முதல் வாசகம்

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 5: 14-15, 21-24

நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வது போல படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார். தீமையை வெறுத்து நன்மையை நாடுங்கள்; நகர் வாயிலில் நீதியை நிலைநாட்டுங்கள்; அப்பொழுது ஒருவேளை படைகளின் கடவுளாகிய ஆண்டவர் யோசேப்பின் வீட்டாரில் எஞ்சியிருப்போர்க்கு இரக்கம் காட்டுவார். ``உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்; உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை. எரிபலிகளையும் தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க மாட்டேன்; கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும் போது நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன். என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள், உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன். மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்

திபா 50: 7. 8-9. 10-11. 12-13. 16-17

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.

7 என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுகின்றேன்;
இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்றுகூறப் போகின்றேன்;
கடவுளாகிய நானே உன் இறைவன். பல்லவி

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை;
உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக் கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. -பல்லவி

10 ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்;
ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை.
11 குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்;
சமவெளியில் நடமாடும் யாவும் என்னுடையவை. -பல்லவி

12 எனக்குப் பசியெடுத்தால் நான் உங்களைக் கேட்கப் போவதில்லை;
ஏனெனில், உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே.
13 எருதுகளின் இறைச்சியை நான் உண்பேனோ?
ஆட்டுக் கிடாய்களின் குருதியைக் குடிப்பேனோ? -பல்லவி

16bஉ என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி?
என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்;
என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.


மத்தேயு 8:28-34

பொதுக்காலம் 13 வாரம் புதன்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 28-34

அக்காலத்தில் இயேசு கலிலேயாவின் மறு கரையை அடைந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள். அவர்கள், ``இறைமகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வருமுன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?'' என்று கத்தினார்கள். அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன. பேய்கள் அவரிடம், ``நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்'' என்று வேண்டின. அவர் அவற்றிடம், ``போங்கள்'' என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது. பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள். உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர் கொண்டு வந்து, அவரைக் கண்டு, தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

ஆமோஸ் 5: 14 – 15, 21 – 24
இறைவன் விரும்பும் விழாக்கள்

"உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்" என்று படைகளின் கடவுள் சொல்வதாக, ஆமோஸ் இறைவாக்கு உரைக்கின்றார். இணைச்சட்டம் 23: 14 ல் கடவுள் சொல்கிறார்: "நீ எனக்கு ஆண்டிற்கு மூன்றுமுறை விழா எடுப்பாய்". இறைவன் இஸ்ரயேல் மக்களிடம் விழா எடுக்கச் சொல்கிறார். ஆனால், இறைவாக்கினர் ஆமோஸ், இறைவன் விழாக்களை அருவருப்பதாக இறைவாக்கு உரைக்கின்றார். இதை எப்படி புரிந்து கொள்வது?

இஸ்ரயேல் மக்கள் கொண்டாடும் விழாக்களில் முக்கியமானது பாஸ்கா விழா. இந்த விழா, கடவுள் இஸ்ரயேல் மக்களை அற்புதமாக, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கடந்து போகும் நிகழ்வை நினைவுபடுத்துகிறது. கூடாரத்திருவிழா, இஸ்ரயேல் மக்கள் நாற்பது ஆண்டு காலம் பாலைவனத்தில் வாழ்ந்ததையும், அவர்களை இறைவன் உணவில்லாத, நீரில்லாத பாலைவனத்திலும் அற்புதமாக வழிநடத்தியதையும் குறிக்கிறது. மற்ற விழாக்களில் இஸ்ரயேல் மக்கள் செலுத்தும் காணிக்கைகள் குறிப்பாக, அறுவடையிலிருந்தும், தங்களுடைய கால்நடையிலிருந்தும் செலுத்தும் காணிக்கைகள், அவர்கள் கடவுள் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு, தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் அடையாளங்களாகக் காணப்படுகிறது. இவையனைத்துமே, கடவுள் அவர்களிடத்தில் கொண்டாடுவதற்கு கேட்டுக்கொண்ட விழாக்கள் தான். ஆனால், இந்த அடையாளக் கொண்டாட்டங்களை வைத்தும், சடங்குகளை வைத்தும், தாங்கள் செய்கிற தவறுகளை மறைத்து விடலாம் என்று நினைத்தால், அது தவறு. அவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால், இறைவன் ஏழைகளின் சார்பாக, எளியவர்களின் சார்பாக நிற்கும் கடவுள். அவர்களுக்கு அநீதி செய்துவிட்டு, கடவுளுக்கு திருவிழா எடுத்தால், அது கடவுளால் நிச்சயம் வெறுக்கப்படும் நிகழ்வாகத்தான் இருக்கும் என்பதை, இறைவாக்கினர் ஆமோஸ் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.

நாம் எடுக்கிற விழாக்கள் வெறுமனே நினைவுகூறுவதற்காக மட்டுமல்ல. இன்றைய யதார்த்த வாழ்விலும் அது எதிரொலிப்பதாக இருக்க வேண்டும். அவர்களை நீதியின்பால் வழிநடத்துவதாக இருக்க வேண்டும். அவர்களை நேர்மையானவர்களாக கட்டியெழுப்பதாக அமைய வேண்டும். அப்படிப்பட்ட விழாக்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் விழாக்கள். நம்முடைய விழாக்கள் எப்படி அமைந்திருக்கின்றன? சிந்திப்போம். நம்முடைய வாழ்வை இறைவனின் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

நமது வாழ்வில் கடவுள்

இந்த நிகழ்வின் இறுதியில் நடக்கும் நிகழ்ச்சி, சுயநலத்தின் உச்சகட்டமாக இருக்கிறது. அங்கிருந்த பன்றிகளுக்குள் பேய்கள் செல்லவே, அவைகள் செங்குத்துப் பாறையிலிருந்து, கடலில் வீழ்ந்து மடிந்தது. இதனைக்கண்ட பன்றி மேய்ப்பவர்கள் ஊருக்குள் சென்று, ஆட்களைக் கூட்டிவந்து, இயேசுவை விரட்டுகிறார்கள். அவர்கள் செய்தது சரியா? அவர்களின் பார்வையில் அதை அவர்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்? அப்படியே அவர்கள் நியாயப்படுத்தினாலும், அது சரியாகுமா? இதுபோன்ற கேள்விகள் நமக்குள்ளாக எழுவது இயல்பே.

அந்த மனிதர்களுக்கு பன்றிகளின் இழப்புதான் அதிகமாகத் தெரிந்ததே தவிர, இரண்டு மனிதர்கள் காப்பாற்றப்பட்டது, அவர்கள் கண்களுக்குத் தெரியவே இல்லை. குணப்படுத்தவே முடியாத நபர்கள் என்று இந்த சமுதாயத்தினால் முத்திரைக்குத்தப்பட்டு, வெறுத்து ஒதுக்கப்பட்ட இரண்டு ஆன்மாக்கள், அற்புதமாக குணம்பெற்று, புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். மனித வாழ்விற்கு ஈடு இணையே கிடையாது என்று நாம் சொல்கிறோம். ஆனால், பன்றி மேய்ப்பவர்களுக்கு, அவர்களது உடைமைதான், மனிதத்தைவிட மதிப்புமிக்கதாகத் தெரிகிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்கள் செய்ததை, நாம் எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவே முடியாது.

இதுபோன்று, சுயநலத்திற்கும், நமது உடைமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து, கடவுளையும், கடவுள் சார்ந்த காரியங்களையும், இரண்டாம்பட்சமாக வைக்கக்கூடிய மனநிலை நம்மிடையே அதிகரித்து வருகிறது. கடவுள் சார்ந்த செயல்பாடுகளுக்கு நமது வாழ்வில் முக்கியத்துவம் கொடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நம்பிக்கை என்னும் நற்பண்பு

பழங்காலத்தில் மக்கள் தீய ஆவிகள் இருப்பதை முழுமையாக நம்பினர். காற்று முழுவதும், ஊசி நுழையாத அளவுக்கு தீய ஆவிகள் இருந்ததாக அவர்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. இந்த தீய ஆவிகள் சுத்தமில்லாத பகுதிகளில் குறி;ப்பாக கல்லறைகள், பாலைவனம் போன்ற இடங்களில் வாழ்ந்ததாகவும் ஒரு பேச்சு இருந்தது. இந்த தீய ஆவிகள் பயணிகளுக்கும், புதிதாக திருமணம் செய்த தம்பதியர்க்கும், குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது.

தீய ஆவிகளைப்பற்றிய அச்சம் இருந்த அந்த காலச்சூழ்நிலையில் இயேசு துணிவோடு தீய ஆவிகளிடம் பேசுவது அவர் கடவுள் மீது வைத்திருந்த முழுமையான நம்பிக்கையைப்பறைசாற்றுவதாக அமைகிறது. இன்றைய காலத்தில், பேய்களையும், தீய ஆவிகளையும் நம்புகிற அளவுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லாதது மிகப்பெரிய வேதனையைத்தருகிறது. எல்லாவற்றிற்கும் காரணம் தீய ஆவிகள் என்று நம்புகிற நமக்கு கடவுள் நம்பிக்கை எங்கே போயிற்று? இயேசு அதனைக் கற்றுத்தருகிறார். கடவுள் நம்பிக்கை இருக்கிறவனுக்குத்தான் துணிவு இருக்கும்.

கடவுள் மீது நம்முடைய முழுமையான நம்பிக்கை நம் வாழ்வில் வெளிப்பட வேண்டும். நம்பிக்கை என்பது நமக்குள்ளாக மூடி வைத்திருப்பது அல்ல. அது வாழ்வில் வெளிப்பட வேண்டியது. அத்தகைய நம்பிக்கையை நாம் வாழ்ந்து காட்டுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

புனித போர்ச்சுகல் எலிசபெத்

ஆமோ 5: 14-15, 21-24
மத் 8: 28-34

இயேசு நம்மைவிட்டு அகலவேண்டுமா?

இன்றைய நற்செய்தி வாசகம் தரும் செய்தி நமக்குக் கொஞ்சம் வியப்பைத் தருகிறது. கதரேனர் வாழ்ந்த பகுதியில் இயேசு பேய் பிடித்த இருவரை நலப்படுத்துகிறார். அந்தப் பேய்கள் இயேசுவின் அனுமதியுடன் பன்றிகளுக்குள் புக, பன்றிகள் கடலில் வீழந்து மடிகின்றன. எனவே, “நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு. தங்கள் பகுதியைவிட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்”.

இயேசுவும் சற்று வியந்திருப்பார், அந்த மக்களின்மீது பரிவும் கொண்டிருப்பார். காரணம், அவர்களுக்கு விழுமியங்களின் தராதரம் தெரியவில்லை. தங்கள் பகுதியைச் சேர்ந்த இரு மனிதர்கள் பேயின் பிடியிலிருந்து நலம் பெற்றுவிட்டார்களே என்று மகிழாமல், தங்களின் பன்றிகள் மடிந்துவிட்டனவே என்று வருந்துகிறார்கள். அதனால், இயேசுவின் அருமையும் தெரியாமல் அவரையும் தங்கள் பகுதியை விட்டு அகலச் சொல்கின்றனர்.

அவர்களைப் பற்றி வியப்படையும் நாம் நமது வாழ்வை அலசிப் பார்த்தால், நாமும் ஒருவேளை அந்த நகரினர் போலவே நடந்திருப்போம் எனத் தெரியவரும். நாமும் இந்த உலகின் சிறிய இன்பங்கள், மகிழ்ச்சிகளுக்காக, பேரின்பமாம், நிலைவாழ்வாம் இயேசுவைப் புறக்கணிக்கின்றோம், நம்மை விட்டு அகலச் சொல்கின்றோம். தொலைக்காட்சியையும், அலைபேசியையும் இயேசுவைவிடப் பெரிதாக மதிக்கின்றோம். உண்மை நிலை உணர்வோம், நம் மனநிலைகளை மாற்றிக்கொள்வோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்வின் மாபெரும் கொடை நீரே என்பதை உணர்ந்து உம்மையே பற்றிக்கொள்ளும் அருள் தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

பேய் பிடித்த இருவர்!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

பேய் பிடித்த இரு மனிதர்களிடமிருந்து பேய்களை விரட்டி, அவற்றை இயேசு பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்பிய ஒரு மாறுபட்ட நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். அம்மனிதர்களிடமிருந்து பேயை விரட்டிய இயேசு, ஏன் அந்தப் பேய்களை பன்றிகளுக்குள் புக அனுமதித்தார். பேய்களை வெளியே விரட்டிவிடாமல், ஏன் அவைகளின் வேண்டுகோளுக்கு செவிமடுத்து, ஏராளமான பன்றிகளை அழிய அனுமதித்தார். பன்றிகளின் உரிமையாளர்களுக்குப் பெருத்த இழப்பை ஏற்படுத்தினார்? இவை வியப்பான, புதிரான கேள்விகள். எளிதில் விடை கிடைக்காத கேள்விகள்.

இருப்பினும், ஞானமும் பரிவும் படைப்பாற்றலும் மிக்க இயேசு இவ்வாறு செய்தாரென்றால் அதற்கொரு காரணம் நிச்சயமாக இருந்திருக்கும். ஒருவேளை இந்த நிகழ்வை ஓர் அடையாளமாக இயேசு நிகழ்த்தியிருக்கலாம். அத்தி மரம் பழம் கொடாத காலத்தில் பழம் எதிர்பார்த்து, அதனைச் சபித்தது ஓர் அடையாளச் செயல். அதுபோலவே, இந்த நிகழ்ச்சியும் ஓர் அடையாளச் செயல் என்று நாம் கொள்ளலாம். சில பெரிய தீமைகளைப் போக்குவதற்குச் சில சிறிய தீமைகளை நாம் அனுமதிக்கலாம் என்று இந்த நிகழ்வுக்குப் பொருள் கொள்வோர் உள்ளனர். மானிட உயிர்களோடும், மாண்போடும் ஒப்பிடும்போது, பன்;;றிகளின் உயிரும், மதிப்பும் குறைந்தவைதானே!

மன்றாடுவோம்: வார்த்தை மனுவான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். உமது ஞானத்தை எங்களுக்குத் தருவீராக. எங்களிடமுள்ள தீமைகளை அகற்றவும், அதற்காக சில இழப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து,
அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு விதமான மனநிலைகளைக் காண்கிறோம்; இயேசுவின் மனநிலை மற்றும் நகர மக்களின் மனநிலை. இயேசு பேய் பிடித்த இருவரையும் கண்டபோது அவர்கள்மீது பரிவுகொண்டார். அவர்களிடமிருந்து பேய்களை ஓட்டி அவர்களைக் குணப்படுத்தினார். அவரது மனநிலை பரிவின் மனநிலை. நன்மை செய்யவேண்டும் என்று விரும்பும் மனநிலை. அந்த மனநிலைக்கு நேர்மாறானதாக இருக்கிறது அந்நகர பொதுமக்களின் மனநிலை. தங்கள் நகரைச் சேர்ந்த இரு மனிதர்கள் முழு நலம் பெற்றதைக் கண்டு மகிழ்ச்சியும், நன்றியும் கொள்வதற்குப் பதிலாக, பன்றிகள் இறந்ததைப் பெரிதாக எண்ணுகிறார்கள். அது மட்டுமல்ல, இயேசுவிடம் வந்து நன்றியும், பாராட்டும் தெரிவிப்பதற்குப் பதிலாக, தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொள்கின்றனர். இயேசுவுக்கு அவர்களின் மனநிலை வியப்பையும், ஏமாற்றத்தையும் தந்திருக்கும்.

இந்த இறைவாக்கின் அடிப்படையில் நம் வாழ்வை, நம் மனநிலையை சிறிது ஆய்வு செய்வோமா? நோயில், தேவையில் உழல்வோரைக் காணும்போதெல்லாம், இயேசுவிடமிருந்து பரிவின் மனநிலை நம்மில் எழுகிறதா? அம்மனநிலையை நம்மில் வளர்த்துக்கொள்வோம். அத்துடன், நன்மைகள் செய்யப்படும்போது, அவற்றை மனம் திறந்து பாராட்டவும், மகிழ்ச்சி கொள்ளவும் பழகிக்கொள்வோம். மேலும், நம் அலுவலத்தில், பணியிடத்தில், அன்பியத்தில் பொதுப்பணிகள் ஆற்றுவோரை ஊக்கப்படுத்தவும், குறைந்தது அவர்களைக் குறைசொல்லாதிருக்கவும் கற்றுக்கொள்வோமா!

மன்றாடுவோம்; அன்பின்; இறைவா, உம் இதயத்தில் இருந்த பரிவை, மென்மையை எங்களுக்கும் தந்தருளும். இன்றைய நாளில் யாருக்கெல்லாம் எங்கள் உதவியும், பாசமும் தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு அவற்றை வழங்க எங்களை வலுப்படுத்தியருளும். இன்றைய நாள் முழுவதும் யாரையும் குறை கூறாமல் இருக்கவும், தேவைப்படுவோரைப் பாராட்டவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது,
பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர்...
அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன'' (மத்தேயு 8:28,30)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கலிலேயா ஏரியின் ''அக்கரை'' என மத்தேயு குறிப்பிடுவது பிற இனத்தார் வாழ்ந்த பகுதியாகும். இவர்கள் இஸ்ரயேல் இனத்தாரிடமிருந்து வேறுபட்டவர்கள். எனவே இரு குழுவினருக்கும் இடையே தொடர்புகள் இருக்கவில்லை. பிற இனத்தார் தூய்மையற்றவர்கள் என்றும் தீட்டுப்பட்டவர்கள் என்றும் கருதப்பட்டனர். மேலும், அப்பகுதியில் கல்லறைகள் இருந்தன எனவும் மத்தேயு கூறுகிறார். கல்லறை என்பதும் தீட்டு நிறைந்த இடமே. அங்கே தீய ஆவிகள் குடிகொண்டிருந்ததாக மக்கள் நம்பினார்கள். பன்றிகளும் தூய்மையற்ற மிருகங்களாகக் கருதப்பட்டன. எனவே, இயேசு சென்ற ''அக்கரை'' உண்மையிலேயே இஸ்ரயேலர் யாரும் செல்லக் கூடாத பகுதிதான். கல்லறைப் பகுதியிலிருந்து வந்த பேய்பிடித்த மனிதர் இருவரும் இயேசு யார் என அடையாளம் கண்டுகொள்கின்றனர். அவர்கள் இயேசுவை நோக்கி, ''இறைமகனே, இங்கு உமக்கு என்ன வேலை?'' எனக் கேட்கின்றார்கள் (மத் 8:29). மனிதர்கள் இயேசு யார் என அடையாளம் காண இயலாமல் இருக்கும்போது ஆவிகள் மட்டும் இயேசுவின் உண்மையான பண்பை (''இறைமகன்'') தெரிந்துகொள்வதாக நற்செய்தியில் பல குறிப்புகள் உண்டு.

-- ஆனால் இயேசு தீய ஆவிகளைத் தம் அதிகாரத்தால் துரத்திவிடுகிறார். அவை தூய்மையற்ற பன்றிக் கூட்டத்திற்குள் தங்களை அனுப்பும்படி கேட்க, இயேசு ''போங்கள்'' என்னும் ஒரே வார்த்தையால் அவற்றைத் துரத்திவிடுகிறார். இவ்வாறு தீய சக்திகளை இயேசு முறியடிக்கிறார். இயேசு தொடங்கிய கடவுளாட்சியை முறியடிக்க தீய சக்திகள் முயன்றாலும் அவை தோல்வியைத்தான் தழுவும். இயேசுவைக் ''கடவுளின் மகன்'' என ஏற்று நம்பிக்கையோடு வாழ்கின்ற மக்கள் தீய சக்திகளைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இறுதி வெற்றி நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் கடவுளையும் அவர் அனுப்பிய தம் திருமகன் இயேசுவையும் நம்பிக்கையோடு ஏற்று வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம். பேய்பிடித்தவர்களிடமிருந்து பேய்களை இயேசு துரத்திவிட்ட செய்தியைக் கேட்ட ''அக்கரை'' மக்கள் ''இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்'' (மத் 8:34). இஸ்ரயேல் மக்களுக்கு நற்செய்தி அறிவித்த இயேசு பிற இன மக்கள் வாழ்ந்த பகுதியில் அதிகமாகப் பணி செய்யவில்லை என மத்தேயு குறிப்பிடுகிறார். ஆனால் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு ''எல்லா மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்க'' இயேசு தம் சீடரை அனுப்பினார் (காண்க: மத் 28:19). இயேசுவின் வல்லமையில் நாம் நம்பிக்கை கொண்டால் தீய சக்திகள் நமக்குத் தீங்கு இழைக்கமுடியாது.

மன்றாட்டு
இறைவா, தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

நல்லவற்றைக் கேளுங்கள்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

உங்கள் வாழ்க்கையில் வசந்தம் வீச, எப்போதும் நல்லவற்றைக் கேளுங்கள். "நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்" (மத்8:31) என்று கேட்பது அறிவீனம். "திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்" (மத்14:8) எனக் கேட்பது பாவச் செயல்.

கல்லறையிலிருந்து வெளியேறிய மனிதர்களால் இதைத் தவிர வேறு என்ன கேட்க முடியும். பேயின் பிடியில் இருப்பவர்களால் நன்மைபற்றியும் நல்லவைபற்றியும் சிந்திக்க முடியாது. பாவத்தில் வாழும் மனிதனால் அதை சுற்றியே அவன் சிந்தனை அமைந்திருக்கும். எனவே நல்லவைகளைச் சிந்திக்க நம்மால் முடியவில்லை என்றால், அல்லது நல்லவற்றைக் கேட்க முடியவில்லை என்றால் நாம் பாவத்தில் வாழ்கிறோம், கல்லறையில் வாழ்கிறோம்,பேயின் பிடியில் இருக்கிறோம் என்று பொருள்.

ஏன் பன்றிக் கூட்டத்துக்குள் அனுப்பக் கேட்டார்கள்அந்தக் கல்லறை மனிதர்கள்? பன்றிகள் யூதர்களால் அருவருக்கப்பட்ட மிருகம். கல்லறை வாழும் மனிதன், பேயின் பிடியில் உள்ளவன், பன்றிகள் எல்லாம் ஒரே கூட்டணிதான். கல்லறை மனிதர்கள் கேட்டது அவர்கள் இயல்பு. இயேசுவும் அவரது இயல்பாகச் செயல்படுகிறார். தீமையின் கூட்டணி முழுவதையும் அழிக்கிறார். இயேசு ஏன் பன்றிகளை அழித்தார் என்று நம்மில் சிலர் கேட்கலாம். உண்மைதான். ஆனால் இயேசு தீமைகள் அருவருக்கப்பட்ட அனைத்தையும் அழிக்கிறார் என்பதை உருவகமாக மத்தேயு இங்கு பன்றிக் கூட்டத்தைக் கையாளுகிறார். எனவே பன்றி என்பதை மிருக கூட்டமாகக் கருதாமல், அருவருக்கத்தக்கப் பாவத்தின் அடையாளமாகப் பொருள் கொள்ளுங்கள். ஆகவே நல்லவற்றைக் கேளுங்கள். உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்

வாழ்வில் வசந்தம் வீச வேதம் வீதிக்கு வர வேண்டும்.

"இறை மகனே உமக்கு இங்கு என்ன வேலை?" நியாயமான கேள்வி. இன்று பரவலாக கேட்கப்படும் கேள்வி. ஆமாம். இறைமகனுக்கு பேய்களோடு என்ன வேலை? கடவுளுக்கு கல்லரையில் என்ன வேலை? பாவமும் பாவச் செயல்களும் நடைபெரும் இடத்தில் பக்தனுக்கு என்ன வேலை? அநீதியும் அவமானமும் மலிந்த இடத்தில் ஆண்டவனின்அடியானுக்கு என்ன வேலை? மனிதமும் மனிதாபிமானமும் சிதைக்கப்படும் இடத்தில் மதத்திற்கு என்ன வேலை? கொள்ளையும் கொலையும் குவியும் இடத்தில் கோயில் தெய்வத்திற்கு என்ன வேலை? ஏழ்மையும் வறுமையும் வளர்த்து உருவாக்கப்படும் இடத்தில் வானக இறைவனை வழிபடும் மக்களுக்கு என்ன வேலை? நியாயமான கேள்வி. இன்று பரவலாக கேட்கப்படும் கேள்வி.

இறைவன் விண்ணகத்தில் இருக்க வேண்டியதுதானே? ஆண்டவன் ஆலயத்தில் இருக்க வேண்டியதுதானே? ஆயர்கள் ஆட்டுப்பட்டியோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமல்லவா! நல்லவர்கள் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிட வேண்டியதுதானே? திருச்சபை, திருவருட்சாதனங்களோடு நின்று விடவேண்டும். வழிபாடு, தேர், திருவிழா, அர்ச்சனை, ஆராதனை இவற்றோடு முடித்துக்கொள்ள வேண்டும். இதுவும் நியாயமான கேள்விதானா?

இன்று எழும்பும் இத்தகைய கேள்விகளுக்கும் சருக்கல்களுக்கும் சவாலாக இயேசு செயல்பட்டதைப் பார்க்கிறோம். தெய்வம் பேயை சந்திக்கிறது. கடவுள் கல்லரையை நெருங்குகிறார். புனிதர்; பாவியை அரவணைக்கிறார்.

அநீதியை, அசிங்கத்தை அப்புறப்படுத்த காலம், நேரம், இடம் பார்க்க அவசியமில்லை. ஒதுங்கி, ஒடுங்கி, அடங்கிப்போக அவசியமில்லை. வேதம் வீதிக்கு வர வேண்டும். தெய்வம் தெருவுக்கு வர வேண்டும். எங்கெல்லாம் இருள் சூழ்ந்துள்ளதோ அங்கெல்லாம் பற்றிப் படர்ந்து சுடர்விட்டு எரியவேண்டும்.

எல்லோர் வாழ்விலும் வசந்தம் வீச நல்லவர்கள் நாம் ஒதுங்காமல் ஓரம்கட்டாமல் உட்புகுந்து செயல்பட வலுவேண்டுகிறேன்,தெய்வமே.

--அருட்திரு ஜோசப் லீயோன்