நாம் உடனடியாக இரக்கம் காட்ட வேண்டும். அல்லது நாம் அதைச்செய்யவே முடியாது.

இதுதான் இன்றைய நற்செய்தியிலும் சொல்லப்படுகிறது. இயேசுவைப் பின்பற்ற ஒருவன் விரும்புகிறான். அவன் உடனடியாக பின்பற்றுவதற்கு தயங்குகிறான். அதற்கு பல காரணங்களையும் சொல்கிறான். இயேசுவின் அனுபவத்தில் அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த கணம் மறைந்துபோனால், மீண்டும் அவனுக்கு அந்த வாய்ப்பு வராது. எனவேதான், அவன் தன்னுடைய அழைப்பில் நிலையாக இருக்க அவனுக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் இயேசு சொல்கிறார். அவனை, கொண்ட எண்ணத்தில் உறுதியாக நிலைத்திருக்க அறிவுறுத்துகிறார்.

நமது வாழ்வில் நாம் நல்லவர்களாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம். நமக்குள்ளாக பல நல்ல எண்ணங்கள், சிந்தனைகள் இருக்கிறது. அவற்றை செயல்படுத்துவதற்கு நாம் முயற்சி எடுக்கிறோம். ஆனால், அதற்கு காலம் கடத்துகிறோம். அந்த காலம் கடந்துபோன பிறகு, நாம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அதனை மீண்டும் செய்ய முடிவதில்லை. இவ்வாறு, பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று நாம் நினைத்திருந்தாலும், இப்படி பல காரியங்கள் தடைப்பட்டு நின்று இருக்கிறது, எடுத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்க கடவுள் அருள் வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

அர்ப்பண வாழ்வு

மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவைப்பார்த்து “போதகரே” என்று சொல்வது சற்று வியப்பாக இருக்கிறது. ஏனென்றால், போதகர் என்பது மதிப்பு மிகுந்த சொல். மறைநூல் அறிஞர்கள் இயேசுவைப் போதகராக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியிருக்கின்ற சூழ்நிலையில், இயேசுவைப் போதகர் என்று அழைப்பது வியப்புக்குரியது. இயேசு தனது பணிவாழ்வின் யதார்த்தத்தை, உண்மை நிலையை எடுத்துரைப்பதாக இந்தப்பகுதி அமைகிறது.

இயேசு தன்னுடைய சீடர்கள் உணர்வுப்பூர்வமாக உந்தப்பட்டு தன்னோடு இருக்க வேண்டும் என விரும்பவில்லை. உணர்வு என்பது உடனே தோன்றி உடனே மறையக்கூடியது. தான் என்ன செய்கிறோம்? அர்ப்பண வாழ்வு என்றால் உண்மையான அர்த்தம் என்ன? என்பதை தன்னுடைய சீடர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என இயேசு எதிர்பார்க்கிறார். அர்ப்பண வாழ்வு என்பது மற்றவருக்காக வாழ்வது, எந்த துன்பத்தையும் ஏற்றுக்கொள்வத, தங்களையே தியாகம் செய்வது, மற்றவருக்கான சிலுவையை நாம் சுமப்பது. இதை தன்னுடைய சீடர்கள் நன்றாகப்புரிந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு இதைச்சொல்கிறார்.

கிறிஸ்தவ வாழ்வு என்பது ஏதோ ஞாயிறு திருப்பலிக்கு கலந்து கொண்டுவிட்டு, நாம் நினைத்ததை செய்யக்கூடிய வாழ்வு அல்ல. அது ஓர் அர்ப்பண வாழ்வு. கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்க முனைகின்ற சவாலான வாழ்வு. கிறிஸ்தவனாக வாழ முற்படுவதற்கு முன் நாம் வாழப்போகும் இந்த வாழ்வு நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதையே கிறிஸ்து நமக்கு கற்றுத்தருகிறார்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

ஆமோ 2: 6-10, 13-16
மத் 8: 18-22

சவாலும், ஊக்கமும்!

தம்மைப் பின்பற்ற விரும்புவதாகச் சொன்ன இருவருக்கு இயேசு சொன்ன இருவேறு விதமான பதில்களைக் கண்டு நாம் வியப்படைகிறோம்.

  1. தயக்கமற்றவருக்கு வெல்விளி (சவால்): மறைநூல் அறிஞர் வந்து “போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்கிறார். அவரது ஆர்வம், தயக்கமற்ற நிலை, மன உறுதி ஆகியன பாராட்டுக்குரியன. நியாயமாகப் பார்த்தால், இயேசு அவரை “நன்று, நன்று. என்னைப் பின்செல்லும்” என்று அழைத்திருக்க வேண்டும். ஆனால், இயேசு அவரை எச்சரிக்கிறார்: “மனுமகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்று சொல்லி, ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்தபின் பின்வரச் சொல்கிறார். “எண்ணித் துணிக கருமம்” என வெல்விளி இடுகிறார்.
  1. தடுமாற்றம் கொண்டவருக்கு ஊக்கம்: ஆனால், அதே இயேசு தமது சீடருள் ஒருவர் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர, அதாவது முதுமையுற்றிருக்கும் தம் தந்தை இறக்கும்வரை அவரைப் பராமரித்துவிட்டு வர அனுமதி கேட்கும்பொழுது, அனுமதி மறுத்து, “நீர் என்னைப் பின்பற்றி வாரும்” என்கிறார்.

ஏன் இந்த வேறுபாடு? இப்பகுதியைக் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் ஒன்று புரிகிறது. இரண்டாமாவர் ஏற்கனவே இயேசுவோடு இருந்த சீடர். இயேசுவின் அனுபவத்தைப் பெற்றபிறகு, அதாவது கலப்பையில் கைவைத்தபிறகு திரும்பிப் பார்க்க அனுமதி கேட்கிறார். இயேசு ஊக்கப்படுத்தி, குடும்பத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், அவர்கள் இறைத் திருவுளத்தால் பராமரிக்கப்படுவார்கள் என்று உறுதியளிக்கிறார். இயேசுவின் சீடராக மாறும் முன் நன்கு சிந்திக்க வேண்டும், சீடரான பிறகோ எந்தக் கவலையும் அவரிடமிருந்து பிரிக்கக் கூடாது.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது சீடர்களாக வாழ முடிவெடுத்துவிட்ட எங்களை ஆசிர்வதித்து, நாங்கள் இறுதிவரை நிலைத்திருக்கும் அருள் தாரும். ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நேற்று லுhக்க நற்செய்தியில் வாசித்த அதே பகுதியை இன்று மத்தேயு நற்செய்தியிலிருந்து வாசிக்கிறோம். தன்னைப் பின்பற்ற விரும்பும் இளைஞனுக்கு இயேசு கொடுக்கும் அறிவுரை, ‘இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்’. உண்மையில், அந்த இளைஞன் இயேசுவிடம் வேண்டுவது, தந்தை இறக்கும் வரையில் அவரைப் பராமரித்துவிட்டு, அதன்பின் இயேசுவைப் பின்தொடர அனுமதி. ஆனால், இயேசுவின் பார்வை வேறாக இருக்கிறது. ஏன் அழைத்தலை ஏற்பதை ஒத்தி வைக்கவேண்டாம். நாள் ஆக ஆக, எண்ணங்கள் மாறலாமே? ஏற்றி வைத்த அழைத்தல் என்னும் அகல் விளக்கு அணைந்துவிடலாமே? எனவேதான், அழைத்தலை உடனே ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு.

நமது குடும்பங்களில், பங்குகளில் இளையோர் அழைத்தலில் ஆர்வம் காட்டினால் அவர்களை உடனே ஊக்குவிப்போம். காலம் தாழ்த்தும்போது, அழைத்தலை இழக்க நேரிடலாம்.

மன்றாடுவோம்: இயேசுவே,  அழைத்தலின் நாயகனே, உம்மைப் போற்றுகிறோம். இன்றைய இளையோருக்;காக வேண்டுகிறோம். உமது விருப்பத்திற்கேற்ப, அதிக எண்ணிக்கையில் இளையோரைத் தேர்ந்தெடுத்து, அர்ப்பண வாழ்வை அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

இயேசு எதிர்பார்க்கும் கிறிஸ்தவன்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இப்பகுதியை வாசிக்கும் நமக்கு, நாம் கிறிஸ்தவர்களாக இருக்கும் ஆழத்தை அறிய வாய்ப்புகிடைக்கிறது. நம்மில் பலர், கிறிஸ்தவம் என்பது ஒரு வகையான மதிப்புக்குரிய வாழ்க்கை என்று நினைக்கிறோம். " நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்று கிறிஸ்தவ வாழ்க்கையை, ஒருவித மெத்தனமான வாழ்கையாகக் கணிக்கிறோம்.அப்படி அல்ல என்று இயேசு இங்கே சுட்டிக் காட்டுகிறார். கிறிஸ்தவ வாழ்வு என்பது, தலை சாய்க்கவும் நேரமும், வாய்ப்பும் வசதியும் இல்லாத வாழ்க்கை. எனவேதான் மறை நூல் அறிஞரின் கோரிக்கையை நிராகரிக்கிறார் இயேசு.

பல சமயங்களில் நாம் இந்த இரண்டாவது மனிதனைப்போல நம் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழுகிறோம். ஓரளவு சரி. ஆனாலும் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.அவனது கோரிக்கை ஓரளவு சரி. ஏனென்றால், தன் தந்தையை அடக்கம் செய்து விட்டுவர அவன் அனுமதி கேட்டது, தாய் தந்தைக்குரிய கடமையை நிறைவேற்றும் செயலாகும்.எலியா இறை வாக்கினர், எலிசா இறைவாக்கினரை அழைத்தபோது, "நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன்" என்றார். அதற்கு அவர், "சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!" என்றார்.( 1 அர 19:20)

இந்த இரண்டாவது மனிதரை மறுக்கவில்லை. ஆயினும் கிறிஸ்தவ வாழ்வு என்பது குடும்பம்,சுற்றம் என்ற சிறிய வட்டத்தைத் தாண்டி, சமூகத்தைப் பற்றிப் படர்ந்ததாகி, உலகளாவியதாக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் எதிர்பார்ப்பு. இதுவே கிறிஸ்தவன் என்னும் உண்மைச் சீடனிம் இன்றும் இயேசு விரும்புவது.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்